பொழுதுகளைக் களவாடிய டூரிங் டாக்கீஸ்

Thursday, January 19, 2012



எம்.பி.உதயசூரியன்

ஊருக்குக் கொஞ்சம் தள்ளி ஒரு வெட்டவெளியில்தான் டூரிங் டாக்கீஸ் இருக்கும். ‘டெண்டு கொட்டாய், கீத்துக்கொட்டகை’ என்ற செல்லப்பெயர்களும் உண்டு. கூப்பிடுதூரத்திலுள்ள அக்கம்பக்கத்து மக்களின் போக்கிடமும், பொழுதுபோக்கிடமும் இது ஒன்றுதான். ஒவ்வொரு சாயங்காலமும் கூரைக்கு மேல் கட்டியிருக்கும் டபுள் குழாய் ஸ்பீக்கரில் ‘விநாயகனே வினை தீர்ப்பவனே’ என்று சீர்காழியின் பாட்டு போட்டதுமே ‘ஆஹா...கொட்டாயில படம் போடப்போறாங்கப்பா’ என்று ஊர் மக்களுக்குள் ஓர் உற்சாகப் பரபரப்பு பற்றிக்கொள்ளும். அடுத்து ரெண்டு, மூணு பாடல்கள் ஓடி ‘கோடிமலைதனிலே கொடுக்கும் மலை எந்த மலை’ பாட்டு கேட்டதுமே ‘விறுவிறுவென ஜனம் டூரிங் தியேட்டருக்கு ஓட்டமும் நடையுமாக படையெடுக்கும். பாடலின் முடிவில் படுவேகமாக ஒலிக்கும் ‘பனியது மழையது நதியது கடலது’ வரிகள் வந்தால் போதும்... டிக்கெட்டை வாங்கிக்கொண்டு பாந்து செல்வார்கள். காரணம்- இந்தப் பாட்டு முடிந்ததுமே படம் ஓடத்தொடங்கும்.

அந்த நாட்களை இப்போது நினைத்தாலும் சிலிர்ப்பாகவும் இருக்கிறது...கொஞ்சம் சிரிப்பாகவும் இருக்கிறது. எங்கள் ஊரிலிருந்து 1 கி.மீ. தூரத்திலிருந்தது ‘பாண்டியன்’ டூரிங் டாக்கீஸ். லீவுக்கு மதுரையிலிருந்து அத்தை மகன்களும், பெரியம்மா பசங்களும் வந்துவிடுவதால் எங்களுக்கான ஒட்டுமொத்த ஜாலியும் ‘பாண்டியன்’தான். மதுரையில் பெரிய தியேட்டர்களில் 2 ரூபா 90 காசுக்கு படம் பார்த்த அவர்களுக்கு, வெறும் 25 காசில் டூரிங் டாக்கீஸில் படம் பார்த்தபோது ஏற்பட்ட பிரமிப்பை வார்த்தையில் சொல்ல வராது. அதோடு ஏகப்பட்ட பிரமிப்பும் உண்டு. அரை டிக்கெட்டுகளும், தரை டிக்கெட்டுகளுமாக சகலரும் சமத்துவமாக உட்கார்ந்து ரசிக்கும் மணல் தரை டிக்கெட் 25 காசுதான். ஃபர்ஸ்ட் கிளாஸ் டிக்கெட்டின் விலை 50 பைசா. சோல்வதற்கு மட்டுமே இது சோகுசாக இருக்கும். மற்றபடி ஒரு நீளமான மர பெஞ்ச்தான் ஃபர்ஸ்ட் க்ளாஸ். ஒரு ரூபாக்கு வி.ஐ.பி.டிக்கெட்டும் உண்டு. அதில் ஒரே ஒரு சேர் மட்டுமே இருக்கும். ஊர்ப்பெருசுகளுக்கு மட்டுமே இது ரிசர்வ் செயப்பட்டது. ஒரு படத்திற்கு நாலு இடைவேளை விடுவார்கள். ‘ஏன் இந்த ஊர்ல மட்டும் நாலு இடைவேளை விடறாங்க?’ என்றெல்லாம் ‘மதுரைப் பசங்க’ நிறைய கேள்விகள் கேட்பார்கள். அப்போதெல்லாம் ‘ரீல் மாத்தறாங்கப்பா’ என்று எங்கள் ஊர் சிறிசு, பெரிசுகள் சகஜமாகச் சொல்வார்கள்.

இரவு 7 மணிக்கு, பிறகு 10 மணிக்கு என ரெண்டு காட்சிகள் ஓடும். அதை ‘முதலாவது ஆட்டம், ரெண்டாவது ஆட்டம்’ என்று சொல்வார்கள். பிள்ளை குட்டிகள், பெண்கள் பெரும்பாலும் முதலாவது ஆட்டத்திற்கு வருவார்கள். வேலை வெட்டிக்குப் போவரும் ஆண்கள்தான் ரெண்டாவது ஆட்டம் போவார்கள். எம்.ஜி.ஆர்., சிவாஜி நடித்த பழைய படங்களை ‘மெருகு குலையாத புத்தம்புது காப்பி’ என்ற கவர்ச்சியான விளம்பரத்துடன் கலர்ஃபுல் போஸ்டர்கள் ஒட்டி ரசிகர்களை வலைவீசி இழுப்பது டூரிங் டாக்கீஸ்களுக்கே உரிய தனி சாமர்த்தியம். அதிலும் அந்த போஸ்டர் ஒட்டப்படும் வீட்டுச்சுவற்றின் சொந்தக்காரர்களுக்கு மட்டும் ஓசி பாஸ் கொடுக்கப்படும். அந்த பாஸுடன் சம்பந்தப்பட்ட வீட்டுக்காரர்கள் பகுமானமாக வருவதைப் பார்த்து... சுவரில்லாத சாமான்யர்கள் தங்களுக்குள் ‘கயா முயா’ என்று முனகிக்கொள்வதைக் கேட்க சுவாரஸ்யமாக இருக்கும்.

இப்படிப்பட்ட கலகலப்பான சூழலில் படம் பார்க்கும் அனுபவம் பரவசமானது. திரையில் படம் ஓட ஓட... தரையில் ஆங்காங்கே மணல் சீட்டுகள் உருவாகும். முன்னால் உட்கார்ந்திருப்பவரின் தலை மறைத்தால், அதை அட்ஜஸ்ட் செய்வதற்கேற்ற உயரத்தில் மணலைக் குவித்து மேடாக்கி உட்கார்வார்கள். இதனால், பின்னாலிருக்கும் இன்னொரு ரசிகர் அதைவிட உசரத்தில் மணல் சீட் போட்டு அசர வைப்பார். சமயங்களில் இந்த ‘மண்ணாசை’ ‘அந்நாட்டு மன்னர்களுக்குள்ளே’ சண்டை சச்சரவுகளில் முடிவதும் உண்டு. இதற்கிடையே சாப்பாட்டு தட்டு சைஸுக்கு ஒரு முறுக்கு விற்பார்கள். இந்த ‘மெகா முறுக்கு’ டூரிங் டாக்கீஸில் மட்டுமே மெல்லக்கிடைத்ததே தவிர, இன்றுவரை வேறெங்குமே கிடைத்ததாக யாருமே சொல்லக் கேட்டதில்லை.

‘வெள்ளிக்கிழமை விரதம்’, ‘ஆதிபராசக்தி’ ‘தெவம்’ போன்ற பக்திப் படங்கள் ஓடும்போது செம அமர்க்களமே நடக்கும். பக்திப் பரவசமான காட்சிகள் வரும்போது... பார்த்துக்கொண்டிருக்கிற பல பெண்களுக்கு திடீரென அருள் வந்துவிடும். அதுவரை அப்பிராணியாக பக்கத்தில் உட்கார்ந்திருந்த பெண்கள்...தடாலடியாக ‘டேஏஏஏஏஎ’ என்று பெருங்குரலெடுத்து சத்தமிட்டு, வெறித்த முழிகளோடு, நாக்கைத் துருத்திக்கொண்டு சாமியாடுவார்கள். அவ்வளவுதான்...அருள் குரல் கேட்ட அடுத்த நொடியே படம் நிறுத்தப்பட்டு லைட் போடப்படும். சுற்றியுள்ளவர்கள் சாமியை சாந்தப்படுத்த முயற்சி செய்வார்கள். அப்படியும் சாந்தமாகவில்லை என்றால், உள்ளூர் பூசாரி வந்துதான் வேப்பிலை அடித்து சாமியை மலையேறச் செய்வார். இதுபோல அடிக்கடி ‘சாமியாடல்கள்’ நடப்பதைப் பார்த்து உஷாராகி விட்டார் டாக்கீஸ் ஓனர். ஒருகட்டத்தில் பக்திப்படங்கள் போடும்போதெல்லாம் உள்ளூர் பூசாரிக்கு ‘ஸ்பெஷல் பாஸ்’ கொடுத்து வரச்சொல்லிவிட்டார். வழக்கம்போல பெண்களுக்கு சாமி வந்ததும், விபூதியும் பையுமாக ரெடியாக இருக்கிற பூசாரி, ‘சாமியை’ மந்திரித்து மலையேறச் செய்துவிடுவார்.

இந்த இடைவேளையில் சுடச்சுட முட்டை போண்டா, முறுக்கு, டீ, காபி யாவாரமும் சூடு பிடித்து, கேண்டீன்(?)காரர் செம லாபம் அள்ளுவார். படம் விட்டு பொடிநடையாக வீடு திரும்பும் மக்கள், மனசு விட்டுப் பேசி அரட்டை அடித்துச் சிரித்தபடி நடக்கும் காட்சி இன்னும் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது. எத்தனையோ டூரிங் டாக்கீஸ்கள் இன்றைக்கு கல்யாண மண்டபம், காம்ப்ளக்ஸ், ஃப்ளாட்டுகள் என்று அடையாளம் மாறிப் போனது போல, ‘பாண்டியன்’ டூரிங் டாக்கீஸ் இருந்த இடத்தில் இப்போது மர அறுவை மில் ஓடுகிறது.
.
இன்று சாதி, மத, அரசியல் என பல விஷயங்கள் மக்களை கூறு போடத் துடித்தாலும், அவர்களை ‘ஒரு தாய் மக்களாக’ அன்று ஒரே கூரையின்கீழ் ஒன்று சேர்த்து வைத்த பெருமை டூரிங் டாக்கீஸுக்கு உண்டு. அப்போதெல்லாம் டூரிங் டாக்கீஸுக்குள் முட்டை போண்டா விற்பவர் இப்படிக் கூவியழைப்பார்: ‘போனா வராது...பொழுதுபோனா கிடைக்காது’ என்று. என் பால்ய வயதில் டூரிங் டாக்கீஸ் தந்த சுகானுபவம் கூட அப்படித்தான். அன்றைக்குப் போன அந்தப் பொற்காலம் இனி வராது; விதவிதமாகப் பொழுது போனாலும் அந்த இனிமைகள் இப்போது கிடைக்காது.

நன்றி: ‘புதிய தலைமுறை’

எம்.ஜி.ஆர். என்ற அதிசயம்!

Friday, December 23, 2011




’’சட்டக்கல்லூரி மாணவனாக நான் இருந்தபோதே எம்.ஜி.ஆர்.மீது கொண்டிருந்த பெரும்பாசத்தை வெறும் வார்த்தைகளுக்குள் சொல்லிவிட முடியாதது. பிற்காலத்தில் அவரின் அன்புக்குரிய தம்பியாகி, அவரது பொற்கால ஆட்சியில் அமைச்சராகவும் நான் இருந்தது எனக்குக் கிடைத்த பாக்கியம்.

எம்.ஜி.ஆர். முதல்வர் பொறுப்பிலிருந்த காலகட்டத்தில்…தினந்தோறும் காலை டிபன் ராமாவரம் தோட்டத்தில்; மதிய உணவும் கோட்டையில் அவரது அறையில்தான். உண்ணுகிற நேரமெல்லாம்கூட ஏழை எளிய மக்களின் நலனையே எண்ணுகிற எம்.ஜி.ஆரின் அக்கறையை உடனிருந்து பார்த்து நெகிழ்ந்திருக்கிறேன். சத்துணவுத்திட்டம், இலவச வேட்டி சேலைத் திட்டம், இலவச காலணித் திட்டம்…இப்படி எத்தனையோ நலத்திட்டங்கள் அவரது பொன்மனத்திலிருந்து உருவானவைதான்.

ஒருமுறை திருச்சிக்கு எம்.ஜி.ஆருடன் காரில் பயணிக்கிறேன். வழியில் ஒரு ரயில்வே கேட். கார் நிற்கிறது. எம்.ஜி.ஆர். வந்த செய்தியறிந்து பக்கத்து வயல்களில் வேலை செய்து கொண்டிருந்த மக்கள் பறந்து வருகிறார்கள். அத்தனை பேரும் காரைச் சூழ்ந்து கொண்டு பாசத்தைக் கொட்ட… திக்குமுக்காடிப் போகிறார் எம்.ஜி.ஆர். ‘’எல்லாரும் நல்லா இருக்கீங்களா?’’ என்று அன்போடு விசாரிக்கிறார். பதிலுக்கு அந்த மக்களோ ‘’மகராசா…நீங்க நல்லா இருந்தாலே போதும், நாங்க நல்லா இருப்போம்’’ என்று அந்த உழைக்கும் மக்கள் கையெடுத்துக் கும்பிட்டுச் சொல்ல…அவர்கள் அத்தனை பேரின் கைகளைப் பற்றிக்கொண்டு நெகிழ்ந்து போகிறார் எம்.ஜி.ஆர். கார் நகர்கிறது. சில நிமிடங்கள் மௌனமாக வந்த எம்.ஜி.ஆர். உருகிப்போய் சொன்னார்: ‘’ நான் நல்லா இருந்தாலே தாங்களும் நல்லா இருப்போம்னு சொல்ற இந்த மக்களுக்கு நான் என்ன கைமாறு செய்யப்போறேன்!''

மக்கள் தன் மீது காட்டிய பாசத்தைப் போலவே, மக்கள் மீது அவர் காட்டிய அன்பையும் அக்கறையையும் நேரில் பார்த்தேன். அவரது ஆட்சியின்போது ஒருமுறை ராமேஸ்வரத்தில் கடுமையான புயல் மழை. குடியிருப்புப் பகுதிகளில் பலத்த சேதம். தகவல் கிடைத்ததும் உடனே பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்றார் எம்.ஜி.ஆர். அவருடன் நானும். சேறும் சகதியுமாக நீரோடிய வீதிகளில், கண்ணீரும் கம்பலையுமாக நின்றிருந்தனர் மக்கள். அவர்களைப் பார்த்ததுமே காரிலிருந்து இறங்கிய எம்.ஜி.ஆர். கொஞ்சம்கூட யோசிக்காமல் வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு முழங்கால் அளவு தண்ணீரில் நடக்க…பதறிப்போன மக்களோ ‘அய்யா, எங்களுக்கு ஒண்ணும் பிரச்னையில்ல, உங்களப் பாத்ததே போதும், சகதியில நடக்காதீங்க’’ என்று தடுத்தும் கேளாமல், அவர்களது அருகில் போய் ஆறுதல் கூறினார். அதேஜோரில் மின்னல் வேகத்தில் நிவாரணப்பணிகளுக்கும் உத்தரவிட்டார். மக்களின் குறைகளை கோட்டையில் உட்கார்ந்து கேட்டவர் அல்ல…தெருவுக்கே வந்து தீர்த்து வைத்தவர் எம்.ஜி.ஆர்.

கட்சித்தலைவராக தொண்டர்கள் மீது அவர் கொண்டிருந்த பற்றை சொல்லித்தீராது. கட்சியில் சின்ன ஆள், பெரிய ஆள் என்றெல்லாம் பேதமே பார்க்க மாட்டார். புதுக்கோட்டைப் பகுதியில் இரண்டு தொண்டர்கள் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் சேர்ந்து விட்டனர். உள்ளூர் பத்திரிகையில் இது சில வரிச் செய்தியாக வெளியானது. இந்தச் செய்தி எம்.ஜி.ஆரின் கவனத்திற்குப் போனதுமே எனக்கு ஃபோன் செய்து விசாரித்தார். அப்போது நான் கோவையில் இருந்தேன். ‘’அவங்க ரெண்டு பேருமே அடையாளம் தெரியாத நபர்கள்’’ என்றேன். உடனே எம்.ஜி.ஆர்.’’அப்படிச் சொல்லாதீங்க. கட்சியிலேர்ந்து யாரையுமே நான் இழக்க விரும்பலை. நீங்க ஊருக்குப் போனதுமே அவங்க ரெண்டு பேரையும் திரும்பவும் கட்சியில சேர்த்துடணும். அந்தச் செய்தி அதே உள்ளூர் பேப்பர்ல வரணும், அதை முடிச்சிட்டு என்னை வந்து பாருங்க’’ என்றார் அழுத்தமாக. அவர் சொன்னதை அப்படியே செய்து முடித்தேன். அந்தத் தொண்டர்களுக்கோ பூரிப்பு தாங்கவில்லை. அப்புறம்தான் அவரைப் பார்த்தேன். என் கன்னத்தில் செல்லமாகத் தட்டிச் சிரித்த அந்தச் சிரிப்பிருக்கிறதே…அவர்தான் எம்.ஜி.ஆர்.!

முதல்வராக ஆட்சிப்பொறுப்பேற்ற நாள்முதல் அவர் அமரராகும் வரை…அந்த 11 ஆண்டுகளில் 1 சென்ட் நிலமோ அல்லது வீடோ..இந்தத் தமிழ்நாட்டிலோ, வேறெந்த மாநிலத்திலோ அவர் வாங்கியது கிடையாது. அதேசமயம் திரையுலகில் இருந்தபோது தான் சம்பாதித்த சொத்துக்களை மாற்றுத் திறனாளிக் குழந்தைகளின் நலனுக்கும், கட்சிக்கும் என தமிழக மக்களிடமே திருப்பிக் கொடுத்து லட்சக்கணக்கான மக்களின் இதயங்களில் அவர்போல இடம் பிடித்தவர் வேறு யாரும் கிடையாது. ஏனெனில் தான் சம்பாதித்த மாபெரும் சொத்து மக்கள் செல்வாக்கு என்பதைத்தான் அவர் மதித்தார், அதில் துளிகூட கீறல் விழாமல் கடைசிவரை காத்தார்.

இதற்கு உதாரணமாக ஒரு சம்பவம்…எம்.ஜி.ஆருடன் காரில் செல்கிறேன். சாலையில் இருபுறமும் திரண்டிருந்த மக்கள் ’’தலைவா வாழ்க! எம்.ஜி.ஆர். வாழ்க’’ என்று கோஷமிடுகிறார்கள். இதைப் பார்த்த எம்.ஜி.ஆர். என்னிடம் ‘’எல்லாருமே எம்,ஜி,ஆர், வாழ்க’ன்னுதானே வாழ்த்தறாங்க. ஒருத்தர்கூட ‘முதலமைச்சர் வாழ்க’ன்னு சொல்லலை. ஏன் தெரியுமா?’’ என்று கேட்டார். ‘’ உங்க மூன்றெழுத்துப் பெயர்தான் அவங்களுக்கு மந்திரம் மாதிரி. அதனாலதான்’’ என்றேன். ‘’அதுமட்டுமல்ல, முதலமைச்சர் வாழ்கன்னு சொன்னா அது பதவியை வாழ்த்தற மாதிரி, எம்.ஜி.ஆர். வாழ்கன்னு சொன்னாதான் அவங்களுக்கு என்னை வாழ்த்தற திருப்தி. இதுதான் நான் சம்பாதிச்ச சொத்து. இதைத்தான் நான் பத்திரமா காப்பாத்தியாகணும்!’ என்றார்’. இறுதிவரை சொன்னது போலவே நின்றார்.

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் சென்னை வருகை தந்தபோது முதல்வர் எம்.ஜி.ஆரை கோட்டையில் சந்தித்தார். இருவரும் உற்சாகமாக உரையாடினார்கள். சந்திப்பு முடிந்து இளவரசரை ஆளுநர் மாளிகைக்கு திரும்ப அழைத்து வருகிறேன். அப்போது சார்லஸ் என்னிடம் ‘’எம்.ஜி.ஆரின் பின்னணி என்ன? இவர் ராஜகுடும்பத்தைச் சேர்ந்தவரா?’’ என்று வியப்போடு விசாரிக்கிறார். நான் அவரது குடும்பப்பின்னணி பற்றி விவரித்தேன். ஆனாலும் ஆச்சரியம் விலகாமல் சார்லஸ் சொன்னார்: ‘’ஒருவேளை போன பிறவியில் இவர் அரசராக இருந்திருக்கலாம்!’’. அப்படியே நான் மெய்சிலிர்த்துப் போய்விட்டேன். தமிழக மக்கள் மட்டுமல்ல…உலகையே ஆண்ட அரச குடும்பத்தின் இளவரசர்கூட, நம் எம்.ஜி.ஆரைப் பார்த்து ‘அரசர்’ என்று வியக்கிறாரே…அந்த அதிசயம்தான் எம்.ஜி.ஆர்.!

தகவல்: சு. திருநாவுக்கரசர் ( முன்னாள் அமைச்சர் )
எழுத்து: எம்.பி. உதயசூரியன்

நன்றி: புதிய தலைமுறை

’அவன் இவன்’ தெரியுமா?

