Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

புஷ்பா தங்கதுரையின் ராக்கெட்!

Friday, August 21, 2009

கிட்டத்துல போய்ப் பழகினா பல பேர் காட்டற நிஜமுகத்தைப் பாத்து..விட்டத்துல தூக்கு போட்டுத் தொங்கலாம் போலத்தோணும். ஆனா புஷ்பா தங்கதுரை அப்படியல்ல. சக்கரை தடவி பொய்யா பேசற வம்பான ஆளுங்களை விட..அக்கறை கலந்து உண்மை பேசற அன்பான மனிதர்.
இவரை ஒருமுறை சந்திக்கற யாருமே..மறுமுறை பாக்கப்போறப்போ சொந்த வீடு வாங்கியிருப்பாங்க!அந்த அளவுக்கு ‘சிங்கிள் டீக்கு’ சிங்கி அடிக்கறவங்களைக் கூட ஒரு சிங்கிள் பெட்ரூம் வாங்கறரேஞ்சுக்கு...கையில பொறுப்பையும், வயித்துல நெருப்பையும் கலந்துகட்டி தந்து அனுப்புவாரு!
புஷ்பா தங்கதுரை. கிளுகிளுப்பான பெயர். எழுத்துல ‘டபுள் ஆக்‌ஷன்’ மன்னன். கிறங்கடிக்கிற மாதிரி ’பெண்’மீகம் எழுதறப்போ..புஷ்பா தங்கதுரை. ரங்கநாதனைப் பத்தி ஆன்மீகம் படைச்சா..ஸ்ரீவேணுகோபாலன்.துப்பறியும் நாவல்களும், தப்பறியும் உண்மைக் கதைகளும் எழுதி வாசகர் வட்டத்தை மயங்க வைத்தவர்.
இந்த பிம்பத்தோடதான் ஒருமுறை புஷ்பா தங்கதுரையை சந்திக்கப் போனோம். வேற யாரு? நானும், அந்தணனும்தான். ‘காணாமப் போன தம்பி புள்ளைகளை மறுபடியும் கண்டுபிடிச்ச பெரியப்பா மாதிரி’பாசமா வரவேற்று உபசரிச்சாரு. வெள்ளை வேட்டி சட்டை. அதே அலைபாயும் சுருள்முடி..ஆர்வமா எட்டிப்பாக்கற கண்கள்னு சிம்பிளா இருந்தாரு.
அவரோட எழுத்துக்களைப் பத்தி விலாவரியா சிலாகிச்சுப் பேசின எங்களுக்கு விழா எடுக்காத குறைதான்.விக்ஸ் முட்டாய் முதல் செக்ஸ் கல்வி வரை அத்தனையும் அலசித் துவைச்சாரு பாருங்க..அசந்துபோயிட்டோம். ‘’எங்கூட வாங்க’’ன்னு உள்ரூமுக்கு கூட்டிட்டுப் போனாரு. கம்ப்யூட்டரை ஆன் பண்ணிஒரு ப்ராஜெக்ட்டை காட்டினாரு. வானவியல் பத்தி ஃவேறு.. ஆணிவேறா எக்கச்சக்க டீடெய்ல்ஸோட பிரிச்சு மேஞ்சிருந்தாரு.
‘’என்ன சார் இது?’’னு வியந்துபோய் கேட்டோம். மெல்லிசா சிரிச்ச புஷ்பா தங்கதுரை ‘’வானவியல் பத்திஆராய்ச்சி பண்ணிகிட்டிருக்கேங்க! விட்டா என் வீட்டு மாடியிலிருந்தே செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட்விடுவேங்க. அந்த அளவுக்கு ராக்கெட் தயாரிப்புல அப்டேட்டா இருக்கேன் சார்’’னு அதிரடியா சொல்ல..அரண்டு போயிட்டோம். இந்த வயசிலும் மனுஷனுக்கு அப்படியொரு அறிவுத் தேடல்!
அப்புறம் அப்படியே ஜாலியா அரட்டை அடிச்சோம். திடீர்னு புஷ்பா த.துரை எச்சரிக்கையான குரல்ல‘’சார்..இந்த வயசில நிறையா சம்பாதிங்க! கையில பணம் இல்லேன்னா..ரொம்ப கட்டம் (கஷ்டம்ங்கிறதை இப்படித்தான் உச்சரிக்கிறார்) சார்! கட்டுன பொண்டாட்டி கூட மதிக்க மாட்டா சார்! அதேமாதிரி எப்பாடுபட்டாவது ஒரு சொந்த வீடு வாங்கிருங்க சார். சொத்துபத்து இல்லேன்னாலும் சின்னதா ஒரு சொந்த வீடு வாங்கிருங்க சார். யாரு கஞ்சி தண்ணி ஊத்தலேன்னாலும்..பச்சத்தண்ணியக் குடிச்சுட்டுகாலாட்டிகிட்டு படுத்து தூங்கலாம் சார். இல்லேன்னா ரொம்ப கட்டம் சார்!”னு அவர் சொல்லச்சொல்ல..எங்களுக்கும் இனம்புரியாத பயமும், திடீர் துடிப்பும் வந்துருச்சு.
அப்புறம் சில வருஷ இடைவேளைக்குப் பிறகு புஷ்பா த.துரையை சந்திக்கப் போனோம்.‘மனுஷர் என்ன காயகல்பம் சாப்பிடறாரோ..அப்படியே ஜம்முன்னு இருந்தார்’. எடுத்த எடுப்புலயே‘’சார்..சொந்த வீடு வாங்கிட்டீங்களா? இல்லேன்னா ரொம்ப கட்டம் சார்’’னு சொன்னதுமே...நாங்க கையோட கொண்டு போயிருந்த ‘ஹவுஸிங் லோன் சாங்ஷன் லெட்டரை’ காட்டினோம்.
நம்பமாட்டீங்க...அவர் முகத்துல அப்படியொரு சந்தோஷம்! ‘’நல்ல பசங்க சார் நீங்க. ரொம்ப நல்லா வருவீங்க’’னு ஆசீர்வதிச்சார். எங்களுக்குள்ளயும் எதையோ சாதிச்சுட்ட குஷி. ஆனா எந்த ஒரு நல்ல விஷயம் நடக்கறதுக்கு முன்னாலயும் ஒரு பெரும் போராட்டம் நடக்கும்ல..அப்படித்தான் நடந்தது லோன் மேட்டர்லயும்.
லோன் சாங்ஷன் பண்ண அந்த தனியார் வங்கி திடீர்னு லோன் தர மறுத்திடுச்சு. காரணம் கேட்டா...சின்னப்புள்ளத்தனமா ஏதேதோ சொன்னாங்க. பல இடங்கள்ல அலைஞ்சு தேடி, நுழைஞ்சு பாத்தும்ம்ஹூம்..பாச்சா பலிக்கலை. ‘விடு’ன்னு விட்டுட்டோம். ஆனாலும் இன்னிக்கு வரைக்கும் எங்களுக்குஇருக்கற ஒரு திருப்தி...அந்த லோன் சாங்ஷன் லெட்டரை வெச்சு புஷ்பா தங்கதுரையையாவதுசந்தோஷப்படுத்தினதுதான்!



‘காதல் வந்தவர்களுக்கு’ மட்டும்!

Monday, July 20, 2009

தீபாவை அப்படியொரு ‘சீச்சீ‘ சிச்சுவேஷனில் சந்திப்பேன் என்று
நான் எதிர்பார்க்கவே இல்லை. தேவதை போல இருந்தவள்...வேண்டாம்.
இப்படியாகிவிட்டாளே!

நீலாங்கரையோர ரிசார்ட். ஏ.சி. கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணலாமே என்று கடற்கரையோர புல்வெளியில் ஜாலிநடை போட்டேன்.
அப்போது..அலையோர விளையாட்டில் மூன்று ‘ரிச்சான‘ ராஸ்கல்ஸ். நடுவே கிட்டத்தட்ட பாதி ‘ஏவாளாக‘ தீபா. ‘‘ஆ..என்
தீபாவா இவள்?’’.. அதிர்ந்து பார்த்தேன். அவளை விட்டு தள்ளிவந்து என் பக்கத்தில் நின்ற ஒருவன் ‘‘மச்சான்.. அந்த மாடலிங் ஃபிகர் நம்மகூடதான் இருக்கா. பேரு..சோனா. ஈவ்னிங் வந்துருடா’’ என்றான் குஷியான குரலில்.

அவன் சொன்னது..சோனா! இவளோ..தீபா! என் மூளையில்
குண்டூசிகள் குத்தின. செம ஷாக்கோடு அவளை ஷார்ப்பாகப் பார்த்தேன். அவளும் என்னை நேராகப் பார்த்தாள். ‘‘தீபா!‘‘ மனசுக்குள் கத்தினேன் நான். அவளோ காஷுவலாக என்னைப் பார்த்துவிட்டு எனக்கு முதுகு காட்டினாள்.

அடி ராட்சஸி! என்னாச்சுடி உனக்கு? வருஷங்கள் ஓடினால் கேரியர் மாறலாம். கேரக்டர் மாறுமா? 2001..ஒரு பிரபல விளம்பர நிறுவனத்தில்..கிரியேட்டிவ் டீமில் நானும், அவளும். காஃபி, கவிதை, யுத்தம், முத்தம், காதல், கலாட்டா என இருவருக்கும் ஒரே டேஸ்ட்..ஒரே அலைவரிசை. விளைவு..டாப் கியரில் எகிறிய நட்பு..எதிர்பார்த்தபடியே ‘காதலாகி கசிந்துருகியது‘!

