அப்பாவின் சட்டை

Friday, August 28, 2009


ஏழாப்பு படிக்கையில்
என் முட்டிக்காலுக்கும்
கீழே தொங்கும்
அப்பாவின் சட்டை


போட்டுப் பார்த்து
பொய்மீசை முறுக்க
அப்பாவின் ஜாடையென்பர்
அம்மாவும் பாட்டியும்


தங்கச்சி பாவம்
தரையில் பாவும்
அப்பா சட்டையை
வேட்டியாக மடித்துக்கட்டி
தப்படி வைப்பதற்குள்
தடுக்கி விழுவாள்
கெக்கலிக்கும் வீடு


முனியாண்டி விலாஸ் பார்சல்
ரோஸ்ட் தோசை மாதிரி
ரெண்டு கையையும்
சுருட்டியிருப்பார் அப்பா


கசங்கிய ரூவாய் சில்லறையென
சமயங்களில் அதனுள்
புதையல் சிக்கும்


சில பொழுதுகளில்
நைந்து போன
சிகரெட் மட்டும்


எம்.ஜி.ஆர். உடுத்தின
சந்தன நிறத்தில்தான்
அப்பாவின் சட்டைகளும்


ஆறேழு வைத்திருப்பார்
அத்தனையும் அவர் வாசம்
காலரிலும் கம்முக்கட்டிலும்
பாண்ட்ஸ் பவுடர் ஜாஸ்தி


அடித்துத் துவைத்தால்
அம்மாவையே அடிப்பார்
குழந்தையை கொஞ்சுவதாக
கும்ம வேணும் நுரையால்


இஸ்திரி போட்டெடுத்தால்
அலுமினியத் தகடாக
மினுக்கணும் அவர் சட்டை


இப்போதெல்லாம்
அப்பா அணிபவை
வெள்ளை வெளிர்நீலமென
விலையதிக ரகங்களில்
நான் தந்த சட்டைகளே


ஜோப்பு நிறைய பணமிருந்தும்
விருப்ப நிற சட்டைகளை
எடுப்பதில்லையே ஏன் அப்பா?


பதில் கிடைத்தது
அப்பா சட்டைகளை
பால்யத்தில் போல
அணிந்து பார்த்ததில்...


ஒவ்வொரு சட்டையிலும்
மூச்சை நிறைக்குது
அப்பாவின் வாசத்தைவிட
புத்திரபாசத்தின் மணம்

புஷ்பா தங்கதுரையின் ராக்கெட்!

