ஒரே ஒரு ஊர்ல ரெண்டே ரெண்டு பேரு!

Monday, August 9, 2010

எம்.பி. உதயசூரியன்

அக்கம்பக்கம் யாருமில்லை. பேச்சுத்துணைக்கு ஆளுமில்லை. சுத்துப்பட்டு 3 கி.மீ. தூரத்திற்கு
மனித நடமாட்டமே இல்லை. அப்படிப்பட்ட ஒரு அத்துவான ஊரில் ஒத்தை வீட்டில்
இருந்தபடி வாழ்க்கையின் கடைசிநாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார்கள் ஒரு வயோதிகத் தம்பதி.வழியும் கண்ணீரும் வறண்டு போகுமளவிற்கு, ஆறாத காயமும் தீராத வலியும் கொண்ட அந்தப் பெருசுகளின் கதையை கமுக்கமாக வைத்திருக்கிறது கரிசல்குளம் கிராமம்.திருநெல்வேலி டூ மதுரை நெடுஞ்சாலையில் அரைமணிநேரம் பயணித்தால் எதிர்ப்படும் பஸ் ஸ்டாப் கங்கைகொண்டான். இங்கிருந்து ’பொசுக்’கெனக் கோபித்துக்கொண்டு இடதுபுறமாகப் பிரிகிறது ஒரு தார்ச்சாலை. போக வர யாருமில்லாமல், போக்குவரத்து ஏதுமில்லாமல் இருக்கும் சோகப்பாதை இது என்பதற்கு நடுரோட்டில் முளைத்துப் படர்ந்திருக்கும் முள்செடிகளே சாட்சி. ஓங்கி வளர்ந்த பனைமரங்களின் ஓலமும், தாங்கிவந்த சோகத்தைச் சொல்ல வார்த்தையின்றி காதோரம் விசும்புகிற காற்றுமாக கனமான துக்கத்தை வழிநெடுக அனுஷ்டிப்பது போலிருக்கும் அந்த கறுப்புச்சாலையில் சில கி.மீ. தூரம் சென்றால்...
‘கரிசல்குளம் சாலை’ என்று ஒரு போர்டு வலதுபுறம் நம்மை வழியனுப்புகிறது.

இன்னமும் புத்தம்புதுசாகவே இருக்கும் அந்த ரோடு ‘திடுக்’கென ஓரிடத்தில் முடிந்து விடுகிறது. சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து நிற்க, அதனுள்ளே... சிதைந்த வீடுகள் புதைந்து கிடக்க, இடிந்து சரிந்த பீடமும், எரிந்து கருகிய உத்திரங்களும் ‘அன்று நடந்த பெருங்கலவரத்தின் மிச்சம் மீதி இதுதான்’ என்ற பீதியைத் தந்தன. ஒருகாலத்தில் நாள்முச்சூடும் தண்ணீர் சேந்திய ஊர் முச்சந்தியில் இருக்கும் கிணறு இன்று சீந்துவாரின்றி பாசிபடிந்து கிடந்தது. தெருவுக்குள் போகும் பாதையை மறித்துக் கிடந்தது முள்வேலி. அதைக் கடந்து உள்ளே நடந்து போனால்...நடுவே தெரு, இருபுறமும் காரைவீடுகள் என பாழடைந்து காணப்பட்டன. ஓரிடத்தில் சின்ன சின்ன பொம்மைகள், தட்டுகள் சிதறிப் போய் கிடந்தன. அல்லு சில்லுகள் ஓடி விளையாடிய அந்த இடமெல்லாம் இப்போது முள்ளு முளைத்து
விட்டது. மர்மமாக நின்றிருந்தன நாலைந்து மின்கம்பங்கள்.
காதுகளைக் கிழிக்கிற காற்றும்,பனையோலைகளின் சலசலப்பும், பலவித பூச்சிகளின் சப்தமும் அமானுஷ்ய உணர்வை ஏற்படுத்த...உடன்வந்த புகைப்படக்காரர் கலீல் ஒருகட்டத்தில் ‘இங்க மனுஷங்க இருக்குறதுக்கான அறிகுறியே இல்லையே’ என்றார் லேசான பயத்துடன். நமக்கும் அதே சந்தேகம் வர ’’அய்யா...அய்யா’ என்று குரல் கொடுத்தோம். ம்ஹும். நிசப்தம். தெருவின் கடைசிமுனையில் ஒரு மெச்சுவீடு மட்டும் சமீபத்திய வெள்ளையடிப்பால் ‘பளிச்’சென்று தெரிந்தது. அங்கு சென்று மீண்டும் குரல் கொடுக்க...பதிலுக்கு ’’ஆருய்யா?’’என்று மெல்லிசான குரல் கேட்டது. ‘சட்’டென அந்த நொடியில் நமக்குள் ஒரு
சிலிர்ப்பு. உடனே வீட்டின் முன்புறம் போனோம். அங்கே...இற்றுப்போன கயிற்றுக் கட்டில் மீது வெற்றுடம்போடு ஒரு வயசாளி மனுஷன் உட்கார்ந்திருந்தார். ’’வாங்கய்யா, ஆளரவமில்லாத ஊர்ல இருக்கற இந்த அனாதைகளைப் பாக்க வந்துருக்கீகளே’’என்று வாயார வரவேற்றார். நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு, கையோடு கொண்டுபோயிருந்த பழங்களைத் தந்தோம். சந்தோஷமாக வாங்கியவர்,‘’எம்பேரு ராமசுப்பு. வயசு 90 ஆச்சு. என் வீட்டாளு பேரு கருப்பாயி. அதுக்கு வயசு 70. காலம் போன கடைசியில ‘ஒனக்கு நான் எனக்கு நீ’னு ரெட்டை உசுரா வாழ்ந்துகிட்டிருக்கோம். என்ன...இந்த இளைப்புதான் தீரலை’’- சொல்லிவிட்டு ‘ம்க்ர்ம்’ என்று இருமிச் செருமியபடி ‘’அதாச்சு பதினாலு வருஷம்’’ என ஆரம்பித்தார்...

”1995ம் வருஷம் வரை சண்டை சச்சரவு இல்லாம ஒத்துமையா இருந்த ஊருய்யா இது. கீழத்தெருவுல நாங்களும், மேலத்தெருவுல அவங்களும் இருந்தோம். மொத்தம் நூத்தம்பது குடும்பம். எல்லாருக்கும் வெவசாயம்தான் பொழப்பு. காடுகரையில பொழுதுக்கும் பாடுபட்டாதான் சோறு. நிலைமை இப்படியிருக்க எங்க சாதிப் பொண்ணை, மேலத்தெருவுக்கார வேற சாதிப் பையன் காதல்கல்யாணம் பண்ணிகிட்டான்.
இனம் இனத்தோட, ஜனம் ஜனத்தோட இருந்தாத்தான மரியாதை. அதை இந்த ஜோடி கெடுத்துருச்சு.இதனால ரெண்டு சைடுக்கும் உள்மனசுல புகைச்சல். 96ல் அசலூர்ல இருந்து வந்த ஒரு வெட்டிப்பய ஊதிவிட, வந்தது வெனை. மூணு தலக்கட்டா தாயிபுள்ளைகளா வாழ்ந்தவங்களுக்குள்ள சாதிச்சண்டை உண்டாகி வெட்டிகிட்டாங்க. எங்க பய ஒருத்தனோட தலையை துண்டாக்கிட்டாங்க அவங்க ஆளுங்க. பழிக்குப் பழியா எங்க பசங்களும் வெறி கொண்டு கெளம்ப...வெட்டு, குத்து, வீடுகளுக்கு தீவைப்புனு ரெண்டு தரப்புலயும் பயங்கர கலவரம், ஏகப்பட்ட சேதாரம். ஒண்ணுமண்ணா இருந்தவங்க ஒருத்தரை ஒருத்தர் கொன்னாதான் ஆச்சுன்னு நின்னாங்க. பத்து வெரலுக்குள்ள சண்டை வந்து ரெண்டு
கையும் நாசமா போனமாதிரி போச்சுய்யா இந்த ஊரு...’’- மனசில் மறைந்து கிடக்கும்
துயரம் பெரியவரின் பேச்சில் உறைந்து நிற்கிறது.


