Wednesday, April 22, 2009
'மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம்..
கோயிலின் கருவறைக்குள் எவருமே நுழையக்கூடாது என்ற துருப்பிடித்த மரபுச் சங்கிலியை உடைத்தெறிந்து 'அம்மனுக்கு பெண்கள் உட்பட சகலருமே பூஜை செய்யலாம்' என்று கதவு திறந்த முதல் ஆலயம் இதுதான்!
கோயிலுக்கு உள்ளே 'அம்மா' என வணங்கப்படும் பங்காரு அடிகளாரின் வீடு.. பேட்டிக்காக நான் போனபோது ஏராளமான பக்தர்கள் அடிகளாரின் ஆசிபெற வாசலில் காத்திருந்தனர். 'வாங்க! அம்மா கூப்பிடறாங்க! வாழ்க்கையில் உங்களுக்குக் கிடைச்சிருக்கிற அற்புதமான வாய்ப்பு இது!'' என்றபடி என்னை அழைத்து சென்றனர்! உள்ளே...
அலைபாயும் சுருள்முடி.. 'பளீர்' மேக்கப். பளபளக்கும் பட்டாடை. கமகமக்கும் பர்ஃப்யூம். கையில் கமண்டலம்.. இப்படி சாமியாருக்கே உரிய எந்த பந்தாவும் இல்லாமல், 'நம்ம ஊர் பெரியவர்' போல ஒரு நாற்காலியில் சிவப்பு சால்வை போர்த்தி, சிரித்த முகத்துடன் அமர்ந்திருந்தார் அடிகளார்!
''என்ன விசேஷம்? திடீர்னு என்னைப் பார்க்க வந்திருக்க?''
''உங்க பேட்டி வேணும்னு வந்திருக்கேன்!''
''யாருக்குமே நான் பேட்டி தர்றதில்லையே! ஏன்னா பேட்டி தந்தா பிறகு போட்டி வந்துடுமே!'' என்று லேசாகச் சிரித்தார்.
''நிச்சயம் தருவீங்கனு நம்பிக்கையோட வந்திருக்கேன்!''
சில நொடிகள் என்னைக் கூர்மையாகப் பார்த்த அடிகளார் கண்ணை இறுக மூடி.. கை உயர்த்தியபடி பேசத் தொடங்கினார்..
''உலகத்துல உழைக்கணும்! பொழைக்கணும்! கிளி, புறா மாதிரி சந்தோஷமா வாழ்ந்துட்டு போகணும்! குப்பையில இருப்பவன் குபேரனாகணும். அடிமட்டத்துல இருப்பவங்களுககுத்தான் தொண்டு செய்யணும். எத்தனை மாடி கட்டிடம் கட்டினாலும் அஸ்திவாரம் கீழேதானே இருககு. கீழே இருப்பவன் திருடனா மாறிட்டான்னா..அப்புறம் எல்லாமே போச்சே. அதனால அவங்களைத்தான் முன்னேத்தணும்!''
என்று சமூக நடப்புகளை அலசி தீர்வுகளையும் சொன்னார்.
அப்போது சுவரிலிருக்கும் கடிகாரம் சங்கீதமாக ஒலிக்கிறது! அடிகளார் அதைச் சுட்டிக்காட்டியபடியே..
''பார்த்தியா.. உள்ளே செல் இருக்கிறதாலதான் அந்த கடிகாரம் கரெக்டா பேசுது! அதுமாதிரி.. மனுஷனுக்கு உள்ளே இருக்கற ஆன்மாதான் பேசணும்! நான் கைகாட்டி மாதிரி! எது நல்லவழியோ அதைக் காட்டறேன்!'' என்று முடித்தவர்.. சில நொடிகள் தனது கண்களை மூடி.. வலதுகையை உயர்த்தி பிரார்த்தித்து விட்டு, ''இந்தா'' என்றார்! நானும் பவ்யமாக கை நீட்ட.. அடிகளாரின் கையிலிருந்து 'செவேர்' நிறத்தில் குங்குமம் கொட்டியது! மறுபடியும் ''இந்தா! இதையும் வெச்சுக்கோ'' என்று இன்னொரு முறை தனது வலது கை மூலம் குங்குமம் வரவழைத்துத் தந்தார்!