Friday, August 21, 2009

கிட்டத்துல போய்ப் பழகினா பல பேர் காட்டற நிஜமுகத்தைப் பாத்து..விட்டத்துல தூக்கு போட்டுத் தொங்கலாம் போலத்தோணும். ஆனா புஷ்பா தங்கதுரை அப்படியல்ல. சக்கரை தடவி பொய்யா பேசற வம்பான ஆளுங்களை விட..அக்கறை கலந்து உண்மை பேசற அன்பான மனிதர்.
இவரை ஒருமுறை சந்திக்கற யாருமே..மறுமுறை பாக்கப்போறப்போ சொந்த வீடு வாங்கியிருப்பாங்க!அந்த அளவுக்கு ‘சிங்கிள் டீக்கு’ சிங்கி அடிக்கறவங்களைக் கூட ஒரு சிங்கிள் பெட்ரூம் வாங்கறரேஞ்சுக்கு...கையில பொறுப்பையும், வயித்துல நெருப்பையும் கலந்துகட்டி தந்து அனுப்புவாரு!
புஷ்பா தங்கதுரை. கிளுகிளுப்பான பெயர். எழுத்துல ‘டபுள் ஆக்‌ஷன்’ மன்னன். கிறங்கடிக்கிற மாதிரி ’பெண்’மீகம் எழுதறப்போ..புஷ்பா தங்கதுரை. ரங்கநாதனைப் பத்தி ஆன்மீகம் படைச்சா..ஸ்ரீவேணுகோபாலன்.துப்பறியும் நாவல்களும், தப்பறியும் உண்மைக் கதைகளும் எழுதி வாசகர் வட்டத்தை மயங்க வைத்தவர்.
இந்த பிம்பத்தோடதான் ஒருமுறை புஷ்பா தங்கதுரையை சந்திக்கப் போனோம். வேற யாரு? நானும், அந்தணனும்தான். ‘காணாமப் போன தம்பி புள்ளைகளை மறுபடியும் கண்டுபிடிச்ச பெரியப்பா மாதிரி’பாசமா வரவேற்று உபசரிச்சாரு. வெள்ளை வேட்டி சட்டை. அதே அலைபாயும் சுருள்முடி..ஆர்வமா எட்டிப்பாக்கற கண்கள்னு சிம்பிளா இருந்தாரு.
அவரோட எழுத்துக்களைப் பத்தி விலாவரியா சிலாகிச்சுப் பேசின எங்களுக்கு விழா எடுக்காத குறைதான்.விக்ஸ் முட்டாய் முதல் செக்ஸ் கல்வி வரை அத்தனையும் அலசித் துவைச்சாரு பாருங்க..அசந்துபோயிட்டோம். ‘’எங்கூட வாங்க’’ன்னு உள்ரூமுக்கு கூட்டிட்டுப் போனாரு. கம்ப்யூட்டரை ஆன் பண்ணிஒரு ப்ராஜெக்ட்டை காட்டினாரு. வானவியல் பத்தி ஃவேறு.. ஆணிவேறா எக்கச்சக்க டீடெய்ல்ஸோட பிரிச்சு மேஞ்சிருந்தாரு.
‘’என்ன சார் இது?’’னு வியந்துபோய் கேட்டோம். மெல்லிசா சிரிச்ச புஷ்பா தங்கதுரை ‘’வானவியல் பத்திஆராய்ச்சி பண்ணிகிட்டிருக்கேங்க! விட்டா என் வீட்டு மாடியிலிருந்தே செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட்விடுவேங்க. அந்த அளவுக்கு ராக்கெட் தயாரிப்புல அப்டேட்டா இருக்கேன் சார்’’னு அதிரடியா சொல்ல..அரண்டு போயிட்டோம். இந்த வயசிலும் மனுஷனுக்கு அப்படியொரு அறிவுத் தேடல்!
அப்புறம் அப்படியே ஜாலியா அரட்டை அடிச்சோம். திடீர்னு புஷ்பா த.துரை எச்சரிக்கையான குரல்ல‘’சார்..இந்த வயசில நிறையா சம்பாதிங்க! கையில பணம் இல்லேன்னா..ரொம்ப கட்டம் (கஷ்டம்ங்கிறதை இப்படித்தான் உச்சரிக்கிறார்) சார்! கட்டுன பொண்டாட்டி கூட மதிக்க மாட்டா சார்! அதேமாதிரி எப்பாடுபட்டாவது ஒரு சொந்த வீடு வாங்கிருங்க சார். சொத்துபத்து இல்லேன்னாலும் சின்னதா ஒரு சொந்த வீடு வாங்கிருங்க சார். யாரு கஞ்சி தண்ணி ஊத்தலேன்னாலும்..பச்சத்தண்ணியக் குடிச்சுட்டுகாலாட்டிகிட்டு படுத்து தூங்கலாம் சார். இல்லேன்னா ரொம்ப கட்டம் சார்!”னு அவர் சொல்லச்சொல்ல..எங்களுக்கும் இனம்புரியாத பயமும், திடீர் துடிப்பும் வந்துருச்சு.
அப்புறம் சில வருஷ இடைவேளைக்குப் பிறகு புஷ்பா த.துரையை சந்திக்கப் போனோம்.‘மனுஷர் என்ன காயகல்பம் சாப்பிடறாரோ..அப்படியே ஜம்முன்னு இருந்தார்’. எடுத்த எடுப்புலயே‘’சார்..சொந்த வீடு வாங்கிட்டீங்களா? இல்லேன்னா ரொம்ப கட்டம் சார்’’னு சொன்னதுமே...நாங்க கையோட கொண்டு போயிருந்த ‘ஹவுஸிங் லோன் சாங்ஷன் லெட்டரை’ காட்டினோம்.
நம்பமாட்டீங்க...அவர் முகத்துல அப்படியொரு சந்தோஷம்! ‘’நல்ல பசங்க சார் நீங்க. ரொம்ப நல்லா வருவீங்க’’னு ஆசீர்வதிச்சார். எங்களுக்குள்ளயும் எதையோ சாதிச்சுட்ட குஷி. ஆனா எந்த ஒரு நல்ல விஷயம் நடக்கறதுக்கு முன்னாலயும் ஒரு பெரும் போராட்டம் நடக்கும்ல..அப்படித்தான் நடந்தது லோன் மேட்டர்லயும்.
லோன் சாங்ஷன் பண்ண அந்த தனியார் வங்கி திடீர்னு லோன் தர மறுத்திடுச்சு. காரணம் கேட்டா...சின்னப்புள்ளத்தனமா ஏதேதோ சொன்னாங்க. பல இடங்கள்ல அலைஞ்சு தேடி, நுழைஞ்சு பாத்தும்ம்ஹூம்..பாச்சா பலிக்கலை. ‘விடு’ன்னு விட்டுட்டோம். ஆனாலும் இன்னிக்கு வரைக்கும் எங்களுக்குஇருக்கற ஒரு திருப்தி...அந்த லோன் சாங்ஷன் லெட்டரை வெச்சு புஷ்பா தங்கதுரையையாவதுசந்தோஷப்படுத்தினதுதான்!சிரிப்பு ரிப்பீட்டேய்!

