பீரங்கிக் கோட்டையில் ஒரு பிக்னிக்

Monday, April 19, 2010



எம்.பி. உதயசூரியன்

பாய்ச்சலுக்கு ஒரு பைக். பில்லியனில் நண்பன். கிழக்கு கடற்கரைச் சாலை. ஏறிக்கொண்டு சீறிக்கிளம்பினால்..மில்லிமீட்டர் குறையாத ‘மில்லியனர் சந்தோஷம்‘!
ஒகே. குதிரை வேகத்தில் கிளம்பியாச்சு. அப்போ சென்றாக வேண்டிய இடம் ‘ஆலம்பரா கோட்டை‘! கொட்டிவாக்கம் தாண்டியதுமே..வழிநெடுக காதுகளில் குஷியாக விசிலடிக்கிறது கடற்காற்று. ஏதோ ‘போருக்குப் போகிற ஆவேச வேகத்தோடு‘ ஊருக்குப் போகின்றன வாகனங்கள்.

நாம் கிளம்பியது காலை நேரமாச்சா? இதமான குளிர்காற்று வருட ..மிதமான வேகத்தில் நம்ம பைக் பாய்ந்துகொண்டிருந்தது. அப்போது ‘வ்ர்ர்ர்ரூம்‘ என்று ஹை&ஸ்பீடில் நம்மை ஓவர்டேக் செய்தது ஒரு பைக். ஜீன்ஸ் போட்ட இளைஞன் ஓட்ட..அவனை இறுக்க்க்கியபடி பீன்ஸ் சைஸில் ஒரு குமரி! ‘காதலர்கள் இறுக்கமாக தழுவிக்கொள்ளும்போது நடுவே காற்று நுழையக்கூட இடமிருக்காது‘ என்ற வள்ளுவன் ‘குரலுக்கேத்த‘ வசீகர உதாரணம்..வண்டியில் பறந்தது!‘ஹும்! மச்சம்யா!‘ என்று என் பின்னே இருந்த ‘நட்புமூட்டையிடம்‘ ஏக்கப்பெருமூச்சு விட எத்தனித்தபோது..அந்த எத்தன் விட்ட ‘ஏ(க்)கப்பட்ட அனல்மூச்சில்’ என் முதுகே பொசுங்கிப்போனது!

‘வ்ர்ர்ர்ரூம்‘...முட்டுக்காட்டில் படகுகள் அலையாடிக் கொண்டிருக்க.. துறையில் பெண்டு பிள்ளைகளும், நண்டு சிண்டுகளும் விளையாடிக்கொண்டிருந்தனர். ஓட்டிய வேகத்தில் வாட்டிய தாகத்திற்கு வழியில் ‘பச்சைப்பசேல்‘ இளநீரை குடித்தோம். அச்சுஅசல் தேனாய் ருசித்தது. அப்படியே வண்டியை ‘ஓடுறா ச்செல்ல்ல்லம்‘ என்று கொஞ்சி முடிக்க..வந்து சேர்ந்தது கடப்பாக்கம்! நீண்டு செல்கிற கிழக்கு கடற்கரைச் சாலையில் நொடிநேரத்தில் தாண்டிப்போகிற ஸ்பாட்தான் ‘கடப்பாக்கம்‘. ஆனால் இந்த குட்டியூண்டு ஊருக்குள்ளே
கோட்டை கட்டி கொடி பறக்க வாழ்ந்த ஒரு வரலாறு..புதையுண்டு கிடக்கும் கதை தெரியுமா?

