‘மர்மயூகி‘ கமல்!

Monday, June 29, 2009




கலைஞானி கமல் பத்தி கடந்த பதிவுல ‘ஏதோ ஊதுபத்தி‘ அளவுலதான் சொல்லிட்டமோனு மனசுக்குள்ள ஒரு யோசனை வாசனையா புகையுது!

கார்ட்டூன்ல பாக்கற ‘காட்டு யானையை‘ ‘நேர்ல காட்டு‘ன்னா..என்ன செய்வான் இந்த ஏழை இளைஞன்? அதான்..கமல்ஹாசனை காட்டிட்டு போறேன்!

இப்போதைக்கு கமல் ‘நரை, திரை, மூப்பு‘ கடந்த புத்தர்! இன்னும் கொஞ்சம் பழுத்தா இவரே ஒரு சித்தர்! ‘கிண்ணத்தில்‘ தளும்பறதை பாத்ததுமே சிலபேரு தத்துவமா புலம்பறதை கேட்டிருப்போம். ஆனா நாம கேட்ட கேள்விக்கு தன் எண்ணத்தில் பட்டதை பட்டென சொல்லி அசத்தற அசாத்திய திறமைசாலி கமல்!

கேள்விக்குறியை ஆச்சரியக்குறியா மாத்தற கமலிடம் ஒரு கேள்வி கேட்டாங்க..‘காலையில் எழுந்ததும் யார் முகத்தில் விழிப்பீர்கள்?’. ‘பாசாங்கா ஒரு பதிலைச் சொல்லி ‘பேஷா இருக்கே‘னு கமல் பேர் வாங்கியிருக்கலாம்! ஆனா ‘அதிமேதாவிகளையே வெள்ளாவியில போட்டு வெளுக்கறமாதிரி‘ அப்பட்டமா இப்படி பதில் சொன்னார்
கலைஞானி..‘‘காட்டில் இருந்தால் நரி முகத்தில். கட்டிலில் கிடந்தால் ஸ்திரி முகத்தில்!’’

சிரிச்சுகிட்டு பேசறப்போ கூட கமல் நம்மளை பிரிச்சு
மேஞ்சுருவாரு! ‘விருமாண்டி‘ ப்ரஸ்மீட். நடுநாயகமா ‘மருதநாயகம்‘ உக்காந்திருக்காரு.
இடம், வலமா இருந்த நிருபர்கள் படம் பத்தி கேக்கறோம். அப்போ நான் என் பங்குக்கு ‘‘விருமாண்டிக்காக ரெண்டு காளைகளை பயங்கரமா வளக்கறீங்களாமே?’’ன்னேன். உடனே வாய்விட்டு சிரிச்ச கமல் ‘‘ஐயையோ..பயங்கரமால்லாம் வளர்க்கலீங்க! புண்ணாக்கு,
தீவனம்னு போட்டு சாதாரணமாதான் வளர்க்கறோம்!’’னு சொல்ல..தறிகெட்டு சிரிச்சோம்.

‘சிஃபி.காம்‘க்காக எனக்கு கமல் ‘சிறப்புப்பேட்டி‘ தந்தப்போ.. உறைப்பா ஒரு கேள்வி கேட்டேன். ‘‘மகாநதி‘ பட வில்லன் மாதிரி நிஜத்துல யாராவது தன்னோட கையையே வெட்டிக்குவாங்களா?’ன்னேன்.

‘‘இதைவிட கொடூரமால்லாம் சம்பவம் நடந்துருக்குங்க. எங்க ஊர்ல ஒருத்தனோட கையை எதிராளிங்க பாதி வெட்டிட்டாங்க. உடனே அவன் என்ன பண்ணான் தெரியுமா? அதே கையை முழுசா வெட்டி..அதை இன்னொரு கையில எடுத்துகிட்டு ரத்தக்களறியா சண்டை போட்டிருக்கான்!’’னு கமல் சொல்ல..கைகட்டி கேட்டுகிட்டேன்.

எனக்கு ரொம்பநாளா ஒரு டவுட்டு! ‘எப்பவுமே பிஸியா இருக்கற கமல் தனிமையா இருக்கும் சமயங்கள்ல என்ன செய்வார்?‘. நாக்குல நின்ன கேள்வியை போறபோக்குல கமல்கிட்டயே கேட்டுட்டேன்.

‘‘என்னை தட்டி எழுப்பற கேள்வி இது. என்ன..புரியலைங்களா? நண்பர்கள்கூட இல்லாத ஒரு தனிமை கிடைச்சுதுன்னா..உடனே நான் கண்மூடி
தியானத்துல ஆழ்ந்துருவேன்! ‘ஆஹா..கமல் தியானம்‘னு கவர்ஸ்டோரி கிடைச்சுருச்சுனு அவசரப்பட்டு முடிவு பண்ணிராதீங்க!’’னு சஸ்பென்ஸா சிரிச்சாரு கமல்.

சில ‘டிக்டிக்டிக்‘குக்கு பிறகு அவரே ‘டக்‘குன்னு சொன்னாரு..
‘‘தியானம்னு சொன்னது வேறெதுவுமில்ல..நல்லா நிம்மதியா தூங்குவேன்! சான்ஸ்
கிடைச்சா கொடைக்கானல் போயிருவேன். அப்படியே மலைக்குள்ள ஒரு இலை மாதிரி கிடந்து சுகமா தூங்கிருவேன்!’’னாரு ‘தமிழ் சினிமாவை விழிக்கவெச்ச இந்த மகா
கலைஞன்‘!

அதுசரி ‘நம்மவர்களே‘! இந்த பதிவுல போட்டுருக்கற கமல்
ஃபோட்டோ எப்போ..எதுக்காக எடுக்கப்பட்டதுன்னு கரெக்ட்டா சொல்ற ‘மர்மயூகி‘களுக்கு ஸ்ரீதர் சார் ‘சிரிப்பு பரிசு’ வழங்கறார் என்பதை ‘ஏழ்மையுடன்‘ தெரிவிச்சுக்கறேங்க!

‘புத்தபிட்சு’ சத்யராஜ்!

Saturday, June 27, 2009




‘பேய் புடிச்சமாதிரி ஆட்டற பரபரப்பு வாழ்க்கையில..வாய்விட்டு சிரிக்கறதுக்கு வாய்ப்பில்லாம போச்சே‘னு நான் நினைக்கற நேரமெல்லாம் ‘கெக்கெக்கே‘னு சிரிக்கவைக்கற சம்பவங்கள் எக்கச்சக்கமா இருக்கு! அதுல அதிமுக்கியமானது ‘சத்யராஜும் மணிவண்ணனும் கைகோத்து நடத்துன காமெடி கூத்து‘!

மணிவண்ணனின் ‘நூறாவது நாள்’ படத்தை மறக்கமுடியுமா? அதுல சத்யராஜ்தானே வில்லன்! அப்போ அவருக்கு தலையில கொஞ்சம் அடர்த்தியா முடி இருந்த காலம். ஆனா மணிவண்ணனோ ‘‘தலைவா..உங்களைப் பாத்தா வில்லன் மாதிரியே தெரியலை. ஒரு சேஞ்சுக்கு மொட்டை அடிச்சுட்டு வாங்க‘ன்னுருக்காரு.

நம்மாளுதான் ‘பிறவி நடிகராச்சே‘! ‘சரி‘ன்னு சொல்லிட்டு ‘பலூன் விடற‘ சந்தோஷத்தோட சலூன் போயிருக்காரு. ‘பளபள‘ன்னு மொட்டைய போட்டு..
‘பளீர்‘னு வந்து மணிவண்ணன் எதிர்ல நின்னுருக்காரு. சத்யராஜை மேலையும் கீழையுமா
பாத்த மணிவண்ணன் ‘‘என்ன தலைவரே! ஒரு டெர்ரர் லுக்கே உங்ககிட்ட இல்லையே! அசப்புல பாத்தா ஒரு புத்தபிட்சு மாதிரியில்ல இருக்கீங்க!‘‘ன்னு ‘சின்னவயசுல பாத்த
‘கோத்தபய‘ மாதிரினு நெனைச்சு‘ நக்கலா சிரிச்சுருக்காரு!

‘சும்மா இருந்தவனை சூடேத்தி மொட்டை போட வெச்சு..
இப்போ அதுல ஆம்லெட் வேற போடறாரே‘னு கடுப்பாயிட்டாரு சத்யராஜ். எக்கச்சக்க
கோவத்தோட பககத்திலிருந்த மேக்கப் ரூமுக்கு போனவரு..அங்கிருந்த ‘செக்கச்செவேர்‘
சாயத்தை எடுத்து தன்னோட மூஞ்சியில தெளிச்சுகிட்டாரு. ஒரு ‘முட்டை ஃப்ரேம்‘
கண்ணாடியை எடுத்து மாட்டிகிட்டாரு.

