‘‘மு.க.ஸ்.’’துதி!

Saturday, May 30, 2009


அடி ஆத்தி! ‘திருவிளையாடல்’ கதையை கொஞ்சம் மாத்திப்
போடுங்க. அண்ணன் ‘அஞ்சாநெஞ்சன்‘ ‘மதுரை மயிலேறி கேபினட் மந்திரியா டெல்லிக்கு போயிட்டாரு. தம்பி ‘தளபதியோ‘ தமிழகத்தை சுத்திவந்து ‘துணை முதல்வரா‘ ஆயிட்டாரு! ஆகமொத்தம்..தி.மு.க. இளைஞரணி இப்போ ‘ஹேப்பி சுந்தராம்பாளா’ மாறி பாடற லேட்டஸ்ட் ரீமிக்ஸ் பாட்டு.. ‘‘பலம் நீயப்பா!’’

எல்லாம் ‘கலைஞர் துணை’! ‘தளபதி’ இப்போ ‘துணை
மன்னராகி’விட்டார். மாத்துக்கருத்துள்ளவங்க கூட சமயத்துல ஏத்துக்கற ‘அரசியல் விமர்சகர்’ சோ சொன்னாரு..‘‘முதல்வர் பதவிக்கு தகுதியானவர் மு.க.ஸ்டாலின்!’’னு!
ஸோ..அடுத்த பாரா ப்ளீஸ்.

‘முதல்வர் மகன்‘..‘தளபதி’ங்கற ஒளிவட்டமெல்லாம் இல்லாம படுஎளிமையா இருக்கற மு.க.ஸ்டாலினை ஒரு பத்திரிகையாளர்ங்கற முறையில பலமுறை சந்திச்சிருக்கேன். அக்டோபர் 1996. சென்னை மாநகர மேயராகிறார் மு.க.ஸ்டாலின். ‘முதல் பேட்டி‘ ‘குங்குமம்’ பத்திரிகைக்காக எடுத்தவன்ங்கிறதால என்னை எப்பவுமே ஞாபகம் வெச்சுருப்பார். அன்னிக்கு கவர்னரை பாத்துட்டு பவர்ஃபுல்லா கோபாலபுரம் இல்லத்துக்கு வர்றாரு.

வந்து குவிஞ்ச மாலைகள்.சால்வைகளை பாத்து தொண்டர்கள் மத்தியில ‘‘பனகல் பார்க்ல இதைவெச்சே பூக்கடையும்,துணிக்கடையும் ஆரம்பிச்சுரலாமே’’னு ஆனந்தமா முனகல் கேக்குது. மதியம் ஒரு மணி. பெருமையா வாழ்த்தின அத்தனைபேரையும் பொறுமையா அனுப்பிச்சுட்டு நம்ம பேட்டிக்காக ரெடியானார் ஸ்டாலின்.

கூடவே ஸ்டாலினின் அன்பு நண்பர் ‘அன்பில்‘ பொய்யாமொழி!
‘முரசொலி‘ ஃபோட்டோகிராபர் ராஜேஷ் கிறிஸ்டோபர் ‘ப்ரூஸ்லீ‘‘ மாதிரி நின்னு கூட்டத்தை விலக்கி உள்ளே கூட்டிட்டுப் போனார். அண்ணா..ஸ்டாலின் டைமிங்கா ஜோக்
அடிப்பார்னு சொன்னா நம்பமாட்டீங்க!

என்னைப் பாத்ததுமே பொய்யாமொழி ‘‘உதயசூரியன்
வந்துட்டாரு!’’ன்னாரு. உடனே ஸ்டாலின் ஜாலியா ‘‘உதயசூரியனாலதான வந்தோம்!’’னாரு உள்ளர்த்தத்தோட! சுத்தியிருந்த அத்தனைபேரும் ‘‘ஹோ‘னு சிரிச்சோம். கேட்ட கேள்விகளுக்கெல்லாம் தோட்டா ஸ்பீடுல பதில் சொன்னாரு ஸ்டாலின்.

அப்புறம் கேஷுவலா ‘‘எந்நேரமும் பரபரப்பா இருக்கற அரசியல் வி.ஐ.பி.கள் மேல ‘குடும்பத்தை கவனிக்க அவருக்கு நேரமில்லை’னு ஒரு பொது புகார் இருக்கே! நீங்க எப்படி?’’ன்னேன். ‘‘வேணாம் வம்பு’’ன்னு ‘மோனாலிஸா ஸ்மைலோட’
ஸ்டாலின் சொன்னாரு..‘‘உண்மைதான். தலைவர் கலைஞருக்கு நாங்க படிக்கற காலத்துல என்ன படிக்கறோம்,என்ன செய்றோம்னு பாக்க நேரம் இருந்ததில்ல. அதே பழக்க
வழக்கம்தான் எனக்கும் வந்துருச்சு!’’ன்னார்.

அந்த பேட்டியிலும், அடுத்தவாட்டி சந்திச்சப்பவும் ஸ்டாலின்கிட்ட ‘விளாட்டா’ நான் கேட்ட இன்னொரு ‘கலாட்டா’ கேள்வி..‘‘உங்க இளமையோட
ரகசியம்தான் என்ன?’’ அதுக்கு அவர் வெச்சிருக்கற ‘எவர்க்ரீன்’ பதில்..‘இதுக்காக தங்கபஸ்பமா சாப்பிடமுடியும்? என்னோட உடல்வாகு அப்படி அமைஞ்சிருச்சு.
கூடுமானவரை காலைல எக்சர்சைஸ் பண்றேன். ஆனா எனக்குத் தெரிஞ்ச ரகசியத்தை
சொன்னா சிரிப்பீங்க. நேரத்துக்கு சாப்பிடறதில்ல..தூங்கறதில்ல! ஒருவேளை இதுதான்
சரியான காரணமோன்னு நினைக்கிறேன்!’’னு சொல்லி சைலன்ட்டா சிரிச்சார்.

இன்னும் நினைச்சு சிரிக்கற இன்னொரு சந்திப்பு இது. ‘குங்குமம்’ இதழில் ‘பயணச்சிறகுகள்’ங்கற தலைப்புல தன்னோட வெளிநாட்டு பயண அனுபவங்களை மு.க.ஸ்டாலின் தொடரா எழுதினாரு. அதுல ஒரு வாரம்..மிக முக்கியமான ஒரு தகவலை சேக்கறதுக்காக வரச்சொல்லியிருந்தாரு. உடனே போனேன்.

நீட்டா டி.டி.பி. பண்ணிவெச்சிருந்த அந்த கட்டுரையை என்கிட்ட குடுத்தாரு. அப்படியே ‘‘உதயசூரியன்..‘பயணச்சிறகுகள்’ படிக்கறீங்களா?’’ன்னாரு. ‘‘தவறாம படிக்கறேன் சார். பல தகவல்களோட எழுதறீங்க. புது வாசகர்கள்கிட்டேர்ந்து நிறைய லெட்டர்ஸ் வருது சார்’’னேன்.

பதிலுக்கு ஸ்டாலின் ‘‘அப்படியா? அதெல்லாம் ஒருவேளை நம்ம இளைஞரணி தம்பிகள் எழுதினதா இருக்கப்போகுது!’’னு சிரிச்சுகிட்டே சொல்ல..‘இவ்ளோ நுட்பமா கவனிக்கறாரே’னு நானும் ‘கப்சிப்’பா சிரிச்சேன். அப்புறமா ‘‘அந்த லெட்டர்ஸோட சேர்த்து.. ‘குங்குமம்’ ரெகுலர் வாசகர்கள் எழுதறதையும் குடுங்க!’’ன்னாரு அவருக்கே உரிய புன்னகையோடு.

ஒரு கவுன்சிலரே கும்பலா அடிப்பொடிகளோட வர்றப்போ..அந்தமாதிரி படையோட வந்து கடுப்படிக்காம..சிம்பிளா நடைபோட்டு வந்து நகர மக்களை ஈஸியா நகரவெச்சவரு ஸ்டாலின்! சென்னைல மேம்பாலங்கள் கட்டப்பட்டப்போ..
எல்லாரும் ‘குதிகாலை தூக்கி ஜாக்கிங் செய்ற அதிகாலைலயே‘ அதிகாரிகளோட வந்து
ஸ்பாட் விசிட் பண்ணிட்டு சைலன்ட்டா போயிடுவாரு.

இப்படித்தான் ஒருமுறை..கோடம்பாக்கம் மேம்பால கட்டுமானப் பணிகளை பார்வையிட வந்தாரு. அஞ்சாறு அதிகாரிகள் மட்டுமே கூட இருந்தாங்க.
கொஞ்சம் தள்ளி தனியா வந்து பாலத்தோட மறுபுறத்தை பார்வையிட்டாரு. அப்போ அங்கிட்டு நடந்துபோன ரெண்டுபேர் ‘டி.ஷர்ட்..ட்ராக் சூட்‘ போட்டு ஸ்டைலா நின்னுருந்த ஸ்டாலினை பாத்துகிட்டே ‘‘மு.க.ஸ்டாலின் மாதிரியே இருக்கார்ல!’’னு சொல்றாங்க.

இதை கேட்டதுமே ஸ்டாலின் சிரிச்சுகிட்டே ‘‘அதே
ஸ்டாலின்தாங்க நான்!’’னு சொல்ல..‘‘வணக்கம் சார்..ஸாரி சார்’’னு அந்த பாதசாரிகள் உளறி குளறுனது சுவாரஸ்யமா இருந்துச்சு. வேறென்ன தலைவா..டைட்டிலுக்கு மேட்ச்சா இந்த மேட்டர் ஆச்சா!

வைகைப்புயல்..யானைப்புயல்!

Wednesday, May 27, 2009


தூத்துக்குடின்னா முத்து..ஊத்துக்குளின்னா வெண்ணெய்..
மதுரைன்னா ‘அ’..ஸாரி..மல்லி. இதேபோல வடிவேலு,பிரபுதேவான்னா எனக்கு நினைவுக்கு வர்றது..யானை! அந்த யானைக்கதையை ஊர்வலம் விடவா?

வடிவேலுக்கும் பிரபுதேவாவுக்கும் ‘பட்டைய கௌப்பற ரெட்டையர்’ங்கற ‘கெமிஸ்ட்ரி‘ (அர்த்தம் தெரியாதவங்க டான்ஸ் மாஸ்டர் கலாகிட்ட கேட்டுக்கோங்க!) செமையா ஒர்க் அவுட் ஆகியிருந்த நேரம். ‘ராசய்யா’ படத்துக்காக முதுமலையில ஷூட்டிங். ஏதோ ஒரு கோவத்துல வடிவேலு ஒரு யானையோட ‘பெட்டக்ஸ்’(!) சைடுல நின்னுகிட்டு காச்மூச்னு திட்டறமாதிரி காட்சி.

பொறுத்துப் பாத்து வெறுத்துப்போன யானைக்கு கடுங்கோவம்
வந்துருது. அதுவும் தெகிரியமா முன்னால நின்னு பேசாம..‘பின்னால’ நின்னு குமுறுற
வடிவேலுவோட மூஞ்சில ‘சரக்’குன்னு ‘அச்சமின்றி மிச்சமின்றி எச்சத்தை’ பாய்ச்சுது! இந்த சீனுக்காக யானை ‘கக்கா’ மாதிரி இருக்கணுமேனு கிலோகணக்குல மருதாணிய
வாங்கி,மிக்ஸியில போட்டு ‘நைய்ய’ அரைச்சுட்டாங்க!

டைரக்டர் ‘ஆக்ஷன்’னு சொன்னதுமே ஒரு அஸிஸ்டன்ட்..
மருதாணிய அள்ளி வடிவேலு மூஞ்சில ‘சப்’புன்னு அப்பணும். மணக்கமணக்க மருதாணி உருண்டைகள் ரெடி. சீன் ஸ்டார்ட் ஆகப்போகுது. அப்போ பாத்து யானைக்கு பின்னால நின்ன அந்த அஸிஸ்டன்ட் திடீர்னு ‘‘ஆஹா! யானைக்கு கரெக்ட்டா ‘கக்கா’
வரும்போலிருக்கு. அதுக்கான அத்தனை அறிகுறியும் தெரியுது சார்!’’னு குஷியா போட்ட கூச்சல்ல..யானைக்கே கூச்சம் வராத குறை.

இதை பாத்த வடிவேலு பெருமிதமா டைரக்டரைப் பாத்து
‘‘சார்..இந்த வடிவேலு பிறவி நடிகன்! ஒரிஜினலாவே யானை என் முகத்துல சாணம்
போடட்டும் சார்’’னு குரல் கொடுக்கறாரு. பிரபுதேவாவும் டைரக்டரும் ‘முகம் மலர’
பாக்கறாங்க. டேக் ரெடி! யானையோட ‘பேக்’ ரெடி!

ஆக்ஷன்! கேமரா ஓடுது. அதேஜோர்ல ‘கௌம்பிருச்சுய்யா
கௌம்பிருச்சு’ங்கற எஃபெக்ட்ல வடிவேலு..யானையோட ‘பெட்டக்ஸ்’கிட்ட மூஞ்சியை வெச்சுகிட்டு கோபம் கொப்பளிக்க எக்ஸ்பிரஸன் காட்டறாரு! ஒட்டுமொத்த யூனிட்டும்
திகிலோட பாத்துகிட்டிருக்கு. அஸிஸ்டன்ட்டும் ‘மருதாணியும் கையுமா’ வீசறதுக்கு ரெடியா நிக்கறாரு. ஆனா வழக்கம்போல இந்த விதி இருக்கே விதி..அது இந்த தடவை ‘விசிலடிச்சு’ விளையாடிச்சு பாருங்க!

காட்சி கலகலக்கணும்ங்கிறதுக்காக பீச்சி அடிக்கற ‘வஸ்து’வுக்காக வடிவேலு யானையோட ‘பின்னழகு‘கிட்ட ரொம்ப க்ளோஸா முகம் காட்டி நிக்க..அடக்கருமமே! வந்தது அதுவல்ல..வேறொண்ணு! ‘விளைவு’..‘‘ஊழிக்காத்துல சிக்கி உசுருக்கு போராடுறமாதிரி’’ காத்துல கைவிரிச்சு கதறுன வடிவேலு..அப்பிடியே
‘அந்தர்பல்டி’ அடிக்கப்போயி..ஒருவழியா பேலன்ஸ் பண்ணி சொந்தக்கால்ல நின்னாரு!

‘நடந்த அசம்பாவிதத்தை’ உன்னிப்பா கவனிச்சு உஷாரான
பிரபுதேவா ‘போதுமான முன்னேற்பாட்டோட’ பாதுகாப்பான தூரத்துல நின்னுகிட்டு ’’தலைவா..என்ன ஆச்சு?’’னு சிரிக்காம கேக்க..‘யானைப்புயல்‘ல சிக்கித் தப்பின ‘வைகைப்புயல்’ ‘‘ஸ்ஸ்..அப்பப்பப்பா! மூச்சு எம்புட்டு முக்கியம்னு இப்பத்தாம்ப்பா
தெரியுது. என் உசுரு தப்புனது எந்த சாமி புண்ணியமோ?’’னு பலஹீனமா சொல்லிட்டு ‘விருவிரு’னு யானையோட மூஞ்சிப்பக்கம் போனாரு!

என்னாகுமோ..ஏதாகுமோனு பாகனோ பதறிப்போய் பாக்க..
யூனிட்டோ டென்ஷனாக நோக்க..மூஞ்சி புண்ணாகிப்போன வடிவேலு, நேருக்கு நேரா
யானையைப் பாத்து ‘‘சீச்சீ..இதென்ன சின்னப்புள்ளத்தனமா இருக்கு!’’னு சீரியஸா சொல்ல..அப்போ வெடிச்ச சிரிப்புல யூனிட்டே சிதறிடுச்சு!

சுஜாதாவின் ஜீனி வேலை!

Sunday, May 24, 2009


மேடையில பேசறதுக்காக போறப்போ..சுஜாதா இடுப்புல
‘இருக்கவா நழுவவா’னு குஜாலா ஊசலாடுது வேட்டி. கடுப்பை அடக்கிகிட்டு இடுப்பை இறுக்கிகிட்டே ஒருவழியா மைக்கை பிடிச்சாரு சுஜாதா.

