பொழுதுகளைக் களவாடிய டூரிங் டாக்கீஸ்

Thursday, January 19, 2012



எம்.பி.உதயசூரியன்

ஊருக்குக் கொஞ்சம் தள்ளி ஒரு வெட்டவெளியில்தான் டூரிங் டாக்கீஸ் இருக்கும். ‘டெண்டு கொட்டாய், கீத்துக்கொட்டகை’ என்ற செல்லப்பெயர்களும் உண்டு. கூப்பிடுதூரத்திலுள்ள அக்கம்பக்கத்து மக்களின் போக்கிடமும், பொழுதுபோக்கிடமும் இது ஒன்றுதான். ஒவ்வொரு சாயங்காலமும் கூரைக்கு மேல் கட்டியிருக்கும் டபுள் குழாய் ஸ்பீக்கரில் ‘விநாயகனே வினை தீர்ப்பவனே’ என்று சீர்காழியின் பாட்டு போட்டதுமே ‘ஆஹா...கொட்டாயில படம் போடப்போறாங்கப்பா’ என்று ஊர் மக்களுக்குள் ஓர் உற்சாகப் பரபரப்பு பற்றிக்கொள்ளும். அடுத்து ரெண்டு, மூணு பாடல்கள் ஓடி ‘கோடிமலைதனிலே கொடுக்கும் மலை எந்த மலை’ பாட்டு கேட்டதுமே ‘விறுவிறுவென ஜனம் டூரிங் தியேட்டருக்கு ஓட்டமும் நடையுமாக படையெடுக்கும். பாடலின் முடிவில் படுவேகமாக ஒலிக்கும் ‘பனியது மழையது நதியது கடலது’ வரிகள் வந்தால் போதும்... டிக்கெட்டை வாங்கிக்கொண்டு பாந்து செல்வார்கள். காரணம்- இந்தப் பாட்டு முடிந்ததுமே படம் ஓடத்தொடங்கும்.

அந்த நாட்களை இப்போது நினைத்தாலும் சிலிர்ப்பாகவும் இருக்கிறது...கொஞ்சம் சிரிப்பாகவும் இருக்கிறது. எங்கள் ஊரிலிருந்து 1 கி.மீ. தூரத்திலிருந்தது ‘பாண்டியன்’ டூரிங் டாக்கீஸ். லீவுக்கு மதுரையிலிருந்து அத்தை மகன்களும், பெரியம்மா பசங்களும் வந்துவிடுவதால் எங்களுக்கான ஒட்டுமொத்த ஜாலியும் ‘பாண்டியன்’தான். மதுரையில் பெரிய தியேட்டர்களில் 2 ரூபா 90 காசுக்கு படம் பார்த்த அவர்களுக்கு, வெறும் 25 காசில் டூரிங் டாக்கீஸில் படம் பார்த்தபோது ஏற்பட்ட பிரமிப்பை வார்த்தையில் சொல்ல வராது. அதோடு ஏகப்பட்ட பிரமிப்பும் உண்டு. அரை டிக்கெட்டுகளும், தரை டிக்கெட்டுகளுமாக சகலரும் சமத்துவமாக உட்கார்ந்து ரசிக்கும் மணல் தரை டிக்கெட் 25 காசுதான். ஃபர்ஸ்ட் கிளாஸ் டிக்கெட்டின் விலை 50 பைசா. சோல்வதற்கு மட்டுமே இது சோகுசாக இருக்கும். மற்றபடி ஒரு நீளமான மர பெஞ்ச்தான் ஃபர்ஸ்ட் க்ளாஸ். ஒரு ரூபாக்கு வி.ஐ.பி.டிக்கெட்டும் உண்டு. அதில் ஒரே ஒரு சேர் மட்டுமே இருக்கும். ஊர்ப்பெருசுகளுக்கு மட்டுமே இது ரிசர்வ் செயப்பட்டது. ஒரு படத்திற்கு நாலு இடைவேளை விடுவார்கள். ‘ஏன் இந்த ஊர்ல மட்டும் நாலு இடைவேளை விடறாங்க?’ என்றெல்லாம் ‘மதுரைப் பசங்க’ நிறைய கேள்விகள் கேட்பார்கள். அப்போதெல்லாம் ‘ரீல் மாத்தறாங்கப்பா’ என்று எங்கள் ஊர் சிறிசு, பெரிசுகள் சகஜமாகச் சொல்வார்கள்.

இரவு 7 மணிக்கு, பிறகு 10 மணிக்கு என ரெண்டு காட்சிகள் ஓடும். அதை ‘முதலாவது ஆட்டம், ரெண்டாவது ஆட்டம்’ என்று சொல்வார்கள். பிள்ளை குட்டிகள், பெண்கள் பெரும்பாலும் முதலாவது ஆட்டத்திற்கு வருவார்கள். வேலை வெட்டிக்குப் போவரும் ஆண்கள்தான் ரெண்டாவது ஆட்டம் போவார்கள். எம்.ஜி.ஆர்., சிவாஜி நடித்த பழைய படங்களை ‘மெருகு குலையாத புத்தம்புது காப்பி’ என்ற கவர்ச்சியான விளம்பரத்துடன் கலர்ஃபுல் போஸ்டர்கள் ஒட்டி ரசிகர்களை வலைவீசி இழுப்பது டூரிங் டாக்கீஸ்களுக்கே உரிய தனி சாமர்த்தியம். அதிலும் அந்த போஸ்டர் ஒட்டப்படும் வீட்டுச்சுவற்றின் சொந்தக்காரர்களுக்கு மட்டும் ஓசி பாஸ் கொடுக்கப்படும். அந்த பாஸுடன் சம்பந்தப்பட்ட வீட்டுக்காரர்கள் பகுமானமாக வருவதைப் பார்த்து... சுவரில்லாத சாமான்யர்கள் தங்களுக்குள் ‘கயா முயா’ என்று முனகிக்கொள்வதைக் கேட்க சுவாரஸ்யமாக இருக்கும்.

இப்படிப்பட்ட கலகலப்பான சூழலில் படம் பார்க்கும் அனுபவம் பரவசமானது. திரையில் படம் ஓட ஓட... தரையில் ஆங்காங்கே மணல் சீட்டுகள் உருவாகும். முன்னால் உட்கார்ந்திருப்பவரின் தலை மறைத்தால், அதை அட்ஜஸ்ட் செய்வதற்கேற்ற உயரத்தில் மணலைக் குவித்து மேடாக்கி உட்கார்வார்கள். இதனால், பின்னாலிருக்கும் இன்னொரு ரசிகர் அதைவிட உசரத்தில் மணல் சீட் போட்டு அசர வைப்பார். சமயங்களில் இந்த ‘மண்ணாசை’ ‘அந்நாட்டு மன்னர்களுக்குள்ளே’ சண்டை சச்சரவுகளில் முடிவதும் உண்டு. இதற்கிடையே சாப்பாட்டு தட்டு சைஸுக்கு ஒரு முறுக்கு விற்பார்கள். இந்த ‘மெகா முறுக்கு’ டூரிங் டாக்கீஸில் மட்டுமே மெல்லக்கிடைத்ததே தவிர, இன்றுவரை வேறெங்குமே கிடைத்ததாக யாருமே சொல்லக் கேட்டதில்லை.

‘வெள்ளிக்கிழமை விரதம்’, ‘ஆதிபராசக்தி’ ‘தெவம்’ போன்ற பக்திப் படங்கள் ஓடும்போது செம அமர்க்களமே நடக்கும். பக்திப் பரவசமான காட்சிகள் வரும்போது... பார்த்துக்கொண்டிருக்கிற பல பெண்களுக்கு திடீரென அருள் வந்துவிடும். அதுவரை அப்பிராணியாக பக்கத்தில் உட்கார்ந்திருந்த பெண்கள்...தடாலடியாக ‘டேஏஏஏஏஎ’ என்று பெருங்குரலெடுத்து சத்தமிட்டு, வெறித்த முழிகளோடு, நாக்கைத் துருத்திக்கொண்டு சாமியாடுவார்கள். அவ்வளவுதான்...அருள் குரல் கேட்ட அடுத்த நொடியே படம் நிறுத்தப்பட்டு லைட் போடப்படும். சுற்றியுள்ளவர்கள் சாமியை சாந்தப்படுத்த முயற்சி செய்வார்கள். அப்படியும் சாந்தமாகவில்லை என்றால், உள்ளூர் பூசாரி வந்துதான் வேப்பிலை அடித்து சாமியை மலையேறச் செய்வார். இதுபோல அடிக்கடி ‘சாமியாடல்கள்’ நடப்பதைப் பார்த்து உஷாராகி விட்டார் டாக்கீஸ் ஓனர். ஒருகட்டத்தில் பக்திப்படங்கள் போடும்போதெல்லாம் உள்ளூர் பூசாரிக்கு ‘ஸ்பெஷல் பாஸ்’ கொடுத்து வரச்சொல்லிவிட்டார். வழக்கம்போல பெண்களுக்கு சாமி வந்ததும், விபூதியும் பையுமாக ரெடியாக இருக்கிற பூசாரி, ‘சாமியை’ மந்திரித்து மலையேறச் செய்துவிடுவார்.

இந்த இடைவேளையில் சுடச்சுட முட்டை போண்டா, முறுக்கு, டீ, காபி யாவாரமும் சூடு பிடித்து, கேண்டீன்(?)காரர் செம லாபம் அள்ளுவார். படம் விட்டு பொடிநடையாக வீடு திரும்பும் மக்கள், மனசு விட்டுப் பேசி அரட்டை அடித்துச் சிரித்தபடி நடக்கும் காட்சி இன்னும் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது. எத்தனையோ டூரிங் டாக்கீஸ்கள் இன்றைக்கு கல்யாண மண்டபம், காம்ப்ளக்ஸ், ஃப்ளாட்டுகள் என்று அடையாளம் மாறிப் போனது போல, ‘பாண்டியன்’ டூரிங் டாக்கீஸ் இருந்த இடத்தில் இப்போது மர அறுவை மில் ஓடுகிறது.
.
இன்று சாதி, மத, அரசியல் என பல விஷயங்கள் மக்களை கூறு போடத் துடித்தாலும், அவர்களை ‘ஒரு தாய் மக்களாக’ அன்று ஒரே கூரையின்கீழ் ஒன்று சேர்த்து வைத்த பெருமை டூரிங் டாக்கீஸுக்கு உண்டு. அப்போதெல்லாம் டூரிங் டாக்கீஸுக்குள் முட்டை போண்டா விற்பவர் இப்படிக் கூவியழைப்பார்: ‘போனா வராது...பொழுதுபோனா கிடைக்காது’ என்று. என் பால்ய வயதில் டூரிங் டாக்கீஸ் தந்த சுகானுபவம் கூட அப்படித்தான். அன்றைக்குப் போன அந்தப் பொற்காலம் இனி வராது; விதவிதமாகப் பொழுது போனாலும் அந்த இனிமைகள் இப்போது கிடைக்காது.