தீபாவை நான் டீப்பாக லவ் பண்ணியதற்கு இன்னொரு
காரணம்..அவளது கருணை மனசு! அதுவும் அனாதைக் குழந்தைகள் மீது அபார
தாய்ப்பாசம் காட்டியவள். பெரும்பணக்காரக் குடும்பத்தை சேர்ந்தவள் என்பதால்
சம்பாதிப்பதில் பெரும்தொகையை அனாதைப் பிள்ளைகளுக்காக செலவிடுவாள்.

சர்ப்ரைஸாக ஒருநாள் அதிகாலை என் அறைக்கு வந்தாள். ‘என்னடி‘ என்று கேட்பதற்குள்..கட்டிப்பிடித்து முகம் முழுக்க முத்தமிட்டாள். உள்ளுக்குள் ஏறிய உஷ்ணம் உச்சியிலும் ஏற..அப்படியே நானும் அவளை இறுக்கி முத்தமிட்டேன். முன்னழகை பார்த்து திணறியது மூச்சு. முழு அழகு பார்த்து குளறியது பேச்சு. அன்று எனக்கு பர்த் டே. அதுக்கான கிஃப்ட் இது!

ஒருநாள்..வீட்டிற்கு கூட்டிட்டுப் போனாள். எங்கள் காதல் பற்றி ஏற்கனவே வீட்டில் சொல்லியிருப்பாள் போல! எடுத்த எடுப்பிலேயே ஆன்ட்டி (தீப்ஸ் மம்மி) ‘‘நிச்சயமா இது ஒத்துப்போகாது. அவங்க அப்பாவுக்கு தெரிஞ்சா எங்களை கொன்னுடுவார். எல்லாத்தையும் மறந்துடுங்க!’’ என்று கையெடுத்துக் கும்பிட்டார். அதன்பிறகு அவளை வீட்டுச்சிறை வைத்துவிட்டார்கள் அவளது பெற்றோர்.

அதே வீட்டிற்குள் என் உயிரையே பணயம் வைத்து நுழைந்து தீபாவை சந்தித்தேன் ஒருநாள்... ‘‘கண்காணாத ஊருக்குப் போயிரலாம். உன்னை
கண்கலங்காமல் நான் காப்பாத்தறேன்..வா தீபா!’’ என்றேன். ‘‘நீயும் நானும் திருட்டுத்தனம் பண்ணலையே! எதுக்காக ஓடிப்போகணும்? என் வீட்டுல பர்மிஷன் வாங்கறேன். கொஞ்சம் பொறுடா!’’ என்றாள் அதீத நம்பிக்கையோடு!

அவ்வளவுதான்..அப்புறம் தீபாவை பெங்களூருக்கு அனுப்பி
விட்டார்கள். கொஞ்சம் கொஞ்சமாக தொடர்பு அறுந்தது. அது ஒரு காதல் காலம்!
ஆனால்..இதோ..இப்போதோ..இப்படிப் பார்க்கிறேன் இவளை! என்னைக்
கண்டுகொண்டதாகத் துளிகூட காட்டிக்கொள்ளவில்லை. பெயரையே மாற்றிக்கொண்டு ‘புதுத்தொழிலில்’ இறங்கிவிட்டவளுக்கு ‘பழைய காதல்‘ குப்பை மேட்டர்தான்!

சம்பவ இடத்திற்கு ‘மீண்டு’ வந்தேன். அன்று நான் கற்பனையில்கூட ஸ்பரிசிக்கத் தயங்கிய அங்கங்களை..இன்று எவனெவனோ தொட்டுத் தடவுகிறான். ‘‘உவ்வே!’’. அவள் காதுபட சத்தமாக காறி உமிழ்ந்தேன். முகம் சுளித்துப் பார்த்த தீபா ச்சே..ச்சே..சோனா சட்டெனத் திரும்பி என்னை முறைத்துப் பார்த்தபடி வந்தாள். கண்ஜாடையிலேயே என்னை தனியாக வரச்சொன்னாள். ஏதோ ‘மந்திரிச்சு‘ விட்டமாதிரி நானும் ஓரமாக ஒதுங்கி நின்றேன்.

‘‘நான் சோனா இல்லை. தீபாதான்! டாடியோட பிசினஸ்ல பயங்கர லாஸ். வீடு, கார்னு எல்லாத்தையும் வித்து தந்தும் கடன்தொல்லை தீரலை. கௌரவமா வாழ்ந்த குடும்பம். கடைசியில சூசைட் பண்ணிக்கற நிலைமைக்கு வந்துருச்சு. வேற வழி? வீட்டுக்கு ஒரே பொண்ணு. நாந்தானே அவங்களை காப்பாத்தியாகணும்?

கை நிறைய சம்பாதிச்சாலும் கடனுக்கும், வாடகைக்குமே சரியாப் போகுது. ஃபிரெண்ட் ஒருத்தி ஐடியா குடுத்தா. தடாலடியா நானும் டிசைட் பண்ணேன். சோனான்னு பேரை மாத்தி மாடலிங்கில் இறங்கினேன். பேருக்குத்தான் மாடலிங். ஆனா பெரிய பிஸினஸ் மேக்னட்ஸ் சிலபேருகிட்ட ரெகுலரா ‘கான்டாக்ட்ஸ்‘ இருக்கு. அவங்களோட ‘விளையாட்டுப் பொம்மை‘ நான்!’’.. மூச்சுவிடாமல் தீபா சொன்னதைக்கேட்டு மூச்சு வாங்கியது எனக்கு!

கையிலிருந்த மினரல் வாட்டரை நீட்டி ‘‘குடிக்கிறியாப்பா?’’ என்று அதே கனிவோடு கேட்டாள். வெட்டி வீறாப்போடு ‘‘வேணாம்‘‘ என மறுத்தேன்.
வருத்தமான புன்னகையோடு ஒரு மடக்கு குடித்துவிட்டு தொடர்ந்தாள்..‘‘இப்போ
மாசத்துக்கு ஒரு லட்சம் சம்பாதிக்கறேன். நிம்மதியா இருக்கு ஃபேமிலி. என்னை உயிரா மதிச்சு..பாசமா வளர்த்த என் டாடி, மம்மி நல்லா இருக்கணும். அதுக்காக என்ன வேணும்னாலும் செய்வேன்!’’ என்றாள் அழுகையும், ஆவேசமும் கலந்து தெறிக்க!

அருகில் வந்தவள் என் தலைமுடியை கொத்தாகப் பிடிக்க..‘ அதிர்ந்துபோய் நின்றேன் நான்! ‘‘‘என் உடம்பை யார்யாரோ தொட்டாலும்..என் மனசை முதல்முதலா தொட்டவன் நீதான்! இப்பவும் என் மனசுக்குள்ள உயிரா ஓடறது..நானும் நீயும் காதலர்களா இருந்த அந்த அற்புதமான நாட்கள்தான்! எனக்காக உன் உயிரையே தர்ற அளவுக்கு துணிஞ்ச உன்கிட்ட ஒரே ஒரு ஹெல்ப் கேக்கறேன். செய்வியா..ப்ளீஸ்?’’ என்றாள்.

இன்னமும் என் அடிமனசில் புதைந்து கிடந்த அவள் மீதான
காதல்..அவள் இப்படிக் கேக்க வெடித்து சிதறிவிடும் போலிருந்தது! ‘‘செய்றேம்மா!’’ என்றேன் தீனமான குரலில். ‘‘ப்ளீஸ்..உன் பழைய தீபாவா உனக்கு ஒரு பாச முத்தம் தரவா..ப்ளீஸ்!’’ என்றவள்..அருகே வாசனையாக வந்து என் உதட்டில் ஒரு முத்தத்தை அழுத்தமாக தந்துவிட்டுப் போனாள்!

வாய்விட்டு கதறி அழுதேன்! காரணம்..வாய் வைத்துக் கொடுத்த ‘‘சோனா‘‘வின் முத்தத்தில்..உப்புக் கரித்தது என் தீபாவின் கண்ணீர்!
(பின்குறிப்பு: இது எனது நண்பனின் அனுபவம்!)

‘ரஜினி அங்கிளும்‘..சிறுமிகளும்!

Friday, July 3, 2009





வெள்ளிநுரை விளையாடற அலையோரமா நின்னா.. நாம ‘மீனவ நண்பன்‘! கொஞ்சம் தள்ளி உழைப்பாளர் சிலையோரமா நின்னா..நாம ‘உழைப்பாளி’!
ரிப்போர்ட்டர்ங்கறதால..‘போர்ட்டர்‘ முதல் ஓட்டுநர் வரை எல்லாருமே நமக்கு நல்ல
தோஸ்த்துகதான்!

‘அம்மா மெஸ்‘ எதிரே..ஆட்டோக்காக நிக்கறேன். ‘முந்தி வர்ற இந்த மூணு சக்கர தேரெல்லாம்‘ நாலுசக்கர வாகன ரேஞ்சுக்கு ரேட் கேக்க..அஞ்சி நின்னேன். அப்போ பாத்து வந்த ஒரு ‘ஆட்டோபாந்தவன்‘..‘‘தலைவா! எப்டி க்றீங்க? ஏறி குந்துங்க. வீட்டாண்ட இட்டர்றேன்!‘‘னு பாசமா சொல்ல..‘அட..நம்மாளு‘னு ‘ஆட்டோமேட்டிக்கா‘ ஏறி உக்காந்தேன்.

அந்த ஆட்டோ டிரைவர்..மணிகண்டன். பார்வைக்கு கொஞ்சம் முரடா தெரிஞ்சாலும்..‘தார் பூசின தங்கக்கட்டி‘! சூப்பர் ஸ்டார் ரஜினியே இவரை கூப்பிட்டு பாராட்டியிருக்காரு! ‘நிஜ பாட்ஷா‘வை ‘சூப்பர் பாட்ஷா‘ மெச்சினதுக்கு காரணம்?