அப்புறம்? “இனி இந்த ஊருல காலந்தள்ள முடியாதுன்னு ரெண்டு தெருவுக்காரங்களும் ஊரைவிட்டே காலி பண்ணிப் போயிட்டாங்க. உசுருக்குப் பயந்து எம் பசங்க என்னையும், என் வீட்டாளையும் (மனைவி) பக்கத்து ஊருக்கு இழுத்துட்டுப் போனாங்க. போன மறுநாளே என் வீட்டாளை அந்த ஊரானுங்க ‘வந்தேறிக’ன்னு ஏசிப்புட்டானுக. வந்ததே கோவம். “சொந்த ஊரைவிட்டுப் போனதுக்கு இந்த அவமானம் தேவைதான்’னு நாங்க ரெண்டு பேரும் ஆனது ஆகட்டும்னு இங்கியே வந்துட்டோம். ரெண்டு தரப்புலயும் ரத்தவெறி அடங்காத நேரம் அப்போ.
யார் உசுருக்கும் உத்தரவாதம் கெடயாது. எம் மகனும், மகளும் வந்து எம்புட்டோ கெஞ்சி கூப்புட்டுப் பாத்தாங்க. நகரமாட்டேன்னுட்டோம். இன்ஸ்பெக்டர், பிரசிடெண்ட்லாம் வந்து ‘’உனக்கு ஏதாச்சும் ஒண்ணுன்னா நாங்கதான பதில் சொல்லணும், கெளம்புங்க’ன்னாங்க. “பொறந்து வளர்ந்த ஊரை விட்டுப் போறதுன்னா செத்த பெறகுதான் போவோம். உசுரோட இருக்கறப்போ எப்படிப் போகமுடியும் எசமான்?’னு கிடுக்கிப்பிடி போட்டேன். ’பொல்லாத
கெழவருப்பா’னு என் வைராக்கியத்தை பாராட்டிட்டுப் போயிட்டாங்க” - தனது நரைத்த
முறுக்கு மீசையை திருகிவிட்டு இருமியபடி சிரித்தவர், ‘’ஆனா எனக்கு சரிசமானமான தெகிரியசாலி என் வீட்டாளு. ‘உன் உசுருக்கு நான் ஜவாப்தாரி’ன்னு சொன்னதுக்கு, ‘எமனே வந்தாலும் என்னைத் தாண்டிதான் உன்னைத் தொடமுடியும்யா’னு நின்னவ அவ!” என்று பெருமிதப்பட்டார். தற்காப்புக்காக அப்போது வைத்துப் பழகிய அருவாள், இப்போதும் பழக்கதோஷத்தில் பெரியவரின் கட்டிலின் கீழேயே கிடக்கிறது.

”ஆமா, அம்மா எங்கேய்யா?” என்றோம். உடனே கட்டிலிலிருந்து இறங்கி, வீட்டு வாசலைத் தாண்டி நின்று, எதிரே கூப்பிடு தூரத்திலிருக்கும் தோட்டத்தை நோக்கி “எலே கருப்பி’என்று குரல் கொடுத்தார். “தோ வாரேன் மாமோய்’’ என்று பதில் குரல் கேட்டதுமே, பெரியவர் “எங்கன இருந்தாலும் என் சத்தம் கேக்கற தூரத்திலேயேதான் இருப்பா. இந்த இளைப்பு வந்து நாந்தான் தளர்ந்துட்டேன். அவ இன்னும் சுறுசுறுப்புல கொமரிகணக்கா இருப்பா” என்று பூரித்துச் சிரித்தார். அடுத்த சிலநிமிடங்களில் ஓட்டமும் நடையுமாக வந்து சேர்ந்தார் கருப்பாயி. வறுமைக்கோலத்திலும் உழைப்பின் சின்னமாகத் தெரிந்தார். “கண்டுக்க ஆளில்லாத
எங்களை கண்காணா தூரத்திலிருந்து பாக்க வந்துருக்கீகளே ராசா” என்று வாஞ்சையாகப் பேசினார்.

பையிலிருந்த ரேசன் அரிசியைக் காட்டி “இன்னிக்கு கஞ்சிக்கு இதுதான் ராசா. ஒரு டம்ளர் அரிசி, கொஞ்சம் பருப்பு போட்டா சோறு, கொளம்பு ரெடி. ஆனா இவருக்கு மட்டும் டெய்லி ஒரு பீடிக்கட்டு வேணும். அதான் இவருக்கு பிரியமானது” என்று அக்கறையாகக் கணவரைப் பார்க்கிறார். “சரி, நீங்களாவது சொல்லுங்க, இப்படி தன்னந்தனியா வாழறதுக்கு பயம் வரலையா, வருத்தமா இல்லையா?” என்றோம். கூர்மையாக நம்மைப் பார்த்தபடி கருப்பாயி சொன்னார்...”சத்தியமா சொல்றேன் ராசா, சுத்தமா பயங் கெடையாது. கொஞ்சங்கூட
வருத்தமும் இல்ல. மனுஷங்களோட இருந்தாத்தான இந்த ரெண்டு இம்சைகளுக்கும் ஆளாகித் தொலையணும். இப்ப அது இல்ல. எங்களுக்கு ராவு, பகல் கெடையாது.மழை, வெயில் கெடையாது. ஒனக்கு நான், எனக்கு நீன்னு காலத்தைக் கழிக்கிறோம். ஒரு பால்மாடு இருக்கு. அதோட பாலை வித்து எங்க ஜீவனம் நடக்குது. பாழடைஞ்ச கெணத்துல இருக்கற பாசித்தண்ணியத்தான் காச்சி குடிக்கறோம். மகராசன் புண்ணியத்துல கரண்ட்டு இருக்கு.
சொந்த பந்தம், மனுஷ மக்க, ஆடு மாடுகன்னு நெறஞ்ச வாழ்வு வாழ்ந்தோம். ஆரு கண்ணு பட்டுச்சோ ஊரு செதறிப்போச்சு. நாங்களும் இப்பிடி அனாதியாகிப் போனோம். ஆனாலும் அதோ எங்க கொலசாமி முருகன் அருளால ஒரு கொறையும் இல்லை. கரிசல்குளத்து ராசா ராணி மாதிரி வாழறோம் சாமி” - ’பாமர ஞானி’ போலப் பேசுகிறார் கருப்பாயி அம்மாள்.
இவர்களது வீட்டுக்குப் பக்கத்திலேயே சின்னதாக ஒரு முருகன் கோயில். இதைமுன்னின்று கட்டியவர் பெரியவர் ராமசுப்புதான். ஒவ்வொரு வைகாசி மாதமும் இங்கு சாமி கும்பிடு நடக்கும்.

நேரம் செல்லச்செல்ல அந்த வெறுமையான சூழல் நம் மனதை என்னவோ செய்கிறது. ‘இந்தச் சூழலில் இவர்களுக்கு எப்படித்தான் கழிகிறது பொழுது?’. தம்பதியிடம் கேட்டோம். ”அதை ஏன் ராசா கேக்கறீங்க?” என்று கருப்பாயி அம்மாள் வெட்கப்பட, “அப்பிடிக் கேளுய்யா என் சிங்கக்குட்டி. இப்ப நாங்க வாழறது மறுவாழ்க்கை. வயசுப்புள்ளைக மாதிரி சந்தோஷமா வாழறோம். எங்க எளவயசுக் கதைகளை பேசிப்பேசி தீர்க்கறோம். இந்த பதினாலு வருஷமா ஒருத்தர் பேச்சை ஒருத்தர் மீறினதில்ல. அப்பிடின்னா பாத்துக்கங்களேன்” - ராமசுப்பு கண்சிமிட்டி சொல்ல, குறுக்கிட்ட கருப்பாயி “ஆமா, இவுகளுக்கு இப்பதான்
பதினாறு வயசுன்னு நெனப்பு” என்று கேலி செய்ய...நம்மோடு சேர்ந்து இருவருக்கும் வெடித்த பெருஞ்சிரிப்பை ரசித்து விசிலடித்தது, நெடுங்காலமாக விசும்பிக் கொண்டிருந்த கரிசல்குளத்துக் காற்று!