நன்றி: ‘புதிய தலைமுறை’

எம்.ஜி.ஆர். என்ற அதிசயம்!

Friday, December 23, 2011




’’சட்டக்கல்லூரி மாணவனாக நான் இருந்தபோதே எம்.ஜி.ஆர்.மீது கொண்டிருந்த பெரும்பாசத்தை வெறும் வார்த்தைகளுக்குள் சொல்லிவிட முடியாதது. பிற்காலத்தில் அவரின் அன்புக்குரிய தம்பியாகி, அவரது பொற்கால ஆட்சியில் அமைச்சராகவும் நான் இருந்தது எனக்குக் கிடைத்த பாக்கியம்.

எம்.ஜி.ஆர். முதல்வர் பொறுப்பிலிருந்த காலகட்டத்தில்…தினந்தோறும் காலை டிபன் ராமாவரம் தோட்டத்தில்; மதிய உணவும் கோட்டையில் அவரது அறையில்தான். உண்ணுகிற நேரமெல்லாம்கூட ஏழை எளிய மக்களின் நலனையே எண்ணுகிற எம்.ஜி.ஆரின் அக்கறையை உடனிருந்து பார்த்து நெகிழ்ந்திருக்கிறேன். சத்துணவுத்திட்டம், இலவச வேட்டி சேலைத் திட்டம், இலவச காலணித் திட்டம்…இப்படி எத்தனையோ நலத்திட்டங்கள் அவரது பொன்மனத்திலிருந்து உருவானவைதான்.

ஒருமுறை திருச்சிக்கு எம்.ஜி.ஆருடன் காரில் பயணிக்கிறேன். வழியில் ஒரு ரயில்வே கேட். கார் நிற்கிறது. எம்.ஜி.ஆர். வந்த செய்தியறிந்து பக்கத்து வயல்களில் வேலை செய்து கொண்டிருந்த மக்கள் பறந்து வருகிறார்கள். அத்தனை பேரும் காரைச் சூழ்ந்து கொண்டு பாசத்தைக் கொட்ட… திக்குமுக்காடிப் போகிறார் எம்.ஜி.ஆர். ‘’எல்லாரும் நல்லா இருக்கீங்களா?’’ என்று அன்போடு விசாரிக்கிறார். பதிலுக்கு அந்த மக்களோ ‘’மகராசா…நீங்க நல்லா இருந்தாலே போதும், நாங்க நல்லா இருப்போம்’’ என்று அந்த உழைக்கும் மக்கள் கையெடுத்துக் கும்பிட்டுச் சொல்ல…அவர்கள் அத்தனை பேரின் கைகளைப் பற்றிக்கொண்டு நெகிழ்ந்து போகிறார் எம்.ஜி.ஆர். கார் நகர்கிறது. சில நிமிடங்கள் மௌனமாக வந்த எம்.ஜி.ஆர். உருகிப்போய் சொன்னார்: ‘’ நான் நல்லா இருந்தாலே தாங்களும் நல்லா இருப்போம்னு சொல்ற இந்த மக்களுக்கு நான் என்ன கைமாறு செய்யப்போறேன்!''

மக்கள் தன் மீது காட்டிய பாசத்தைப் போலவே, மக்கள் மீது அவர் காட்டிய அன்பையும் அக்கறையையும் நேரில் பார்த்தேன். அவரது ஆட்சியின்போது ஒருமுறை ராமேஸ்வரத்தில் கடுமையான புயல் மழை. குடியிருப்புப் பகுதிகளில் பலத்த சேதம். தகவல் கிடைத்ததும் உடனே பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்றார் எம்.ஜி.ஆர். அவருடன் நானும். சேறும் சகதியுமாக நீரோடிய வீதிகளில், கண்ணீரும் கம்பலையுமாக நின்றிருந்தனர் மக்கள். அவர்களைப் பார்த்ததுமே காரிலிருந்து இறங்கிய எம்.ஜி.ஆர். கொஞ்சம்கூட யோசிக்காமல் வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு முழங்கால் அளவு தண்ணீரில் நடக்க…பதறிப்போன மக்களோ ‘அய்யா, எங்களுக்கு ஒண்ணும் பிரச்னையில்ல, உங்களப் பாத்ததே போதும், சகதியில நடக்காதீங்க’’ என்று தடுத்தும் கேளாமல், அவர்களது அருகில் போய் ஆறுதல் கூறினார். அதேஜோரில் மின்னல் வேகத்தில் நிவாரணப்பணிகளுக்கும் உத்தரவிட்டார். மக்களின் குறைகளை கோட்டையில் உட்கார்ந்து கேட்டவர் அல்ல…தெருவுக்கே வந்து தீர்த்து வைத்தவர் எம்.ஜி.ஆர்.

கட்சித்தலைவராக தொண்டர்கள் மீது அவர் கொண்டிருந்த பற்றை சொல்லித்தீராது. கட்சியில் சின்ன ஆள், பெரிய ஆள் என்றெல்லாம் பேதமே பார்க்க மாட்டார். புதுக்கோட்டைப் பகுதியில் இரண்டு தொண்டர்கள் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் சேர்ந்து விட்டனர். உள்ளூர் பத்திரிகையில் இது சில வரிச் செய்தியாக வெளியானது. இந்தச் செய்தி எம்.ஜி.ஆரின் கவனத்திற்குப் போனதுமே எனக்கு ஃபோன் செய்து விசாரித்தார். அப்போது நான் கோவையில் இருந்தேன். ‘’அவங்க ரெண்டு பேருமே அடையாளம் தெரியாத நபர்கள்’’ என்றேன். உடனே எம்.ஜி.ஆர்.’’அப்படிச் சொல்லாதீங்க. கட்சியிலேர்ந்து யாரையுமே நான் இழக்க விரும்பலை. நீங்க ஊருக்குப் போனதுமே அவங்க ரெண்டு பேரையும் திரும்பவும் கட்சியில சேர்த்துடணும். அந்தச் செய்தி அதே உள்ளூர் பேப்பர்ல வரணும், அதை முடிச்சிட்டு என்னை வந்து பாருங்க’’ என்றார் அழுத்தமாக. அவர் சொன்னதை அப்படியே செய்து முடித்தேன். அந்தத் தொண்டர்களுக்கோ பூரிப்பு தாங்கவில்லை. அப்புறம்தான் அவரைப் பார்த்தேன். என் கன்னத்தில் செல்லமாகத் தட்டிச் சிரித்த அந்தச் சிரிப்பிருக்கிறதே…அவர்தான் எம்.ஜி.ஆர்.!

முதல்வராக ஆட்சிப்பொறுப்பேற்ற நாள்முதல் அவர் அமரராகும் வரை…அந்த 11 ஆண்டுகளில் 1 சென்ட் நிலமோ அல்லது வீடோ..இந்தத் தமிழ்நாட்டிலோ, வேறெந்த மாநிலத்திலோ அவர் வாங்கியது கிடையாது. அதேசமயம் திரையுலகில் இருந்தபோது தான் சம்பாதித்த சொத்துக்களை மாற்றுத் திறனாளிக் குழந்தைகளின் நலனுக்கும், கட்சிக்கும் என தமிழக மக்களிடமே திருப்பிக் கொடுத்து லட்சக்கணக்கான மக்களின் இதயங்களில் அவர்போல இடம் பிடித்தவர் வேறு யாரும் கிடையாது. ஏனெனில் தான் சம்பாதித்த மாபெரும் சொத்து மக்கள் செல்வாக்கு என்பதைத்தான் அவர் மதித்தார், அதில் துளிகூட கீறல் விழாமல் கடைசிவரை காத்தார்.

இதற்கு உதாரணமாக ஒரு சம்பவம்…எம்.ஜி.ஆருடன் காரில் செல்கிறேன். சாலையில் இருபுறமும் திரண்டிருந்த மக்கள் ’’தலைவா வாழ்க! எம்.ஜி.ஆர். வாழ்க’’ என்று கோஷமிடுகிறார்கள். இதைப் பார்த்த எம்.ஜி.ஆர். என்னிடம் ‘’எல்லாருமே எம்,ஜி,ஆர், வாழ்க’ன்னுதானே வாழ்த்தறாங்க. ஒருத்தர்கூட ‘முதலமைச்சர் வாழ்க’ன்னு சொல்லலை. ஏன் தெரியுமா?’’ என்று கேட்டார். ‘’ உங்க மூன்றெழுத்துப் பெயர்தான் அவங்களுக்கு மந்திரம் மாதிரி. அதனாலதான்’’ என்றேன். ‘’அதுமட்டுமல்ல, முதலமைச்சர் வாழ்கன்னு சொன்னா அது பதவியை வாழ்த்தற மாதிரி, எம்.ஜி.ஆர். வாழ்கன்னு சொன்னாதான் அவங்களுக்கு என்னை வாழ்த்தற திருப்தி. இதுதான் நான் சம்பாதிச்ச சொத்து. இதைத்தான் நான் பத்திரமா காப்பாத்தியாகணும்!’ என்றார்’. இறுதிவரை சொன்னது போலவே நின்றார்.

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் சென்னை வருகை தந்தபோது முதல்வர் எம்.ஜி.ஆரை கோட்டையில் சந்தித்தார். இருவரும் உற்சாகமாக உரையாடினார்கள். சந்திப்பு முடிந்து இளவரசரை ஆளுநர் மாளிகைக்கு திரும்ப அழைத்து வருகிறேன். அப்போது சார்லஸ் என்னிடம் ‘’எம்.ஜி.ஆரின் பின்னணி என்ன? இவர் ராஜகுடும்பத்தைச் சேர்ந்தவரா?’’ என்று வியப்போடு விசாரிக்கிறார். நான் அவரது குடும்பப்பின்னணி பற்றி விவரித்தேன். ஆனாலும் ஆச்சரியம் விலகாமல் சார்லஸ் சொன்னார்: ‘’ஒருவேளை போன பிறவியில் இவர் அரசராக இருந்திருக்கலாம்!’’. அப்படியே நான் மெய்சிலிர்த்துப் போய்விட்டேன். தமிழக மக்கள் மட்டுமல்ல…உலகையே ஆண்ட அரச குடும்பத்தின் இளவரசர்கூட, நம் எம்.ஜி.ஆரைப் பார்த்து ‘அரசர்’ என்று வியக்கிறாரே…அந்த அதிசயம்தான் எம்.ஜி.ஆர்.!

தகவல்: சு. திருநாவுக்கரசர் ( முன்னாள் அமைச்சர் )
எழுத்து: எம்.பி. உதயசூரியன்

நன்றி: புதிய தலைமுறை

’அவன் இவன்’ தெரியுமா?