மத்த பேச்சாளர்களைப் போல ‘ஓசோன் ஓட்டையில விரலைவிட்டு ஆட்டறமாதிரி’ நீட்டி குரல் குடுக்காம.. ‘பி.பி.சீனிவாஸ் பி.பி.சி.நியூஸ்
வாசிக்கறமாதிரி’ நம்ம ஆசான் ஒரு ராகத்தோட..பேப்பர்ல எழுதிவெச்சிருந்ததை சூப்பரா
படிச்சிகிட்டிருக்காரு!

ஒரு கையில பேப்பரையும், மறு கையில வேட்டியையும் இறுக்கி பிடிச்சுகிட்டு லேசான திகிலோட பேசி(!)முடிச்ச சுஜாதா..ஸ்லோமோஷன்ல வந்து அவரோட இருக்கைல உக்காந்தாரு. ஸ்..அப்பாடா! வேட்டி அவுந்து விழாம..இனிதே முடிஞ்சுச்சு
விழா!

மறுநாள்..சுஜாதாவுக்கு ஃபோன் அடிச்சேன். லைன்ல வந்தது ‘லயன்’! ‘‘சார்..நேத்து எல்லாரும் விழாவ பாத்துகிட்டிருந்தாங்க. நாந்தான் உங்க வேட்டி விழாம இருக்கணும்னு வேண்டிகிட்டிருந்தேன். ரொம்ப சிரமப்பட்டுட்டீங்களே சார்’’னேன்.


சன்னமா சிரிச்சவர் மின்னலா பொளந்தார் பாருங்க..‘‘குட்!
ஷார்ப்பா கவனிச்சிருக்கீங்களே. பார்த்திபனோட விருப்பத்துக்காக வேட்டிக்கு ஓகே சொன்னேன். ஆனா..அதை இடுப்புல சுத்திகிட்டு நிறைய வி.ஐ.பி.க இருக்கற அந்த ஸ்டேஜ்ல விரைவீக்கம் வந்தவன்மாதிரி ஒரு தினுசா நான் நடந்துபோயிருக்கேன். நல்லவேளை..விழா பரபரப்புல யாரும் இதை கவனிக்கலை!’’னு அவர் சொல்லிமுடிக்க..வெடிச்சு சிரிச்சேன்.

தன்னைத்தானே மெச்சிக்கக்கூட தயங்கற சிலபல ரைட்டர்ஸ் மத்தியில..தகுதியிருக்கற படைப்பாளிகளை தன்னோட உச்சிமீது தூக்கிவெச்சு கொண்டாடின ‘ஞானத்தந்தை’ சுஜாதா! திறமையுள்ள இளம்படைப்பாளிகள்..கலிஃபோர்னியால
இருந்தாலும் சரி..கரியாம்பட்டில இருந்தாலும் சரி..அவங்க சிறந்து விளங்கறதுக்காக
தேடிப்‘‘படிச்சு‘‘ ‘பாராட்டு வெளிச்சம்’ பாய்ச்சற ‘கலங்கரை விளக்கம்’ சத்தியமா சுஜாதா மட்டுமே!சுஜாதாவுக்கு வயசு ‘என்றும் பதினாறு’தான்! ‘பேச்சுலர் வாசம்’ அடிக்கற இவர் பேச்சுல ‘அந்தக்காலத்துல’ங்கற பழைய கோந்து பிஸினஸே கிடையாது. எப்பவுமே டீன்ஏஜ் டிக்கெட்டுகளோட லாங்குவேஜ்லதான் பூந்து விளையாடுவாரு!
‘‘எப்டி சார்‘‘னு கேட்டா..‘‘அதெல்லாம் ஜீனி வேலை!’’ம்பார் இந்த ‘ஜீனியஸ்’!


இன்னொரு சந்திப்புல..ஒரு பத்திரிகைக்கு ‘பொங்கல் ஸ்பெஷல்’ கட்டுரை எழுதிகிட்டிருந்தாரு. பேச்சுவாக்குல ‘‘தமிழர்கள் அதிகமா பயன்படுத்தற வார்த்தை என்ன?’’னு கேட்டாரு. ரெண்டு மூணு சொன்னேன். உதடு பிதுக்கினவரு ‘‘தின்பொருள் விக்கறவர்லேர்ந்து மென்பொருள்காரங்க வரைக்கும் அத்தனை தமிழர்களும் அதிகமா பயன்படுத்தற வார்த்தை ‘சூப்பர்’!’’னாரு. உடனே ‘‘சூப்பர் சார்’’னேன். ‘‘பாத்தீங்களா..
படுத்தறீங்களே’’ன்னாரு ர.சுருக்கமா!

‘மோதிரக்கையால குட்டுப்பட்டது’ங்கறதை மாத்தி ‘மேதையின்
வாயால வெரிகுட்டு வாங்குனது’னு ஒரு சம்பவம் சொல்றேன். ‘குங்குமம்’ பத்திரிகைல ‘ஆ..அனுபவம்‘ங்கற தலைப்புல வெரைட்டியான அனுபவங்களை தொடரா எழுதிகிட்டிருந்தேன். அதுல ஒரு வாரம் ‘இப்படிக்கு நட்பு’னு ஒரு அனுபவம்!

ஆபீஸ்ல ஒரு மத்தியானம். திடீர்னு சிறப்பாசிரியர் ராவ் சார் கூப்பிட்டாரு. போனேன். ‘‘உங்க கட்டுரைய ரொம்ப நல்லாருக்குனு சுஜாதா
பாராட்டினாரு!’’னு சொன்னாரு. அந்த நொடியில எனக்கு உண்டான பரவசத்தை
‘குண்டலினி யோகம்’கூட தந்திருக்காது! உடனே சுஜாதாவுக்கு ஃபோன் பண்ணேன்.
எடுத்தார்.

‘‘ரொம்ப தேங்க்ஸ் சார். நீங்களே பாராட்டினது’’னு நான் நீட்டி முழக்குனதை நறுக்குன்னு கத்தரிச்சவர் ‘‘அந்த கட்டுரை ரொம்ப நீட்டா..ஸ்வீட்டா இருக்கு.
பிரமாதமான ஸ்க்ரீன்ப்ளே. போதும் பத்திரிகை உத்தியோகம். உடனே சினிமா பண்ண
கிளம்புங்க. ராவ் தடுப்பாரு. கண்டுக்காதீங்க. நாங்கள்ளாம் ‘பூட்ட கேஸு’.
ஆல் த பெஸ்ட்!’’னு சொல்லி ஃபோன் ‘டொக்’. (இதே வாழ்த்தோடு மதன் சார் பேசுனது தனி பதிவுக்கு!)‘சொர்க்கவாசல்’ திறக்கற ஸ்ரீரங்கம் ரங்கநாதனை சேவிச்சாலும்..
‘சொர்க்கம் நரகம்ங்கிறதெல்லாம் உட்டாலக்கடி’னு சொல்றவரு இந்த ரங்கராஜன். ‘‘இறந்த பிறகு சொர்க்கத்துக்கு போகணுமா..நரகத்துக்கு போகணுமானு கேட்டா..நரகத்துக்கு டிக்கெட் வாங்கத்தான் எனக்கு விருப்பம்! ஏன்னா..சொர்க்கம் போரடிக்கும். படுசுவாரஸ்யமான மனிதர்கள்லாம் நரகத்துலதான் இருப்பாங்க!’’னு ஜாலியா சொன்னவரு சுஜாதா!

எதுக்கும்..வரப்போற ‘தீபாவளி ஸ்பெஷல்’ பத்திரிகைகளை வாங்கி
ஆற அமரப் படிங்க! ‘சொர்க்கம் நரகம்’னுகூட வினோதமான கட்டுரை எழுதியிருப்பார் அமரர் சுஜாதா!

‘சர்வரோக நிவாரணி’ சுஜாதா!

Friday, May 22, 2009

முன்குறிப்பு: நேத்து காலைவரைக்கும் மனசு இனம்புரியாத கவலைல சிக்கித்தவிச்சது. அப்புறமா ‘நக்கீரன்’ அட்டைப்படக் கட்டுரை படிச்சபிறகு ‘இனம்’ புரிஞ்ச நிம்மதி! இந்த சந்தோஷத்தோட அட்டகாசமா நம்ம பட்டையக் கௌப்புவோமா? (ஸாரி..வண்ணத்துபூச்சியார்! ‘புத்தகப் பிரியரின்’ மேட்டர் கொஞ்சம் ‘எ‘சகுபிசகா இருக்கு! அதை உங்களுக்கு ஸ்பெஷலா மெயில் பண்றேன். ப்ளீஸ்!)
நேசிக்கத் தெரிஞ்சவனுக்கு..காதலி. வாசிக்கத் தெரிஞ்சவனுக்கு..சுஜாதா! தன் எழுத்தையே விற்கமுடியாத படைப்பாளர்கள் நடுவில..தமிழின் தவிர்க்கமுடியாத தனி சகாப்தம்..எழுத்தாளர் சுஜாதா!

சுஜாதாவை பத்தி ‘கேப்ஸ்யூல்’ வார்த்தைல சொல்றதுன்னா..ராட்சஸன்! ஆகாயம் முதல் பாதாளம்வரை அத்தனை சப்ஜெக்ட்டுகள்லயும் விசுவரூபம் எடுத்து நின்னு விசும்பவெச்ச குசும்பன்! இதுக்குமேல பாராட்டுனா ‘போதும் ஜல்லியடிச்சது’னு சொல்லி சுஜாதாவே சிரிப்பாரு.
இந்த எழுத்துலகப் பிதாமகனை நான் சந்திச்ச சம்பவம் ஒவ்வொண்ணையும் சதா நினைச்சுப்பாத்து எனர்ஜி ஏத்திக்கறேன் ஜி! ‘ஆனந்த விகடன்’ல நான் இருந்தப்போ அடிக்கடி பேசியிருக்கேன். அந்த அறிமுகத்துல சுஜாதாவை நேர்ல சந்திக்கணும்னு ஆசைப்பட்டேன். ஃபோன் பண்ணேன். பேர் சொன்னேன்.

சுஜாதா ரொம்ப ரசனையான ஆசாமி!(அவர் ஸ்டைல்!) அற்பமானது..நுட்பமானதுனு பேதமில்லாம கவனிச்சு ரசிப்பார். ‘‘எம்.பி உதயசூரியனா! பேர் நல்லாருக்கே! காலைல பீச்சுக்கு வர்றீங்களா..ஈவ்னிங் வீட்டுக்கு வர்றீங்களா?’’னு மெல்லிசான குரல்ல கேட்டார். ‘‘பீச்சுக்கு வர்றேன் சார்’’னேன். அன்னிக்கு ராத்திரி என் தூக்கத்தை கெடுத்தது வேறெந்த கவர்ச்சிக்கன்னியும் கெடயாது..சத்தியமா சுஜாதாதான்!

பொழுது விடிஞ்சது. ‘காந்தி’ காத்து வாங்கற கடற்கரை. காத்திருந்தேன். ‘தேவன் வந்தார்’. இங்கிட்டும் அங்கிட்டும் நடக்கறவங்க விஷ் பண்ணிகிட்டே கடக்க..மையமா சிரிச்சுகிட்டே சுஜாதா ‘பைய்ய’ நடந்தாரு. பக்கத்துல போய் ‘‘வணக்கம் சார்’’னேன். ஒருநொடி என்னை உன்னிப்பா ‘ஸ்கேன்’ பண்ணிட்டு ‘‘வாங்க உதயசூரியன்’’னு அசால்ட்டா சொல்ல..என் நடுமுதுகு ‘திடுக்‘னுச்சு.

அதுக்கு முன்ன சுஜாதா என்னை முன்ன பின்ன (‘சிவாஜி’ பட காமெடியை யோசிச்சுராதீங்க!) பாத்ததில்ல! ‘‘அப்புறம் எப்டி சார் கண்டுபிடிச்சீங்க?’’ன்னு ஆச்சரியப்பட்டேன். அலட்டிக்காம சுஜாதா சொன்னாரு..‘‘பீச்ல என்னை பெரும்பாலும் பாக்கறவங்க ‘நீங்க சுஜாதாதானே‘ன்னு கேப்பாங்க. சிறும்பாலும் பாக்கறவங்க ‘யாரோ ஒரு மியூசியம் ஆசாமி’ன்னு திகிலா விலகிப்போவாங்க. இதுல ‘வணக்கம் சார்‘னு வந்தா அது நீங்களாத்தான் இருக்கணும்னு ஒரு குன்ஸா அடிச்சேன்’’னார் பாருங்க..அதான் சுஜாதா!

எழுத்துல ‘புலிப்பாய்ச்சல்’ பாயற சுஜாதா..பேசறப்போ அடிக்கற எக்கச்சக்க நக்கல்ல சிரிச்சே ‘குளிர்காய்ச்சல்’ வந்துரும். ‘குங்குமம்’ கட்டுரைத்தொடருக்காக சுஜாதாவை பலமுறை சந்திச்சேன். அன்னிக்கு செமஜாலி மூடுல இருந்தார். டேபிள்ல ‘மகாமகா தடிமனா’ ஒரு புத்தகம் இருந்துச்சு. ‘‘என்ன சார் இந்த புக் கல்லாப்பெட்டி சைஸ்ல இருக்கே’’னு கேட்டேன்.
அடுத்த நொடி..‘பம்பர் ப்ரைஸ் விழுந்தமாதிரி சர்ப்ரைஸ் ஆனேன். ஆமாங்க. அந்த கமெண்ட்டுக்கு ஒரு குழந்தையைப்போல வஞ்சனையில்லாம சிரிச்சார் சுஜாதா. எனக்கோ பெருமை தாங்கல! அதேஜோர்ல ‘‘சார்..இதை முழுசா படிச்சிட்டீங்களா?’’ன்னேன். ‘‘இப்பத்தான் பத்து பக்கம் முடிச்சிருக்கேன்’’னார். உடனே நான் ‘‘அப்போ நிச்சயம் இது ‘கல்லா‘ பெட்டிதான் சார்’’னு (‘கல்லாத‘!) சிலேடையில விளையாட..‘அட!’னு ஒரேவார்த்தையில நூறுகிலோவுக்கு பாராட்டினவர் ‘‘தமிழ் உங்களுக்கு சோறு போட்ரும்!’’னார்!

இனி சுஜாதா ரவுண்டு. பேசிகிட்டே என்னைப்பாத்தவர் ‘‘தாதுபுஷ்டி லேகியம் ஏதும் சாப்புடறீங்களா?’’ன்னார் சைலன்ட்டா. ‘‘ஐயையோ..இல்லையே சார்’’னேன்.‘‘அப்போ தாதுவை வீணடிக்கறதில்லபோல!’’னு அடுத்த பஞ்ச் வெச்சிட்டு ‘‘அதான் எப்பவும் உங்க முகத்துல ஒரு தேஜஸ் மின்னுது’’ன்னாரு கிண்டலா! கூச்சப்பட்டு சிரிச்சேன்.
‘‘இந்த கட்டுரைத்தொடரை ‘ஏன்..எதற்கு..எப்படி’மாதிரி கேள்வி பதிலா கொண்டுபோலாமா சார்?’’னேன். ‘‘வேணாம் வேணாம்! ‘ என்னை ஒரு ‘சர்வரோக நிவாரணியா‘ நினைச்சு ‘சொப்பன ஸ்கலிதம்.. விரை வீக்கம்..ஆண்மைக்குறைவு தீர என்ன வழி‘னு கேட்டே திணறடிச்சிருவாங்க! அப்புறம் அத்தனையும் எனக்கு வந்துரும்..கேள்விகளா!’’னு ‘நச்‘னு சொல்ல..சேர்ந்து சிரிச்சோம்.