Saturday, February 19, 2011







’சதக் சதக்’ கரு.பழனியப்பன்

செல்லோ, மெசேஜோ செல்லமாக ‘டேய்’ என்றுதான் அழைப்பான் கரு.பழனியப்பன். பிப்.13ம் தேதி இரவு விஜய் டிவி ‘நீயா நானா’வில் இயக்குநர் கரு.பழனியப்பனைப் பார்த்தேன்.
அப்போதுதான் குளிச்சுட்டு வந்தவன்போல் பளிச்சென்று இருந்தான். என் அன்பு நண்பன். ஆகவேதான் ‘அவன்’. அன்று காதல் பற்றிய விவாதம். எப்போதுமே கரு.பழனியப்பன் பேச்சு ‘சதக் சதக்’ என்று தைக்கும். அன்றும் அப்படித்தான். ‘காதலில் பித்து அதிகம்தான். ஆனால் அதையும் ரசிக்கணும்’ என்றவன் அடுத்து சொன்ன ‘சதக்’...’’மூன்றாம்பிறை’ படத்துல க்ளைமாக்ஸ். ஸ்ரீதேவி ரயிலில் கிளம்பறாங்க. கமல் தன் தலையில குடத்தை வெச்சு, குரங்கு ஜாடை காட்டி, குட்டிக்கரணம் அடிச்சு. விளக்குக் கம்பத்துல முட்டி விழுகறதை பாத்து நாமெல்லாம் கண்கலங்குனோம். ஆனா அது தேவையே இல்லை. ஹீரோயின்
ரயில்லதானே போறா...அதே ரயில்ல ஏறி அடுத்த ஸ்டேஷன்ல அவகிட்ட போய் நடந்ததைச் சொல்லிரலாமே. ஆனா கமல் அப்படி தவிக்கற அந்தப் பித்தைத்தான் நாம ரசிக்கிறோம்’ என்று ’சதக்’க...அரங்கமே கிறங்கி ரசித்தது. பழனி மதுரைக்காரன். 1991ல் பைக் விபத்தில் பழனியப்பன் அடிபட்ட சமயம்...விகடன் மாணவப் பத்திரிகையாளர் தேர்வு நடந்தது. உடம்பில் முக்கால் சதவீத பேண்டேஜ்களோடு முக்காமல் முனகாமல் வீல்சேரில் வந்து தேர்வெழுதி நிருபரான இந்தப் படுபாவியின் அசகாயசூரத்தனத்தை மீனாட்சி அறிவாள்...
கெக்கெக்கே...’மந்திரப்புன்னகை’ நாயகி அல்ல!

’குணா’ச்சித்திர நடிகர்

உணர்வில்...சிவாஜி குழைவு, எம்.ஜி.ஆர்.விளைவு - ரெண்டும் கலந்த ’கவலை’ குணா. உருவத்தில்...கொஞ்சம் ரஜினி, கொஞ்சம் வைரமுத்து- இருவர் கலந்த கலவை இதே குணா. பத்திரிகையாளர். அபாரமான பாடகன். நெருங்கிய நண்பன். ஆகவேதான் ‘இவன்’.பாட ஆரம்பித்தால்...இவன் குரலில் பாகவதர், டி.எம்.எஸ்., நாகூர் அனிபா ஆகியோர் முகம் காட்டி சுகம் ஊட்டுவார்கள். பாசம் வந்தால் மடியிலேறி சாய்வான். ரோஷம் வந்தால்
மாடியிலிருந்தே பாய்வான். (குணாவை வைத்து ஒரு அட்டகாசமான கேரக்டரை பொட்டலம் கட்டி வைத்திருக்கிறேன். அது தனிக்கதை) சுமோ சீறிப்போனாலே எமோஷனலாகிற குணாவை ‘பதினாறு’ படத்தில் கமுக்கமாகக் குமுறும் பெருசு ரோலில் நடிக்க வைத்துவிட்டார் டைரக்டர் எஸ்.டி.சபா. யம்மா...சும்மா சொல்லக்கூடாது, கலங்கடித்து விட்டான் குணா! படத்தில் ஒரு நடிகன் அழும்போது, பார்க்கிற ரசிகனும் கண்கசிந்தால் அதுதான் குணச்சித்திர நடிப்பு. ’பதினாறில்’ ஒரு காட்சியில்...மனசுக்குள் பொத்திவைத்த கத்தியாக குத்திக்கிழித்த சோகமும் மானமும் கலந்து வெடிக்க, அக்காவின் காலில் விழுந்து குணா அழும்போது விசும்ப வைத்துவிட்டது ‘குணா’ச்சித்திர நடிப்பு. இனி துணிஞ்சு வேலையை ரிசைன் பண்ணலாம்...பயப்படாத குணா! நீ அல்ல, அந்தணனும், சக்திவேலும் அப்புறமா நானும். ‘கால்ஷீட் மேனேஜர்’ வேலை கைவசம் இருக்கப்பு!

அண்ணனுடையான் படைக்க அஞ்சான்

Saturday, January 22, 2011






பல்லாண்டு கால பொல்லாத சோம்பேறித்தனம் அது. இவ்வாண்டு வீம்பேறி எழுந்து
அதை விரட்டி அடித்துவிட்டேன். சந்தித்ததும், சிந்தித்ததுமாக எத்தனை மனிதர்கள்...எவ்வளவு அனுபவங்கள். பத்திரிகை பரபரப்பில் ஓடிக்கொண்டே இருப்பதால் தனித்திறமை காட்டி படைத்திட நேரமில்லாமல் இருந்தது. நல்லவேளையாக...கொஞ்சகாலத்திற்கு முன் டூவீலருக்குக் குறுக்கே
கறுப்பு நாய் ஒன்று ‘வீல்’ என்று ஓடியது; அந்தர்பல்டி அடித்து நச்சென்று வீழ்ந்து சிவப்பு ரத்தம் சிந்தினான் இந்த பச்சைத்தமிழன் (கலர்ஃபுல் ரைட்டப்பு?). ஒருமாத கால ‘பெருங்காய’ ஒய்வு. என்ன செய்வான் ஒரு ஏழை இளைஞன்?

இஷ்டப்பட்டேன்...சிஸ்டம் தொட்டேன். விறைப்பான, முறைப்பான பலப்பல பிரபலங்களை பேட்டிக்காகவும், நட்புக்காகவும் சந்தித்தபோது ஏற்பட்ட ‘கலகல’ அனுபவங்களை எனது வலைப்பூவில் ‘சுடச்சுட’ பந்தி வைத்தேன். ரசித்து ருசித்த உலகத்தமிழர்கள் உச்சிமோந்து மெச்சினர். அவற்றைத் தொகுத்து ‘சாக்லெட் சந்திப்புகள்’-(பிரபலங்களுடன் ‘கலகல’
அனுபவங்கள்) என்று நூலாக்கினேன். அதேஜோரில் ’திடுக்’கிட வைக்கும் சம்பவங்களைத் தொகுத்து ‘அட!’(வித்தியாச மனிதர்கள் வியப்பான அனுபவங்கள்) என்ற தலைப்பில் இன்னொரு நூல். ரெண்டு நூல்களுக்கும் ’பிள்ளையார் சுழி’ போட்ட ’மாப்பிள்ளை’இரா.த.சக்திவேல் மூலம் ( கோச்சுக்காத மாப்ள, ‘அதை’ சொல்லல!) பாசத்திற்குரிய மீசைக்கார அண்ணன் ’நக்கீரன் கோபால்’அவர்களது பார்வைக்குப் போனது. வாயாரப் படித்து வாய்விட்டுச் சிரித்த அண்ணன் ரெண்டு புத்தகங்களையும்
’நக்கீரன் வெளியீடுகளாக’வெளியிடச் சொன்னார்.

‘ப்ரூஃப்’பார்ப்பதிலிருந்து ஃபுல்ஸ்டாப்’ போடுவதுவரை ’புல்லட் ப்ரூஃப்’ போடும் அளவிற்கு தோட்டா ஸ்பீடில் கேட்டு ‘அச்சா’ என்று பாராட்டும்படி நூலை அச்சாக்கத் துணையிருந்த ’நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்’ சகோதரர் பரமேஷ்வரனுக்கு நன்றி சொல்லித்தீராது. இதேவேளையில் இரா.த.சக்திவேல் எழுதிய ‘ச்சீய்’ கவிதைகள்,
‘பாலாவின் படைப்புலகம்’,‘புலிகேசியான புண்ணாக்கு’மற்றும் ஆர்.எஸ்.அந்தணன் எழுதிய ‘பாரதிராஜா முதல் சசிகுமார் வரை’நூல்களும் ரெடியாக இருக்க...இவற்றோடு எனது இரு நூல்களும் அணிவகுக்க...சகாக்களோடு சேர்ந்து
ஆரம்பமானது ஒரு புதிய சகாப்தம். படைப்புலகத்திற்கு இந்த அணி ஆற்றிய தொண்டால், மூவரது ஃபோட்டோக்களையும் போட்டு புத்தகக்காட்சியில் ரெண்டாள் உசரத்திற்கு பேனர் வைத்து அசரடித்ததைக் கண்டு தமிழ்க்கன்னி பெருமகிழ்ச்சி கொண்டாள்.

அந்த பேனரை அன்புத்தம்பி அறிவழகன் ஃபோட்டோ எடுத்துத் தந்தான். அட்டகாசமாக இருந்த பேனரில் எனது ‘அட’ புத்தகத்தின் அட்டையை ஜூம் செய்து பார்த்தபோது வாடிப்போனேன். காரணம்-மண்ணு மணக்கிற சம்பவங்களும், மனிதர்களும் அடங்கிய அப்புத்தகத்தின் அட்டையில், இரு வெளிநாட்டு முகங்கள் அலங்கரித்தன. ‘அய்யோ மாப்ள, அட்டை நல்லா இருக்கு, ஆனா சப்ஜெக்ட்டுக்கு பொருத்தமா இல்லியே’என்று அலறியடித்து சக்தியிடம் சொன்னேன். கிளறிக் கிளறி அவர் விசாரிக்க கிட்டத்தட்ட கண்ணீர் சொட்டிவிட்டேன். ‘சரி, அண்ணன்கிட்ட பேசறேன்’ என்று சக்தி சொன்ன அதேநேரம்...நக்கீரன் கோபால் அண்ணன் புத்தகக் காட்சி விழாவில் இருந்தார்.

வாடிப்போன முகமும், வதங்கிப்போன மனசுமாக உதடு பிதுங்கிபோய் நானிருக்க...’பாஞ்சு நிமிஷத்தில்’சக்தி பாஞ்சு வந்தார் செல்லில். “உதயா, அண்ணன்கிட்ட சொன்னேன். அண்ணனும் பேனரைப் பாத்து அப்படியேதான் ஃபீல் பண்ணியிருக்கார். ‘புத்தகம் அந்த அட்டையோட ஸ்டாலுக்கு போகாது. புது அட்டை பிரிண்ட் பண்ணிரலாம். தம்பியை கவலைப்பட வேணாம்னு சொல்லுங்க’ என்ற ’அண்ணனின் குரலை’ அப்படியே சக்தி ஒலிக்க , ஏற்கனவே கசிந்த கண்ணீர் நக்கீரன் கோபால் அண்ணனின் மின்னல்வேக ஆக்‌ஷனால் இப்போது ஆனந்தக்கண்ணீராக வழிந்தது.


நம்புங்கள் நண்பர்களே, அடுத்து நடந்தது ‘அண்ணனுக்கே உரிய அதிரடி அதிசயம்’. பழைய அட்டைக்கு மாற்றாக கைவசம் தயாராக இருந்த மூன்று அட்டைப்பட டிசைன்களை பரமேஷ்வரனுக்கு அனுப்பி வைத்தேன். பட்டை கிளப்பும் பத்திரிகை, பப்ளிகேஷன் பரபரப்புகளுக்கு நடுவே ’ஒரு அட்டை மேட்டர்தானே’ என அண்ணன் சட்டை செய்யாமல்
விட்டிருக்கலாம்தான்...ஆனால் ‘அட்டைப்பட சக்கரவர்த்தி’ அவர் என்பதால், இந்த ‘அட’ அட்டையிலும் அபார அக்கறை காட்டி, அட்டகாசமான அட்டைப்படம் ஒன்றை தேர்ந்தெடுத்து அச்சுக்கு அனுப்பியிருக்கிறார். முதல்நாள் மதியம் அனுப்பிய அட்டை அச்சாகி, புத்தகத்துடன் பைண்டிங் ஆகி மறுநாள் மதியமே புத்தகக் காட்சியில் ’நக்கீரன் ஸ்டாலில்’
இடம்பிடித்தது என்றால், ’படைப்புகள்மீது காட்டும் அக்கறையில் அவருக்கு நிகர் அவரே’ என்பதுதான் அண்ணனுக்கான பெரும்புகழ். ‘தம்பியுடையான் படைக்கு அஞ்சான்’- இது அண்ணனுக்கான பொன்மொழி. ‘அண்ணனுடையான் (புத்தகம்) படைக்க அஞ்சான்’- இது அண்ணனுக்கான என்மொழி.

ஜனவரி 13ம் தேதி. மாலை 4 மணி. சென்னை புத்தகக்காட்சி ‘நக்கீரன் ஸ்டால்’. நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் வெளியிட்ட நூல்களின் ஆசிரியர்களுக்கு அண்ணன் நக்கீரன் கோபால் அவர்கள் பொன்னாடை போர்த்தி, படைப்புக்கான காசோலை வழங்கி கௌரவிக்கும் நிகழ்ச்சி. தீட்டி வைத்த ஈட்டி போல உடற்கட்டும், போர்வாளாக மிரட்டும் மீசையும், வாயாரச் சிரிப்புமாக
நின்றிருந்தார் அண்ணன். அத்தனை படைப்பாளிகளையும் அன்போடு வரவேற்றார். ‘தம்பி உதயா’ என்று பாசத்தோடு அழைத்த அண்ணனின் வெற்றிக்கரங்களை அன்போடு பற்றி முத்தமிட்டு வணங்கினேன். ‘சாக்லெட் சந்திப்புகள்’ நூல் பற்றி இனிப்பாகப் பாராட்டி ஒரு குழந்தையைப் போல் ரசித்துச் சிரித்தார். சாதனை இயக்குநர் மகேந்திரன் தொடங்கி இரா.த.சக்திவேல்,ஆர்.எஸ்.அந்தணன் என எங்கள் அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி, காசோலையும், அன்பளிப்பும் வழங்கி கௌரவித்தார் அண்ணன். ஆகமொத்தம்...அங்கு கிடைத்த அண்ணனின் பாராட்டு மூலம் தமிழ்ப்படைப்புலகை அங்குலம் அளவாவது தரம்
உயர்த்துவதே நக்கீரன் பதிப்பகத்திற்கு படைப்பாளர்கள் செய்யும் பெருமை; கடமை!

ஒரே ஒரு ஊர்ல ரெண்டே ரெண்டு பேரு!

Monday, August 9, 2010





எம்.பி. உதயசூரியன்

அக்கம்பக்கம் யாருமில்லை. பேச்சுத்துணைக்கு ஆளுமில்லை. சுத்துப்பட்டு 3 கி.மீ. தூரத்திற்கு
மனித நடமாட்டமே இல்லை. அப்படிப்பட்ட ஒரு அத்துவான ஊரில் ஒத்தை வீட்டில்
இருந்தபடி வாழ்க்கையின் கடைசிநாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார்கள் ஒரு வயோதிகத் தம்பதி.வழியும் கண்ணீரும் வறண்டு போகுமளவிற்கு, ஆறாத காயமும் தீராத வலியும் கொண்ட அந்தப் பெருசுகளின் கதையை கமுக்கமாக வைத்திருக்கிறது கரிசல்குளம் கிராமம்.திருநெல்வேலி டூ மதுரை நெடுஞ்சாலையில் அரைமணிநேரம் பயணித்தால் எதிர்ப்படும் பஸ் ஸ்டாப் கங்கைகொண்டான். இங்கிருந்து ’பொசுக்’கெனக் கோபித்துக்கொண்டு இடதுபுறமாகப் பிரிகிறது ஒரு தார்ச்சாலை. போக வர யாருமில்லாமல், போக்குவரத்து ஏதுமில்லாமல் இருக்கும் சோகப்பாதை இது என்பதற்கு நடுரோட்டில் முளைத்துப் படர்ந்திருக்கும் முள்செடிகளே சாட்சி. ஓங்கி வளர்ந்த பனைமரங்களின் ஓலமும், தாங்கிவந்த சோகத்தைச் சொல்ல வார்த்தையின்றி காதோரம் விசும்புகிற காற்றுமாக கனமான துக்கத்தை வழிநெடுக அனுஷ்டிப்பது போலிருக்கும் அந்த கறுப்புச்சாலையில் சில கி.மீ. தூரம் சென்றால்...
‘கரிசல்குளம் சாலை’ என்று ஒரு போர்டு வலதுபுறம் நம்மை வழியனுப்புகிறது.

இன்னமும் புத்தம்புதுசாகவே இருக்கும் அந்த ரோடு ‘திடுக்’கென ஓரிடத்தில் முடிந்து விடுகிறது. சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து நிற்க, அதனுள்ளே... சிதைந்த வீடுகள் புதைந்து கிடக்க, இடிந்து சரிந்த பீடமும், எரிந்து கருகிய உத்திரங்களும் ‘அன்று நடந்த பெருங்கலவரத்தின் மிச்சம் மீதி இதுதான்’ என்ற பீதியைத் தந்தன. ஒருகாலத்தில் நாள்முச்சூடும் தண்ணீர் சேந்திய ஊர் முச்சந்தியில் இருக்கும் கிணறு இன்று சீந்துவாரின்றி பாசிபடிந்து கிடந்தது. தெருவுக்குள் போகும் பாதையை மறித்துக் கிடந்தது முள்வேலி. அதைக் கடந்து உள்ளே நடந்து போனால்...நடுவே தெரு, இருபுறமும் காரைவீடுகள் என பாழடைந்து காணப்பட்டன. ஓரிடத்தில் சின்ன சின்ன பொம்மைகள், தட்டுகள் சிதறிப் போய் கிடந்தன. அல்லு சில்லுகள் ஓடி விளையாடிய அந்த இடமெல்லாம் இப்போது முள்ளு முளைத்து
விட்டது. மர்மமாக நின்றிருந்தன நாலைந்து மின்கம்பங்கள்.
காதுகளைக் கிழிக்கிற காற்றும்,பனையோலைகளின் சலசலப்பும், பலவித பூச்சிகளின் சப்தமும் அமானுஷ்ய உணர்வை ஏற்படுத்த...உடன்வந்த புகைப்படக்காரர் கலீல் ஒருகட்டத்தில் ‘இங்க மனுஷங்க இருக்குறதுக்கான அறிகுறியே இல்லையே’ என்றார் லேசான பயத்துடன். நமக்கும் அதே சந்தேகம் வர ’’அய்யா...அய்யா’ என்று குரல் கொடுத்தோம். ம்ஹும். நிசப்தம். தெருவின் கடைசிமுனையில் ஒரு மெச்சுவீடு மட்டும் சமீபத்திய வெள்ளையடிப்பால் ‘பளிச்’சென்று தெரிந்தது. அங்கு சென்று மீண்டும் குரல் கொடுக்க...பதிலுக்கு ’’ஆருய்யா?’’என்று மெல்லிசான குரல் கேட்டது. ‘சட்’டென அந்த நொடியில் நமக்குள் ஒரு
சிலிர்ப்பு. உடனே வீட்டின் முன்புறம் போனோம். அங்கே...இற்றுப்போன கயிற்றுக் கட்டில் மீது வெற்றுடம்போடு ஒரு வயசாளி மனுஷன் உட்கார்ந்திருந்தார். ’’வாங்கய்யா, ஆளரவமில்லாத ஊர்ல இருக்கற இந்த அனாதைகளைப் பாக்க வந்துருக்கீகளே’’என்று வாயார வரவேற்றார். நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு, கையோடு கொண்டுபோயிருந்த பழங்களைத் தந்தோம். சந்தோஷமாக வாங்கியவர்,‘’எம்பேரு ராமசுப்பு. வயசு 90 ஆச்சு. என் வீட்டாளு பேரு கருப்பாயி. அதுக்கு வயசு 70. காலம் போன கடைசியில ‘ஒனக்கு நான் எனக்கு நீ’னு ரெட்டை உசுரா வாழ்ந்துகிட்டிருக்கோம். என்ன...இந்த இளைப்புதான் தீரலை’’- சொல்லிவிட்டு ‘ம்க்ர்ம்’ என்று இருமிச் செருமியபடி ‘’அதாச்சு பதினாலு வருஷம்’’ என ஆரம்பித்தார்...

”1995ம் வருஷம் வரை சண்டை சச்சரவு இல்லாம ஒத்துமையா இருந்த ஊருய்யா இது. கீழத்தெருவுல நாங்களும், மேலத்தெருவுல அவங்களும் இருந்தோம். மொத்தம் நூத்தம்பது குடும்பம். எல்லாருக்கும் வெவசாயம்தான் பொழப்பு. காடுகரையில பொழுதுக்கும் பாடுபட்டாதான் சோறு. நிலைமை இப்படியிருக்க எங்க சாதிப் பொண்ணை, மேலத்தெருவுக்கார வேற சாதிப் பையன் காதல்கல்யாணம் பண்ணிகிட்டான்.
இனம் இனத்தோட, ஜனம் ஜனத்தோட இருந்தாத்தான மரியாதை. அதை இந்த ஜோடி கெடுத்துருச்சு.இதனால ரெண்டு சைடுக்கும் உள்மனசுல புகைச்சல். 96ல் அசலூர்ல இருந்து வந்த ஒரு வெட்டிப்பய ஊதிவிட, வந்தது வெனை. மூணு தலக்கட்டா தாயிபுள்ளைகளா வாழ்ந்தவங்களுக்குள்ள சாதிச்சண்டை உண்டாகி வெட்டிகிட்டாங்க. எங்க பய ஒருத்தனோட தலையை துண்டாக்கிட்டாங்க அவங்க ஆளுங்க. பழிக்குப் பழியா எங்க பசங்களும் வெறி கொண்டு கெளம்ப...வெட்டு, குத்து, வீடுகளுக்கு தீவைப்புனு ரெண்டு தரப்புலயும் பயங்கர கலவரம், ஏகப்பட்ட சேதாரம். ஒண்ணுமண்ணா இருந்தவங்க ஒருத்தரை ஒருத்தர் கொன்னாதான் ஆச்சுன்னு நின்னாங்க. பத்து வெரலுக்குள்ள சண்டை வந்து ரெண்டு
கையும் நாசமா போனமாதிரி போச்சுய்யா இந்த ஊரு...’’- மனசில் மறைந்து கிடக்கும்
துயரம் பெரியவரின் பேச்சில் உறைந்து நிற்கிறது.