‘ஆறறிவு எந்திரன்கள்‘ பரபரப்பா ஓடிகிட்டிருக்கற சென்னை
மாநகரம்! ரத்தக்கண்ணீர் வடிக்க வைக்கிற இந்த நகரத்துல..ஆனந்தக்கண்ணீர் வழியவைக்கிற சம்பவம் அபூர்வமா நிகழும். அப்படி ஒரு சம்பவம்..சில வருஷங்களுக்குமுன்னால சூப்பர் ஸ்டார் வீட்டுக்கு முன்னால நடந்துருக்கு!

தி.நகர் பஸ் ஸ்டாண்ட். மனிதாபிமானத்தை ‘பான்பராக்கு‘ போல மென்னு துப்பற மனுஷங்களை பராக்கு பாத்தபடியே நின்னுகிட்டிருக்காங்க பதிமூணு வயசு சிறுமிகள் ரெண்டுபேர். ‘எப்படியாவது ரஜினி அங்கிளை நேர்ல பாத்துடணும்’ங்கற ஆசையில அன்னை, தந்தைக்குத் தெரியாம சேலத்துலேர்ந்து சென்னைக்கு பஸ் ஏறி
வந்துட்டாங்க.

அசட்டுத்துணிச்சல்ல அசலூருக்கு வந்தாச்சு. ஆனா ‘ரஜினி வீட்டுக்கு எப்படி போறது?’ வழிதெரியாம முழி பிதுங்கி நிக்கறாங்க. வழக்கம்போல வழியில வந்த ஒரு ஆட்டோ டிரைவர் இந்த சிறுமிகள்கிட்ட நைஸா பேச்சு குடுக்கறாரு. வெள்ளை மனசுப் பிள்ளைகள் ரெண்டு பேரும் விஷயத்தை சொல்லிட்டாங்க!

‘‘அடடே! நானும் ரசிகன்தாம்மா! உங்க ரெண்டுபேரையும் ரஜினி அங்கிள் வீட்டுக்கே கூட்டிட்டுப்போறேன் வாம்மா!’’னு ஆட்டோக்காரர் சொல்ல.. ‘‘சரிங்க அங்கிள்’’னு அப்பாவிப்பிள்ளைகளும் ஆட்டோல ஏறிக்கொள்ள..சீறிக்கிளம்பிச்சு ஆட்டோ! சுத்திமுத்தி நின்ன லோக்கல் ஆசாமிகளும் ‘கலி முத்திப்போச்சுமா‘னு கிலியை கிளப்பிட்டாங்க!

பாசமுள்ள வாசகர்களே! இனிமேல் நீங்க படிக்கப்
போகும் சம்பவம்..ப்ச்! என்னத்த சொல்ல? வேண்டாம்..தொடர்ந்து படிங்க!

‘விருட்‘னு வந்து நிக்கற ஆட்டோலேர்ந்து ரெண்டு சின்னப்பிள்ளைக செம குஷியோட ஓடிவர்றாங்க! இதைப்பாத்து குழம்பிப் போனாங்க போயஸ் கார்டன்ல இருக்கற ரஜினி வீட்டு செக்யூரிட்டிகள்! தொடர்ந்து ஆட்டோ டிரைவரும் ஆசையா வந்து ‘பாவம்..சின்னப்புள்ளைக ஆசைப்பட்டுச்சு! அதான் கூட்டி வந்தேன்‘‘னு ‘கைப்புள்ளத்தனமா‘ சொல்றாரு.

நொந்துபோன செக்யூரிட்டிகள் ஆட்டோ டிரைவர்கிட்ட ‘‘ஏப்பா.. அந்த புள்ளைகளுக்கு வெவரம் பத்தாது. ஆனா உனக்கோ வெவரமே கெடையாது‘‘னு திட்டிமுடிச்சாங்க. வந்த ‘ரெட்டைவால்களோ’ ‘‘ரஜினி அங்கிளை பாக்காம போக
மாட்டோம்’’னு அழுது அடம்புடிக்க..‘‘சார் படம் புடிக்க போயிருக்காருமா‘‘னு பதில்
சொல்லியும் ‘புள்ளப்பூச்சியா‘ குடைஞ்சிருக்குக புள்ளைங்க!

ஒருவழியா கெஞ்சிக் கூத்தாடி ‘ரஜினி ஃபோட்டோ‘ல்லாம் தந்து பிள்ளைகளை சமாதானப்படுத்தி ‘ஆத்தாடி‘ன்னு பெருமூச்சு விடறதுக்குள்ள..அடுத்த பிரச்னை வந்துருச்சு! ‘இந்த வாண்டுகளை ஊருக்கு திருப்பி அனுப்பறது எப்படி?‘னு பதறுறாங்க செக்யூரிட்டிக! அந்த ஆட்டோக்காரரோ ‘‘பத்திரமா நான் அனுப்பி வெக்கிறேங்க!‘‘னு அக்கறையா சொல்றாரு.

‘‘தம்பி..உன்னை நம்பி எப்படிப்பா அனுப்பறது?’’னு செக்யூரிட்டிகள் மறுக்க..‘‘தலைவர் மேல சத்தியமா நான் பத்திரமா அனுப்பிச்சிடறேங்க!‘‘னு ஆட்டோக்காரர் கெஞ்ச..‘போயஸ் கார்டன்ல பழைய கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் படம்
மாதிரி‘ ஒரு ‘பாசப்போராட்டமே‘ நடக்குது. இதுக்கு நடுவே அந்த பிள்ளைககிட்ட ஒரு செக்யூரிட்டி நைஸா அட்ரஸை விசாரிக்கறாரு.

‘கிளிப்பிள்ளையா‘ பிள்ளைகள் வீட்டு அட்ரஸை ஒப்பிக்க..‘அடப்
பாவிப்பய புள்ளைகளா‘‘னு ஒரு செக்யூரிட்டி சந்தோஷத்துல அணில்பிள்ளையா குதிக்கறாரு. ஏன்னா..அதுல ஒரு புள்ளை அவரோட பொண்டாட்டி வகையறாவுல சொந்தக்காரரோட மகள்! அப்புறமென்ன..அந்த சொந்தகாரருக்கு தகவல் சொல்றாங்க. அங்கேதான்
க்ளைமாக்ஸே!

‘‘ஆமாமுங்க! முட்டாயை தின்னுகிட்டுத் திரிஞ்ச ரெண்டு
முட்டாப்பய புள்ளைகளும் ரஜினியை பாக்கணும்னு மெட்ராஸ்க்கு ஓடிவந்துருக்குன்னு
ஆட்டோக்காரத் தம்பி மணிகண்டன்ங்கறவர் ஃபோன் பண்ணி சொல்லிட்டாருங்க! அதான் அவங்க தாய்மாமன் கௌம்பி வந்துகிட்டிருக்காருங்க!’’னு ஒரு பிள்ளையோட அப்பா
சொல்ல..நம்ம ஆட்டோ மணியோட அக்கறையை பாத்து கண்கலங்கிட்டாங்க செக்யூரிட்டிகள்!

இந்த தகவல் நம்ம காதுக்கு வர..ஆட்டோ மணியை பிடிச்சு
‘அன்புள்ள் ரஜினிகாந்த்!‘னு ஒரு ஃபோட்டோ ஸ்டோரி ‘குங்குமம்‘ இதழில் எழுதினேன். அந்த கட்டுரைல ஃபைனல் டச்சா ‘இந்த சென்னைக்கு ‘அன்புள்ள ரஜினிகாந்த்‘ என்று ஆசையோடு ஓடிவந்த அப்பாவி சிறுமிகளை பத்திரமாகப் பாதுகாத்த ‘பாட்ஷா‘ மணிகண்டனுக்கும், அவர்களை பொறுப்பாக வீட்டுக்கு அனுப்பிவைத்த ‘ஊர்க்காவலன்‘ செக்யூரிட்டிகளுக்கும் கோடி கங்க்ராட்ஸ்!’’னு எழுதியிருந்தேன்.

கட்டுரை சூப்பர் ஸ்டாரின் பார்வைக்கு போனது. ஆட்டோ மணியின் வீடு தேடி ‘மனிதன்‘ அழைப்பு வந்தது. ராகவேந்திரா மண்டபத்துக்கு வந்து
கால்தொட்ட மணியை ரஜினி தோள்தொட்டு பிடிச்சு ‘‘நீதான் நிஜ ரஜினி!‘‘னு கண்கசிய
பாராட்ட..கதறி அழுத மணிக்கு ‘அப்போது வழிஞ்ச கண்ணீர் அவ்வளவு இனிப்பா இருந்துச்சாம்!’

‘மர்மயூகி‘ கமல்!

Monday, June 29, 2009




கலைஞானி கமல் பத்தி கடந்த பதிவுல ‘ஏதோ ஊதுபத்தி‘ அளவுலதான் சொல்லிட்டமோனு மனசுக்குள்ள ஒரு யோசனை வாசனையா புகையுது!

கார்ட்டூன்ல பாக்கற ‘காட்டு யானையை‘ ‘நேர்ல காட்டு‘ன்னா..என்ன செய்வான் இந்த ஏழை இளைஞன்? அதான்..கமல்ஹாசனை காட்டிட்டு போறேன்!