முகத்துலயும், மூக்குக்கண்ணாடியிலயும் ‘ரத்தம்‘ சொட்டச்சொட்ட மணிவண்ணன் முன்னாடி போயி ‘தடால்‘னு நிக்கறாரு. லேசா ஆடிப்போன மணி ‘‘ஆஹா தலைவரே! பிறவி வில்லன் மாதிரி பிரமாதமா இருக்கு இந்த கெட்டப்பு!’’னு பிரமிக்கறாரு. சத்யராஜ் ‘கொலைகார மொட்டையா‘ கொண்டாடப்பட்ட கதை இப்படித்தான் ஆரம்பமாச்சு.

இதே மணிவண்ணன் டைரக்ஷன்ல ‘முதல் வசந்தம்‘ படத்துல
‘குங்குமப்பொட்டு கவுண்டர்’ கேரக்டர்ல ‘நம்ம வயிறு சிரிச்சு புண்ணாகற அளவுக்கு‘
சத்யராஜ் காமெடியில பிரிச்சு மேஞ்சிருப்பாரு! ஆனா இதுல நிஜ காமெடி என்னன்னா..
அந்தப் படத்தோட முதல் ஷாட் எடுக்கறவரைக்கும் சத்யராஜ் கேரக்டருக்கு இப்படியொரு பேரே கிடையாது!

சென்னை ஒய்.எம்.சி.ஏ. கிரவுண்டுல முதல் ஷாட் எடுக்கறாரு மணிவண்ணன். தான் ஆசையா வளக்கற ஒரு குதிரைக்கு சத்யராஜ் குங்குமப்பொட்டு வெக்கிற மாதிரி சீன்! அப்போ பாத்து சத்யராஜுக்கு ‘பளிச்னு ஒரு ஐடியா வந்துருச்சு.
உடனே மணிவண்ணனைப் பாத்து ‘‘தலைவரே! குதிரைக்கு பொட்டு வெச்ச கையோட எனக்கும் ஒரு பொட்டு வெச்சுக்கறேன். அப்படியே நம்ம கேரக்டருக்கும் ‘குங்குமப்பொட்டு கவுண்டர்’னு ஒரு பேரையும் வெச்சுக்கலாமே!’’னு ‘பொட்டுல‘ அடிச்ச மாதிரி சொல்றாரு!

மயிர்கூச்செரிய ‘அடேங்கப்பா‘னு ஆச்சரியமா சத்யராஜை ஒரு
பார்வை பாத்த மணிவண்ணன் ‘‘ஏந்தலைவரே! அதென்ன குங்குமப்பொட்டு கவுண்டரு? இப்படியொரு பேரா?’’னு கேட்டாரு. ‘‘ஆமா தலைவரே! எங்க ஊர்ல ‘மில்லு கவுண்டரு, கொள்ளு கவுண்டரு, பேரிக்கா கவுண்டரு, அமெரிக்கா கவுண்டரு‘ன்னெல்லாம் ‘காரணப் பேருக’ நெறையா இருக்கு’’ன்னு மத்தாப்பு சிரிப்போட கித்தாப்பா சொல்லியிருக்காரு
சத்யராஜ்.

‘அப்படியா சேதி‘ன்னு ‘டபுள் ஓகே‘ பண்ணிட்டாரு மணி! இதே
ஜோர்ல ‘முதல் வசந்தம்‘ படத்துல அப்பப்போ சத்யராஜ் தன்னோட ‘சொந்த நக்கலையும்‘ சொருகி கைதட்டல் வாங்குனது தனி! ஒரு சீன்ல சத்யராஜ், தான் வளர்க்கற குதிரையை
பாத்து ‘‘என்னம்மா கல்யாணி..சௌக்கியமா?‘‘னு கேப்பாரு! உடனே அவர் பக்கத்திலிருக்கற வேலைக்காரர் ‘‘ஏனுங்க கவுண்டரே! ஆம்பளை குதிரைக்குப்போயி பொம்பளை பேரை வெச்சு கூப்பிடறீங்களே?’’ம்பாரு!

அதுக்கு உடனே சத்யராஜ் பதிலடியா ‘‘அப்பத்தான்டா நீங்கள்லாம் இந்த குதிரைய நல்ல்ல்லா தேச்சு குளிப்பாட்டுவீங்க!’’ன்னு ‘சரக்‘குன்னு தன்னோட ‘சொந்த சரக்கையும்‘ அள்ளிவீச..அந்த லொள்ளுக்கு தியேட்டரே ‘கொல்‘லுன்னு சிரிச்சுச்சுல்ல!

‘ரெட்டைக்குழல் டுப்பாக்கியா‘ சத்யராஜும் மணிவண்ணனும் இப்படி அலப்பறை பண்றப்போ..மூணாவது ‘பீரங்கியா‘ பட்டை கிளப்பற
கவுண்டமணியும் இவங்களோட சேந்தா..கட்டைகூட ‘கட்டையில போறவரைக்கும்‘
சிரிச்சுதானே ஆகணும்!

சில சமயங்கள்ல மணிவண்ணன் கொஞ்சம் வில்லங்கமான பார்ட்டி! ஷூட்டிங்கை ஸ்டார்ட் பண்ணிட்டு திடீர்னு சத்யராஜை பாத்து ‘‘தலைவரே! முகத்துல
ஆவேசம் கொப்பளிக்க ஓடுங்க!’’ம்பாரு சீரியஸா! டைரக்டர் சொல்லிட்டாரேன்னு
சத்யராஜும் வேகாத வெயில்ல வெறிகொண்ட மட்டும் ‘மாங்கு மாங்கு’ன்னு
தெருத்தெருவா ஓடிக்கிட்டே இருப்பாரு!

கேமராவும் துரத்திக்கிட்டு வந்து ஷூட் பண்ணிகிட்டே இருக்கும்! ஆனா மணிவண்ணன் மட்டும் ‘ஜில்‘லுன்னு நிழல்ல நின்னுகிட்டு ‘குப்குப்‘புன்னு
தம்மடிச்சுகிட்டே இருப்பாரு! இதைப்பாத்த சத்யராஜுக்கு ‘எங்கியோ தப்பு‘ன்னு பட்சி
சொல்லுது! அதை ரொம்பநாள் ஆராய்ஞ்ச கவுண்டர்தான் பிச்சி பீறாய்ஞ்சுட்டாரு!

எடுக்கப்போற சீனுக்கான டயலாக் ஏதும் ‘க்ளிக்’ ஆகலேன்னா..
உடனே மணிவண்ணன் சத்யராஜை ‘ஓடுறா ராமா‘ ரேஞ்சுல விரட்டிவிட்டுட்டு..ஓரமா
நின்னு டயலாக்கை யோசிச்சுகிட்டிருப்பாராம்!

அடிக்கடி மணி இப்படி பண்றதைப் பாத்த கவுண்டமணி
சைலன்ட்டா ஒருநாள் சத்யராஜ்கிட்ட ‘‘ஆஹா! பார்ட்டி இப்பதான் தூண்டிலை
போட்டிருக்காப்ல! இனி மீன் புடிச்சு, அறுத்து கொழம்பு வெச்சு படைக்கறதுக்குள்ள ஓடி ஓடி உங்க நாக்கு அந்துபோகும்..எங் கொடலு வெந்துபோகும்!‘‘னு நொந்துபோய் சொல்ல.. அந்த லந்துக்கு யூனிட்டோட சந்துபொந்தெல்லாம் சிரிச்சதாம்!

குகை..புகை..யானை!

Thursday, June 25, 2009



சும்மா எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காதது...யானை, ரயில், கடல்! இதுல ‘ரயில்ல போகும்போதே யானையை பாக்கலாம்‘னா..அது எம்மாம்பெரிய த்ரில்!

‘பாட்டியோட சுருக்குப்பை மாதிரி‘ பல சுவாரசியங்களை அடுக்கடுக்கான மடிப்புகள்ல அடக்கி வெச்சுருக்கற ஊட்டிக்கு ‘மலை ரயில்ல‘ ஒரு ஜாலி ட்ரிப் அடிச்சோம்.