அப்புறம்? “இனி இந்த ஊருல காலந்தள்ள முடியாதுன்னு ரெண்டு தெருவுக்காரங்களும் ஊரைவிட்டே காலி பண்ணிப் போயிட்டாங்க. உசுருக்குப் பயந்து எம் பசங்க என்னையும், என் வீட்டாளையும் (மனைவி) பக்கத்து ஊருக்கு இழுத்துட்டுப் போனாங்க. போன மறுநாளே என் வீட்டாளை அந்த ஊரானுங்க ‘வந்தேறிக’ன்னு ஏசிப்புட்டானுக. வந்ததே கோவம். “சொந்த ஊரைவிட்டுப் போனதுக்கு இந்த அவமானம் தேவைதான்’னு நாங்க ரெண்டு பேரும் ஆனது ஆகட்டும்னு இங்கியே வந்துட்டோம். ரெண்டு தரப்புலயும் ரத்தவெறி அடங்காத நேரம் அப்போ.
யார் உசுருக்கும் உத்தரவாதம் கெடயாது. எம் மகனும், மகளும் வந்து எம்புட்டோ கெஞ்சி கூப்புட்டுப் பாத்தாங்க. நகரமாட்டேன்னுட்டோம். இன்ஸ்பெக்டர், பிரசிடெண்ட்லாம் வந்து ‘’உனக்கு ஏதாச்சும் ஒண்ணுன்னா நாங்கதான பதில் சொல்லணும், கெளம்புங்க’ன்னாங்க. “பொறந்து வளர்ந்த ஊரை விட்டுப் போறதுன்னா செத்த பெறகுதான் போவோம். உசுரோட இருக்கறப்போ எப்படிப் போகமுடியும் எசமான்?’னு கிடுக்கிப்பிடி போட்டேன். ’பொல்லாத
கெழவருப்பா’னு என் வைராக்கியத்தை பாராட்டிட்டுப் போயிட்டாங்க” - தனது நரைத்த
முறுக்கு மீசையை திருகிவிட்டு இருமியபடி சிரித்தவர், ‘’ஆனா எனக்கு சரிசமானமான தெகிரியசாலி என் வீட்டாளு. ‘உன் உசுருக்கு நான் ஜவாப்தாரி’ன்னு சொன்னதுக்கு, ‘எமனே வந்தாலும் என்னைத் தாண்டிதான் உன்னைத் தொடமுடியும்யா’னு நின்னவ அவ!” என்று பெருமிதப்பட்டார். தற்காப்புக்காக அப்போது வைத்துப் பழகிய அருவாள், இப்போதும் பழக்கதோஷத்தில் பெரியவரின் கட்டிலின் கீழேயே கிடக்கிறது.

”ஆமா, அம்மா எங்கேய்யா?” என்றோம். உடனே கட்டிலிலிருந்து இறங்கி, வீட்டு வாசலைத் தாண்டி நின்று, எதிரே கூப்பிடு தூரத்திலிருக்கும் தோட்டத்தை நோக்கி “எலே கருப்பி’என்று குரல் கொடுத்தார். “தோ வாரேன் மாமோய்’’ என்று பதில் குரல் கேட்டதுமே, பெரியவர் “எங்கன இருந்தாலும் என் சத்தம் கேக்கற தூரத்திலேயேதான் இருப்பா. இந்த இளைப்பு வந்து நாந்தான் தளர்ந்துட்டேன். அவ இன்னும் சுறுசுறுப்புல கொமரிகணக்கா இருப்பா” என்று பூரித்துச் சிரித்தார். அடுத்த சிலநிமிடங்களில் ஓட்டமும் நடையுமாக வந்து சேர்ந்தார் கருப்பாயி. வறுமைக்கோலத்திலும் உழைப்பின் சின்னமாகத் தெரிந்தார். “கண்டுக்க ஆளில்லாத
எங்களை கண்காணா தூரத்திலிருந்து பாக்க வந்துருக்கீகளே ராசா” என்று வாஞ்சையாகப் பேசினார்.

பையிலிருந்த ரேசன் அரிசியைக் காட்டி “இன்னிக்கு கஞ்சிக்கு இதுதான் ராசா. ஒரு டம்ளர் அரிசி, கொஞ்சம் பருப்பு போட்டா சோறு, கொளம்பு ரெடி. ஆனா இவருக்கு மட்டும் டெய்லி ஒரு பீடிக்கட்டு வேணும். அதான் இவருக்கு பிரியமானது” என்று அக்கறையாகக் கணவரைப் பார்க்கிறார். “சரி, நீங்களாவது சொல்லுங்க, இப்படி தன்னந்தனியா வாழறதுக்கு பயம் வரலையா, வருத்தமா இல்லையா?” என்றோம். கூர்மையாக நம்மைப் பார்த்தபடி கருப்பாயி சொன்னார்...”சத்தியமா சொல்றேன் ராசா, சுத்தமா பயங் கெடையாது. கொஞ்சங்கூட
வருத்தமும் இல்ல. மனுஷங்களோட இருந்தாத்தான இந்த ரெண்டு இம்சைகளுக்கும் ஆளாகித் தொலையணும். இப்ப அது இல்ல. எங்களுக்கு ராவு, பகல் கெடையாது.மழை, வெயில் கெடையாது. ஒனக்கு நான், எனக்கு நீன்னு காலத்தைக் கழிக்கிறோம். ஒரு பால்மாடு இருக்கு. அதோட பாலை வித்து எங்க ஜீவனம் நடக்குது. பாழடைஞ்ச கெணத்துல இருக்கற பாசித்தண்ணியத்தான் காச்சி குடிக்கறோம். மகராசன் புண்ணியத்துல கரண்ட்டு இருக்கு.
சொந்த பந்தம், மனுஷ மக்க, ஆடு மாடுகன்னு நெறஞ்ச வாழ்வு வாழ்ந்தோம். ஆரு கண்ணு பட்டுச்சோ ஊரு செதறிப்போச்சு. நாங்களும் இப்பிடி அனாதியாகிப் போனோம். ஆனாலும் அதோ எங்க கொலசாமி முருகன் அருளால ஒரு கொறையும் இல்லை. கரிசல்குளத்து ராசா ராணி மாதிரி வாழறோம் சாமி” - ’பாமர ஞானி’ போலப் பேசுகிறார் கருப்பாயி அம்மாள்.
இவர்களது வீட்டுக்குப் பக்கத்திலேயே சின்னதாக ஒரு முருகன் கோயில். இதைமுன்னின்று கட்டியவர் பெரியவர் ராமசுப்புதான். ஒவ்வொரு வைகாசி மாதமும் இங்கு சாமி கும்பிடு நடக்கும்.

நேரம் செல்லச்செல்ல அந்த வெறுமையான சூழல் நம் மனதை என்னவோ செய்கிறது. ‘இந்தச் சூழலில் இவர்களுக்கு எப்படித்தான் கழிகிறது பொழுது?’. தம்பதியிடம் கேட்டோம். ”அதை ஏன் ராசா கேக்கறீங்க?” என்று கருப்பாயி அம்மாள் வெட்கப்பட, “அப்பிடிக் கேளுய்யா என் சிங்கக்குட்டி. இப்ப நாங்க வாழறது மறுவாழ்க்கை. வயசுப்புள்ளைக மாதிரி சந்தோஷமா வாழறோம். எங்க எளவயசுக் கதைகளை பேசிப்பேசி தீர்க்கறோம். இந்த பதினாலு வருஷமா ஒருத்தர் பேச்சை ஒருத்தர் மீறினதில்ல. அப்பிடின்னா பாத்துக்கங்களேன்” - ராமசுப்பு கண்சிமிட்டி சொல்ல, குறுக்கிட்ட கருப்பாயி “ஆமா, இவுகளுக்கு இப்பதான்
பதினாறு வயசுன்னு நெனப்பு” என்று கேலி செய்ய...நம்மோடு சேர்ந்து இருவருக்கும் வெடித்த பெருஞ்சிரிப்பை ரசித்து விசிலடித்தது, நெடுங்காலமாக விசும்பிக் கொண்டிருந்த கரிசல்குளத்துக் காற்று!

படங்கள்: எம். கலீல் ரஹ்மான்
நன்றி: புதிய தலைமுறை

’சர்வரோக நிவாரணி’ சுஜாதா

Thursday, August 5, 2010




நேசிக்கத் தெரிஞ்சவனுக்கு..காதலி. வாசிக்கத் தெரிஞ்சவனுக்கு..சுஜாதா! தன் எழுத்தையே விற்கமுடியாத படைப்பாளர்கள் நடுவில..தமிழின் தவிர்க்கமுடியாத தனி சகாப்தம்..எழுத்தாளர் சுஜாதா!

சுஜாதாவை பத்தி ‘கேப்ஸ்யூல்’ வார்த்தைல சொல்றதுன்னா..ராட்சஸன்! ஆகாயம் முதல் பாதாளம்வரை அத்தனை சப்ஜெக்ட்டுகள்லயும் விசுவரூபம் எடுத்து நின்னு விசும்பவெச்ச குசும்பன்! இதுக்குமேல பாராட்டுனா ‘போதும் ஜல்லியடிச்சது’னு சொல்லி சுஜாதாவே சிரிப்பாரு.
இந்த எழுத்துலகப் பிதாமகனை நான் சந்திச்ச சம்பவம் ஒவ்வொண்ணையும் சதா நினைச்சுப்பாத்து எனர்ஜி ஏத்திக்கறேன் ஜி! ‘ஆனந்த விகடன்’ல நான் இருந்தப்போ அடிக்கடி பேசியிருக்கேன். அந்த அறிமுகத்துல சுஜாதாவை நேர்ல சந்திக்கணும்னு ஆசைப்பட்டேன். ஃபோன் பண்ணேன். பேர் சொன்னேன்.

சுஜாதா ரொம்ப ரசனையான ஆசாமி!(அவர் ஸ்டைல்!) அற்பமானது..நுட்பமானதுனு பேதமில்லாம கவனிச்சு ரசிப்பார். ‘‘எம்.பி உதயசூரியனா! பேர் நல்லாருக்கே! காலைல பீச்சுக்கு வர்றீங்களா..ஈவ்னிங் வீட்டுக்கு வர்றீங்களா?’’னு மெல்லிசான குரல்ல கேட்டார். ‘‘பீச்சுக்கு வர்றேன் சார்’’னேன். அன்னிக்கு ராத்திரி என் தூக்கத்தை கெடுத்தது வேறெந்த கவர்ச்சிக்கன்னியும் கெடயாது..சத்தியமா சுஜாதாதான்!

பொழுது விடிஞ்சது. ‘காந்தி’ காத்து வாங்கற கடற்கரை. காத்திருந்தேன். ‘தேவன் வந்தார்’. இங்கிட்டும் அங்கிட்டும் நடக்கறவங்க விஷ் பண்ணிகிட்டே கடக்க..மையமா சிரிச்சுகிட்டே சுஜாதா ‘பைய்ய’ நடந்தாரு. பக்கத்துல போய் ‘‘வணக்கம் சார்’’னேன். ஒருநொடி என்னை உன்னிப்பா ‘ஸ்கேன்’ பண்ணிட்டு ‘‘வாங்க உதயசூரியன்’’னு அசால்ட்டா சொல்ல..என் நடுமுதுகு ‘திடுக்‘னுச்சு.

அதுக்கு முன்ன சுஜாதா என்னை முன்ன பின்ன (‘சிவாஜி’ பட காமெடியை யோசிச்சுராதீங்க!) பாத்ததில்ல! ‘‘அப்புறம் எப்டி சார் கண்டுபிடிச்சீங்க?’’ன்னு ஆச்சரியப்பட்டேன். அலட்டிக்காம சுஜாதா சொன்னாரு..‘‘பீச்ல என்னை பெரும்பாலும் பாக்கறவங்க ‘நீங்க சுஜாதாதானே‘ன்னு கேப்பாங்க. சிறும்பாலும் பாக்கறவங்க ‘யாரோ ஒரு மியூசியம் ஆசாமி’ன்னு திகிலா விலகிப்போவாங்க. இதுல ‘வணக்கம் சார்‘னு வந்தா அது நீங்களாத்தான் இருக்கணும்னு ஒரு குன்ஸா அடிச்சேன்’’னார் பாருங்க..அதான் சுஜாதா!

எழுத்துல ‘புலிப்பாய்ச்சல்’ பாயற சுஜாதா..பேசறப்போ அடிக்கற எக்கச்சக்க நக்கல்ல சிரிச்சே ‘குளிர்காய்ச்சல்’ வந்துரும். ‘குங்குமம்’ கட்டுரைத்தொடருக்காக சுஜாதாவை பலமுறை சந்திச்சேன். அன்னிக்கு செமஜாலி மூடுல இருந்தார். டேபிள்ல ‘மகாமகா தடிமனா’ ஒரு புத்தகம் இருந்துச்சு. ‘‘என்ன சார் இந்த புக் கல்லாப்பெட்டி சைஸ்ல இருக்கே’’னு கேட்டேன்.
அடுத்த நொடி..‘பம்பர் ப்ரைஸ் விழுந்தமாதிரி சர்ப்ரைஸ் ஆனேன். ஆமாங்க. அந்த கமெண்ட்டுக்கு ஒரு குழந்தையைப்போல வஞ்சனையில்லாம சிரிச்சார் சுஜாதா. எனக்கோ பெருமை தாங்கல! அதேஜோர்ல ‘‘சார்..இதை முழுசா படிச்சிட்டீங்களா?’’ன்னேன். ‘‘இப்பத்தான் பத்து பக்கம் முடிச்சிருக்கேன்’’னார். உடனே நான் ‘‘அப்போ நிச்சயம் இது ‘கல்லா‘ பெட்டிதான் சார்’’னு (‘கல்லாத‘!) சிலேடையில விளையாட..‘அட!’னு ஒரேவார்த்தையில நூறுகிலோவுக்கு பாராட்டினவர் ‘‘தமிழ் உங்களுக்கு சோறு போட்ரும்!’’னார்!

இனி சுஜாதா ரவுண்டு. பேசிகிட்டே என்னைப்பாத்தவர் ‘‘தாதுபுஷ்டி லேகியம் ஏதும் சாப்புடறீங்களா?’’ன்னார் சைலன்ட்டா. ‘‘ஐயையோ..இல்லையே சார்’’னேன்.‘‘அப்போ தாதுவை வீணடிக்கறதில்லபோல!’’னு அடுத்த பஞ்ச் வெச்சிட்டு ‘‘அதான் எப்பவும் உங்க முகத்துல ஒரு தேஜஸ் மின்னுது’’ன்னாரு கிண்டலா! கூச்சப்பட்டு சிரிச்சேன்.
‘‘இந்த கட்டுரைத்தொடரை ‘ஏன்..எதற்கு..எப்படி’மாதிரி கேள்வி பதிலா கொண்டுபோலாமா சார்?’’னேன். ‘‘வேணாம் வேணாம்! ‘ என்னை ஒரு ‘சர்வரோக நிவாரணியா‘ நினைச்சு ‘சொப்பன ஸ்கலிதம்.. விரை வீக்கம்..ஆண்மைக்குறைவு தீர என்ன வழி‘னு கேட்டே திணறடிச்சிருவாங்க! அப்புறம் அத்தனையும் எனக்கு வந்துரும்..கேள்விகளா!’’னு ‘நச்‘னு சொல்ல..சேர்ந்து சிரிச்சோம்.

‘கனவுத்தொழிற்சாலை‘யான கோலிவுட்டுக்கு சுஜாதாமேல ரொம்ப பாசம். அதிலும் ‘வித்தகன்’ பார்த்திபனுக்கு ‘விசித்திரன்’ சுஜாதான்னாலே அதீத மதிப்பு. இந்த மதிப்பு மனசளவுல இருந்தா பரவால்ல! சுஜாதாவோட இடுப்பளவுக்கு வந்து உடுப்பளவு மாறுனதுதான்..காதளவுக்கு சிரிக்கவெச்சது!
பார்த்திபனின் ‘கிறுக்கல்கள்’ கவிதைத்தொகுப்பு வெளியீட்டுவிழா. காமராஜர் அரங்கமே ‘தலை‘கட்டியிருந்துச்சு. முதல்வர் கலைஞர்,சுஜாதா,பாரதிராஜா,பாக்யராஜ்,சிவசங்கரி மேடையில இருக்காங்க. பார்த்திபன்தான் ‘புதுமைப்பித்தனாச்சே’! விடுவாரா? விழா வி.ஐ.பி.கள் அத்தனைபேருக்கும் (சிவசங்கரி தவிர!) பட்டுவேட்டி சட்டை எடுத்துத்தந்து கட்டிட்டு வரச்சொல்லியிருந்தாரு.
பாரதி.பாக்யராஜாக்களுக்கு பழக்கமானதுதான்! கட்டிகிட்டாங்க. ஆனா..பாவம் சுஜாதா! சேர்ல உக்காந்திருந்தப்போ வெவஸ்தை இல்லாத வேட்டியால ரொம்ப அவஸ்தையாதான் இருந்தாரு. பேச எந்திரிச்சப்போதான் சுஜாதா மந்திரிச்சுவிட்ட மாதிரி ஒரு தினுசா நடந்துவந்தாரு. ‘என்னடா‘ன்னு பாத்தா..‘சென்னையோட ஈஃபிள் டவர் போல..ஓங்கிவளர்ந்த பேனாவோட ரீஃபில் மாதிரி‘ இருக்கற சுஜாதாவோட இடுப்புல வேட்டி ‘இருக்கவா? நழுவவா?’னு ஊசலாடிகிட்டிருக்கு!

கடுப்பை அடக்கிகிட்டு இடுப்பை இறுக்கிகிட்டே ஒருவழியா மைக்கை பிடிச்சாரு சுஜாதா.

மத்த பேச்சாளர்களைப் போல ‘ஓசோன் ஓட்டையில விரலைவிட்டு ஆட்டறமாதிரி’ நீட்டி குரல் குடுக்காம.. ‘பி.பி.சீனிவாஸ் பி.பி.சி.நியூஸ்
வாசிக்கறமாதிரி’ நம்ம ஆசான் ஒரு ராகத்தோட..பேப்பர்ல எழுதிவெச்சிருந்ததை சூப்பரா
படிச்சிகிட்டிருக்காரு!

ஒரு கையில பேப்பரையும், மறு கையில வேட்டியையும் இறுக்கி பிடிச்சுகிட்டு லேசான திகிலோட பேசி(!)முடிச்ச சுஜாதா..ஸ்லோமோஷன்ல வந்து அவரோட இருக்கைல உக்காந்தாரு. ஸ்..அப்பாடா! வேட்டி அவுந்து விழாம..இனிதே முடிஞ்சுச்சு
விழா!

மறுநாள்..சுஜாதாவுக்கு ஃபோன் அடிச்சேன். லைன்ல வந்தது ‘லயன்’! ‘‘சார்..நேத்து எல்லாரும் விழாவ பாத்துகிட்டிருந்தாங்க. நாந்தான் உங்க வேட்டி விழாம இருக்கணும்னு வேண்டிகிட்டிருந்தேன். ரொம்ப சிரமப்பட்டுட்டீங்களே சார்’’னேன்.


சன்னமா சிரிச்சவர் மின்னலா பொளந்தார் பாருங்க..‘‘குட்!
ஷார்ப்பா கவனிச்சிருக்கீங்களே. பார்த்திபனோட விருப்பத்துக்காக வேட்டிக்கு ஓகே சொன்னேன். ஆனா..அதை இடுப்புல சுத்திகிட்டு நிறைய வி.ஐ.பி.க இருக்கற அந்த ஸ்டேஜ்ல விரைவீக்கம் வந்தவன்மாதிரி ஒரு தினுசா நான் நடந்துபோயிருக்கேன். நல்லவேளை..விழா பரபரப்புல யாரும் இதை கவனிக்கலை!’’னு அவர் சொல்லிமுடிக்க..வெடிச்சு சிரிச்சேன்.

தன்னை மட்டுமே மெச்சிக்கற சிலபல ரைட்டர்ஸ் மத்தியில..தகுதியிருக்கற படைப்பாளிகளை தன்னோட உச்சிமீது தூக்கிவெச்சு கொண்டாடின ‘ஞானத்தந்தை’ சுஜாதா! திறமையுள்ள இளம்படைப்பாளிகள்..கலிஃபோர்னியால
இருந்தாலும் சரி..கரியாம்பட்டில இருந்தாலும் சரி..அவங்க சிறந்து விளங்கறதுக்காக
தேடிப்‘‘படிச்சு‘‘ ‘பாராட்டு வெளிச்சம்’ பாய்ச்சற ‘கலங்கரை விளக்கம்’ சத்தியமா சுஜாதா மட்டுமே!

‘

சுஜாதாவுக்கு வயசு ‘என்றும் பதினாறு’தான்! ‘பேச்சுலர் வாசம்’ அடிக்கற இவர் பேச்சுல ‘அந்தக்காலத்துல’ங்கற பழைய கோந்து பிஸினஸே கிடையாது. எப்பவுமே டீன்ஏஜ் டிக்கெட்டுகளோட லாங்குவேஜ்லதான் பூந்து விளையாடுவாரு!
‘‘எப்டி சார்‘‘னு கேட்டா..‘‘அதெல்லாம் ஜீனி வேலை!’’ம்பார் இந்த ‘ஜீனியஸ்’!


இன்னொரு சந்திப்புல..ஒரு பத்திரிகைக்கு ‘பொங்கல் ஸ்பெஷல்’ கட்டுரை எழுதிகிட்டிருந்தாரு. பேச்சுவாக்குல ‘‘தமிழர்கள் அதிகமா பயன்படுத்தற வார்த்தை என்ன?’’னு கேட்டாரு. ரெண்டு மூணு சொன்னேன். உதடு பிதுக்கினவரு ‘‘தின்பொருள் விக்கறவர்லேர்ந்து மென்பொருள்காரங்க வரைக்கும் அத்தனை தமிழர்களும் அதிகமா பயன்படுத்தற வார்த்தை ‘சூப்பர்’!’’னாரு. உடனே ‘‘சூப்பர் சார்’’னேன். ‘‘பாத்தீங்களா..
படுத்தறீங்களே’’ன்னாரு ர.சுருக்கமா!