படங்கள்: எம். கலீல் ரஹ்மான்
நன்றி: புதிய தலைமுறை

’சர்வரோக நிவாரணி’ சுஜாதா

Thursday, August 5, 2010
நேசிக்கத் தெரிஞ்சவனுக்கு..காதலி. வாசிக்கத் தெரிஞ்சவனுக்கு..சுஜாதா! தன் எழுத்தையே விற்கமுடியாத படைப்பாளர்கள் நடுவில..தமிழின் தவிர்க்கமுடியாத தனி சகாப்தம்..எழுத்தாளர் சுஜாதா!

சுஜாதாவை பத்தி ‘கேப்ஸ்யூல்’ வார்த்தைல சொல்றதுன்னா..ராட்சஸன்! ஆகாயம் முதல் பாதாளம்வரை அத்தனை சப்ஜெக்ட்டுகள்லயும் விசுவரூபம் எடுத்து நின்னு விசும்பவெச்ச குசும்பன்! இதுக்குமேல பாராட்டுனா ‘போதும் ஜல்லியடிச்சது’னு சொல்லி சுஜாதாவே சிரிப்பாரு.
இந்த எழுத்துலகப் பிதாமகனை நான் சந்திச்ச சம்பவம் ஒவ்வொண்ணையும் சதா நினைச்சுப்பாத்து எனர்ஜி ஏத்திக்கறேன் ஜி! ‘ஆனந்த விகடன்’ல நான் இருந்தப்போ அடிக்கடி பேசியிருக்கேன். அந்த அறிமுகத்துல சுஜாதாவை நேர்ல சந்திக்கணும்னு ஆசைப்பட்டேன். ஃபோன் பண்ணேன். பேர் சொன்னேன்.

சுஜாதா ரொம்ப ரசனையான ஆசாமி!(அவர் ஸ்டைல்!) அற்பமானது..நுட்பமானதுனு பேதமில்லாம கவனிச்சு ரசிப்பார். ‘‘எம்.பி உதயசூரியனா! பேர் நல்லாருக்கே! காலைல பீச்சுக்கு வர்றீங்களா..ஈவ்னிங் வீட்டுக்கு வர்றீங்களா?’’னு மெல்லிசான குரல்ல கேட்டார். ‘‘பீச்சுக்கு வர்றேன் சார்’’னேன். அன்னிக்கு ராத்திரி என் தூக்கத்தை கெடுத்தது வேறெந்த கவர்ச்சிக்கன்னியும் கெடயாது..சத்தியமா சுஜாதாதான்!

பொழுது விடிஞ்சது. ‘காந்தி’ காத்து வாங்கற கடற்கரை. காத்திருந்தேன். ‘தேவன் வந்தார்’. இங்கிட்டும் அங்கிட்டும் நடக்கறவங்க விஷ் பண்ணிகிட்டே கடக்க..மையமா சிரிச்சுகிட்டே சுஜாதா ‘பைய்ய’ நடந்தாரு. பக்கத்துல போய் ‘‘வணக்கம் சார்’’னேன். ஒருநொடி என்னை உன்னிப்பா ‘ஸ்கேன்’ பண்ணிட்டு ‘‘வாங்க உதயசூரியன்’’னு அசால்ட்டா சொல்ல..என் நடுமுதுகு ‘திடுக்‘னுச்சு.

அதுக்கு முன்ன சுஜாதா என்னை முன்ன பின்ன (‘சிவாஜி’ பட காமெடியை யோசிச்சுராதீங்க!) பாத்ததில்ல! ‘‘அப்புறம் எப்டி சார் கண்டுபிடிச்சீங்க?’’ன்னு ஆச்சரியப்பட்டேன். அலட்டிக்காம சுஜாதா சொன்னாரு..‘‘பீச்ல என்னை பெரும்பாலும் பாக்கறவங்க ‘நீங்க சுஜாதாதானே‘ன்னு கேப்பாங்க. சிறும்பாலும் பாக்கறவங்க ‘யாரோ ஒரு மியூசியம் ஆசாமி’ன்னு திகிலா விலகிப்போவாங்க. இதுல ‘வணக்கம் சார்‘னு வந்தா அது நீங்களாத்தான் இருக்கணும்னு ஒரு குன்ஸா அடிச்சேன்’’னார் பாருங்க..அதான் சுஜாதா!

எழுத்துல ‘புலிப்பாய்ச்சல்’ பாயற சுஜாதா..பேசறப்போ அடிக்கற எக்கச்சக்க நக்கல்ல சிரிச்சே ‘குளிர்காய்ச்சல்’ வந்துரும். ‘குங்குமம்’ கட்டுரைத்தொடருக்காக சுஜாதாவை பலமுறை சந்திச்சேன். அன்னிக்கு செமஜாலி மூடுல இருந்தார். டேபிள்ல ‘மகாமகா தடிமனா’ ஒரு புத்தகம் இருந்துச்சு. ‘‘என்ன சார் இந்த புக் கல்லாப்பெட்டி சைஸ்ல இருக்கே’’னு கேட்டேன்.
அடுத்த நொடி..‘பம்பர் ப்ரைஸ் விழுந்தமாதிரி சர்ப்ரைஸ் ஆனேன். ஆமாங்க. அந்த கமெண்ட்டுக்கு ஒரு குழந்தையைப்போல வஞ்சனையில்லாம சிரிச்சார் சுஜாதா. எனக்கோ பெருமை தாங்கல! அதேஜோர்ல ‘‘சார்..இதை முழுசா படிச்சிட்டீங்களா?’’ன்னேன். ‘‘இப்பத்தான் பத்து பக்கம் முடிச்சிருக்கேன்’’னார். உடனே நான் ‘‘அப்போ நிச்சயம் இது ‘கல்லா‘ பெட்டிதான் சார்’’னு (‘கல்லாத‘!) சிலேடையில விளையாட..‘அட!’னு ஒரேவார்த்தையில நூறுகிலோவுக்கு பாராட்டினவர் ‘‘தமிழ் உங்களுக்கு சோறு போட்ரும்!’’னார்!

இனி சுஜாதா ரவுண்டு. பேசிகிட்டே என்னைப்பாத்தவர் ‘‘தாதுபுஷ்டி லேகியம் ஏதும் சாப்புடறீங்களா?’’ன்னார் சைலன்ட்டா. ‘‘ஐயையோ..இல்லையே சார்’’னேன்.‘‘அப்போ தாதுவை வீணடிக்கறதில்லபோல!’’னு அடுத்த பஞ்ச் வெச்சிட்டு ‘‘அதான் எப்பவும் உங்க முகத்துல ஒரு தேஜஸ் மின்னுது’’ன்னாரு கிண்டலா! கூச்சப்பட்டு சிரிச்சேன்.
‘‘இந்த கட்டுரைத்தொடரை ‘ஏன்..எதற்கு..எப்படி’மாதிரி கேள்வி பதிலா கொண்டுபோலாமா சார்?’’னேன். ‘‘வேணாம் வேணாம்! ‘ என்னை ஒரு ‘சர்வரோக நிவாரணியா‘ நினைச்சு ‘சொப்பன ஸ்கலிதம்.. விரை வீக்கம்..ஆண்மைக்குறைவு தீர என்ன வழி‘னு கேட்டே திணறடிச்சிருவாங்க! அப்புறம் அத்தனையும் எனக்கு வந்துரும்..கேள்விகளா!’’னு ‘நச்‘னு சொல்ல..சேர்ந்து சிரிச்சோம்.