Saturday, February 19, 2011







’சதக் சதக்’ கரு.பழனியப்பன்

செல்லோ, மெசேஜோ செல்லமாக ‘டேய்’ என்றுதான் அழைப்பான் கரு.பழனியப்பன். பிப்.13ம் தேதி இரவு விஜய் டிவி ‘நீயா நானா’வில் இயக்குநர் கரு.பழனியப்பனைப் பார்த்தேன்.
அப்போதுதான் குளிச்சுட்டு வந்தவன்போல் பளிச்சென்று இருந்தான். என் அன்பு நண்பன். ஆகவேதான் ‘அவன்’. அன்று காதல் பற்றிய விவாதம். எப்போதுமே கரு.பழனியப்பன் பேச்சு ‘சதக் சதக்’ என்று தைக்கும். அன்றும் அப்படித்தான். ‘காதலில் பித்து அதிகம்தான். ஆனால் அதையும் ரசிக்கணும்’ என்றவன் அடுத்து சொன்ன ‘சதக்’...’’மூன்றாம்பிறை’ படத்துல க்ளைமாக்ஸ். ஸ்ரீதேவி ரயிலில் கிளம்பறாங்க. கமல் தன் தலையில குடத்தை வெச்சு, குரங்கு ஜாடை காட்டி, குட்டிக்கரணம் அடிச்சு. விளக்குக் கம்பத்துல முட்டி விழுகறதை பாத்து நாமெல்லாம் கண்கலங்குனோம். ஆனா அது தேவையே இல்லை. ஹீரோயின்
ரயில்லதானே போறா...அதே ரயில்ல ஏறி அடுத்த ஸ்டேஷன்ல அவகிட்ட போய் நடந்ததைச் சொல்லிரலாமே. ஆனா கமல் அப்படி தவிக்கற அந்தப் பித்தைத்தான் நாம ரசிக்கிறோம்’ என்று ’சதக்’க...அரங்கமே கிறங்கி ரசித்தது. பழனி மதுரைக்காரன். 1991ல் பைக் விபத்தில் பழனியப்பன் அடிபட்ட சமயம்...விகடன் மாணவப் பத்திரிகையாளர் தேர்வு நடந்தது. உடம்பில் முக்கால் சதவீத பேண்டேஜ்களோடு முக்காமல் முனகாமல் வீல்சேரில் வந்து தேர்வெழுதி நிருபரான இந்தப் படுபாவியின் அசகாயசூரத்தனத்தை மீனாட்சி அறிவாள்...
கெக்கெக்கே...’மந்திரப்புன்னகை’ நாயகி அல்ல!

’குணா’ச்சித்திர நடிகர்

உணர்வில்...சிவாஜி குழைவு, எம்.ஜி.ஆர்.விளைவு - ரெண்டும் கலந்த ’கவலை’ குணா. உருவத்தில்...கொஞ்சம் ரஜினி, கொஞ்சம் வைரமுத்து- இருவர் கலந்த கலவை இதே குணா. பத்திரிகையாளர். அபாரமான பாடகன். நெருங்கிய நண்பன். ஆகவேதான் ‘இவன்’.பாட ஆரம்பித்தால்...இவன் குரலில் பாகவதர், டி.எம்.எஸ்., நாகூர் அனிபா ஆகியோர் முகம் காட்டி சுகம் ஊட்டுவார்கள். பாசம் வந்தால் மடியிலேறி சாய்வான். ரோஷம் வந்தால்
மாடியிலிருந்தே பாய்வான். (குணாவை வைத்து ஒரு அட்டகாசமான கேரக்டரை பொட்டலம் கட்டி வைத்திருக்கிறேன். அது தனிக்கதை) சுமோ சீறிப்போனாலே எமோஷனலாகிற குணாவை ‘பதினாறு’ படத்தில் கமுக்கமாகக் குமுறும் பெருசு ரோலில் நடிக்க வைத்துவிட்டார் டைரக்டர் எஸ்.டி.சபா. யம்மா...சும்மா சொல்லக்கூடாது, கலங்கடித்து விட்டான் குணா! படத்தில் ஒரு நடிகன் அழும்போது, பார்க்கிற ரசிகனும் கண்கசிந்தால் அதுதான் குணச்சித்திர நடிப்பு. ’பதினாறில்’ ஒரு காட்சியில்...மனசுக்குள் பொத்திவைத்த கத்தியாக குத்திக்கிழித்த சோகமும் மானமும் கலந்து வெடிக்க, அக்காவின் காலில் விழுந்து குணா அழும்போது விசும்ப வைத்துவிட்டது ‘குணா’ச்சித்திர நடிப்பு. இனி துணிஞ்சு வேலையை ரிசைன் பண்ணலாம்...பயப்படாத குணா! நீ அல்ல, அந்தணனும், சக்திவேலும் அப்புறமா நானும். ‘கால்ஷீட் மேனேஜர்’ வேலை கைவசம் இருக்கப்பு!

அண்ணனுடையான் படைக்க அஞ்சான்

Saturday, January 22, 2011






பல்லாண்டு கால பொல்லாத சோம்பேறித்தனம் அது. இவ்வாண்டு வீம்பேறி எழுந்து
அதை விரட்டி அடித்துவிட்டேன். சந்தித்ததும், சிந்தித்ததுமாக எத்தனை மனிதர்கள்...எவ்வளவு அனுபவங்கள். பத்திரிகை பரபரப்பில் ஓடிக்கொண்டே இருப்பதால் தனித்திறமை காட்டி படைத்திட நேரமில்லாமல் இருந்தது. நல்லவேளையாக...கொஞ்சகாலத்திற்கு முன் டூவீலருக்குக் குறுக்கே
கறுப்பு நாய் ஒன்று ‘வீல்’ என்று ஓடியது; அந்தர்பல்டி அடித்து நச்சென்று வீழ்ந்து சிவப்பு ரத்தம் சிந்தினான் இந்த பச்சைத்தமிழன் (கலர்ஃபுல் ரைட்டப்பு?). ஒருமாத கால ‘பெருங்காய’ ஒய்வு. என்ன செய்வான் ஒரு ஏழை இளைஞன்?

இஷ்டப்பட்டேன்...சிஸ்டம் தொட்டேன். விறைப்பான, முறைப்பான பலப்பல பிரபலங்களை பேட்டிக்காகவும், நட்புக்காகவும் சந்தித்தபோது ஏற்பட்ட ‘கலகல’ அனுபவங்களை எனது வலைப்பூவில் ‘சுடச்சுட’ பந்தி வைத்தேன். ரசித்து ருசித்த உலகத்தமிழர்கள் உச்சிமோந்து மெச்சினர். அவற்றைத் தொகுத்து ‘சாக்லெட் சந்திப்புகள்’-(பிரபலங்களுடன் ‘கலகல’
அனுபவங்கள்) என்று நூலாக்கினேன். அதேஜோரில் ’திடுக்’கிட வைக்கும் சம்பவங்களைத் தொகுத்து ‘அட!’(வித்தியாச மனிதர்கள் வியப்பான அனுபவங்கள்) என்ற தலைப்பில் இன்னொரு நூல். ரெண்டு நூல்களுக்கும் ’பிள்ளையார் சுழி’ போட்ட ’மாப்பிள்ளை’இரா.த.சக்திவேல் மூலம் ( கோச்சுக்காத மாப்ள, ‘அதை’ சொல்லல!) பாசத்திற்குரிய மீசைக்கார அண்ணன் ’நக்கீரன் கோபால்’அவர்களது பார்வைக்குப் போனது. வாயாரப் படித்து வாய்விட்டுச் சிரித்த அண்ணன் ரெண்டு புத்தகங்களையும்
’நக்கீரன் வெளியீடுகளாக’வெளியிடச் சொன்னார்.

‘ப்ரூஃப்’பார்ப்பதிலிருந்து ஃபுல்ஸ்டாப்’ போடுவதுவரை ’புல்லட் ப்ரூஃப்’ போடும் அளவிற்கு தோட்டா ஸ்பீடில் கேட்டு ‘அச்சா’ என்று பாராட்டும்படி நூலை அச்சாக்கத் துணையிருந்த ’நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்’ சகோதரர் பரமேஷ்வரனுக்கு நன்றி சொல்லித்தீராது. இதேவேளையில் இரா.த.சக்திவேல் எழுதிய ‘ச்சீய்’ கவிதைகள்,
‘பாலாவின் படைப்புலகம்’,‘புலிகேசியான புண்ணாக்கு’மற்றும் ஆர்.எஸ்.அந்தணன் எழுதிய ‘பாரதிராஜா முதல் சசிகுமார் வரை’நூல்களும் ரெடியாக இருக்க...இவற்றோடு எனது இரு நூல்களும் அணிவகுக்க...சகாக்களோடு சேர்ந்து
ஆரம்பமானது ஒரு புதிய சகாப்தம். படைப்புலகத்திற்கு இந்த அணி ஆற்றிய தொண்டால், மூவரது ஃபோட்டோக்களையும் போட்டு புத்தகக்காட்சியில் ரெண்டாள் உசரத்திற்கு பேனர் வைத்து அசரடித்ததைக் கண்டு தமிழ்க்கன்னி பெருமகிழ்ச்சி கொண்டாள்.

அந்த பேனரை அன்புத்தம்பி அறிவழகன் ஃபோட்டோ எடுத்துத் தந்தான். அட்டகாசமாக இருந்த பேனரில் எனது ‘அட’ புத்தகத்தின் அட்டையை ஜூம் செய்து பார்த்தபோது வாடிப்போனேன். காரணம்-மண்ணு மணக்கிற சம்பவங்களும், மனிதர்களும் அடங்கிய அப்புத்தகத்தின் அட்டையில், இரு வெளிநாட்டு முகங்கள் அலங்கரித்தன. ‘அய்யோ மாப்ள, அட்டை நல்லா இருக்கு, ஆனா சப்ஜெக்ட்டுக்கு பொருத்தமா இல்லியே’என்று அலறியடித்து சக்தியிடம் சொன்னேன். கிளறிக் கிளறி அவர் விசாரிக்க கிட்டத்தட்ட கண்ணீர் சொட்டிவிட்டேன். ‘சரி, அண்ணன்கிட்ட பேசறேன்’ என்று சக்தி சொன்ன அதேநேரம்...நக்கீரன் கோபால் அண்ணன் புத்தகக் காட்சி விழாவில் இருந்தார்.

வாடிப்போன முகமும், வதங்கிப்போன மனசுமாக உதடு பிதுங்கிபோய் நானிருக்க...’பாஞ்சு நிமிஷத்தில்’சக்தி பாஞ்சு வந்தார் செல்லில். “உதயா, அண்ணன்கிட்ட சொன்னேன். அண்ணனும் பேனரைப் பாத்து அப்படியேதான் ஃபீல் பண்ணியிருக்கார். ‘புத்தகம் அந்த அட்டையோட ஸ்டாலுக்கு போகாது. புது அட்டை பிரிண்ட் பண்ணிரலாம். தம்பியை கவலைப்பட வேணாம்னு சொல்லுங்க’ என்ற ’அண்ணனின் குரலை’ அப்படியே சக்தி ஒலிக்க , ஏற்கனவே கசிந்த கண்ணீர் நக்கீரன் கோபால் அண்ணனின் மின்னல்வேக ஆக்‌ஷனால் இப்போது ஆனந்தக்கண்ணீராக வழிந்தது.


