Sunday, June 21, 2009
மரிக்கொழுந்து வாசம் வேணும்னா எத்தனையோ நடிகைகளைப் பத்தி எழுதலாம். ஆனா..கறிக்கொழம்பு வாசம் வரணும்னா அதுக்கு ராஜ்கிரணைப் பத்தி மட்டும்தான் எழுதமுடியும்!மூணுகிலோ ஆட்டெலும்பை ஒரே மூச்சுல கடிச்சுத்துப்புவாரு. முப்பதுபேரோட மூட்டெலும்பை ஒரே வீச்சுல அடிச்சு நொறுக்குவாரு. அவர்தான்
ராஜ்கிரண்! தொடைதெரிய டவுசர் மாட்டிட்டு அறிமுகமாகற கதாநாயகிகள் நடுவில..டவுசர் சைஸுக்கே வேட்டியை மடிச்சு டப்பா கட்டு கட்டிகிட்டு தொடைதெரிய அறிமுகமான ‘தமிழின் முதல் முரட்டு ஹீரோ’ ராஜ்கிரண் மட்டுமே!
ஒருகோடி ரூவா ரேஞ்சுக்கு இந்த ‘பாவா‘ சம்பளம் வாங்கி சாதனை பண்ணாரு. இவரோட சுருட்டைமுடி போல சில சோதனை சுருட்டி அடிச்சாலும்..இந்த இருட்டை விரட்டி வெளிச்சத்துக்கு மீண்டுவந்தாரு.
உலகம் மட்டுமா உருண்டை? கறி கோலாவும்தான் உருண்டை!
ராஜ்கிரணை நான் முதல்வாட்டி சந்திச்சது..திண்டுக்கல்லுல ஒரு சந்துக்கடை டிபன்
ஸ்டாலில்! தொண்டையில பிஸ்கோத்தா கரையற மட்டன் குஸ்காவும், மண்டையிலிருக்கற மசாலாவை குஷாலாக்கற சிக்கன் கறியும் அந்த கடையோட ஸ்பெஷல்!
இந்த ‘வாசனை புடிச்சாலே திண்டுக்கல் மலைக்கோட்டைக்கே எச்சில் ஊறும்ங்க! அப்போ..இலைபோட்டு திங்கற எங்க நிலைப்பாட்டை யோசனை பண்ணிப்பாருங்க! சேர்ல உக்காந்துருக்கற நானும், நண்பன் கலீலும் ஒவ்வொரு ஐட்டத்தையும் ‘ஆஹ்ஹா..ஓஹோ’னு ரசிச்சு ருசிக்க..கார்ல கூட்டாளியோட உக்காந்திருந்த
ராஜ்கிரண் வெளிய வந்து ‘‘எங் கன்னுக்குட்டிகளா..சாப்புடணும்னா இப்பிடித்தான்
சப்புக்கொட்டி சாப்பிடணும்!’’னு ‘வாசமா‘..பாசமா பாராட்ட..அப்பவே எங்களுக்கு வயிறு நிறைஞ்சுபோச்சு.
அப்புறம் நாங்க ‘பத்திரிகைக்காரங்க’ன்னு அறிமுகப்படுத்திக்
கிட்டோம். அவர் கூட இருந்த கூட்டாளி அதை அரைகுறையா கேட்டுகிட்டு
கடைக்காரர்கிட்ட ‘‘ஏப்பா..கத்திரிக்காய் கேக்கறாங்கள்ல! நம்ம பசங்க!’’ன்னு குளற..
சினிமாவுல சிரிச்சமாதிரி ராஜ்கிரண் சிரிக்க..அங்கனயே எங்களுக்கு செரிச்சுப்போச்சு!
