பீரங்கிக் கோட்டையில் ஒரு பிக்னிக்

Monday, April 19, 2010



எம்.பி. உதயசூரியன்

பாய்ச்சலுக்கு ஒரு பைக். பில்லியனில் நண்பன். கிழக்கு கடற்கரைச் சாலை. ஏறிக்கொண்டு சீறிக்கிளம்பினால்..மில்லிமீட்டர் குறையாத ‘மில்லியனர் சந்தோஷம்‘!
ஒகே. குதிரை வேகத்தில் கிளம்பியாச்சு. அப்போ சென்றாக வேண்டிய இடம் ‘ஆலம்பரா கோட்டை‘! கொட்டிவாக்கம் தாண்டியதுமே..வழிநெடுக காதுகளில் குஷியாக விசிலடிக்கிறது கடற்காற்று. ஏதோ ‘போருக்குப் போகிற ஆவேச வேகத்தோடு‘ ஊருக்குப் போகின்றன வாகனங்கள்.

நாம் கிளம்பியது காலை நேரமாச்சா? இதமான குளிர்காற்று வருட ..மிதமான வேகத்தில் நம்ம பைக் பாய்ந்துகொண்டிருந்தது. அப்போது ‘வ்ர்ர்ர்ரூம்‘ என்று ஹை&ஸ்பீடில் நம்மை ஓவர்டேக் செய்தது ஒரு பைக். ஜீன்ஸ் போட்ட இளைஞன் ஓட்ட..அவனை இறுக்க்க்கியபடி பீன்ஸ் சைஸில் ஒரு குமரி! ‘காதலர்கள் இறுக்கமாக தழுவிக்கொள்ளும்போது நடுவே காற்று நுழையக்கூட இடமிருக்காது‘ என்ற வள்ளுவன் ‘குரலுக்கேத்த‘ வசீகர உதாரணம்..வண்டியில் பறந்தது!‘ஹும்! மச்சம்யா!‘ என்று என் பின்னே இருந்த ‘நட்புமூட்டையிடம்‘ ஏக்கப்பெருமூச்சு விட எத்தனித்தபோது..அந்த எத்தன் விட்ட ‘ஏ(க்)கப்பட்ட அனல்மூச்சில்’ என் முதுகே பொசுங்கிப்போனது!

‘வ்ர்ர்ர்ரூம்‘...முட்டுக்காட்டில் படகுகள் அலையாடிக் கொண்டிருக்க.. துறையில் பெண்டு பிள்ளைகளும், நண்டு சிண்டுகளும் விளையாடிக்கொண்டிருந்தனர். ஓட்டிய வேகத்தில் வாட்டிய தாகத்திற்கு வழியில் ‘பச்சைப்பசேல்‘ இளநீரை குடித்தோம். அச்சுஅசல் தேனாய் ருசித்தது. அப்படியே வண்டியை ‘ஓடுறா ச்செல்ல்ல்லம்‘ என்று கொஞ்சி முடிக்க..வந்து சேர்ந்தது கடப்பாக்கம்! நீண்டு செல்கிற கிழக்கு கடற்கரைச் சாலையில் நொடிநேரத்தில் தாண்டிப்போகிற ஸ்பாட்தான் ‘கடப்பாக்கம்‘. ஆனால் இந்த குட்டியூண்டு ஊருக்குள்ளே
கோட்டை கட்டி கொடி பறக்க வாழ்ந்த ஒரு வரலாறு..புதையுண்டு கிடக்கும் கதை தெரியுமா?