நம்புங்கள் நண்பர்களே, அடுத்து நடந்தது ‘அண்ணனுக்கே உரிய அதிரடி அதிசயம்’. பழைய அட்டைக்கு மாற்றாக கைவசம் தயாராக இருந்த மூன்று அட்டைப்பட டிசைன்களை பரமேஷ்வரனுக்கு அனுப்பி வைத்தேன். பட்டை கிளப்பும் பத்திரிகை, பப்ளிகேஷன் பரபரப்புகளுக்கு நடுவே ’ஒரு அட்டை மேட்டர்தானே’ என அண்ணன் சட்டை செய்யாமல்
விட்டிருக்கலாம்தான்...ஆனால் ‘அட்டைப்பட சக்கரவர்த்தி’ அவர் என்பதால், இந்த ‘அட’ அட்டையிலும் அபார அக்கறை காட்டி, அட்டகாசமான அட்டைப்படம் ஒன்றை தேர்ந்தெடுத்து அச்சுக்கு அனுப்பியிருக்கிறார். முதல்நாள் மதியம் அனுப்பிய அட்டை அச்சாகி, புத்தகத்துடன் பைண்டிங் ஆகி மறுநாள் மதியமே புத்தகக் காட்சியில் ’நக்கீரன் ஸ்டாலில்’
இடம்பிடித்தது என்றால், ’படைப்புகள்மீது காட்டும் அக்கறையில் அவருக்கு நிகர் அவரே’ என்பதுதான் அண்ணனுக்கான பெரும்புகழ். ‘தம்பியுடையான் படைக்கு அஞ்சான்’- இது அண்ணனுக்கான பொன்மொழி. ‘அண்ணனுடையான் (புத்தகம்) படைக்க அஞ்சான்’- இது அண்ணனுக்கான என்மொழி.

ஜனவரி 13ம் தேதி. மாலை 4 மணி. சென்னை புத்தகக்காட்சி ‘நக்கீரன் ஸ்டால்’. நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் வெளியிட்ட நூல்களின் ஆசிரியர்களுக்கு அண்ணன் நக்கீரன் கோபால் அவர்கள் பொன்னாடை போர்த்தி, படைப்புக்கான காசோலை வழங்கி கௌரவிக்கும் நிகழ்ச்சி. தீட்டி வைத்த ஈட்டி போல உடற்கட்டும், போர்வாளாக மிரட்டும் மீசையும், வாயாரச் சிரிப்புமாக
நின்றிருந்தார் அண்ணன். அத்தனை படைப்பாளிகளையும் அன்போடு வரவேற்றார். ‘தம்பி உதயா’ என்று பாசத்தோடு அழைத்த அண்ணனின் வெற்றிக்கரங்களை அன்போடு பற்றி முத்தமிட்டு வணங்கினேன். ‘சாக்லெட் சந்திப்புகள்’ நூல் பற்றி இனிப்பாகப் பாராட்டி ஒரு குழந்தையைப் போல் ரசித்துச் சிரித்தார். சாதனை இயக்குநர் மகேந்திரன் தொடங்கி இரா.த.சக்திவேல்,ஆர்.எஸ்.அந்தணன் என எங்கள் அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி, காசோலையும், அன்பளிப்பும் வழங்கி கௌரவித்தார் அண்ணன். ஆகமொத்தம்...அங்கு கிடைத்த அண்ணனின் பாராட்டு மூலம் தமிழ்ப்படைப்புலகை அங்குலம் அளவாவது தரம்
உயர்த்துவதே நக்கீரன் பதிப்பகத்திற்கு படைப்பாளர்கள் செய்யும் பெருமை; கடமை!

ஒரே ஒரு ஊர்ல ரெண்டே ரெண்டு பேரு!

Monday, August 9, 2010





எம்.பி. உதயசூரியன்

அக்கம்பக்கம் யாருமில்லை. பேச்சுத்துணைக்கு ஆளுமில்லை. சுத்துப்பட்டு 3 கி.மீ. தூரத்திற்கு
மனித நடமாட்டமே இல்லை. அப்படிப்பட்ட ஒரு அத்துவான ஊரில் ஒத்தை வீட்டில்
இருந்தபடி வாழ்க்கையின் கடைசிநாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார்கள் ஒரு வயோதிகத் தம்பதி.வழியும் கண்ணீரும் வறண்டு போகுமளவிற்கு, ஆறாத காயமும் தீராத வலியும் கொண்ட அந்தப் பெருசுகளின் கதையை கமுக்கமாக வைத்திருக்கிறது கரிசல்குளம் கிராமம்.திருநெல்வேலி டூ மதுரை நெடுஞ்சாலையில் அரைமணிநேரம் பயணித்தால் எதிர்ப்படும் பஸ் ஸ்டாப் கங்கைகொண்டான். இங்கிருந்து ’பொசுக்’கெனக் கோபித்துக்கொண்டு இடதுபுறமாகப் பிரிகிறது ஒரு தார்ச்சாலை. போக வர யாருமில்லாமல், போக்குவரத்து ஏதுமில்லாமல் இருக்கும் சோகப்பாதை இது என்பதற்கு நடுரோட்டில் முளைத்துப் படர்ந்திருக்கும் முள்செடிகளே சாட்சி. ஓங்கி வளர்ந்த பனைமரங்களின் ஓலமும், தாங்கிவந்த சோகத்தைச் சொல்ல வார்த்தையின்றி காதோரம் விசும்புகிற காற்றுமாக கனமான துக்கத்தை வழிநெடுக அனுஷ்டிப்பது போலிருக்கும் அந்த கறுப்புச்சாலையில் சில கி.மீ. தூரம் சென்றால்...
‘கரிசல்குளம் சாலை’ என்று ஒரு போர்டு வலதுபுறம் நம்மை வழியனுப்புகிறது.

இன்னமும் புத்தம்புதுசாகவே இருக்கும் அந்த ரோடு ‘திடுக்’கென ஓரிடத்தில் முடிந்து விடுகிறது. சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து நிற்க, அதனுள்ளே... சிதைந்த வீடுகள் புதைந்து கிடக்க, இடிந்து சரிந்த பீடமும், எரிந்து கருகிய உத்திரங்களும் ‘அன்று நடந்த பெருங்கலவரத்தின் மிச்சம் மீதி இதுதான்’ என்ற பீதியைத் தந்தன. ஒருகாலத்தில் நாள்முச்சூடும் தண்ணீர் சேந்திய ஊர் முச்சந்தியில் இருக்கும் கிணறு இன்று சீந்துவாரின்றி பாசிபடிந்து கிடந்தது. தெருவுக்குள் போகும் பாதையை மறித்துக் கிடந்தது முள்வேலி. அதைக் கடந்து உள்ளே நடந்து போனால்...நடுவே தெரு, இருபுறமும் காரைவீடுகள் என பாழடைந்து காணப்பட்டன. ஓரிடத்தில் சின்ன சின்ன பொம்மைகள், தட்டுகள் சிதறிப் போய் கிடந்தன. அல்லு சில்லுகள் ஓடி விளையாடிய அந்த இடமெல்லாம் இப்போது முள்ளு முளைத்து
விட்டது. மர்மமாக நின்றிருந்தன நாலைந்து மின்கம்பங்கள்.
காதுகளைக் கிழிக்கிற காற்றும்,பனையோலைகளின் சலசலப்பும், பலவித பூச்சிகளின் சப்தமும் அமானுஷ்ய உணர்வை ஏற்படுத்த...உடன்வந்த புகைப்படக்காரர் கலீல் ஒருகட்டத்தில் ‘இங்க மனுஷங்க இருக்குறதுக்கான அறிகுறியே இல்லையே’ என்றார் லேசான பயத்துடன். நமக்கும் அதே சந்தேகம் வர ’’அய்யா...அய்யா’ என்று குரல் கொடுத்தோம். ம்ஹும். நிசப்தம். தெருவின் கடைசிமுனையில் ஒரு மெச்சுவீடு மட்டும் சமீபத்திய வெள்ளையடிப்பால் ‘பளிச்’சென்று தெரிந்தது. அங்கு சென்று மீண்டும் குரல் கொடுக்க...பதிலுக்கு ’’ஆருய்யா?’’என்று மெல்லிசான குரல் கேட்டது. ‘சட்’டென அந்த நொடியில் நமக்குள் ஒரு
சிலிர்ப்பு. உடனே வீட்டின் முன்புறம் போனோம். அங்கே...இற்றுப்போன கயிற்றுக் கட்டில் மீது வெற்றுடம்போடு ஒரு வயசாளி மனுஷன் உட்கார்ந்திருந்தார். ’’வாங்கய்யா, ஆளரவமில்லாத ஊர்ல இருக்கற இந்த அனாதைகளைப் பாக்க வந்துருக்கீகளே’’என்று வாயார வரவேற்றார். நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு, கையோடு கொண்டுபோயிருந்த பழங்களைத் தந்தோம். சந்தோஷமாக வாங்கியவர்,‘’எம்பேரு ராமசுப்பு. வயசு 90 ஆச்சு. என் வீட்டாளு பேரு கருப்பாயி. அதுக்கு வயசு 70. காலம் போன கடைசியில ‘ஒனக்கு நான் எனக்கு நீ’னு ரெட்டை உசுரா வாழ்ந்துகிட்டிருக்கோம். என்ன...இந்த இளைப்புதான் தீரலை’’- சொல்லிவிட்டு ‘ம்க்ர்ம்’ என்று இருமிச் செருமியபடி ‘’அதாச்சு பதினாலு வருஷம்’’ என ஆரம்பித்தார்...

”1995ம் வருஷம் வரை சண்டை சச்சரவு இல்லாம ஒத்துமையா இருந்த ஊருய்யா இது. கீழத்தெருவுல நாங்களும், மேலத்தெருவுல அவங்களும் இருந்தோம். மொத்தம் நூத்தம்பது குடும்பம். எல்லாருக்கும் வெவசாயம்தான் பொழப்பு. காடுகரையில பொழுதுக்கும் பாடுபட்டாதான் சோறு. நிலைமை இப்படியிருக்க எங்க சாதிப் பொண்ணை, மேலத்தெருவுக்கார வேற சாதிப் பையன் காதல்கல்யாணம் பண்ணிகிட்டான்.
இனம் இனத்தோட, ஜனம் ஜனத்தோட இருந்தாத்தான மரியாதை. அதை இந்த ஜோடி கெடுத்துருச்சு.இதனால ரெண்டு சைடுக்கும் உள்மனசுல புகைச்சல். 96ல் அசலூர்ல இருந்து வந்த ஒரு வெட்டிப்பய ஊதிவிட, வந்தது வெனை. மூணு தலக்கட்டா தாயிபுள்ளைகளா வாழ்ந்தவங்களுக்குள்ள சாதிச்சண்டை உண்டாகி வெட்டிகிட்டாங்க. எங்க பய ஒருத்தனோட தலையை துண்டாக்கிட்டாங்க அவங்க ஆளுங்க. பழிக்குப் பழியா எங்க பசங்களும் வெறி கொண்டு கெளம்ப...வெட்டு, குத்து, வீடுகளுக்கு தீவைப்புனு ரெண்டு தரப்புலயும் பயங்கர கலவரம், ஏகப்பட்ட சேதாரம். ஒண்ணுமண்ணா இருந்தவங்க ஒருத்தரை ஒருத்தர் கொன்னாதான் ஆச்சுன்னு நின்னாங்க. பத்து வெரலுக்குள்ள சண்டை வந்து ரெண்டு
கையும் நாசமா போனமாதிரி போச்சுய்யா இந்த ஊரு...’’- மனசில் மறைந்து கிடக்கும்
துயரம் பெரியவரின் பேச்சில் உறைந்து நிற்கிறது.