‘கனவுத்தொழிற்சாலை‘யான கோலிவுட்டுக்கு சுஜாதாமேல ரொம்ப பாசம். அதிலும் ‘வித்தகன்’ பார்த்திபனுக்கு ‘விசித்திரன்’ சுஜாதான்னாலே அதீத மதிப்பு. இந்த மதிப்பு மனசளவுல இருந்தா பரவால்ல! சுஜாதாவோட இடுப்பளவுக்கு வந்து உடுப்பளவு மாறுனதுதான்..காதளவுக்கு சிரிக்கவெச்சது!
பார்த்திபனின் ‘கிறுக்கல்கள்’ கவிதைத்தொகுப்பு வெளியீட்டுவிழா. காமராஜர் அரங்கமே ‘தலை‘கட்டியிருந்துச்சு. முதல்வர் கலைஞர்,சுஜாதா,பாரதிராஜா,பாக்யராஜ்,சிவசங்கரி மேடையில இருக்காங்க. பார்த்திபன்தான் ‘புதுமைப்பித்தனாச்சே’! விடுவாரா? விழா வி.ஐ.பி.கள் அத்தனைபேருக்கும் (சிவசங்கரி தவிர!) பட்டுவேட்டி சட்டை எடுத்துத்தந்து கட்டிட்டு வரச்சொல்லியிருந்தாரு.
பாரதி.பாக்யராஜாக்களுக்கு பழக்கமானதுதான்! கட்டிகிட்டாங்க. ஆனா..பாவம் சுஜாதா! சேர்ல உக்காந்திருந்தப்போ வெவஸ்தை இல்லாத வேட்டியால ரொம்ப அவஸ்தையாதான் இருந்தாரு. பேச எந்திரிச்சப்போதான் சுஜாதா மந்திரிச்சுவிட்ட மாதிரி ஒரு தினுசா நடந்துவந்தாரு. ‘என்னடா‘ன்னு பாத்தா..‘சென்னையோட ஈஃபிள் டவர் போல..ஓங்கிவளர்ந்த பேனாவோட ரீஃபில் மாதிரி‘ இருக்கற சுஜாதாவோட இடுப்புல வேட்டி ‘இருக்கவா? நழுவவா?’னு ஊசலாடிகிட்டிருக்கு!

‘ஐயையோ..அப்புறம் என்னாச்சு’? அடுத்த பதிவு வரை வயித்துல நெருப்பையும், இடுப்புல வேட்டியையும் கட்டிகிட்டிருங்க!

தம்பிக்கு’ ஒரு பாட்டு!

Tuesday, May 19, 2009


நான் செத்துப்பொழைச்சவன்டா...எமனைப்
பாத்து சிரிப்பவன்டா!
வாழைபோல வெட்டவெட்ட முளைச்சு
சங்குபோல சுடச்சுட வெளுத்து
வளரும் ஜாதியடா!...வந்தா
தெரியும் சேதியடா!

சிலுவையில் ஏசு மறைஞ்சாரு...மக்கள்
சித்தமெல்லாம் வந்து நிறைஞ்சாரு!
குண்டுகள் போட்டு துளைச்சாங்க...ஆனா
காந்தியும் லிங்கனும் நிலைச்சாங்க!
சந்தனப்பெட்டியில் உறங்குகிறார் அண்ணா..
சரித்திரப்புகழுடன் விளங்குகிறார்!
எதையும் தாங்கும் இதயம் கொண்டு...‘அண்ணன்’
எங்களை வாழ்ந்திடச் சொன்னதுண்டு!

‘அண்ணன்’ அன்று நல்ல நல்ல கருத்து
அழகுத்தமிழில் சொல்லிசொல்லிக் கொடுத்து
வளர்ந்த ‘பிள்ளை’யடா...அதனால்
தோல்வி இல்லையடா!

பரம்பரை ரத்தம் உடம்பிலேதான்...அது
முறுக்கேறிக் கிடப்பது நரம்பிலேதான்!
கொடுப்பதைக் கொடுத்தா தெரியுமடா...உன்
இடுப்பையும் ஒடிச்சா புரியுமடா!

காலம்தோறும் குட்டக்குட்டக் குனிந்து
கொடுமைக்கெல்லாம் கட்டுப்பட்டுக் கிடந்து
நிமிர்ந்த கூட்டமடா...எதிர்த்தால்
வாலை நறுக்குமடா!

படம்: எங்கள் தங்கம் பாடல்: வாலி

‘கிறுக்குச் சித்தர்’ கமல்ஹாசன்!

Monday, May 18, 2009

‘சிங்கத்தை அதோட குகையில சந்திக்கணுமா? இல்ல..கமல்ஹாசனை நேருக்கு நேரா பேட்டி எடுக்கணுமா?‘. ‘பேசாம‘ சிங்கத்தையே சந்திச்சிரலாம். ஏன்னா அதுக்கு தமிழ் தெரியாதே!
மத்த நடிகர்கள்மாதிரி மிக்ஸர் தின்னுகிட்டே வெட்டி லெக்சர் அடிக்கிற பிஸினஸ்லாம் கிடையாது. வேதாளம் மாதிரி கேள்விகள் கேக்கணும்..அப்போதான் பாதாளம்வரை பாய்ஞ்சு பதில் சொல்ற கலைஞானியோட மேதாவித்தனத்தை உணரமுடியும்!
அப்படியான அற்புத அனுபவம் ரெண்டுமுறை வாய்ச்சது எனக்கு. முதலாவது..நான் ‘ஆனந்த விகடன்’ நிருபராக இருந்தபோது. ரெண்டாவது..‘தமிழ் சிஃபி.காம்’ இணைய இதழில் எடிட்டராக இருந்தபோது! (‘உலகத் தமிழ் இணைய இதழ்களிலேயே முதல்முறையாக உலகநாயகன் சிறப்பு நேரடிப்பேட்டி தந்தது‘ நமக்குத்தான்!)

‘ஆழ்வார்பேட்டை ஆண்டவன்’ ஆபீஸ். மாடியறைக்கு சுழல் படிக்கட்டுல ஏறிப்போறப்பவே சுத்துது தலை. உள்ளே..கமல்ஹாசனின் அறை. காத்திருந்தேன். கதவு திறந்தது. ‘‘வாங்க’’னு வரவேற்றுகிட்டே உள்ளே வந்தார் கலைஞானி! பார்க்கிற நம்மை ‘ஏதோ ஒரு அவதார புருஷன்’போல ஆக்கிரமிக்கிற கம்பீர அழகு.
வெளிச்சமடிக்கிற கமலின் பார்வையில்..‘கிழிச்சு தொங்கவிடும்’ லேசர் கூர்மை! ‘சொல்லுங்க’ன்னாரு. ஆரம்பிச்சேன்...‘‘முன்னெல்லாம் ‘சுருக்’குன்னு குத்துறமாதிரி கவிதை எழுதுவீங்க. ‘காலையில் எழுந்தால் யார் முகத்தில் விழிப்பீர்கள்?’னு ஒரு கேள்விக்கு..‘காட்டில் கிடந்தால் நரி முகத்தில்! கட்டிலில் கிடந்தால் ஸ்த்ரீ முகத்தில்!’’னு பொட்டுல அறைஞ்சமாதிரி அபாரமா பதில் சொன்னீங்க. இப்பவும் எழுதறீங்களா?’’ன்னேன்.
லேசான சிரிப்போடு கமல் ‘‘இப்பவும் எழுதிகிட்டுதான் இருக்கேன். இதுவரைக்கும் எழுதினதை தொகுத்தும் வெச்சிருக்கேன். சுஜாதா முன்னுரையோட ரெடியா வெச்சிருக்கேன். என்னுடைய இந்த மறுபக்கம் நிறைய பேருக்கு தெரியாது!’’ன்னாரு.

அடுத்ததா ‘‘கமலுக்குள்ள இருக்கிற கவிஞனை சினிமாவின் பரபரப்பு சிதைத்துவிடாதா?’’ன்னு கேட்டேன். நாசியையும் மீசையையும் ஒருசேர வருடிகிட்டே கமல் ‘‘எனக்கு கவிதை எழுதற அளவுக்கு ஓய்வுப்பொழுதை தந்திருப்பதே சினிமாதான். இந்த சினிமாவே இல்லைன்னா ஏதாவது ஆபீஸ் போய்கிட்டு,சாப்பிட்டுகிட்டு சும்மா இருந்திருப்பேன்.எனக்கு குதிரைசவாரி தெரியும். ஜாக்கியா கூட ஆகியிருக்கலாம். ஆனா எனக்கு சினிமா மேலதான் ஆர்வம்!’’னு அழகா சொன்னாரு.
அப்போது கமலின் செல் சிணுங்கியது. எடுத்தவர் ‘தசாவதாரம்‘ ஃபிளெட்சர் மாதிரி ‘அமெரிக்க இங்கிலீஷ்‘ல பேசினாரு. அசந்து பாத்த என்கிட்ட ‘‘ஒரு ஃபாரினர் பேசினாரு. அவங்க பாஷைல பேசினா அவருக்கு சந்தோஷம். பெருசா படிக்கலை. எட்டாங்கிளாஸ்தான். ஆனா நிறைய கத்துகிட்டேன்’’னு சிரிச்சார்.

‘சினிமாவுக்காக உங்களை ரொம்ப கஷ்டப்படுத்திக்கறீங்களே! கஷ்டமா இல்லையா?’’ன்னேன். கும்முன்னு விம்மி புடைக்கற புஜங்களை கமல் தட்டிகிட்டே ‘‘ஒண்ணுமே பண்ணாம கையை காலை முறிச்சுக்கிறாங்க. அதைவிட தெரிஞ்சே முறிச்சிக்கறதுல சந்தோஷம்தான். உதாரணமா பத்ரிநாத் போற பெரியவங்களுக்கு மூட்டுவலி,தசைப்பிடிப்பு,சுளுக்கு எல்லாம்தான் வருது. அதை அவங்க வலியா நினைக்கறதில்ல. அந்த வலியை சுகமாத்தானே ஏத்துக்கறாங்க. அதேதான் எனக்கும்!’’னு எளிமையா சொன்னார்.
முக்கியமான கேள்விக்கு வந்தேன்.. ‘‘குணா படம் டி.வி.யில போட்டப்போ செம வரவேற்பு. ஆனா ரிலீஸானப்போ ஒடலை. அதேமாதிரி ‘ஹே ராம்..அன்பே சிவம்! ரசிகர்களை மலையேத்தி காட்டணும்னு ஆசைப்படறீங்க. ஆனா ‘தெனாலி’ காமெடி மூலம் தரைக்கே திரும்பி வந்துடறீங்களே! இது உங்களுக்கே முரண்பாடா இல்லையா?’’ன்னேன்.
ஆழமா ஒரு பார்வை பார்த்த கமல் ‘‘என்ன செய்ய? என்னோட மலையேறுபவர்கள் மைனாரிட்டிதான். மத்தவங்க மலையேறிவந்து ‘ஹே ராம்’ மாதிரி படங்களை பாக்கறதே இல்லை. கீழேயே தங்கிடறாங்க. எப்படியோ ‘அன்பே சிவம்’ பேர்ல மலையேறினவன்..‘தெனாலியா’ தரைக்கு திரும்பி வருவான். அப்போ பாத்துக்கலாம்னு இருந்துர்ராங்க. என்னை ஒரு ‘கிறுக்குச் சித்தர்’ மாதிரி பண்ணிட்டாங்க! இது எனக்கும் வசதியா போச்சு!’’னு சொல்லி வாய்விட்டு சிரிச்சார் கமல்.

இப்படி அணில் மரமேறுனமாதிரி பல விஷயங்களை ஆழமா பேசி அலசிட்டு கிளம்பறப்போ கேட்டேன்..‘‘கமல்..ஸ்ரீதேவி, கமல்..ஜோதிகா, கமல்..அசின். வருஷங்கள் ஓடினாலும் கமல்கிட்ட மட்டும் அதே இளமை..அதே துடிப்பு. உங்களோட காயகல்பம்தான் என்ன?’’ன்னேன்.
ரசிச்சு சிரிச்ச கமல் ‘‘காயகல்பமெல்லாம் எதுவும் கிடையாது! நல்ல ஆரோக்கியம்தான் காரணம். இன்னும் பத்துவருஷம் கழிச்சு இந்த கேள்வியை கேக்கமாட்டீங்க!’’ன்னு சொல்லிட்டு..தட்டுல இருந்த கடலை உருண்டைகளை எனக்கும் குடுத்து..தானும் எடுத்து ருசித்தார்!

கலைஞரை அழவைத்த வைரமுத்து!

Saturday, May 16, 2009


கிரிக்கெட்டுல வேணும்னா ‘ஆட்ட நாயகன்’ வெவ்வேற வீரர்களா இருக்கலாம். ஆனா..கவிப்பேரரசு கலந்துக்கற எந்த கூட்டமானாலும் ‘கூட்ட நாயகன்’ அவரா மட்டும்தான் இருப்பாரு!

‘கொக்கோ கோலா நிறம்..கொட்ற கவிதைகளோ
உலகத்தரம்..இவர் தமிழுக்கு கிடைச்ச தனி வரம்’னு ‘டமுக்கு டப்பா’ கவிதை
பாடி..டமுக்கு அடிச்சு வைரமுத்துவை அறிமுகம் பண்ணவேண்டிய
அவசியம்லாம் இல்லை.பொத்தாம்பொதுவான விழாவானாலும்..எத்தாம்பெரிய கூட்டம்னாலும் தன்னோட சுட்டுவிரலை சுட்டுப்புடற மாதிரி நீட்டி வைரமுத்து தன் ‘மேக்னட்டு’ குரல்ல பேசற அழகுக்கு ‘நகைநட்டு’ அத்தனையும் அள்ளிக்
குடுக்கலாம்!

‘நல்லது நண்பர்களே..வைரமுத்து பற்றி உங்களுக்கு முக்கியமாக இரண்டு செய்திகள் சொல்ல ஆசைப்படுகிறேன்’னு கவிஞரோட
பாஷையிலேயே ஆரம்பிக்கறேன்.

அண்ணா அறிவாலயம் உள்ளே..கலைஞர் அரங்கத்துல ‘முரசொலி’ அறக்கட்டளை விருது வழங்கும் விழா. முதல்வர் கலைஞர், முக்கிய அமைச்சர்கள்னு பெரும்படையே மேடையிலிருக்கு. ஆளாளுக்கு பேசி கைதட்டலை அள்ள..அத்தனை ‘தட்டலையும்‘ சேர்த்து மொத்தமா ‘தட்டிகிட்டு’
போக.. வைரமுத்து மைக் பிடிச்சாரு...

‘ஒரு வேந்தன் மாதிரி பாத்துகிட்டு காந்தக் குரல்’ல ‘‘நண்பர்களே! நீங்கள் நினைத்து கொண்டிருக்கிறீர்கள்.. தலைவர் கலைஞருக்கு
நான்கு மகன்கள் என்று! ஆனால் உங்களுக்கு உண்மை தெரியுமா..முத்தமிழறிஞர் கலைஞருக்கு மொத்தம் ஐந்து மகன்கள்!’’ என்று சொல்லி நிறுத்த..கூட்டமே திடுக்கிட்டு பாக்க..கலைஞரும் திகைச்சு பாக்க..அரங்கமே கிறங்கி நிக்குது!

‘பிடிபட்டதடா பாஞ்சாலங்குறிச்சி’ங்கற பூரிப்போட
தொடர்ந்து பாஞ்சாரு பாருங்க கவிஞர்..‘‘ஆம் நண்பர்களே! கலைஞருக்கு
மொத்தம் ஐந்து மகன்கள். மூத்தவர்..மு.க.முத்து. அடுத்தவர்..மு.க.அழகிரி.
மூன்றாமவர்..மு.க.ஸ்டாலின். நாலாவது..நம்ம மு.க.தமிழரசு. ஆனால்
இவர்களுக்கெல்லாம் மூத்த அந்த முதல்மகன் யார் தெரியுமா?’’னு மறுபடியும்
கொக்கியை போட..சஸ்பென்ஸ்ல சிக்கித்தவிக்குது கூட்டம்!

இன்னும் பின்றாரு கவிஞர்..‘‘பதினான்காம் வயதிலேர்ந்து கலைஞர் தன்னுடைய தோளில் தூக்கி, மார்பில் தாங்கி வளர்த்த ‘முரசொலி’ பத்திரிகைதான் அவருடைய மூத்தமகன்!’’னு சொல்லி முடிக்க..உணர்ச்சிவசப்பட்ட கலைஞர் கண்ணீர் வடிக்க..அரங்கமே நொறுங்கறமாதிரி கைதட்டல் வெடிக்க..
அப்போ வைரமுத்து பாத்த பார்வை இருக்கே..‘அங்கே பாரதி தெரிந்தான்!’

ரெண்டாவது சங்கதியும் கலைஞர் சம்பந்தப்பட்டதுதான். 2006 மே 11ம் தேதி. தமிழக சட்டமன்றத் தேர்தல் ரிசல்ட். அன்னிக்கு பொழுது விடிஞ்சதுமே கோபாலபுரம் கலைஞர் இல்லத்துக்கு போயிட்டேன். தி.மு.க. கூட்டணி வெற்றியால் கோபாலபுரமே ‘கோலாகல‘புரமானது.