‘கனவுத்தொழிற்சாலை‘யான கோலிவுட்டுக்கு சுஜாதாமேல ரொம்ப பாசம். அதிலும் ‘வித்தகன்’ பார்த்திபனுக்கு ‘விசித்திரன்’ சுஜாதான்னாலே அதீத மதிப்பு. இந்த மதிப்பு மனசளவுல இருந்தா பரவால்ல! சுஜாதாவோட இடுப்பளவுக்கு வந்து உடுப்பளவு மாறுனதுதான்..காதளவுக்கு சிரிக்கவெச்சது!
பார்த்திபனின் ‘கிறுக்கல்கள்’ கவிதைத்தொகுப்பு வெளியீட்டுவிழா. காமராஜர் அரங்கமே ‘தலை‘கட்டியிருந்துச்சு. முதல்வர் கலைஞர்,சுஜாதா,பாரதிராஜா,பாக்யராஜ்,சிவசங்கரி மேடையில இருக்காங்க. பார்த்திபன்தான் ‘புதுமைப்பித்தனாச்சே’! விடுவாரா? விழா வி.ஐ.பி.கள் அத்தனைபேருக்கும் (சிவசங்கரி தவிர!) பட்டுவேட்டி சட்டை எடுத்துத்தந்து கட்டிட்டு வரச்சொல்லியிருந்தாரு.
பாரதி.பாக்யராஜாக்களுக்கு பழக்கமானதுதான்! கட்டிகிட்டாங்க. ஆனா..பாவம் சுஜாதா! சேர்ல உக்காந்திருந்தப்போ வெவஸ்தை இல்லாத வேட்டியால ரொம்ப அவஸ்தையாதான் இருந்தாரு. பேச எந்திரிச்சப்போதான் சுஜாதா மந்திரிச்சுவிட்ட மாதிரி ஒரு தினுசா நடந்துவந்தாரு. ‘என்னடா‘ன்னு பாத்தா..‘சென்னையோட ஈஃபிள் டவர் போல..ஓங்கிவளர்ந்த பேனாவோட ரீஃபில் மாதிரி‘ இருக்கற சுஜாதாவோட இடுப்புல வேட்டி ‘இருக்கவா? நழுவவா?’னு ஊசலாடிகிட்டிருக்கு!

கடுப்பை அடக்கிகிட்டு இடுப்பை இறுக்கிகிட்டே ஒருவழியா மைக்கை பிடிச்சாரு சுஜாதா.

மத்த பேச்சாளர்களைப் போல ‘ஓசோன் ஓட்டையில விரலைவிட்டு ஆட்டறமாதிரி’ நீட்டி குரல் குடுக்காம.. ‘பி.பி.சீனிவாஸ் பி.பி.சி.நியூஸ்
வாசிக்கறமாதிரி’ நம்ம ஆசான் ஒரு ராகத்தோட..பேப்பர்ல எழுதிவெச்சிருந்ததை சூப்பரா
படிச்சிகிட்டிருக்காரு!

ஒரு கையில பேப்பரையும், மறு கையில வேட்டியையும் இறுக்கி பிடிச்சுகிட்டு லேசான திகிலோட பேசி(!)முடிச்ச சுஜாதா..ஸ்லோமோஷன்ல வந்து அவரோட இருக்கைல உக்காந்தாரு. ஸ்..அப்பாடா! வேட்டி அவுந்து விழாம..இனிதே முடிஞ்சுச்சு
விழா!

மறுநாள்..சுஜாதாவுக்கு ஃபோன் அடிச்சேன். லைன்ல வந்தது ‘லயன்’! ‘‘சார்..நேத்து எல்லாரும் விழாவ பாத்துகிட்டிருந்தாங்க. நாந்தான் உங்க வேட்டி விழாம இருக்கணும்னு வேண்டிகிட்டிருந்தேன். ரொம்ப சிரமப்பட்டுட்டீங்களே சார்’’னேன்.


சன்னமா சிரிச்சவர் மின்னலா பொளந்தார் பாருங்க..‘‘குட்!
ஷார்ப்பா கவனிச்சிருக்கீங்களே. பார்த்திபனோட விருப்பத்துக்காக வேட்டிக்கு ஓகே சொன்னேன். ஆனா..அதை இடுப்புல சுத்திகிட்டு நிறைய வி.ஐ.பி.க இருக்கற அந்த ஸ்டேஜ்ல விரைவீக்கம் வந்தவன்மாதிரி ஒரு தினுசா நான் நடந்துபோயிருக்கேன். நல்லவேளை..விழா பரபரப்புல யாரும் இதை கவனிக்கலை!’’னு அவர் சொல்லிமுடிக்க..வெடிச்சு சிரிச்சேன்.

தன்னை மட்டுமே மெச்சிக்கற சிலபல ரைட்டர்ஸ் மத்தியில..தகுதியிருக்கற படைப்பாளிகளை தன்னோட உச்சிமீது தூக்கிவெச்சு கொண்டாடின ‘ஞானத்தந்தை’ சுஜாதா! திறமையுள்ள இளம்படைப்பாளிகள்..கலிஃபோர்னியால
இருந்தாலும் சரி..கரியாம்பட்டில இருந்தாலும் சரி..அவங்க சிறந்து விளங்கறதுக்காக
தேடிப்‘‘படிச்சு‘‘ ‘பாராட்டு வெளிச்சம்’ பாய்ச்சற ‘கலங்கரை விளக்கம்’ சத்தியமா சுஜாதா மட்டுமே!சுஜாதாவுக்கு வயசு ‘என்றும் பதினாறு’தான்! ‘பேச்சுலர் வாசம்’ அடிக்கற இவர் பேச்சுல ‘அந்தக்காலத்துல’ங்கற பழைய கோந்து பிஸினஸே கிடையாது. எப்பவுமே டீன்ஏஜ் டிக்கெட்டுகளோட லாங்குவேஜ்லதான் பூந்து விளையாடுவாரு!
‘‘எப்டி சார்‘‘னு கேட்டா..‘‘அதெல்லாம் ஜீனி வேலை!’’ம்பார் இந்த ‘ஜீனியஸ்’!


இன்னொரு சந்திப்புல..ஒரு பத்திரிகைக்கு ‘பொங்கல் ஸ்பெஷல்’ கட்டுரை எழுதிகிட்டிருந்தாரு. பேச்சுவாக்குல ‘‘தமிழர்கள் அதிகமா பயன்படுத்தற வார்த்தை என்ன?’’னு கேட்டாரு. ரெண்டு மூணு சொன்னேன். உதடு பிதுக்கினவரு ‘‘தின்பொருள் விக்கறவர்லேர்ந்து மென்பொருள்காரங்க வரைக்கும் அத்தனை தமிழர்களும் அதிகமா பயன்படுத்தற வார்த்தை ‘சூப்பர்’!’’னாரு. உடனே ‘‘சூப்பர் சார்’’னேன். ‘‘பாத்தீங்களா..
படுத்தறீங்களே’’ன்னாரு ர.சுருக்கமா!

‘மோதிரக்கையால குட்டுப்பட்டது’ங்கறதை மாத்தி ‘மேதையின்
வாயால வெரிகுட்டு வாங்குனது’னு ஒரு சம்பவம் சொல்றேன். ‘குங்குமம்’ பத்திரிகைல ‘ஆ..அனுபவம்‘ங்கற தலைப்புல வெரைட்டியான அனுபவங்களை தொடரா எழுதிகிட்டிருந்தேன். அதுல ஒரு வாரம் ‘இப்படிக்கு நட்பு’னு ஒரு அனுபவம்!

ஆபீஸ்ல ஒரு மத்தியானம். திடீர்னு சிறப்பாசிரியர் ராவ் சார் கூப்பிட்டாரு. போனேன். ‘‘உங்க கட்டுரைய ரொம்ப நல்லாருக்குனு சுஜாதா
பாராட்டினாரு!’’னு சொன்னாரு. அந்த நொடியில எனக்கு உண்டான பரவசத்தை
‘குண்டலினி யோகம்’கூட தந்திருக்காது! உடனே சுஜாதாவுக்கு ஃபோன் பண்ணேன்.
எடுத்தார்.

‘‘ரொம்ப தேங்க்ஸ் சார். நீங்களே பாராட்டினது’’னு நான் நீட்டி முழக்குனதை நறுக்குன்னு கத்தரிச்சவர் ‘‘அந்த கட்டுரை ரொம்ப நீட்டா..ஸ்வீட்டா இருக்கு.
பிரமாதமான ஸ்க்ரீன்ப்ளே. போதும் பத்திரிகை உத்தியோகம். உடனே சினிமா பண்ண
கிளம்புங்க. ராவ் தடுப்பாரு. கண்டுக்காதீங்க. நாங்கள்ளாம் ‘பூட்ட கேஸு’.
ஆல் த பெஸ்ட்!’’னு சொல்லி ஃபோன் ‘டொக்’. (இதே வாழ்த்தோடு மதன் சார் பேசுனது தனி பதிவுக்கு!)‘சொர்க்கவாசல்’ திறக்கற ஸ்ரீரங்கம் ரங்கநாதனை சேவிச்சாலும்..
‘சொர்க்கம் நரகம்ங்கிறதெல்லாம் உட்டாலக்கடி’னு சொல்றவரு இந்த ரங்கராஜன். ‘‘இறந்த பிறகு சொர்க்கத்துக்கு போகணுமா..நரகத்துக்கு போகணுமானு கேட்டா..நரகத்துக்கு டிக்கெட் வாங்கத்தான் எனக்கு விருப்பம்! ஏன்னா..சொர்க்கம் போரடிக்கும். படுசுவாரஸ்யமான மனிதர்கள்லாம் நரகத்துலதான் இருப்பாங்க!’’னு ஜாலியா சொன்னவரு சுஜாதா!