அப்புறம்? “இனி இந்த ஊருல காலந்தள்ள முடியாதுன்னு ரெண்டு தெருவுக்காரங்களும் ஊரைவிட்டே காலி பண்ணிப் போயிட்டாங்க. உசுருக்குப் பயந்து எம் பசங்க என்னையும், என் வீட்டாளையும் (மனைவி) பக்கத்து ஊருக்கு இழுத்துட்டுப் போனாங்க. போன மறுநாளே என் வீட்டாளை அந்த ஊரானுங்க ‘வந்தேறிக’ன்னு ஏசிப்புட்டானுக. வந்ததே கோவம். “சொந்த ஊரைவிட்டுப் போனதுக்கு இந்த அவமானம் தேவைதான்’னு நாங்க ரெண்டு பேரும் ஆனது ஆகட்டும்னு இங்கியே வந்துட்டோம். ரெண்டு தரப்புலயும் ரத்தவெறி அடங்காத நேரம் அப்போ.
யார் உசுருக்கும் உத்தரவாதம் கெடயாது. எம் மகனும், மகளும் வந்து எம்புட்டோ கெஞ்சி கூப்புட்டுப் பாத்தாங்க. நகரமாட்டேன்னுட்டோம். இன்ஸ்பெக்டர், பிரசிடெண்ட்லாம் வந்து ‘’உனக்கு ஏதாச்சும் ஒண்ணுன்னா நாங்கதான பதில் சொல்லணும், கெளம்புங்க’ன்னாங்க. “பொறந்து வளர்ந்த ஊரை விட்டுப் போறதுன்னா செத்த பெறகுதான் போவோம். உசுரோட இருக்கறப்போ எப்படிப் போகமுடியும் எசமான்?’னு கிடுக்கிப்பிடி போட்டேன். ’பொல்லாத
கெழவருப்பா’னு என் வைராக்கியத்தை பாராட்டிட்டுப் போயிட்டாங்க” - தனது நரைத்த
முறுக்கு மீசையை திருகிவிட்டு இருமியபடி சிரித்தவர், ‘’ஆனா எனக்கு சரிசமானமான தெகிரியசாலி என் வீட்டாளு. ‘உன் உசுருக்கு நான் ஜவாப்தாரி’ன்னு சொன்னதுக்கு, ‘எமனே வந்தாலும் என்னைத் தாண்டிதான் உன்னைத் தொடமுடியும்யா’னு நின்னவ அவ!” என்று பெருமிதப்பட்டார். தற்காப்புக்காக அப்போது வைத்துப் பழகிய அருவாள், இப்போதும் பழக்கதோஷத்தில் பெரியவரின் கட்டிலின் கீழேயே கிடக்கிறது.

”ஆமா, அம்மா எங்கேய்யா?” என்றோம். உடனே கட்டிலிலிருந்து இறங்கி, வீட்டு வாசலைத் தாண்டி நின்று, எதிரே கூப்பிடு தூரத்திலிருக்கும் தோட்டத்தை நோக்கி “எலே கருப்பி’என்று குரல் கொடுத்தார். “தோ வாரேன் மாமோய்’’ என்று பதில் குரல் கேட்டதுமே, பெரியவர் “எங்கன இருந்தாலும் என் சத்தம் கேக்கற தூரத்திலேயேதான் இருப்பா. இந்த இளைப்பு வந்து நாந்தான் தளர்ந்துட்டேன். அவ இன்னும் சுறுசுறுப்புல கொமரிகணக்கா இருப்பா” என்று பூரித்துச் சிரித்தார். அடுத்த சிலநிமிடங்களில் ஓட்டமும் நடையுமாக வந்து சேர்ந்தார் கருப்பாயி. வறுமைக்கோலத்திலும் உழைப்பின் சின்னமாகத் தெரிந்தார். “கண்டுக்க ஆளில்லாத
எங்களை கண்காணா தூரத்திலிருந்து பாக்க வந்துருக்கீகளே ராசா” என்று வாஞ்சையாகப் பேசினார்.

பையிலிருந்த ரேசன் அரிசியைக் காட்டி “இன்னிக்கு கஞ்சிக்கு இதுதான் ராசா. ஒரு டம்ளர் அரிசி, கொஞ்சம் பருப்பு போட்டா சோறு, கொளம்பு ரெடி. ஆனா இவருக்கு மட்டும் டெய்லி ஒரு பீடிக்கட்டு வேணும். அதான் இவருக்கு பிரியமானது” என்று அக்கறையாகக் கணவரைப் பார்க்கிறார். “சரி, நீங்களாவது சொல்லுங்க, இப்படி தன்னந்தனியா வாழறதுக்கு பயம் வரலையா, வருத்தமா இல்லையா?” என்றோம். கூர்மையாக நம்மைப் பார்த்தபடி கருப்பாயி சொன்னார்...”சத்தியமா சொல்றேன் ராசா, சுத்தமா பயங் கெடையாது. கொஞ்சங்கூட
வருத்தமும் இல்ல. மனுஷங்களோட இருந்தாத்தான இந்த ரெண்டு இம்சைகளுக்கும் ஆளாகித் தொலையணும். இப்ப அது இல்ல. எங்களுக்கு ராவு, பகல் கெடையாது.மழை, வெயில் கெடையாது. ஒனக்கு நான், எனக்கு நீன்னு காலத்தைக் கழிக்கிறோம். ஒரு பால்மாடு இருக்கு. அதோட பாலை வித்து எங்க ஜீவனம் நடக்குது. பாழடைஞ்ச கெணத்துல இருக்கற பாசித்தண்ணியத்தான் காச்சி குடிக்கறோம். மகராசன் புண்ணியத்துல கரண்ட்டு இருக்கு.
சொந்த பந்தம், மனுஷ மக்க, ஆடு மாடுகன்னு நெறஞ்ச வாழ்வு வாழ்ந்தோம். ஆரு கண்ணு பட்டுச்சோ ஊரு செதறிப்போச்சு. நாங்களும் இப்பிடி அனாதியாகிப் போனோம். ஆனாலும் அதோ எங்க கொலசாமி முருகன் அருளால ஒரு கொறையும் இல்லை. கரிசல்குளத்து ராசா ராணி மாதிரி வாழறோம் சாமி” - ’பாமர ஞானி’ போலப் பேசுகிறார் கருப்பாயி அம்மாள்.
இவர்களது வீட்டுக்குப் பக்கத்திலேயே சின்னதாக ஒரு முருகன் கோயில். இதைமுன்னின்று கட்டியவர் பெரியவர் ராமசுப்புதான். ஒவ்வொரு வைகாசி மாதமும் இங்கு சாமி கும்பிடு நடக்கும்.

நேரம் செல்லச்செல்ல அந்த வெறுமையான சூழல் நம் மனதை என்னவோ செய்கிறது. ‘இந்தச் சூழலில் இவர்களுக்கு எப்படித்தான் கழிகிறது பொழுது?’. தம்பதியிடம் கேட்டோம். ”அதை ஏன் ராசா கேக்கறீங்க?” என்று கருப்பாயி அம்மாள் வெட்கப்பட, “அப்பிடிக் கேளுய்யா என் சிங்கக்குட்டி. இப்ப நாங்க வாழறது மறுவாழ்க்கை. வயசுப்புள்ளைக மாதிரி சந்தோஷமா வாழறோம். எங்க எளவயசுக் கதைகளை பேசிப்பேசி தீர்க்கறோம். இந்த பதினாலு வருஷமா ஒருத்தர் பேச்சை ஒருத்தர் மீறினதில்ல. அப்பிடின்னா பாத்துக்கங்களேன்” - ராமசுப்பு கண்சிமிட்டி சொல்ல, குறுக்கிட்ட கருப்பாயி “ஆமா, இவுகளுக்கு இப்பதான்
பதினாறு வயசுன்னு நெனப்பு” என்று கேலி செய்ய...நம்மோடு சேர்ந்து இருவருக்கும் வெடித்த பெருஞ்சிரிப்பை ரசித்து விசிலடித்தது, நெடுங்காலமாக விசும்பிக் கொண்டிருந்த கரிசல்குளத்துக் காற்று!

படங்கள்: எம். கலீல் ரஹ்மான்
நன்றி: புதிய தலைமுறை

’சர்வரோக நிவாரணி’ சுஜாதா

Thursday, August 5, 2010




நேசிக்கத் தெரிஞ்சவனுக்கு..காதலி. வாசிக்கத் தெரிஞ்சவனுக்கு..சுஜாதா! தன் எழுத்தையே விற்கமுடியாத படைப்பாளர்கள் நடுவில..தமிழின் தவிர்க்கமுடியாத தனி சகாப்தம்..எழுத்தாளர் சுஜாதா!

சுஜாதாவை பத்தி ‘கேப்ஸ்யூல்’ வார்த்தைல சொல்றதுன்னா..ராட்சஸன்! ஆகாயம் முதல் பாதாளம்வரை அத்தனை சப்ஜெக்ட்டுகள்லயும் விசுவரூபம் எடுத்து நின்னு விசும்பவெச்ச குசும்பன்! இதுக்குமேல பாராட்டுனா ‘போதும் ஜல்லியடிச்சது’னு சொல்லி சுஜாதாவே சிரிப்பாரு.
இந்த எழுத்துலகப் பிதாமகனை நான் சந்திச்ச சம்பவம் ஒவ்வொண்ணையும் சதா நினைச்சுப்பாத்து எனர்ஜி ஏத்திக்கறேன் ஜி! ‘ஆனந்த விகடன்’ல நான் இருந்தப்போ அடிக்கடி பேசியிருக்கேன். அந்த அறிமுகத்துல சுஜாதாவை நேர்ல சந்திக்கணும்னு ஆசைப்பட்டேன். ஃபோன் பண்ணேன். பேர் சொன்னேன்.