அப்போ நான் ‘குங்குமம்’ பொறுப்பாசிரியர். வெற்றி பெற்ற அந்த முதல் நிமிஷங்கள்ல கலைஞரோட ரியாக்ஷனையும்.சிச்சுவேஷனையும் நேர்ல பாத்தேன். அதைவெச்சு ‘முதல்வரின் முதல் நிமிடங்கள்’னு ஒரு ஸ்பெஷல் ஸ்டோரி பண்ணேன். அந்த நிமிஷங்களை ‘கலைஞர் கூடவே இருந்த கவிப்பேரரசு
விவரிச்சா நல்லா இருக்குமே‘ன்னு வைரமுத்துகிட்டே பேசினேன்.

‘‘நேர அவகாசம் இல்லையே உதயசூரியன்!’’ன்னாரு. விடுவமா? ‘‘இதிகாசம் படைச்சவருக்கு அவகாசம் அவசியமா?’’ன்னேன். நம்ம ‘சகவாசம்‘ தெரிஞ்சு ரசிச்சு சிரிச்சவர்..ஃபோன்லயே அடுக்கடுக்கா விவரிச்சாரு. நானும் அந்த ஸ்பாட்ல இருந்ததால ஜோரா கட்டுரை எழுதி முடிச்சுட்டேன். வைரமுத்துக்கு
ஃபோன்ல படிச்சுக்காட்டறேன்..

‘‘முத்தமிழும் ஆசி கூற..நான்கு திசைகளும் பூத்தூவ..ஐந்தாம் முறையாக முதல்வர் பதவி ஏற்றிருக்கிறார் முத்தமிழறிஞர் கலைஞர்’’னு நான் எழுதின ஓப்பனிங்கை கேட்டதுமே..‘‘உதயசூரியன்..இது நீங்க சொல்வதா? நான்
சொல்வதா?’’ன்னாரு. ‘‘கட்டுரையோட ஆரம்ப வரிகள் சார்’’னேன். ‘‘அப்போ..இதை என் வரிகளாக வாசகர்கள் கருதிவிடக்கூடாது. உங்களுக்கான பாராட்டு
உங்களைத்தான் சேரவேன்டும்’’னு கம்பீரமா சொன்னாரு.

மூணாவது பாராவிலேர்ந்து கவிஞரோட விவரிப்பு
ஆரம்பமாகுது. அந்த பாராவை படிச்சதுமே ‘‘சரியான இடம். நில்லுங்கள். இந்த
பாராவின் தொடக்கத்தில் ‘இதை வைரமுத்துவே தன் வாய்மொழியால் விவரிக்
கிறார்’ என்று போடுங்கள்’’னாரு! சூப்பர்!

கட்டுரை ‘குங்குமத்தில்’ வெளியான நாள்..அதிகாலையிலேயே என் செல் குதித்தது! எடுத்தால்..கவிஞரின் உதவியாளர் பாஸ்கர் ‘‘சார் உங்ககிட்ட பேசறாங்க’’னாரு. பேசினார் வைரமுத்து...‘‘அருமை உதயசூரியன்! என் சொல்பேச்சை செல்பேச்சாக கேட்டு..நீங்கள் எழுதியிருக்கும் கட்டுரை மிகப்பிரமாதம். தலைவர் கலைஞரிடம் இப்போதுதான் பேசினேன். உங்களைப்பற்றி சொன்னேன். மிகவும் பாராட்டினார். விகடன் தயாரிப்பல்லவா நீங்கள்! விரைவாக நிறைவாக செய்திருக்கிறீர்கள்!’’னு அந்த ‘கவிஞர் சிகரம்’ இந்த கூழாங்கல்லை குனிஞ்சு
பாராட்டினதுல மனசே கனிஞ்சுபோச்சு!

ரஜினிக்கு அம்மா ‘மீனா’!

Thursday, May 14, 2009


டைட்டிலை படிச்சதும் ‘ப்ச்..அடுத்த அலப்பறைய
கௌப்பறியே’னு வாய்க்கு ரெண்டுபக்கமும் பிராக்கெட் போட்டுருப்பீங்களே!

நமக்கு தெரிஞ்ச முறைப்பொண்ணுங்க,
முறைக்காத பொண்ணுங்க அமுக்கமா சிரிச்சுகிட்டே கமுக்கமா வளர்ந்து ‘பெரிய மனுஷி’யாகி அப்புறம் ‘ப்ரிய மனுஷியா’வும் மாறுவாங்க! ஆனா..ரெண்டு கண்ணுல பாத்துகிட்டிருந்தப்பவே ‘ஹாய் ரஜினி அங்கிள்’னு பாடுன ‘குண்டு‘ மீனா..ஒரு ‘சிங்கிள் டீ கேப்புல’ ‘ராஜ்கிரண் மாமோய்’னு சொல்லி..அவருக்கு ‘நள்ளி
எலும்பான அலும்பு‘தான் நாடறியுமே!


அண்டை அயலார்லேர்ந்து..செண்டை வாசிக்கிற மலையாள பூமி, சண்டை போடற கன்னட மண்ணு, தொண்டை கிழிய டயலாக் பேசற தெலுங்கு தேசம்னு அத்தனை ‘திராவிட’ ரசிகர்களையும் தன்னோட கெண்டைவிழியால் சுண்டி இழுத்தவர் மீனா!

மீனான்னாலே என்னால ரெண்டு மேட்டர் மறக்கமுடியாது! ஒண்ணு..‘ஆனந்த விகடன்’ விமர்சனத்துல ஒருதடவை மீனாவைப் பத்தி ‘‘அந்த கண்கள்..அம்மாடியோ! அந்த பற்கள்..ஐயையோ!’’னு வந்த வரிகள்! அடுத்தது..
‘அகோர பசியோட இருந்தவனுக்கு புகாரி பிரியாணி தந்த மாதிரி’ மீனாவை நான் தன்னந்தனியா(பார்றா!) சந்திச்சது!

அது ஒரு அழகிய நிலாக்காலம்! அல்ட்ரா மாடர்ன் சொகுசு ஃப்ளாட். ஒரு வி.வி.ஐ.பி.யோட பேட்டிக்காக போயிருந்தேன். இந்த பிரபலம் அரசியல்,சினிமா ரெண்டு துறைகளையும் கடந்தவர். அம்புட்டுதான் சொல்ல
முடியும்.

நைட் டைம். டைட் செக்யூரிட்டி. ஹால்ல சிங்கம்
(நம்மதான்!) சிங்கிளா உக்காந்திருக்கு. பிடறி இல்லாததால..பொடனியை
சொறிஞ்சுகிட்டிருந்தேன். அப்போ பாத்து வர்றாங்க.. பூத்து குலுங்குன மாதிரி
மீனாவும்,அவங்க மம்மியும்! உள் ரூம்லேர்ந்து வந்த ‘பிரபலத்தின்‘ பி.ஏ. அவங்களை பாத்துகிட்டே..என்கிட்டே ‘‘கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க. ஐயாகிட்ட ஃப்ரீயா பேசலாம்’’னு பவ்யமா சொன்னாரு.

இதைப்பாத்ததுமே மீனாவும்,மம்மியும் என்னை பாத்து
ஸ்னேகமா ஒரு ஸ்மைல் விட..நானும் ஹிஹி! உடனே பிரபலத்தின் பி.ஏ.
மீனா மம்மியை பாத்து ‘‘நீங்க வந்தது ஐயாவுக்கு தெரியாது. உள்ளவந்து தலையை(!?) காட்டுங்க’’னு சொன்னாரு. மம்மி மீனாவை பாத்து ‘பத்திரம்’ங்கற மாதிரி தலையாட்டிட்டு..என்கிட்டயும் ‘பாத்துக்கோங்க’ங்கற மாதிரி சைகை தர..நானும் மெய்க்காப்பாளர் ரேஞ்சுக்கு விறைப்பா உக்காந்தேன்.

எதிரெதிர் சோபாவில் மீனாவும் நானும். ‘‘படவா
ராஸ்கோல்! பாட்டி செத்தத கூட சிரிச்சுகிட்டே சொல்றியே..பொய்யா சொல்ற’’னு லாரன்ஸ் வாத்தியார் நம்பாம அடிச்சார் பாருங்க..அப்படி ஒரு சிரிச்ச மூஞ்சி நமக்கு. மீனாவோட முகமோ ‘புன்னகை தேசம்’.

அப்போ டீ வந்துச்சு. ஒரே ஒரு டீ. செம கமகம. என்கிட்ட குடுத்துட்டு போனாரு சிப்பந்தி. மீனாவை விட்டுட்டு எப்ப‘டீ’? ‘கடையேழு வள்ளல்களையும் கடைஞ்செடுத்த கடைக்குட்டி’னு காமிக்கணுமே? ‘‘மேம்..நீங்க எடுத்துக்கங்க’’ன்னு நீட்டினேன். ‘‘ஹைய்யோ..நான் ஒன்லி ஜூஸ்தான். டீ
காபியெல்லாம் தொடறதே இல்ல’’னு சிம்பொனியா கூவுது குயில்.

‘‘பிரபலத்தை பாக்க வந்திருக்கீங்களே..என்ன
விஷயம்?’’னேன். மீனா அநியாயத்துக்கு வெகுளி..‘‘மம்மி பாக்கணும்னு என்னை கூட்டிட்டு வந்தாங்க’’னு ‘கறந்த பால்போல கலப்படமில்லாம’ சொன்னப்போ..
இன்னும் ‘சிறந்த குழந்தை நட்சத்திரம்’ மீனாதான்னு தோணிச்சு.

அப்போ பாத்து பிரபலத்தின் பி.ஏ.வும் மம்மியும்
ஒண்ணா வந்தாங்க. என்கிட்ட வந்த பி.ஏ. ‘‘ஐயா வரச்சொன்னாங்க. பேட்டி
ஜோரா வரும்னு பேசிகிட்டிருக்காங்க’’னு சொன்ன அடுத்த நொடி..மீனா,மம்மி ரெண்டு பேர் முகத்திலயும் பெரிய இடி! ‘‘இவர் ப்ரஸ்ஸா?’’னு மம்மி கேக்க..பி.ஏ.வும் என் மினி பயோ டேட்டாவை நீட்ட..‘பால்கோவாவுல
பாகற்காயை வெச்சு தின்ன மாதிரி’ ‘தாயும் சேயும்’ முழிச்சாங்க!

நிற்க! டைட்டில் மேட்டருக்கு வரலாம்ல! ‘‘எஜமான்’’ பட வெற்றிவிழாவுல ரஜினி சொன்னாரு..‘‘ மீனா என்னோட குழந்தையா நடிச்சிருச்சு. இப்போ ஜோடியாவும் நடிச்சுருச்சு. அடுத்து என்னோட அம்மா ரோல்லதான் நடிக்கணும்’’னாரு. ‘‘ஆசை தோசை’’னு அங்க அழகு காட்டுன மீனாவுக்கு..இப்போ கல்யாணமாகப் போகுது!

நம்ம தமிழ்சினிமா சட்டப்படி..ஒரு நடிகை
கல்யாணமாயிட்டு திரும்பிவந்தாலே அடுத்து அண்ணி,அம்மா வேஷம்தானே ஆஸ்தான ரோல்! அப்புறமென்ன..‘ரஜினிக்கு அம்மா மீனா!’. சுபம்!

ஹூசைனியின் ‘ஜப்பான் தம்பி’!

Tuesday, May 12, 2009


ஜட்டியை வெளியே மாட்டி..பேன்ட்டை உள்ளே போட்டு ‘சூப்பர்மேனா’ பறக்கணும்னுதான் நெனைப்பு. ஆனா லட்டியால முட்டிய பேத்துருவாங்களே..அதனால ‘விரல் சூப்பற மேனா’ சுத்திகிட்டு திரியற பொழப்பு!

இருந்தாலும் ‘வருந்தாதே மனுஷா’னு இதுலயும் கதிகலக்கற ஒரு விதிவிலக்கு ஆசாமி இருக்காரு. அவர்தான் நம்ம கராத்தே ஷீகான் ஹுசைனி! விட்டா..ஜாக்கிசானையே தூக்கி சாப்புட்டு ஏப்பம் விடுவாரு. சமயங்கள்ல ‘ஜோக்’கிசானா மாரி ஆப்பம் சுடுவாரு.

கராத்தே ஹுசைனி செம ‘பசை’யான பார்ட்டி.
அரசியல்வாதிகளுக்கே அச்சமூட்டற அளவுக்கு அடிக்கடி தன் படம் போட்ட
போஸ்டர்களை அச்சடிச்சு மானாவாரியா சென்னை மாநகர ஏரியா வாரியா மிச்சமில்லாம ஒட்டுவாரு. அசந்தா சீனப்பெருஞ்சுவர்லயே போஸ்டர் ஒட்டவும்
பசையோட நிப்பாரு.

‘‘ஏன் மாஸ்டர் இப்புடி ஒரு பப்புளிசிட்டி’’னு கேட்டேன். ‘‘மொதலாளி..(பாசமா கூப்பிடறது!) பொறந்ததிலேர்ந்தே போஸ்டர் பாத்து வளந்த ஜனங்க நாம! போஸ்டர் இல்லாத ஒரு உலகத்தை நெனச்சு பாருங்க..பக்கத்துல ஒபாமா வந்தாக்கூட ‘ஓரமா போமா’னு சொல்லிரமாட்டமா’’னு கில்லியா லாஜிக் பேசுனாரு. ‘வைகை எக்ஸ்பிரஸ்ஸும், பாண்டியன் எக்ஸ்பிரஸ்ஸும்
ஒரே நேரத்துல ஒண்ணா ஓடுற ஸ்பீடுல ஹூசைனி பேசறது செம காமெடி! நிறையா வித்தை தெரிஞ்சவர். செமயா கத்த தெரிஞ்சவர்.
‘ஆனந்த விகடன்’ நிருபராக நான் இருந்தப்போ..நிர்வாக ஆசிரியர் பிரகாஷ் எம்.ஸ்வாமி என்னை கூப்பிட்டு ‘‘ஹுசைனியோட ஒரு அசைன்மென்ட் போங்க. உங்க ஸ்டைல்ல அதிரடியா எழுதுங்க’’னு சொன்னாரு.
போனேன். ஹுசைனியோடு அதுதான் நேரடி முதல் அறிமுகம்.

ரெண்டு பேருக்கும் ஒரே ஊரு..மதுரை. ‘வைகைப்பாசம்..நதியா (நடிகை இல்லிங்க..ஆறு) பாய..நம்ம நட்பு வட்டத்தோட
‘கட்டத்துரையா’ ஆகிட்டாரு ஹுசைனி. எனக்கு இங்கிலீஷ் ‘எஃப்’ எழுத்து மாதிரி ஒரு இரும்பு ஆயுதம் குடுத்தாரு. அதைவெச்சு ஒருதடவை ஒரு
‘சமூகவிரோதியோட’ மண்டைய உடைச்சுருவேன்னேன். இப்போல்லாம் வீட்ல தேங்காய் உடைக்கறது அதுலதான்.

‘‘மொதலாளி..கன்னியாஸ்த்ரீகளுக்கு கராத்தே கத்துத்தர்றேன். மேட்டர் எப்படி’’ன்னாரு. ‘‘சூப்பர்’’னேன். நானும், போட்டோகிராஃபர் கே.ராஜசேகரனும் (நம்ம ‘மாப்ளே’..நிறையா கதை இருக்கு!) ஹுசைனியோட ஜீப்ல கௌம்பினோம். மாதவரத்துல ஒரு சர்ச்ல அம்பது கன்னியாஸ்த்ரீகள் அணிவகுத்து நிக்கிறாங்க. மாஸ்டர் ஹுசைனி தற்காப்பு பயிற்சிகளை சொல்லித்தர..அக்கறையா கத்துக்கறாங்க.

பயிற்சியில ஒருகட்டமா..பாதி சிஸ்டர்க கையில பளீர்னு மின்னுது கத்தி. அதை மீதி சிஸ்டர்க எப்படி தடுத்து,மடக்குறாங்கங்கறதுதான் (கத்தியை அல்ல..கையை!) உத்தி. கையில கத்தியோட மிரட்டற ஹுசைனியை ஒரு சிஸ்டர் சடக்கென முறுக்கி..தன் முழங்காலை மடக்கி ‘ஆயுதபாணி’யான அவரோட அடிவயித்துல ஓங்கி ஒரு அட்டாக் தர..‘ஐயோ’னு அலறி சுருண்டு
விழுந்தாரு மாஸ்டர்.