‘மோதிரக்கையால குட்டுப்பட்டது’ங்கறதை மாத்தி ‘மேதையின்
வாயால வெரிகுட்டு வாங்குனது’னு ஒரு சம்பவம் சொல்றேன். ‘குங்குமம்’ பத்திரிகைல ‘ஆ..அனுபவம்‘ங்கற தலைப்புல வெரைட்டியான அனுபவங்களை தொடரா எழுதிகிட்டிருந்தேன். அதுல ஒரு வாரம் ‘இப்படிக்கு நட்பு’னு ஒரு அனுபவம்!

ஆபீஸ்ல ஒரு மத்தியானம். திடீர்னு சிறப்பாசிரியர் ராவ் சார் கூப்பிட்டாரு. போனேன். ‘‘உங்க கட்டுரைய ரொம்ப நல்லாருக்குனு சுஜாதா
பாராட்டினாரு!’’னு சொன்னாரு. அந்த நொடியில எனக்கு உண்டான பரவசத்தை
‘குண்டலினி யோகம்’கூட தந்திருக்காது! உடனே சுஜாதாவுக்கு ஃபோன் பண்ணேன்.
எடுத்தார்.

‘‘ரொம்ப தேங்க்ஸ் சார். நீங்களே பாராட்டினது’’னு நான் நீட்டி முழக்குனதை நறுக்குன்னு கத்தரிச்சவர் ‘‘அந்த கட்டுரை ரொம்ப நீட்டா..ஸ்வீட்டா இருக்கு.
பிரமாதமான ஸ்க்ரீன்ப்ளே. போதும் பத்திரிகை உத்தியோகம். உடனே சினிமா பண்ண
கிளம்புங்க. ராவ் தடுப்பாரு. கண்டுக்காதீங்க. நாங்கள்ளாம் ‘பூட்ட கேஸு’.
ஆல் த பெஸ்ட்!’’னு சொல்லி ஃபோன் ‘டொக்’. (இதே வாழ்த்தோடு மதன் சார் பேசுனது தனி பதிவுக்கு!)



‘சொர்க்கவாசல்’ திறக்கற ஸ்ரீரங்கம் ரங்கநாதனை சேவிச்சாலும்..
‘சொர்க்கம் நரகம்ங்கிறதெல்லாம் உட்டாலக்கடி’னு சொல்றவரு இந்த ரங்கராஜன். ‘‘இறந்த பிறகு சொர்க்கத்துக்கு போகணுமா..நரகத்துக்கு போகணுமானு கேட்டா..நரகத்துக்கு டிக்கெட் வாங்கத்தான் எனக்கு விருப்பம்! ஏன்னா..சொர்க்கம் போரடிக்கும். படுசுவாரஸ்யமான மனிதர்கள்லாம் நரகத்துலதான் இருப்பாங்க!’’னு ஜாலியா சொன்னவரு சுஜாதா!

எதுக்கும்..வரப்போற ‘தீபாவளி ஸ்பெஷல்’ பத்திரிகைகளை வாங்கி
ஆற அமரப் படிங்க! ‘சொர்க்கம் நரகம்’னுகூட வினோதமான கட்டுரை எழுதியிருப்பார் அமரர் சுஜாதா!

மலைச்சரிவில் நிமிரும் நம்பிக்கை

Saturday, May 29, 2010





எம்.பி. உதயசூரியன்


அந்த குக்கிராமத்தில் அவசியத்தேவையான மின்சாரம் இல்லை. அத்தியாவசியத் தேவையான
குடிநீர் இல்லை. அவசர உதவிக்கு போக்குவரத்து வசதி இல்லை. ஆபத்தில் உயிர் காக்க
ஆஸ்பத்திரி இல்லை. பொழுதுபோக்க கேபிள் டி.வி. இல்லை. தகவல் தொடர்புக்கு தொலைபேசி
இல்லை. இப்படி அடிப்படை வசதிகள் எதுவுமே 'இல்ல்ல்ல்ல்லை'. ஆனாலும் அந்த
குக்கிராமத்தில் விசுவரூபம் எடுத்து நம்மை விசும்ப வைக்கிற விஷயம் ஒன்று உண்டு...
அதன் பெயர் நம்பிக்கை! அந்தக் கிராமத்தின் பெயர் 'அமைதிச்சோலை'.

திண்டுக்கல் அருகிலுள்ள மலைப்பகுதி ஆடலூர் பன்றிமலை. காபி எஸ்டேட், எலுமிச்சை
தோட்டங்கள் என செழிப்பான பிஸினஸ் ஏரியா. இதன் அடிவாரமான கோம்பை
செக்போஸ்ட்டிலிருந்து 'மல்லாந்து கிடக்கிற கருநாகப்பாம்பு போல' வளைந்து நெளிகிற
பாதைகளில் 7 கி.மீ.தூரம் மலையேறிப் போனால்...மலைச்சரிவில் பொதிந்திருக்கிறது
‘அமைதிச்சோலை'.

'ஏதோ சினிமா ஷூட்டிங்கிற்காக் போடப்பட்ட மினி கிராமத்து செட் போல' நேர்த்தியாக
இருக்கிறது இந்த குக்கிராமம். குடிசை, ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேய்ந்த 64 சிறுவீடுகள்.
நடுநாயகமாக காளியம்மன் கோயில். அதன் முன்பு நண்டுசிண்டுகள் குஷாலாக விளையாட
விசாலமான திடல். மக்கள் தொகை ஐநூறுக்கும் குறைவு. ஆனால் இந்த மக்களின்
ஸ்டேட்டஸ் சுவாரஸ்யமானது... ‘வருஷத்துல ஆறுமாசம் நாங்க மொதலாளிக, அடுத்த
ஆறுமாசம் நாங்க தொழிலாளிக' என்று சிரிக்கிறார்கள். காரணம்-மலைச்சரிவுகளில் இந்த மக்கள்
அவரவர்களுக்கென துண்டு துண்டாக நிலம் வைத்திருக்கிறார்கள். சீஸன் காலங்களில் மட்டும்
எலுமிச்சை, மாதுளை, கொய்யா என அமோக விளைச்சல். அப்போது கையில் தாராளமாக
பணம் புழங்கும். மற்ற சமயங்களில் மலை உச்சியிலுள்ள எஸ்டேட்டுகளில் வேலைக்குப்
போய்விடுகிறார்கள்.

‘அட...இந்த லைஃப் ஸ்டைல் நல்லாருக்கே' என்று கூலாகச் சொல்பவர்கள் இம்மக்களில்
ஒரு ஆளாக வாழ்ந்து பார்த்தால்தான், மலை இடுக்கில் கசியும் நீர் போல அவர்களது
மன இடுக்கில் கசியும் கண்ணீரை உணரமுடியும்.

ஐந்து வருஷங்களுக்கு முன்புவரை ‘அமைதிச்சோலை'யில் பகலில் மட்டுமே சூரிய
வெளிச்சம் அடிக்கும். இரவானால் முரட்டு இருட்டு அப்பிக்கிடக்கும். சிம்னி. அரிக்கேன்
விளக்குகளின் தயவால்தான் இரவுகளைக் கழித்திருக்கிறார்கள். ''என்ன செய்றதுங்க?
42 வருஷங்களுக்கு முன்னால பஞ்சம் பொழைக்கிறதுக்காக செங்குறிச்சி, மலைக்கேணின்னு
தூரத்து கிராமங்கள்லேர்ந்து போன தலைமுறை இங்க வந்து குடியேறினாங்க. எங்களுக்கும்
பொழப்பு தளப்பு இங்கியேதான்னு ஆகிப்போச்சு'' என்று சின்ன சிரிப்புடன் ஆரம்பித்தார்
பால் கண்ணன். ‘அமைதிச்சோலை'யின் மூத்த குடிமகன்களில் இவரும் ஒருவர்.
''ராத்திரியானா புள்ளகுட்டிகளை வெச்சுகிட்டு நாங்க பட்ட கஷ்டம் கொஞ்சநஞ்சம்
இல்லீங்க. எப்ப சிறுத்தை வரும், காட்டெருமை வரும்னு கொலநடுக்கத்தோடவே
அரைமுழிப்பாவே இருப்போம். அஞ்சு வருஷத்துக்கு முன்னாலதான் குஜராத்துலேர்ந்து
பன்றிமலைக்கு டூரிஸ்ட் வந்தாங்க சிலபேரு. பாக்கறதுக்கு சிங்கு மாதிரி இருந்தாங்க.
கரண்ட் வெளிச்சம் இல்லாம நாங்க படற அவதியை பாத்து மனசு சங்கடப்பட்டு;
‘ஏதாவது ஏற்பாடு பண்றோம்'னு சொல்லிட்டு போனாங்க. சொன்ன வாக்கு தப்பாம
ஒரே மாசத்துல தெருவிளக்குகளோட சேர்த்து, வீட்டுக்கொரு சோலார் சிஸ்டம்னு
மொத்தம் 70 சோலார் சிஸ்டங்களை அனுப்பி வெச்சாங்க. அந்த ஊர் பேர் தெரியாத
மகராசங்களாலதான் இருண்டு கிடந்த எங்க வாழ்க்கையில வெளிச்சமே வந்தது.
அஞ்சு வருஷமாகியும் இன்னமும் இந்த சோலார் சிஸ்டம் நல்ல முறையில
உழைச்சுகிட்டிருக்கு'' என்று நெகிழ்ச்சியாகக் கூறுகிறார் பால் கண்ணன்.

அருகில்...பேரனுக்கு சோறூட்டிக் கொண்டிருந்த மூதாட்டி மரியபுஷ்பம் ‘'வெளிச்சம்
வந்த அன்னிக்கு ராத்திரி எனக்கென்னவோ மறுபடியும் சுதந்திரம் வாங்குன மாதிரி
இருந்துச்சு ராசா! விடிய விடிய ஊர்க்கதைகளைப் பேசிகிட்டு, சந்தோஷமா முழிச்சிக்
கிடந்தோம். பள்ளிக்கூடம் போற புள்ளைகள்லாம் கொண்டாட்டமா வீட்டுப்பாடங்கள
எழுதிச்சு. முன்ன இருந்த பூச்சி பொட்டு, சிறுத்தை பயமெல்லாம் இந்த வெளிச்சம்
வந்ததும் வெலகிப்போயிருச்சு'' என்று அந்த ‘வெளிச்ச இரவை' உணர்ச்சிகரமாக
விவரித்தார்.


குடிசை, ஆஸ்பெஸ்டாஸ் வீடுகள் அத்தனைக்கும் தலா ஒரு சோலார் சிஸ்டம்
பன்றிமலை ஊராட்சி மன்றம் மூலமாக பொருத்தப்பட்டுள்ளது. மாலை மயங்கி இருள்
பரவத்துவங்கியதும் சோலார் இயங்கி வெளிச்சம் பரவி, மலைச்சரிவிலுள்ள வீடுகளும்
தெருவும் 'ஒரு கிரீட்டிங் கார்டு போல' காட்சியளிப்பது அத்தனை அழகு.
இதில் ‘ஆ'ச்சரியம்...கரண்ட்டே இல்லாத வீடுகளுக்கு அரசின் இலவச கலர் டி.வி.யும்,
கேஸ் அடுப்பும் வழங்கப்பட்டுள்ளன. வாங்கிய டி.வி.கள் பெரும்பாலும் பல வீடுகளில்
தூங்கியபடியே உள்ளன. ஒரே ஒரு வீட்டில் மட்டுமே டி.டி.எச்.வசதி.

இங்கு வசிக்கிற அனைத்துக் குடும்பங்களுக்கும் ரேஷன் கார்டு உள்ளது.
340 வாக்காளர்கள் உள்ளனர். தேர்தல் தோறும் மலையேறி இங்கு வந்து ஓட்டு
கேட்பவர்கள், இவர்களது குறைகளை காதோடு கேட்டுப் போவதோடு சரி.
‘'ஒவ்வொரு முறையும் செஞ்சு தர்றோம்னு சொல்லி ஓட்டு வாங்கிட்டுப்
போயிருவாங்க. அப்புறம் அடுத்த வாட்டி வருவாங்க. ஆனாலும் என்னிக்காவது
ஒருநாள் எங்களுக்கான அடிப்படை வசதிகளை செஞ்சு தந்துருவாங்கன்னு
இன்னும் நம்பறோம்'' என்கிறார்கள் இந்த வெள்ளந்தி ஜனங்கள்.

ஓரளவு வெளிச்சம் வந்ததால் இருட்டு தொலைந்தது. அதேசமயம் குடிநீர்
பிரச்னை இம்மக்களை வாட்டி எடுக்கிறது. ஆனால் அதையும் இவர்கள் சமாளிக்கும்
விதம் அபாரம். குடிதண்ணீருக்கென ஒரே ஒரு வாட்டர் டேங்க் அமைத்துத் தந்துள்ளது
ஊராட்சி. வாரம் ஒருமுறை 500 அடிக்குக் கீழேயுள்ள போர் மூலம் இதில் குடிநீர்
நிரப்பப்படுகிறது. ‘'ரெண்டு நாளைக்குக்கூட இந்தத் தண்ணி பத்தாதுங்க. அதனால
நாங்க ஆம்பளைங்களா சேந்து 1 கி.மீ. தூரத்திலிருக்கிற மலை ஓடைக்குப் போயி
தண்ணி எடுத்துட்டு வர்றோம். கையோட குளிச்சு முடிச்சு, துணிகளையும் துவைச்சுட்டு
வந்துர்றோம். தண்ணி இல்லேன்னு கத்திக் கத்தி தொண்டை காஞ்சு போறதவிட,
எட்டத்துல இருக்கற தண்ணியை சிரமம் பாக்காம ஒருநடை போயி நம்ம கிட்டக்க
கொண்டு வந்துட்டா பிரச்னை தீந்துபோகுமில்ல'' என்று பிராக்டிக்கலாகப் பேசுகிறார்
செல்வம் என்ற இலங்கி.

ஓடை நீரால் தாகம் தீர்ந்தது. ஆனால் பஸ் வசதி இல்லாமல் 'ஓடும் பிள்ளைகளாக'
இந்த மக்கள், குறிப்பாக பள்ளி மாணவர்கள் படும் துயரம் இருக்கிறதே...சொல்லித்
தீராத சோகம் அது. முதல் வகுப்பு முதல் ப்ளஸ் டூ வரை படிக்கிற சுமார் 30 மாணவர்கள்
இங்கே உள்ளனர். ஒன்றிலிருந்து பத்தாம் வகுப்பு வரையுள்ள அரசினர் உயர்நிலைப்பள்ளி
மலைக்குக் கீழே 11 கி.மீ. தூரத்தில் தர்மத்துப்பட்டியில் உள்ளது. 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான
அரசு மேல்நிலைப்பள்ளி இருப்பதோ 17 கி.மீ. தூரத்திலுள்ள கன்னிவாடியில். மலைக்கு
மேலுள்ள ஆடலூரிலிருந்து காலையில் கிளம்புகிற மினி பஸ் 9.30 மணிக்குத்தான்
அமைதிச்சோலைக்கு வரும். அதில் ஏறிவரும் மாணவ்ர்கள் தர்மத்துப்பட்டியில் இறங்கி,
ஓட்டமும் நடையுமாக வந்து 10.30 மணியளவில்தான் பள்ளிக்குள் நுழையமுடிகிறது.
‘'நாங்க கிளாஸுக்குள்ள போறதுக்குள்ள முதல் பீரியட் முடிஞ்சுருதுண்ணே. ஆனாலும்
‘லேட் ஆனாலும் பரவால்ல...பாவம் மலையிலேர்ந்து வர்ற பசங்க''ன்னு எங்க ஸ்கூல்ல
பெர்மிஷன் தந்துருக்காங்க'' என்றான் 'அஞ்சாப்பு' படிக்கிற ராசா.

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும்தான் இந்த ‘கருணை அனுமதி'.
ஆனால் 6வது முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த அனுமதி இல்லை. ஆகவே
சரியான நேரத்திற்குள் பள்ளிக்குப் போயாக வேண்டும் என்பதால் அதிகாலையிலேயே
எழுந்து, அரக்கப் பரக்கக் கிளம்புகிறார்கள் பிள்ளைகள். விஷ ஜந்துக்கள் ஊடாடும்
மலைப்பாதையில் 6 கி.மீ. தூரம் உயிரைப் பணயம் வைத்து நடந்து அடிவாரத்திலுள்ள
கோம்பைக்கு வருகிறார்கள். அங்கிருந்து பஸ் பிடித்து கரெக்ட்டான நேரத்திற்கு ‘உள்ளேன்
ஐயா' சொல்கிறார்கள். 'அமைதிச்சோலை'யில் நாம் இருந்தபோது பள்ளி முடிந்து பஸ்ஸில்
வந்து இறங்கியது மாணவப்பட்டாளம். விசாரித்தால் ‘'ரொம்ப கஷ்டமாத்தாண்ணே இருக்கு.
ஆனா படிக்கலேன்னா பெரியாளானதும் இதவிட கஷ்டப்பட வேண்டியிருக்குமே. அதான்
ஓட்டமா ஓடிப் படிக்கறோம். நீங்க மெட்ராஸ்ல இருக்கீங்களே...அங்க கவர்மெண்ட்ல சொல்லி
ஸ்கூல் டயத்துக்குப் போற மாதிரி ஒரு பஸ் விடச்சொல்லுங்கண்ணே'' என்று கோரஸாகச்
சொன்னார்கள். படிப்பதற்காக தடைகளைக் கடந்து நடைபோடும் செருப்பில்லாத அந்த
பிஞ்சுக்கால்களின் உறுதி கண்டு சிலிர்த்தது நமக்கு.

கடைசி பஸ் அது என்பதால், உள்ளே நிற்கக்கூட இடமில்லாதபடி பெருங்கூட்டம்.
விளைவு...மக்கள் பஸ்ஸின் கூரைமீது அமர்ந்து அபாயப் பயணம் செய்வதைப் பார்க்க ‘பகீர்' என்றது
நமக்கு. கேட்டால்.... ''இதான் கடைசி பஸ். இதைவிட்டா அப்புறம் கால்கடுக்க நடந்தே போகணும்.
கரணம் தப்பினா மரணம்னு ஆகிப்போச்சு பொழப்பு'' என்று அதே விரக்தியான பதில்தான் தெறிக்கிறது.
இப்படி ஏற்ற இறக்கங்களுடன் வாழ்க்கை இருந்தாலும் ‘சலிக்காம உழைச்சு நாலுகாசு பாக்கணும்' என்கிற
துடிப்பு இங்குள்ள பெண்களிடம் அதிகம். ''இப்ப இலவம்பஞ்சு சீஸனுங்க. பஞ்சை பிரிச்சுக் குடுத்தம்னா
கிலோவுக்கு நாப்பது ரூவா கிடைக்கும். இதுல வர்ற சம்பாத்தியத்த வெச்சுதான் அடுத்த சீஸன்
வரைக்கும் வாழ்க்கையை ஓட்டணும்ங்க. அதேசமயம் புள்ளகுட்டிகளுக்குன்னு ஏதாச்சும் சேத்து
வெக்கணுமில்ல? அதான் சுய உதவிக்குழு அமைச்சோம். பயிர் பச்சைனு செழிப்பா இருக்கு மலை. ஆடு
மாடுகளை வாங்கிவிட்டா அதுபாட்டுக்கு மேயும், நமக்கும் லாபம்'' என்று சொல்கிற மகாலட்சுமி,
‘விசாலாட்சி களஞ்சியம்' என்ற மகளிர் சுய உதவிக்குழு நடத்துகிறார். குழுவின் மூலம் 2 லட்ச ரூபாய்
லோன் வாங்கி கறவை மாடு, ஆடு வளர்ப்பு என தனது குழுப் பெண்களை லாபத்தோடு கூடிய சுயதொழில்களில்
ஈடுபடுத்தியிருக்கிறார்.

வாழ்வின் ஒவ்வொரு நாளும் தடுக்கி விடுகிற தடைகள் பலப்பல இருந்தும், அதற்காக சோர்ந்து சுருண்டு போகாமல்
நிமிர்ந்து நின்று, பிரச்னைகளை எதிர்கொண்டு வாழ்வை நம்பிக்கையோடு நடத்தி அசரவைக்கிறார்கள் 'அமைதிச்சோலை'
மக்கள்.

பீரங்கிக் கோட்டையில் ஒரு பிக்னிக்

Monday, April 19, 2010



எம்.பி. உதயசூரியன்

பாய்ச்சலுக்கு ஒரு பைக். பில்லியனில் நண்பன். கிழக்கு கடற்கரைச் சாலை. ஏறிக்கொண்டு சீறிக்கிளம்பினால்..மில்லிமீட்டர் குறையாத ‘மில்லியனர் சந்தோஷம்‘!
ஒகே. குதிரை வேகத்தில் கிளம்பியாச்சு. அப்போ சென்றாக வேண்டிய இடம் ‘ஆலம்பரா கோட்டை‘! கொட்டிவாக்கம் தாண்டியதுமே..வழிநெடுக காதுகளில் குஷியாக விசிலடிக்கிறது கடற்காற்று. ஏதோ ‘போருக்குப் போகிற ஆவேச வேகத்தோடு‘ ஊருக்குப் போகின்றன வாகனங்கள்.