''பாத்து போங்க..வழியில யானை கிராஸ் ஆனாலும் ஆகும்‘‘னு
ஏறும்போதே காத்துவாக்குல ஒரு வாக்கு காதுல விழுந்துச்சு. இதுபோதாதா? குளிரு அடிக்கிற மலையில களிறு பிளிறும் சத்தம் கேக்குதாங்கற எதிர்பார்ப்பால நமக்கும்
‘குளிர்விட்டுப்‘ போச்சு!
மேட்டுப்பாளையத்திலிருந்து படுகரெக்ட்டா காலை ஏழுமணிக்கு ‘ஜிவுக்‘னு கிளம்பிச்சு ரயில். முதல் வகுப்பு பெட்டியில் முன்வரிசை சீட்டு.. முகத்தை முத்தமிடற ‘ஜில்‘காத்துன்னு ‘ஃப்ரிஜ்ஜுக்குள் உக்கார்ந்த கூலிங் ஃபீலிங்!‘

‘ஜிகுஜிகு‘ன்னு ரயில் வர்றதை சட்டை செய்யாமல்..‘ஏதோ பெரிய சைஸ் சூட்கேஸ் வருதுங்கற மாதிரி‘ ட்ராக்குக்கு குறுக்கே கோழி முதல் மனுஷங்க வரை
ஜாலி நடை போட்டது செம தமாஷ். ‘‘யானை வரும்னு சொன்னாங்க. ஆனா மனுஷங்க
தான் கிராஸ் ஆகறாங்க‘‘னு டாப் கியர்ல எகிறியது நம்மோட ‘யானை ஆவல்‘.

கல்லார் ஸ்டாப்பிங்லேர்ந்து பற்சக்கரம் பொருத்திய ட்ராக்கில் ரயில் மலையேற தொடங்கிச்சு. முன்னால உக்காந்திருந்த ப்ரேக்ஸ்மேன்கிட்ட பேச்சு குடுத்தேன். ‘‘முப்பது வருஷமா இந்த ரயில்ல ஓடறேன்(!). எவ்வளவோ மனுஷங்களை
பாத்தாச்சு. எத்தனையோ மிருகங்களையும் பாத்தாச்சு‘‘ன்னார் கூலா.

லேசான ‘திடுக்‘கோட ‘‘மிருகங்களையா? அப்போ யானையெல்லாம் வருமா?’’னு இழுத்தேன். ‘‘ஆமாங்க. இந்த ட்ராக்ல பாக்காததா? குறுக்கும் நெடுக்குமா
யானைக அதுபாட்டுக்கு திரியும். ப்ச்..என்ன! நாமதான் கொஞ்சம் எச்சரிக்கையா
இருக்கணும்’‘னார் அசால்ட்டா.

உண்மைதான். நாலு ரயில் பெட்டிகளை உந்தித்தள்ளுற இன்ஜின் கடைசியா இருக்கு. முந்தி இருக்கற முதல் வகுப்பு பெட்டிக்கு முன்னே குந்தி இருக்கறவர் இவருதானே. திடீர்னு ‘ஹோ‘ன்னு சத்தம். என்னடான்னு பாத்தா..பட்டப்பகல்லயே
கும்மிருட்டான குகைக்குள்ள நுழைஞ்சு வெளியேறிச்சு ரயில்.

‘‘இங்க பாருங்க.. யானை பக்கத்துலதான் இருக்குபோல‘‘னு
‘கொலம்பஸ்‘ குரல் குடுத்து ‘கொல நடுங்க‘ வெச்சாரு ப்ரேக்ஸ்மேன். நாம இருந்த ஒட்டுமொத்த பெட்டியே ‘எப்டி சொல்றீங்க?‘‘னு எட்டிப்பாத்தது. ‘‘தோ தெரியுதே..‘லட்டு லட்டா‘(!?) சாணி! கொஞ்ச நேரத்துக்கு முன்னாலதான் போட்டிருக்குபோல’’னு ‘லைவ் ரிப்போர்ட்‘ தர..எல்லாரையும் த்ரில் தொத்திக்கிச்சு.

இதுக்கிடையில ‘‘ஹைய்யோ..எவ்ளோ குரங்குங்க பாருங்க‘‘னு ஒரு இளம் மனைவி குஷியா தாவ..‘அட..ட்ரெயினுக்கு வெளியிலுமா’னு அந்த பொண்ணோட கணவர் கூவ..இந்த ‘பொது நக்கலை‘ கேட்டு பெட்டிக்குள்ள சிரிப்பலை. காலை ஏழு
மணிக்கே ரயில் ஏறிட்டதால எல்லாருக்குமே ஆளைக்கொல்ற பசி. ‘ஹில் க்ரூவ்‘
ஸ்டாப்பிங்ல ரயில் நின்னதுமே..அங்க கிடைச்ச வடை, பிஸ்கோத்துகளை கடிச்சபடி சுடச்சுட டீ அடிச்சோம்.

கிளம்பின ரயில் திடுதிப்புன்னு ஒரு இடத்துல ப்ரேக் அடிச்சு நின்னுச்சு. எதிரே இருட்டுக்குகை. ‘என்ன ஏது‘னு விசாரிச்சா..ட்ராக்கை ஒட்டி நின்ன ஒரு
ரயில்வே மீசை ஆசாமி ‘‘குகைக்கு அந்த பக்கம் யானை நிக்குதுப்பா‘‘னு நம்ம ப்ரேக்ஸ்மேன்கிட்ட சாவகாசமா சொன்னாரு. ‘‘என்னாது.. யானை நிக்குதா‘‘னு பயணிகள் மத்தியில கேள்வி ‘எக்கோ‘ அடிச்சபடி ‘தடக் தடக்‘னு பயம் பரவிச்சு.

‘‘அட ஆமாங்க! ட்ரெயின் சத்தம் கேட்டு யானை இப்பதான் அங்கிட்டு நகர்ந்து போயிருக்குபோல. இதோ பாருங்க..அந்த யானை போட்ட சாணியிலேர்ந்து சூடா புகை போறதை!‘‘னு ‘ஆனைத்தரமா‘ ஆசாமி சுட்டிக்காட்ட..மொத்தப்
பெட்டியே எட்டிப்பாத்து வாய்ல புகைவிட்டுச்சு.

‘எந்த நொடியில யானை வெறிகொண்டு தாக்குமோ?‘‘னு எதிரே இருக்கற இருட்டு குகை வேற ஏகத்துக்கும் பீதியை கௌப்பி ‘லப்டப்‘பை எகிறவெச்சுச்சு. இந்த கலவர நிலவரம் புரியாமல் நிறையப் பேரு குகையை ‘பேக்ரவுண்டா‘ வெச்சு போட்டோக்கள் எடுத்துகிட்டுருந்தாங்க.

அப்போ சைடிலிருந்த மரங்களோட மறைவுல ‘நம்பர் ஒன்‘ போன ஒருத்தர் ‘அடிச்சுப் பிடிச்சு‘ ஓடிவர..மொத்த பயணிகளோட அடிவயித்துலயும் ‘அடுத்துப்
போறதுக்கான‘ பயம் பரபரத்துச்சு. ‘என்னாச்சு‘‘னு விசாரிச்சா..‘‘அந்த பக்கத்துல பெரிஸ்ஸா மலைப்பாம்பு ஒண்ணுக்கு..ஸாரி..ஒண்ணு போச்சுங்க!‘‘ன்னாரு ‘பாதி‘ போன பீதியோட!

‘‘எப்போ யானை வரும்? எப்போ ட்ரெயின் கிளம்பும்?’’னு சக பயணிகளும் தங்களுக்குள்ளயே ‘பய கேள்விகளை‘ வீசி பந்து விளையாடிகிட்டிருக்க.. திடீர்னு விசில் சத்தம் கேட்டுச்சு. ‘‘ஏறுங்க சார் சீக்கிரம்! யானை கௌம்புதோ
இல்லையோ..ட்ரெயின் கௌம்பிருச்சு!‘‘ன்னாரு ப்ரேக்ஸ்மேன். அதுக்குப்பிறகு வழிநெடுக கண்ணில் தட்டுப்பட்டு தொட்டுத்தொடர்ந்தது ‘சாணி தரிசனம்‘ மட்டுமே!

இப்படியாக ஊட்டி மலை உச்சிவரை நாம பாத்து ரசிச்சது..‘எக்கச்சக்கமா பரவிக்கெடந்த யானை எச்சத்தைத்தான்! ‘அடப்பாவி மக்கா..யானையை
பாக்கவே முடியாதா‘ங்கற ஏக்கத்தோடவே ஊட்டிக்குப்போய் இறங்குனதுமே யானையைப்
பாத்தேன்.. ரயில்வே ஸ்டேஷன்ல மாட்டியிருந்த ஒரு காலண்டர்ல!

விஜய் சேர்த்த சொத்து!