அருகிலிருந்த தனது உதவியாளரை அழைத்து கோயில், ஆஸ்பத்திரி, காலேஜ் எல்லாத்தையும் சுத்திக்காட்ட சொன்னார்.
திரும்பி வந்தபோது உள்ளே.. அதே நாற்காலியில், அதே சிரிப்போடு அப்படியே உட்கார்ந்திருந்த அடிகளார், ''என்ன நல்லா பார்த்துட்டியா? எப்படி இருக்கு? என்ன நினைக்கிறே?'' என்று என் கருத்தைக் கேட்க, ''ஒரே பிரமிப்பா இருக்கு! இவ்வளவையும் 'அம்மாவே' சாதிச்சிருக்கீங்கன்னா.. நிச்சயமா இது மனிதச் செயல் அல்ல!'' என்றோம். சிரித்தபடி என்னைப் பார்த்த அடிகளார்.. தொடர்ந்து..
''நார்த்தை (வட இந்தியா) பார்த்து திட்டிகிட்டே இருக்கோம்! ஆனா நார்த்துல 'நாத்து' நடறான்! சவுத்ல (தென்னிந்தியா) 'சவுக்கு' நடறான்! என்ன.. புரியுதா? வடக்கே விவசாயம் செழிப்பா இருக்கு! இங்கேயோ வறட்சியாதானே இருக்கு!'' என்றார்.
அப்போது அடிகளாரை ஃபோட்டோ எடுக்க ரெடியானபோது, ''நானென்ன நடிகனா? மேக்&அப் ஏதும் போடலியே'னு சிரித்தபடி சம்மதித்தார்!
மூலைக்கு மூலை பெருகிவரும் போலிச்சாமியார்கள் பற்றி கேட்டபோது..
''ஊர்ல இருக்கிற நாயை கல்லால் அடிச்சா வீணாக கடிக்க வரும். நான் அருள்வாக்கு சொன்னா இந்தியாவையே வாங்கிருவேன்.என்னைப் பொறுத்தவரை நான் ஒரு வேலைககாரன். ஆன்மாவை சுத்தம் பண்றதுதான் என்னோட வேலை. சாதாரணமா ஒரு பானையை கூட ஓட்டை இருக்கானு தட்டிப் பார்த்துதானே வாங்கறே. உண்மை எது.. பொய் எதுனு நீயே புரிஞ்சுக்கோ. ஒரு உதாரணம் சொல்றேன். நாட்டு நாயைப் பாரு, எப்பவும் வீட்டுககு வெளியவே பாத்துட்டிருககும். ஆனா இந்த ஃபாரின் நாய் இருககே, அது எப்படா பிஸ்கட் போடுவான்..விஸ்கி ஊத்துவான்னு நம்மளையே பாத்துட்டிருககும். என்ன புரியுதா?''னு வலதுகையை தூக்கி ஆசிர்வதித்தார்.
''பேட்டி எடுககறப்போ, மத்தவங்ககிட்ட கேள்வி கேட்கற மாதிரியெல்லாம் அடிகளார்கிட்ட கேட்காதீங்க. அவங்க என்ன சொல்றாங்களோ அதைமட்டும் கேட்டு'கோங்க!'' என்று பேட்டிககு முன்னரே அடிகளாரின் உதவியாளர் சொல்லிவிட்டதால் அவர் பற்றிய பர்சனல் கேள்விகளையெல்லாம் தவிர்த்துவிட வேண்டியதாகிவிட்டது.
அப்போது மாலை 4 மணி. மீண்டும் கடிகாரம் சிணுங்க.. ''அடடா.. ரொம்ப தாகமா இருக்குல''னு அக்கறையா விசாரிச்ச அடிகளார், ''கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா!'' என்றார். உடனே உதவியாளர் ஒரு டம்ளரில் கொண்டு வந்த தண்ணீரை இடது கையால் வாங்கி, நமது கையில் கொஞ்சமாய் ஊற்றினார்! குடித்துப் பார்த்தேன்! லேசான உப்பு ருசி!
அதே டம்ளரிலிருந்து தண்ணீரை தனது வலது கையில் ஊற்றி தீர்த்தம் போல எனக்குத் தர, இப்போது குடித்தால்.. அட.. மினரல் வாட்டர் டேஸ்ட்!