எதுக்கும்..வரப்போற ‘தீபாவளி ஸ்பெஷல்’ பத்திரிகைகளை வாங்கி
ஆற அமரப் படிங்க! ‘சொர்க்கம் நரகம்’னுகூட வினோதமான கட்டுரை எழுதியிருப்பார் அமரர் சுஜாதா!

மலைச்சரிவில் நிமிரும் நம்பிக்கை

Saturday, May 29, 2010

எம்.பி. உதயசூரியன்


அந்த குக்கிராமத்தில் அவசியத்தேவையான மின்சாரம் இல்லை. அத்தியாவசியத் தேவையான
குடிநீர் இல்லை. அவசர உதவிக்கு போக்குவரத்து வசதி இல்லை. ஆபத்தில் உயிர் காக்க
ஆஸ்பத்திரி இல்லை. பொழுதுபோக்க கேபிள் டி.வி. இல்லை. தகவல் தொடர்புக்கு தொலைபேசி
இல்லை. இப்படி அடிப்படை வசதிகள் எதுவுமே 'இல்ல்ல்ல்ல்லை'. ஆனாலும் அந்த
குக்கிராமத்தில் விசுவரூபம் எடுத்து நம்மை விசும்ப வைக்கிற விஷயம் ஒன்று உண்டு...
அதன் பெயர் நம்பிக்கை! அந்தக் கிராமத்தின் பெயர் 'அமைதிச்சோலை'.

திண்டுக்கல் அருகிலுள்ள மலைப்பகுதி ஆடலூர் பன்றிமலை. காபி எஸ்டேட், எலுமிச்சை
தோட்டங்கள் என செழிப்பான பிஸினஸ் ஏரியா. இதன் அடிவாரமான கோம்பை
செக்போஸ்ட்டிலிருந்து 'மல்லாந்து கிடக்கிற கருநாகப்பாம்பு போல' வளைந்து நெளிகிற
பாதைகளில் 7 கி.மீ.தூரம் மலையேறிப் போனால்...மலைச்சரிவில் பொதிந்திருக்கிறது
‘அமைதிச்சோலை'.

'ஏதோ சினிமா ஷூட்டிங்கிற்காக் போடப்பட்ட மினி கிராமத்து செட் போல' நேர்த்தியாக
இருக்கிறது இந்த குக்கிராமம். குடிசை, ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேய்ந்த 64 சிறுவீடுகள்.
நடுநாயகமாக காளியம்மன் கோயில். அதன் முன்பு நண்டுசிண்டுகள் குஷாலாக விளையாட
விசாலமான திடல். மக்கள் தொகை ஐநூறுக்கும் குறைவு. ஆனால் இந்த மக்களின்
ஸ்டேட்டஸ் சுவாரஸ்யமானது... ‘வருஷத்துல ஆறுமாசம் நாங்க மொதலாளிக, அடுத்த
ஆறுமாசம் நாங்க தொழிலாளிக' என்று சிரிக்கிறார்கள். காரணம்-மலைச்சரிவுகளில் இந்த மக்கள்
அவரவர்களுக்கென துண்டு துண்டாக நிலம் வைத்திருக்கிறார்கள். சீஸன் காலங்களில் மட்டும்
எலுமிச்சை, மாதுளை, கொய்யா என அமோக விளைச்சல். அப்போது கையில் தாராளமாக
பணம் புழங்கும். மற்ற சமயங்களில் மலை உச்சியிலுள்ள எஸ்டேட்டுகளில் வேலைக்குப்
போய்விடுகிறார்கள்.

‘அட...இந்த லைஃப் ஸ்டைல் நல்லாருக்கே' என்று கூலாகச் சொல்பவர்கள் இம்மக்களில்
ஒரு ஆளாக வாழ்ந்து பார்த்தால்தான், மலை இடுக்கில் கசியும் நீர் போல அவர்களது
மன இடுக்கில் கசியும் கண்ணீரை உணரமுடியும்.

ஐந்து வருஷங்களுக்கு முன்புவரை ‘அமைதிச்சோலை'யில் பகலில் மட்டுமே சூரிய
வெளிச்சம் அடிக்கும். இரவானால் முரட்டு இருட்டு அப்பிக்கிடக்கும். சிம்னி. அரிக்கேன்
விளக்குகளின் தயவால்தான் இரவுகளைக் கழித்திருக்கிறார்கள். ''என்ன செய்றதுங்க?
42 வருஷங்களுக்கு முன்னால பஞ்சம் பொழைக்கிறதுக்காக செங்குறிச்சி, மலைக்கேணின்னு
தூரத்து கிராமங்கள்லேர்ந்து போன தலைமுறை இங்க வந்து குடியேறினாங்க. எங்களுக்கும்
பொழப்பு தளப்பு இங்கியேதான்னு ஆகிப்போச்சு'' என்று சின்ன சிரிப்புடன் ஆரம்பித்தார்
பால் கண்ணன். ‘அமைதிச்சோலை'யின் மூத்த குடிமகன்களில் இவரும் ஒருவர்.
''ராத்திரியானா புள்ளகுட்டிகளை வெச்சுகிட்டு நாங்க பட்ட கஷ்டம் கொஞ்சநஞ்சம்
இல்லீங்க. எப்ப சிறுத்தை வரும், காட்டெருமை வரும்னு கொலநடுக்கத்தோடவே
அரைமுழிப்பாவே இருப்போம். அஞ்சு வருஷத்துக்கு முன்னாலதான் குஜராத்துலேர்ந்து
பன்றிமலைக்கு டூரிஸ்ட் வந்தாங்க சிலபேரு. பாக்கறதுக்கு சிங்கு மாதிரி இருந்தாங்க.
கரண்ட் வெளிச்சம் இல்லாம நாங்க படற அவதியை பாத்து மனசு சங்கடப்பட்டு;
‘ஏதாவது ஏற்பாடு பண்றோம்'னு சொல்லிட்டு போனாங்க. சொன்ன வாக்கு தப்பாம
ஒரே மாசத்துல தெருவிளக்குகளோட சேர்த்து, வீட்டுக்கொரு சோலார் சிஸ்டம்னு
மொத்தம் 70 சோலார் சிஸ்டங்களை அனுப்பி வெச்சாங்க. அந்த ஊர் பேர் தெரியாத
மகராசங்களாலதான் இருண்டு கிடந்த எங்க வாழ்க்கையில வெளிச்சமே வந்தது.
அஞ்சு வருஷமாகியும் இன்னமும் இந்த சோலார் சிஸ்டம் நல்ல முறையில
உழைச்சுகிட்டிருக்கு'' என்று நெகிழ்ச்சியாகக் கூறுகிறார் பால் கண்ணன்.

அருகில்...பேரனுக்கு சோறூட்டிக் கொண்டிருந்த மூதாட்டி மரியபுஷ்பம் ‘'வெளிச்சம்
வந்த அன்னிக்கு ராத்திரி எனக்கென்னவோ மறுபடியும் சுதந்திரம் வாங்குன மாதிரி
இருந்துச்சு ராசா! விடிய விடிய ஊர்க்கதைகளைப் பேசிகிட்டு, சந்தோஷமா முழிச்சிக்
கிடந்தோம். பள்ளிக்கூடம் போற புள்ளைகள்லாம் கொண்டாட்டமா வீட்டுப்பாடங்கள
எழுதிச்சு. முன்ன இருந்த பூச்சி பொட்டு, சிறுத்தை பயமெல்லாம் இந்த வெளிச்சம்
வந்ததும் வெலகிப்போயிருச்சு'' என்று அந்த ‘வெளிச்ச இரவை' உணர்ச்சிகரமாக
விவரித்தார்.