கி.க. சாலையிலிருந்து ‘விசுக்‘கென இடதுபுறம் பிரிகிறது கடப்பாக்கம். துண்டு அகலத்திற்கு குண்டும் குழியுமான ரோடு. அலுங்கிக் குலுங்கி பயணித்தால்..குறுக்கிடுகிறது ஆற்றுப்பாலம்! அருகிலேயே ‘தலைகுளித்த மீன்களை தலைதுவட்ட விடாமல்..வலைபோட்டுப் பிடித்துவந்து விலைசொல்லி விற்கிற துக்கம் தாளாமல் தத்தளிக்கிறது மீன்கள்! விதவிதமான மீன்கள், இறால்கள் என அள்ளிக்கொண்டு போகிறார்கள் ‘அசைவப் பிரியர்கள்‘! அதையும் கடந்துபோனால்..மீனவர்களுக்கான சுனாமி குடியிருப்புகள் அனாதியாகக் கிடக்கிறது. அங்கிருந்து நகர்ந்தால்..‘பேக் வாட்டரால்‘‘ பன்னீர் தூவி வரவேற்கிறது ‘ஆலம்பரா கோட்டை‘! ‘பேக்வாட்டர்‘ சிறுகடலாக கோட்டைக்குப் பின்னே ‘பாகைமானி‘ சைஸில் பரவிக்கிடக்கிறது. முன்புறம் தகதகக்கிற பொன்னிற மணற்பரப்பில் பாதி புதைந்தும், மீதி சிதைந்தும் மௌனப்புலம்பலோடு அரை பனைமர உயரத்திற்கு நிற்கிறது பிரமாண்டமான ‘ஆலம்பரா கோட்டை‘!

கோட்டைக்குள்ளும் பொன்மணல் குவிந்துகிடக்கிறது. கால் வைத்ததுமே ஏனோ சிலிர்த்தது. ஒருகாலத்தில் முகலாய மன்னர்கள் வாழ்வாங்கு வாழ்ந்த சாம்ராஜ்யம்..இன்று நம்ம மாதிரி ‘பிள்ளக்காய்களால்‘ மிதிபடுவது கண்டு மனசு குறுகுறுத்தது. ‘பிதாமகன்‘ படத்தின் சுடுகாட்டுக் காட்சிகள் ‘சுடப்பட்டதெல்லாம்‘ இந்த லொகேஷனில்தான். ‘வெயில், குப்பி‘ என ஏராளமான படங்களில் ‘இடம்‘ பிடித்திருகிறது இந்த கோட்டை. பக்கத்திலேயே வலை பின்னிக்கொண்டிருந்த பெருசு நம்மைப் பார்த்து ‘‘பீரங்கியால சுட்டாக்கூட அசையாத கோட்டைங்க இது! வெள்ளைக்காரங்க பண்ணுன அட்டகாசம், அப்புறம் நவாப்புக ஆண்டதுன்னு வீரசூரக் கதைகளை எங்க முப்பாட்டன் காலத்துலேர்ந்து கேட்டுருக்கோம்!‘‘ என்று ‘த்ரில்‘லை கிளப்பினார்.
‘‘இந்த இடத்தை எங்கன தோண்டினாலும் ஏதாச்சும் புதையல் சிக்கும்ல!’’ என்று சொன்ன நண்பன் கண்ணில் ‘அலிபாபா‘ ஜொலிப்பு! ‘புதையல பூதம் காக்குமே!’’ என்ற பெருசுவின் பேச்சில் கெக்கலிப்பு.

கோட்டையின் நடுநாயகமாக ஒரு சமாதி. மறைந்துபோன மன்னரின் பெயர் மறைபொருளாகவே இருக்க..வந்துபோன மானிடர்களின் பெயர்கள் சமாதியில் ‘நிலைத்து நிற்பது‘ சோகக் காமெடி. பேக்வாட்டரில் கோட்டையைச் சுற்றி ரவுண்ட் அடிப்பதற்காகவே மோட்டார் படகுகள் காத்துக்கிடக்கின்றன. ஒரு ட்ரிப்புக்கு ஐம்பது ரூபாய். சலசலக்கிற நீரில் ஜாலி சவாரி போகிற சுகமே அலாதி! கரைக்குத் திரும்பி..ஒரு ‘ஜிலீர்‘ குளியல் போடும்போதே கபகப பசியை கிளப்புகிறது கமகம வாசம்! மீன், இறால், நண்டுகள் என சப்புக்கொட்டி ருசிக்க சரியான டிஷ்கள்! என்ன..முன்னரே சொல்லிவைத்து பணம் தந்தால்..சுடச்சுட சமைத்து வைத்திருப்பார்கள். சாப்பாடும், குடிநீரும் கைவசம் கட்டாயம் தேவை.