நாம் கிளம்பியது காலை நேரமாச்சா? இதமான குளிர்காற்று வருட ..மிதமான வேகத்தில் நம்ம பைக் பாய்ந்துகொண்டிருந்தது. அப்போது ‘வ்ர்ர்ர்ரூம்‘ என்று ஹை&ஸ்பீடில் நம்மை ஓவர்டேக் செய்தது ஒரு பைக். ஜீன்ஸ் போட்ட இளைஞன் ஓட்ட..அவனை இறுக்க்க்கியபடி பீன்ஸ் சைஸில் ஒரு குமரி! ‘காதலர்கள் இறுக்கமாக தழுவிக்கொள்ளும்போது நடுவே காற்று நுழையக்கூட இடமிருக்காது‘ என்ற வள்ளுவன் ‘குரலுக்கேத்த‘ வசீகர உதாரணம்..வண்டியில் பறந்தது!‘ஹும்! மச்சம்யா!‘ என்று என் பின்னே இருந்த ‘நட்புமூட்டையிடம்‘ ஏக்கப்பெருமூச்சு விட எத்தனித்தபோது..அந்த எத்தன் விட்ட ‘ஏ(க்)கப்பட்ட அனல்மூச்சில்’ என் முதுகே பொசுங்கிப்போனது!

‘வ்ர்ர்ர்ரூம்‘...முட்டுக்காட்டில் படகுகள் அலையாடிக் கொண்டிருக்க.. துறையில் பெண்டு பிள்ளைகளும், நண்டு சிண்டுகளும் விளையாடிக்கொண்டிருந்தனர். ஓட்டிய வேகத்தில் வாட்டிய தாகத்திற்கு வழியில் ‘பச்சைப்பசேல்‘ இளநீரை குடித்தோம். அச்சுஅசல் தேனாய் ருசித்தது. அப்படியே வண்டியை ‘ஓடுறா ச்செல்ல்ல்லம்‘ என்று கொஞ்சி முடிக்க..வந்து சேர்ந்தது கடப்பாக்கம்! நீண்டு செல்கிற கிழக்கு கடற்கரைச் சாலையில் நொடிநேரத்தில் தாண்டிப்போகிற ஸ்பாட்தான் ‘கடப்பாக்கம்‘. ஆனால் இந்த குட்டியூண்டு ஊருக்குள்ளே
கோட்டை கட்டி கொடி பறக்க வாழ்ந்த ஒரு வரலாறு..புதையுண்டு கிடக்கும் கதை தெரியுமா?

கி.க. சாலையிலிருந்து ‘விசுக்‘கென இடதுபுறம் பிரிகிறது கடப்பாக்கம். துண்டு அகலத்திற்கு குண்டும் குழியுமான ரோடு. அலுங்கிக் குலுங்கி பயணித்தால்..குறுக்கிடுகிறது ஆற்றுப்பாலம்! அருகிலேயே ‘தலைகுளித்த மீன்களை தலைதுவட்ட விடாமல்..வலைபோட்டுப் பிடித்துவந்து விலைசொல்லி விற்கிற துக்கம் தாளாமல் தத்தளிக்கிறது மீன்கள்! விதவிதமான மீன்கள், இறால்கள் என அள்ளிக்கொண்டு போகிறார்கள் ‘அசைவப் பிரியர்கள்‘! அதையும் கடந்துபோனால்..மீனவர்களுக்கான சுனாமி குடியிருப்புகள் அனாதியாகக் கிடக்கிறது. அங்கிருந்து நகர்ந்தால்..‘பேக் வாட்டரால்‘‘ பன்னீர் தூவி வரவேற்கிறது ‘ஆலம்பரா கோட்டை‘! ‘பேக்வாட்டர்‘ சிறுகடலாக கோட்டைக்குப் பின்னே ‘பாகைமானி‘ சைஸில் பரவிக்கிடக்கிறது. முன்புறம் தகதகக்கிற பொன்னிற மணற்பரப்பில் பாதி புதைந்தும், மீதி சிதைந்தும் மௌனப்புலம்பலோடு அரை பனைமர உயரத்திற்கு நிற்கிறது பிரமாண்டமான ‘ஆலம்பரா கோட்டை‘!

கோட்டைக்குள்ளும் பொன்மணல் குவிந்துகிடக்கிறது. கால் வைத்ததுமே ஏனோ சிலிர்த்தது. ஒருகாலத்தில் முகலாய மன்னர்கள் வாழ்வாங்கு வாழ்ந்த சாம்ராஜ்யம்..இன்று நம்ம மாதிரி ‘பிள்ளக்காய்களால்‘ மிதிபடுவது கண்டு மனசு குறுகுறுத்தது. ‘பிதாமகன்‘ படத்தின் சுடுகாட்டுக் காட்சிகள் ‘சுடப்பட்டதெல்லாம்‘ இந்த லொகேஷனில்தான். ‘வெயில், குப்பி‘ என ஏராளமான படங்களில் ‘இடம்‘ பிடித்திருகிறது இந்த கோட்டை. பக்கத்திலேயே வலை பின்னிக்கொண்டிருந்த பெருசு நம்மைப் பார்த்து ‘‘பீரங்கியால சுட்டாக்கூட அசையாத கோட்டைங்க இது! வெள்ளைக்காரங்க பண்ணுன அட்டகாசம், அப்புறம் நவாப்புக ஆண்டதுன்னு வீரசூரக் கதைகளை எங்க முப்பாட்டன் காலத்துலேர்ந்து கேட்டுருக்கோம்!‘‘ என்று ‘த்ரில்‘லை கிளப்பினார்.
‘‘இந்த இடத்தை எங்கன தோண்டினாலும் ஏதாச்சும் புதையல் சிக்கும்ல!’’ என்று சொன்ன நண்பன் கண்ணில் ‘அலிபாபா‘ ஜொலிப்பு! ‘புதையல பூதம் காக்குமே!’’ என்ற பெருசுவின் பேச்சில் கெக்கலிப்பு.

கோட்டையின் நடுநாயகமாக ஒரு சமாதி. மறைந்துபோன மன்னரின் பெயர் மறைபொருளாகவே இருக்க..வந்துபோன மானிடர்களின் பெயர்கள் சமாதியில் ‘நிலைத்து நிற்பது‘ சோகக் காமெடி. பேக்வாட்டரில் கோட்டையைச் சுற்றி ரவுண்ட் அடிப்பதற்காகவே மோட்டார் படகுகள் காத்துக்கிடக்கின்றன. ஒரு ட்ரிப்புக்கு ஐம்பது ரூபாய். சலசலக்கிற நீரில் ஜாலி சவாரி போகிற சுகமே அலாதி! கரைக்குத் திரும்பி..ஒரு ‘ஜிலீர்‘ குளியல் போடும்போதே கபகப பசியை கிளப்புகிறது கமகம வாசம்! மீன், இறால், நண்டுகள் என சப்புக்கொட்டி ருசிக்க சரியான டிஷ்கள்! என்ன..முன்னரே சொல்லிவைத்து பணம் தந்தால்..சுடச்சுட சமைத்து வைத்திருப்பார்கள். சாப்பாடும், குடிநீரும் கைவசம் கட்டாயம் தேவை.

ஒரு நாளை ஒதுக்குங்கள்! நண்பர்கள், குடும்பத்தினர் என சகலரும் உற்சாகமாக கொண்டாடி, நிம்மதியாகத் திரும்ப உத்தரவாதமான பிக்னிக் ஸ்பாட் ‘ஆலம்பரா கோட்டை‘! அதுவும் செல்ஃபோனை ஆஃப் செய்துவிட்டால்..பாதி சொர்க்கம் நிச்சயம்! என்ஜாய்! வ்ர்ர்ரூம்ம்!

இதான் ரூட்!

சென்னை டூ கிழக்குக் கடற்கரைச் சாலையில் பயணித்தால்..100 கி.மீ. தூரத்தில் உள்ளது ‘ஆலம்பரா கோட்டை‘. ‘பாண்டிச்சேரி‘ பயணிகளுக்கு பாதி தூரம்தான்..50 கி.மீ.! டூ&வீலர், கார் என்றால் கோட்டைவரை போகலாம். பஸ்ஸில் சென்றால் கடப்பாக்கம் ஸ்டாப்பிங்கில் இறங்கவும். அங்கிருந்து ஆட்டோவில் செல்லலாம். கூப்பிடு தூரத்தில்..கோட்டை!

‘கோட்டை‘ கதை!


17ம் நூற்றாண்டில் இந்தியா முழுக்க கொடிகட்டிப் பறந்தது முகலாயப் பேரரசர்களின் ராஜாங்கம்! ‘கட்டிடக் கலையின் பொற்காலம்‘ அது. அன்றைய காலகட்டத்தில் கட்டப்பட்ட கோட்டைதான் இது! பட்டு ஜரிகை, உப்பு மற்றும் நெய் போன்ற பொருட்கள் இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டது வரலாறு. கப்பல்களை பழுதுபார்க்கும் இடமாகவும் இந்த ‘கடற்கோட்டை‘ பயன்படுத்தப்பட்டதாம். கி.பி.1735ல் நவாப் தோஸ்தே அலி கான் அரசாண்ட இந்த கோட்டையை..அதன் பின்னர் ஃபிரெஞ்ச் தளபதி டூப்ளெக்ஸ்க்கு பரிசளித்தது ஃப்ரெஞ்ச் அரசு. 1760ல் பரங்கியர்களால் ஃப்ரெஞ்ச் படை வீழ்த்தப்பட்டபோது..இந்த கோட்டையையும் முடிந்தவரை சேதப்படுத்தினார்கள். அதையும் கம்பீரமாக எதிர்கொண்டு, பின்னர் ஆற்காட்டு நவாப்புகளால் ஆளப்பட்ட ‘ஆலம்பரா கோட்டையை‘ 2004ல் வந்த சுனாமி கொஞ்சம் ஓவராகவே சிதைத்துவிட்டது!

தோத்தா கொடலு...ஜெயிச்சா மெடலு

Monday, April 12, 2010



எம்.பி. உதயசூரியன்


‘'ஏப்பு...சல்லிக்கட்டுங்கிறது லேசுபாசான விஷயமா என்ன? முச்சந்தியில
குத்தவெச்சு வெளையாடற ஆடு புலி ஆட்டமில்லப்பு இது. உசுரையே
துச்சமா நெனச்சு காளையோட காளை மோதற நேரடி யுத்தம். வாடிவாசல்ல
மொரட்டுக்கொம்புகளோட மெரட்டலா நிக்கற மாடுகளைப் பாத்தாலே
கிலி கெளம்பி, எப்பேர்ப்பட்ட கில்லாடிக்கும் அடிவயுத்துல புளி கரைச்சுரும்ல.
பேரு பெத்த மாடுபுடி வீரனுக கெத்தா களத்துல நிப்பாய்ங்க. கூடவே
வேடிக்கை பாக்க வந்த வெத்துப்பசங்களும் செத்த எலி கணக்கா வீறாப்பு
காட்டுவாய்ங்க. அது தனிக்கூத்து.

அலங்காநல்லூரு, பாலமேடு, சிங்கம்புணரி, சிறாவயல்னு சல்லிக்கட்டுக நடக்கிற
இடம் தெரிஞ்சுருக்கும். ஆனா வந்து நிக்கற வகைவகையான மாடுகளோட
வகையறா தெரியுமாப்பு? மூச்சு விடாம சொல்றேன். மூச்சப் புடிச்சு எண்ணிக்கோ.
மச்சக்காள, மயிலக்காள, ஒச்சுக்காள, ஒயிலுக்காள, நெத்திச்சுட்டி, செவலக்காள,
கொடலுகுத்தி,வட்டக்கருப்பன், ஈட்டிக்கொம்பன், புலிக்குத்தி, பாடச்சுழிகாரினு
பட்டியலு ரொம்பப் பெரிசப்பு.

சல்லிக்கட்டு மாடுகளுக்கான வளப்பு மொறையே தனி தினுசானது. மத்த
மாடுக மாதிரி இதுகள வேலைக்கெல்லாம் அனுப்ப மாட்டாய்ங்க. போட்டிக்கி
ஒரு மாசத்துக்கு முன்ன இருந்தே மாட்டுக்கு ஊட்டம் கூட்ட ஆரம்பிச்சிருவாய்ங்க.
தெனமும் நல்லா குளிப்பாட்டி, சாம்பிராணி புகை காட்டுவாய்ங்க. நயம் பருத்திக்
கொட்டய நைஸா அரைச்சு, அதோட சாறெடுத்து ஊட்டுவாய்ங்க. அதேமானிக்கி
பசேல்னு பசும்புல்லும், மூலிகைச்செடிகள அரைச்செடுத்த உருண்டையும்தான்
மாட்டுக்கான தினப்படி தீவனம்.

அதேமாதிரி சல்லிக்கட்டு மாடுகள வளக்கற வீட்ல இருக்கறவங்க ரொம்ப சுத்தபத்தமா
இருந்தாகணும். ஊட்டமா தின்னு தின்னு சும்மா ‘கிண்'ணுன்னு காட்டேரி மாதிரி
நிக்கற மாடுக, அக்கறையா வளக்கற ஆம்பளகிட்டக் கூட திமிரா சிலுப்பிகிட்டே
நிக்கும். ஆனா அதே வீட்ல இருக்கற பொம்பளையக் கண்டா பொட்டிப்பாம்பா
அடங்கும். ஏன்னா தெனமும் ஒரு தாய்மாதிரி தன்ன பாசமா கவனிச்சுக்கறதால
அது காட்டற அன்பு அப்புடி. சொன்னா அரண்டு போயிருவீகப்பு...பக்கத்துல மாடு
இருக்கறப்போ அந்த பொம்பளய ஏதோ ஒரு கோவத்துல புருஷங்காரனே கைநீட்டிப்
பேசிட்டான்னு வெய்யி, தொலஞ்சான். அப்புடியே அவம்மேல சீறிப் பாஞ்சு குத்தித்
தூக்கிரும். இதுக்குப் பயந்தே நெறயப் பய பொஞ்சாதிகிட்ட பஞ்சாயத்து வெச்சுக்க
மாட்டாம்ப்பு.


எடுத்த எடுப்புலயே சல்லிக்கட்டுல பூந்து மாட்டை அணைஞ்சற(பிடிப்பது) முடியாதப்பு.
அதுக்குன்னே செல அடிப்படை விஷயங்களை அடிபட்டுக் கத்துக்கணும். மொதல்ல
ஒரு புழுதிக்காட்டுல குட்டி ஆட்டோட முட்டி மோதி மல்லுக்கட்டணும். அதுலயே
உருண்டு பொரண்டு ரத்தக்காயம் ஆயிரும். கொஞ்சம் தேறிட்டோம்னா அடுத்து
கன்னுக்குட்டிகிட்ட கைவரிசை காட்டணும். பேச்சுக்கு இது சுளுவா இருக்கும். ஆனா
களத்துல இறங்குனாத்தாண்டி தெரியும், கன்னுக்குட்டியோட வீரியம். கொஞ்சம்
பிசகிச்சுன்னா, அது முட்டற முட்டுல டங்குவாரு அந்துபோகுமப்போய். ஆனா
அதையும் அடக்கி, நாய்க்குட்டி மாதிரி மடக்கிப் போடறதுக்கும் செல நேக்குபோக்கு
இருக்குதுல்ல.

இதுல தேறினதுக்கு அப்புறமாத்தான் மொரட்டு மாட்டுகிட்ட கொஞ்சம் கொஞ்சமா
நம்ம சேட்டையைக் காட்டணும். எமன் மாதிரி பாஞ்சு வர்ற மாட்டை எப்புடி புடிக்கணும்,
குத்திக் கொடலை உருவற மாட்டை என்ன மாதிரி மடக்கணும்ங்கற சூச்சுமத்தையெல்லாம்
மாடு புடிக்கறதுல சூரப்புலிகளா இருக்கறவய்ங்க கத்துத் தந்துருவாய்ங்கப்பு.

அதேமாதிரி இன்னொரு கூத்தும் இருக்கு. சல்லிக்கட்டு நடக்கறப்போ ‘இந்த மாட்ட
எவன் அடக்கறானோ, அவனுக்கு எம்பொண்ண கட்டித்தர்றேன்னு' இந்த சினிமாப்
படங்கள்ல சவடால் விடுவானுங்க. ஆனா நெசத்துல அப்படியெல்லாம் கெடயாதப்பு.
மாட்டை அடக்கிப்புட்டா அது கழுத்துல கட்டி விட்டிருக்கற தங்கச்சங்கிலி, பரிசுப் பணத்தை
அள்ளிக்கலாம். சமயங்கள்ல நமக்கு வேண்டப்பட்ட ஒறவு மொறையில, கல்யாணமாகாத
மாமங்காரன், மச்சாங்காரன் யாராச்சும் இருப்பாய்ங்கள்ல...அவிய்ங்களப் பாத்து ‘'இந்தக்
காளய நீ அடக்குனா, உனக்கு எம்பொண்ணை கட்டித்தர்றேன்னு' சீண்டிவிட்டு வேடிக்கை
பாப்பாய்ங்க.

சல்லிக்கட்டு வீரதீர வெளையாட்டுதான். அதேமாதிரி சுத்திமுத்தி நிக்கற கொமரிப்புள்ளைகளை
பாக்கறப்போ எக்கச்சக்க தெகிரியம் எக்குத்தப்பா எகிறும்ல. பெறகென்ன? உசுர பணயம்
வெச்சு களத்துல எறங்குவாய்ங்க. தோத்துப்புட்டா மாட்டோட கொம்புல அவனோட கொடலு.
ஜெயிக்கற வீரனுக்கு அந்த கொமரிக சிரிப்புதான் மெடலு''.

நன்றி: புதிய தலைமுறை

ஆளில்லா தீவில் தனியே ஒரு நம்பிக்கை

Thursday, April 8, 2010



எம்.பி. உதயசூரியன்

வெகுநாளாகவே ஆழ்மனதில் மூழ்கிக் கிடந்த ஆர்வம் அது... கடல் தின்று தீர்த்த
தனுஷ்கோடிக்கு அருகிலுள்ள அரிச்சல்முனைக்குப் போகவேண்டும் என்று.
ராமேஸ்வரத்திலிருந்து தனி ஜீப்பில் நண்பர்களுடன் கிளம்பினோம்.
செக்போஸ்ட்டிலிருந்து நாலு ‘வீல்' பாய்ச்சலில் புழுதி கிளம்ப சீறிச் சென்றது
ஜீப்.

கண்ணுக்கெட்டிய தூரம்வரை அலைகடலும், அனல் மனலும் கொட்டிக்கிடக்க...
முன்னோடி வண்டிகள் ஓடிய சக்கரப்பாதையிலேயே நமது ஜீப்பும் வளைந்து,
நெளிந்து, வழியில் குழியில் துள்ளி எழும்பி சென்றபோது, கரையெங்கும்
ததும்பிய நரை நுரையை விட...மனதில் பொங்கியது பய நுரை.

கரையோர நீரில்- உறுமீனோடு, சமாதான உலகு வேண்டி ‘வெள்ளை' அலகு
நீட்டி தவமிருக்கும் கொக்குகள்...வேற்று நாடான ஆஸ்திரேலியாவிலிருந்து
தனுஷ்கோடிக்கு காற்று வாங்க வந்திருக்கும் ஃப்ளெமிங்கோ பறவைகள்...
அமானுஷ்ய மணற்பரப்பில் மௌனம் அனுஷ்டிக்கும் சர்ச்...விசுவிசுவென
வீசுகிற காற்றுடன் கிசுகிசுக்கிற கீற்றுக் குடிசைகள்...மனித சஞ்சாரமற்ற
மணற்பாலையில் நத்தை போல ஒத்தை ஆளாக கடந்து போகிற ஒல்லி
மனிதர்...தண்ணீரால் அழிந்து போனதை நினைவுபடுத்தும் விதமாக தண்ணீர்
கொடுத்து உபசரிக்கிற தனுஷ்கோடி என வழிநெடுக வினோதமான அனுபவங்கள்.

ஒருவழியாக (இருப்பதும் ஒரேவழிதான்) அரிச்சல்முனைக்குள் நுழைந்தோம்.
இடது கையால் இந்தியப் பெருங்கடலையும், வலது கையால் வங்காள
விரிகுடாவையும் தொட்டு விளையாடும் 'கிட்டத்தில்' அலையாடி சங்கமிக்கின்றன
இரு கடல்கள். அவை விட்டு வைத்திருக்கும் மிச்சமுள்ள மணற்திட்டில்தான்
சுற்றுலாப் பயணிகள் அச்சமின்றி நின்று ரசிக்கிறார்கள்.

அந்த அரிச்சல்முனையில்தான் பாக்யராஜை சந்தித்தோம். இவர் அவர் அல்ல.
தன்னம்பிக்கை நட்சத்திரம். ஆளரவமற்ற அனாதித் தீவில்...நான்கு சவுக்குக்
கம்புகளை நட்டு, மேலே ஒரு கூரையைப் போட்டு குளிர்பானங்கள், முத்து,
பவளம், பாசிமணிகள், சங்குகள், ஜிமிக்கி கம்மல், கலர் கயிறுகள் என
சின்னதாக ஒரு கடை பரப்பியிருக்கிறார் பாக்யராஜ்.


+2 முடித்த இந்த இளைஞர் பெற்றோருடன் தனுஷ்கோடியில் வசிக்கிறார்.
இவரது அண்ணன் ராமேஸ்வரத்தில் கடை நடத்தி வருகிறார். ‘'மேல
படிக்கலையா பாக்யராஜ்?'' என்று கேட்டோம். ‘'+2 முடிச்சிட்டு காலேஜ்
போலாம்னு ஆசைப்பட்டேன். ஆனா வசதி இல்லண்ணே. வர்ற வருமானம்
வயித்துச் சாப்பாட்டுக்கும், மாத்துத் துணிக்குமே சரியா இருக்கு. இதுல
எங்கிட்டு நான் மேல படிக்கிறது? அதான் ஏதாச்சும் ஒரு தொழில் செய்யலாம்னு
இங்க கடை போட்டேன்'' என்றார்.