சுஜாதா ரொம்ப ரசனையான ஆசாமி!(அவர் ஸ்டைல்!) அற்பமானது..நுட்பமானதுனு பேதமில்லாம கவனிச்சு ரசிப்பார். ‘‘எம்.பி உதயசூரியனா! பேர் நல்லாருக்கே! காலைல பீச்சுக்கு வர்றீங்களா..ஈவ்னிங் வீட்டுக்கு வர்றீங்களா?’’னு மெல்லிசான குரல்ல கேட்டார். ‘‘பீச்சுக்கு வர்றேன் சார்’’னேன். அன்னிக்கு ராத்திரி என் தூக்கத்தை கெடுத்தது வேறெந்த கவர்ச்சிக்கன்னியும் கெடயாது..சத்தியமா சுஜாதாதான்!

பொழுது விடிஞ்சது. ‘காந்தி’ காத்து வாங்கற கடற்கரை. காத்திருந்தேன். ‘தேவன் வந்தார்’. இங்கிட்டும் அங்கிட்டும் நடக்கறவங்க விஷ் பண்ணிகிட்டே கடக்க..மையமா சிரிச்சுகிட்டே சுஜாதா ‘பைய்ய’ நடந்தாரு. பக்கத்துல போய் ‘‘வணக்கம் சார்’’னேன். ஒருநொடி என்னை உன்னிப்பா ‘ஸ்கேன்’ பண்ணிட்டு ‘‘வாங்க உதயசூரியன்’’னு அசால்ட்டா சொல்ல..என் நடுமுதுகு ‘திடுக்‘னுச்சு.

அதுக்கு முன்ன சுஜாதா என்னை முன்ன பின்ன (‘சிவாஜி’ பட காமெடியை யோசிச்சுராதீங்க!) பாத்ததில்ல! ‘‘அப்புறம் எப்டி சார் கண்டுபிடிச்சீங்க?’’ன்னு ஆச்சரியப்பட்டேன். அலட்டிக்காம சுஜாதா சொன்னாரு..‘‘பீச்ல என்னை பெரும்பாலும் பாக்கறவங்க ‘நீங்க சுஜாதாதானே‘ன்னு கேப்பாங்க. சிறும்பாலும் பாக்கறவங்க ‘யாரோ ஒரு மியூசியம் ஆசாமி’ன்னு திகிலா விலகிப்போவாங்க. இதுல ‘வணக்கம் சார்‘னு வந்தா அது நீங்களாத்தான் இருக்கணும்னு ஒரு குன்ஸா அடிச்சேன்’’னார் பாருங்க..அதான் சுஜாதா!

எழுத்துல ‘புலிப்பாய்ச்சல்’ பாயற சுஜாதா..பேசறப்போ அடிக்கற எக்கச்சக்க நக்கல்ல சிரிச்சே ‘குளிர்காய்ச்சல்’ வந்துரும். ‘குங்குமம்’ கட்டுரைத்தொடருக்காக சுஜாதாவை பலமுறை சந்திச்சேன். அன்னிக்கு செமஜாலி மூடுல இருந்தார். டேபிள்ல ‘மகாமகா தடிமனா’ ஒரு புத்தகம் இருந்துச்சு. ‘‘என்ன சார் இந்த புக் கல்லாப்பெட்டி சைஸ்ல இருக்கே’’னு கேட்டேன்.
அடுத்த நொடி..‘பம்பர் ப்ரைஸ் விழுந்தமாதிரி சர்ப்ரைஸ் ஆனேன். ஆமாங்க. அந்த கமெண்ட்டுக்கு ஒரு குழந்தையைப்போல வஞ்சனையில்லாம சிரிச்சார் சுஜாதா. எனக்கோ பெருமை தாங்கல! அதேஜோர்ல ‘‘சார்..இதை முழுசா படிச்சிட்டீங்களா?’’ன்னேன். ‘‘இப்பத்தான் பத்து பக்கம் முடிச்சிருக்கேன்’’னார். உடனே நான் ‘‘அப்போ நிச்சயம் இது ‘கல்லா‘ பெட்டிதான் சார்’’னு (‘கல்லாத‘!) சிலேடையில விளையாட..‘அட!’னு ஒரேவார்த்தையில நூறுகிலோவுக்கு பாராட்டினவர் ‘‘தமிழ் உங்களுக்கு சோறு போட்ரும்!’’னார்!

இனி சுஜாதா ரவுண்டு. பேசிகிட்டே என்னைப்பாத்தவர் ‘‘தாதுபுஷ்டி லேகியம் ஏதும் சாப்புடறீங்களா?’’ன்னார் சைலன்ட்டா. ‘‘ஐயையோ..இல்லையே சார்’’னேன்.‘‘அப்போ தாதுவை வீணடிக்கறதில்லபோல!’’னு அடுத்த பஞ்ச் வெச்சிட்டு ‘‘அதான் எப்பவும் உங்க முகத்துல ஒரு தேஜஸ் மின்னுது’’ன்னாரு கிண்டலா! கூச்சப்பட்டு சிரிச்சேன்.
‘‘இந்த கட்டுரைத்தொடரை ‘ஏன்..எதற்கு..எப்படி’மாதிரி கேள்வி பதிலா கொண்டுபோலாமா சார்?’’னேன். ‘‘வேணாம் வேணாம்! ‘ என்னை ஒரு ‘சர்வரோக நிவாரணியா‘ நினைச்சு ‘சொப்பன ஸ்கலிதம்.. விரை வீக்கம்..ஆண்மைக்குறைவு தீர என்ன வழி‘னு கேட்டே திணறடிச்சிருவாங்க! அப்புறம் அத்தனையும் எனக்கு வந்துரும்..கேள்விகளா!’’னு ‘நச்‘னு சொல்ல..சேர்ந்து சிரிச்சோம்.

‘கனவுத்தொழிற்சாலை‘யான கோலிவுட்டுக்கு சுஜாதாமேல ரொம்ப பாசம். அதிலும் ‘வித்தகன்’ பார்த்திபனுக்கு ‘விசித்திரன்’ சுஜாதான்னாலே அதீத மதிப்பு. இந்த மதிப்பு மனசளவுல இருந்தா பரவால்ல! சுஜாதாவோட இடுப்பளவுக்கு வந்து உடுப்பளவு மாறுனதுதான்..காதளவுக்கு சிரிக்கவெச்சது!
பார்த்திபனின் ‘கிறுக்கல்கள்’ கவிதைத்தொகுப்பு வெளியீட்டுவிழா. காமராஜர் அரங்கமே ‘தலை‘கட்டியிருந்துச்சு. முதல்வர் கலைஞர்,சுஜாதா,பாரதிராஜா,பாக்யராஜ்,சிவசங்கரி மேடையில இருக்காங்க. பார்த்திபன்தான் ‘புதுமைப்பித்தனாச்சே’! விடுவாரா? விழா வி.ஐ.பி.கள் அத்தனைபேருக்கும் (சிவசங்கரி தவிர!) பட்டுவேட்டி சட்டை எடுத்துத்தந்து கட்டிட்டு வரச்சொல்லியிருந்தாரு.
பாரதி.பாக்யராஜாக்களுக்கு பழக்கமானதுதான்! கட்டிகிட்டாங்க. ஆனா..பாவம் சுஜாதா! சேர்ல உக்காந்திருந்தப்போ வெவஸ்தை இல்லாத வேட்டியால ரொம்ப அவஸ்தையாதான் இருந்தாரு. பேச எந்திரிச்சப்போதான் சுஜாதா மந்திரிச்சுவிட்ட மாதிரி ஒரு தினுசா நடந்துவந்தாரு. ‘என்னடா‘ன்னு பாத்தா..‘சென்னையோட ஈஃபிள் டவர் போல..ஓங்கிவளர்ந்த பேனாவோட ரீஃபில் மாதிரி‘ இருக்கற சுஜாதாவோட இடுப்புல வேட்டி ‘இருக்கவா? நழுவவா?’னு ஊசலாடிகிட்டிருக்கு!

கடுப்பை அடக்கிகிட்டு இடுப்பை இறுக்கிகிட்டே ஒருவழியா மைக்கை பிடிச்சாரு சுஜாதா.

மத்த பேச்சாளர்களைப் போல ‘ஓசோன் ஓட்டையில விரலைவிட்டு ஆட்டறமாதிரி’ நீட்டி குரல் குடுக்காம.. ‘பி.பி.சீனிவாஸ் பி.பி.சி.நியூஸ்
வாசிக்கறமாதிரி’ நம்ம ஆசான் ஒரு ராகத்தோட..பேப்பர்ல எழுதிவெச்சிருந்ததை சூப்பரா
படிச்சிகிட்டிருக்காரு!

ஒரு கையில பேப்பரையும், மறு கையில வேட்டியையும் இறுக்கி பிடிச்சுகிட்டு லேசான திகிலோட பேசி(!)முடிச்ச சுஜாதா..ஸ்லோமோஷன்ல வந்து அவரோட இருக்கைல உக்காந்தாரு. ஸ்..அப்பாடா! வேட்டி அவுந்து விழாம..இனிதே முடிஞ்சுச்சு
விழா!

மறுநாள்..சுஜாதாவுக்கு ஃபோன் அடிச்சேன். லைன்ல வந்தது ‘லயன்’! ‘‘சார்..நேத்து எல்லாரும் விழாவ பாத்துகிட்டிருந்தாங்க. நாந்தான் உங்க வேட்டி விழாம இருக்கணும்னு வேண்டிகிட்டிருந்தேன். ரொம்ப சிரமப்பட்டுட்டீங்களே சார்’’னேன்.


சன்னமா சிரிச்சவர் மின்னலா பொளந்தார் பாருங்க..‘‘குட்!
ஷார்ப்பா கவனிச்சிருக்கீங்களே. பார்த்திபனோட விருப்பத்துக்காக வேட்டிக்கு ஓகே சொன்னேன். ஆனா..அதை இடுப்புல சுத்திகிட்டு நிறைய வி.ஐ.பி.க இருக்கற அந்த ஸ்டேஜ்ல விரைவீக்கம் வந்தவன்மாதிரி ஒரு தினுசா நான் நடந்துபோயிருக்கேன். நல்லவேளை..விழா பரபரப்புல யாரும் இதை கவனிக்கலை!’’னு அவர் சொல்லிமுடிக்க..வெடிச்சு சிரிச்சேன்.

தன்னை மட்டுமே மெச்சிக்கற சிலபல ரைட்டர்ஸ் மத்தியில..தகுதியிருக்கற படைப்பாளிகளை தன்னோட உச்சிமீது தூக்கிவெச்சு கொண்டாடின ‘ஞானத்தந்தை’ சுஜாதா! திறமையுள்ள இளம்படைப்பாளிகள்..கலிஃபோர்னியால
இருந்தாலும் சரி..கரியாம்பட்டில இருந்தாலும் சரி..அவங்க சிறந்து விளங்கறதுக்காக
தேடிப்‘‘படிச்சு‘‘ ‘பாராட்டு வெளிச்சம்’ பாய்ச்சற ‘கலங்கரை விளக்கம்’ சத்தியமா சுஜாதா மட்டுமே!