கி.க. சாலையிலிருந்து ‘விசுக்‘கென இடதுபுறம் பிரிகிறது கடப்பாக்கம். துண்டு அகலத்திற்கு குண்டும் குழியுமான ரோடு. அலுங்கிக் குலுங்கி பயணித்தால்..குறுக்கிடுகிறது ஆற்றுப்பாலம்! அருகிலேயே ‘தலைகுளித்த மீன்களை தலைதுவட்ட விடாமல்..வலைபோட்டுப் பிடித்துவந்து விலைசொல்லி விற்கிற துக்கம் தாளாமல் தத்தளிக்கிறது மீன்கள்! விதவிதமான மீன்கள், இறால்கள் என அள்ளிக்கொண்டு போகிறார்கள் ‘அசைவப் பிரியர்கள்‘! அதையும் கடந்துபோனால்..மீனவர்களுக்கான சுனாமி குடியிருப்புகள் அனாதியாகக் கிடக்கிறது. அங்கிருந்து நகர்ந்தால்..‘பேக் வாட்டரால்‘‘ பன்னீர் தூவி வரவேற்கிறது ‘ஆலம்பரா கோட்டை‘! ‘பேக்வாட்டர்‘ சிறுகடலாக கோட்டைக்குப் பின்னே ‘பாகைமானி‘ சைஸில் பரவிக்கிடக்கிறது. முன்புறம் தகதகக்கிற பொன்னிற மணற்பரப்பில் பாதி புதைந்தும், மீதி சிதைந்தும் மௌனப்புலம்பலோடு அரை பனைமர உயரத்திற்கு நிற்கிறது பிரமாண்டமான ‘ஆலம்பரா கோட்டை‘!

கோட்டைக்குள்ளும் பொன்மணல் குவிந்துகிடக்கிறது. கால் வைத்ததுமே ஏனோ சிலிர்த்தது. ஒருகாலத்தில் முகலாய மன்னர்கள் வாழ்வாங்கு வாழ்ந்த சாம்ராஜ்யம்..இன்று நம்ம மாதிரி ‘பிள்ளக்காய்களால்‘ மிதிபடுவது கண்டு மனசு குறுகுறுத்தது. ‘பிதாமகன்‘ படத்தின் சுடுகாட்டுக் காட்சிகள் ‘சுடப்பட்டதெல்லாம்‘ இந்த லொகேஷனில்தான். ‘வெயில், குப்பி‘ என ஏராளமான படங்களில் ‘இடம்‘ பிடித்திருகிறது இந்த கோட்டை. பக்கத்திலேயே வலை பின்னிக்கொண்டிருந்த பெருசு நம்மைப் பார்த்து ‘‘பீரங்கியால சுட்டாக்கூட அசையாத கோட்டைங்க இது! வெள்ளைக்காரங்க பண்ணுன அட்டகாசம், அப்புறம் நவாப்புக ஆண்டதுன்னு வீரசூரக் கதைகளை எங்க முப்பாட்டன் காலத்துலேர்ந்து கேட்டுருக்கோம்!‘‘ என்று ‘த்ரில்‘லை கிளப்பினார்.
‘‘இந்த இடத்தை எங்கன தோண்டினாலும் ஏதாச்சும் புதையல் சிக்கும்ல!’’ என்று சொன்ன நண்பன் கண்ணில் ‘அலிபாபா‘ ஜொலிப்பு! ‘புதையல பூதம் காக்குமே!’’ என்ற பெருசுவின் பேச்சில் கெக்கலிப்பு.

கோட்டையின் நடுநாயகமாக ஒரு சமாதி. மறைந்துபோன மன்னரின் பெயர் மறைபொருளாகவே இருக்க..வந்துபோன மானிடர்களின் பெயர்கள் சமாதியில் ‘நிலைத்து நிற்பது‘ சோகக் காமெடி. பேக்வாட்டரில் கோட்டையைச் சுற்றி ரவுண்ட் அடிப்பதற்காகவே மோட்டார் படகுகள் காத்துக்கிடக்கின்றன. ஒரு ட்ரிப்புக்கு ஐம்பது ரூபாய். சலசலக்கிற நீரில் ஜாலி சவாரி போகிற சுகமே அலாதி! கரைக்குத் திரும்பி..ஒரு ‘ஜிலீர்‘ குளியல் போடும்போதே கபகப பசியை கிளப்புகிறது கமகம வாசம்! மீன், இறால், நண்டுகள் என சப்புக்கொட்டி ருசிக்க சரியான டிஷ்கள்! என்ன..முன்னரே சொல்லிவைத்து பணம் தந்தால்..சுடச்சுட சமைத்து வைத்திருப்பார்கள். சாப்பாடும், குடிநீரும் கைவசம் கட்டாயம் தேவை.