அட்டாக் சிஸ்டர் ‘கத்திக் குமிக்க’..மற்ற சிஸ்டர்க அரண்டு பாக்க.. ‘க்ளிக்’குன ராஜசேகரும்.நானும் ஓட..கீழே கிடந்த ஹூசைனி ‘‘ஆக்ஷன்
ஓகே.ஆனா அடிவயித்துல பட்டுருச்சு’’னு சிரிச்சுகிட்டே எந்திரிச்சாரு. அப்புற அந்த ஸ்டோரி ‘அமைதிப்புறாக்களுக்கு ஆயுதம் ஏன்?’’ங்கற டைட்டில்ல ‘ஆனந்த விகடன்’ கவர்ஸ்டோரியா வந்து பரபரப்பை கௌப்பிச்சு.

ஒருநாள்..நூறடி ரோட்ல ஆட்டோல போய்கிட்டிருந்தேன். ‘சர்ர்’னு நம்மளை ஒட்டிவந்த ஜீப்புலேர்ந்து ஹுசைனி ‘‘மொதலாளி..அப்படியே ஜீப்ல ஜம்ப் பண்ணுங்க. சுடச்சுட ஒரு சமையல் சூட்டிங் போலாம்’’னாரு!
ஜம்ப்பா..எதுக்கு அந்த ‘ஜம்ப்’பமெல்லாம்’னு ஓரமா ஒதுங்கி ஜீப்ல ஏறினேன்.

ஒரு பங்களா கிச்சன்ல சூட்டிங். அதிரடி சமையல்
மாஸ்டரா ஹுசைனி அவதாரம் எடுத்திட்டாரு. அடுப்பை மூட்டி துடுப்பை
போடறாரு..‘‘அன்பு நேயர்களே..இப்போ நான் கேரட் ஆஃப்பாயில் போடப்போறேன்’’னு சொல்லி..நான்ஸ்டிக் தவாவுல முட்டைய உடைச்சு ஊத்தி,ஸ்டைலா ஓடை தூக்கிப்போட..எல்லோரும் ஏதோ ஒரு அவாவுல எட்டிப்பாக்க..அப்போ ‘ஜஜ்ஜஜ்ஜஜ்ஜ’னு அமானுஷ்யமா ஒரு அலறல் சவுண்டு கௌம்பிச்சு.

‘என்னடாது’னு பாத்தா..தவாவுல வெறும் வெள்ளைக்கருவை மட்டும் ஊத்திட்டு..உள்ளேர்ந்த மஞ்சக்கருவை ஹுசைனி தூக்கிவீசியிருக்காப்ல..அது குறி தவறாம நேரா கேமரா லென்ஸ்ல போய் அப்ப..அப்போ கேமராமேன் போட்ட அலறல்தான் அந்த சவுண்டு. இப்படி ‘கிச்சன் கில்லாடி‘யாவும் மாறி (அடிவயித்தை) கலக்குவாரு நம்ம மாஸ்டர்!

கொஞ்சநாளைக்கு முன்னால..திடீர்னு ஹுசைனிகிட்டேர்ந்து ஃபோன். ‘‘மொதலாளி..நம்ம கெஸ்ட் ஒருத்தர் உங்கள பாக்க ஆசைப்படறாரு. வீட்டுக்கு வர்றீங்களா?’’ன்னாரு. உடனே போனேன். உக்காரவெச்சு உபசரிச்சவரு நிக்காம கொள்ளாம எதையோ தேடிகிட்டே இருந்தாரு. ‘சட்’னு என்னைப்பாத்து கண்ணை சிமிட்டி சிரிச்சுகிட்டேயிருந்தாரு.

‘மனுஷன புழுபூச்சியா நெனைக்கிற உலகத்துல..மாஸ்டர்
நம்மமேல இவ்ளோ பாசமா இருக்காரே’னு எனக்கு அழுவாச்சியா வருது.
அப்போ ‘கண்ணியமான’ ஹுசைனி ‘‘டாய் செல்லம்..என்ன வேணும்?
மொதலாளிய உனக்கு ரொம்ப புடிச்சுபோச்சா? கெட்டியா ஒட்டிகிட்டயே?’’னு என் முகத்தைப் பாத்து ‘அந்நியனா’ பேச..எனக்கோ அடிவயித்துல ‘சங்குசக்கரம்’ சர்ர்ருனுது.

சரியா அதேநொடி யாரோ என் தோள்ல உக்காந்து
காதுக்குள்ள ‘புருபுரு’ செய்றமாதிரி இருக்க..‘சரட்’னு திரும்பிப்பாத்தா..ஐயையோ! பெரிய சைஸ் ஓணானோ..பச்சோந்தியோ..என் தோள்லேர்ந்து வாய் பொளந்து
‘ஹாய்’ சொல்லுது!
குளறி உளறிகிட்டே அலறியடிச்சு நான் ஓட..ஹுசைனி ‘கெக்கெக்கே’னு சிரிச்சுகிட்டே ‘‘மொதலாளி..அவன் நம்ம பையந்தான்(!?). ஜப்பான்காரன். ரொம்ப சாது’’னு சொல்லிகிட்டே அந்த பச்சோந்திய புடிச்சு தன்னோட
தோள்ல விட..அது பச்சக்னு குந்திகிச்சு!

நம்பமாட்டீங்க..அன்னிக்கு ஓடிவந்தவன்தான்! இன்னிக்குவரைக்கும் ஹுசைனி இருக்கற திசை பக்கமே திரும்பலை!

அத்தை மகள்’ நயன்தாரா!

Sunday, May 10, 2009


நயன்தாராவின் பேரை உச்சரிச்சுட்டு ஒரு ‘மடக்கு’ பச்சத்தண்ணிய குடிச்சா..
வாயெல்லாம் பாயாசமா இனிக்கும். கிண்டலடிக்காம நீங்களும் ட்ரை பண்ணா உங்க வாய்க்கும் அந்த தித்திப்பு வாய்க்கும்!

நயன்தாரா மேல அதீத மயக்கம் நம்ம டீமுக்கே உண்டு, சுருக்கமா
சொன்னா.. ‘குணா’‘ கமலுக்கு அபிராமி. எனக்கு நயன்தாரா. நான் தயாரிச்ச ஒவ்வொரு ‘குங்குமம்’ இதழிலும் கவர்ஸ்டோரி, ஸ்பெஷல் ஸ்டோரி முதல்&நடு&கடைசிப் பக்கம் என நயனின் வசீகர ஸ்டில்களோடு ருசிகரமான செய்திகள் கட்டாயம் இருக்கும். வாசகர்களை வசியம் செய்யணும்னா நயன்தாரா அவசியம்!


ஒரு பிற்பகலில் ‘நயன்தாரா உங்கள சந்திக்க விரும்பறார்’னு அவரோட பி.ஆர்.ஓ. ஜான்சன் எனக்கு ‘செல்’ அடிச்சார். நம்ம பத்திரிகைக்கு ‘எக்ஸ்க்ளூசிவ்
ஸ்டோரி’யுமாச்சு.. நமக்கு ‘பர்சனல் சந்திப்புமாச்சு’னு குஷியா கௌம்பிட்டேன்.


ஏ.வி.எம்.ஸ்டுடியோ.. (பழைய) பிள்ளையார் கோவில் பக்கத்திலுள்ள மேக்&அப் ரூமுக்கு போனேன். ஜான்சன் என்னை அறிமுகப்படுத்த ‘ஹாய்’னு ‘ஹெராயின்‘ புன்னகையோடு கைகுலுக்கினார் ‘ஹீரோயின்’ தாரா. கையை இறுக்க்க்கமா பிடிச்சுகிட்டே அவரை பார்த்தேன். அழகான டிசைன்ல ‘சராரா’ டிரஸ் (பாவாடை&சட்டை)
போட்டு ‘இப்போதான் குளிச்சுட்டு வந்த மாதிரி பளிச்சுனு’ இருந்தார். அந்த அறையெல்லாம் இன்னதென இனம்புரியாத ஒரு உன்னத வாசம் கிறங்கடிச்சது.


விசிட்டிங்கார்டு கொடுத்து என்னைப் பத்தி சொல்லிட்டு.. ‘விசிலடிச்சான்
குஞ்சா’ மாறி நயனோட உதட்டு மச்சம்.. ஆறாவது விரல்னு நான் நுணுக்கமா ரசிச்சுபேச..(புலனாய்வு பத்திரிகையாளர்ல!) ‘‘என்னை இவ்ளோ ஷார்ப்பா கவனிச்சிருக்கீங்களே.. கங்க்ராட்ஸ்’’னு மெய்யாகவே புல்லரிச்சுப் போனார்
நயன்தாரா. அப்புறம் அவர் மனம்திறந்து பேச ஒரு ஸ்பெஷல் பேட்டியும் எடுத்து முடிச்சேன்.

ரசிகர்களை கிறங்கடிக்கற நயன்தாராவை பாங்காக்கில் நடுங்கவெச்ச அந்த
சம்பவத்தை நெனச்சு இன்னமும் நடுநடுங்கிப்போறாரு தாரா. ‘கள்வனின் காதலி’ படத்துக்காக எஸ்.ஜே.சூர்யாவோட டூயட் பாட பாங்காக் போயிருக்காப்ல
நயன்தாரா. ஏர்போர்ட்ல இறங்கினா..செம அதிர்ச்சி. கூட்டிடுப்போக புரொடக்ஷன் ஆளுக யாருமே வரல. ஊர் பேர் தெரியாத சிட்டியில ஒத்தையா நிக்கிற
தாராகிட்ட ஏர்போர்ட் ஆபிஸருங்க கிடுக்கிப்பிடி போட்டு விசாரிக்க..விஷயத்தை சொல்லி புரியவைக்க தாராவால முடியல.

இதுக்கிடையில சென்னையிலேர்ந்து நயன்தாரா மேனேஜர் அஜித் பாங்காக் புரொடக்ஷன் பார்ட்டிகளை கான்டாக்ட் பண்ணா..‘நாட் ரீச்சபிள்’னே பதில் வருது. கேக்க நாதியில்லாத கொடுமையை நெனச்சு..பீதியில ஒண்ணல்ல..ரெண்டல்ல..
நாலுமணி நேரமா நடுங்கிப்போயிட்டாரு நயன்தாரா. கடைசியில ஒருவழியா
எஸ்.ஜே.சூர்யாவும், தயாரிப்பு நிர்வாகியும் ஏர்போர்ட் வந்துருக்காங்க.

பாதி நிம்மதியும்,பாதி கோபமுமா தாரா ‘‘உங்களை நம்பிவந்த என்னை இப்படித்தான் தவிக்கவிடுவீங்களா? இரக்கமே இல்லாம நடந்துகிட்டீங்களே’’னு அழுக..ஆறுதல் சொல்லவேண்டிய சூர்யாவோ ‘‘நடந்தது நடந்துபோச்சு. ஓவரா சீன் போடாதீங்க’’னு சொல்ல..கதறி அழுதுருக்காரு நயன்தாரா. அப்புறம் பஞ்சாயத்து பேசி ‘கொஞ்சாம கொஞ்சி’ நடிச்சு முடிச்சுருக்காங்க.

சூர்யா இப்படி தாராவை கண்டுக்காம கலங்கடிச்சதுக்கு ‘தாரா தாராளமா நடந்துக்கல’னு ஒரு ரகசிய கிசுகிசுப்பும் உண்டு. ‘தானா விழுந்தாத்தான் பரிசு!
தடியால அடிக்கறதா பெரிசு? ஆனாலும் நயன்தாரா ‘‘இதுக்கெல்லாம் இவங்கதான் காரணம்னு சொல்லி யாரையும் கஷ்டப்படுத்த விரும்பலை’’னு ‘பொன்மனசோட’ சொன்னப்போ..‘சிறகு முளைச்ச தேவதை மாதிரியே’ தெரிஞ்சாங்க.


நடுநடுவே அவர் என்னை உபசரிச்ச விதமும், பேச்சில் காட்டின இதமும்
பாக்க பாக்க.. ‘‘பார்த்த விழி பார்த்தபடி பூத்துக்கிடக்க’’னு ‘குணா’ பாட்டே என்
காதுகள்ல ரிபீட் ஆகிகிட்டிருந்துச்சு.
விடைபெறும் நேரம்.. ‘‘ஒரு ‘கேப்’புக்கு பிறகு என்னோட க்ளோஸ் ஃப்ரெண்டை மீட் பண்ணமாதிரி இருக்கு! வெரி ஹாப்பி’னு நயன்தாரா மீண்டும் கைகுலுக்க.. ‘சொந்த அத்தை மகளை விட்டு ஒத்தையா பிரிஞ்சு போற
மாதிரியான ஃபீலிங்ல’ எமோஷனலாயிட்டேன் நான். புரிஞ்சவங்க புரிஞ்சுக்கங்க!

ராஜா..யுவன்..கிச்சுகிச்சு!

Saturday, May 9, 2009
இசைஞானி இளையராஜாவும் யுவன்ஷங்கர் ராஜாவும் பேசிக்கறதை பாத்தா..பழைய ‘தெய்வமகன்’ படத்துல அப்பா சிவாஜியும்,மகன் சிவாஜியும் பேசிக்கறமாதிரியே படுஜாலியா இருக்கும்!

இளசுகள் பட்டாளத்தோட காதுகளை ஒட்டுமொத்தமா
தன்னோட பேருக்கு பட்டா போட்டுகிட்ட இசையமைப்பாளர்.. யுவன்ஷங்கர்
ராஜா! டீக்கடை..பூக்கடை..எஃப்.எம்..குப்பம்னு யம்மாடியோ..எட்டு
திசைகள்லயும் கும்மாங்குத்தா தாக்குது யுவனோட ஆடியோ!

பாட்டுல ஹைபிட்ச் சவுண்டுல பிச்சு பொளக்கற
யுவன்..நிஜத்துல ‘சைலன்ட் ஐலன்ட்’! ‘பத்து வார்த்தைகள் தொடர்ந்து பேசுங்க..பத்துலட்ச ரூபாய் ரெடி‘னு பணக்கட்டை நீட்டினாலும்..அதிகபட்சம் ரெண்டு வார்த்தைகள்லயே பதில் சொல்ற யுவனை வெச்சு மூணுபக்க மேட்டர் எப்படி பண்றது’னு முணுமுணுக்குது மனசு. இப்பேர்ப்பட்ட யுவனை பேட்டி எடுக்கப் போனேன்.

‘பண்ணைப்புரத்து சின்னத்தாயி பெத்த பாமரமேதை’
இசைஞானியின் இல்லம். காத்து வீசுனாக்கூட கறைபட்டுருமோங்கற அளவுக்கு வீடு முழுசும் பரிசுத்த வெள்ளை. சூயிங்கம்மை மென்னுகிட்டே வாசல்ல நின்னுகிட்டு என்னை கூச்சத்தோட வரவேற்றாரு யுவன்.

இளையராஜாவின் ‘இளைய ராஜா’வோட ரூமுக்கு போனேன். பேசினாலே சங்கீதமா எதிரொலிக்குமோங்கிற அமைதியான சூழல். ‘சரோஜா
சாமான் நிக்கல்லோ’னு நக்கலா பேட்டியை ஆரம்பிக்க நெனைச்சேன். ஆனா..
வாய்க்கு தாப்பா போட்டுகிட்டு, பால்பாப்பா மாதிரி முகத்தை வெச்சுகிட்டு, நகத்தை கடிச்சுகிட்டே யுவன் என்னையே பாத்துகிட்டிருந்தாரு.

எடுத்து வீசினேன் ‘பிரம்மாத அஸ்திரத்தை’!
‘‘யுவன்..இங்கிலீஷ்ல பாட்டெல்லாம் எழுதறீங்களாமே’’. முதல் கேள்விக்கே ‘உடைத்த தேங்காயின் உள்புற’ வெள்ளைல சிரிச்சாரு. அப்படி தொடங்கின பேட்டியில..சில செப்படி விஷயங்களை சொல்ல..குஷியான யுவன் ‘சிதறு
தேங்காயா’ பதில்களை வீசினாரு. ஹாஹா..ரெண்டுபக்க மேட்டர் ரெடி.

இந்த பேட்டியில உள்காமெடி என்னன்னா..‘‘உங்க ஹாபி என்ன’ன்னு யுவன்கிட்ட கேட்டேன். ‘‘கார் கலெக்ஷன் ரொம்ப புடிக்கும்’’னாரு. உடனே நான் அப்பாவியா ‘‘எந்தமாதிரி கார்டு கலெக்ஷன்? கிரீட்டிங் கார்டு..இல்ல’’னு கேட்டு முடிக்கறதுக்குள்ளயே ‘‘ஹல்லோ பாஸ்..கார்டு கலெக்ஷன் இல்ல..கார் கலெக்ஷன் பிடிக்கும்னேன். மார்க்கெட்டுக்கு புதுசா எந்த மாடல் கார்
வந்தாலும்..எனக்கு பிடிச்சா, அடுத்த சில நாள்ல அது ஐயாவோட போர்டிகோல நிக்கும்’’னாரு. பணக்‘கார்’ர பையன்!