Monday, June 22, 2009



அருவி மாதிரி பேசற ஆளல்ல நம்ம ‘குருவி’! துருவித்துருவி கேள்வி கேட்டாலும் உருவிப்போட்ட கருவேப்பிலை மாதிரி கொஞ்சூண்டுதான் பதில் கிடைக்கும். ரெண்டுமணி நேரம் விஜய்கூட பேசினதை ஒரு துண்டுச்சீட்டுல
எழுதிரலாங்ணா!

அது ஒரு தீபாவளி! வாணவேடிக்கைகளை வானத்துல வேடிக்கை பார்த்தே ஏங்கற ஏழை மாணவர்களை ‘சிவகாசி‘க்கு கூட்டிட்டுப்போலாம்னு ஆசைப்பட்டேன். பட்டாசு தயாரிக்கற சிவகாசிக்கு அல்ல..பட்டைய கௌப்பற ‘சிவகாசி‘ விஜய்கிட்ட! அப்பவும் நான் ‘குங்குமம்’ பொறுப்பாசிரியர்.

தீபாவளிக்கு மூணுநாள் முன்னாடி..‘கில்லி‘யோட நீலாங்கரை வீட்டுக்கு பள்ளிக்கூடப் பசங்களை கூட்டிட்டுப்போனோம். வாசல்ல நின்னு வரவேற்ற விஜய்யை பார்த்ததுமே பிச்சுகிட்டு ஓடுன பசங்க ‘‘இளைய தளபதி‘ன்னு அவரை
மொச்சுகிட்டாங்க! பசங்களுக்கு பட்டாசு பாக்கெட், ஸ்வீட் பாக்ஸ்னு விஜய் அன்போட தர..பதிலுக்கு பசங்களும் கண்ணுமண்ணு தெரியாம பாசத்தைப் பொழிய..கண்ணு கலங்கிட்டாரு விஜய்!

இதை ‘பள்ளி மாணவர்களுடன் கில்லி தீபாவளி’ன்னு நேரடி
ரிப்போர்ட்டா எழுதியிருந்தேன். ‘குங்குமம்’ இதழ் கடைக்கு வந்த அதிகாலையிலேயே என் செல் முழிச்சது. எடுத்துப்பேசினால்..விஜய் குரல் ஒலிச்சது! ‘‘மேட்டர் படிச்சேங்ணா. மனசு நெகிழ்ந்து போயிட்டேங்ணா. நாளைக்கு ஈவ்னிங் மீட் பண்ணலாங்ணா!’’னார்.
‘‘சரிங்ணா’’னேன் சந்தோஷமா!

மறுநாள் மாலை. அதே நீலாங்கரை. சலசலக்கற
கடற்கரையோரமா பளபளக்கற விஜய் பங்களா. ‘இளைய தளபதி‘யோட பர்சனல்
அறைக்குள் போறேன். ‘பனிக்கட்டியை பரப்பி ஏ.சி.யால நிரப்பி விட்ட மாதிரி‘ ஜிலீர்னு இருக்கு அந்த ரூம். எதிரே சேர்ல விஜய். உதிராத புன்னகையோட புதிராக என்னையே
பாக்கறாரு.

ஜாலி பேட்டிக்காக போன நானே ஒரு கேள்விக்குறி
மாதிரி ஆயிட்டேன். ‘சரி..இதிலிருந்தே பேட்டியை ஆரம்பிக்கலாம்’னு ‘‘எப்படி வந்துச்சு உங்களுக்கு இப்படியொரு அமைதி?’’ன்னு கேட்டேன். ‘‘சொல்லத்தெரியலீங்க. எப்பவுமே இப்படியேதான் இருக்கேன். இதுவே நிம்மதியா இருக்கு!’’ன்னு சைலன்ட்டாகிட்டார்.

‘என்னடாது..அதிரடிப்பேட்டி ஆன்மீகப் பேட்டியா மாறிடும்
போல’ன்னு சப்ஜெக்ட்டை மாத்தினேன். விஜய்யோட டேபிள்ல ஆடியோ சிஸ்டத்தை பாத்தேன். ‘‘அதிராமல் பேசற நீங்க..அதிர அதிர மியூஸிக் கேப்பீங்க போல?’’ன்னேன். உதடு பிரியாமல் சிரிச்ச விஜய் ‘‘ஆமாங்ணா! மியூஸிக்னா எனக்கு உயிர். பழசு புதுசு எந்தப்
பாட்டா இருந்தாலும் கேட்டு ரசிப்பேன்’’னு ‘நல்லபிள்ளையா‘ பதில் சொல்லி பேட்டிக்கு ‘பிள்ளையார் சுழி’ போட்டாரு.

கச்சிதமா ட்ரிம் பண்ணியிருந்த மீசையை விஜய் வருட..அப்போ அவரோட வலது கை விரல்ல ஒரு பிளாட்டினம் மோதிரம் ஜொலிச்சது. ‘‘ஸ்பெஷல்
மோதிரமா?’’ன்னு கொக்கியை போட்டேன். ‘‘அட..எல்லாத்தையும் நல்லா வாட்ச்
பண்றீங்களே’’னு சிரிச்சவர் ‘‘இது அப்பா போட்ட மோதிரம். ‘இத போட்டுகிட்டா நல்லது நடக்கும்‘னாரு. சந்தோஷமா போட்டுகிட்டேன்’‘னாரு.

இப்படி ஒருவழியா என்னென்னவோ செப்படி வித்தையெல்லாம் காட்டி ஒரு ‘ஸ்பெஷல் பேட்டி‘ எடுத்துட்டு வந்தேன். கவர்ஸ்டோரிக்கு அனுப்பற நேரம். அன்னிக்கு பாத்து ‘விஜய் உட்பட பல முன்னணி நடிகர்கள் வீடுகளில் இன்கம்டாக்ஸ் ரெய்டு’ நடந்துருச்சு. ‘கட்டுக்கட்டா கறுப்புல எடுத்தாங்க‘னு பல கட்டுக்கதைகளும் பரவிருச்சு.

இதுபோதாதா? விஜய்யோட கவர்ஸ்டோரிக்கு ‘‘கஷ்டப்பட்டு
சம்பாதிச்சது கையை விட்டுப்போகாது!’’னு ‘டைமிங்கா‘ டைட்டில் வெச்சு அனுப்பிச்சேன். உள்ளே என்ன மேட்டர்னா ‘‘விஜய் படமா? குடும்பத்தோட போய் ஜாலியா பாக்கலாம்னு மக்கள் என்மேல நம்பிக்கை வெச்சுருக்காங்கள்ல! இந்த நம்பிக்கைதான் நான் கஷ்டப்பட்டு
சம்பாதிச்ச சொத்து. இது கையை விட்டுப் போகாது!’’னு விஜய் சொல்லியிருப்பார்.

இதழ் விற்பனைக்கு வந்தது. ‘சன் டி.வி.‘யிலயும் விளம்பரம் சக்கைபோடு போட்டது. அன்னிக்கு மதியம்..என் செல்லில் மீண்டும் விஜய்! ‘‘ண்ணா..
இன்கம்டாக்ஸ் ரெய்டு பத்தி எவ்வளவோ பொய்யா எழுதி என்னை கஷ்டப்படுத்திட்டாங்க. ஆனா அதையெல்லாம் அடிச்சுத்தூக்கி என் மனசுக்கு பெரிய நிம்மதியை தந்துருச்சு உங்க எழுத்து! ரொம்ப தேங்க்ஸ்ணா. இனிமேல் என்னைப்பத்தி நீங்க என்ன எழுதினாலும் அதுக்கு முதல் ரசிகன் நாந்தாங்ணா!’’னு விஜய் உருக்கமாகப் பாராட்ட..இன்னும் நெருக்கமானது அவருடனான நட்பு!

ராஜ்கிரணின் ‘ஆட்டுக்கால் சூப்‘!

Sunday, June 21, 2009


மரிக்கொழுந்து வாசம் வேணும்னா எத்தனையோ நடிகைகளைப் பத்தி எழுதலாம். ஆனா..கறிக்கொழம்பு வாசம் வரணும்னா அதுக்கு ராஜ்கிரணைப் பத்தி மட்டும்தான் எழுதமுடியும்!

மூணுகிலோ ஆட்டெலும்பை ஒரே மூச்சுல கடிச்சுத்துப்புவாரு. முப்பதுபேரோட மூட்டெலும்பை ஒரே வீச்சுல அடிச்சு நொறுக்குவாரு. அவர்தான்
ராஜ்கிரண்! தொடைதெரிய டவுசர் மாட்டிட்டு அறிமுகமாகற கதாநாயகிகள் நடுவில..டவுசர் சைஸுக்கே வேட்டியை மடிச்சு டப்பா கட்டு கட்டிகிட்டு தொடைதெரிய அறிமுகமான ‘தமிழின் முதல் முரட்டு ஹீரோ’ ராஜ்கிரண் மட்டுமே!