Saturday, August 1, 2009

வெரைட்டியாக பல வெற்றிப்படங்கள் தந்து மிரட்டிய டைரக்டர் அவர்! ஊரும் வேண்டாம்..பேரும் வேண்டாம். மேட்டர் மட்டும் போதுங்ணா!

‘கல்லிலே கலைவண்ணம் கண்ட‘ மாமல்லபுரத்துக்குப் பக்கத்தில் ‘ஃபுல்லிலே கதைவண்ணம் கண்ட‘ நம்ம டைரக்டர் தங்கியிருக்கற ஒரு ரிசார்ட். சிலுசிலுன்னு காத்தும்..குளுகுளுன்னு ஏ.சி.யும் கலந்து கலக்கற கடற்கரையோர ரூம். அடுத்த படத்துக்கான பட்டறையை போட்டு..கதையை பட்டை தீட்டிக்கிட்டிருக்காரு டைரக்டர்.

பொழுது சாஞ்சாலே பல ‘இறக்குமதி சரக்குகளை‘ உள்ளே ‘இறக்கிகிட்டு‘ பொழுதுபோக்கறது நம்ம டைரக்டரோட வழக்கம். அன்னிக்கும் வழக்கம்போல ஜாலியா பல ‘லார்ஜ்‘களை காலி பண்ணினதோட விளைவு..அடுத்தநாள் காலையில டைரக்டரோட வயிறு செம ‘லார்ஜாகி‘ அப்செட் ஆயிருச்சு.

‘சரக்குக்கு முறுக்கு‘ முதல்..‘வீட்டுக்கு பலசரக்கு‘வரை வாங்கிவந்து சேர்க்கிற டிரைவர்தான்..அன்னிக்கும் கூடவே இருந்தாரு. விடிஞ்சதிலேர்ந்தே அஜீரணக் கோளாறால ‘வயித்துக்குள்ள வன்முறை‘ நடக்கிறதை தாங்கமுடியாத டைரக்டர்..தன்னோட டிரைவரைக் கூப்பிட்டு ‘‘கடைக்குப் போயி ‘ஜெல்யூஸில்‘ வாங்கிட்டு வாப்பா‘‘ன்னாரு!