‘'என்ன நம்பிக்கையில தனித்தீவுக்குள்ள தன்னந்தனியா கடை வெச்சீங்க?''-
கேட்டதுமே வெள்ளையாகச் சிரித்தபடி பேசினார் பாக்யராஜ்...''டவுன்ல
(ராமேஸ்வரத்தில்) கடை வைக்கணும்னா அட்வான்ஸ் தரணும், நெறைய
சரக்கு வாங்கணும். இதுக்கு ரெண்டு மூணு லட்சம் தேவைப்படும். அதான்
ஆற அமர யோசிச்சுப் பாத்தேன். ‘சரி, அரிச்சமுனையிலயே ஒரு கடையைப்
போட்ரலாம்னு முடிவு பண்ணேன். கையில இருந்த காசோட, கடன உடன
வாங்கி ஐயாயிரம் ரூவா முதலீட்டில கடைய ஆரம்பிச்சேன். இப்போ
யாவாரம் ஜோரா நடக்குதுண்ணே'' என்றார் உற்சாகமாக.

அப்போது கடைக்கு வந்த ஒரு சுற்றுலாப் பயணி குடிக்க தண்ணீர் கேட்க,
அவரிடமிருந்த காலி பாட்டிலை வாங்கி தண்ணீர் நிரப்பித் தந்தார். ‘'எவ்ளோ
தம்பி'' என்று கேட்க...''ஃப்ரீ சார். குடிச்சுப் பாருங்க. தேனா இனிக்கும்.
ரெண்டு பக்கமும் கடலு. உப்புத்தண்ணி. ஆனா நடுவால இருக்கற மண் திட்டுல
வர்ற ஊத்துத்தண்ணி இனிப்பா இருக்கு. மனுஷ பொழப்பும் அப்படித்தாங்க
இருக்கு'' என்று ஏதோ ‘பாமர ஞானி' போல பேசுகிறார் பாக்யராஜ்.

அப்படியே நம்மைப் பார்த்து ‘'கோச்சுக்காதீங்கண்ணே. பேச்சைப் பாதியில
விட்டுட்டேன். தெனமும் நெறைய டூரிஸ்ட்டுக வர்றாங்க.
ஒத்தையா நிக்கற என்னைப் பாத்து ஆச்சரியப்பட்டு, அன்பா பேசறாங்க. இங்க
இருக்கற அத்தனை பொருள்களையும் பேரம் பேசாம வாங்கிட்டுப் போறாங்க.
கொண்டு வர்ற சரக்கை பெரும்பாலும்
வித்துர்றேன். தெனமும் இருநூறு ரூவாய்க்குக் கொறையாம லாபம் கெடைக்குது.
எப்பவாச்சும் வந்து போற டூரிஸ்ட்டுகலை நம்பி கடை வெக்கிறியேனு கிண்டலா
சிரிச்சாங்க.ஆனா போதுமான லாபத்தோட நான் சம்பாதிக்கறேன். என் நம்பிக்கை
ஜெயிச்சிருச்சு அண்ணே'' என்கிற பாக்யராஜ் முகத்தில் வெற்றிப் பூரிப்பு.


தீவிலிருந்து கடைசி டூரிஸ்ட்டும் கிளம்பியதை உறுதி செய்து கொண்ட பிறகே
தனது கடையை மூடுகிறார் பாக்யராஜ். கீற்றுக் கூரையை கீழே கிடத்தி.
கொண்டுவந்த அட்டைப்பெட்டிகளுக்குள் சரக்குகளை அடுக்கி எடுத்துக் கொண்டு
கடைசி ஜீப்பில் வீடு திரும்புவது இவரது வழக்கம். மழை சீஸனில் மட்டும்
இந்தக் கடை இருக்குமிடத்தில் கடல் பரவிக் கிடக்கும். ஆகவே அன்று கடை
லீவு.

‘'சரி, டூரிஸ்ட் யாருமே வராதபோது தனியாக இருக்க பயமாக இல்லையா?''-
உடன் வந்த நண்பர் கேட்டார். வாய்விட்டுச் சிரித்தபடி பாக்யராஜ் சொன்னார்...
‘'அண்ணே, நான் பொறந்து வளர்ந்ததெல்லாம் கடல் மென்னு துப்பின இதே
தனுஷ்கோடிதான். எஙளுக்கெல்லாம் புயல்தான் தாலாட்டு...வெள்ளம்தான்
தாய்ப்பாலு''.

நன்றி: புதிய தலைமுறை

அப்பாவின் சட்டை

Friday, August 28, 2009






ஏழாப்பு படிக்கையில்
என் முட்டிக்காலுக்கும்
கீழே தொங்கும்
அப்பாவின் சட்டை


போட்டுப் பார்த்து
பொய்மீசை முறுக்க
அப்பாவின் ஜாடையென்பர்
அம்மாவும் பாட்டியும்


தங்கச்சி பாவம்
தரையில் பாவும்
அப்பா சட்டையை
வேட்டியாக மடித்துக்கட்டி
தப்படி வைப்பதற்குள்
தடுக்கி விழுவாள்
கெக்கலிக்கும் வீடு


முனியாண்டி விலாஸ் பார்சல்
ரோஸ்ட் தோசை மாதிரி
ரெண்டு கையையும்
சுருட்டியிருப்பார் அப்பா


கசங்கிய ரூவாய் சில்லறையென
சமயங்களில் அதனுள்
புதையல் சிக்கும்


சில பொழுதுகளில்
நைந்து போன
சிகரெட் மட்டும்


எம்.ஜி.ஆர். உடுத்தின
சந்தன நிறத்தில்தான்
அப்பாவின் சட்டைகளும்


ஆறேழு வைத்திருப்பார்
அத்தனையும் அவர் வாசம்
காலரிலும் கம்முக்கட்டிலும்
பாண்ட்ஸ் பவுடர் ஜாஸ்தி


அடித்துத் துவைத்தால்
அம்மாவையே அடிப்பார்
குழந்தையை கொஞ்சுவதாக
கும்ம வேணும் நுரையால்


இஸ்திரி போட்டெடுத்தால்
அலுமினியத் தகடாக
மினுக்கணும் அவர் சட்டை


இப்போதெல்லாம்
அப்பா அணிபவை
வெள்ளை வெளிர்நீலமென
விலையதிக ரகங்களில்
நான் தந்த சட்டைகளே


ஜோப்பு நிறைய பணமிருந்தும்
விருப்ப நிற சட்டைகளை
எடுப்பதில்லையே ஏன் அப்பா?


பதில் கிடைத்தது
அப்பா சட்டைகளை
பால்யத்தில் போல
அணிந்து பார்த்ததில்...


ஒவ்வொரு சட்டையிலும்
மூச்சை நிறைக்குது
அப்பாவின் வாசத்தைவிட
புத்திரபாசத்தின் மணம்

புஷ்பா தங்கதுரையின் ராக்கெட்!

Friday, August 21, 2009

கிட்டத்துல போய்ப் பழகினா பல பேர் காட்டற நிஜமுகத்தைப் பாத்து..விட்டத்துல தூக்கு போட்டுத் தொங்கலாம் போலத்தோணும். ஆனா புஷ்பா தங்கதுரை அப்படியல்ல. சக்கரை தடவி பொய்யா பேசற வம்பான ஆளுங்களை விட..அக்கறை கலந்து உண்மை பேசற அன்பான மனிதர்.
இவரை ஒருமுறை சந்திக்கற யாருமே..மறுமுறை பாக்கப்போறப்போ சொந்த வீடு வாங்கியிருப்பாங்க!அந்த அளவுக்கு ‘சிங்கிள் டீக்கு’ சிங்கி அடிக்கறவங்களைக் கூட ஒரு சிங்கிள் பெட்ரூம் வாங்கறரேஞ்சுக்கு...கையில பொறுப்பையும், வயித்துல நெருப்பையும் கலந்துகட்டி தந்து அனுப்புவாரு!
புஷ்பா தங்கதுரை. கிளுகிளுப்பான பெயர். எழுத்துல ‘டபுள் ஆக்‌ஷன்’ மன்னன். கிறங்கடிக்கிற மாதிரி ’பெண்’மீகம் எழுதறப்போ..புஷ்பா தங்கதுரை. ரங்கநாதனைப் பத்தி ஆன்மீகம் படைச்சா..ஸ்ரீவேணுகோபாலன்.துப்பறியும் நாவல்களும், தப்பறியும் உண்மைக் கதைகளும் எழுதி வாசகர் வட்டத்தை மயங்க வைத்தவர்.
இந்த பிம்பத்தோடதான் ஒருமுறை புஷ்பா தங்கதுரையை சந்திக்கப் போனோம். வேற யாரு? நானும், அந்தணனும்தான். ‘காணாமப் போன தம்பி புள்ளைகளை மறுபடியும் கண்டுபிடிச்ச பெரியப்பா மாதிரி’பாசமா வரவேற்று உபசரிச்சாரு. வெள்ளை வேட்டி சட்டை. அதே அலைபாயும் சுருள்முடி..ஆர்வமா எட்டிப்பாக்கற கண்கள்னு சிம்பிளா இருந்தாரு.
அவரோட எழுத்துக்களைப் பத்தி விலாவரியா சிலாகிச்சுப் பேசின எங்களுக்கு விழா எடுக்காத குறைதான்.விக்ஸ் முட்டாய் முதல் செக்ஸ் கல்வி வரை அத்தனையும் அலசித் துவைச்சாரு பாருங்க..அசந்துபோயிட்டோம். ‘’எங்கூட வாங்க’’ன்னு உள்ரூமுக்கு கூட்டிட்டுப் போனாரு. கம்ப்யூட்டரை ஆன் பண்ணிஒரு ப்ராஜெக்ட்டை காட்டினாரு. வானவியல் பத்தி ஃவேறு.. ஆணிவேறா எக்கச்சக்க டீடெய்ல்ஸோட பிரிச்சு மேஞ்சிருந்தாரு.
‘’என்ன சார் இது?’’னு வியந்துபோய் கேட்டோம். மெல்லிசா சிரிச்ச புஷ்பா தங்கதுரை ‘’வானவியல் பத்திஆராய்ச்சி பண்ணிகிட்டிருக்கேங்க! விட்டா என் வீட்டு மாடியிலிருந்தே செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட்விடுவேங்க. அந்த அளவுக்கு ராக்கெட் தயாரிப்புல அப்டேட்டா இருக்கேன் சார்’’னு அதிரடியா சொல்ல..அரண்டு போயிட்டோம். இந்த வயசிலும் மனுஷனுக்கு அப்படியொரு அறிவுத் தேடல்!
அப்புறம் அப்படியே ஜாலியா அரட்டை அடிச்சோம். திடீர்னு புஷ்பா த.துரை எச்சரிக்கையான குரல்ல‘’சார்..இந்த வயசில நிறையா சம்பாதிங்க! கையில பணம் இல்லேன்னா..ரொம்ப கட்டம் (கஷ்டம்ங்கிறதை இப்படித்தான் உச்சரிக்கிறார்) சார்! கட்டுன பொண்டாட்டி கூட மதிக்க மாட்டா சார்! அதேமாதிரி எப்பாடுபட்டாவது ஒரு சொந்த வீடு வாங்கிருங்க சார். சொத்துபத்து இல்லேன்னாலும் சின்னதா ஒரு சொந்த வீடு வாங்கிருங்க சார். யாரு கஞ்சி தண்ணி ஊத்தலேன்னாலும்..பச்சத்தண்ணியக் குடிச்சுட்டுகாலாட்டிகிட்டு படுத்து தூங்கலாம் சார். இல்லேன்னா ரொம்ப கட்டம் சார்!”னு அவர் சொல்லச்சொல்ல..எங்களுக்கும் இனம்புரியாத பயமும், திடீர் துடிப்பும் வந்துருச்சு.
அப்புறம் சில வருஷ இடைவேளைக்குப் பிறகு புஷ்பா த.துரையை சந்திக்கப் போனோம்.‘மனுஷர் என்ன காயகல்பம் சாப்பிடறாரோ..அப்படியே ஜம்முன்னு இருந்தார்’. எடுத்த எடுப்புலயே‘’சார்..சொந்த வீடு வாங்கிட்டீங்களா? இல்லேன்னா ரொம்ப கட்டம் சார்’’னு சொன்னதுமே...நாங்க கையோட கொண்டு போயிருந்த ‘ஹவுஸிங் லோன் சாங்ஷன் லெட்டரை’ காட்டினோம்.
நம்பமாட்டீங்க...அவர் முகத்துல அப்படியொரு சந்தோஷம்! ‘’நல்ல பசங்க சார் நீங்க. ரொம்ப நல்லா வருவீங்க’’னு ஆசீர்வதிச்சார். எங்களுக்குள்ளயும் எதையோ சாதிச்சுட்ட குஷி. ஆனா எந்த ஒரு நல்ல விஷயம் நடக்கறதுக்கு முன்னாலயும் ஒரு பெரும் போராட்டம் நடக்கும்ல..அப்படித்தான் நடந்தது லோன் மேட்டர்லயும்.
லோன் சாங்ஷன் பண்ண அந்த தனியார் வங்கி திடீர்னு லோன் தர மறுத்திடுச்சு. காரணம் கேட்டா...சின்னப்புள்ளத்தனமா ஏதேதோ சொன்னாங்க. பல இடங்கள்ல அலைஞ்சு தேடி, நுழைஞ்சு பாத்தும்ம்ஹூம்..பாச்சா பலிக்கலை. ‘விடு’ன்னு விட்டுட்டோம். ஆனாலும் இன்னிக்கு வரைக்கும் எங்களுக்குஇருக்கற ஒரு திருப்தி...அந்த லோன் சாங்ஷன் லெட்டரை வெச்சு புஷ்பா தங்கதுரையையாவதுசந்தோஷப்படுத்தினதுதான்!



சிரிப்பு ரிப்பீட்டேய்!

Saturday, August 1, 2009

வெரைட்டியாக பல வெற்றிப்படங்கள் தந்து மிரட்டிய டைரக்டர் அவர்! ஊரும் வேண்டாம்..பேரும் வேண்டாம். மேட்டர் மட்டும் போதுங்ணா!

‘கல்லிலே கலைவண்ணம் கண்ட‘ மாமல்லபுரத்துக்குப் பக்கத்தில் ‘ஃபுல்லிலே கதைவண்ணம் கண்ட‘ நம்ம டைரக்டர் தங்கியிருக்கற ஒரு ரிசார்ட். சிலுசிலுன்னு காத்தும்..குளுகுளுன்னு ஏ.சி.யும் கலந்து கலக்கற கடற்கரையோர ரூம். அடுத்த படத்துக்கான பட்டறையை போட்டு..கதையை பட்டை தீட்டிக்கிட்டிருக்காரு டைரக்டர்.

பொழுது சாஞ்சாலே பல ‘இறக்குமதி சரக்குகளை‘ உள்ளே ‘இறக்கிகிட்டு‘ பொழுதுபோக்கறது நம்ம டைரக்டரோட வழக்கம். அன்னிக்கும் வழக்கம்போல ஜாலியா பல ‘லார்ஜ்‘களை காலி பண்ணினதோட விளைவு..அடுத்தநாள் காலையில டைரக்டரோட வயிறு செம ‘லார்ஜாகி‘ அப்செட் ஆயிருச்சு.

‘சரக்குக்கு முறுக்கு‘ முதல்..‘வீட்டுக்கு பலசரக்கு‘வரை வாங்கிவந்து சேர்க்கிற டிரைவர்தான்..அன்னிக்கும் கூடவே இருந்தாரு. விடிஞ்சதிலேர்ந்தே அஜீரணக் கோளாறால ‘வயித்துக்குள்ள வன்முறை‘ நடக்கிறதை தாங்கமுடியாத டைரக்டர்..தன்னோட டிரைவரைக் கூப்பிட்டு ‘‘கடைக்குப் போயி ‘ஜெல்யூஸில்‘ வாங்கிட்டு வாப்பா‘‘ன்னாரு!

‘மிட்டாய் வாங்கப் போற சிறுவன் மாதிரி‘ சிட்டாய் பறந்தார் டிரைவர். ரெண்டு மணி நேரமாகியும் போன டிரைவர் வரவே இல்லை. டைரக்டரோ.. வயித்தெரிச்சல், நெஞ்செரிச்சலோட சேர்ந்து ஏகப்பட்ட எரிச்சலோட காத்துக்கிடக்காரு! கரெக்ட்டா அப்போ பாத்து டைரக்டரோட செல் அடிக்குது.

எடுத்தால்..மறுமுனையில் டிரைவர் ‘‘சார்..நாலைஞ்சு கடைல கேட்டுப் பாத்துட்டேன்! அந்த ஜெல்யூஸில் இல்லேங்கறாங்க!’’ன்னார் பதட்டமாக! உடனே டைரக்டர் ‘‘பரவால்ல..டைஜின் இருக்கும். அதை வாங்கிட்டு வாப்பா’’ன்னாரு. ‘‘சரிங்க சார்‘‘னு சந்தோஷமா ஃபோனை வெச்சாரு டிரைவர்.

மறுபடியும் அரைமணி நேரமாச்சு! டிரைவர்கிட்டேர்ந்து தகவலே இல்லை. அடிமனசு எரிய..ஆவேசமாகிட்டாரு டைரக்டர். நல்லவேளையா அதே நொடி டிரைவர்கிட்டேர்ந்து ஃபோன். ‘‘என்னப்பா பண்ணித்தொலையற?’’னு எரிஞ்சு விழுந்தாரு டைரக்டர். பதிலுக்கு டிரைவர் ‘‘சார்..டைஜினும் இல்லேங்கிறாங்க சார்’’னார் கூலா!

டைரக்டருக்கோ ‘‘என்னடாது..கிழக்கு கடற்கரைச் சாலையிலிருக்கற அத்தனைபேரையும் இன்னிக்கு ‘அஜீரண சுனாமி‘ அட்டாக் பண்ணிருச்சா?’’னு செம ஷாக்! அதே அதிர்ச்சியோட ‘‘ஏப்பா..எல்லா கடையிலயுமா ஜெல்யூஸிலும், டைஜினும் இல்லேங்கிறாங்க?’’னு கேட்டிருக்காரு.

‘‘ஆமா சார்..ஏழெட்டு கடை ஏறி இறங்கிட்டேன். எங்கியுமே இல்லேன்னுதான் சொல்றாய்ங்க’’ன்னாரு அந்த அப்பாவி டிரைவர். ‘சட்‘டுன்னு டைரக்டருக்கு ஒரு ‘ஸ்பார்க்‘ அடிச்சது! ‘‘ஆஹா..அவனல்லவா நீ?‘‘ன்னு உஷாரானவர்..‘‘ஏப்பா! ஏழெட்டு கடைன்னு சொல்றியே..எந்த கடைப்பா?‘‘ன்னு கிடுக்கிப்பிடி போட்டாரு.

உடனே அந்த டிரைவர் ‘‘என்ன சார்..என்னைப்போயி இப்படி நம்பாம கேக்கறீங்களே? ஈ.சி.ஆர்.ரோட்டுல இருக்கற அத்தனை ஒயின்ஷாப்பிலயும் கேட்டுட்டேன் சார். அப்பிடி ஒரு சரக்கே இல்லேய்ங்கிறாங்க!’’ன்னார் வெள்ளந்தியா! இதைக்கேட்டதுமே ‘அடப்பாவி‘ன்னு மனசு நொந்து,,குடல் வெந்து கிடந்த டைரக்டர் வாய்விட்டுச் சிரிச்ச சிரிப்புல..சிறுகுடல், பெருங்குடலே செரிச்சுப் போயிருச்சாம்!
இதனால் அறியப்படும் நீதி: ஒரு ‘சிப்‘பந்தியை ஒயின்ஷாப்புக்கு மட்டுமே தொடர்ந்து அனுப்பாமல்..அப்பப்போ மெடிக்கல் ஷாப்புக்கும் அனுப்பறது நம்ம ‘உடல் மற்றும் குடல் நலத்துக்கு‘ நல்லது! ஏவ்வ்வ்வ்!

‘காதல் வந்தவர்களுக்கு’ மட்டும்!

Monday, July 20, 2009

தீபாவை அப்படியொரு ‘சீச்சீ‘ சிச்சுவேஷனில் சந்திப்பேன் என்று
நான் எதிர்பார்க்கவே இல்லை. தேவதை போல இருந்தவள்...வேண்டாம்.
இப்படியாகிவிட்டாளே!

நீலாங்கரையோர ரிசார்ட். ஏ.சி. கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணலாமே என்று கடற்கரையோர புல்வெளியில் ஜாலிநடை போட்டேன்.
அப்போது..அலையோர விளையாட்டில் மூன்று ‘ரிச்சான‘ ராஸ்கல்ஸ். நடுவே கிட்டத்தட்ட பாதி ‘ஏவாளாக‘ தீபா. ‘‘ஆ..என்
தீபாவா இவள்?’’.. அதிர்ந்து பார்த்தேன். அவளை விட்டு தள்ளிவந்து என் பக்கத்தில் நின்ற ஒருவன் ‘‘மச்சான்.. அந்த மாடலிங் ஃபிகர் நம்மகூடதான் இருக்கா. பேரு..சோனா. ஈவ்னிங் வந்துருடா’’ என்றான் குஷியான குரலில்.

அவன் சொன்னது..சோனா! இவளோ..தீபா! என் மூளையில்
குண்டூசிகள் குத்தின. செம ஷாக்கோடு அவளை ஷார்ப்பாகப் பார்த்தேன். அவளும் என்னை நேராகப் பார்த்தாள். ‘‘தீபா!‘‘ மனசுக்குள் கத்தினேன் நான். அவளோ காஷுவலாக என்னைப் பார்த்துவிட்டு எனக்கு முதுகு காட்டினாள்.

அடி ராட்சஸி! என்னாச்சுடி உனக்கு? வருஷங்கள் ஓடினால் கேரியர் மாறலாம். கேரக்டர் மாறுமா? 2001..ஒரு பிரபல விளம்பர நிறுவனத்தில்..கிரியேட்டிவ் டீமில் நானும், அவளும். காஃபி, கவிதை, யுத்தம், முத்தம், காதல், கலாட்டா என இருவருக்கும் ஒரே டேஸ்ட்..ஒரே அலைவரிசை. விளைவு..டாப் கியரில் எகிறிய நட்பு..எதிர்பார்த்தபடியே ‘காதலாகி கசிந்துருகியது‘!