இப்போதைக்கு கமல் ‘நரை, திரை, மூப்பு‘ கடந்த புத்தர்! இன்னும் கொஞ்சம் பழுத்தா இவரே ஒரு சித்தர்! ‘கிண்ணத்தில்‘ தளும்பறதை பாத்ததுமே சிலபேரு தத்துவமா புலம்பறதை கேட்டிருப்போம். ஆனா நாம கேட்ட கேள்விக்கு தன் எண்ணத்தில் பட்டதை பட்டென சொல்லி அசத்தற அசாத்திய திறமைசாலி கமல்!

கேள்விக்குறியை ஆச்சரியக்குறியா மாத்தற கமலிடம் ஒரு கேள்வி கேட்டாங்க..‘காலையில் எழுந்ததும் யார் முகத்தில் விழிப்பீர்கள்?’. ‘பாசாங்கா ஒரு பதிலைச் சொல்லி ‘பேஷா இருக்கே‘னு கமல் பேர் வாங்கியிருக்கலாம்! ஆனா ‘அதிமேதாவிகளையே வெள்ளாவியில போட்டு வெளுக்கறமாதிரி‘ அப்பட்டமா இப்படி பதில் சொன்னார்
கலைஞானி..‘‘காட்டில் இருந்தால் நரி முகத்தில். கட்டிலில் கிடந்தால் ஸ்திரி முகத்தில்!’’

சிரிச்சுகிட்டு பேசறப்போ கூட கமல் நம்மளை பிரிச்சு
மேஞ்சுருவாரு! ‘விருமாண்டி‘ ப்ரஸ்மீட். நடுநாயகமா ‘மருதநாயகம்‘ உக்காந்திருக்காரு.
இடம், வலமா இருந்த நிருபர்கள் படம் பத்தி கேக்கறோம். அப்போ நான் என் பங்குக்கு ‘‘விருமாண்டிக்காக ரெண்டு காளைகளை பயங்கரமா வளக்கறீங்களாமே?’’ன்னேன். உடனே வாய்விட்டு சிரிச்ச கமல் ‘‘ஐயையோ..பயங்கரமால்லாம் வளர்க்கலீங்க! புண்ணாக்கு,
தீவனம்னு போட்டு சாதாரணமாதான் வளர்க்கறோம்!’’னு சொல்ல..தறிகெட்டு சிரிச்சோம்.

‘சிஃபி.காம்‘க்காக எனக்கு கமல் ‘சிறப்புப்பேட்டி‘ தந்தப்போ.. உறைப்பா ஒரு கேள்வி கேட்டேன். ‘‘மகாநதி‘ பட வில்லன் மாதிரி நிஜத்துல யாராவது தன்னோட கையையே வெட்டிக்குவாங்களா?’ன்னேன்.

‘‘இதைவிட கொடூரமால்லாம் சம்பவம் நடந்துருக்குங்க. எங்க ஊர்ல ஒருத்தனோட கையை எதிராளிங்க பாதி வெட்டிட்டாங்க. உடனே அவன் என்ன பண்ணான் தெரியுமா? அதே கையை முழுசா வெட்டி..அதை இன்னொரு கையில எடுத்துகிட்டு ரத்தக்களறியா சண்டை போட்டிருக்கான்!’’னு கமல் சொல்ல..கைகட்டி கேட்டுகிட்டேன்.

எனக்கு ரொம்பநாளா ஒரு டவுட்டு! ‘எப்பவுமே பிஸியா இருக்கற கமல் தனிமையா இருக்கும் சமயங்கள்ல என்ன செய்வார்?‘. நாக்குல நின்ன கேள்வியை போறபோக்குல கமல்கிட்டயே கேட்டுட்டேன்.

‘‘என்னை தட்டி எழுப்பற கேள்வி இது. என்ன..புரியலைங்களா? நண்பர்கள்கூட இல்லாத ஒரு தனிமை கிடைச்சுதுன்னா..உடனே நான் கண்மூடி
தியானத்துல ஆழ்ந்துருவேன்! ‘ஆஹா..கமல் தியானம்‘னு கவர்ஸ்டோரி கிடைச்சுருச்சுனு அவசரப்பட்டு முடிவு பண்ணிராதீங்க!’’னு சஸ்பென்ஸா சிரிச்சாரு கமல்.

சில ‘டிக்டிக்டிக்‘குக்கு பிறகு அவரே ‘டக்‘குன்னு சொன்னாரு..
‘‘தியானம்னு சொன்னது வேறெதுவுமில்ல..நல்லா நிம்மதியா தூங்குவேன்! சான்ஸ்
கிடைச்சா கொடைக்கானல் போயிருவேன். அப்படியே மலைக்குள்ள ஒரு இலை மாதிரி கிடந்து சுகமா தூங்கிருவேன்!’’னாரு ‘தமிழ் சினிமாவை விழிக்கவெச்ச இந்த மகா
கலைஞன்‘!

அதுசரி ‘நம்மவர்களே‘! இந்த பதிவுல போட்டுருக்கற கமல்
ஃபோட்டோ எப்போ..எதுக்காக எடுக்கப்பட்டதுன்னு கரெக்ட்டா சொல்ற ‘மர்மயூகி‘களுக்கு ஸ்ரீதர் சார் ‘சிரிப்பு பரிசு’ வழங்கறார் என்பதை ‘ஏழ்மையுடன்‘ தெரிவிச்சுக்கறேங்க!

விஜய் சேர்த்த சொத்து!

Monday, June 22, 2009



அருவி மாதிரி பேசற ஆளல்ல நம்ம ‘குருவி’! துருவித்துருவி கேள்வி கேட்டாலும் உருவிப்போட்ட கருவேப்பிலை மாதிரி கொஞ்சூண்டுதான் பதில் கிடைக்கும். ரெண்டுமணி நேரம் விஜய்கூட பேசினதை ஒரு துண்டுச்சீட்டுல
எழுதிரலாங்ணா!

அது ஒரு தீபாவளி! வாணவேடிக்கைகளை வானத்துல வேடிக்கை பார்த்தே ஏங்கற ஏழை மாணவர்களை ‘சிவகாசி‘க்கு கூட்டிட்டுப்போலாம்னு ஆசைப்பட்டேன். பட்டாசு தயாரிக்கற சிவகாசிக்கு அல்ல..பட்டைய கௌப்பற ‘சிவகாசி‘ விஜய்கிட்ட! அப்பவும் நான் ‘குங்குமம்’ பொறுப்பாசிரியர்.

தீபாவளிக்கு மூணுநாள் முன்னாடி..‘கில்லி‘யோட நீலாங்கரை வீட்டுக்கு பள்ளிக்கூடப் பசங்களை கூட்டிட்டுப்போனோம். வாசல்ல நின்னு வரவேற்ற விஜய்யை பார்த்ததுமே பிச்சுகிட்டு ஓடுன பசங்க ‘‘இளைய தளபதி‘ன்னு அவரை
மொச்சுகிட்டாங்க! பசங்களுக்கு பட்டாசு பாக்கெட், ஸ்வீட் பாக்ஸ்னு விஜய் அன்போட தர..பதிலுக்கு பசங்களும் கண்ணுமண்ணு தெரியாம பாசத்தைப் பொழிய..கண்ணு கலங்கிட்டாரு விஜய்!

இதை ‘பள்ளி மாணவர்களுடன் கில்லி தீபாவளி’ன்னு நேரடி
ரிப்போர்ட்டா எழுதியிருந்தேன். ‘குங்குமம்’ இதழ் கடைக்கு வந்த அதிகாலையிலேயே என் செல் முழிச்சது. எடுத்துப்பேசினால்..விஜய் குரல் ஒலிச்சது! ‘‘மேட்டர் படிச்சேங்ணா. மனசு நெகிழ்ந்து போயிட்டேங்ணா. நாளைக்கு ஈவ்னிங் மீட் பண்ணலாங்ணா!’’னார்.
‘‘சரிங்ணா’’னேன் சந்தோஷமா!

மறுநாள் மாலை. அதே நீலாங்கரை. சலசலக்கற
கடற்கரையோரமா பளபளக்கற விஜய் பங்களா. ‘இளைய தளபதி‘யோட பர்சனல்
அறைக்குள் போறேன். ‘பனிக்கட்டியை பரப்பி ஏ.சி.யால நிரப்பி விட்ட மாதிரி‘ ஜிலீர்னு இருக்கு அந்த ரூம். எதிரே சேர்ல விஜய். உதிராத புன்னகையோட புதிராக என்னையே
பாக்கறாரு.

ஜாலி பேட்டிக்காக போன நானே ஒரு கேள்விக்குறி
மாதிரி ஆயிட்டேன். ‘சரி..இதிலிருந்தே பேட்டியை ஆரம்பிக்கலாம்’னு ‘‘எப்படி வந்துச்சு உங்களுக்கு இப்படியொரு அமைதி?’’ன்னு கேட்டேன். ‘‘சொல்லத்தெரியலீங்க. எப்பவுமே இப்படியேதான் இருக்கேன். இதுவே நிம்மதியா இருக்கு!’’ன்னு சைலன்ட்டாகிட்டார்.

‘என்னடாது..அதிரடிப்பேட்டி ஆன்மீகப் பேட்டியா மாறிடும்
போல’ன்னு சப்ஜெக்ட்டை மாத்தினேன். விஜய்யோட டேபிள்ல ஆடியோ சிஸ்டத்தை பாத்தேன். ‘‘அதிராமல் பேசற நீங்க..அதிர அதிர மியூஸிக் கேப்பீங்க போல?’’ன்னேன். உதடு பிரியாமல் சிரிச்ச விஜய் ‘‘ஆமாங்ணா! மியூஸிக்னா எனக்கு உயிர். பழசு புதுசு எந்தப்
பாட்டா இருந்தாலும் கேட்டு ரசிப்பேன்’’னு ‘நல்லபிள்ளையா‘ பதில் சொல்லி பேட்டிக்கு ‘பிள்ளையார் சுழி’ போட்டாரு.