‘இப்படிக்கு இளமை’னு நான் ‘குங்குமத்துல’ பண்ண அந்த தொடர்ல ஹைலைட்டா ‘அப்பா கமெண்ட்ஸ்’னு ஒரு பாக்ஸ் மேட்டர் வரும். அதுல தன் மகன் யுவன் பற்றி ராஜா கருத்து சொல்லணும். இதுக்காக யுவன்கிட்ட சொல்லி ‘‘அப்பாகிட்ட அஞ்சுநிமிஷம் பேசணும்’’னேன். ‘‘ஆங்..டாடிகிட்டயா? சரி வாங்க’’னு ஹாலுக்கு என்னை கூட்டிட்டு போனாரு.

என்னை சோபாவுல உக்காரச்சொல்லிட்டு, உள் ரூமை பாத்து ‘‘டாட்..டாட்’’னு செல்லமா கூப்பிட்டாரு. ‘‘என்னப்பா’’னு முதல்ல குரல் வந்துச்சு. அப்புறமா ‘அஞ்சே கால் அடி உயர பருத்தியா’ ராஜா வர..பரவசத்துல நெஞ்சே பதறுது. ‘மேதைகளோட பேசறதையே வேஸ்ட்ரானு நெனைக்கற
மேஸ்ட்ரோகிட்ட’ என்னை அறிமுகப்படுத்தினாரு யுவன்.

வணங்கினேன். ‘சொல்லுங்க’ன்னாரு. ராஜா சோபாவுல உக்காந்தாரு. யுவன் முகத்தை அவர் பாக்க..பக்கத்துல போன யுவன் நகத்தை
கடிச்சிகிட்டே ‘‘டாட்..டாட்..வந்து..’’னு ஏதோ ஒரு ராகத்துல இழுத்தாரு. ‘‘என்ன விஷயம்? சொல்லுப்பா’’ன்னாரு. ‘‘டாட்..வந்து..என்னோட இன்டர்வியூ வருது.
ஸோ தட்..உங்க கமெண்ட் வேணும் டாட்!’’னு வார்த்தைகளையும் நகத்தையும் சேர்த்து கடிச்சுகிட்டே சொல்ல..ராஜா மெள்ளமா தலையில அடிச்சுகிட்டே சிரிச்சாரு.

எனக்கோ ‘‘என்னடாது..‘தெய்வமகன்’ல அப்பா சிவாஜிகிட்ட ‘ஹோட்டேல்’ நடத்தற மகன் சிவாஜி, நகம் கடிச்சுகிட்டே செலவுக்கு பணம் கேக்கற சீன் மாதிரியே இருக்கே’’னு பல்லை கடிச்சுகிட்டு சிரிச்சேன்.

‘‘தம்பி..நீங்களே சொல்லுங்க’’ன்னாரு ராஜா. சொன்னேன்.
‘‘யுவனை பத்தி என்ன சொல்றது?’’ன்னவர் யுவனை பாத்து ‘‘பாராட்டியா..
திட்டியா?’’ன்னு கேட்டாரு. ஏதோ டான்ஸ் ஸ்டெப் வெக்கிறமாதிரியே ஒரு மூவ்மென்ட்ல ஆடிகிட்டிருந்த யுவன் ‘‘நோ ப்ராப்ளம் டாட்..எது வேணும்னாலும் சொல்லுங்க’’ன்னு வெகுளியா சொல்ல..கோரஸா சிரிச்சோம்.

யுவன் கன்னத்தை செல்லமா தட்டின ராஜா ’’எந்த தொழிலா இருந்தாலும் பக்தியோட செய்யணும். பக்தி..வெற்றியை தரும். ஆணவமில்லாத வெற்றி ஆயுளுக்கும் நிம்மதியை தரும். அப்படியான பக்தியும் நிம்மதியும்
யுவனுக்கு வாய்க்கணும்னு இறைவனை வேண்டிக்கறேன்’’னு சொல்லி ‘வாழை இலையை கிழிச்சமாதிரி’ புன்னகைச்சாரு ராஜா.

உடனே யுவன் அவசரமாக ‘‘டாட்..இதுபோதும்! இதுக்குமேல பேசினீங்கன்னா என் இன்டர்வியூ சாமி புக்லதான் வரும்’’னு சொல்ல..ராஜா ரசிச்சு பாக்க..சிரிச்சுகிட்டே கிளம்பினேன்.

மணிவண்ணனின் ‘அகதி’!

Friday, May 8, 2009


டைரக்டர் மணிவண்ணன்கிட்ட பேசறப்போ..கண்ணுல ரெண்டு தடவை தன்னால தண்ணி வரும். காரணம் என்னான்னு படிக்கிறப்பவே புரியும்.

சிங்கம் இளைச்சாலும் பிடறி இளைக்காதுல்ல! அப்படித்தான் கம்பீரமா இருந்தாரு இந்த கொங்கு நாட்டு தங்கம். படங்கள்ல வேட்டி சட்டையோட பட்டை கௌப்பற மணிவண்ணன். வீட்ல இருக்கறப்போ பர்முடாஸ்
போட்டு ஹாயா இருக்காரு.

‘‘இதான் உங்க காஸ்ட்யூம் ஸ்டைலா’’னு கேட்டேன். ‘‘இதிலென்னங்க ஸ்டைலு? வேட்டி..நம்ம அரசியல்வாதிங்க கொள்கைமாதிரி. எப்ப
வேணும்னாலும் நழுவி விழுந்துரும். ஆனா..இந்த டவுசர் அப்படியில்லீங்களே! எக்கச்சக்க பட்டன் போட்டு நம்மமாதிரி கொள்கைப்பிடிப்பால்ல இருக்கு!’’ன்னு ‘சுருக்’குன்னு குத்த..பொத்துகிச்சு சிரிப்பு.

‘வெரைட்டியா படங்கள் தந்து வெற்றிகரமா மிரட்டின நீங்க..திடீர்னு முழுநேர நடிகரா மாறிட்டீங்களே’’ன்னேன். ‘‘என்னங்க பண்றது?முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்தான?’’ன்னவர்..அதுக்கொரு ஃபிளாஷ்பேக்கை செம ஜோக்கா சொன்னாரு...

மணிவண்ணனும் சத்யராஜும் ஒருத்தரையொருத்தர்
‘தலைவரே’னுதான் கூப்பிட்டுக்குவாங்க. அப்போ மணிவண்ணன் ‘24 மணி நேரம்’ படத்தை டைரக்ட் பண்ணப்போறாரு. ‘வில்லனா யாரை போடலாம்’னு ரெண்டுபேரும் டிஸ்கஸ் பண்ணியிருக்காங்க. ‘நம்பியாரை போடலாம்’னு சொல்றாரு
சத்யராஜ்.

உடனே மணிவண்ணன் ‘ஐயோ..அவரெல்லாம் வேணாம் தலைவரே‘னு அரண்டிருக்காரு. ஏன்னு கேட்டா ‘‘அவர் சூப்பர் சீனியரு. அவருக்கு முன்னால என்னால தம்மடிக்க முடியாதே’னு ஃபீல் பண்ணியிருக்காரு. கடைசியில சத்யராஜை பல ஆங்கிள்ல பாத்துட்டு ‘‘ஏந்தலைவரே..பேசாம நீங்களே வில்லனா நடிச்சிடுங்க. நானும் நிம்மதியா தம்மடிப்பேன்‘னு மணிவண்ணன் சொன்னாரு
பாருங்க..அந்த இடத்துல பத்திகிச்சு சத்யராஜோட மார்க்கெட் நெருப்பு.


அப்போ மணிவண்ணன் அப்படி பண்ணதுக்கு ‘அமைதிப்படை’ல பழிதீர்த்துட்டாரு சத்யராஜ். ‘மணி‘ கேரக்டருக்கு யாரை
போடலாம்னு தாடியை வருடிகிட்டிருந்திருக்காரு ‘வண்ணன்’. அப்போ சத்யராஜ் ‘‘ஏந்தலைவரே..ஒரிஜினல் மணியான நீங்களே அதை பண்ணிடுங்க’’ன்னு
சொல்ல..அதுவே முழுநேர நடிகரா மனிவண்ணனை மாத்திடுச்சு.

பொதுவா ஒரு படம் ஹிட் ஆச்சுன்னா..அதுக்காக பட்ட
பாடுகளை ‘ஆஹா ஓஹோ’னு ‘டேஷ் டேஷா’ எழுதறது வழக்கம். ஆனா இப்படியெல்லாம் உட்டாலக்கடி இல்லாம ‘சர்ர்’னு ஒரு கோடு போட்டு ‘சரசர’ன்னு ரோடு போட்டு ஜெயிக்கறது மணிவண்ணன் ஸ்டைல்.

ஹவுஸ்ஃபுல்லா ஓடுன ‘நூறாவது நாள்’ படம் கருவாகி
உருவான கதை தெரியுமா? ‘பரபரப்பா ஒரு படம் பண்ணனுமே’னு மணிவண்ணனும் சத்யராஜும் சிண்ட பிச்சுகிட்டு மண்டைய தட்டிகிட்டுருந்த
சமயம். ‘‘சரி..லோக்கல்ல இருந்தா சரிப்பட்டு வராது’னு ஜிவ்வுன்னு கிளம்பி
மகாபலிபுரத்துல ஒரு ரிசார்ட்டுல ஜில்லுன்னு சபைய போட்டிருக்காங்க.

ரொம்பநேரமா அலசி துவைச்சும் ஒரு கதையும் உருப்படியா தேறல. உக்காந்ததுமே ஐடியா ‘தண்ணியா’ பாயுமே! ஏன் வத்திப்போச்சுனு
யோசிச்சிருக்காங்க. அப்பதான் தெரிஞ்சிருக்கு..புரட்சி இயக்குனரும்,புரட்சி தமிழனும் அதுவரைக்கும் வறட்சியில வாடிகிட்டிருந்த மேட்டர்!

உடனே கிளம்பி.. ஒரு ஆஃப் சரக்கை வாங்கிட்டு வந்து அடிச்சாங்க. கதையோட முதல் சீன் கலக்கலா சிக்கிச்சு. தருமி உருமி அடிச்ச
மாதிரி புடிச்ச புடியில அந்த ஆஃப் தீர்றதுக்கும் ‘நூறாவது நாளோட’ ‘பர்ஸ்ட் ஆஃப்’ ரெடியாகறதுக்கும் சரியா இருந்துச்சு.

‘ஆஹா..கதை அப்படிப்போகுதா’னு பட்சி கூவ..அடுத்து ஒரு ‘ஆஃப்’ வாங்கிட்டுவந்து பக்கோடாவோட பிச்சி உதறியிருக்காங்க. ‘அட்றா சக்க! படத்தோட செகண்ட் ஆஃப் பக்காவா ரெடியாகிடுச்சு. இதை ‘மணிமணியா’
சொல்லிமுடிக்க..நம்ம கண்ணுல சிரிப்புமழையின் ஈரச்சாரல்!

‘சிவப்பு சிந்தனை,பெரியாரிஸம்,தமிழ் தேசியம்னு உணர்வுள்ள நீங்க..இலங்கையில நம்ம தொப்புள்கொடி உறவுகள் படற அவலங்களை..’’ கேட்டு முடிக்கறதுக்குள்ளயே குறுக்கிட்டாரு மணிவண்ணன்...‘‘தாங்கமுடியலிங்க! நமக்கெல்லாம் யுத்தம்ங்கிறது ஒரு செய்தி அளவில்தான் இருக்கு. ஆனா இலங்கையில கொத்துகொத்தா நம் இனத்தை கொன்னு தீர்க்கறாங்களே. அதோட.. தாய்பிள்ளையா ஒரே ஊர்ல வாழ்ந்த மக்கள்..உறவுகளை இழந்து உயிரை வெறுத்து எங்கெங்கியோ சிதறிக்கெடக்கறாங்களே’’னு தழுதழுத்தார்.

துவண்டுபோய் உக்கார்ந்திருந்தேன். தொடர்ந்து பேசுன மணிவண்ணன் ‘‘உயிரை உலுக்கற இந்த துயரத்தை ‘அகதி’னு ஒரு படம் எடுத்து பதிவு பண்ணப்போறேன்.. அதுவும் இலங்கையிலேயே இதை எடுக்கணும்.
ஏன்னா..பெத்த தாய் இறந்த தகவலை ஃபோன்ல கேட்டு, ஏதோ ஒரு
நாட்டுல..எங்கியோ ஒரு ஆத்துலயோ,கடல்லயோ தலைமுழுகற எத்தனையோ மகன்களோட சோகம் சொல்லித் தீருமா? மனசுதான் ஆறுமா?’’

..கசிஞ்ச கண்களை மணிவண்ணன் துடைக்க..கண்ணீரோடு மௌனமானேன் நான்.

கவுண்டமணி காக்டெய்ல்!

Thursday, May 7, 2009


வருஷமெல்லாம் சிரிப்பா சிரிக்கற நம்ம மாதிரி ‘சிரி’யோர்கள்உலகம் பூராவும் ஜோரா கொண்டாடற நாள் மே 7ந்தேதி. அன்னிக்குதான் ‘உலக சிரிப்பு தினம்‘னு எனக்கு நற்செய்தி சொன்ன வண்ணத்துப்பூச்சியாரே..வந்தனம்!


‘32 பல்லும் தெரியறமாதிரி சிரிடா‘னு சொல்வாங்க. கூடவே ஒரு சிங்கப்பல்லும் சேர்ந்து சிரிச்சா சிறப்பா இருக்கும்ல. அதுமாதிரி..நம்ம ‘நகைச்சுவை வகையறா’வில ஸ்ரீதர் சார், அந்தணன், மகேஸ்வர், அன்புச்செல்வன், வண்ணத்துபூச்சியார், உண்மைத்தமிழன், ‘ஏ’, சதீஸ்கண்ணன், அருள், ராஜ், பரத்குமார், பாட்டாளி, ப்ரசன்னராஜன், பாலா, உலவு.காம், ரொம்ப நல்லவன்..ஸ்..சொல்லிமுடிப்பா...
..தலைவர், பிஸ்கோத்துபயல், கிளியனூர் இஸ்மத், அருள்பிரகாஷ், வெங்கிராஜா, ஜோ, ஹாலிவுட் பாலா, கார்த்திகேயன் ஜி, ரங்கராஜன் எஸ், பிரபாகர், வினோத் கௌதம், நவீனன், சுகுமார் ஸ்வாமிநாதன், கேபிள் சங்கர், வந்தியத்தேவன், அப்பாவித்தமிழன், காளி...இப்படியாக இன்னும் தேடிவந்து கூடிச்சிரிக்கற அத்தனை வலைஞர்களுக்கும் இந்த சிரிப்பு பதிவு உரித்தாகுக!

சிலபேரை பாத்தா சிரிப்பு வரும். சிலரோட பேச்சை கேட்டா சிரிப்பு வரும். ஆனா ஒருத்தரை நெனச்சாலே ‘லகலக’ன்னு சிரிப்பு வருதுன்னா.. அவர் சத்தியமா ‘கலகல’ கவுண்டமணிதான்! சிரிப்பு பக்தர்களோட ‘குலதெய்வம்’ நம்ம கவுண்டர்தான்னு சவுண்டாவே சொல்லலாம்.

அதுவும் கவுண்டமணியும் சத்யராஜும் சேர்ந்துட்டா..சிரிக்கற சிரிப்புல உதடுகளே கிழிஞ்சுபோகும்..உலகமே அழிஞ்சுபோகும். அப்படி ஒரு காமெடி இது. ‘அடிதடி’ படத்துக்கு முன்னால இவங்க ரெண்டு பேருக்கும் ஒரு படம் கிடையாதுல்ல. இதனால ‘காஞ்சு கருவாடாகி..தேஞ்சு திருவோடாகி’ போயிருவமோனு இவங்க பயந்த நேரத்துல..‘குங்குமப்பொட்டு கவுண்டர்’ படம் புக் ஆனது.