ஒருகோடி ரூவா ரேஞ்சுக்கு இந்த ‘பாவா‘ சம்பளம் வாங்கி சாதனை பண்ணாரு. இவரோட சுருட்டைமுடி போல சில சோதனை சுருட்டி அடிச்சாலும்..இந்த இருட்டை விரட்டி வெளிச்சத்துக்கு மீண்டுவந்தாரு.

உலகம் மட்டுமா உருண்டை? கறி கோலாவும்தான் உருண்டை!
ராஜ்கிரணை நான் முதல்வாட்டி சந்திச்சது..திண்டுக்கல்லுல ஒரு சந்துக்கடை டிபன்
ஸ்டாலில்! தொண்டையில பிஸ்கோத்தா கரையற மட்டன் குஸ்காவும், மண்டையிலிருக்கற மசாலாவை குஷாலாக்கற சிக்கன் கறியும் அந்த கடையோட ஸ்பெஷல்!

இந்த ‘வாசனை புடிச்சாலே திண்டுக்கல் மலைக்கோட்டைக்கே எச்சில் ஊறும்ங்க! அப்போ..இலைபோட்டு திங்கற எங்க நிலைப்பாட்டை யோசனை பண்ணிப்பாருங்க! சேர்ல உக்காந்துருக்கற நானும், நண்பன் கலீலும் ஒவ்வொரு ஐட்டத்தையும் ‘ஆஹ்ஹா..ஓஹோ’னு ரசிச்சு ருசிக்க..கார்ல கூட்டாளியோட உக்காந்திருந்த
ராஜ்கிரண் வெளிய வந்து ‘‘எங் கன்னுக்குட்டிகளா..சாப்புடணும்னா இப்பிடித்தான்
சப்புக்கொட்டி சாப்பிடணும்!’’னு ‘வாசமா‘..பாசமா பாராட்ட..அப்பவே எங்களுக்கு வயிறு நிறைஞ்சுபோச்சு.

அப்புறம் நாங்க ‘பத்திரிகைக்காரங்க’ன்னு அறிமுகப்படுத்திக்
கிட்டோம். அவர் கூட இருந்த கூட்டாளி அதை அரைகுறையா கேட்டுகிட்டு
கடைக்காரர்கிட்ட ‘‘ஏப்பா..கத்திரிக்காய் கேக்கறாங்கள்ல! நம்ம பசங்க!’’ன்னு குளற..
சினிமாவுல சிரிச்சமாதிரி ராஜ்கிரண் சிரிக்க..அங்கனயே எங்களுக்கு செரிச்சுப்போச்சு!

‘இந்திரன், சந்திரன்‘ ரெண்டுபசங்களும் வெந்துகூழானதுக்கு
என்ன காரணமோ..அதே காரணத்தாலதான் நம்ம ராஜ்கிரணும் நொந்துநூலாகியிருந்தாரு! அந்த நேரத்துல நான் அவரை சந்திச்சேன். சுருட்டைமுடியும், முரட்டுமீசையும், மிரட்டும் கண்களுமா ‘சினிமாவின் மினியேச்சர் அய்யனார்’ மாதிரி இருந்தவர்..‘பிதுக்கி எடுத்த டூத்பேஸ்ட் டியூப்’ மாதிரி இளைச்சு களைச்சுப்போயிருந்தாரு!

பாக்கவே மனசுக்கு கஷ்டமா இருந்துச்சு. அவரோட கையை இறுக்கிப்பிடிச்சுகிட்டு ‘‘இடையில கொஞ்சம் மங்கிப்போனாலும் ‘மாணிக்கம்’ சார் நீங்க! மறுபடியும் ஜொலிப்பீங்க!’’ன்னேன். ‘தளுங்’னு அவரோட கண்ணு கலங்கிருச்சு.
எனக்கும்தான்.

‘‘சந்தோஷம்யா! வருவேன்யா..வந்ருவேன்யா!‘‘னு அழுத்தமா சொன்னவரு, ‘ம்க்ர்ம்’னு தொண்டையை செருமிகிட்டே ‘‘என்ன சாப்புடறேய்யா?’’ன்னு பரிவோட கேட்டாரு. ‘‘காபி சார்’’ன்னேன். ‘என் ராசாவின் மனசுல’ மீனாவை செல்லமா கோச்சுக்கறமாதிரி’ ‘‘என்ன பழக்கம்யா? காபி கீபின்னுகிட்டு? சூடா ஆட்டுக்கால் சூப் குடிக்கலாமா?’’ன்னாரு.

‘இலை திங்கற ஆடு மாதிரி‘ தலையாட்டினேன். வீட்டுக்கு உள்ளே பார்த்து பெருங்குரலில் ‘‘தாயீ..ரெண்டு பெரிய கப்புல சூப் குடும்மா’’ன்னாரு! சுடச்சுட
வந்தது சூப். செம கமகம! ‘‘இந்தாய்யா..நல்லா உறிஞ்சி குடிய்யா’’னு மணக்க மணக்க எனக்கும் கொடுத்து..தனக்கும் எடுத்தார்.

முதல் ‘சிப்‘பிலெயே ‘‘சூப்பர் சார்’’னேன். ‘‘யய்யா..ஆட்டுக்கால் சூப் சாப்புட்டா மூட்டுவலியே வராது தெரியுமா?’’னு ‘அசையும் பொருள்கள் அத்தனைக்குமான அசைவ டிப்ஸை‘ அள்ளித்தர..அசையாம சப்புக்கொட்டி கேட்ட நான் அத்தனையையும் ‘உப்புக்கண்டம்’ போட்டு பத்திரமா வெச்சிருக்கேன்.

கிளம்பறப்போ கேட்டேன்..‘‘உங்களை ‘வில்லேஜ் எம்.ஜி.ஆர்.‘னு எல்லாரும்..குறிப்பா தாய்க்குலம் தலைமேல தூக்கிவெச்சு கொண்டாடுனாங்க! மறுபடியும் அந்த இடத்தை நீங்க புடிச்சுரலாம்ல?’’ன்னேன்.

கண்ணைமூடி தன்னைப்பத்தி ஒருநிமிஷம் யோசிச்சவர்
‘‘எல்லாரும் எம்.ஜி.ஆர். ஆகமுடியுமாய்யா? எனக்கும் எம்.ஜி.ஆர்.மாதிரி இருக்கத்தான் இஷ்டம். ஆனா ராஜ்கிரணா இருந்துட்டதாலதான் இம்புட்டு கஷ்டம்!
பொண்டுபுள்ளைக மத்தியில நமக்குன்னு ஒரு மதிப்பு இன்னமும் இருக்குய்யா. அதை
காப்பாத்திக்குவேன்!’’னார் ‘கிரானைட்‘ குரலில்!

‘சிக்ஸ்டி பேக்’ அமீர்!

Tuesday, June 16, 2009







சினேகமாகிட்டா உசுரையே தரக்கூடிய அமீர்..அநேகமா போன பிறவியில கர்ணனா பிறந்திருப்பார்போல! தப்புன்னா தொடைதட்டி மல்லுக்கு நிப்பார். நட்புன்னா படைதிரட்டி முன்னுக்கு நிப்பார்.

ரசிகர்களை மயக்குன ‘மௌனம் பேசியதே’..அமீர் இயக்குன முதல்படம். பத்திரிகைகள்ல விமர்சனம் எப்படி வரப்போகுதுன்னு பத்தி எரியற
ஆர்வத்தோட அமீர் காத்திருந்த காலம் அது. அல்லாவின் கருணையால் எல்லா பத்திரிகைகள்லயும் படத்தைப் பத்தின விமர்சனம் நல்லா வந்திருந்தது. மாநிறமா இருந்த அமீர்..இதை படிச்சு படிச்சு ரசிச்சு தேனிறமா மாறிட்டாரு!

வந்த விமர்சனங்கள்ல அமீரால மறக்கமுடியாததுல
நம்மோடதும் ஒண்ணு. ‘மௌனம் பேசியதே’ படம் பத்தி அக்குவேறு சுக்குநூறா அலசிட்டு..ஃபைனல் டச்சா ‘‘ஓடுகிற நதியில் ஒருகூடைப்பூக்கள் மிதந்துபோகிற அழகு!’’ன்னு எழுதியிருந்தேன். தனக்கு பாயாசமா இனிச்ச இந்த வரிகளை வாயாரப்பாராட்டின அமீர்..பத்திரிகை விளம்பரத்துல எடுத்துப்போட்டு மரியாதை பண்ணியிருந்தார்.