கச்சிதமா ட்ரிம் பண்ணியிருந்த மீசையை விஜய் வருட..அப்போ அவரோட வலது கை விரல்ல ஒரு பிளாட்டினம் மோதிரம் ஜொலிச்சது. ‘‘ஸ்பெஷல்
மோதிரமா?’’ன்னு கொக்கியை போட்டேன். ‘‘அட..எல்லாத்தையும் நல்லா வாட்ச்
பண்றீங்களே’’னு சிரிச்சவர் ‘‘இது அப்பா போட்ட மோதிரம். ‘இத போட்டுகிட்டா நல்லது நடக்கும்‘னாரு. சந்தோஷமா போட்டுகிட்டேன்’‘னாரு.

இப்படி ஒருவழியா என்னென்னவோ செப்படி வித்தையெல்லாம் காட்டி ஒரு ‘ஸ்பெஷல் பேட்டி‘ எடுத்துட்டு வந்தேன். கவர்ஸ்டோரிக்கு அனுப்பற நேரம். அன்னிக்கு பாத்து ‘விஜய் உட்பட பல முன்னணி நடிகர்கள் வீடுகளில் இன்கம்டாக்ஸ் ரெய்டு’ நடந்துருச்சு. ‘கட்டுக்கட்டா கறுப்புல எடுத்தாங்க‘னு பல கட்டுக்கதைகளும் பரவிருச்சு.

இதுபோதாதா? விஜய்யோட கவர்ஸ்டோரிக்கு ‘‘கஷ்டப்பட்டு
சம்பாதிச்சது கையை விட்டுப்போகாது!’’னு ‘டைமிங்கா‘ டைட்டில் வெச்சு அனுப்பிச்சேன். உள்ளே என்ன மேட்டர்னா ‘‘விஜய் படமா? குடும்பத்தோட போய் ஜாலியா பாக்கலாம்னு மக்கள் என்மேல நம்பிக்கை வெச்சுருக்காங்கள்ல! இந்த நம்பிக்கைதான் நான் கஷ்டப்பட்டு
சம்பாதிச்ச சொத்து. இது கையை விட்டுப் போகாது!’’னு விஜய் சொல்லியிருப்பார்.

இதழ் விற்பனைக்கு வந்தது. ‘சன் டி.வி.‘யிலயும் விளம்பரம் சக்கைபோடு போட்டது. அன்னிக்கு மதியம்..என் செல்லில் மீண்டும் விஜய்! ‘‘ண்ணா..
இன்கம்டாக்ஸ் ரெய்டு பத்தி எவ்வளவோ பொய்யா எழுதி என்னை கஷ்டப்படுத்திட்டாங்க. ஆனா அதையெல்லாம் அடிச்சுத்தூக்கி என் மனசுக்கு பெரிய நிம்மதியை தந்துருச்சு உங்க எழுத்து! ரொம்ப தேங்க்ஸ்ணா. இனிமேல் என்னைப்பத்தி நீங்க என்ன எழுதினாலும் அதுக்கு முதல் ரசிகன் நாந்தாங்ணா!’’னு விஜய் உருக்கமாகப் பாராட்ட..இன்னும் நெருக்கமானது அவருடனான நட்பு!

ராஜ்கிரணின் ‘ஆட்டுக்கால் சூப்‘!

Sunday, June 21, 2009


மரிக்கொழுந்து வாசம் வேணும்னா எத்தனையோ நடிகைகளைப் பத்தி எழுதலாம். ஆனா..கறிக்கொழம்பு வாசம் வரணும்னா அதுக்கு ராஜ்கிரணைப் பத்தி மட்டும்தான் எழுதமுடியும்!

மூணுகிலோ ஆட்டெலும்பை ஒரே மூச்சுல கடிச்சுத்துப்புவாரு. முப்பதுபேரோட மூட்டெலும்பை ஒரே வீச்சுல அடிச்சு நொறுக்குவாரு. அவர்தான்
ராஜ்கிரண்! தொடைதெரிய டவுசர் மாட்டிட்டு அறிமுகமாகற கதாநாயகிகள் நடுவில..டவுசர் சைஸுக்கே வேட்டியை மடிச்சு டப்பா கட்டு கட்டிகிட்டு தொடைதெரிய அறிமுகமான ‘தமிழின் முதல் முரட்டு ஹீரோ’ ராஜ்கிரண் மட்டுமே!

ஒருகோடி ரூவா ரேஞ்சுக்கு இந்த ‘பாவா‘ சம்பளம் வாங்கி சாதனை பண்ணாரு. இவரோட சுருட்டைமுடி போல சில சோதனை சுருட்டி அடிச்சாலும்..இந்த இருட்டை விரட்டி வெளிச்சத்துக்கு மீண்டுவந்தாரு.

உலகம் மட்டுமா உருண்டை? கறி கோலாவும்தான் உருண்டை!
ராஜ்கிரணை நான் முதல்வாட்டி சந்திச்சது..திண்டுக்கல்லுல ஒரு சந்துக்கடை டிபன்
ஸ்டாலில்! தொண்டையில பிஸ்கோத்தா கரையற மட்டன் குஸ்காவும், மண்டையிலிருக்கற மசாலாவை குஷாலாக்கற சிக்கன் கறியும் அந்த கடையோட ஸ்பெஷல்!

இந்த ‘வாசனை புடிச்சாலே திண்டுக்கல் மலைக்கோட்டைக்கே எச்சில் ஊறும்ங்க! அப்போ..இலைபோட்டு திங்கற எங்க நிலைப்பாட்டை யோசனை பண்ணிப்பாருங்க! சேர்ல உக்காந்துருக்கற நானும், நண்பன் கலீலும் ஒவ்வொரு ஐட்டத்தையும் ‘ஆஹ்ஹா..ஓஹோ’னு ரசிச்சு ருசிக்க..கார்ல கூட்டாளியோட உக்காந்திருந்த
ராஜ்கிரண் வெளிய வந்து ‘‘எங் கன்னுக்குட்டிகளா..சாப்புடணும்னா இப்பிடித்தான்
சப்புக்கொட்டி சாப்பிடணும்!’’னு ‘வாசமா‘..பாசமா பாராட்ட..அப்பவே எங்களுக்கு வயிறு நிறைஞ்சுபோச்சு.

அப்புறம் நாங்க ‘பத்திரிகைக்காரங்க’ன்னு அறிமுகப்படுத்திக்
கிட்டோம். அவர் கூட இருந்த கூட்டாளி அதை அரைகுறையா கேட்டுகிட்டு
கடைக்காரர்கிட்ட ‘‘ஏப்பா..கத்திரிக்காய் கேக்கறாங்கள்ல! நம்ம பசங்க!’’ன்னு குளற..
சினிமாவுல சிரிச்சமாதிரி ராஜ்கிரண் சிரிக்க..அங்கனயே எங்களுக்கு செரிச்சுப்போச்சு!

‘இந்திரன், சந்திரன்‘ ரெண்டுபசங்களும் வெந்துகூழானதுக்கு
என்ன காரணமோ..அதே காரணத்தாலதான் நம்ம ராஜ்கிரணும் நொந்துநூலாகியிருந்தாரு! அந்த நேரத்துல நான் அவரை சந்திச்சேன். சுருட்டைமுடியும், முரட்டுமீசையும், மிரட்டும் கண்களுமா ‘சினிமாவின் மினியேச்சர் அய்யனார்’ மாதிரி இருந்தவர்..‘பிதுக்கி எடுத்த டூத்பேஸ்ட் டியூப்’ மாதிரி இளைச்சு களைச்சுப்போயிருந்தாரு!

பாக்கவே மனசுக்கு கஷ்டமா இருந்துச்சு. அவரோட கையை இறுக்கிப்பிடிச்சுகிட்டு ‘‘இடையில கொஞ்சம் மங்கிப்போனாலும் ‘மாணிக்கம்’ சார் நீங்க! மறுபடியும் ஜொலிப்பீங்க!’’ன்னேன். ‘தளுங்’னு அவரோட கண்ணு கலங்கிருச்சு.
எனக்கும்தான்.

‘‘சந்தோஷம்யா! வருவேன்யா..வந்ருவேன்யா!‘‘னு அழுத்தமா சொன்னவரு, ‘ம்க்ர்ம்’னு தொண்டையை செருமிகிட்டே ‘‘என்ன சாப்புடறேய்யா?’’ன்னு பரிவோட கேட்டாரு. ‘‘காபி சார்’’ன்னேன். ‘என் ராசாவின் மனசுல’ மீனாவை செல்லமா கோச்சுக்கறமாதிரி’ ‘‘என்ன பழக்கம்யா? காபி கீபின்னுகிட்டு? சூடா ஆட்டுக்கால் சூப் குடிக்கலாமா?’’ன்னாரு.

‘இலை திங்கற ஆடு மாதிரி‘ தலையாட்டினேன். வீட்டுக்கு உள்ளே பார்த்து பெருங்குரலில் ‘‘தாயீ..ரெண்டு பெரிய கப்புல சூப் குடும்மா’’ன்னாரு! சுடச்சுட
வந்தது சூப். செம கமகம! ‘‘இந்தாய்யா..நல்லா உறிஞ்சி குடிய்யா’’னு மணக்க மணக்க எனக்கும் கொடுத்து..தனக்கும் எடுத்தார்.