சுஜாதாவுக்கு வயசு ‘என்றும் பதினாறு’தான்! ‘பேச்சுலர் வாசம்’ அடிக்கற இவர் பேச்சுல ‘அந்தக்காலத்துல’ங்கற பழைய கோந்து பிஸினஸே கிடையாது. எப்பவுமே டீன்ஏஜ் டிக்கெட்டுகளோட லாங்குவேஜ்லதான் பூந்து விளையாடுவாரு!
‘‘எப்டி சார்‘‘னு கேட்டா..‘‘அதெல்லாம் ஜீனி வேலை!’’ம்பார் இந்த ‘ஜீனியஸ்’!


இன்னொரு சந்திப்புல..ஒரு பத்திரிகைக்கு ‘பொங்கல் ஸ்பெஷல்’ கட்டுரை எழுதிகிட்டிருந்தாரு. பேச்சுவாக்குல ‘‘தமிழர்கள் அதிகமா பயன்படுத்தற வார்த்தை என்ன?’’னு கேட்டாரு. ரெண்டு மூணு சொன்னேன். உதடு பிதுக்கினவரு ‘‘தின்பொருள் விக்கறவர்லேர்ந்து மென்பொருள்காரங்க வரைக்கும் அத்தனை தமிழர்களும் அதிகமா பயன்படுத்தற வார்த்தை ‘சூப்பர்’!’’னாரு. உடனே ‘‘சூப்பர் சார்’’னேன். ‘‘பாத்தீங்களா..
படுத்தறீங்களே’’ன்னாரு ர.சுருக்கமா!

‘மோதிரக்கையால குட்டுப்பட்டது’ங்கறதை மாத்தி ‘மேதையின்
வாயால வெரிகுட்டு வாங்குனது’னு ஒரு சம்பவம் சொல்றேன். ‘குங்குமம்’ பத்திரிகைல ‘ஆ..அனுபவம்‘ங்கற தலைப்புல வெரைட்டியான அனுபவங்களை தொடரா எழுதிகிட்டிருந்தேன். அதுல ஒரு வாரம் ‘இப்படிக்கு நட்பு’னு ஒரு அனுபவம்!

ஆபீஸ்ல ஒரு மத்தியானம். திடீர்னு சிறப்பாசிரியர் ராவ் சார் கூப்பிட்டாரு. போனேன். ‘‘உங்க கட்டுரைய ரொம்ப நல்லாருக்குனு சுஜாதா
பாராட்டினாரு!’’னு சொன்னாரு. அந்த நொடியில எனக்கு உண்டான பரவசத்தை
‘குண்டலினி யோகம்’கூட தந்திருக்காது! உடனே சுஜாதாவுக்கு ஃபோன் பண்ணேன்.
எடுத்தார்.

‘‘ரொம்ப தேங்க்ஸ் சார். நீங்களே பாராட்டினது’’னு நான் நீட்டி முழக்குனதை நறுக்குன்னு கத்தரிச்சவர் ‘‘அந்த கட்டுரை ரொம்ப நீட்டா..ஸ்வீட்டா இருக்கு.
பிரமாதமான ஸ்க்ரீன்ப்ளே. போதும் பத்திரிகை உத்தியோகம். உடனே சினிமா பண்ண
கிளம்புங்க. ராவ் தடுப்பாரு. கண்டுக்காதீங்க. நாங்கள்ளாம் ‘பூட்ட கேஸு’.
ஆல் த பெஸ்ட்!’’னு சொல்லி ஃபோன் ‘டொக்’. (இதே வாழ்த்தோடு மதன் சார் பேசுனது தனி பதிவுக்கு!)



‘சொர்க்கவாசல்’ திறக்கற ஸ்ரீரங்கம் ரங்கநாதனை சேவிச்சாலும்..
‘சொர்க்கம் நரகம்ங்கிறதெல்லாம் உட்டாலக்கடி’னு சொல்றவரு இந்த ரங்கராஜன். ‘‘இறந்த பிறகு சொர்க்கத்துக்கு போகணுமா..நரகத்துக்கு போகணுமானு கேட்டா..நரகத்துக்கு டிக்கெட் வாங்கத்தான் எனக்கு விருப்பம்! ஏன்னா..சொர்க்கம் போரடிக்கும். படுசுவாரஸ்யமான மனிதர்கள்லாம் நரகத்துலதான் இருப்பாங்க!’’னு ஜாலியா சொன்னவரு சுஜாதா!

எதுக்கும்..வரப்போற ‘தீபாவளி ஸ்பெஷல்’ பத்திரிகைகளை வாங்கி
ஆற அமரப் படிங்க! ‘சொர்க்கம் நரகம்’னுகூட வினோதமான கட்டுரை எழுதியிருப்பார் அமரர் சுஜாதா!

மலைச்சரிவில் நிமிரும் நம்பிக்கை

Saturday, May 29, 2010





எம்.பி. உதயசூரியன்


அந்த குக்கிராமத்தில் அவசியத்தேவையான மின்சாரம் இல்லை. அத்தியாவசியத் தேவையான
குடிநீர் இல்லை. அவசர உதவிக்கு போக்குவரத்து வசதி இல்லை. ஆபத்தில் உயிர் காக்க
ஆஸ்பத்திரி இல்லை. பொழுதுபோக்க கேபிள் டி.வி. இல்லை. தகவல் தொடர்புக்கு தொலைபேசி
இல்லை. இப்படி அடிப்படை வசதிகள் எதுவுமே 'இல்ல்ல்ல்ல்லை'. ஆனாலும் அந்த
குக்கிராமத்தில் விசுவரூபம் எடுத்து நம்மை விசும்ப வைக்கிற விஷயம் ஒன்று உண்டு...
அதன் பெயர் நம்பிக்கை! அந்தக் கிராமத்தின் பெயர் 'அமைதிச்சோலை'.

திண்டுக்கல் அருகிலுள்ள மலைப்பகுதி ஆடலூர் பன்றிமலை. காபி எஸ்டேட், எலுமிச்சை
தோட்டங்கள் என செழிப்பான பிஸினஸ் ஏரியா. இதன் அடிவாரமான கோம்பை
செக்போஸ்ட்டிலிருந்து 'மல்லாந்து கிடக்கிற கருநாகப்பாம்பு போல' வளைந்து நெளிகிற
பாதைகளில் 7 கி.மீ.தூரம் மலையேறிப் போனால்...மலைச்சரிவில் பொதிந்திருக்கிறது
‘அமைதிச்சோலை'.

'ஏதோ சினிமா ஷூட்டிங்கிற்காக் போடப்பட்ட மினி கிராமத்து செட் போல' நேர்த்தியாக
இருக்கிறது இந்த குக்கிராமம். குடிசை, ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேய்ந்த 64 சிறுவீடுகள்.
நடுநாயகமாக காளியம்மன் கோயில். அதன் முன்பு நண்டுசிண்டுகள் குஷாலாக விளையாட
விசாலமான திடல். மக்கள் தொகை ஐநூறுக்கும் குறைவு. ஆனால் இந்த மக்களின்
ஸ்டேட்டஸ் சுவாரஸ்யமானது... ‘வருஷத்துல ஆறுமாசம் நாங்க மொதலாளிக, அடுத்த
ஆறுமாசம் நாங்க தொழிலாளிக' என்று சிரிக்கிறார்கள். காரணம்-மலைச்சரிவுகளில் இந்த மக்கள்
அவரவர்களுக்கென துண்டு துண்டாக நிலம் வைத்திருக்கிறார்கள். சீஸன் காலங்களில் மட்டும்
எலுமிச்சை, மாதுளை, கொய்யா என அமோக விளைச்சல். அப்போது கையில் தாராளமாக
பணம் புழங்கும். மற்ற சமயங்களில் மலை உச்சியிலுள்ள எஸ்டேட்டுகளில் வேலைக்குப்
போய்விடுகிறார்கள்.

‘அட...இந்த லைஃப் ஸ்டைல் நல்லாருக்கே' என்று கூலாகச் சொல்பவர்கள் இம்மக்களில்
ஒரு ஆளாக வாழ்ந்து பார்த்தால்தான், மலை இடுக்கில் கசியும் நீர் போல அவர்களது
மன இடுக்கில் கசியும் கண்ணீரை உணரமுடியும்.

ஐந்து வருஷங்களுக்கு முன்புவரை ‘அமைதிச்சோலை'யில் பகலில் மட்டுமே சூரிய
வெளிச்சம் அடிக்கும். இரவானால் முரட்டு இருட்டு அப்பிக்கிடக்கும். சிம்னி. அரிக்கேன்
விளக்குகளின் தயவால்தான் இரவுகளைக் கழித்திருக்கிறார்கள். ''என்ன செய்றதுங்க?
42 வருஷங்களுக்கு முன்னால பஞ்சம் பொழைக்கிறதுக்காக செங்குறிச்சி, மலைக்கேணின்னு
தூரத்து கிராமங்கள்லேர்ந்து போன தலைமுறை இங்க வந்து குடியேறினாங்க. எங்களுக்கும்
பொழப்பு தளப்பு இங்கியேதான்னு ஆகிப்போச்சு'' என்று சின்ன சிரிப்புடன் ஆரம்பித்தார்
பால் கண்ணன். ‘அமைதிச்சோலை'யின் மூத்த குடிமகன்களில் இவரும் ஒருவர்.
''ராத்திரியானா புள்ளகுட்டிகளை வெச்சுகிட்டு நாங்க பட்ட கஷ்டம் கொஞ்சநஞ்சம்
இல்லீங்க. எப்ப சிறுத்தை வரும், காட்டெருமை வரும்னு கொலநடுக்கத்தோடவே
அரைமுழிப்பாவே இருப்போம். அஞ்சு வருஷத்துக்கு முன்னாலதான் குஜராத்துலேர்ந்து
பன்றிமலைக்கு டூரிஸ்ட் வந்தாங்க சிலபேரு. பாக்கறதுக்கு சிங்கு மாதிரி இருந்தாங்க.
கரண்ட் வெளிச்சம் இல்லாம நாங்க படற அவதியை பாத்து மனசு சங்கடப்பட்டு;
‘ஏதாவது ஏற்பாடு பண்றோம்'னு சொல்லிட்டு போனாங்க. சொன்ன வாக்கு தப்பாம
ஒரே மாசத்துல தெருவிளக்குகளோட சேர்த்து, வீட்டுக்கொரு சோலார் சிஸ்டம்னு
மொத்தம் 70 சோலார் சிஸ்டங்களை அனுப்பி வெச்சாங்க. அந்த ஊர் பேர் தெரியாத
மகராசங்களாலதான் இருண்டு கிடந்த எங்க வாழ்க்கையில வெளிச்சமே வந்தது.
அஞ்சு வருஷமாகியும் இன்னமும் இந்த சோலார் சிஸ்டம் நல்ல முறையில
உழைச்சுகிட்டிருக்கு'' என்று நெகிழ்ச்சியாகக் கூறுகிறார் பால் கண்ணன்.