ஒருநாள்..அந்த ஷூட்டிங்ல கவுண்டமணியும்,சத்யராஜும் ரிலாக்ஸா உக்காந்துருக்காங்க. அப்போ அசிஸ்டண்ட் டைரக்டர் வந்து ‘‘ஷாட் ரெடி சார்’ன்னாரு, ‘சட்’னு சத்யராஜ் எந்திரிச்சதும்..‘சடக்’னு சத்யராஜோட கையை பிடிச்ச கவுண்டர் ‘‘ஏங்க சத்யராஜ்! உங்களுக்கு ரொம்பத்தான் லொள்ளு. அடுத்த மாச ஷூட்டிங்குக்கு வழியில்ல! கைவசம் புதுசா ஒரு படமும் இல்ல. இந்த லட்சணத்துல..இருக்கற இந்த படத்தையும் ‘விறுவிறு’னு நடிச்சு முடிச்சுட்டா..என்னாகறது நம்ம ஸ்டேட்டஸ்?’’னு காரசாரமா கேட்டுட்டு..

கமுக்கமான வாய்ஸ்ல ‘‘சொல்றத கேளுங்க. ஒவ்வொரு சீனுக்கும் பத்து டேக் வாங்குங்க! சாவகாசமா நடிங்க. அடுத்த படம் புக் ஆகறவரைக்கும் இந்தப் படத்துல நாம பிஸியா இருக்கறமாதிரி ஆக்ட் குடுங்க!’’னுஅட்டகாசமா ஆர்டர் போட..பொறிதெறிக்க சிரிச்சபடி பொட்டிப்பாம்பா அடங்கி டபுள் ஓகே சொல்லியிருக்காரு சத்யராஜ்.

அப்புறம் ஒருநாள்..இதே படத்தோட ஷூட்டிங் ப்ரேக்ல கவுண்டர்கிட்ட மாட்டி மிரட்சியா சிரிச்சிருக்காரு புரட்சித்தமிழன்! எப்படி தெரியுமா? அன்னிக்கு சத்யராஜை ஒரு டைரக்டர் சந்திக்க வரப்போறாரு. அதனால சத்யராஜ்..கவுண்டர்கிட்ட ‘‘அண்ணே..இன்னிக்கு ஏழுமணிக்கு கதை சொல்ல வர்றாங்க. சீக்கிரம் நான் வீட்டுக்கு போகணும்னே!’’னு ஏதோ ஒரு குஷியில ஏழெட்டு தடவை சொல்லிட்டாரு.
அம்புட்டுதான்! வீச்சருவா தூக்காத வீராச்சாமி மாதிரி சத்யராஜை பேச்சாலயே தாக்கி தகர்த்துட்டாரு கவுண்டரு..‘‘சத்யராஜ்! எப்படியும் இந்த கதையை நீங்க கேக்கத்தான் போறீங்க. வேற படமே இல்லாத இந்த சிச்சுவேஷன்ல..அவன் குப்பைக்கதையை சொன்னாலும்..‘ஆஹா! சூப்பர் ஸ்டோரி‘னு புளுகத்தான் போறீங்க. மூணாம்பேருக்கு தெரியாம கதவை சாத்திகிட்டு கதை கேக்கப்போறதுக்கு..எதுக்கு இம்புட்டு பந்தா காட்டறீங்க? ஓவர் பில்டப்ரா சாமீ!’’னு குதறிப்போட சும்மா கதறி சிரிச்சிருக்காரு சத்யராஜ்.

அதேமாதிரி கவுண்டருக்கு இன்னொரு கோவமும் அடிக்கடி வரும். சக ஹீரோக்கள் எல்லாம்,ஹீரோயினை கட்டிப்பிடிச்சதுமே..அடுத்த நொடியில ஃபாரின் போய் குத்துடான்ஸ் ஆடிட்டு வருவாங்க, அவங்க பட்ஜெட் அப்படி! ஆனா கவுண்டர் நடிக்கற கதைப்படி இவருக்கு வாய்க்கிற லொக்கேஷன் எல்லாம் லோக்கல்தானே. நேரா சென்னை டூ பொள்ளாச்சி..இல்லாட்டி கோபிசெட்டிபாளையம்.

இந்த கொலைவெறியோட ஒருதடவை கோபிக்கு கவுண்டர் கோவிச்சுகிட்டே..சத்யராஜோட கிளம்பியிருக்காரு. ஈரோடு ரயில்வே ஜங்ஷன் வந்து இறங்கியதுமே கவுண்டர்..சத்யராஜை பாத்து ‘‘ஆஹா..வந்துட்டோம்ப்பா நம்மளோட சுவிட்சர்லாந்துக்கு! இன்னிக்கு சாயந்திரம் ஆல்ப்ஸ் மலையில ஷூட்டிங்! நாளைக்கு தேம்ஸ் நதிக்கரையில! அடேங்கப்பங்கப்பா!’’னு ‘லவுடு ஸ்பீக்கர் வாய்ஸ்ல‘ சவுண்டுவிட..சுத்தி இருந்தவங்க சிரிச்ச சிரிப்புல காது செவுடு ஆகாத குறைதான்!
ஏழாந்தேதியை கொண்டாடுன ஜாலியோட அடுத்த மேட்டருக்கு போலாமா?

‘நிலா’..ராத்திரி..எஸ்.ஜே.சூர்யா!

Tuesday, May 5, 2009


‘உனக்கான அரிசியில் உன் பெயர் எழுதியிருக்கும்’ங்கறது வேதவாக்கு. ஆனா..ஏ.ஆர்.ரகுமான் வீட்டு பிரியாணியில எஸ்.ஜே.சூர்யா பேரும்,என் பேரும் எழுதியிருந்துச்சு பாருங்க..அதை நினைச்சு இப்பவும் சப்புக்கொட்டுது நாக்கு!

டைரக்டர் கம் நடிகர் எஸ்.ஜே.சூர்யான்னாலே கொஞ்சம் பேஸ்து அடிச்சமாதிரி தெரியும். நல்லா பழகிட்டா அவரும் ஒரு நல்ல தோஸ்துனு புரியும். டபுள் மீனிங் இட்லியில.. செக்ஸ் சட்னி,விரச சாம்பார்னு குழப்பி அடிச்சு கிளப்பி விடறதுதான் சூர்யாவோட பட மெனு.
அப்படித்தான் இவரு ‘பி.எஃப்.’னு டைட்டில் வெச்சு கலாச்சார ஃபைட்டில் முடிஞ்சு..பிறகு ‘அ.ஆ’ படமா விடிஞ்சது. அந்த படத்தோட சென்சார் நடக்கறப்போதான்..சென்சார் அதிகாரி மேல கோபப்பட்டு,செல்போனை (வேற இடத்துல) வீசுனாருன்னு சூர்யாமேல வந்தது வம்பு வழக்கு.

இதுபோதாதா? அத்தனை பத்திரிகைகளோட ‘எழுத்துக்களுக்கு சூர்யா மையா’ ஆனாரு. அப்படித்தான் நானும் பேசினேன். ‘‘உங்க பேரென்ன சொன்னீங்க?’’ன்னு ரிபீட் கேட்டாரு. சொன்னேன். என்ன தோணிச்சோ..‘‘இன்னிக்கு நைட் பத்து மணிக்கு ஏ.ஆர்.ரகுமான் ஸ்டூடியோக்கு வாங்க’’ன்னார்.
போனேன். கேஸு கோர்ட்டுனு அலைஞ்சாலும் காஷுவலா தன்னோட மைத்துனரோட உக்காந்திருந்தாரு. அறிமுகப்படுத்திகிட்டேன். ‘‘காபியா..ஜூஸா..என்ன வேணும்?’’ன்னார். ‘‘பேட்டி வேணும்’’னேன். ‘ஹக்’னு சிரிச்சவர் ‘‘உண்மைய சொல்றேன். உங்க பேரை கேட்டதுமே..உங்களை பாக்கணும்னு தோணிச்சு. பாப்பாங்குளம் பாரதிகிட்ட(நம்ம நிருபர்) உங்களைப்பத்தி கேட்டேன். ‘ரொம்ப ஜாலியான டைப்’னு சொன்னாரு. ஒரு எடிட்டரா இல்லாம..பெஸ்ட் ஃபிரெண்டா பேசலாம்’’னாரு. ‘‘..லாமே’’ன்னேன்.
களைகட்டுச்சு கச்சேரி. அப்போ ஜூஸும்,காபியும் ஒண்ணா வந்தது. ‘‘ரெண்டையும் எப்படி குடிக்கறது?’’ன்னேன். ‘‘காமெடியா..காபி எனக்கு’’னு எடுத்து உறிஞ்சியவர்..அறிஞ்சும் அறியாம பண்ண விஷமங்களேர்ந்து, தெரிஞ்சே பண்ண விஷயங்கள்வரை மனசு திறந்து பேசுனாரு. ‘எஸ்.ஜே.சூர்யா..நடிகை நிலா காதல்’ கிசுகிசு அப்போ பரபரப்பா உலா வந்த நேரம்.
கோட்டைக்குள்ள பூந்து சேட்டை பண்றதுதான் நமக்கு வாய்வந்த கலையாச்சே! அன்னிக்கு பாத்து நல்ல நிலா வெளிச்சம் வேற. நைஸா நான் ‘‘ஏந் தலைவா(நெருங்கிட்டோம்ல!) இப்படி நிலாவை பாத்துகிட்டே பேசறதுன்னா உங்களுக்கு ரொம்ப புடிக்கும்போல!’’ன்னேன். ஒருநொடி ‘பக்’குனு ஆன சூர்யா ‘ஹக்’னு சிரிச்சுகிட்டே ‘‘கடவுளே! போண்டா கடிச்சு..ஃபேன்டா குடிச்சு..கடேசில அனகோன்டாவையே அடிக்கிறீங்களே’’ங்க..குபீர்னு சிரிச்சோம்.

அடுத்த சந்திப்பு..‘குங்குமம்’ இதழில் ‘மக்கள் பேட்டி’னு ஒரு பகுதியை ஆரம்பிச்சோம். அந்த பேட்டிக்காக சூர்யாவை ஃபிக்ஸ் பண்ணேன். அப்போதான் ‘தலைவா’னு நான் கூப்பிடப்போக..‘தலைவாழை இலை’ போட்டு இசைப்புயல் வீட்டு பிரியாணியை சாப்பிட கூப்பிட்டாரு சூர்யா.
‘ஒரு அரிசிக்கு ஒரு கறி’ன்னு எண்ணிப்போட்டு அபாரமா பண்ணியிருந்த பிரியாணியை சூர்யாவும் நானும் பின்னி எடுத்தோம். (நல்ல நண்பர்களை ‘கடவுளே’னு செல்லமா கூப்பிடறது சூர்யாவோட பழக்கம்!). ‘‘கடவுளே..இது லெக் பீஸ். நல்லா சாப்பிடுங்க. பர்சனாலிட்டியை மெய்ன்டெய்ன் பண்ணுங்க’’னு எல்லா கறியையும் எனக்கே சூர்யா பரிமாற..‘‘தலைவா..நீங்கதான் கொஞ்சம் ஒல்லியா இருக்கீங்க. நல்லா வெட்டுங்க’’னு நான் அவருக்கு அள்ளிவைக்க..‘சாப்பாட்டு ராமன்..லட்சுமணனா’ ஒரு பாசப்பந்தியே அங்கே நடந்துச்சு.
பிரியாணி செரிக்கணுமேனு ஃப்ரீயா பல மேட்டரை பிரிச்சு மேஞ்சோம். ‘‘தலைவா..உங்க படத்தோட ஹீரோயின்ங்களை ஏன் உரிச்ச கோழியா காட்டி உப்புக்கண்டம் போடறீங்க’’ன்னேன். ‘‘கடவுளே..ஏதோ முனியாண்டி விலாஸ் ஓனர்கிட்ட கேக்கறமாதிரி கேக்கறீங்களே! ஹீரோயின்னாலே கிளாமர் தூக்கலாத்தான் இருக்கணும். கோழின்னா குருமால வெந்துதானே ஆகணும்!’’னாரு சீரியஸா.

‘‘உண்மையை சொல்லுங்க..நீங்க ஒரு சக்சஸ்ஃபுல் ஹீரோவா?’’ன்னு கேட்டேன். கூலா சிரிச்சவர் ‘‘நம்புங்க கடவுளே! நான் தலைகாட்டற முதல் சீன்லயே..ஏதோ அம்பது படங்கள்ல நடிச்ச ஹீரோவுக்கு கிடைக்கற ரேஞ்சுக்கு கிளாப்ஸும்,விசிலும் தூள்பரத்துதே. இதுக்கு பேர்தானே சக்சஸ்ஃபுல் ஹீரோ’’ன்னு தனக்குத்தானே ‘பட்பட்’னு கைதட்டிகிட்டு சூர்யா பேசுனது சுவாரஸ்யம்!

கிளம்பறப்போ ஒரு கேள்வியை சவுண்டா கேட்டேன்..‘‘அது ஏன் உங்க படங்கள்ல கவுண்டமணி மாதிரி ஹைபிட்ச்சுல கத்தறீங்க?’’. பதிலுக்கு ‘‘நல்லா கேட்டீங்க! நாம எந்த வேலை செஞ்சாலும்..பெரிசா தண்டோரா போடமுடியலைன்னாலும், அட்லீஸ்ட் சின்னதா ஒரு தகர டப்பாவையாவது வெச்சு தட்டி சவுண்டு தரணும். இல்லேன்னா காதடைச்ச பூமியில கண்டுக்காம போயிடுவாங்கன்னு நீங்க அன்னிக்கு சொன்னீங்களே..அதே பாலிஸிதான் எனக்கும் கடவுளே!’’னு ‘பூமராங்’ விட்ட சூர்யாவுக்காக இந்த தடவை நான் கைதட்டினேன். எஸ்..ஜே!

ரஜினியின் ஜீபூம்பா!

Monday, May 4, 2009


‘திருப்பதிக்கு வந்தா உதைப்பேன்’னு தன் கல்யாணத்தப்போ நிருபர்களை எச்சரிச்ச அதே ரஜினி..‘‘வாங்க வாங்க’’னு திருப்பதியில எங்களை வாயார வரவேற்றது ‘சூப்பர் திருப்பம்’ல. அந்த அனுபவம் இது.

..அப்போ நான் ‘ஜுனியர் விகடன்’ நிருபர். இணை ஆசிரியர் மதன், துணை ஆசிரியர் ராவ்..ரெண்டு பேரும் என்னை கூப்பிட்டு ‘‘ரஜினி திருப்பதிக்கு போறாரு! நீங்களும் கூடப்போயி கலர்ஃபுல்லா ஒரு ரிப்போர்ட் குடுங்க’’னு அசைன்மென்ட் தந்தாங்க.

ரஜினியோட சேர்ந்து நானும்,ஃபோட்டோகிராபர் பொன்ஸீயும் திருப்பதிக்கு கிளம்பறதா திட்டம். ஆனா வேறொரு மேட்டர்ல நாங்க லேட்டாகிப்போக.. ரஜினி ‘ஆகாய வழியாவும்,நாங்க தரை வழியாவும்’ ஒருவழியா திருப்பதிக்கு போய்ச்சேர்ந்தோம். கீழ்திருப்பதியில ரூம் போட்டு கொஞ்சம் இளைப்பாறிட்டு..மலையேறிட்டோம்.

‘தேவுடா தேவுடா ஏழுமலை தேவுடா’னு பாடுன ரஜினி முதல் மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமார்,பழம்பெரும் நடிகை பானுமதி உட்பட 11 பேருக்கு தேவஸ்தான உறுப்பினர்களாக மேல்திருப்பதியில் பதவி ஏற்பு விழா! உலகம் முழுக்க உலாவற ரஜினி ரசிகர்களே..உங்களுக்கு தெரியும்ல.. ‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிக்கு கிடைச்ச முதல் அதிகாரபூர்வ பதவி இதுதான்னு!
மலையில..‘கோயிந்தா கோயிந்தா‘னு ஒரு கோஷ்டியும்,‘பெத்தராயுடு’னு மறு கோஷ்டியும் ஓட..கோந்து போட்டு ஒட்டினமாதிரி பெத்தராயுடுகளோட சேர்ந்து ஓடினோம். (அப்ப தெலுங்குல ரஜினி,மோகன்பாபு நடிச்ச ‘பெத்தராயுடு’ செம ஹிட்!) ரஜினியை பாக்க கோயில்ல கட்டுக்கடங்காத கூட்டம். நல்லவேளை..ஜூ.வி. நிர்வாக ஆசிரியரா இருந்த பிரகாஷ் எம். ஸ்வாமி சார், கோயில் சீஃப் செக்யூரிட்டியான நாயுடுகிட்ட எங்களைப்பத்தி சொல்லியிருந்தாரு.