குடிசை, ஆஸ்பெஸ்டாஸ் வீடுகள் அத்தனைக்கும் தலா ஒரு சோலார் சிஸ்டம்
பன்றிமலை ஊராட்சி மன்றம் மூலமாக பொருத்தப்பட்டுள்ளது. மாலை மயங்கி இருள்
பரவத்துவங்கியதும் சோலார் இயங்கி வெளிச்சம் பரவி, மலைச்சரிவிலுள்ள வீடுகளும்
தெருவும் 'ஒரு கிரீட்டிங் கார்டு போல' காட்சியளிப்பது அத்தனை அழகு.
இதில் ‘ஆ'ச்சரியம்...கரண்ட்டே இல்லாத வீடுகளுக்கு அரசின் இலவச கலர் டி.வி.யும்,
கேஸ் அடுப்பும் வழங்கப்பட்டுள்ளன. வாங்கிய டி.வி.கள் பெரும்பாலும் பல வீடுகளில்
தூங்கியபடியே உள்ளன. ஒரே ஒரு வீட்டில் மட்டுமே டி.டி.எச்.வசதி.

இங்கு வசிக்கிற அனைத்துக் குடும்பங்களுக்கும் ரேஷன் கார்டு உள்ளது.
340 வாக்காளர்கள் உள்ளனர். தேர்தல் தோறும் மலையேறி இங்கு வந்து ஓட்டு
கேட்பவர்கள், இவர்களது குறைகளை காதோடு கேட்டுப் போவதோடு சரி.
‘'ஒவ்வொரு முறையும் செஞ்சு தர்றோம்னு சொல்லி ஓட்டு வாங்கிட்டுப்
போயிருவாங்க. அப்புறம் அடுத்த வாட்டி வருவாங்க. ஆனாலும் என்னிக்காவது
ஒருநாள் எங்களுக்கான அடிப்படை வசதிகளை செஞ்சு தந்துருவாங்கன்னு
இன்னும் நம்பறோம்'' என்கிறார்கள் இந்த வெள்ளந்தி ஜனங்கள்.

ஓரளவு வெளிச்சம் வந்ததால் இருட்டு தொலைந்தது. அதேசமயம் குடிநீர்
பிரச்னை இம்மக்களை வாட்டி எடுக்கிறது. ஆனால் அதையும் இவர்கள் சமாளிக்கும்
விதம் அபாரம். குடிதண்ணீருக்கென ஒரே ஒரு வாட்டர் டேங்க் அமைத்துத் தந்துள்ளது
ஊராட்சி. வாரம் ஒருமுறை 500 அடிக்குக் கீழேயுள்ள போர் மூலம் இதில் குடிநீர்
நிரப்பப்படுகிறது. ‘'ரெண்டு நாளைக்குக்கூட இந்தத் தண்ணி பத்தாதுங்க. அதனால
நாங்க ஆம்பளைங்களா சேந்து 1 கி.மீ. தூரத்திலிருக்கிற மலை ஓடைக்குப் போயி
தண்ணி எடுத்துட்டு வர்றோம். கையோட குளிச்சு முடிச்சு, துணிகளையும் துவைச்சுட்டு
வந்துர்றோம். தண்ணி இல்லேன்னு கத்திக் கத்தி தொண்டை காஞ்சு போறதவிட,
எட்டத்துல இருக்கற தண்ணியை சிரமம் பாக்காம ஒருநடை போயி நம்ம கிட்டக்க
கொண்டு வந்துட்டா பிரச்னை தீந்துபோகுமில்ல'' என்று பிராக்டிக்கலாகப் பேசுகிறார்
செல்வம் என்ற இலங்கி.

ஓடை நீரால் தாகம் தீர்ந்தது. ஆனால் பஸ் வசதி இல்லாமல் 'ஓடும் பிள்ளைகளாக'
இந்த மக்கள், குறிப்பாக பள்ளி மாணவர்கள் படும் துயரம் இருக்கிறதே...சொல்லித்
தீராத சோகம் அது. முதல் வகுப்பு முதல் ப்ளஸ் டூ வரை படிக்கிற சுமார் 30 மாணவர்கள்
இங்கே உள்ளனர். ஒன்றிலிருந்து பத்தாம் வகுப்பு வரையுள்ள அரசினர் உயர்நிலைப்பள்ளி
மலைக்குக் கீழே 11 கி.மீ. தூரத்தில் தர்மத்துப்பட்டியில் உள்ளது. 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான
அரசு மேல்நிலைப்பள்ளி இருப்பதோ 17 கி.மீ. தூரத்திலுள்ள கன்னிவாடியில். மலைக்கு
மேலுள்ள ஆடலூரிலிருந்து காலையில் கிளம்புகிற மினி பஸ் 9.30 மணிக்குத்தான்
அமைதிச்சோலைக்கு வரும். அதில் ஏறிவரும் மாணவ்ர்கள் தர்மத்துப்பட்டியில் இறங்கி,
ஓட்டமும் நடையுமாக வந்து 10.30 மணியளவில்தான் பள்ளிக்குள் நுழையமுடிகிறது.
‘'நாங்க கிளாஸுக்குள்ள போறதுக்குள்ள முதல் பீரியட் முடிஞ்சுருதுண்ணே. ஆனாலும்
‘லேட் ஆனாலும் பரவால்ல...பாவம் மலையிலேர்ந்து வர்ற பசங்க''ன்னு எங்க ஸ்கூல்ல
பெர்மிஷன் தந்துருக்காங்க'' என்றான் 'அஞ்சாப்பு' படிக்கிற ராசா.

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும்தான் இந்த ‘கருணை அனுமதி'.
ஆனால் 6வது முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த அனுமதி இல்லை. ஆகவே
சரியான நேரத்திற்குள் பள்ளிக்குப் போயாக வேண்டும் என்பதால் அதிகாலையிலேயே
எழுந்து, அரக்கப் பரக்கக் கிளம்புகிறார்கள் பிள்ளைகள். விஷ ஜந்துக்கள் ஊடாடும்
மலைப்பாதையில் 6 கி.மீ. தூரம் உயிரைப் பணயம் வைத்து நடந்து அடிவாரத்திலுள்ள
கோம்பைக்கு வருகிறார்கள். அங்கிருந்து பஸ் பிடித்து கரெக்ட்டான நேரத்திற்கு ‘உள்ளேன்
ஐயா' சொல்கிறார்கள். 'அமைதிச்சோலை'யில் நாம் இருந்தபோது பள்ளி முடிந்து பஸ்ஸில்
வந்து இறங்கியது மாணவப்பட்டாளம். விசாரித்தால் ‘'ரொம்ப கஷ்டமாத்தாண்ணே இருக்கு.
ஆனா படிக்கலேன்னா பெரியாளானதும் இதவிட கஷ்டப்பட வேண்டியிருக்குமே. அதான்
ஓட்டமா ஓடிப் படிக்கறோம். நீங்க மெட்ராஸ்ல இருக்கீங்களே...அங்க கவர்மெண்ட்ல சொல்லி
ஸ்கூல் டயத்துக்குப் போற மாதிரி ஒரு பஸ் விடச்சொல்லுங்கண்ணே'' என்று கோரஸாகச்
சொன்னார்கள். படிப்பதற்காக தடைகளைக் கடந்து நடைபோடும் செருப்பில்லாத அந்த
பிஞ்சுக்கால்களின் உறுதி கண்டு சிலிர்த்தது நமக்கு.

