Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

அப்பாவின் சட்டை

Friday, August 28, 2009






ஏழாப்பு படிக்கையில்
என் முட்டிக்காலுக்கும்
கீழே தொங்கும்
அப்பாவின் சட்டை


போட்டுப் பார்த்து
பொய்மீசை முறுக்க
அப்பாவின் ஜாடையென்பர்
அம்மாவும் பாட்டியும்


தங்கச்சி பாவம்
தரையில் பாவும்
அப்பா சட்டையை
வேட்டியாக மடித்துக்கட்டி
தப்படி வைப்பதற்குள்
தடுக்கி விழுவாள்
கெக்கலிக்கும் வீடு


முனியாண்டி விலாஸ் பார்சல்
ரோஸ்ட் தோசை மாதிரி
ரெண்டு கையையும்
சுருட்டியிருப்பார் அப்பா


கசங்கிய ரூவாய் சில்லறையென
சமயங்களில் அதனுள்
புதையல் சிக்கும்


சில பொழுதுகளில்
நைந்து போன
சிகரெட் மட்டும்


எம்.ஜி.ஆர். உடுத்தின
சந்தன நிறத்தில்தான்
அப்பாவின் சட்டைகளும்


ஆறேழு வைத்திருப்பார்
அத்தனையும் அவர் வாசம்
காலரிலும் கம்முக்கட்டிலும்
பாண்ட்ஸ் பவுடர் ஜாஸ்தி


அடித்துத் துவைத்தால்
அம்மாவையே அடிப்பார்
குழந்தையை கொஞ்சுவதாக
கும்ம வேணும் நுரையால்


இஸ்திரி போட்டெடுத்தால்
அலுமினியத் தகடாக
மினுக்கணும் அவர் சட்டை


இப்போதெல்லாம்
அப்பா அணிபவை
வெள்ளை வெளிர்நீலமென
விலையதிக ரகங்களில்
நான் தந்த சட்டைகளே


ஜோப்பு நிறைய பணமிருந்தும்
விருப்ப நிற சட்டைகளை
எடுப்பதில்லையே ஏன் அப்பா?


பதில் கிடைத்தது
அப்பா சட்டைகளை
பால்யத்தில் போல
அணிந்து பார்த்ததில்...


ஒவ்வொரு சட்டையிலும்
மூச்சை நிறைக்குது
அப்பாவின் வாசத்தைவிட
புத்திரபாசத்தின் மணம்

தம்பிக்கு’ ஒரு பாட்டு!

Tuesday, May 19, 2009


நான் செத்துப்பொழைச்சவன்டா...எமனைப்
பாத்து சிரிப்பவன்டா!
வாழைபோல வெட்டவெட்ட முளைச்சு
சங்குபோல சுடச்சுட வெளுத்து
வளரும் ஜாதியடா!...வந்தா
தெரியும் சேதியடா!

சிலுவையில் ஏசு மறைஞ்சாரு...மக்கள்
சித்தமெல்லாம் வந்து நிறைஞ்சாரு!
குண்டுகள் போட்டு துளைச்சாங்க...ஆனா
காந்தியும் லிங்கனும் நிலைச்சாங்க!
சந்தனப்பெட்டியில் உறங்குகிறார் அண்ணா..
சரித்திரப்புகழுடன் விளங்குகிறார்!
எதையும் தாங்கும் இதயம் கொண்டு...‘அண்ணன்’
எங்களை வாழ்ந்திடச் சொன்னதுண்டு!

‘அண்ணன்’ அன்று நல்ல நல்ல கருத்து
அழகுத்தமிழில் சொல்லிசொல்லிக் கொடுத்து
வளர்ந்த ‘பிள்ளை’யடா...அதனால்
தோல்வி இல்லையடா!

பரம்பரை ரத்தம் உடம்பிலேதான்...அது
முறுக்கேறிக் கிடப்பது நரம்பிலேதான்!
கொடுப்பதைக் கொடுத்தா தெரியுமடா...உன்
இடுப்பையும் ஒடிச்சா புரியுமடா!

காலம்தோறும் குட்டக்குட்டக் குனிந்து
கொடுமைக்கெல்லாம் கட்டுப்பட்டுக் கிடந்து
நிமிர்ந்த கூட்டமடா...எதிர்த்தால்
வாலை நறுக்குமடா!

படம்: எங்கள் தங்கம் பாடல்: வாலி

 
சுடச்சுட - by Templates para novo blogger