ஒரு நாளை ஒதுக்குங்கள்! நண்பர்கள், குடும்பத்தினர் என சகலரும் உற்சாகமாக கொண்டாடி, நிம்மதியாகத் திரும்ப உத்தரவாதமான பிக்னிக் ஸ்பாட் ‘ஆலம்பரா கோட்டை‘! அதுவும் செல்ஃபோனை ஆஃப் செய்துவிட்டால்..பாதி சொர்க்கம் நிச்சயம்! என்ஜாய்! வ்ர்ர்ரூம்ம்!

இதான் ரூட்!

சென்னை டூ கிழக்குக் கடற்கரைச் சாலையில் பயணித்தால்..100 கி.மீ. தூரத்தில் உள்ளது ‘ஆலம்பரா கோட்டை‘. ‘பாண்டிச்சேரி‘ பயணிகளுக்கு பாதி தூரம்தான்..50 கி.மீ.! டூ&வீலர், கார் என்றால் கோட்டைவரை போகலாம். பஸ்ஸில் சென்றால் கடப்பாக்கம் ஸ்டாப்பிங்கில் இறங்கவும். அங்கிருந்து ஆட்டோவில் செல்லலாம். கூப்பிடு தூரத்தில்..கோட்டை!

‘கோட்டை‘ கதை!


17ம் நூற்றாண்டில் இந்தியா முழுக்க கொடிகட்டிப் பறந்தது முகலாயப் பேரரசர்களின் ராஜாங்கம்! ‘கட்டிடக் கலையின் பொற்காலம்‘ அது. அன்றைய காலகட்டத்தில் கட்டப்பட்ட கோட்டைதான் இது! பட்டு ஜரிகை, உப்பு மற்றும் நெய் போன்ற பொருட்கள் இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டது வரலாறு. கப்பல்களை பழுதுபார்க்கும் இடமாகவும் இந்த ‘கடற்கோட்டை‘ பயன்படுத்தப்பட்டதாம். கி.பி.1735ல் நவாப் தோஸ்தே அலி கான் அரசாண்ட இந்த கோட்டையை..அதன் பின்னர் ஃபிரெஞ்ச் தளபதி டூப்ளெக்ஸ்க்கு பரிசளித்தது ஃப்ரெஞ்ச் அரசு. 1760ல் பரங்கியர்களால் ஃப்ரெஞ்ச் படை வீழ்த்தப்பட்டபோது..இந்த கோட்டையையும் முடிந்தவரை சேதப்படுத்தினார்கள். அதையும் கம்பீரமாக எதிர்கொண்டு, பின்னர் ஆற்காட்டு நவாப்புகளால் ஆளப்பட்ட ‘ஆலம்பரா கோட்டையை‘ 2004ல் வந்த சுனாமி கொஞ்சம் ஓவராகவே சிதைத்துவிட்டது!

தோத்தா கொடலு...ஜெயிச்சா மெடலு

Monday, April 12, 2010



எம்.பி. உதயசூரியன்


‘'ஏப்பு...சல்லிக்கட்டுங்கிறது லேசுபாசான விஷயமா என்ன? முச்சந்தியில
குத்தவெச்சு வெளையாடற ஆடு புலி ஆட்டமில்லப்பு இது. உசுரையே
துச்சமா நெனச்சு காளையோட காளை மோதற நேரடி யுத்தம். வாடிவாசல்ல
மொரட்டுக்கொம்புகளோட மெரட்டலா நிக்கற மாடுகளைப் பாத்தாலே
கிலி கெளம்பி, எப்பேர்ப்பட்ட கில்லாடிக்கும் அடிவயுத்துல புளி கரைச்சுரும்ல.
பேரு பெத்த மாடுபுடி வீரனுக கெத்தா களத்துல நிப்பாய்ங்க. கூடவே
வேடிக்கை பாக்க வந்த வெத்துப்பசங்களும் செத்த எலி கணக்கா வீறாப்பு
காட்டுவாய்ங்க. அது தனிக்கூத்து.