அப்போ தொடங்கின நட்பு..இப்போவரைக்கும் உப்புபோல எளிமையாவும், எஃகு போல வலிமையாவும் தொடர்வதுதான் நம்மோட லக்கு! உணர்ச்சிவசப்பட்டுட்டா கத்தரிவெயில் மாதிரி அனல்கக்கற அமீருக்கு..
பத்திரிகைகாரங்ககிட்ட கத்தரிபோட்டு பேசத்தெரியாது. இதனால இவரை ‘மகா கோபக்காரர்‘மாதிரி சித்தரிச்சிட்டாங்க!

நிஜத்துல அமீரோட பேச்சுல ஞாயம் இருக்குமே தவிர சாயம் இருக்காது. சமயங்கள்ல சிலபேர்கிட்ட அடிமனசுல பட்டதை ‘பட்‘டெனப்பேசி சர்ச்சைகள்ல அடிபட்டதுக்குப்பிறகு..நல்லது கெட்டது எதுன்னு அமீருக்கு இப்போ நல்லா புடிபட்டுப்
போச்சு.

‘பருத்திவீரன்’ படத்துல ஒரு ‘கறுப்புத்தோல் தமிழச்சியைத்தான்
கதாநாயகியா அறிமுகப்படுத்துவேன்‘னு வீறாப்பா சொல்லிட்டாரு. ‘நைட்டியைப்
போட்டும்கூட மேல மாராப்பா ஒரு துண்டைப் போட்டுக்கற‘ நம்மூரு பெண்டுக..
பிறவிச்சொத்தான வெக்கத்தை துறவி ரேஞ்சுக்கு துறந்து நடிப்பாங்களா என்ன?

தமிழ்நாட்டோட சந்துபொந்து இண்டுஇடுக்கெல்லாம் பூந்து தேடியும் நண்டு வளைக்குள்ள ஒளிஞ்சிகிட்டமாதிரி ‘கருப்புத்தோல் தமிழச்சிகள்லாம் பம்மி பதுங்கிட்டாங்க. ‘‘அப்புறம் என்ன செய்ய? பெங்களூரு தமிழச்சி ப்ரியாமணியை புடிச்சுட்டு வந்தேன். தங்கக்கட்டிக்கு தார்பூசி கறுக்கவச்சோம்’’னு சொல்லிச்சிரிச்சாரு அமீர்.

‘என்னுயிர்த்தோழா’ன்னு பாலாவோட சுத்தித்திரிஞ்ச அப்’போதை’ய காலகட்டத்துல இருந்த அமீர் இல்லை. இப்போது.. இறைநெறிகளுக்குட்பட்டு தனது மறைவிதிகளை மதிச்சு துதிக்கற நிறைவான மனிதன் அமீர்.

அமீரின் மூன்று படங்கள்லயும் கலகலப்பு இருக்கும். கிளுகிளுப்பு இருக்காது. ‘கவிச்சி‘ கடிப்பாங்க. கவர்ச்சி கிடையாது. ‘ஏன் இப்படி முரண்டு புடிக்கறீங்க?’னு கேட்டேன். கரண்டு அடிக்கறமாதிரி பதில் சொன்னாரு அமீர்...

‘‘ஏங்க..நம்ம மெரினா பீச்சுல ஒருலட்சம் பேர் வெறும்
உள்ளாடைகளோட படுத்து ‘சன் பாத்‘ எடுக்கமுடியுமா? முடியவே முடியாது. ஏன்னா நமக்குன்னு ஒரு கலாச்சார அடையாளம் இருக்குல்ல. ரெண்டு பொம்பளைப்
பிள்ளைகளைப் பெத்தவன் நான். ஒரு அக்கறையான தகப்பனா..என்னோட படங்களை என் குடும்பம் முதல்ல பாக்கனும்னு நினைக்கறேன். கோட்டை கட்டவேண்டிய
தமிழ்சினிமாவுல..திருட்டுத்தனமா ஓட்டைல மறைஞ்சுபாக்கற விஷயங்களைச்சொல்லி
நாட்டை கெடுக்காதீங்க‘‘ன்னு பேசிட்டு பாத்தவரோட கண்ணுல ஆசிட் கோபம்!

அமீரோட கவலையெல்லாம் ‘சவலைப்புள்ளையா‘ போன பல நடிகர்களைப்பத்தித்தான்..‘‘ஆளில்லாத தீவுல ‘ஊ..லலல்லா‘ பாட நம்ம ஹீரோக்கள்
ரெடியா இருக்காங்களே தவிர..அப்பா கேரக்டர்ல நடிக்க இங்க ஆளில்லை. கமல்
சாரைத்தவிர அப்பா, தாத்தா ரோல்ல நடிக்க யாரும் தயாரா இல்லை. அப்படியொரு
அப்பா கேரக்டர்ல நடிக்கத்தான் நான்லாம் நடிகனானேன். மத்த நடிகர்கள் ஹீரோயினுக்கு முத்தம் குடுக்கட்டும். நாம நிஜம்போலவே பிள்ளைகளை கொஞ்சுவோம்!’‘னார்.

சமீபத்துல ஒரு விழாவுல அமீரை சந்திச்சேன். தீட்டிவெச்ச ஈட்டி
மாதிரி ஷார்ப்பா இருந்தார். ‘‘என்ன சார்..‘சிக்ஸ் பேக்‘ ஹீரோ மாதிரி இருக்கீங்களே?‘‘ன்னேன். ‘‘நீங்கவேற! நான் போட்டிருக்கற சட்டையை கழட்டிப்பாத்தீங்கன்னா..‘சிக்ஸ் பேக்‘ என்ன..‘சிக்ஸ்டி பேக்‘கே தெரியும். அம்புட்டு எலும்புகளும் அப்பட்டமா தெரியறமாதிரி ஒல்லியாயிட்டேன்!’’னு சொல்லிச்சிரிச்சார் ‘யோகி‘ அமீர்!

சந்தியா படக்கதை!

Friday, June 12, 2009


ஆத்தா ஆடு வளர்க்கலாம். தாத்தா பேத்திய வளர்க்கலாம்.

இந்தியாவை இளைஞர்கள் வளர்க்கலாம். ஆனா..‘அம்மாளுசந்தியாவை

பத்திரிகைக்காரங்களான நம்மாளுங்க எப்படி வளர்த்தாங்க தெரியுமா?

காதல்படத்தை தலைமேல் தூக்கிவெச்சு பாராட்டினோம். அதுல அறிமுகமான சந்தியாவை அவரோட நடிப்புக்காக இடுப்புல தூக்கிவெச்சு சீராட்டினோம். ‘செண்டு பாட்டில்சைஸ்ல இருந்தாலும்..‘ரெண்டு பாட்டில் வந்து டான்ஸ் ஆடிட்டுப்போற ஆவரேஜ் நடிகை அல்லனு சாவித்திரி ரேஞ்சுக்கு கூவித்திரிஞ்சது பத்திரிகைகள்.

ஆனாலும் கோலிவுட்டோடகோலி விளையாட்டுலஉருண்டு புரண்டு சராசரி நடிகையா சந்தியா ஆயிட்டதுவழக்கம் போல் கலக்கல்தான். ‘

பத்திரிகைகளாலதான் தான் இம்புட்டு உசரத்துக்கு வந்தோம்ங்கறதால நிருபர்கள்னாலே

கும்பிட்டு பேசறது சந்தியா பழக்கம். அன்னிக்குகுங்குமம்இஷ்யூவோட டெட்லைன். அது நான் தயாரிக்கற இதழ்.

எதிர்பார்த்த ரெண்டுபக்க மேட்டர் ஒண்ணு கடைசி நிமிஷத்துல கைக்கு வரலை. பொதுவா பத்திரிகைகள்ல இந்தமாதிரி சமயங்கள்லகீப் மேட்டர்னு (அச்சச்சோ..இது அதுவல்ல!) ஒரு ஃபைல் வெச்சுருப்போம். அதுலேர்ந்து ஒரு கட்டுரையை எடுத்துப்போட்டு சமாளிச்சுருவோம். அன்னிக்கு பாத்து நமக்கு அதுவும் வசப்படலை.

எதேச்சையா என் டேபிளை பார்த்தேன். ‘அக்குள்ல கூகுள் வெச்சுகிட்டு..யாஹூல தேடறமாதிரி..மலர்போல சிரிச்சுகிட்டிருக்கற சந்தியாவோட கலர்ஃபுல் ஸ்டில் கிடைச்சது. ஆஹா..‘முக்கால் பக்கம் சந்தியா ஸ்டில்..ஒண்ணேகால்

பக்கம் ஜாலி மேட்டர்னு குஷியா விசிலடிச்சேன். மேட்டருக்கான டைட்டில் ரெடி!