தீபாவை நான் டீப்பாக லவ் பண்ணியதற்கு இன்னொரு
காரணம்..அவளது கருணை மனசு! அதுவும் அனாதைக் குழந்தைகள் மீது அபார
தாய்ப்பாசம் காட்டியவள். பெரும்பணக்காரக் குடும்பத்தை சேர்ந்தவள் என்பதால்
சம்பாதிப்பதில் பெரும்தொகையை அனாதைப் பிள்ளைகளுக்காக செலவிடுவாள்.

சர்ப்ரைஸாக ஒருநாள் அதிகாலை என் அறைக்கு வந்தாள். ‘என்னடி‘ என்று கேட்பதற்குள்..கட்டிப்பிடித்து முகம் முழுக்க முத்தமிட்டாள். உள்ளுக்குள் ஏறிய உஷ்ணம் உச்சியிலும் ஏற..அப்படியே நானும் அவளை இறுக்கி முத்தமிட்டேன். முன்னழகை பார்த்து திணறியது மூச்சு. முழு அழகு பார்த்து குளறியது பேச்சு. அன்று எனக்கு பர்த் டே. அதுக்கான கிஃப்ட் இது!

ஒருநாள்..வீட்டிற்கு கூட்டிட்டுப் போனாள். எங்கள் காதல் பற்றி ஏற்கனவே வீட்டில் சொல்லியிருப்பாள் போல! எடுத்த எடுப்பிலேயே ஆன்ட்டி (தீப்ஸ் மம்மி) ‘‘நிச்சயமா இது ஒத்துப்போகாது. அவங்க அப்பாவுக்கு தெரிஞ்சா எங்களை கொன்னுடுவார். எல்லாத்தையும் மறந்துடுங்க!’’ என்று கையெடுத்துக் கும்பிட்டார். அதன்பிறகு அவளை வீட்டுச்சிறை வைத்துவிட்டார்கள் அவளது பெற்றோர்.

அதே வீட்டிற்குள் என் உயிரையே பணயம் வைத்து நுழைந்து தீபாவை சந்தித்தேன் ஒருநாள்... ‘‘கண்காணாத ஊருக்குப் போயிரலாம். உன்னை
கண்கலங்காமல் நான் காப்பாத்தறேன்..வா தீபா!’’ என்றேன். ‘‘நீயும் நானும் திருட்டுத்தனம் பண்ணலையே! எதுக்காக ஓடிப்போகணும்? என் வீட்டுல பர்மிஷன் வாங்கறேன். கொஞ்சம் பொறுடா!’’ என்றாள் அதீத நம்பிக்கையோடு!

அவ்வளவுதான்..அப்புறம் தீபாவை பெங்களூருக்கு அனுப்பி
விட்டார்கள். கொஞ்சம் கொஞ்சமாக தொடர்பு அறுந்தது. அது ஒரு காதல் காலம்!
ஆனால்..இதோ..இப்போதோ..இப்படிப் பார்க்கிறேன் இவளை! என்னைக்
கண்டுகொண்டதாகத் துளிகூட காட்டிக்கொள்ளவில்லை. பெயரையே மாற்றிக்கொண்டு ‘புதுத்தொழிலில்’ இறங்கிவிட்டவளுக்கு ‘பழைய காதல்‘ குப்பை மேட்டர்தான்!

சம்பவ இடத்திற்கு ‘மீண்டு’ வந்தேன். அன்று நான் கற்பனையில்கூட ஸ்பரிசிக்கத் தயங்கிய அங்கங்களை..இன்று எவனெவனோ தொட்டுத் தடவுகிறான். ‘‘உவ்வே!’’. அவள் காதுபட சத்தமாக காறி உமிழ்ந்தேன். முகம் சுளித்துப் பார்த்த தீபா ச்சே..ச்சே..சோனா சட்டெனத் திரும்பி என்னை முறைத்துப் பார்த்தபடி வந்தாள். கண்ஜாடையிலேயே என்னை தனியாக வரச்சொன்னாள். ஏதோ ‘மந்திரிச்சு‘ விட்டமாதிரி நானும் ஓரமாக ஒதுங்கி நின்றேன்.

‘‘நான் சோனா இல்லை. தீபாதான்! டாடியோட பிசினஸ்ல பயங்கர லாஸ். வீடு, கார்னு எல்லாத்தையும் வித்து தந்தும் கடன்தொல்லை தீரலை. கௌரவமா வாழ்ந்த குடும்பம். கடைசியில சூசைட் பண்ணிக்கற நிலைமைக்கு வந்துருச்சு. வேற வழி? வீட்டுக்கு ஒரே பொண்ணு. நாந்தானே அவங்களை காப்பாத்தியாகணும்?

கை நிறைய சம்பாதிச்சாலும் கடனுக்கும், வாடகைக்குமே சரியாப் போகுது. ஃபிரெண்ட் ஒருத்தி ஐடியா குடுத்தா. தடாலடியா நானும் டிசைட் பண்ணேன். சோனான்னு பேரை மாத்தி மாடலிங்கில் இறங்கினேன். பேருக்குத்தான் மாடலிங். ஆனா பெரிய பிஸினஸ் மேக்னட்ஸ் சிலபேருகிட்ட ரெகுலரா ‘கான்டாக்ட்ஸ்‘ இருக்கு. அவங்களோட ‘விளையாட்டுப் பொம்மை‘ நான்!’’.. மூச்சுவிடாமல் தீபா சொன்னதைக்கேட்டு மூச்சு வாங்கியது எனக்கு!

கையிலிருந்த மினரல் வாட்டரை நீட்டி ‘‘குடிக்கிறியாப்பா?’’ என்று அதே கனிவோடு கேட்டாள். வெட்டி வீறாப்போடு ‘‘வேணாம்‘‘ என மறுத்தேன்.
வருத்தமான புன்னகையோடு ஒரு மடக்கு குடித்துவிட்டு தொடர்ந்தாள்..‘‘இப்போ
மாசத்துக்கு ஒரு லட்சம் சம்பாதிக்கறேன். நிம்மதியா இருக்கு ஃபேமிலி. என்னை உயிரா மதிச்சு..பாசமா வளர்த்த என் டாடி, மம்மி நல்லா இருக்கணும். அதுக்காக என்ன வேணும்னாலும் செய்வேன்!’’ என்றாள் அழுகையும், ஆவேசமும் கலந்து தெறிக்க!

அருகில் வந்தவள் என் தலைமுடியை கொத்தாகப் பிடிக்க..‘ அதிர்ந்துபோய் நின்றேன் நான்! ‘‘‘என் உடம்பை யார்யாரோ தொட்டாலும்..என் மனசை முதல்முதலா தொட்டவன் நீதான்! இப்பவும் என் மனசுக்குள்ள உயிரா ஓடறது..நானும் நீயும் காதலர்களா இருந்த அந்த அற்புதமான நாட்கள்தான்! எனக்காக உன் உயிரையே தர்ற அளவுக்கு துணிஞ்ச உன்கிட்ட ஒரே ஒரு ஹெல்ப் கேக்கறேன். செய்வியா..ப்ளீஸ்?’’ என்றாள்.

இன்னமும் என் அடிமனசில் புதைந்து கிடந்த அவள் மீதான
காதல்..அவள் இப்படிக் கேக்க வெடித்து சிதறிவிடும் போலிருந்தது! ‘‘செய்றேம்மா!’’ என்றேன் தீனமான குரலில். ‘‘ப்ளீஸ்..உன் பழைய தீபாவா உனக்கு ஒரு பாச முத்தம் தரவா..ப்ளீஸ்!’’ என்றவள்..அருகே வாசனையாக வந்து என் உதட்டில் ஒரு முத்தத்தை அழுத்தமாக தந்துவிட்டுப் போனாள்!

வாய்விட்டு கதறி அழுதேன்! காரணம்..வாய் வைத்துக் கொடுத்த ‘‘சோனா‘‘வின் முத்தத்தில்..உப்புக் கரித்தது என் தீபாவின் கண்ணீர்!
(பின்குறிப்பு: இது எனது நண்பனின் அனுபவம்!)

சென்னை டைரிக்குறிப்பு!

Thursday, July 16, 2009

அதிகாலையில் ‘சூடான டீ. காஃபிக்களுக்காக’ ‘ஆவின் பால்’கள் ஜில்லென்று வாசலில் பூத்திருக்கின்றன. ‘கௌசல்யா சுப்ரஜா‘ அரைத்தூக்கத்தில் காதினில் சுக ராகம் பாய்ச்சுகிறது.

கடற்கரையில் ‘சக்கரை‘ வி.ஐ.பி.கள், ’தொப்பை ‘தாங்கிகள் காரில் வந்து காஸ்ட்லியாக மூச்சு வாங்குகிறார்கள்.

புதுசான சூரிய ஒளியில் ‘தி ஹிந்து‘க்களும், ‘எக்ஸ்ப்ரஸினரும்‘ சுடச்சுட மொடமொடக்கிறார்கள். ரோட்டோர டீக்கடையில் ‘யுவன்ஷங்கர் ராஜா‘வுடன் அலறும் ‘ஹாரிஸ்‘. அத்தனை வாகனங்களையும் மேற்பார்வையிடும் அண்ணா மேம்பாலக் குதிரைவீரன். மெத்தப்படித்த மேதாவிகளை இரவு பகலாக பிளாட்ஃபார்மில் நிற்கவைத்து ‘சமத்துவம்‘ போதிக்கும் ‘அமெரிக்கத் தூதரகம்‘.

சாய்ந்து ஊர்ந்திடும் அரசு பஸ்களில் மூச்சுத்திணறும் நடுத்தர
வர்க்கம். அதனுள்ளே நெருக்கத்தில் ‘திருட்டு ஸ்பரிசம்‘ தேடும் ‘தகாத விரல்கள்‘.
அக்கறையாக கணவன் வயிற்றில் கையால் கொக்கி போட்டு ‘சக்கரை மொழி‘ பேசி அலுவலகம் பயணிக்கும் ‘அகல முதுகு‘ மனைவி‘மார்கள்‘.

டூ வீலரில் வித்தை காட்டுவது ‘பையனா பொண்ணா‘ என்று ‘பால் நிர்ணயம்‘ செய்வதற்குள் ‘பின் கூந்தல்‘ பறக்க ‘வ்ர்ரூம்மிடும்‘ இளசுகள். குவியல் குவியலாக அவியல் மக்களை தனக்குள் அடைகாத்திருக்கும் ‘ஸ்பென்சர் பிளாசா‘. அண்ணா சாலையில் அண்ணாந்து பார்க்கவைக்கும் அந்நாளைய அதே ‘பதினாலு மாடி எல்.ஐ.சி.‘ மாநகரச் சுவர்களில் அரை, முக்கால் நிர்வாணிகளாய் காட்சியளிக்கும் சினிமா ‘ஆதாம் ஏவாள்கள்‘.

இளமைப் பட்டாளத்தை தனது பெயருக்கு ‘பட்டா‘ போட்டுக்
கொண்டு குளுமையாக படம் காட்டுகிற ‘சத்யம் காம்ப்ளெக்ஸ்‘. அசுத்தமான மானிடர்களால் கறைபட்டு துக்கமாய் ஓடும் ‘கறுப்பு கூவம்‘. இஷ்டத்திற்கு சாணி கழித்து மனிதர்களுடன் சமமாக ஊடாடும் திருவல்லிக்கேணி மாடுகள். அழகான..அழுக்கான மேன்ஷன்களில் அடைந்து கிடக்கும் ஜீன்ஸ் பிரம்மச்சாரிகள். ‘குட்டி ஆஃப்கானிஸ்தானோ‘ என ஆச்சரியப்படுத்தும் கூட்டமான பர்தா பெண்கள்.

‘தென்மாவட்ட மனிதச் சங்கிலிகளை’ தினந்தோறும் நடத்துகிற
‘எழும்பூர் ரயில் நிலையம். ‘தேசிய ஒருமைப்பாட்டின் ஓடுதளமான‘ சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன். எத்தனையோ ‘எத்தன்களை‘ தனக்குள் பிடித்து வைத்திருந்து இன்று இடிபடப்போகும் மத்திய சிறை. ‘ஜொள் விளையாட்டு‘ மட்டுமல்ல..இளைஞர்களின் திறமையான ‘உள்விளையாட்டையும் பாரு’ என்று மகா அரங்கம் வைத்து காத்திருக்கும் ‘நேரு‘.

பல மைல்களுக்கு அப்பாலிருந்து வரும் காதலர்கள் தனது
‘முப்பாலில்‘ இருந்து மட்டுமே ‘கொட்டம்‘ அடிக்க ‘கோட்டம்‘ தந்த ‘வள்ளுவர்’. லட்சக்கணக்கானோரின் இச்சை தீர்க்க காமிரா முன் கச்சை காட்டும் கோலிவுட்
ஜிகினாப்பெண்கள். ‘இன்னோவா, ஆக்சென்ட்‘களை வழுக்க விட்டுவிட்டு ‘இன்னாபா‘ என்கிற டி.வி.எஸ். ஒல்லி வண்டிகளை மடக்கிப்பிடித்து அபராதம் விதிக்கும் டிராபிக் போலீஸ்.

‘த்தா..கீசிடுவேன்‘னு சக தமிழனையே திணறவைக்கும்
தெனாவட்டான ‘சென்னை செந்தமிழ்‘. மூன்றுமணி சுளீருக்கு பஸ் ஸ்டாப்களில் ‘ஜிலீர்‘ இளைப்பாறுதல் தரும் காலேஜ் குமரிகள். இருபது ரூபாய் தூரத்துக்கு நாப்பது ரூவா பறிக்கும் ‘சம்பல்‘ ஆட்டோக்கள். ரஜினியின் தும்மலைக்கூட எட்டுப் பக்க கவர்ஸ்டோரியாக்கி ‘எக்ஸ்க்ளூசிவ்‘ எனத் தொங்கும் வாரப்பத்திரிகைகள். சேனல் மழைக்காக டி.டி.எச். குடை பிடிக்கும் அபார்ட்மென்ட்கள்.

‘கறுப்புப்பூனைகளை‘ முன்னே ஓடவிட்டு ‘கறுப்புகளை‘
பொறுப்பாகக் காப்பாற்றப் ‘பாடுபடும்‘ அரசியல் தலைவர்கள். கொடிபிடிக்க கை தூக்கி..கோஷம் போட வாய் வளர்த்த அப்பாவி ‘தொண்டர்கள்‘. இந்த ‘கல்லாத‘ பேரையெல்லாம் பார்த்து நொந்து ‘கல்லாகிப்போன‘ ‘சிலைத் தலைவர்கள்’.

அடுத்தடுத்து புதுப்புதுசாக நுரைதள்ளும் மெரீனா அலைகள். ‘அசிங்க சங்கதி‘ நடக்கும் இடத்தை வேடிக்கை பார்ப்பதற்கான தண்டனையாக தலைகளில் எச்சம் சுமந்த சிலைகள். இருட்டிய அறையில் செய்யவேண்டியதை ‘சுண்டல் சிறுவர்களின்‘ வெறிப்புகளுக்கிடையே அரையிருட்டில் ‘கொக்கோகிக்கும்‘ சகல வயது ஆடவர்..மகளிர்.
பின்னிரவு வரை போதை மயக்கம் ஏற்றும் நட்சத்திர ஹோட்டல்கள். ஐநூறு ரூபாயில் வாய் துடைக்கும் கரன்சி சுல்தான்கள். ஆயிரக்கணக்கான ரூபாய் பில்லுக்கு அலட்சியமாய் நீட்டும் ‘கிரெடிட் கார்டர்கள்‘.

வங்கக்கடல் அலையின் தாலாட்டில் நனையாமல் ‘அணையா
விளக்கோடு‘ சதுக்கத்தில் தூங்கும் தங்கத் தமிழ்மகன் அறிஞர் அண்ணா. ‘எங்க வீட்டுப் பிள்ளை’ என்று இன்றும் தமிழ்மக்கள் மதித்துத் துதித்து..நினைவிடத்தில் ‘எங்கள் தங்கமாய்‘ மங்காமல் ஜொலிக்கிற ‘புரட்சித்தலைவர்‘ எம்.ஜி.ஆர். கடலுக்கே வெளிச்சம் வீசி..தனக்குக் கீழே இருட்டாக இருக்கிற ‘கலங்கரை விளக்கம்‘.

இரவுகளில்..குடிசை, பங்களா, ப்ளாட்ஃபார்ம், கார் என ‘இட
பேதம்‘ பாராது ‘கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன்தோன்றி மூத்த ஒரு காரியம்‘ முடித்து தூங்கிப்போகும் மானுடம்! குட்நைட் சென்னை!

‘மதுரை ஒரிஜினல் கூட்டாஞ்சோறு!’

Sunday, July 5, 2009



‘கால்மணி நேரம் சந்திச்சா போதும்..எந்த துறையிலும் கால் பதிச்சு ஜெயிச்சுரலாம்‘ங்கற நம்பிக்கையை கையில் தந்து, கைகொடுத்து அனுப்பறவர்
மதிப்பிற்குரிய மாலன் சார்!

‘சிறந்த எழுத்தாளர்..புகழ்பெற்ற பத்திரிகையாளர்..ஆழமான அரசியல் விமர்சகர்..அபாரமான ரசனையாளர்‘னு மீடியாவின் அத்தனை ‘திசைகளிலும்‘ வெளிச்சம் பாய்ச்சியவர்!

சமீபத்தில் மாலன் சாரை சந்தித்தேன். முகத்தில் அதே இளமை..பேச்சில் அதே இனிமை. மதுரை மருத்துவக் கல்லூரியில் படித்த மாலன் சார் அவர்களுக்கு ‘மண்ணின் மைந்தனான‘ எனது இந்த ‘கூட்டாஞ்சோறு‘ சமர்ப்பணம்!

'படைத்தல்..காத்தல்..அழித்தல்‘னு ஏதாவதொரு வகையில் பணி செய்து ராப்பகலாக உறங்காமல் உலாவும் ‘கடவுள்களின் ஜெராக்ஸர்களான‘ மனிதர்கள். ‘வையை எனும் பொய்யாக் குலக்கொடி‘ என மெச்சிய ‘சிலப்பதிகாரத்தை‘
பொய்யாக்கிவிட்டு.. வெள்ளம் வந்தால் மட்டுமே கங்கு கரை வரை ‘நுங்கும் நுரையுமாகப் பொங்கியோடும் ‘வைகை‘ (நதி?) கம்மாய்.

வெள்ளையன் தூக்கிலிட்ட பின்னும் அந்த கம்பீரம் குறையாமல் இன்னும் சிலையாய் வாளேந்தி நிற்கும் ‘கட்டபொம்மன்‘. நகரத்தின் இண்டு இடுக்கு சந்து பொந்தெல்லாம் ‘வ்ர்ர்ரூம்ம்‘ என வந்துபோகும் ‘அரசுப் பேருந்துகள்‘. ‘அங்கிட்டும் இங்கிட்டுமாக‘ ஜனங்கள் பரபரக்கும் ‘பெரியார் பஸ் ஸ்டாண்ட்‘. தள்ளி நின்று ஒல்லியான குரலில் ‘‘ரூம் வேணுமாணே? பார்ட்டி ரெடி‘‘னு அடித்தொண்டையில் அழைப்பு விடும் ‘அவனா நீ‘க்கள். கூட்டமாக முண்டியடிக்கும் ‘பலரக‘ யூனிஃபார்ம் ‘துணி(மாணவ) மணிகள்.‘

அள்ளிச்செருகிய கூந்தல் கலையாமல்..வாயில் வெத்தலையையும்,கையில் கூடையையும் இடுக்கியபடி மிடுக்காக நடக்கும் ‘காதுவளத்த‘ பாட்டிகள். கிட்டத்திலேயே ‘சதக் சதக்‘ கொலையை ரத்தமும் மையும் உலர்வதற்கு முன்னரே முந்தித்தரும் ‘தினத்தந்தி‘ ஆபீஸ். அன்று பூத்து இன்று குலுங்கி என்றுமே வாசம் ‘கும்ம்‘மிடும் அதே வெள்ளைவெளேர் ‘மதுரை மல்லி’.

பேச்சுக்குப் பேச்சு ராகம் கலந்த ‘அண்ணே‘ போடும் ‘ஆறிலிருந்து அறுபது வயதான‘ தம்பிகள். நண்டு சிண்டுகள் முதல் பெண்டுலம் கழண்ட தொண்டு கிழம் வரை சகலருக்கும் ஒரு காலத்தில் ‘முண்டு அணிந்த குண்டு பெண்டுகளால்‘ வெள்ளித்திரையில் ‘கிளுகிளு‘ விருந்தளித்த ‘தங்க ரீகல்‘.

எதிரே..‘இதைத்தான் அமிர்தம்னாய்ங்களோ‘னு வியக்கவைத்து.. சுடச்சுட கமகமக்க தேக்கிலையில் வாங்கி ‘க்ளுக் க்ளுக்‘னு விழுங்க..தொண்டையிலேயே கரைந்து உயிர்வரை இனிக்கும் ‘திருநெல்வேலி அல்வா‘. மதுரையை பத்திரமாய் ஆண்ட ராணி மங்கம்மாவின் ‘மிச்ச நினைவுத்துணுக்காய்‘ மங்கம்மா சத்திரம்.

‘க்ளிப், கர்ச்சீப், ஜீன்ஸ், சட்டை, பேனா, டி.வி, கேசட், ஸ்டிக்கர், கடுக்காய், டி.வி.டி, பெல்ட், கத்தி, காபித்தூள்..என்ன வேணும்ணே‘னு சுத்தி நின்னு கத்திக்கூப்பிடும் டவுன்ஹால் ரோட்டில்..உதிரியாகச் சிதறி நிற்கும் ‘மினி மனித
டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள்‘. ‘சொக்க‘ வைக்கும் ‘மீனாட்சி‘ கோபுரங்கள். அதன்
மாடங்களில் வாடகையின்றி குடியிருக்கும் ஜாலியில் சடசடக்கும் புறாக்கள். சரிசனமாக தரிசனம் செய்து திரும்பும் பக்தர்கள். எப்போதுமே நெரிசலான நாலுமாசி வீதிகள்.