அலங்காநல்லூரு, பாலமேடு, சிங்கம்புணரி, சிறாவயல்னு சல்லிக்கட்டுக நடக்கிற
இடம் தெரிஞ்சுருக்கும். ஆனா வந்து நிக்கற வகைவகையான மாடுகளோட
வகையறா தெரியுமாப்பு? மூச்சு விடாம சொல்றேன். மூச்சப் புடிச்சு எண்ணிக்கோ.
மச்சக்காள, மயிலக்காள, ஒச்சுக்காள, ஒயிலுக்காள, நெத்திச்சுட்டி, செவலக்காள,
கொடலுகுத்தி,வட்டக்கருப்பன், ஈட்டிக்கொம்பன், புலிக்குத்தி, பாடச்சுழிகாரினு
பட்டியலு ரொம்பப் பெரிசப்பு.

சல்லிக்கட்டு மாடுகளுக்கான வளப்பு மொறையே தனி தினுசானது. மத்த
மாடுக மாதிரி இதுகள வேலைக்கெல்லாம் அனுப்ப மாட்டாய்ங்க. போட்டிக்கி
ஒரு மாசத்துக்கு முன்ன இருந்தே மாட்டுக்கு ஊட்டம் கூட்ட ஆரம்பிச்சிருவாய்ங்க.
தெனமும் நல்லா குளிப்பாட்டி, சாம்பிராணி புகை காட்டுவாய்ங்க. நயம் பருத்திக்
கொட்டய நைஸா அரைச்சு, அதோட சாறெடுத்து ஊட்டுவாய்ங்க. அதேமானிக்கி
பசேல்னு பசும்புல்லும், மூலிகைச்செடிகள அரைச்செடுத்த உருண்டையும்தான்
மாட்டுக்கான தினப்படி தீவனம்.

அதேமாதிரி சல்லிக்கட்டு மாடுகள வளக்கற வீட்ல இருக்கறவங்க ரொம்ப சுத்தபத்தமா
இருந்தாகணும். ஊட்டமா தின்னு தின்னு சும்மா ‘கிண்'ணுன்னு காட்டேரி மாதிரி
நிக்கற மாடுக, அக்கறையா வளக்கற ஆம்பளகிட்டக் கூட திமிரா சிலுப்பிகிட்டே
நிக்கும். ஆனா அதே வீட்ல இருக்கற பொம்பளையக் கண்டா பொட்டிப்பாம்பா
அடங்கும். ஏன்னா தெனமும் ஒரு தாய்மாதிரி தன்ன பாசமா கவனிச்சுக்கறதால
அது காட்டற அன்பு அப்புடி. சொன்னா அரண்டு போயிருவீகப்பு...பக்கத்துல மாடு
இருக்கறப்போ அந்த பொம்பளய ஏதோ ஒரு கோவத்துல புருஷங்காரனே கைநீட்டிப்
பேசிட்டான்னு வெய்யி, தொலஞ்சான். அப்புடியே அவம்மேல சீறிப் பாஞ்சு குத்தித்
தூக்கிரும். இதுக்குப் பயந்தே நெறயப் பய பொஞ்சாதிகிட்ட பஞ்சாயத்து வெச்சுக்க
மாட்டாம்ப்பு.


எடுத்த எடுப்புலயே சல்லிக்கட்டுல பூந்து மாட்டை அணைஞ்சற(பிடிப்பது) முடியாதப்பு.
அதுக்குன்னே செல அடிப்படை விஷயங்களை அடிபட்டுக் கத்துக்கணும். மொதல்ல
ஒரு புழுதிக்காட்டுல குட்டி ஆட்டோட முட்டி மோதி மல்லுக்கட்டணும். அதுலயே
உருண்டு பொரண்டு ரத்தக்காயம் ஆயிரும். கொஞ்சம் தேறிட்டோம்னா அடுத்து
கன்னுக்குட்டிகிட்ட கைவரிசை காட்டணும். பேச்சுக்கு இது சுளுவா இருக்கும். ஆனா
களத்துல இறங்குனாத்தாண்டி தெரியும், கன்னுக்குட்டியோட வீரியம். கொஞ்சம்
பிசகிச்சுன்னா, அது முட்டற முட்டுல டங்குவாரு அந்துபோகுமப்போய். ஆனா
அதையும் அடக்கி, நாய்க்குட்டி மாதிரி மடக்கிப் போடறதுக்கும் செல நேக்குபோக்கு
இருக்குதுல்ல.