ஒரு நாளை ஒதுக்குங்கள்! நண்பர்கள், குடும்பத்தினர் என சகலரும் உற்சாகமாக கொண்டாடி, நிம்மதியாகத் திரும்ப உத்தரவாதமான பிக்னிக் ஸ்பாட் ‘ஆலம்பரா கோட்டை‘! அதுவும் செல்ஃபோனை ஆஃப் செய்துவிட்டால்..பாதி சொர்க்கம் நிச்சயம்! என்ஜாய்! வ்ர்ர்ரூம்ம்!

இதான் ரூட்!

சென்னை டூ கிழக்குக் கடற்கரைச் சாலையில் பயணித்தால்..100 கி.மீ. தூரத்தில் உள்ளது ‘ஆலம்பரா கோட்டை‘. ‘பாண்டிச்சேரி‘ பயணிகளுக்கு பாதி தூரம்தான்..50 கி.மீ.! டூ&வீலர், கார் என்றால் கோட்டைவரை போகலாம். பஸ்ஸில் சென்றால் கடப்பாக்கம் ஸ்டாப்பிங்கில் இறங்கவும். அங்கிருந்து ஆட்டோவில் செல்லலாம். கூப்பிடு தூரத்தில்..கோட்டை!

‘கோட்டை‘ கதை!


17ம் நூற்றாண்டில் இந்தியா முழுக்க கொடிகட்டிப் பறந்தது முகலாயப் பேரரசர்களின் ராஜாங்கம்! ‘கட்டிடக் கலையின் பொற்காலம்‘ அது. அன்றைய காலகட்டத்தில் கட்டப்பட்ட கோட்டைதான் இது! பட்டு ஜரிகை, உப்பு மற்றும் நெய் போன்ற பொருட்கள் இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டது வரலாறு. கப்பல்களை பழுதுபார்க்கும் இடமாகவும் இந்த ‘கடற்கோட்டை‘ பயன்படுத்தப்பட்டதாம். கி.பி.1735ல் நவாப் தோஸ்தே அலி கான் அரசாண்ட இந்த கோட்டையை..அதன் பின்னர் ஃபிரெஞ்ச் தளபதி டூப்ளெக்ஸ்க்கு பரிசளித்தது ஃப்ரெஞ்ச் அரசு. 1760ல் பரங்கியர்களால் ஃப்ரெஞ்ச் படை வீழ்த்தப்பட்டபோது..இந்த கோட்டையையும் முடிந்தவரை சேதப்படுத்தினார்கள். அதையும் கம்பீரமாக எதிர்கொண்டு, பின்னர் ஆற்காட்டு நவாப்புகளால் ஆளப்பட்ட ‘ஆலம்பரா கோட்டையை‘ 2004ல் வந்த சுனாமி கொஞ்சம் ஓவராகவே சிதைத்துவிட்டது!

18 comments:

வணங்காமுடி...! said...

தலைவா... இத்தனை நாளா எங்க போயிட்டீங்க....

ஆகஸ்ட்டுக்கு அப்புறம், தினம் தினம் வந்து பாத்து பாத்து ஏமாந்து போயிட்டேன்...

ரொம்ப நாள் கழிச்சு, www.blogger.com வந்தா, தலையோட பதிவு...ரொம்ப ஹாப்பி... கன்டின்யூ பண்ணுங்க...

சுந்தர்
ருவாண்டா

butterfly Surya said...

பிக்னிக் சூப்பர்.

எம்.பி.உதயசூரியன் said...

வணங்காமுடி...! said.. ரொம்ப ஹாப்பி...கன்டின்யூ பண்ணுங்க..