‘பசும்பொன்‘ நிறத்தில் பிரகாசிக்கும் கோரிப்பாளையம் ‘தேவர்‘ சிலை. நாற்புறமும் ‘டூ..த்ரீ..ஃபோர்..சிக்ஸ் வீலர்களில்‘ காதலி, மனைவி, அம்மா, பிள்ளை, பங்காளிகளுடன் சிக்னலில் சிக்கி நிக்க..நடுவே சுகமாக ‘கம்புக்கூடு‘ சொறியும் தொத்தலான போலீஸ்காரர். ‘வைகையில்‘ குளித்து வந்த ஒட்டுமொத்த மதுரைக்கே கட்டிமுடிக்கற அளவுக்கு ‘அஞ்சாநெஞ்சனின்‘ விசுவாசிகள் கட்டிவைத்திருக்கிற ‘விசுவரூப‘ விளம்பர
போர்டுகள்.

அசிட்டிக் வாசம்‘ கமழும் அரசு ராசாசி மருத்துவமனை. அழுக்காக
நோயாளிகள்..விசனத்தோடு ‘உறமுறைகள்‘..சிரிப்போடு கடக்கும் டாக்டர்கள். அந்த ‘முண்டாசு கட்டிய முறுக்கு மீசைக்காரன்‘ ஒரு காலத்தில் தன் ‘குஞ்சுகளுக்கு‘ ‘அக்னி‘ ஊட்டிய அதிசயம் நிகழ்ந்த ‘சேதுபதி மேல்நிலைப்பள்ளி‘.

பிரிட்டிஷ் காலத்துக் கம்பீரத்துடன் கலெக்டர் ஆபீஸ். சராசரி
வாழ்நாளான ஐம்பதாண்டுகளில்&முப்பது வருஷமாக வீட்டுப்பட்டா கோரி அலையும் சுத்துப்பட்டு 18 பட்டி ஆம்பளை பொம்பளைகள். ‘முதியோர் பென்ஷனுக்காக‘ பியூனையே ‘கலைக்டராக‘ நினைத்து கெஞ்சும் ரவிக்கை போடாத மூதாட்டிகள். கலெக்டர் தவிர..மற்ற மாந்தர்களையெல்லாம் ‘அற்ப புழுவே‘ன்னு பார்த்துச் செல்லும் கிளார்க்குகள்.

‘கமுக்கமாக‘ பல சம்பவங்களை புதைத்து வைத்திருக்கும் ‘தமுக்கம் மைதானம்‘. புத்தக மூட்டை சுமக்கும் வயசுல சாக்கு மூட்டை சுமந்து பேப்பர்
பொறுக்கும் ‘போஷாக்கு போதாத‘ ‘இந்தியாவின் எதிர்காலம்‘. அசையாத சைவர்களையும் அசைத்துவிடும் ‘அசைவ முனியாண்டி, தலப்பாகட்டி நாயுடு‘கள்.

ஒவ்வொரு கார்த்திகைத் திருநாளன்றும் ‘இந்து..முஸ்லிம்‘ ஒற்றுமைக்கு ஏதாவது ஊறு நேருமோ என ‘மலை உச்சியில் தீபத்தை‘ கட்டிக்கொண்டு பதற்றத்தோடு காத்திருக்கும் ‘திருப்பரங்குன்றம்‘. ஹாலிவுட் நடிகன்லேர்ந்து இன்னிக்கு காலையில் அறிமுகமான ‘புதுமுக ஜுஜுபி‘வரை அகில உலகத்துக்கே ரசிகர் மன்றம் வைத்து ‘கலை‘ வளர்க்கும் ‘ஜிகர்தண்டா‘ ரசிகர்கள். எக்கச்சக்க மேதைகளை ‘உருவாக்கி..உள்ளடக்கி’ வைத்துள்ள ‘காமராசர் பல்கலைக்கழகம்‘.

‘ஐயோ பசி‘ன்னு வந்தோர்க்கு எந்த நேரமும் ‘ஐயா..ருசியா புசி‘ன்னு படையல் போடுற ‘டண்டக்கு டண்டக்கு‘ கொத்துபரோட்டாக்கள். ‘அலாவுதீன்‘ பறக்கும் இட்லிகள். மணிரத்னம் பட ஷூட்டிங்கிற்கு தன் புராதன ‘மகாலை‘ வாடகைக்கு விடும் ‘நாயக்கர்‘. ‘கஞ்சா புகையோடு‘ சந்துகளில் அஞ்சாமல் நெளிந்து ஓடும் சைக்கிள் ரிக்ஷாக்கள். ‘பாட்ஷா‘ ஸ்பீடில் பாய்கிற ஆட்டோக்கள். ஊருக்குப் போகிற ‘அவசரத்தில்‘ ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்டு ‘கட்டணக் கழிப்பறை‘ முன்னே நிற்கிற ‘அவஸ்தை பயணிகள்‘.

‘தல‘யை வம்புக்கிழுத்த ‘தளபதி‘ ரசிகருக்கு கத்திக்குத்து‘னு
அசால்ட்டா அடுத்தநாள் காலைப் பேப்பருக்கு செய்தி கொடுத்துவிட்டு..மத்திய சிறையில் ‘கைதியாகவும்‘, ஆஸ்பத்திரியில் ‘அவசர வார்டிலும்‘ தூங்கும் ‘அவசர ஆவேச வாலிபர்கள்‘. ‘உலக நாயகனையே‘ ‘புன்னகை மன்னனாக்கிய‘ பேராசிரியர் கு. ஞானசம்பந்தன். ‘‘ம்..கொல்றாய்ங்கய்யா‘‘னு குலுங்கக் குலுங்கச் சிரிக்கவைத்து அலுங்காமல் ‘தமிழ்‘ போதித்து.. நிறத்திலும், பேச்சிலும் ‘கருப்பட்டியாக‘ இனிக்கும் ‘சாலமன் பாப்பையா‘. வர்றேண்ணே!

‘ரஜினி அங்கிளும்‘..சிறுமிகளும்!

Friday, July 3, 2009





வெள்ளிநுரை விளையாடற அலையோரமா நின்னா.. நாம ‘மீனவ நண்பன்‘! கொஞ்சம் தள்ளி உழைப்பாளர் சிலையோரமா நின்னா..நாம ‘உழைப்பாளி’!
ரிப்போர்ட்டர்ங்கறதால..‘போர்ட்டர்‘ முதல் ஓட்டுநர் வரை எல்லாருமே நமக்கு நல்ல
தோஸ்த்துகதான்!

‘அம்மா மெஸ்‘ எதிரே..ஆட்டோக்காக நிக்கறேன். ‘முந்தி வர்ற இந்த மூணு சக்கர தேரெல்லாம்‘ நாலுசக்கர வாகன ரேஞ்சுக்கு ரேட் கேக்க..அஞ்சி நின்னேன். அப்போ பாத்து வந்த ஒரு ‘ஆட்டோபாந்தவன்‘..‘‘தலைவா! எப்டி க்றீங்க? ஏறி குந்துங்க. வீட்டாண்ட இட்டர்றேன்!‘‘னு பாசமா சொல்ல..‘அட..நம்மாளு‘னு ‘ஆட்டோமேட்டிக்கா‘ ஏறி உக்காந்தேன்.

அந்த ஆட்டோ டிரைவர்..மணிகண்டன். பார்வைக்கு கொஞ்சம் முரடா தெரிஞ்சாலும்..‘தார் பூசின தங்கக்கட்டி‘! சூப்பர் ஸ்டார் ரஜினியே இவரை கூப்பிட்டு பாராட்டியிருக்காரு! ‘நிஜ பாட்ஷா‘வை ‘சூப்பர் பாட்ஷா‘ மெச்சினதுக்கு காரணம்?

‘ஆறறிவு எந்திரன்கள்‘ பரபரப்பா ஓடிகிட்டிருக்கற சென்னை
மாநகரம்! ரத்தக்கண்ணீர் வடிக்க வைக்கிற இந்த நகரத்துல..ஆனந்தக்கண்ணீர் வழியவைக்கிற சம்பவம் அபூர்வமா நிகழும். அப்படி ஒரு சம்பவம்..சில வருஷங்களுக்குமுன்னால சூப்பர் ஸ்டார் வீட்டுக்கு முன்னால நடந்துருக்கு!

தி.நகர் பஸ் ஸ்டாண்ட். மனிதாபிமானத்தை ‘பான்பராக்கு‘ போல மென்னு துப்பற மனுஷங்களை பராக்கு பாத்தபடியே நின்னுகிட்டிருக்காங்க பதிமூணு வயசு சிறுமிகள் ரெண்டுபேர். ‘எப்படியாவது ரஜினி அங்கிளை நேர்ல பாத்துடணும்’ங்கற ஆசையில அன்னை, தந்தைக்குத் தெரியாம சேலத்துலேர்ந்து சென்னைக்கு பஸ் ஏறி
வந்துட்டாங்க.

அசட்டுத்துணிச்சல்ல அசலூருக்கு வந்தாச்சு. ஆனா ‘ரஜினி வீட்டுக்கு எப்படி போறது?’ வழிதெரியாம முழி பிதுங்கி நிக்கறாங்க. வழக்கம்போல வழியில வந்த ஒரு ஆட்டோ டிரைவர் இந்த சிறுமிகள்கிட்ட நைஸா பேச்சு குடுக்கறாரு. வெள்ளை மனசுப் பிள்ளைகள் ரெண்டு பேரும் விஷயத்தை சொல்லிட்டாங்க!

‘‘அடடே! நானும் ரசிகன்தாம்மா! உங்க ரெண்டுபேரையும் ரஜினி அங்கிள் வீட்டுக்கே கூட்டிட்டுப்போறேன் வாம்மா!’’னு ஆட்டோக்காரர் சொல்ல.. ‘‘சரிங்க அங்கிள்’’னு அப்பாவிப்பிள்ளைகளும் ஆட்டோல ஏறிக்கொள்ள..சீறிக்கிளம்பிச்சு ஆட்டோ! சுத்திமுத்தி நின்ன லோக்கல் ஆசாமிகளும் ‘கலி முத்திப்போச்சுமா‘னு கிலியை கிளப்பிட்டாங்க!

பாசமுள்ள வாசகர்களே! இனிமேல் நீங்க படிக்கப்
போகும் சம்பவம்..ப்ச்! என்னத்த சொல்ல? வேண்டாம்..தொடர்ந்து படிங்க!

‘விருட்‘னு வந்து நிக்கற ஆட்டோலேர்ந்து ரெண்டு சின்னப்பிள்ளைக செம குஷியோட ஓடிவர்றாங்க! இதைப்பாத்து குழம்பிப் போனாங்க போயஸ் கார்டன்ல இருக்கற ரஜினி வீட்டு செக்யூரிட்டிகள்! தொடர்ந்து ஆட்டோ டிரைவரும் ஆசையா வந்து ‘பாவம்..சின்னப்புள்ளைக ஆசைப்பட்டுச்சு! அதான் கூட்டி வந்தேன்‘‘னு ‘கைப்புள்ளத்தனமா‘ சொல்றாரு.

நொந்துபோன செக்யூரிட்டிகள் ஆட்டோ டிரைவர்கிட்ட ‘‘ஏப்பா.. அந்த புள்ளைகளுக்கு வெவரம் பத்தாது. ஆனா உனக்கோ வெவரமே கெடையாது‘‘னு திட்டிமுடிச்சாங்க. வந்த ‘ரெட்டைவால்களோ’ ‘‘ரஜினி அங்கிளை பாக்காம போக
மாட்டோம்’’னு அழுது அடம்புடிக்க..‘‘சார் படம் புடிக்க போயிருக்காருமா‘‘னு பதில்
சொல்லியும் ‘புள்ளப்பூச்சியா‘ குடைஞ்சிருக்குக புள்ளைங்க!

ஒருவழியா கெஞ்சிக் கூத்தாடி ‘ரஜினி ஃபோட்டோ‘ல்லாம் தந்து பிள்ளைகளை சமாதானப்படுத்தி ‘ஆத்தாடி‘ன்னு பெருமூச்சு விடறதுக்குள்ள..அடுத்த பிரச்னை வந்துருச்சு! ‘இந்த வாண்டுகளை ஊருக்கு திருப்பி அனுப்பறது எப்படி?‘னு பதறுறாங்க செக்யூரிட்டிக! அந்த ஆட்டோக்காரரோ ‘‘பத்திரமா நான் அனுப்பி வெக்கிறேங்க!‘‘னு அக்கறையா சொல்றாரு.

‘‘தம்பி..உன்னை நம்பி எப்படிப்பா அனுப்பறது?’’னு செக்யூரிட்டிகள் மறுக்க..‘‘தலைவர் மேல சத்தியமா நான் பத்திரமா அனுப்பிச்சிடறேங்க!‘‘னு ஆட்டோக்காரர் கெஞ்ச..‘போயஸ் கார்டன்ல பழைய கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் படம்
மாதிரி‘ ஒரு ‘பாசப்போராட்டமே‘ நடக்குது. இதுக்கு நடுவே அந்த பிள்ளைககிட்ட ஒரு செக்யூரிட்டி நைஸா அட்ரஸை விசாரிக்கறாரு.

‘கிளிப்பிள்ளையா‘ பிள்ளைகள் வீட்டு அட்ரஸை ஒப்பிக்க..‘அடப்
பாவிப்பய புள்ளைகளா‘‘னு ஒரு செக்யூரிட்டி சந்தோஷத்துல அணில்பிள்ளையா குதிக்கறாரு. ஏன்னா..அதுல ஒரு புள்ளை அவரோட பொண்டாட்டி வகையறாவுல சொந்தக்காரரோட மகள்! அப்புறமென்ன..அந்த சொந்தகாரருக்கு தகவல் சொல்றாங்க. அங்கேதான்
க்ளைமாக்ஸே!

‘‘ஆமாமுங்க! முட்டாயை தின்னுகிட்டுத் திரிஞ்ச ரெண்டு
முட்டாப்பய புள்ளைகளும் ரஜினியை பாக்கணும்னு மெட்ராஸ்க்கு ஓடிவந்துருக்குன்னு
ஆட்டோக்காரத் தம்பி மணிகண்டன்ங்கறவர் ஃபோன் பண்ணி சொல்லிட்டாருங்க! அதான் அவங்க தாய்மாமன் கௌம்பி வந்துகிட்டிருக்காருங்க!’’னு ஒரு பிள்ளையோட அப்பா
சொல்ல..நம்ம ஆட்டோ மணியோட அக்கறையை பாத்து கண்கலங்கிட்டாங்க செக்யூரிட்டிகள்!

இந்த தகவல் நம்ம காதுக்கு வர..ஆட்டோ மணியை பிடிச்சு
‘அன்புள்ள் ரஜினிகாந்த்!‘னு ஒரு ஃபோட்டோ ஸ்டோரி ‘குங்குமம்‘ இதழில் எழுதினேன். அந்த கட்டுரைல ஃபைனல் டச்சா ‘இந்த சென்னைக்கு ‘அன்புள்ள ரஜினிகாந்த்‘ என்று ஆசையோடு ஓடிவந்த அப்பாவி சிறுமிகளை பத்திரமாகப் பாதுகாத்த ‘பாட்ஷா‘ மணிகண்டனுக்கும், அவர்களை பொறுப்பாக வீட்டுக்கு அனுப்பிவைத்த ‘ஊர்க்காவலன்‘ செக்யூரிட்டிகளுக்கும் கோடி கங்க்ராட்ஸ்!’’னு எழுதியிருந்தேன்.

கட்டுரை சூப்பர் ஸ்டாரின் பார்வைக்கு போனது. ஆட்டோ மணியின் வீடு தேடி ‘மனிதன்‘ அழைப்பு வந்தது. ராகவேந்திரா மண்டபத்துக்கு வந்து
கால்தொட்ட மணியை ரஜினி தோள்தொட்டு பிடிச்சு ‘‘நீதான் நிஜ ரஜினி!‘‘னு கண்கசிய
பாராட்ட..கதறி அழுத மணிக்கு ‘அப்போது வழிஞ்ச கண்ணீர் அவ்வளவு இனிப்பா இருந்துச்சாம்!’

‘மர்மயூகி‘ கமல்!

Monday, June 29, 2009




கலைஞானி கமல் பத்தி கடந்த பதிவுல ‘ஏதோ ஊதுபத்தி‘ அளவுலதான் சொல்லிட்டமோனு மனசுக்குள்ள ஒரு யோசனை வாசனையா புகையுது!

கார்ட்டூன்ல பாக்கற ‘காட்டு யானையை‘ ‘நேர்ல காட்டு‘ன்னா..என்ன செய்வான் இந்த ஏழை இளைஞன்? அதான்..கமல்ஹாசனை காட்டிட்டு போறேன்!

இப்போதைக்கு கமல் ‘நரை, திரை, மூப்பு‘ கடந்த புத்தர்! இன்னும் கொஞ்சம் பழுத்தா இவரே ஒரு சித்தர்! ‘கிண்ணத்தில்‘ தளும்பறதை பாத்ததுமே சிலபேரு தத்துவமா புலம்பறதை கேட்டிருப்போம். ஆனா நாம கேட்ட கேள்விக்கு தன் எண்ணத்தில் பட்டதை பட்டென சொல்லி அசத்தற அசாத்திய திறமைசாலி கமல்!

கேள்விக்குறியை ஆச்சரியக்குறியா மாத்தற கமலிடம் ஒரு கேள்வி கேட்டாங்க..‘காலையில் எழுந்ததும் யார் முகத்தில் விழிப்பீர்கள்?’. ‘பாசாங்கா ஒரு பதிலைச் சொல்லி ‘பேஷா இருக்கே‘னு கமல் பேர் வாங்கியிருக்கலாம்! ஆனா ‘அதிமேதாவிகளையே வெள்ளாவியில போட்டு வெளுக்கறமாதிரி‘ அப்பட்டமா இப்படி பதில் சொன்னார்
கலைஞானி..‘‘காட்டில் இருந்தால் நரி முகத்தில். கட்டிலில் கிடந்தால் ஸ்திரி முகத்தில்!’’

சிரிச்சுகிட்டு பேசறப்போ கூட கமல் நம்மளை பிரிச்சு
மேஞ்சுருவாரு! ‘விருமாண்டி‘ ப்ரஸ்மீட். நடுநாயகமா ‘மருதநாயகம்‘ உக்காந்திருக்காரு.
இடம், வலமா இருந்த நிருபர்கள் படம் பத்தி கேக்கறோம். அப்போ நான் என் பங்குக்கு ‘‘விருமாண்டிக்காக ரெண்டு காளைகளை பயங்கரமா வளக்கறீங்களாமே?’’ன்னேன். உடனே வாய்விட்டு சிரிச்ச கமல் ‘‘ஐயையோ..பயங்கரமால்லாம் வளர்க்கலீங்க! புண்ணாக்கு,
தீவனம்னு போட்டு சாதாரணமாதான் வளர்க்கறோம்!’’னு சொல்ல..தறிகெட்டு சிரிச்சோம்.

‘சிஃபி.காம்‘க்காக எனக்கு கமல் ‘சிறப்புப்பேட்டி‘ தந்தப்போ.. உறைப்பா ஒரு கேள்வி கேட்டேன். ‘‘மகாநதி‘ பட வில்லன் மாதிரி நிஜத்துல யாராவது தன்னோட கையையே வெட்டிக்குவாங்களா?’ன்னேன்.

‘‘இதைவிட கொடூரமால்லாம் சம்பவம் நடந்துருக்குங்க. எங்க ஊர்ல ஒருத்தனோட கையை எதிராளிங்க பாதி வெட்டிட்டாங்க. உடனே அவன் என்ன பண்ணான் தெரியுமா? அதே கையை முழுசா வெட்டி..அதை இன்னொரு கையில எடுத்துகிட்டு ரத்தக்களறியா சண்டை போட்டிருக்கான்!’’னு கமல் சொல்ல..கைகட்டி கேட்டுகிட்டேன்.

எனக்கு ரொம்பநாளா ஒரு டவுட்டு! ‘எப்பவுமே பிஸியா இருக்கற கமல் தனிமையா இருக்கும் சமயங்கள்ல என்ன செய்வார்?‘. நாக்குல நின்ன கேள்வியை போறபோக்குல கமல்கிட்டயே கேட்டுட்டேன்.

‘‘என்னை தட்டி எழுப்பற கேள்வி இது. என்ன..புரியலைங்களா? நண்பர்கள்கூட இல்லாத ஒரு தனிமை கிடைச்சுதுன்னா..உடனே நான் கண்மூடி
தியானத்துல ஆழ்ந்துருவேன்! ‘ஆஹா..கமல் தியானம்‘னு கவர்ஸ்டோரி கிடைச்சுருச்சுனு அவசரப்பட்டு முடிவு பண்ணிராதீங்க!’’னு சஸ்பென்ஸா சிரிச்சாரு கமல்.

சில ‘டிக்டிக்டிக்‘குக்கு பிறகு அவரே ‘டக்‘குன்னு சொன்னாரு..
‘‘தியானம்னு சொன்னது வேறெதுவுமில்ல..நல்லா நிம்மதியா தூங்குவேன்! சான்ஸ்
கிடைச்சா கொடைக்கானல் போயிருவேன். அப்படியே மலைக்குள்ள ஒரு இலை மாதிரி கிடந்து சுகமா தூங்கிருவேன்!’’னாரு ‘தமிழ் சினிமாவை விழிக்கவெச்ச இந்த மகா
கலைஞன்‘!

அதுசரி ‘நம்மவர்களே‘! இந்த பதிவுல போட்டுருக்கற கமல்
ஃபோட்டோ எப்போ..எதுக்காக எடுக்கப்பட்டதுன்னு கரெக்ட்டா சொல்ற ‘மர்மயூகி‘களுக்கு ஸ்ரீதர் சார் ‘சிரிப்பு பரிசு’ வழங்கறார் என்பதை ‘ஏழ்மையுடன்‘ தெரிவிச்சுக்கறேங்க!

 
சுடச்சுட - by Templates para novo blogger