இதுல தேறினதுக்கு அப்புறமாத்தான் மொரட்டு மாட்டுகிட்ட கொஞ்சம் கொஞ்சமா
நம்ம சேட்டையைக் காட்டணும். எமன் மாதிரி பாஞ்சு வர்ற மாட்டை எப்புடி புடிக்கணும்,
குத்திக் கொடலை உருவற மாட்டை என்ன மாதிரி மடக்கணும்ங்கற சூச்சுமத்தையெல்லாம்
மாடு புடிக்கறதுல சூரப்புலிகளா இருக்கறவய்ங்க கத்துத் தந்துருவாய்ங்கப்பு.

அதேமாதிரி இன்னொரு கூத்தும் இருக்கு. சல்லிக்கட்டு நடக்கறப்போ ‘இந்த மாட்ட
எவன் அடக்கறானோ, அவனுக்கு எம்பொண்ண கட்டித்தர்றேன்னு' இந்த சினிமாப்
படங்கள்ல சவடால் விடுவானுங்க. ஆனா நெசத்துல அப்படியெல்லாம் கெடயாதப்பு.
மாட்டை அடக்கிப்புட்டா அது கழுத்துல கட்டி விட்டிருக்கற தங்கச்சங்கிலி, பரிசுப் பணத்தை
அள்ளிக்கலாம். சமயங்கள்ல நமக்கு வேண்டப்பட்ட ஒறவு மொறையில, கல்யாணமாகாத
மாமங்காரன், மச்சாங்காரன் யாராச்சும் இருப்பாய்ங்கள்ல...அவிய்ங்களப் பாத்து ‘'இந்தக்
காளய நீ அடக்குனா, உனக்கு எம்பொண்ணை கட்டித்தர்றேன்னு' சீண்டிவிட்டு வேடிக்கை
பாப்பாய்ங்க.

சல்லிக்கட்டு வீரதீர வெளையாட்டுதான். அதேமாதிரி சுத்திமுத்தி நிக்கற கொமரிப்புள்ளைகளை
பாக்கறப்போ எக்கச்சக்க தெகிரியம் எக்குத்தப்பா எகிறும்ல. பெறகென்ன? உசுர பணயம்
வெச்சு களத்துல எறங்குவாய்ங்க. தோத்துப்புட்டா மாட்டோட கொம்புல அவனோட கொடலு.
ஜெயிக்கற வீரனுக்கு அந்த கொமரிக சிரிப்புதான் மெடலு''.

நன்றி: புதிய தலைமுறை

ஆளில்லா தீவில் தனியே ஒரு நம்பிக்கை

Thursday, April 8, 2010



எம்.பி. உதயசூரியன்

வெகுநாளாகவே ஆழ்மனதில் மூழ்கிக் கிடந்த ஆர்வம் அது... கடல் தின்று தீர்த்த
தனுஷ்கோடிக்கு அருகிலுள்ள அரிச்சல்முனைக்குப் போகவேண்டும் என்று.
ராமேஸ்வரத்திலிருந்து தனி ஜீப்பில் நண்பர்களுடன் கிளம்பினோம்.
செக்போஸ்ட்டிலிருந்து நாலு ‘வீல்' பாய்ச்சலில் புழுதி கிளம்ப சீறிச் சென்றது
ஜீப்.