//பேருக்கேத்த கம்பீரத்தோட ‘பீரங்கிக் கோட்டை' பதிவுக்கு பொருத்தமா வந்துட்டீங்களே வணங்காமுடி! ரொம்ப சந்தோஷம். இனி தொடர்ந்து சந்திப்போம் தலைவா!

எம்.பி.உதயசூரியன் said...

butterfly Surya said...
பிக்னிக் சூப்பர்

//சூர்யா, பக்கத்துலதான இருக்கீங்க, வாங்க ஒரு ட்ரிப் அடிச்சுட்டு வரலாம்.
அதுவும் உங்க ரசனையான பார்வைக்கு சரியான ஸ்பாட்டா இருக்கும்//

Unknown said...

அடடா ! எதைச் சொல்வது !
முழு பதிவையும் copy paste செய்ய வேண்டி வரும்
ஒவ்வொரு வரியும் துள்ளல் ரகம். குறிப்பாக
"தலைகுளித்த மீன்களை தலைதுவட்ட விடாமல்..வலைபோட்டுப் பிடித்துவந்து விலைசொல்லி விற்கிற துக்கம் தாளாமல் தத்தளிக்கிறது மீன்கள்!"

"அப்போது ‘வ்ர்ர்ர்ரூம்‘ என்று ஹை&ஸ்பீடில் நம்மை ஓவர்டேக் செய்தது ஒரு பைக். ஜீன்ஸ் போட்ட இளைஞன் ஓட்ட..
அவனை இறுக்க்க்கியபடி பீன்ஸ் சைஸில் ஒரு குமரி! ‘காதலர்கள் இறுக்கமாக தழுவிக்கொள்ளும்போது நடுவே காற்று நுழையக்கூட இடமிருக்காது‘
என்ற வள்ளுவன் ‘குரலுக்கேத்த‘ வசீகர உதாரணம்..வண்டியில் பறந்தது!‘ஹும்! மச்சம்யா!‘ என்று என் பின்னே இருந்த
‘நட்புமூட்டையிடம்‘ ஏக்கப்பெருமூச்சு விட எத்தனித்தபோது..அந்த எத்தன் விட்ட ‘ஏ(க்)கப்பட்ட அனல்மூச்சில்’ என் முதுகே பொசுங்கிப்போனது! "

"கோட்டையின் நடுநாயகமாக ஒரு சமாதி. மறைந்துபோன மன்னரின் பெயர் மறைபொருளாகவே இருக்க..
வந்துபோன மானிடர்களின் பெயர்கள் சமாதியில் ‘நிலைத்து நிற்பது‘ சோகக் காமெடி."

எம்.பி.உதயசூரியன் said...

Monks said...அடடா ! எதைச் சொல்வது ! முழு பதிவையும் copy paste செய்ய வேண்டி வரும்.

// நன்றி Monks. காபி பேஸ்ட் பண்ண வேண்டி வரும்னு நீங்க மனசார பாராட்டறீங்களே, இதுதான் நமக்கான ‘பூஸ்ட்'.//

பானு said...

As usual,super sir.As Mr.Monks pointed out....."‘தலைகுளித்த மீன்களை தலைதுவட்ட விடாமல்..வலைபோட்டுப் பிடித்துவந்து விலைசொல்லி விற்கிற துக்கம் தாளாமல் தத்தளிக்கிறது மீன்கள்!" ....wow,என்னமா feel பண்றீங்க Sir!!!

"மறைந்துபோன மன்னரின் பெயர் மறைபொருளாகவே இருக்க..வந்துபோன மானிடர்களின் பெயர்கள் சமாதியில் ‘நிலைத்து நிற்பது‘ சோகக் காமெடி." Exactly sir.

எம்.பி.உதயசூரியன் said...

பானு said...As usual,super sir

//மகிழ்ச்சி மேம். வரிக்கு வரி ரசிக்கிற உங்களைப் போன்றவர்களின் பாராட்டுதான் எங்களுக்கான உற்சாகம்!//

Sridhar said...

அருமை. நல்லவேளை எங்க நம்ம போன பிக்னிக் பத்தி எழுதீடபோறிங்களோ அப்படின்னு பயந்திட்டேன்

எம்.பி.உதயசூரியன் said...