ஆனா ராத்திரி எட்டு மணி. நம்ம நிருபரை அனுப்பி பேட்டி எடுக்கவும் அவகாசம் இல்லை. ஆகவே ஃபோன்லயே ஒரு பேட்டியை போட்டுருவோம்னு சந்தியாவோட செல்லுக்கு கால் பண்ணேன். எடுத்தார் சந்தியா. ‘‘ஒரு அவசர பேட்டி. கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல்..இதுபத்தி பேசலாமா?’’ன்னேன்.

என்னடாது..எல்..வி.. நாயகிகிட்ட எல்.கே.ஜி.ரேஞ்சுல

கேக்கறாரேன்னு நினைச்சுகளுக்னு சிரிச்ச சந்தியா ‘‘ஓகே சார்..கேளுங்க!’’ன்னார். பத்தே நிமிஷத்துலகணக்குமுடிஞ்சது. சந்தியாவுக்கோ த்ரில் தாங்கலை. ‘‘சார்..வித்தியாசமா

எதையோ கேக்கறீங்க. ஓகே. லேட்டஸ்ட்டா ஃபோட்டோசெஷன் பண்ணேன். அதுல எனக்கு ரொம்ப புடிச்ச ஒரு ஃபோட்டோ இருக்கு. அதை போடமுடியுமா ப்ளீஸ்!’’னுச்சு

பொண்ணு.

படம் நழுவி ஸ்கேனர்ல விழுந்து..அதுவும் நழுவி தாள்ல

அச்சேறின கதையாடபுள் குஷியாச்சு. உடனே நம்ம ஆபீஸ் பையன் சுரேஷை அனுப்பினேன். ‘பாயும்புலியா போன சுரேஷ்..ஃபோட்டோவை வாங்கிட்டு கூண்டுக்கிளியா

திரும்பிவந்தான். செம்பருத்திப்பூவை செருகிவெச்ச வெள்ளைத்தொப்பியும்..வெனிலா ஐஸ்க்ரீமா உருகி வழியற சிரிப்புமா சந்தியாவோட அழகான ஃபோட்டோ அது!

பிறகென்ன? ‘தேவதையின் பினாமி..இளசுகள் மனசை சூறையாடற சுனாமின்னு ஓப்பனிங் வெச்சு..‘சந்தியாவும்..சில கணக்குகளும்ங்கற டைட்டிலோட ரெண்டுபக்க மேட்டரை அனுப்பிச்சாச்சு. இஷ்யூ முடிச்சுட்டு உஷ்ஷுனு உக்காந்தேன்.

கொலைப்பசி. ஒரு பழத்தை சாப்பிட்டுகிட்டிருந்தேன்.

அப்போ பலத்த சந்தேகத்தோட கேபினுக்குள்ள வந்த சுரேஷ்..சந்தியா ஃபோட்டோவையே சந்தேகமா பாத்துகிட்டிருந்தான். ‘‘சார்..என்னால நம்பவே முடியல சார். இந்த சந்தியா

ஃபோட்டோலதான் அழகா இருக்கு. நேர்ல ரொம்ப ஏஜ்டா தெரியுது சார்‘‘னான்.

‘‘சேச்சே..சின்னப்பொண்ணுப்பா அவங்க’’ன்னேன். ‘‘உங்களுக்கு தெரியாதா சார்? எல்லாமே மேக்கப்தானே? அன்னிக்கு த்ரிஷாவ பாத்தேன். படத்துலதான் ஷோக்கா இருக்கு. நேர்ல சுதும்புக்கருவாடு மாதிரில்ல இருக்கு’’ன்னு அவனோட பாணியில போணி பண்ணான். அமைதியா இருந்தேன். அவனோ அப்பிராணியா மூஞ்சியை வெச்சுகிட்டுசந்தேகப்பிராணியாவிடாம கேட்டான்..‘‘சார்! சந்தியாவுக்கு முப்பது வயசு இருக்கும்ல சார்?’’னான்.

இப்போ எனக்கே டவுட் வந்துடுச்சு. உஷாராகி சந்தியாவுக்கே

ஃபோன் அடிச்சு விசாரிச்சேன். நடந்தது இதுதான். சுரேஷ் ஃபோட்டோ வாங்க சந்தியா வீட்டுக்கு போயிருக்கான். ‘காதல்ஹீரோயினை நேர்ல பாக்கற த்ரில்லோட காலிங்பெல்லை அடிச்சுருக்கான். கதவு திறந்தது. ‘‘உள்ளே வாங்க’’ன்னுசந்தியாகூப்பிட்டிருக்காங்க.

அப்போ அவங்க செல்ஃபோன் அடிச்சுருக்கு.

எடுத்துப்பேசினவங்க ‘‘யெஸ்..சந்தியாதான் பேசறேன். என்ன

விஷயம்?’’னு கேட்டுருக்காங்க. பேசிகிட்டே நம்ம பையன் கையில ஃபோட்டோவை

குடுத்து அனுப்பிச்சுட்டாங்க. இந்த இடத்துலேர்ந்துதான் குழப்பம் கூடுவிட்டு கூடு

பாஞ்சுருக்கு. பையன் கண்ணால கண்டது சந்தியாவோட அம்மாவை! ‘‘யெஸ்..சந்தியாதான் பேசறேன்’’னு காதால கேட்டதும் சந்தியா அம்மாவோட குரலைத்தான். இதுல என்ன ப்யூட்டின்னா..ப்யூட்டிஷியனான மம்மி அச்சுஅசல் சந்தியா மாதிரியே இருப்பாங்க!

மம்மி ஏன் சந்தியாவுக்கு டப்பிங் பேசுனாங்கன்னா..உப்புமாவை

சாப்பிட்ட கையோட உப்புமா கம்பெனியில வந்து உக்கார்ர சிலபுருடாயூஸர்கள்..

‘‘சந்தியாவோட கால்ஷீட் வேணும்’’னுடுபாக்கோவை மென்னுகிட்டேடுபாக்கூர்

விடுவாங்க. இந்தமாதிரிகிருமிகள்ஃபேன்ஸி நம்பர்லேர்ந்து ஃபோன் பண்றதால..அவங்கரியலா..ரீலான்னு பாத்து உறுமிவைப்பாங்க சந்தியாவோட மம்மி!

இப்படி சந்தியாமம்மிஅடிச்சஃபோன் கும்மியை பாத்துதான்

நம்ம சுரேஷ்இடமாறு தோற்றப்பிழையாலவிம்மிவெடிச்சுருக்கான்!

பின்விளைவு..முன்விளைவு!

Wednesday, June 10, 2009


சிங்கம் கெட்டா குகை..பத்திரிகையை விட்டா சினிமா!’..இது நம்ம புதுமொழி! ‘பத்திரிகையாளர் டைரக்டராகிறார்ங்கற அடையாளத்தோடகலைச்சேவை ஆற்றலாம்னு காரசேவை தின்னுகிட்டே முடிவு பண்ணேன். விடிவு வந்துச்சு.

ஜல்லிக்கட்டு பத்தி இதுவரை வராத நுட்பமான விஷயங்களை களமாக வெச்சு கதை,திரைக்கதை.வசனம் எழுதிஉப்புமூட்டைங்கற படத்தை நான் டைரக்ட் பண்றதா பத்திரிகைகள்ல நியூஸ்லாம் கொடுத்தோம். நண்பர்கள் தோள்

கொடுக்க..தயாரிப்பாளர் ஹரி கைகொடுக்க..பிரமாண்டமான ஜல்லிக்கட்டுக்கான வேலைகளும் ரெடி. காளைகளும் ரெடி!

இசையமைப்பாளர் உதயா நீதிதேவனின் இசையில் அஞ்சு

பாடல்களுக்கான ட்யூன் கம்போஸிங்கும் முடிஞ்சது. ஆர்ட்டிஸ்ட்டுகளை புக் பண்ற நேரத்துலதான்ஹார்ட் அட்டாக் மாதிரி வந்ததுஜல்லிக்கட்டுக்கு தடைங்கற செய்தி.

பாய்ச்சலுக்கு தயாரா இருந்த காளைகளுக்கு காய்ச்சல் வந்த மாதிரி நாங்க துவண்டு

போனோம்.

தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளோட ஜல்லிக்கட்டை

நடத்திக்கலாம்னு மறுதீர்ப்பு வந்து மாடுகளோட சேர்த்து எங்க வயித்துலயும்பாலை

வார்த்துச்சு. ‘ம்மான்னு மறுபடியும் வேலைகளை தொடங்கினோம். ‘சிக்கன் சாப்ஸ்லேர்ந்து தப்பிச்ச கோழியை தந்தூரியில வெச்சு தாளிச்சமாதிரி கோர்ட் தீர்ப்பு சாதகமா

வந்தாலும்..பிராணிகள் நல வாரியம் அருவாளை ஓங்கிகிட்டு நின்னுச்சு.

காளைக்கு வால் இருக்கலாம். ஆனா அது வாலாட்டிச்சுன்னா நீங்கதான் காரணம் சொல்லணும்’’ங்கற ரேஞ்சுக்கு பிராணிகள் நல வாரியம் போட்ட 108 கண்டிஷன்களைப் பாத்தா..‘ஜல்லிக்கட்டை விடுங்க..மாடுகளோட மௌனப்பேரணியைக்கூட படம் பிடிக்கமுடியாது. விட்டா..இனவிருத்தி செய்ற காளையைக்கூடபாலியல்

வன்முறைன்னு புடிச்சு கொட்டடிக்கு கொண்டுபோயிருவாங்க போல!

முதல் போடற தயாரிப்பாளர் ஒருபுறமும், முதல் படம் இயக்கற நான் மறுபுறமும்பலியாடுகள் மாதிரி ஃபீல் பண்ற காட்சியைப்பாத்தா..அந்த

பொலிகாளைகளே கூட கண்ணீர் விட்டுரும். ஆகவே மக்கா..இப்போ வேறொரு பக்கா ஸ்க்ரிப்ட் ரெடியாகிடுச்சு. ஆகவேண்டிய வேலைகளுக்கு ஆயத்தமாகறோம்.

முன்கதைச்சுருக்கம் கொஞ்சம் நீளமாயிருச்சு. சொல்லவந்த

காமெடி வேற! இந்த ஜல்லிக்கட்டுக்காக எக்கச்சக்க பிராணிகளையும், கெக்கெக்கே கேரக்டர்களையும் சந்திச்சேன். அப்போ அறிமுகமானவரு அம்மாசி!

சிங்கம்புணரி ஜல்லிக்கட்டுன்னா சிங்கம்கூட மிரளும்!

அப்பேர்ப்பட்ட ஜல்லிக்கட்டு அன்னிக்கு நடந்துகிட்டிருக்கு. ‘பெத்த பேரு எடுத்த மாடுபுடி வீரர்கள்லாம் கெத்தா களத்துல நிக்க..‘செத்த எலி கணக்கா அம்மாசியும் அங்க நிக்கறாரு. சுத்திநின்னு வேடிக்கை பாக்கற சுத்துப்பட்டு ஜனங்களுக்கு ஒரே ஆச்சரியம்!

மண்ணெண்ணெய் குடோன்ல வௌக்கெண்ணெய்க்கு என்ன வேலை?’னு தன்ன எகத்தாளமா பாக்கற ஜனங்களை அம்மாசி அசால்ட்டா

பாத்தாலும்..அடிமனசு நடுங்கறது அவருக்கு மட்டும்தான் தெரியும். அம்மாசி லவ்ஸ் விட்ட முறைப்பொண்ணு அடாவடி ஆளு. ‘கட்டுனா ஒரு வீரனைத்தான் கடிக்குவேன். முடிஞ்சா இந்தாட்டி நடக்கற ஜல்லிக்கட்டுல ஒரு காளையை தொட்டுட்டு வா..கட்டிக்கறேன்னு

கறாரா சொல்லிருச்சு.

பாசமா தாலிக்கயிற கட்டலாம்னு பாத்தா..இப்புடி பாசக்கயிற வீசிட்டாளேனு பதறுன அம்மாசிக்குள்ளயும் ஒரு சூரப்புலி துள்ளிகிட்டு

எந்திரிக்க..விளைவு? இதோ ஜல்லிக்கட்டு! தடுப்புக்கயித்துக்கு பக்கத்துல காதலி ஆவலா

பாக்க..வாடிவாசல்கிட்ட நின்னுகிட்டு வீரன்மாதிரி பாவ்லா காட்டறாரு அம்மாசி.

ஆனாலும் பாஞ்சு வர்ற காளையோட வாலைக்கூட

தொடமுடியல. ‘சரி..கொஞ்சம் தள்ளிப்போயி சமாளிச்சிரலாம்னு அம்மாசி நகர..அந்தநேரம் பாத்து காளை ஒண்ணு பாஞ்சுவர..‘ஐயையோனு அம்மாசி காதலி அரண்டு பாக்க..‘ஏதோ ஒரு வெறியில தாவி பலங்கொண்ட மட்டும் காளையோட திமிலை இறுக்கிப்

பிடிச்சுகிட்டாரு அம்மாசி!

கொஞ்சதூரம் பாய்ச்சல் நடக்குது. அது ரொம்ப ரோஷக்கார மாடுபோல! உடம்பை ஒரு உலுக்கு உலுக்க..ஒட்டடை மதிரி கீழேவிழுந்தாரு அம்மாசி. ஒரு

யு டர்ன் அடிச்சுயூ ராஸ்கல்னு முறைச்ச மாடு தலையைக் குனிய (வெக்கத்துல இல்ல!)..

கொலைநடுங்கின அம்மாசி குப்புறத்திரும்ப..அந்தோ! சிந்தாம சிதறாம அவரோடபின்புறத்துல காளையோட கொம்புசதக்னு பாய்ஞ்சது!

அம்மானு அலறுனா அம்மாடு மறுபடியும் குத்துமோனு

பயந்து..அடித்தொண்டையிலேயே அழுதாரு அம்மாசி. அப்போஆசனவாயில வழிஞ்ச ரத்தத்தை வெச்சு யோசன பண்ணி சூப்பரா ஒரு வழியை கண்டுபிடிச்சாரு. உடனே..

போட்டிருந்த பனியனை கழட்டி தேவையான சைஸுக்கு கிழிச்சுசேதாரமாகி ரத்தம் சிந்தற ஆதாரத்துல வெச்சு அடைச்சுகிட்டாரு.

அதுவரைக்கும் வழிஞ்ச ரத்தத்தை வழிச்சு அடிவயித்துல தடவிகிட்டாரு. தட்டுத்தடுமாறி காதலிகிட்ட வந்துஎப்பூடிங்கற மாதிரி லுக் விடறாரு. ஊத்துன வேர்வைல வழிஞ்ச ரத்தம் இடுப்புக்கு பரவி அம்மாசிக்கே தெரியாம..அவரோடதொப்புளுக்கு கீழேழேழேயும் வழியுது. இதைமட்டுமே பாத்த காதலிமாமோய்..ஒடனே ஆஸ்பத்திரிக்கு போயிரு கூவ..அதீத குஷியாலும், அதிக கசிவாலும் அம்மாசி அங்கனயே மயங்கிவிழுந்துட்டாரு.

அப்புறம்? அசலூரு ஆஸ்பத்திரிக்கு வந்துபின்விளைவு தெரியாம சிகிச்சை எடுத்தும்கூட..அந்த காதலி அம்மாசி கையில சிக்கலை. ஏஏஏன்? அங்கதான் இந்த விதிரிவர்ஸ்ல விளையாடிச்சு! ‘ஆசனப்பகுதி ரத்தத்தை எடுத்து அடிவயித்துல பூசிகிட்டு

காதலியை பாத்தார்ல! அப்போ சுத்திநின்ன சொந்தபந்தம் அவரோடஅலங்கோலத்தை

பாத்துட்டு ‘‘ஐயையோ..மாடு முட்டுனதுல அம்மாசியோடடங்குவாரு

அந்துபோச்சுங்கோ!’’னு 18பட்டிக்கும் வாயாலேயேக்ரூப் மெசேஜ் அனுப்பிருச்சு!

வம்ச விருத்தியை நினைச்சு வருத்தப்பட்ட அந்த காதலி..

அம்மாசிக்கு ஆயின்மென்ட் குடுத்துட்டு அம்சமா வேறொரு மாப்பிள்ளையை கல்யாணம் கட்டிக்கிச்சு! ‘‘‘பின்னால வந்த ரத்தத்தாலமுன்னால புண்ணானபொய்க்கதையை

வெளிய சொன்னா வெக்கக்கேடு!’’னு சொல்லி.. தன்னோட அஞ்சுவயசு மகனுக்கு பஞ்சுமுட்டாய் வாங்கிக்குடுத்துகிட்டே சிரிச்சாரு அம்மாசி!

 
சுடச்சுட - by Templates para novo blogger