கண்ணுக்கெட்டிய தூரம்வரை அலைகடலும், அனல் மனலும் கொட்டிக்கிடக்க...
முன்னோடி வண்டிகள் ஓடிய சக்கரப்பாதையிலேயே நமது ஜீப்பும் வளைந்து,
நெளிந்து, வழியில் குழியில் துள்ளி எழும்பி சென்றபோது, கரையெங்கும்
ததும்பிய நரை நுரையை விட...மனதில் பொங்கியது பய நுரை.

கரையோர நீரில்- உறுமீனோடு, சமாதான உலகு வேண்டி ‘வெள்ளை' அலகு
நீட்டி தவமிருக்கும் கொக்குகள்...வேற்று நாடான ஆஸ்திரேலியாவிலிருந்து
தனுஷ்கோடிக்கு காற்று வாங்க வந்திருக்கும் ஃப்ளெமிங்கோ பறவைகள்...
அமானுஷ்ய மணற்பரப்பில் மௌனம் அனுஷ்டிக்கும் சர்ச்...விசுவிசுவென
வீசுகிற காற்றுடன் கிசுகிசுக்கிற கீற்றுக் குடிசைகள்...மனித சஞ்சாரமற்ற
மணற்பாலையில் நத்தை போல ஒத்தை ஆளாக கடந்து போகிற ஒல்லி
மனிதர்...தண்ணீரால் அழிந்து போனதை நினைவுபடுத்தும் விதமாக தண்ணீர்
கொடுத்து உபசரிக்கிற தனுஷ்கோடி என வழிநெடுக வினோதமான அனுபவங்கள்.

ஒருவழியாக (இருப்பதும் ஒரேவழிதான்) அரிச்சல்முனைக்குள் நுழைந்தோம்.
இடது கையால் இந்தியப் பெருங்கடலையும், வலது கையால் வங்காள
விரிகுடாவையும் தொட்டு விளையாடும் 'கிட்டத்தில்' அலையாடி சங்கமிக்கின்றன
இரு கடல்கள். அவை விட்டு வைத்திருக்கும் மிச்சமுள்ள மணற்திட்டில்தான்
சுற்றுலாப் பயணிகள் அச்சமின்றி நின்று ரசிக்கிறார்கள்.

அந்த அரிச்சல்முனையில்தான் பாக்யராஜை சந்தித்தோம். இவர் அவர் அல்ல.
தன்னம்பிக்கை நட்சத்திரம். ஆளரவமற்ற அனாதித் தீவில்...நான்கு சவுக்குக்
கம்புகளை நட்டு, மேலே ஒரு கூரையைப் போட்டு குளிர்பானங்கள், முத்து,
பவளம், பாசிமணிகள், சங்குகள், ஜிமிக்கி கம்மல், கலர் கயிறுகள் என
சின்னதாக ஒரு கடை பரப்பியிருக்கிறார் பாக்யராஜ்.


+2 முடித்த இந்த இளைஞர் பெற்றோருடன் தனுஷ்கோடியில் வசிக்கிறார்.
இவரது அண்ணன் ராமேஸ்வரத்தில் கடை நடத்தி வருகிறார். ‘'மேல
படிக்கலையா பாக்யராஜ்?'' என்று கேட்டோம். ‘'+2 முடிச்சிட்டு காலேஜ்
போலாம்னு ஆசைப்பட்டேன். ஆனா வசதி இல்லண்ணே. வர்ற வருமானம்
வயித்துச் சாப்பாட்டுக்கும், மாத்துத் துணிக்குமே சரியா இருக்கு. இதுல
எங்கிட்டு நான் மேல படிக்கிறது? அதான் ஏதாச்சும் ஒரு தொழில் செய்யலாம்னு
இங்க கடை போட்டேன்'' என்றார்.