‘இந்திரன், சந்திரன்‘ ரெண்டுபசங்களும் வெந்துகூழானதுக்கு
என்ன காரணமோ..அதே காரணத்தாலதான் நம்ம ராஜ்கிரணும் நொந்துநூலாகியிருந்தாரு! அந்த நேரத்துல நான் அவரை சந்திச்சேன். சுருட்டைமுடியும், முரட்டுமீசையும், மிரட்டும் கண்களுமா ‘சினிமாவின் மினியேச்சர் அய்யனார்’ மாதிரி இருந்தவர்..‘பிதுக்கி எடுத்த டூத்பேஸ்ட் டியூப்’ மாதிரி இளைச்சு களைச்சுப்போயிருந்தாரு!
பாக்கவே மனசுக்கு கஷ்டமா இருந்துச்சு. அவரோட கையை இறுக்கிப்பிடிச்சுகிட்டு ‘‘இடையில கொஞ்சம் மங்கிப்போனாலும் ‘மாணிக்கம்’ சார் நீங்க! மறுபடியும் ஜொலிப்பீங்க!’’ன்னேன். ‘தளுங்’னு அவரோட கண்ணு கலங்கிருச்சு.
எனக்கும்தான்.
‘‘சந்தோஷம்யா! வருவேன்யா..வந்ருவேன்யா!‘‘னு அழுத்தமா சொன்னவரு, ‘ம்க்ர்ம்’னு தொண்டையை செருமிகிட்டே ‘‘என்ன சாப்புடறேய்யா?’’ன்னு பரிவோட கேட்டாரு. ‘‘காபி சார்’’ன்னேன். ‘என் ராசாவின் மனசுல’ மீனாவை செல்லமா கோச்சுக்கறமாதிரி’ ‘‘என்ன பழக்கம்யா? காபி கீபின்னுகிட்டு? சூடா ஆட்டுக்கால் சூப் குடிக்கலாமா?’’ன்னாரு.
‘இலை திங்கற ஆடு மாதிரி‘ தலையாட்டினேன். வீட்டுக்கு உள்ளே பார்த்து பெருங்குரலில் ‘‘தாயீ..ரெண்டு பெரிய கப்புல சூப் குடும்மா’’ன்னாரு! சுடச்சுட
வந்தது சூப். செம கமகம! ‘‘இந்தாய்யா..நல்லா உறிஞ்சி குடிய்யா’’னு மணக்க மணக்க எனக்கும் கொடுத்து..தனக்கும் எடுத்தார்.
முதல் ‘சிப்‘பிலெயே ‘‘சூப்பர் சார்’’னேன். ‘‘யய்யா..ஆட்டுக்கால் சூப் சாப்புட்டா மூட்டுவலியே வராது தெரியுமா?’’னு ‘அசையும் பொருள்கள் அத்தனைக்குமான அசைவ டிப்ஸை‘ அள்ளித்தர..அசையாம சப்புக்கொட்டி கேட்ட நான் அத்தனையையும் ‘உப்புக்கண்டம்’ போட்டு பத்திரமா வெச்சிருக்கேன்.
கிளம்பறப்போ கேட்டேன்..‘‘உங்களை ‘வில்லேஜ் எம்.ஜி.ஆர்.‘னு எல்லாரும்..குறிப்பா தாய்க்குலம் தலைமேல தூக்கிவெச்சு கொண்டாடுனாங்க! மறுபடியும் அந்த இடத்தை நீங்க புடிச்சுரலாம்ல?’’ன்னேன்.
கண்ணைமூடி தன்னைப்பத்தி ஒருநிமிஷம் யோசிச்சவர்
‘‘எல்லாரும் எம்.ஜி.ஆர். ஆகமுடியுமாய்யா? எனக்கும் எம்.ஜி.ஆர்.மாதிரி இருக்கத்தான் இஷ்டம். ஆனா ராஜ்கிரணா இருந்துட்டதாலதான் இம்புட்டு கஷ்டம்!
பொண்டுபுள்ளைக மத்தியில நமக்குன்னு ஒரு மதிப்பு இன்னமும் இருக்குய்யா. அதை
காப்பாத்திக்குவேன்!’’னார் ‘கிரானைட்‘ குரலில்!