''எப்படியிருக்கு,'' & அடிகளார்!
''ரெண்டு தண்ணீருக்கும் ருசி வித்தியாசம் இருக்குங்க!'' & நான்!
புன்னகைத்தவர், அதே தண்ணீரை மூன்றாவது முறையாக எனது கையில் ஊற்ற, இப்போதோ 'இளநீர்' போல தித்தித்தது!
''என்ன, மூணுக்குமே வித்தியாசம் தெரிஞ்சுதா?'' என்றார்! ''நல்லாவே தெரிஞ்சுதுங்க!'' என்றேன் வியப்புடன்!
''வேறென்ன?'' என்பதுபோல பார்த்தவரிடம், ''மக்களுக்கு ஏதாவது அருள்வாக்கு சொல்லுங்க!'' என்றேன்!
ஆரம்பித்தார் அடிகளார்.. ''சேர்த்து வைச்சா சேறாயிடும்! சேர்த்து வைக்காம சோறாக்கு! எல்லோருக்கும் பயனாக்கு! பிறரை உண்மையாக நேசி! ஆனா, மத்தவங்க மதிக்கணும்னு போலியாக நேசிக்காதே! நான் உனக்கு வழிகாட்டினால், நீ நாலு பேருக்கு வழிகாட்டு! இந்த சங்கிலித்தொடர் மூலம் உலகம் நல்லா இருக்கும்!''
& தனக்கே உரிய பிரத்யேக போஸில் அடிகளார் தனது மார்புக்குக் கீழாக இரு கைகளை நீட்டி விரித்து, ''காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்! இனிமேல் உனக்கு நல்லகாலம்தான்! இது அம்மாவோட வாக்கு!'' என்று ஆசிர்வதித்து அனுப்பி வைத்தார்!
12 comments:
comedy blog inthaati serious- poittu..except neenga sirichiatha thaira :)
அம்மாவின் ஆசிகள்
அம்மா போயி கடைசியில் இந்த ஆளே அம்மா ...என்ன ஆச்சு ...கவர் ரொம்ப கனமோ ?
என்ன சூரியன் சார்.கொஞ்சம் அடக்கி வாசிக்கற மாதிரி தெரியுது
College, Hospital nu suthi parthuttu vantha sooriyan kalaippayittaronnu theriyuthu. Athuthan amma kodutha thanni kooda ilaneer mathirinnu solleetteenga.. Yennamo ul kuthu irukku...
//Sridhar said...
என்ன சூரியன் சார்.கொஞ்சம் அடக்கி வாசிக்கற மாதிரி தெரியுது//
:-)
//கோயிலின் கருவறைக்குள் எவருமே நுழையக்கூடாது என்ற துருப்பிடித்த மரபுச் சங்கிலியை உடைத்தெறிந்து 'அம்மனுக்கு பெண்கள் உட்பட சகலருமே பூஜை செய்யலாம்'//
உண்மைதான், அது ஒருவகையில் உரிமையும் கூட
ஆனா ஆதிபராசக்தி சிலைக்கு கீழ் அடிகளாரின்புகைப்படம் மட்டும் புதிய கோவில்களில் அவரின் சிலை வடிப்பதின் நோக்கம் என்னவென்று எனக்கு புலப்படவில்லை....
Ulle neraya Asikkam nadakkithu.Melottama Rommaba nalla irrukkum.antha asikkanthil erunthavan than naan.
MAR
என்ன தலை. இவரை பத்தி ரொம்ப நாளா கேட்டவன் நான் தான்.
ஆசையா ஒடி வந்தா இப்படி சாய்ச்சிட்டிங்களே..
என்ன ஆச்சு இரண்டு பேருக்கும்..??
அங்கேயும் சீரியஸ் பதிவு தான்.
சரி..
வெயிட் பண்றோம்.
ji
Semma comedy sir neenga...
சார், சில நிஜங்களை சில மனிதர்களாள் பல நேரங்களிள் உணரமுடியாது... ஆனால் சில மனிதர்களின் பல நிஜங்களை உங்களை போல் ஒருவரால் உணரவைக்கமுடியும் சூரியன் சார்...
இவன்,
பாலா
Post a Comment