முதல் ‘சிப்‘பிலெயே ‘‘சூப்பர் சார்’’னேன். ‘‘யய்யா..ஆட்டுக்கால் சூப் சாப்புட்டா மூட்டுவலியே வராது தெரியுமா?’’னு ‘அசையும் பொருள்கள் அத்தனைக்குமான அசைவ டிப்ஸை‘ அள்ளித்தர..அசையாம சப்புக்கொட்டி கேட்ட நான் அத்தனையையும் ‘உப்புக்கண்டம்’ போட்டு பத்திரமா வெச்சிருக்கேன்.

கிளம்பறப்போ கேட்டேன்..‘‘உங்களை ‘வில்லேஜ் எம்.ஜி.ஆர்.‘னு எல்லாரும்..குறிப்பா தாய்க்குலம் தலைமேல தூக்கிவெச்சு கொண்டாடுனாங்க! மறுபடியும் அந்த இடத்தை நீங்க புடிச்சுரலாம்ல?’’ன்னேன்.

கண்ணைமூடி தன்னைப்பத்தி ஒருநிமிஷம் யோசிச்சவர்
‘‘எல்லாரும் எம்.ஜி.ஆர். ஆகமுடியுமாய்யா? எனக்கும் எம்.ஜி.ஆர்.மாதிரி இருக்கத்தான் இஷ்டம். ஆனா ராஜ்கிரணா இருந்துட்டதாலதான் இம்புட்டு கஷ்டம்!
பொண்டுபுள்ளைக மத்தியில நமக்குன்னு ஒரு மதிப்பு இன்னமும் இருக்குய்யா. அதை
காப்பாத்திக்குவேன்!’’னார் ‘கிரானைட்‘ குரலில்!

‘சிக்ஸ்டி பேக்’ அமீர்!

Tuesday, June 16, 2009







சினேகமாகிட்டா உசுரையே தரக்கூடிய அமீர்..அநேகமா போன பிறவியில கர்ணனா பிறந்திருப்பார்போல! தப்புன்னா தொடைதட்டி மல்லுக்கு நிப்பார். நட்புன்னா படைதிரட்டி முன்னுக்கு நிப்பார்.

ரசிகர்களை மயக்குன ‘மௌனம் பேசியதே’..அமீர் இயக்குன முதல்படம். பத்திரிகைகள்ல விமர்சனம் எப்படி வரப்போகுதுன்னு பத்தி எரியற
ஆர்வத்தோட அமீர் காத்திருந்த காலம் அது. அல்லாவின் கருணையால் எல்லா பத்திரிகைகள்லயும் படத்தைப் பத்தின விமர்சனம் நல்லா வந்திருந்தது. மாநிறமா இருந்த அமீர்..இதை படிச்சு படிச்சு ரசிச்சு தேனிறமா மாறிட்டாரு!

வந்த விமர்சனங்கள்ல அமீரால மறக்கமுடியாததுல
நம்மோடதும் ஒண்ணு. ‘மௌனம் பேசியதே’ படம் பத்தி அக்குவேறு சுக்குநூறா அலசிட்டு..ஃபைனல் டச்சா ‘‘ஓடுகிற நதியில் ஒருகூடைப்பூக்கள் மிதந்துபோகிற அழகு!’’ன்னு எழுதியிருந்தேன். தனக்கு பாயாசமா இனிச்ச இந்த வரிகளை வாயாரப்பாராட்டின அமீர்..பத்திரிகை விளம்பரத்துல எடுத்துப்போட்டு மரியாதை பண்ணியிருந்தார்.

அப்போ தொடங்கின நட்பு..இப்போவரைக்கும் உப்புபோல எளிமையாவும், எஃகு போல வலிமையாவும் தொடர்வதுதான் நம்மோட லக்கு! உணர்ச்சிவசப்பட்டுட்டா கத்தரிவெயில் மாதிரி அனல்கக்கற அமீருக்கு..
பத்திரிகைகாரங்ககிட்ட கத்தரிபோட்டு பேசத்தெரியாது. இதனால இவரை ‘மகா கோபக்காரர்‘மாதிரி சித்தரிச்சிட்டாங்க!

நிஜத்துல அமீரோட பேச்சுல ஞாயம் இருக்குமே தவிர சாயம் இருக்காது. சமயங்கள்ல சிலபேர்கிட்ட அடிமனசுல பட்டதை ‘பட்‘டெனப்பேசி சர்ச்சைகள்ல அடிபட்டதுக்குப்பிறகு..நல்லது கெட்டது எதுன்னு அமீருக்கு இப்போ நல்லா புடிபட்டுப்
போச்சு.

‘பருத்திவீரன்’ படத்துல ஒரு ‘கறுப்புத்தோல் தமிழச்சியைத்தான்
கதாநாயகியா அறிமுகப்படுத்துவேன்‘னு வீறாப்பா சொல்லிட்டாரு. ‘நைட்டியைப்
போட்டும்கூட மேல மாராப்பா ஒரு துண்டைப் போட்டுக்கற‘ நம்மூரு பெண்டுக..
பிறவிச்சொத்தான வெக்கத்தை துறவி ரேஞ்சுக்கு துறந்து நடிப்பாங்களா என்ன?

தமிழ்நாட்டோட சந்துபொந்து இண்டுஇடுக்கெல்லாம் பூந்து தேடியும் நண்டு வளைக்குள்ள ஒளிஞ்சிகிட்டமாதிரி ‘கருப்புத்தோல் தமிழச்சிகள்லாம் பம்மி பதுங்கிட்டாங்க. ‘‘அப்புறம் என்ன செய்ய? பெங்களூரு தமிழச்சி ப்ரியாமணியை புடிச்சுட்டு வந்தேன். தங்கக்கட்டிக்கு தார்பூசி கறுக்கவச்சோம்’’னு சொல்லிச்சிரிச்சாரு அமீர்.

‘என்னுயிர்த்தோழா’ன்னு பாலாவோட சுத்தித்திரிஞ்ச அப்’போதை’ய காலகட்டத்துல இருந்த அமீர் இல்லை. இப்போது.. இறைநெறிகளுக்குட்பட்டு தனது மறைவிதிகளை மதிச்சு துதிக்கற நிறைவான மனிதன் அமீர்.

அமீரின் மூன்று படங்கள்லயும் கலகலப்பு இருக்கும். கிளுகிளுப்பு இருக்காது. ‘கவிச்சி‘ கடிப்பாங்க. கவர்ச்சி கிடையாது. ‘ஏன் இப்படி முரண்டு புடிக்கறீங்க?’னு கேட்டேன். கரண்டு அடிக்கறமாதிரி பதில் சொன்னாரு அமீர்...

‘‘ஏங்க..நம்ம மெரினா பீச்சுல ஒருலட்சம் பேர் வெறும்
உள்ளாடைகளோட படுத்து ‘சன் பாத்‘ எடுக்கமுடியுமா? முடியவே முடியாது. ஏன்னா நமக்குன்னு ஒரு கலாச்சார அடையாளம் இருக்குல்ல. ரெண்டு பொம்பளைப்
பிள்ளைகளைப் பெத்தவன் நான். ஒரு அக்கறையான தகப்பனா..என்னோட படங்களை என் குடும்பம் முதல்ல பாக்கனும்னு நினைக்கறேன். கோட்டை கட்டவேண்டிய
தமிழ்சினிமாவுல..திருட்டுத்தனமா ஓட்டைல மறைஞ்சுபாக்கற விஷயங்களைச்சொல்லி
நாட்டை கெடுக்காதீங்க‘‘ன்னு பேசிட்டு பாத்தவரோட கண்ணுல ஆசிட் கோபம்!

அமீரோட கவலையெல்லாம் ‘சவலைப்புள்ளையா‘ போன பல நடிகர்களைப்பத்தித்தான்..‘‘ஆளில்லாத தீவுல ‘ஊ..லலல்லா‘ பாட நம்ம ஹீரோக்கள்
ரெடியா இருக்காங்களே தவிர..அப்பா கேரக்டர்ல நடிக்க இங்க ஆளில்லை. கமல்
சாரைத்தவிர அப்பா, தாத்தா ரோல்ல நடிக்க யாரும் தயாரா இல்லை. அப்படியொரு
அப்பா கேரக்டர்ல நடிக்கத்தான் நான்லாம் நடிகனானேன். மத்த நடிகர்கள் ஹீரோயினுக்கு முத்தம் குடுக்கட்டும். நாம நிஜம்போலவே பிள்ளைகளை கொஞ்சுவோம்!’‘னார்.

சமீபத்துல ஒரு விழாவுல அமீரை சந்திச்சேன். தீட்டிவெச்ச ஈட்டி
மாதிரி ஷார்ப்பா இருந்தார். ‘‘என்ன சார்..‘சிக்ஸ் பேக்‘ ஹீரோ மாதிரி இருக்கீங்களே?‘‘ன்னேன். ‘‘நீங்கவேற! நான் போட்டிருக்கற சட்டையை கழட்டிப்பாத்தீங்கன்னா..‘சிக்ஸ் பேக்‘ என்ன..‘சிக்ஸ்டி பேக்‘கே தெரியும். அம்புட்டு எலும்புகளும் அப்பட்டமா தெரியறமாதிரி ஒல்லியாயிட்டேன்!’’னு சொல்லிச்சிரிச்சார் ‘யோகி‘ அமீர்!

சந்தியா படக்கதை!

Friday, June 12, 2009


ஆத்தா ஆடு வளர்க்கலாம். தாத்தா பேத்திய வளர்க்கலாம்.

இந்தியாவை இளைஞர்கள் வளர்க்கலாம். ஆனா..‘அம்மாளு’ சந்தியாவை

பத்திரிகைக்காரங்களான நம்மாளுங்க எப்படி வளர்த்தாங்க தெரியுமா?