32 comments:
மீ த பர்ஸ்டு :0))
//
தொடைதெரிய டவுசர் மாட்டிட்டு அறிமுகமாகற கதாநாயகிகள் நடுவில..டவுசர் சைஸுக்கே வேட்டியை மடிச்சு டப்பா கட்டு கட்டிகிட்டு தொடைதெரிய அறிமுகமான ‘தமிழின் முதல் முரட்டு ஹீரோ’ ராஜ்கிரண் மட்டுமே!
//
பேசாம அவருக்கு டவுசர் கிரண்னு பேர் வச்சிருக்கலாம் :0))
தமிழிஷ்ல வோட்டு போட முடியலை...கொஞ்சம் என்னானு பாருங்க தல..
தவமாய் தவமிருந்து படத்துல ரொம்ப நல்லா நடிச்சிருந்தாரு....இவருக்கு எதுனா விருது குடுத்தாங்களா இல்லியா??
//அது சரி said... தவமாய் தவமிருந்து படத்துல ரொம்ப நல்லா நடிச்சிருந்தாரு....இவருக்கு எதுனா விருது குடுத்தாங்களா இல்லியா??//
தலைவா..இந்த அர்த்த ராத்திரியில அர்த்தத்தோட கேள்வி கேட்டிருக்கீங்க!
ராஜ்கிரணின் அற்புதமான நடிப்புக்கு தேசிய விருது எதிர்பார்க்கப்பட்டது. கிடைச்சதோ..அதைவிட உயர்வான ‘மக்களின் ஆனந்தக் கண்ணீர்’ விருது!
உதயா சார், நேற்று தான் முதல் முதலா உங்க பதிவ பார்த்தேன்....மொத்த 39 பதிவையும் விடிய விடிய உக்காந்து படித்து முடித்தேன்.....கலக்கல். Hats off.....
//தொண்டையில பிஸ்கோத்தா கரையற மட்டன் குஸ்காவும், மண்டையிலிருக்கற மசாலாவை குஷாலாக்கற சிக்கன் கறியும் அந்த கடையோட ஸ்பெஷல்!//
அய்யா..., நாங்களே.. இந்த இத்துப்போன நாட்டுல.. ருசியா திங்க வழியில்லாம.. செத்துப்போன நாக்கை.. “எரிக்கவா.. புதைக்கவா”-ன்னு பட்டிமன்றம் நடத்திகிட்டு இருக்கோம். நீங்க.. இப்படி படையலை.. பட்டியல் போட்டுகிட்டு இருக்கீங்க.
வயிறு எரியுதுங்க தல...! கர்ர்ர்ர்... புர்ர்ர்ர்ர்!!! இந்தியாவுல இருக்கற நாக்குங்களை எல்லாம் ‘பன்றிக் காய்ச்சல்’ கொண்டு போகக்கடவ!! :) :) :)
தல பாலா அண்ணா சொல்றது ரொம்ப கரிகேட்..
இங்க நாங்க எல்லாம் நாக்கு காஞ்சி போய் உக்கார்ந்து இருந்த..
உங்க பதிவு எதோ முனியாண்டி விலாஸ் இல்ல அஞ்சப்பர் உள்ள போய் அரை மணி நேரம் உள்ளே உக்கர்ந்துக்கிட்டு சாப்பிடமா வேடிக்கை மட்டுமே பார்த்துட்டு வந்த மாதிரி இருக்கு...
அது என்ன தல இந்திரன் சந்திரன்..?!!
//‘இந்திரன், சந்திரன்‘ ரெண்டுபசங்களும் வெந்துகூழானதுக்கு
என்ன காரணமோ..அதே காரணத்தாலதான் நம்ம ராஜ்கிரணும் நொந்துநூலாகியிருந்தாரு!//
மேட்டர் நல்லா இருக்கே கொஞ்சம் விளக்கமாக சொல்ல முடியுமா
" தொண்டையில பிஸ்கோத்தா கரையற மட்டன் குஸ்காவும், மண்டையிலிருக்கற மசாலாவை குஷாலாக்கற சிக்கன் கறியும் அந்த கடையோட ஸ்பெஷல்!"