கடைசி பஸ் அது என்பதால், உள்ளே நிற்கக்கூட இடமில்லாதபடி பெருங்கூட்டம்.
விளைவு...மக்கள் பஸ்ஸின் கூரைமீது அமர்ந்து அபாயப் பயணம் செய்வதைப் பார்க்க ‘பகீர்' என்றது
நமக்கு. கேட்டால்.... ''இதான் கடைசி பஸ். இதைவிட்டா அப்புறம் கால்கடுக்க நடந்தே போகணும்.
கரணம் தப்பினா மரணம்னு ஆகிப்போச்சு பொழப்பு'' என்று அதே விரக்தியான பதில்தான் தெறிக்கிறது.
இப்படி ஏற்ற இறக்கங்களுடன் வாழ்க்கை இருந்தாலும் ‘சலிக்காம உழைச்சு நாலுகாசு பாக்கணும்' என்கிற
துடிப்பு இங்குள்ள பெண்களிடம் அதிகம். ''இப்ப இலவம்பஞ்சு சீஸனுங்க. பஞ்சை பிரிச்சுக் குடுத்தம்னா
கிலோவுக்கு நாப்பது ரூவா கிடைக்கும். இதுல வர்ற சம்பாத்தியத்த வெச்சுதான் அடுத்த சீஸன்
வரைக்கும் வாழ்க்கையை ஓட்டணும்ங்க. அதேசமயம் புள்ளகுட்டிகளுக்குன்னு ஏதாச்சும் சேத்து
வெக்கணுமில்ல? அதான் சுய உதவிக்குழு அமைச்சோம். பயிர் பச்சைனு செழிப்பா இருக்கு மலை. ஆடு
மாடுகளை வாங்கிவிட்டா அதுபாட்டுக்கு மேயும், நமக்கும் லாபம்'' என்று சொல்கிற மகாலட்சுமி,
‘விசாலாட்சி களஞ்சியம்' என்ற மகளிர் சுய உதவிக்குழு நடத்துகிறார். குழுவின் மூலம் 2 லட்ச ரூபாய்
லோன் வாங்கி கறவை மாடு, ஆடு வளர்ப்பு என தனது குழுப் பெண்களை லாபத்தோடு கூடிய சுயதொழில்களில்
ஈடுபடுத்தியிருக்கிறார்.

வாழ்வின் ஒவ்வொரு நாளும் தடுக்கி விடுகிற தடைகள் பலப்பல இருந்தும், அதற்காக சோர்ந்து சுருண்டு போகாமல்
நிமிர்ந்து நின்று, பிரச்னைகளை எதிர்கொண்டு வாழ்வை நம்பிக்கையோடு நடத்தி அசரவைக்கிறார்கள் 'அமைதிச்சோலை'
மக்கள்.

பீரங்கிக் கோட்டையில் ஒரு பிக்னிக்

Monday, April 19, 2010எம்.பி. உதயசூரியன்

பாய்ச்சலுக்கு ஒரு பைக். பில்லியனில் நண்பன். கிழக்கு கடற்கரைச் சாலை. ஏறிக்கொண்டு சீறிக்கிளம்பினால்..மில்லிமீட்டர் குறையாத ‘மில்லியனர் சந்தோஷம்‘!
ஒகே. குதிரை வேகத்தில் கிளம்பியாச்சு. அப்போ சென்றாக வேண்டிய இடம் ‘ஆலம்பரா கோட்டை‘! கொட்டிவாக்கம் தாண்டியதுமே..வழிநெடுக காதுகளில் குஷியாக விசிலடிக்கிறது கடற்காற்று. ஏதோ ‘போருக்குப் போகிற ஆவேச வேகத்தோடு‘ ஊருக்குப் போகின்றன வாகனங்கள்.

நாம் கிளம்பியது காலை நேரமாச்சா? இதமான குளிர்காற்று வருட ..மிதமான வேகத்தில் நம்ம பைக் பாய்ந்துகொண்டிருந்தது. அப்போது ‘வ்ர்ர்ர்ரூம்‘ என்று ஹை&ஸ்பீடில் நம்மை ஓவர்டேக் செய்தது ஒரு பைக். ஜீன்ஸ் போட்ட இளைஞன் ஓட்ட..அவனை இறுக்க்க்கியபடி பீன்ஸ் சைஸில் ஒரு குமரி! ‘காதலர்கள் இறுக்கமாக தழுவிக்கொள்ளும்போது நடுவே காற்று நுழையக்கூட இடமிருக்காது‘ என்ற வள்ளுவன் ‘குரலுக்கேத்த‘ வசீகர உதாரணம்..வண்டியில் பறந்தது!‘ஹும்! மச்சம்யா!‘ என்று என் பின்னே இருந்த ‘நட்புமூட்டையிடம்‘ ஏக்கப்பெருமூச்சு விட எத்தனித்தபோது..அந்த எத்தன் விட்ட ‘ஏ(க்)கப்பட்ட அனல்மூச்சில்’ என் முதுகே பொசுங்கிப்போனது!

‘வ்ர்ர்ர்ரூம்‘...முட்டுக்காட்டில் படகுகள் அலையாடிக் கொண்டிருக்க.. துறையில் பெண்டு பிள்ளைகளும், நண்டு சிண்டுகளும் விளையாடிக்கொண்டிருந்தனர். ஓட்டிய வேகத்தில் வாட்டிய தாகத்திற்கு வழியில் ‘பச்சைப்பசேல்‘ இளநீரை குடித்தோம். அச்சுஅசல் தேனாய் ருசித்தது. அப்படியே வண்டியை ‘ஓடுறா ச்செல்ல்ல்லம்‘ என்று கொஞ்சி முடிக்க..வந்து சேர்ந்தது கடப்பாக்கம்! நீண்டு செல்கிற கிழக்கு கடற்கரைச் சாலையில் நொடிநேரத்தில் தாண்டிப்போகிற ஸ்பாட்தான் ‘கடப்பாக்கம்‘. ஆனால் இந்த குட்டியூண்டு ஊருக்குள்ளே
கோட்டை கட்டி கொடி பறக்க வாழ்ந்த ஒரு வரலாறு..புதையுண்டு கிடக்கும் கதை தெரியுமா?

கி.க. சாலையிலிருந்து ‘விசுக்‘கென இடதுபுறம் பிரிகிறது கடப்பாக்கம். துண்டு அகலத்திற்கு குண்டும் குழியுமான ரோடு. அலுங்கிக் குலுங்கி பயணித்தால்..குறுக்கிடுகிறது ஆற்றுப்பாலம்! அருகிலேயே ‘தலைகுளித்த மீன்களை தலைதுவட்ட விடாமல்..வலைபோட்டுப் பிடித்துவந்து விலைசொல்லி விற்கிற துக்கம் தாளாமல் தத்தளிக்கிறது மீன்கள்! விதவிதமான மீன்கள், இறால்கள் என அள்ளிக்கொண்டு போகிறார்கள் ‘அசைவப் பிரியர்கள்‘! அதையும் கடந்துபோனால்..மீனவர்களுக்கான சுனாமி குடியிருப்புகள் அனாதியாகக் கிடக்கிறது. அங்கிருந்து நகர்ந்தால்..‘பேக் வாட்டரால்‘‘ பன்னீர் தூவி வரவேற்கிறது ‘ஆலம்பரா கோட்டை‘! ‘பேக்வாட்டர்‘ சிறுகடலாக கோட்டைக்குப் பின்னே ‘பாகைமானி‘ சைஸில் பரவிக்கிடக்கிறது. முன்புறம் தகதகக்கிற பொன்னிற மணற்பரப்பில் பாதி புதைந்தும், மீதி சிதைந்தும் மௌனப்புலம்பலோடு அரை பனைமர உயரத்திற்கு நிற்கிறது பிரமாண்டமான ‘ஆலம்பரா கோட்டை‘!

கோட்டைக்குள்ளும் பொன்மணல் குவிந்துகிடக்கிறது. கால் வைத்ததுமே ஏனோ சிலிர்த்தது. ஒருகாலத்தில் முகலாய மன்னர்கள் வாழ்வாங்கு வாழ்ந்த சாம்ராஜ்யம்..இன்று நம்ம மாதிரி ‘பிள்ளக்காய்களால்‘ மிதிபடுவது கண்டு மனசு குறுகுறுத்தது. ‘பிதாமகன்‘ படத்தின் சுடுகாட்டுக் காட்சிகள் ‘சுடப்பட்டதெல்லாம்‘ இந்த லொகேஷனில்தான். ‘வெயில், குப்பி‘ என ஏராளமான படங்களில் ‘இடம்‘ பிடித்திருகிறது இந்த கோட்டை. பக்கத்திலேயே வலை பின்னிக்கொண்டிருந்த பெருசு நம்மைப் பார்த்து ‘‘பீரங்கியால சுட்டாக்கூட அசையாத கோட்டைங்க இது! வெள்ளைக்காரங்க பண்ணுன அட்டகாசம், அப்புறம் நவாப்புக ஆண்டதுன்னு வீரசூரக் கதைகளை எங்க முப்பாட்டன் காலத்துலேர்ந்து கேட்டுருக்கோம்!‘‘ என்று ‘த்ரில்‘லை கிளப்பினார்.
‘‘இந்த இடத்தை எங்கன தோண்டினாலும் ஏதாச்சும் புதையல் சிக்கும்ல!’’ என்று சொன்ன நண்பன் கண்ணில் ‘அலிபாபா‘ ஜொலிப்பு! ‘புதையல பூதம் காக்குமே!’’ என்ற பெருசுவின் பேச்சில் கெக்கலிப்பு.