‘காதல்‘ படத்தை தலைமேல் தூக்கிவெச்சு பாராட்டினோம். அதுல அறிமுகமான சந்தியாவை அவரோட நடிப்புக்காக இடுப்புல தூக்கிவெச்சு சீராட்டினோம். ‘செண்டு பாட்டில்’ சைஸ்ல இருந்தாலும்..‘ரெண்டு பாட்டில் வந்து டான்ஸ் ஆடிட்டுப்போற ஆவரேஜ் நடிகை அல்ல’னு சாவித்திரி ரேஞ்சுக்கு கூவித்திரிஞ்சது பத்திரிகைகள்.

ஆனாலும் கோலிவுட்டோட ‘கோலி விளையாட்டுல’ உருண்டு புரண்டு சராசரி நடிகையா சந்தியா ஆயிட்டது ‘வழக்கம் போல் கலக்கல்’தான். ‘

பத்திரிகைகளாலதான் தான் இம்புட்டு உசரத்துக்கு வந்தோம்’ங்கறதால நிருபர்கள்னாலே

கும்பிட்டு பேசறது சந்தியா பழக்கம். அன்னிக்கு ‘குங்குமம்’ இஷ்யூவோட டெட்லைன். அது நான் தயாரிக்கற இதழ்.

எதிர்பார்த்த ரெண்டுபக்க மேட்டர் ஒண்ணு கடைசி நிமிஷத்துல கைக்கு வரலை. பொதுவா பத்திரிகைகள்ல இந்தமாதிரி சமயங்கள்ல ‘கீப் மேட்டர்’ னு (அச்சச்சோ..இது அதுவல்ல!) ஒரு ஃபைல் வெச்சுருப்போம். அதுலேர்ந்து ஒரு கட்டுரையை எடுத்துப்போட்டு சமாளிச்சுருவோம். அன்னிக்கு பாத்து நமக்கு அதுவும் வசப்படலை.

எதேச்சையா என் டேபிளை பார்த்தேன். ‘அக்குள்ல கூகுள் வெச்சுகிட்டு..யாஹூல தேடறமாதிரி’..மலர்போல சிரிச்சுகிட்டிருக்கற சந்தியாவோட கலர்ஃபுல் ஸ்டில் கிடைச்சது. ஆஹா..‘முக்கால் பக்கம் சந்தியா ஸ்டில்..ஒண்ணேகால்

பக்கம் ஜாலி மேட்டர்’னு குஷியா விசிலடிச்சேன். மேட்டருக்கான டைட்டில் ரெடி!

ஆனா ராத்திரி எட்டு மணி. நம்ம நிருபரை அனுப்பி பேட்டி எடுக்கவும் அவகாசம் இல்லை. ஆகவே ஃபோன்லயே ஒரு பேட்டியை போட்டுருவோம்னு சந்தியாவோட செல்லுக்கு கால் பண்ணேன். எடுத்தார் சந்தியா. ‘‘ஒரு அவசர பேட்டி. கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல்..இதுபத்தி பேசலாமா?’’ன்னேன்.

‘என்னடாது..எல்.ஓ.வி.இ. நாயகிகிட்ட எல்.கே.ஜி.ரேஞ்சுல

கேக்கறாரே’ன்னு நினைச்சு ‘களுக்’னு சிரிச்ச சந்தியா ‘‘ஓகே சார்..கேளுங்க!’’ன்னார். பத்தே நிமிஷத்துல ‘கணக்கு’ முடிஞ்சது. சந்தியாவுக்கோ த்ரில் தாங்கலை. ‘‘சார்..வித்தியாசமா

எதையோ கேக்கறீங்க. ஓகே. லேட்டஸ்ட்டா ஃபோட்டோசெஷன் பண்ணேன். அதுல எனக்கு ரொம்ப புடிச்ச ஒரு ஃபோட்டோ இருக்கு. அதை போடமுடியுமா ப்ளீஸ்!’’னுச்சு

பொண்ணு.

‘படம் நழுவி ஸ்கேனர்ல விழுந்து..அதுவும் நழுவி தாள்ல

அச்சேறின கதையா’ டபுள் குஷியாச்சு. உடனே நம்ம ஆபீஸ் பையன் சுரேஷை அனுப்பினேன். ‘பாயும்புலியா போன சுரேஷ்..ஃபோட்டோவை வாங்கிட்டு கூண்டுக்கிளியா

திரும்பிவந்தான். செம்பருத்திப்பூவை செருகிவெச்ச வெள்ளைத்தொப்பியும்..வெனிலா ஐஸ்க்ரீமா உருகி வழியற சிரிப்புமா சந்தியாவோட அழகான ஃபோட்டோ அது!

பிறகென்ன? ‘தேவதையின் பினாமி..இளசுகள் மனசை சூறையாடற சுனாமி’ன்னு ஓப்பனிங் வெச்சு..‘சந்தியாவும்..சில கணக்குகளும்’ங்கற டைட்டிலோட ரெண்டுபக்க மேட்டரை அனுப்பிச்சாச்சு. இஷ்யூ முடிச்சுட்டு உஷ்ஷுனு உக்காந்தேன்.

கொலைப்பசி. ஒரு பழத்தை சாப்பிட்டுகிட்டிருந்தேன்.

அப்போ பலத்த சந்தேகத்தோட கேபினுக்குள்ள வந்த சுரேஷ்..சந்தியா ஃபோட்டோவையே சந்தேகமா பாத்துகிட்டிருந்தான். ‘‘சார்..என்னால நம்பவே முடியல சார். இந்த சந்தியா

ஃபோட்டோலதான் அழகா இருக்கு. நேர்ல ரொம்ப ஏஜ்டா தெரியுது சார்‘‘னான்.

‘‘சேச்சே..சின்னப்பொண்ணுப்பா அவங்க’’ன்னேன். ‘‘உங்களுக்கு தெரியாதா சார்? எல்லாமே மேக்கப்தானே? அன்னிக்கு த்ரிஷாவ பாத்தேன். படத்துலதான் ஷோக்கா இருக்கு. நேர்ல சுதும்புக்கருவாடு மாதிரில்ல இருக்கு’’ன்னு அவனோட பாணியில போணி பண்ணான். அமைதியா இருந்தேன். அவனோ அப்பிராணியா மூஞ்சியை வெச்சுகிட்டு ‘சந்தேகப்பிராணியா’ விடாம கேட்டான்..‘‘சார்! சந்தியாவுக்கு முப்பது வயசு இருக்கும்ல சார்?’’னான்.

இப்போ எனக்கே டவுட் வந்துடுச்சு. உஷாராகி சந்தியாவுக்கே

ஃபோன் அடிச்சு விசாரிச்சேன். நடந்தது இதுதான். சுரேஷ் ஃபோட்டோ வாங்க சந்தியா வீட்டுக்கு போயிருக்கான். ‘காதல்’ ஹீரோயினை நேர்ல பாக்கற த்ரில்லோட காலிங்பெல்லை அடிச்சுருக்கான். கதவு திறந்தது. ‘‘உள்ளே வாங்க’’ன்னு ‘சந்தியா’ கூப்பிட்டிருக்காங்க.

அப்போ அவங்க செல்ஃபோன் அடிச்சுருக்கு.

எடுத்துப்பேசினவங்க ‘‘யெஸ்..சந்தியாதான் பேசறேன். என்ன

விஷயம்?’’னு கேட்டுருக்காங்க. பேசிகிட்டே நம்ம பையன் கையில ஃபோட்டோவை

குடுத்து அனுப்பிச்சுட்டாங்க. இந்த இடத்துலேர்ந்துதான் குழப்பம் கூடுவிட்டு கூடு

பாஞ்சுருக்கு. பையன் கண்ணால கண்டது சந்தியாவோட அம்மாவை! ‘‘யெஸ்..சந்தியாதான் பேசறேன்’’னு காதால கேட்டதும் சந்தியா அம்மாவோட குரலைத்தான். இதுல என்ன ப்யூட்டின்னா..ப்யூட்டிஷியனான மம்மி அச்சுஅசல் சந்தியா மாதிரியே இருப்பாங்க!

மம்மி ஏன் சந்தியாவுக்கு டப்பிங் பேசுனாங்கன்னா..உப்புமாவை

சாப்பிட்ட கையோட உப்புமா கம்பெனியில வந்து உக்கார்ர சில ‘புருடா‘யூஸர்கள்..

‘‘சந்தியாவோட கால்ஷீட் வேணும்’’னு ‘டுபாக்கோ‘வை மென்னுகிட்டே ‘டுபாக்கூர்’

விடுவாங்க. இந்தமாதிரி ‘கிருமிகள்’ ஃபேன்ஸி நம்பர்லேர்ந்து ஃபோன் பண்றதால..அவங்க ‘ரியலா..ரீலா‘ன்னு பாத்து உறுமிவைப்பாங்க சந்தியாவோட மம்மி!

இப்படி சந்தியா ‘மம்மி‘ அடிச்ச ‘ஃபோன் கும்மி‘யை பாத்துதான்

நம்ம சுரேஷ் ‘இடமாறு தோற்றப்பிழையால’ விம்மிவெடிச்சுருக்கான்!

கலைஞரின் ‘சின்னப்பையன்’!

Wednesday, June 3, 2009


பத்திரிகையாளர் என்ற அனுபவத்தில் நான் ‘பத்திரம்’ எழுதி பத்திரப்படுத்த வேண்டிய ‘பொக்கிஷ அனுபவங்கள்‘ பல உண்டு. அதில் முக்கியமானது கலைஞர் சந்திப்பு!