'தலைப்பா கட்டி நாய்டு' கடையா சார் அது?
ஏதோ,தற்செயலா,வீட்ல நாட்டு கோழி குழம்பும்,மிளகு கோழி வருவலும் செய்திருந்ததால,நாக்கை கட்டுபடுத்திகிட்டோம்.
சார், உங்க Orkut linkக இங்க போட்டால் நம்ம மக்கள்,அங்கேயும் வருவாங்கல்ல.....
keep rocking sir!
நந்தா, தவமாய் தவமிருந்து ரெண்டு படத்திலும் மிகச்சிறந்த நடிப்பு இவரோடது!
//RR said... உங்க மொத்த 39 பதிவையும் விடிய விடிய உக்காந்து படித்து முடித்தேன்.....கலக்கல். Hats off.....//
’’RR பாபாவும் 39 பதிவுகளும்’’னு உங்களைப்பத்தி ஒரு ஸ்பெஷல் பதிவு போட்ரலாமா சார்?
//ஹாலிவுட் பாலா said...படையலை..பட்டியல் போட்டுகிட்டு இருக்கீங்க. வயிறு எரியுதுங்க தல.//
பாலா சாரோட வயிறு குளிர..சூடா ஒரு ‘குடல் கொழம்பு’ குடுப்பா!
//வினோத்கெளதம் said... அது என்ன தல இந்திரன் சந்திரன்..?!//
‘இந்திரன் கெட்டதும் சந்திரன் கெட்டதும் பெண்ணால! வினோத்.. இப்ப புரிஞ்சிருக்குமே தன்னால!
>>அசையும் பொருள்கள் அத்தனைக்குமான அசைவ டிப்ஸை‘
நல்ல வார்த்தை கோர்ப்பு..
>>இடையில கொஞ்சம் மங்கிப்போனாலும் ‘மாணிக்கம்’ சார் நீங்க! மறுபடியும் ஜொலிப்பீங்க
இந்த மாணிக்கம் இன்றைக்கு ஜொலிக்கிறது. தமிழகம் கண்ட இன்னொரு "நடிக"னய்யா இவரு.
// பானு said... ஏதோ,தற்செயலா, வீட்ல நாட்டு கோழி குழம்பும்,மிளகு கோழி வருவலும் செய்திருந்ததால, நாக்கை கட்டுபடுத்திகிட்டோம்//
மேடம்..இம்புட்டு ருசியா ’காரசாரமா’ பழிவாங்கிட்டீங்களே! ஸ்ஸ்..ஆஹா!
(ஆர்குட் லிங்க் ரெடி மேடம்!)
//சென்ஷி said... நந்தா, தவமாய் தவமிருந்து ரெண்டு படத்திலும் மிகச்சிறந்த நடிப்பு இவரோடது//
உண்மை சென்ஷி. ராஜ்கிரணின்.. ’நந்தா’- கம்பீரத்தின் காட்டாறு!
‘த.தவமிருந்து’- பாசத்தின் சுழல்!
//ரொம்ப நல்லவன் said..தமிழகம் கண்ட இன்னொரு "நடிக"னய்யா இவரு//
‘ரொம்ப நல்லா’ சொன்னீங்க தலைவா! இந்த ‘மாணிக்கம்’ நடிப்புக்கு உரிய காணிக்கை எப்போ கிடைக்குமோ?
[[[எம்.பி.உதயசூரியன் said...
//வினோத்கெளதம் said... அது என்ன தல இந்திரன் சந்திரன்..?!//
‘இந்திரன் கெட்டதும் சந்திரன் கெட்டதும் பெண்ணால! வினோத்.. இப்ப புரிஞ்சிருக்குமே தன்னால!]]]
இதான் எங்களுக்கே தெரியுமே..?
"எந்தப் பெண்ணால..?"