‘'என்ன நம்பிக்கையில தனித்தீவுக்குள்ள தன்னந்தனியா கடை வெச்சீங்க?''-
கேட்டதுமே வெள்ளையாகச் சிரித்தபடி பேசினார் பாக்யராஜ்...''டவுன்ல
(ராமேஸ்வரத்தில்) கடை வைக்கணும்னா அட்வான்ஸ் தரணும், நெறைய
சரக்கு வாங்கணும். இதுக்கு ரெண்டு மூணு லட்சம் தேவைப்படும். அதான்
ஆற அமர யோசிச்சுப் பாத்தேன். ‘சரி, அரிச்சமுனையிலயே ஒரு கடையைப்
போட்ரலாம்னு முடிவு பண்ணேன். கையில இருந்த காசோட, கடன உடன
வாங்கி ஐயாயிரம் ரூவா முதலீட்டில கடைய ஆரம்பிச்சேன். இப்போ
யாவாரம் ஜோரா நடக்குதுண்ணே'' என்றார் உற்சாகமாக.

அப்போது கடைக்கு வந்த ஒரு சுற்றுலாப் பயணி குடிக்க தண்ணீர் கேட்க,
அவரிடமிருந்த காலி பாட்டிலை வாங்கி தண்ணீர் நிரப்பித் தந்தார். ‘'எவ்ளோ
தம்பி'' என்று கேட்க...''ஃப்ரீ சார். குடிச்சுப் பாருங்க. தேனா இனிக்கும்.
ரெண்டு பக்கமும் கடலு. உப்புத்தண்ணி. ஆனா நடுவால இருக்கற மண் திட்டுல
வர்ற ஊத்துத்தண்ணி இனிப்பா இருக்கு. மனுஷ பொழப்பும் அப்படித்தாங்க
இருக்கு'' என்று ஏதோ ‘பாமர ஞானி' போல பேசுகிறார் பாக்யராஜ்.

அப்படியே நம்மைப் பார்த்து ‘'கோச்சுக்காதீங்கண்ணே. பேச்சைப் பாதியில
விட்டுட்டேன். தெனமும் நெறைய டூரிஸ்ட்டுக வர்றாங்க.
ஒத்தையா நிக்கற என்னைப் பாத்து ஆச்சரியப்பட்டு, அன்பா பேசறாங்க. இங்க
இருக்கற அத்தனை பொருள்களையும் பேரம் பேசாம வாங்கிட்டுப் போறாங்க.
கொண்டு வர்ற சரக்கை பெரும்பாலும்
வித்துர்றேன். தெனமும் இருநூறு ரூவாய்க்குக் கொறையாம லாபம் கெடைக்குது.
எப்பவாச்சும் வந்து போற டூரிஸ்ட்டுகலை நம்பி கடை வெக்கிறியேனு கிண்டலா
சிரிச்சாங்க.ஆனா போதுமான லாபத்தோட நான் சம்பாதிக்கறேன். என் நம்பிக்கை
ஜெயிச்சிருச்சு அண்ணே'' என்கிற பாக்யராஜ் முகத்தில் வெற்றிப் பூரிப்பு.


தீவிலிருந்து கடைசி டூரிஸ்ட்டும் கிளம்பியதை உறுதி செய்து கொண்ட பிறகே
தனது கடையை மூடுகிறார் பாக்யராஜ். கீற்றுக் கூரையை கீழே கிடத்தி.
கொண்டுவந்த அட்டைப்பெட்டிகளுக்குள் சரக்குகளை அடுக்கி எடுத்துக் கொண்டு
கடைசி ஜீப்பில் வீடு திரும்புவது இவரது வழக்கம். மழை சீஸனில் மட்டும்
இந்தக் கடை இருக்குமிடத்தில் கடல் பரவிக் கிடக்கும். ஆகவே அன்று கடை
லீவு.

‘'சரி, டூரிஸ்ட் யாருமே வராதபோது தனியாக இருக்க பயமாக இல்லையா?''-
உடன் வந்த நண்பர் கேட்டார். வாய்விட்டுச் சிரித்தபடி பாக்யராஜ் சொன்னார்...
‘'அண்ணே, நான் பொறந்து வளர்ந்ததெல்லாம் கடல் மென்னு துப்பின இதே
தனுஷ்கோடிதான். எஙளுக்கெல்லாம் புயல்தான் தாலாட்டு...வெள்ளம்தான்
தாய்ப்பாலு''.

நன்றி: புதிய தலைமுறை

 
சுடச்சுட - by Templates para novo blogger