இதில் சுவாரஸ்யமானது..கலைஞரை நான் சந்தித்த முதல்

சந்திப்புக்கு காரணம்..எம்.நடராஜன் (சசிகலாவின் கணவர்!). அப்போது நான் ‘ஜூனியர் விகடனின்‘ மதுரை நிருபர். 1993&94ல் மதுரை தி.மு.க.வில் பெரிய கோஷ்டி பூசல்! ‘ஆள் இல்லாத ஈசல் கட்சியிலேயே பூசல் வெடித்து வேஷ்டி உருவும்போது‘..ஆல்போல்

விழுதுவிட்ட கட்சிகளில் சில பழுதுகள் இருக்கத்தானே செய்யும்!

இந்த பூசல்களை நான் தொடர்ச்சியாக எழுத..அவை ஜூ.வி.யில் கவர்ஸ்டோரியாக..கட்டுரையாக தொடர்ந்து வெளியாகிக்கொண்டிருந்தது. பிறகு தலைநகர் நிருபராக சென்னை வந்தேன். நியூஸ் கவரேஜ் செய்ய ஏரியா பிரித்ததில்..‘சூரியா.. உங்களுக்கு அறிவாலயம்..அ.தி.மு.க.அலுவலகம்’’ என்று அனுப்பிவைத்தது விகடன் அலுவலகம்.

நல்ல காலம்..இருபெரும் கழகங்களிலும் எனக்கு ‘தோதுகள்‘ இருந்ததால்..செய்திகள் மூலம் ‘நாரதர் கலகம்‘ செய்ய ஏதுவாகப் போனது! கலைஞர் ப்ரஸ்மீட்,செயற்குழு கூட்டங்கள், அறிவாலய முணுமுணுப்புகள் என என் பெயரில் தி.மு.க. தொடர் செய்திகள் ‘திமுதிமு’வென தொடர்ந்தது.

இதற்கிடையே அன்றைய ‘அம்மா‘ ஆட்சியில் சும்மா இருக்காமல் எம்.நடராஜன் ஒரு போலீஸ்காரரை தாக்கிய வழக்கில் கைதாகி சிறையில் இருந்தார். இதை வைத்து நான் சும்மா இருக்காமல் சசிகலா பாடுவதுபோல் ‘நான் பாடும் பாட்டு’ என்று ஒரு கிண்டல் பாடல் எழுதினேன். இது ‘ஆனந்த விகடன்’ முதல்பக்கத்தில் அரஸ் கார்ட்டூனோடு கலர்ஃபுல் கலகலப்பாக வெளியானது.

மறுநாள்..இதே பாட்டு ‘முரசொலி’யில் மறுபிரசுரம் ஆனது.

அன்று..‘விகடன்’ அலுவலகம் வந்த சீனியர் பத்திரிகையாளர் சின்னக்குத்தூசி, துணை ஆசிரியர் ராவ் சார் முன்பு என்னை அழைத்து ‘‘உங்க பாடலை கலைஞர் ரொம்ப ரசிச்சு

பாராட்டினார். அதை ‘முரசொலி’யிலும் மறுபிரசுரம் பண்ணச்சொன்னார்’’ என்று

சொல்ல..சிலிர்த்துப்போனேன்.

அடுத்த சில நாட்களில் அறிவாலயத்தில் ஒரு ப்ரஸ்மீட். முடிந்து வெளியே வந்தால் (மறைந்த) முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா என்னை அழைத்தார். என்மீது பேரன்பு கொண்டவர். நல்ல வாசகர். ‘‘விகடன்ல வந்த அந்த பாட்டை தலைவர் ரொம்ப ரசிச்சாரு’’என்றார். ‘‘ரொம்ப சந்தோஷம் சார். சின்னக்குத்தூசி சாரும் சொன்னாரு’’ என்றேன். ‘‘தலைவர் ஃப்ரீயா இருந்தா பாத்துரலாம் வாங்க!’’ என்று ப்ரியத்தோடு அழைத்துப்போனார்.

கலைஞர் அறை. ஆலடி அருணா உதவியால் உள்ளே காலடி எடுத்துவைத்தேன்.நேரெதிரே சோபாவில்..தொண்டர்கள் போற்றித்துதிக்கும் கலைஞர் வீற்றிருந்தார். அருகில் கூரான நாசியை தடவி யோசித்தபடி பேராசிரியர் அன்பழகன்! இருகரம் கூப்பி இருவரையும் வணங்கினேன்.

‘‘யாரிது?’’ என்று ஏறிட்டுப்பார்த்த கலைஞரிடம் ‘‘தலைவரே!

தம்பிதான் எம்.பி.உதயசூரியன். விகடன் நிருபர்!’’ என்று ஆலடி அருணா அறிமுகப்படுத்த..‘தேனாக மொழிபேசும் தமிழன்னை ஆணாகப் பிறந்ததுபோல் அமர்ந்திருந்த‘ கலைஞர்..

புருவம் தூக்கி புன்னகைத்தபடி ‘‘வாப்பா! நீதான் உதயசூரியனா?’’ என்றார்.

‘‘ஆமாங்க ஐயா!’’ என்றேன் பவ்யமாக. ‘‘எந்த ஊருப்பா?’’ என்றார் தன் உதடு வருடியபடி. ‘‘மதுரைங்க ஐயா’’ என்றேன். ‘‘உதயசூரியன்னு யாரோ புனைபெயர்ல எழுதறாங்கன்னு நெனைச்சேன். சின்னக்குத்தூசிதான் உன்னைப்பத்தி சொன்னாரு. நம்ம பேரை வெச்சுகிட்டு நம்மையே திட்டி எழுதறியேப்பா!’’ என்று சிரித்தார்.

அப்படியே பேராசிரியரிடம் டேபிள் மேலிருந்த ‘ஆனந்த விகடனை’ எடுத்து அந்த முதல் பக்கத்தை காட்டியபடி..என்னைப் பார்த்து ‘‘அந்த ‘சின்னம்மா‘ பாடற பாட்டை நையாண்டியா நல்லா எழுதியிருந்தேப்பா!’’ என்று பாராட்ட..‘‘உங்கள் வாழ்த்து எனக்கான பாக்கியம் ஐயா!’’ என்று நெகிழ்ந்து சொன்னேன். புன்னகையோடு கலைஞர் தலையசைக்க..பூரிப்போடு விடைபெற்றேன்.

இதுபோல கலைஞருடன் பல சந்திப்புகள், பேட்டிகள் என நிகழ்ந்ததும்..நான் மகிழ்ந்ததும் எனக்கான ‘கையடக்க வரலாற்றுப் பதிப்பின்’ கைதட்டல் பெறும் மதிப்பான பக்கங்கள்! இந்த வரிசையில் 2005ல் நிகழ்ந்த இன்னொரு அனுபவம்..

அப்போது நான் ‘குங்குமம்’ பொறுப்பாசிரியர். பிரபல யோகா

மாஸ்டரான டி.கே.வி.தேசிகாச்சார்..கலைஞரின் யோகா குரு! இவரது அமைப்பு நடத்திய விழாவில் ‘‘என்னை 82 வயது இளைஞன் என்றுதான் இன்றைக்கும் சொல்கிறார்கள். அதை நான் கிண்டலாக எடுத்துக்கொள்வதில்லை. உண்மையிலேயே இந்த யோகா

பயிற்சியால்தான் நான் இன்றளவும் இளைஞனாக இருக்கிறேன்!’’ என்று கலைஞர் பேசியதுதான் ஹைலைட்!

இதுபோதாதா? ‘கலைஞர் ஒரு எவர்க்ரீன் இளைஞர்‘ அல்லவா? இந்த வயதிலும் ‘செயல் புயல்’ போல இவ்வளவு சுறுசுறுப்பாக விறுவிறுப்பாக கலைஞர் செயல்படுவதைப்பற்றி ‘கலைஞரின் ஒருநாள்!’’ என்ற தலைப்பில் அவரது தினப்படி நிகழ்ச்சி நிரலை வசீகர நடையில் நான் எழுதியிருந்தேன்.

அன்று ‘முரசொலி’ அலுவலகம் வந்திருந்தார் கலைஞர். இந்த கட்டுரையை எடுத்துக்கொண்டு அவரை சந்திக்கச்சென்றேன். அன்று பார்த்து ‘கலைஞரின் நிழல்’ சண்முகநாதன் வரவில்லை. கலைஞரின் கூடுதல் செயலாளர் ராஜமாணிக்கம் ஐ.ஏ.எஸ். இருந்தார். அவரிடம் தகவலை சொன்னேன். சுடச்சுட கட்டுரையைப் படித்தவர் ‘‘உள்ளே வாங்க’’ என்று அழைத்துச்சென்றார்.

உள்ளே..கலைஞர் அமர்ந்திருக்க, எதிரே சின்னக்குத்தூசியார். வழக்கம்போல வணக்கம் வைத்தேன். சிரிப்போடு வரவேற்ற சின்னக்குத்தூசியார் ‘‘தம்பி

நம்ம உதயசூரியன்’’ என்று சொல்லி முடித்ததுமே..வெடித்தது கலைஞரின் சிலேடை விளையாட்டு! ‘‘நம்ம ‘சின்ன’ப்பையனை (சின்னத்தை சொல்கிறார்!) தெரியாதா?’’ என்று அவர் சொல்ல..அறையெங்கும் தெறித்தது சிரிப்பு நுரை!

அடுத்து என் முகக்குறிப்பை உணர்ந்து கலைஞர் சொன்னது..வெடிச்சிரிப்பை கிளப்பியது! அடுத்த பதிவில் அது...!

 
சுடச்சுட - by Templates para novo blogger