‘மிட்டாய் வாங்கப் போற சிறுவன் மாதிரி‘ சிட்டாய் பறந்தார் டிரைவர். ரெண்டு மணி நேரமாகியும் போன டிரைவர் வரவே இல்லை. டைரக்டரோ.. வயித்தெரிச்சல், நெஞ்செரிச்சலோட சேர்ந்து ஏகப்பட்ட எரிச்சலோட காத்துக்கிடக்காரு! கரெக்ட்டா அப்போ பாத்து டைரக்டரோட செல் அடிக்குது.

எடுத்தால்..மறுமுனையில் டிரைவர் ‘‘சார்..நாலைஞ்சு கடைல கேட்டுப் பாத்துட்டேன்! அந்த ஜெல்யூஸில் இல்லேங்கறாங்க!’’ன்னார் பதட்டமாக! உடனே டைரக்டர் ‘‘பரவால்ல..டைஜின் இருக்கும். அதை வாங்கிட்டு வாப்பா’’ன்னாரு. ‘‘சரிங்க சார்‘‘னு சந்தோஷமா ஃபோனை வெச்சாரு டிரைவர்.

மறுபடியும் அரைமணி நேரமாச்சு! டிரைவர்கிட்டேர்ந்து தகவலே இல்லை. அடிமனசு எரிய..ஆவேசமாகிட்டாரு டைரக்டர். நல்லவேளையா அதே நொடி டிரைவர்கிட்டேர்ந்து ஃபோன். ‘‘என்னப்பா பண்ணித்தொலையற?’’னு எரிஞ்சு விழுந்தாரு டைரக்டர். பதிலுக்கு டிரைவர் ‘‘சார்..டைஜினும் இல்லேங்கிறாங்க சார்’’னார் கூலா!

டைரக்டருக்கோ ‘‘என்னடாது..கிழக்கு கடற்கரைச் சாலையிலிருக்கற அத்தனைபேரையும் இன்னிக்கு ‘அஜீரண சுனாமி‘ அட்டாக் பண்ணிருச்சா?’’னு செம ஷாக்! அதே அதிர்ச்சியோட ‘‘ஏப்பா..எல்லா கடையிலயுமா ஜெல்யூஸிலும், டைஜினும் இல்லேங்கிறாங்க?’’னு கேட்டிருக்காரு.

‘‘ஆமா சார்..ஏழெட்டு கடை ஏறி இறங்கிட்டேன். எங்கியுமே இல்லேன்னுதான் சொல்றாய்ங்க’’ன்னாரு அந்த அப்பாவி டிரைவர். ‘சட்‘டுன்னு டைரக்டருக்கு ஒரு ‘ஸ்பார்க்‘ அடிச்சது! ‘‘ஆஹா..அவனல்லவா நீ?‘‘ன்னு உஷாரானவர்..‘‘ஏப்பா! ஏழெட்டு கடைன்னு சொல்றியே..எந்த கடைப்பா?‘‘ன்னு கிடுக்கிப்பிடி போட்டாரு.

உடனே அந்த டிரைவர் ‘‘என்ன சார்..என்னைப்போயி இப்படி நம்பாம கேக்கறீங்களே? ஈ.சி.ஆர்.ரோட்டுல இருக்கற அத்தனை ஒயின்ஷாப்பிலயும் கேட்டுட்டேன் சார். அப்பிடி ஒரு சரக்கே இல்லேய்ங்கிறாங்க!’’ன்னார் வெள்ளந்தியா! இதைக்கேட்டதுமே ‘அடப்பாவி‘ன்னு மனசு நொந்து,,குடல் வெந்து கிடந்த டைரக்டர் வாய்விட்டுச் சிரிச்ச சிரிப்புல..சிறுகுடல், பெருங்குடலே செரிச்சுப் போயிருச்சாம்!
இதனால் அறியப்படும் நீதி: ஒரு ‘சிப்‘பந்தியை ஒயின்ஷாப்புக்கு மட்டுமே தொடர்ந்து அனுப்பாமல்..அப்பப்போ மெடிக்கல் ஷாப்புக்கும் அனுப்பறது நம்ம ‘உடல் மற்றும் குடல் நலத்துக்கு‘ நல்லது! ஏவ்வ்வ்வ்!

 
சுடச்சுட - by Templates para novo blogger