அருகில்...பேரனுக்கு சோறூட்டிக் கொண்டிருந்த மூதாட்டி மரியபுஷ்பம் ‘'வெளிச்சம்
வந்த அன்னிக்கு ராத்திரி எனக்கென்னவோ மறுபடியும் சுதந்திரம் வாங்குன மாதிரி
இருந்துச்சு ராசா! விடிய விடிய ஊர்க்கதைகளைப் பேசிகிட்டு, சந்தோஷமா முழிச்சிக்
கிடந்தோம். பள்ளிக்கூடம் போற புள்ளைகள்லாம் கொண்டாட்டமா வீட்டுப்பாடங்கள
எழுதிச்சு. முன்ன இருந்த பூச்சி பொட்டு, சிறுத்தை பயமெல்லாம் இந்த வெளிச்சம்
வந்ததும் வெலகிப்போயிருச்சு'' என்று அந்த ‘வெளிச்ச இரவை' உணர்ச்சிகரமாக
விவரித்தார்.


குடிசை, ஆஸ்பெஸ்டாஸ் வீடுகள் அத்தனைக்கும் தலா ஒரு சோலார் சிஸ்டம்
பன்றிமலை ஊராட்சி மன்றம் மூலமாக பொருத்தப்பட்டுள்ளது. மாலை மயங்கி இருள்
பரவத்துவங்கியதும் சோலார் இயங்கி வெளிச்சம் பரவி, மலைச்சரிவிலுள்ள வீடுகளும்
தெருவும் 'ஒரு கிரீட்டிங் கார்டு போல' காட்சியளிப்பது அத்தனை அழகு.
இதில் ‘ஆ'ச்சரியம்...கரண்ட்டே இல்லாத வீடுகளுக்கு அரசின் இலவச கலர் டி.வி.யும்,
கேஸ் அடுப்பும் வழங்கப்பட்டுள்ளன. வாங்கிய டி.வி.கள் பெரும்பாலும் பல வீடுகளில்
தூங்கியபடியே உள்ளன. ஒரே ஒரு வீட்டில் மட்டுமே டி.டி.எச்.வசதி.

இங்கு வசிக்கிற அனைத்துக் குடும்பங்களுக்கும் ரேஷன் கார்டு உள்ளது.
340 வாக்காளர்கள் உள்ளனர். தேர்தல் தோறும் மலையேறி இங்கு வந்து ஓட்டு
கேட்பவர்கள், இவர்களது குறைகளை காதோடு கேட்டுப் போவதோடு சரி.
‘'ஒவ்வொரு முறையும் செஞ்சு தர்றோம்னு சொல்லி ஓட்டு வாங்கிட்டுப்
போயிருவாங்க. அப்புறம் அடுத்த வாட்டி வருவாங்க. ஆனாலும் என்னிக்காவது
ஒருநாள் எங்களுக்கான அடிப்படை வசதிகளை செஞ்சு தந்துருவாங்கன்னு
இன்னும் நம்பறோம்'' என்கிறார்கள் இந்த வெள்ளந்தி ஜனங்கள்.

ஓரளவு வெளிச்சம் வந்ததால் இருட்டு தொலைந்தது. அதேசமயம் குடிநீர்
பிரச்னை இம்மக்களை வாட்டி எடுக்கிறது. ஆனால் அதையும் இவர்கள் சமாளிக்கும்
விதம் அபாரம். குடிதண்ணீருக்கென ஒரே ஒரு வாட்டர் டேங்க் அமைத்துத் தந்துள்ளது
ஊராட்சி. வாரம் ஒருமுறை 500 அடிக்குக் கீழேயுள்ள போர் மூலம் இதில் குடிநீர்
நிரப்பப்படுகிறது. ‘'ரெண்டு நாளைக்குக்கூட இந்தத் தண்ணி பத்தாதுங்க. அதனால
நாங்க ஆம்பளைங்களா சேந்து 1 கி.மீ. தூரத்திலிருக்கிற மலை ஓடைக்குப் போயி
தண்ணி எடுத்துட்டு வர்றோம். கையோட குளிச்சு முடிச்சு, துணிகளையும் துவைச்சுட்டு
வந்துர்றோம். தண்ணி இல்லேன்னு கத்திக் கத்தி தொண்டை காஞ்சு போறதவிட,
எட்டத்துல இருக்கற தண்ணியை சிரமம் பாக்காம ஒருநடை போயி நம்ம கிட்டக்க
கொண்டு வந்துட்டா பிரச்னை தீந்துபோகுமில்ல'' என்று பிராக்டிக்கலாகப் பேசுகிறார்
செல்வம் என்ற இலங்கி.

ஓடை நீரால் தாகம் தீர்ந்தது. ஆனால் பஸ் வசதி இல்லாமல் 'ஓடும் பிள்ளைகளாக'
இந்த மக்கள், குறிப்பாக பள்ளி மாணவர்கள் படும் துயரம் இருக்கிறதே...சொல்லித்
தீராத சோகம் அது. முதல் வகுப்பு முதல் ப்ளஸ் டூ வரை படிக்கிற சுமார் 30 மாணவர்கள்
இங்கே உள்ளனர். ஒன்றிலிருந்து பத்தாம் வகுப்பு வரையுள்ள அரசினர் உயர்நிலைப்பள்ளி
மலைக்குக் கீழே 11 கி.மீ. தூரத்தில் தர்மத்துப்பட்டியில் உள்ளது. 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான
அரசு மேல்நிலைப்பள்ளி இருப்பதோ 17 கி.மீ. தூரத்திலுள்ள கன்னிவாடியில். மலைக்கு
மேலுள்ள ஆடலூரிலிருந்து காலையில் கிளம்புகிற மினி பஸ் 9.30 மணிக்குத்தான்
அமைதிச்சோலைக்கு வரும். அதில் ஏறிவரும் மாணவ்ர்கள் தர்மத்துப்பட்டியில் இறங்கி,
ஓட்டமும் நடையுமாக வந்து 10.30 மணியளவில்தான் பள்ளிக்குள் நுழையமுடிகிறது.
‘'நாங்க கிளாஸுக்குள்ள போறதுக்குள்ள முதல் பீரியட் முடிஞ்சுருதுண்ணே. ஆனாலும்
‘லேட் ஆனாலும் பரவால்ல...பாவம் மலையிலேர்ந்து வர்ற பசங்க''ன்னு எங்க ஸ்கூல்ல
பெர்மிஷன் தந்துருக்காங்க'' என்றான் 'அஞ்சாப்பு' படிக்கிற ராசா.

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும்தான் இந்த ‘கருணை அனுமதி'.
ஆனால் 6வது முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த அனுமதி இல்லை. ஆகவே
சரியான நேரத்திற்குள் பள்ளிக்குப் போயாக வேண்டும் என்பதால் அதிகாலையிலேயே
எழுந்து, அரக்கப் பரக்கக் கிளம்புகிறார்கள் பிள்ளைகள். விஷ ஜந்துக்கள் ஊடாடும்
மலைப்பாதையில் 6 கி.மீ. தூரம் உயிரைப் பணயம் வைத்து நடந்து அடிவாரத்திலுள்ள
கோம்பைக்கு வருகிறார்கள். அங்கிருந்து பஸ் பிடித்து கரெக்ட்டான நேரத்திற்கு ‘உள்ளேன்
ஐயா' சொல்கிறார்கள். 'அமைதிச்சோலை'யில் நாம் இருந்தபோது பள்ளி முடிந்து பஸ்ஸில்
வந்து இறங்கியது மாணவப்பட்டாளம். விசாரித்தால் ‘'ரொம்ப கஷ்டமாத்தாண்ணே இருக்கு.
ஆனா படிக்கலேன்னா பெரியாளானதும் இதவிட கஷ்டப்பட வேண்டியிருக்குமே. அதான்
ஓட்டமா ஓடிப் படிக்கறோம். நீங்க மெட்ராஸ்ல இருக்கீங்களே...அங்க கவர்மெண்ட்ல சொல்லி
ஸ்கூல் டயத்துக்குப் போற மாதிரி ஒரு பஸ் விடச்சொல்லுங்கண்ணே'' என்று கோரஸாகச்
சொன்னார்கள். படிப்பதற்காக தடைகளைக் கடந்து நடைபோடும் செருப்பில்லாத அந்த
பிஞ்சுக்கால்களின் உறுதி கண்டு சிலிர்த்தது நமக்கு.

கடைசி பஸ் அது என்பதால், உள்ளே நிற்கக்கூட இடமில்லாதபடி பெருங்கூட்டம்.
விளைவு...மக்கள் பஸ்ஸின் கூரைமீது அமர்ந்து அபாயப் பயணம் செய்வதைப் பார்க்க ‘பகீர்' என்றது
நமக்கு. கேட்டால்.... ''இதான் கடைசி பஸ். இதைவிட்டா அப்புறம் கால்கடுக்க நடந்தே போகணும்.
கரணம் தப்பினா மரணம்னு ஆகிப்போச்சு பொழப்பு'' என்று அதே விரக்தியான பதில்தான் தெறிக்கிறது.
இப்படி ஏற்ற இறக்கங்களுடன் வாழ்க்கை இருந்தாலும் ‘சலிக்காம உழைச்சு நாலுகாசு பாக்கணும்' என்கிற
துடிப்பு இங்குள்ள பெண்களிடம் அதிகம். ''இப்ப இலவம்பஞ்சு சீஸனுங்க. பஞ்சை பிரிச்சுக் குடுத்தம்னா
கிலோவுக்கு நாப்பது ரூவா கிடைக்கும். இதுல வர்ற சம்பாத்தியத்த வெச்சுதான் அடுத்த சீஸன்
வரைக்கும் வாழ்க்கையை ஓட்டணும்ங்க. அதேசமயம் புள்ளகுட்டிகளுக்குன்னு ஏதாச்சும் சேத்து
வெக்கணுமில்ல? அதான் சுய உதவிக்குழு அமைச்சோம். பயிர் பச்சைனு செழிப்பா இருக்கு மலை. ஆடு
மாடுகளை வாங்கிவிட்டா அதுபாட்டுக்கு மேயும், நமக்கும் லாபம்'' என்று சொல்கிற மகாலட்சுமி,
‘விசாலாட்சி களஞ்சியம்' என்ற மகளிர் சுய உதவிக்குழு நடத்துகிறார். குழுவின் மூலம் 2 லட்ச ரூபாய்
லோன் வாங்கி கறவை மாடு, ஆடு வளர்ப்பு என தனது குழுப் பெண்களை லாபத்தோடு கூடிய சுயதொழில்களில்
ஈடுபடுத்தியிருக்கிறார்.

வாழ்வின் ஒவ்வொரு நாளும் தடுக்கி விடுகிற தடைகள் பலப்பல இருந்தும், அதற்காக சோர்ந்து சுருண்டு போகாமல்
நிமிர்ந்து நின்று, பிரச்னைகளை எதிர்கொண்டு வாழ்வை நம்பிக்கையோடு நடத்தி அசரவைக்கிறார்கள் 'அமைதிச்சோலை'
மக்கள்.

 
சுடச்சுட - by Templates para novo blogger