Sridhar said..நல்லவேளை எங்க நம்ம போன பிக்னிக் பத்தி எழுதீடபோறிங்களோ அப்படின்னு பயந்திட்டேன்

//சார், 'மலையாளபூமியில் நிங்களும், கள்ளும் பின்னே ஞானும்'னு டைட்டில் ரெடி. மேட்டரை போட்ருவோமா?//

Guru said...

ஆஹா! மறுபடியும் கச்சேரி ஆரம்பம். அடிச்சி ஆடுங்கநீ ரொம்ப நாள் கழிச்சு உங்க falooda தமிழ் படிச்சேன். அடிக்கடி சுடச்சுட பதிவுகள் போடுங்க. அங்கே உங்க நண்பரும் சுடச்சுட பதிவு போடா ஆரம்பிச்சுட்டாரு.. இனிமேல் கலக்கல் தான்.

அன்பரசு said...

அப்பா ரொம்ப நாளைக்கப்பறம்! வெகு அருமை, கண்முன்னே பிக்னிக்கை விரிய வைத்து விட்டீர்கள், நன்றி!

எம்.பி.உதயசூரியன் said...

Guru said...ஆஹா! மறுபடியும் கச்சேரி ஆரம்பம். அடிச்சி ஆடுங்க ரொம்ப நாள் கழிச்சு உங்க falooda தமிழ் படிச்சேன்.

//வாங்க குருவே, ‘குருபெயர்ச்சி'க்கு
கரெக்ட்டா ஆஜராகிட்டீங்க! இனிமேல் அடிதூள்தான்//

butterfly Surya said...

'மலையாளபூமியில் நிங்களும், கள்ளும் பின்னே ஞானும்'/// டைட்டிலே சூப்பர். மேட்டர் எப்படி இருக்கும்..??? Sridhar சார்.. நலமா..?

எம்.பி.உதயசூரியன் said...

பனங்காட்டான் said..., கண்முன்னே பிக்னிக்கை விரிய வைத்து விட்டீர்கள்

//நலமா நண்பா? மறுபடியும் நீங்க, நானுன்னு நம்ம பழைய பங்காளிகள்லாம் ஒண்ணு சேர்ந்துட்டோம்ல!//

எம்.பி.உதயசூரியன் said...

butterfly Surya said...
'மலையாளபூமியில் நிங்களும், கள்ளும் பின்னே ஞானும்'/// டைட்டிலே சூப்பர். மேட்டர் எப்படி இருக்கும்..??? Sridhar சார்.. நலமா..?

//இப்படி உசுப்பிவிட்டு உண்மையை கக்க வெச்சுராதீங்க பாஸு! உங்க காதோடு சொல்றேன். ஸ்ரீ சார் நலம்+பிஸி//

Anonymous said...

தல!

சூப்பர்.

நக்கலின் நாயகனே,
எதுகை மோனையின் எடுத்துகாட்டே, வரிகளின் வரமே,
வார்த்தைகளின் வாழ்வே

தொடரட்டும் உங்கள் வெற்றி பயணம்.

அருமையான பதிவுக்கு
என் உளமார்ந்த
நன்றி.

ஆனந்த்
பமாகோ,மாலி

எம்.பி.உதயசூரியன் said...

//ஆனந்த் பமாகோ,மாலி! சூப்பர். நக்கலின் நாயகனே, எதுகை மோனையின் எடுத்துகாட்டே, வரிகளின் வரமே,வார்த்தைகளின் வாழ்வே. அருமையான பதிவுக்கு என் உளமார்ந்த நன்றி.//

தலைவா...உங்கள் அன்புக்கு நான் அடிமை. அதேசமயம் மேலவை அமையற நேரத்துல இப்படி பாராட்டி, என்னை அரசியலில் குதிக்க வெச்சுராதீங்க.



May 19, 2010 10:21 PM

 
சுடச்சுட - by Templates para novo blogger