நாயுடு சாரை பாத்து பேசினதால..‘பெத்தராயுடு’ பக்கத்துல ஈஸியா போனோம். தர்மவாசல் கேட் வழியா வெள்ளைவெளேர் பட்டுவேட்டி,சட்டையோட ரஜினி வர..கூடவே லதாவும்,மகள்கள் ஐஸ்வர்யா,சௌந்தர்யாவும் வந்தாங்க. நாயுடு ரஜினிகிட்ட போய் ‘‘இவங்க ஜூனியர் விகடன். உங்கள பாக்கறதுக்காக வெயிட் பண்ணிட்டிருந்தாங்க’’னு சொன்னார். உடனே ரஜினி ‘‘வாங்க வாங்க! எப்போ வந்தீங்க?எங்கே தங்கியிருக்கீங்க?’’னு விசாரிச்சுட்டு ‘‘எங்கூடவே வாங்க. கூட்டம் ஜாஸ்தி..ஜாஸ்தியா இருக்கில்ல’’னு கேட்டுட்டு வெளியே வந்தாரு.

ரஜினியோட ரெண்டு சைடும் செக்யூரிட்டிகள் மாதிரி நின்னுட்டிருந்த தெலுங்கு நடிகர் மோகன்பாபுவும்,சந்திரபாபு நாயுடுவும் எங்களையே ‘‘எவர்ரா நுவ்வு..ஏமிரா காவால?’’ங்கற மாதிரி பாக்க..நான் பொன்ஸீகிட்ட ‘‘என்னண்ணே..நம்மளையே முறைக்கிறாங்க. நாம ப்ரஸ்னு தெலுங்குல சொல்லுங்க’’ன்னேன்.

சட்னு இதை கவனிச்ச ரஜினி, அவங்களை பாத்து ‘‘இவங்க நம்ம ரிப்போர்ட்டர்ஸ். என்னோட பதவியேற்பு விழாவுக்கு மெட்ராஸ்லேர்ந்து வந்திருக்காங்க’’னு ஜாலியா சொல்லி சிரிக்க..அப்புறம்தான் ‘பாபுவும்,நாயுடுவும் நவ்லேரு’ (ஹிஹிஹி!). நுழைவாசல்லயே ரஜினி கால்மணி நேரமா ‘தேவுடு’ காத்திருக்க..கூலிங் கிளாஸ் போட்ட ‘தேவுடு’வா முதல்வர் என்.டி.ராமராவும், துணைவி சிவபார்வதியும் வந்தாங்க.
மூலவரோட கர்ப்பக்கிரஹத்துக்கு நேரெதிர்ல போர்வை விரிச்சிருக்க..அதுல உக்காந்து உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம் எடுத்தாங்க. தெலுங்குலயே பதவிப்பிரமாணம் எடுத்த ரஜினி சட்னு எமோஷனலாகி கண்ணு கசிய ‘‘ரொம்ப தேங்க்ஸ் அண்ணா! நான் உங்களுக்கு கடமைப்பட்டிருக்கேன்’’னு தமிழ்ல சொல்லிகிட்டே மூணு தடவை என்.டி.ஆரோட காலைத்தொட்டு கும்பிட..இதை எதிர்பாக்காத என்.டி.ஆர். அப்படியே பதறி ரஜினி கையை பிடிச்சிகிட்டாரு.

அந்த சமயம் பாத்து கீழே விழுந்த என் பேனாவை எடுக்க நான் குனிய..பக்கத்துலேர்ந்த ஒரு அர்ச்ச்கர் ‘‘நூறேல்லு ஆயுசு’’னு ஆசிர்வதிக்க..வேற வழி? அவர் காலை நான் தொட்டு கும்பிட..சிரிப்பை ‘ம்யூட்’ பண்ணி சிரிச்சாரு பொன்ஸீ.
அடுத்து நடந்ததுதான் செம காமெடி..திடீர்னு என்.டி.ஆர். ‘குடிக்க தண்ணி வேணும்’ங்கற மாதிரி தன்னோட சிஷ்யர் கிட்ட சிக்னல் காட்டினாரு. உடனே அவர் பக்கத்துலேர்ந்த அர்ச்சகர் பாய்ஞ்சுபோயி ஒரு செம்புல தண்ணிய கொண்டுவந்து தந்தாரு. அதே செகண்டு..அந்த சிஷ்யர் ஃபிளாஸ்க்கை திறந்து கஷாயம் போல ஒரு வஸ்துவை ஊத்தித்தர..‘ஏமிரா..மீ புத்தி செடி போயிந்தா’ங்கற மாதிரி என்.டி.ஆர். எரிச்சலா பாக்க..உஷாரான ரஜினி ‘தேவுடு’ கேட்டதை சிஷ்யர்கிட்ட கரெக்ட்டா சொல்ல..‘சொய்ங்’னு என்.டி.ஆர். கைக்கு வந்துசேர்ந்தது மைக்!

மைக்கை புடிச்ச என்.டி.ஆர். கொஞ்சநேரத்துக்கு ‘ஜெமினி சேனலை’ ஓட்டினாரு. பதவியேற்பு விழா முடிஞ்சு வெளியே வர்றப்போ..ஐஸ்,சௌந்தர்யா ரெண்டுபேரையும் கொஞ்சிகிட்டே சிவபார்வதியும்,லதாவும் பேசிகிட்டு வந்தாங்க. இந்த அட்டாச்மென்ட்டை பொன்ஸீ ஃபோட்டோ எடுத்ததுமே..சரட்டுனு ரஜினி கண்ணுல தீக்குச்சி உஷ்ணம்.(ரஜினி தன்னோட மகள்கள் பத்தின நியூஸோ,ஃபோட்டோவோ வர்றதை கண்டிப்பா தவிர்த்த காலகட்டம் அது!)
உடனே ஒரு ஸ்டெப் பின்னால வந்த ரஜினி என் தோளை அழுத்தித்தொட்டு ‘‘உதய்..(தலைவனோட ஞாபகசக்தி!) என் டாட்டர்ஸ ஃபோட்டோ எடுக்கறத நான் விரும்பல. எடுத்த ஃபோட்டோஸையும் போடவேணாம்..ப்ளீஸ்! ஓகே’’னு சொல்லிட்டு. பொன்ஸீயை பாத்தும் ‘கூடாது’ங்கற மாதிரி தலையை ஆட்ட..புரிஞ்சிகிட்டாரு பொன்ஸீ.

மலையிறங்கி வந்த எனக்கும்,பொன்ஸீக்கும் கொலைப்பசி. தலைவாழை இலை போட்டு ‘ஆந்திரா மீல்ஸையும்,கோங்குரா சட்னியையும்’ கலந்து அடிச்சிட்டு ரூமுக்கு வந்து கட்டையை சாச்சோம். சாயந்திரம் திருப்பதி ஸ்டேடியத்துல ரஜினி மீட்டிங்.
தமிழ்நாட்டுல ரஜினி..ஜெயலலிதா மோதல் உச்சகட்டமா இருந்த சிச்சுவேஷன் அது. திருப்பதியில மேடையேறும் ரஜினி..தான் அரசியலுக்கு வர்றது பத்தி சூப்பரா ஒரு அறிவிப்பு செய்வார்னு தமிழ்.தெலுங்கு ரசிகர்களும், பத்திரிகையாளர்களும் இப்போ மாதிரியே அப்பவும் ஆவலா காத்துகிட்டிருந்தாங்க!

மேடையேறுன ரஜினி அரள வைக்கப்போறார்னு பாத்தா..அஞ்சே நிமிஷத்துல பேசிமுடிச்சு கண்ணை இருள வெச்சுட்டாரு..‘‘அண்ணன் என்.டி.ஆர். இந்த கவுரவத்தை எனக்கு தந்திருக்காங்க. மக்களுக்கு சேவை செய்ய எந்த பதவியாக இருந்தாலும் நான் ஏத்துக்க தயாரா இருக்கேன். இது என்னோட முதல் பதவிப்பிரமாணமா..இல்ல..கடைசி பதவிப்பிரமாணமாங்கறது ஆண்டவனுக்குத்தான் தெரியும்!’’னு வழக்கம்போலவே ‘ஆப்பு’ வெச்சிட்டு இறங்கிட்டாரு.

‘ரஜினியின் அரசியல் வரலாறு ஆரம்பமானபோது உதயசூரியனும்,பொன்ஸீயும் உடனிருந்தார்கள்’னு ஒரு தனி வரலாறு படைக்கலாம்னு நாங்க போட்ட கணக்கு..கடைசியில ‘மொட்டைக்கணக்கா’ போச்சு!

‘ரகசிய தமிழச்சி‘ நமீதா!

Saturday, May 2, 2009


நமீதாவுக்கும் சூரத்துக்கும் நன்றிக்கடன் பட்டிருக்காங்க நம்ம தமிழர்கள்! அதேமாதிரி ‘நானும் தமிழச்சிதான்’னு நமீதா சொல்லி அடுத்த தேர்தல்லயும் நிக்கலாம். அதுக்கு அட்டகாசமான காரணமும் இருக்கு!
அதுக்கு முன்னாடி..கிளுகிளு அணுகுண்டா மிரட்டற நமீதாவை ஒரு தீவாளிக்காக பட்டாசு வெடிக்க கூட்டிட்டுப் போனப்போ..அந்த ஸ்பாட்ல நடந்த டப்பாசு தமாஷை சொல்றேன் மச்சான்! (நமீதா பாஷை!)

குடியரசு தினம் அன்னிக்கு சிறப்பு திரைப்படமா குசேலன் போடறதுக்கு என்ன சம்பந்தமோ..அதே பந்தத்தோட தீபாவளி பட்டாசு வெடிக்க நமீதாவை கூட்டிட்டு போயிருந்தோம். வையாபுரி வெடிச்சாலும்,வடிவுக்கரசி வெடிச்சாலும்..காதுக்கு வெடிச்சத்தம் ‘டமால் டமால்’தான். ஆனா கண்ணுக்கு ஜில்லுன்னு ஃபிகர் வேணும்ல. அதுக்குத்தான் நமீதா!

‘குங்குமம்’ தீபாவளி ஸ்பெஷலுக்காக இப்படியொரு அஸைன்மென்ட். நிருபர்கள் த.பழனிக்குமாரும்,குன்றில்குமாரும் நமீதாவை அள்ளிப்போட்டுகிட்டு (!?) ஒரு அபார்ட்மென்ட்டுக்கு வந்துட்டாங்க, சும்மா நானும் வேடிக்கை பாக்க போயிருந்தேன்.
‘பாதி ஏவாள்’ ரேஞ்சுக்கு நமீதாவை எதிர்பார்த்த அங்கிருந்த ஆதிமனிதர்களுக்கு..டைட்டா ஜீன்ஸும்,பூப்போட்ட முழுக்கை சட்டையுமா நமீதா இறங்குனதை பாத்ததுமே மூஞ்சி எலிப்புழுக்கை மாதிரி சிறுத்து கறுத்து போச்சு.

எச்சிலோடு சேர்த்து ஏக்கத்தையும் முழுங்கிகிட்ட ஆண்களையும், ‘ரகசிய மேல்மூச்சு’ விட்ட பெண்களையும் ஒருசேர பாத்துகிட்டே ‘‘ஹாய் குட்டீஸ்’’னு தன்னோட முட்டி கிட்ட நின்ன குட்டீஸ்களை செல்லமா கட்டிகிட்டாங்க நமீதா.
நம்ம நிருபர்கள் அப்போ.. கிட்டத்தட்ட ஒரு பட்டாசு கடையையே அங்கன பரப்பிவைக்க..‘‘ஹைய்யோ..இவ்ளோ பட்டாஸ்ஸா? வெரி ஹாப்பி. என்க்கு வெடிக்கறது புடிக்கும்’’னு
விதவிதமா பட்டாசுகளை குட்டீஸ்களோட சேர்ந்து கொளுத்தி ரசிச்ச நமீ..ஃபைனலா எடுத்தது டென்தவுசண்ட் வாலா. செக்கச்செவேர் அனகோன்டாவா சுருண்டு கெடந்த வாலாவை நமீ பத்தவைக்க..கூட்டமே சிதறி தெறிச்சது. வெடிச்சு ஓய்ஞ்ச பிறகு எல்லாரும் ஒண்ணா கூடி தேடிப்பாத்தாங்க. ம்ஹூம். அந்த கேப்புல நமீதா காரில் ஏறி பத்திரமா எஸ்கேப் ஆயிட்டாங்க. ‘‘அடப்பாவிகளா..புகை போட்டு மறைச்சிட்டீங்களே’’னு கும்பல் நொந்தேபோயிடுச்சு.

அபார்ட்மென்ட் வாசலை கிராஸ் பண்ணப்போ..‘‘ச்சே..என் லைஃப்ல இவ்ளோ அழகா ஒரு நடிகைய நான் பாத்ததே இல்லடா’’னு புல்லரிப்பா ஒரு குரல் கேட்டுச்சு. ‘‘யார்ராது’’னு பாத்தா..நமீதா ‘குட்டீஸ்‘னு கூப்பிட்டு கொஞ்சிகிட்டிருந்த ஒரு பன்னண்டு வயசு ‘குட்டிச்சாத்தான்’.
நமீதாவுக்கும் சூரத்துக்கும் தமிழர்கள் நன்றிக்கடன் பட்டிருக்காங்கன்னு சொன்னேனே.. ஏன் தெரியுமா? வருஷத்துக்கொரு முறை சூரத்துலேர்ந்து தமிழ்நாட்டுக்கு வர்ற துணி வியாபாரிகள் ‘‘எங்களுக்கு ஏற்றுமதியில நஷ்டம்’’னு ஏதேதோ கப்ஸா அடிச்சு ‘ஆடைகள் விலையில் 50 சதவீதம் தள்ளுபடி’ தந்து செம லாபத்தை அள்ளுவாங்க.

அதே ‘சூரத் தந்த சூஸ்பரி’ (சூஸ்பரி தெரியும்ல..வட்டமா இனிப்பா இருக்கும்ணே!) நமீதாவோ...வருஷம் முழுக்க ‘80 சதவீதம் ஆடையை தள்ளுபடி’ செஞ்சு நடிச்சே லம்ப்பா லாபத்தை சம்பாதிக்கறாங்க! பாருங்க பச்சைத்தமிழர்களே..பிறந்த ஊரோட பெருமையை காப்பாத்தறதுல சிறந்து ‘வௌங்கற’ (ம்க்கும்!) நம்ம நமீதா மட்டும்தான்!

ஒருவேளை இந்த தகுதியை மட்டுமே வெச்சு அடுத்த தேர்தல்ல ஏதாவதொரு தொகுதியில நமீதா நின்னாலும் நிக்கலாம். அப்போ ‘நானும் வெள்ளைத் தமிழச்சிதான்’னு மார்தட்டி சொல்ல இன்னொரு சூப்பர் ஹிஸ்டரி கைவசம் இருக்கு ‘மச்சான்ஸ்’!
‘அதெப்டி மாப்ள..அக்குருமம்’னு கோச்சுக்காம மேக்கொண்டு படிங்க! ‘சிட்டுக்குருவி’ங்கற படத்துல ‘உன்ன நம்பி நெத்தியிலே..பொட்டு வெச்சேன் மத்தியிலே’’னு ஒரு சோகப்பாட்டை கேட்டிருப்பீங்க. அதுல வர்ற சரணத்துல ‘‘வீரத்துல கட்டபொம்மன்..ரோஷத்துல ஊமத்துரை..‘‘சூரத்’’துல நீயும் ஒரு தேசிங்குராசா’’னு வரும்ல! இப்ப மேட்டருக்கு வாங்க. ‘‘அந்த காலத்துல தேசிங்குராஜா சூரத்துக்கு வந்து சூரத்தை காமிச்சுட்டு போயிருக்காரு. அப்பேர்ப்பட்ட மாவீரன் இருந்த ஊர்ல பிறந்த நானும் வீரத்தமிழச்சிதானே!’’னு மைக்க புடிச்சு முழங்குனாங்கன்னு வைங்க..ஒட்டுமொத்த தமிழர்களும் தங்களோட பொன்னான ஓட்டை..

நக்கலா சிரிக்கறீங்கபோல! ‘நாளை நமதே’வை லேசா மாத்தி சொல்லிப்பாருங்க..நாளை நமீதா!
ரகசிய தமிழச்சி‘ நமீதா!

 
சுடச்சுட - by Templates para novo blogger