இதுக்குத்தான் உதயசூரியன் பதில் சொல்லணுமாக்கும்..?
//"எந்தப் பெண்ணால..?"//
நமக்கு எதுக்கு அடுத்த வீட்டு ஆட்டுக்கால் சூப் உண்மைத்தமிழன் சார்..
*************
ஏதோ,தற்செயலா,வீட்ல நாட்டு கோழி குழம்பும்,மிளகு கோழி வருவலும் செய்திருந்ததால,நாக்கை கட்டுபடுத்திகிட்டோம்.
**************
நாசமா போக..!!
// உண்மைத் தமிழன் said.. "எந்தப் பெண்ணால..?"// //தீப்பெட்டி said...நமக்கு எதுக்கு அடுத்த வீட்டு ஆட்டுக்கால் சூப் உண்மைத்தமிழன் சார்..//
ஸ்..அப்பாடா! உண்மைத்தமிழன் ‘ஆப்பு’லேர்ந்து தீப்பெட்டி ‘சூப்’பரா
காப்பாத்திட்டீங்க!
வழக்கம் போல் கலக்கல் பதிவு. அசைவம் நமக்கு ஆவாது அதனாலே ஜூட்
நிருபர்களின் வாழ்வியல் அனுபவங்கள் பதிவாக்கப்படவேண்டும் என்று அடிக்கடி நினைப்பேன் அதை மெய்ப்பிக்கின்றன உங்கள் பதிவுகள்.
நான் பல தடவை உங்களுக்கு பின்னூட்டம் போட முயற்சி செஞ்சு இன்னிக்கு தான் முடியுது. என் லக்கிக்கு ப்பின்னே அழகா எழுது ஒரு அழகான எழுத்தாளர் அய்யா நீர்!
அய்யா வணக்கம்,
உங்கள் "ராஜ்கிரணின் ‘ஆட்டுக்கால் சூப்‘!" படித்தேன் ரசித்தேன், இன்று ஒரு படம் நடித்து கொண்டு இருக்கும்போதே கெட்ட ஆட்டம் போடும் புது நடிகர்கள் எல்லாம் இவரிடம் படிக்க வேண்டியது நெறையாக உள்ளது.
// Sridhar said... அசைவம் நமக்கு ஆவாது அதனாலே ஜூட் //
முனியாண்டி, அஞ்சப்பர், தலப்பாகட்டினு எங்களோட வேட்டைகளை எவ்வளவோ சகிச்சுகிட்டீங்க..இதை சகிச்சுக்க மாட்டீங்களா சார்?
// கானா பிரபா said.. நிருபர்களின் வாழ்வியல் அனுபவங்கள் பதிவாக்கப் படவேண்டும் என்று அடிக்கடி நினைப்பேன் அதை மெய்ப்பிக்கின்றன உங்கள் பதிவுகள்.//
நிருபர்களைப் பற்றி அக்கறையோடு யோசித்த கானா பிரபாவுக்கு எங்கள் பாசமும்..நன்றியும்!
//அபி அப்பா said... என் லக்கிக்கு பின்னே அழகா எழுதும் ஒரு அழகான எழுத்தாளர் அய்யா நீர் //
அடேங்கப்பா..‘யூ ஆர் வெரி லக்கி’னு அபி அப்பாவே சொல்லிட்டாரு!(உடல் நலம் பரவால்லையா சார்?)
//ஜானி வாக்கர் said.. உங்கள் "ராஜ்கிரணின் ‘ஆட்டுக்கால் சூப்‘!" படித்தேன்.. ரசித்தேன்//
தலைவா..உங்க பேரை படிச்சாலே ‘ஜிவ்வ்’னு இருக்கே! ‘ஆட்டுக்கறி’ இருந்தா சும்மா ஜம்முன்னு இருக்குமாமே!?
மலபார் ஆட்டு கால் சூப், ”தொடை”கறி சாப்பிட்டு வந்த வேகமா..?
கலக்கல்.
Post a Comment