கோட்டையின் நடுநாயகமாக ஒரு சமாதி. மறைந்துபோன மன்னரின் பெயர் மறைபொருளாகவே இருக்க..வந்துபோன மானிடர்களின் பெயர்கள் சமாதியில் ‘நிலைத்து நிற்பது‘ சோகக் காமெடி. பேக்வாட்டரில் கோட்டையைச் சுற்றி ரவுண்ட் அடிப்பதற்காகவே மோட்டார் படகுகள் காத்துக்கிடக்கின்றன. ஒரு ட்ரிப்புக்கு ஐம்பது ரூபாய். சலசலக்கிற நீரில் ஜாலி சவாரி போகிற சுகமே அலாதி! கரைக்குத் திரும்பி..ஒரு ‘ஜிலீர்‘ குளியல் போடும்போதே கபகப பசியை கிளப்புகிறது கமகம வாசம்! மீன், இறால், நண்டுகள் என சப்புக்கொட்டி ருசிக்க சரியான டிஷ்கள்! என்ன..முன்னரே சொல்லிவைத்து பணம் தந்தால்..சுடச்சுட சமைத்து வைத்திருப்பார்கள். சாப்பாடும், குடிநீரும் கைவசம் கட்டாயம் தேவை.

ஒரு நாளை ஒதுக்குங்கள்! நண்பர்கள், குடும்பத்தினர் என சகலரும் உற்சாகமாக கொண்டாடி, நிம்மதியாகத் திரும்ப உத்தரவாதமான பிக்னிக் ஸ்பாட் ‘ஆலம்பரா கோட்டை‘! அதுவும் செல்ஃபோனை ஆஃப் செய்துவிட்டால்..பாதி சொர்க்கம் நிச்சயம்! என்ஜாய்! வ்ர்ர்ரூம்ம்!

இதான் ரூட்!

சென்னை டூ கிழக்குக் கடற்கரைச் சாலையில் பயணித்தால்..100 கி.மீ. தூரத்தில் உள்ளது ‘ஆலம்பரா கோட்டை‘. ‘பாண்டிச்சேரி‘ பயணிகளுக்கு பாதி தூரம்தான்..50 கி.மீ.! டூ&வீலர், கார் என்றால் கோட்டைவரை போகலாம். பஸ்ஸில் சென்றால் கடப்பாக்கம் ஸ்டாப்பிங்கில் இறங்கவும். அங்கிருந்து ஆட்டோவில் செல்லலாம். கூப்பிடு தூரத்தில்..கோட்டை!

‘கோட்டை‘ கதை!


17ம் நூற்றாண்டில் இந்தியா முழுக்க கொடிகட்டிப் பறந்தது முகலாயப் பேரரசர்களின் ராஜாங்கம்! ‘கட்டிடக் கலையின் பொற்காலம்‘ அது. அன்றைய காலகட்டத்தில் கட்டப்பட்ட கோட்டைதான் இது! பட்டு ஜரிகை, உப்பு மற்றும் நெய் போன்ற பொருட்கள் இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டது வரலாறு. கப்பல்களை பழுதுபார்க்கும் இடமாகவும் இந்த ‘கடற்கோட்டை‘ பயன்படுத்தப்பட்டதாம். கி.பி.1735ல் நவாப் தோஸ்தே அலி கான் அரசாண்ட இந்த கோட்டையை..அதன் பின்னர் ஃபிரெஞ்ச் தளபதி டூப்ளெக்ஸ்க்கு பரிசளித்தது ஃப்ரெஞ்ச் அரசு. 1760ல் பரங்கியர்களால் ஃப்ரெஞ்ச் படை வீழ்த்தப்பட்டபோது..இந்த கோட்டையையும் முடிந்தவரை சேதப்படுத்தினார்கள். அதையும் கம்பீரமாக எதிர்கொண்டு, பின்னர் ஆற்காட்டு நவாப்புகளால் ஆளப்பட்ட ‘ஆலம்பரா கோட்டையை‘ 2004ல் வந்த சுனாமி கொஞ்சம் ஓவராகவே சிதைத்துவிட்டது!

தோத்தா கொடலு...ஜெயிச்சா மெடலு

Monday, April 12, 2010எம்.பி. உதயசூரியன்


‘'ஏப்பு...சல்லிக்கட்டுங்கிறது லேசுபாசான விஷயமா என்ன? முச்சந்தியில
குத்தவெச்சு வெளையாடற ஆடு புலி ஆட்டமில்லப்பு இது. உசுரையே
துச்சமா நெனச்சு காளையோட காளை மோதற நேரடி யுத்தம். வாடிவாசல்ல
மொரட்டுக்கொம்புகளோட மெரட்டலா நிக்கற மாடுகளைப் பாத்தாலே
கிலி கெளம்பி, எப்பேர்ப்பட்ட கில்லாடிக்கும் அடிவயுத்துல புளி கரைச்சுரும்ல.
பேரு பெத்த மாடுபுடி வீரனுக கெத்தா களத்துல நிப்பாய்ங்க. கூடவே
வேடிக்கை பாக்க வந்த வெத்துப்பசங்களும் செத்த எலி கணக்கா வீறாப்பு
காட்டுவாய்ங்க. அது தனிக்கூத்து.

அலங்காநல்லூரு, பாலமேடு, சிங்கம்புணரி, சிறாவயல்னு சல்லிக்கட்டுக நடக்கிற
இடம் தெரிஞ்சுருக்கும். ஆனா வந்து நிக்கற வகைவகையான மாடுகளோட
வகையறா தெரியுமாப்பு? மூச்சு விடாம சொல்றேன். மூச்சப் புடிச்சு எண்ணிக்கோ.
மச்சக்காள, மயிலக்காள, ஒச்சுக்காள, ஒயிலுக்காள, நெத்திச்சுட்டி, செவலக்காள,
கொடலுகுத்தி,வட்டக்கருப்பன், ஈட்டிக்கொம்பன், புலிக்குத்தி, பாடச்சுழிகாரினு
பட்டியலு ரொம்பப் பெரிசப்பு.

சல்லிக்கட்டு மாடுகளுக்கான வளப்பு மொறையே தனி தினுசானது. மத்த
மாடுக மாதிரி இதுகள வேலைக்கெல்லாம் அனுப்ப மாட்டாய்ங்க. போட்டிக்கி
ஒரு மாசத்துக்கு முன்ன இருந்தே மாட்டுக்கு ஊட்டம் கூட்ட ஆரம்பிச்சிருவாய்ங்க.
தெனமும் நல்லா குளிப்பாட்டி, சாம்பிராணி புகை காட்டுவாய்ங்க. நயம் பருத்திக்
கொட்டய நைஸா அரைச்சு, அதோட சாறெடுத்து ஊட்டுவாய்ங்க. அதேமானிக்கி
பசேல்னு பசும்புல்லும், மூலிகைச்செடிகள அரைச்செடுத்த உருண்டையும்தான்
மாட்டுக்கான தினப்படி தீவனம்.

அதேமாதிரி சல்லிக்கட்டு மாடுகள வளக்கற வீட்ல இருக்கறவங்க ரொம்ப சுத்தபத்தமா
இருந்தாகணும். ஊட்டமா தின்னு தின்னு சும்மா ‘கிண்'ணுன்னு காட்டேரி மாதிரி
நிக்கற மாடுக, அக்கறையா வளக்கற ஆம்பளகிட்டக் கூட திமிரா சிலுப்பிகிட்டே
நிக்கும். ஆனா அதே வீட்ல இருக்கற பொம்பளையக் கண்டா பொட்டிப்பாம்பா
அடங்கும். ஏன்னா தெனமும் ஒரு தாய்மாதிரி தன்ன பாசமா கவனிச்சுக்கறதால
அது காட்டற அன்பு அப்புடி. சொன்னா அரண்டு போயிருவீகப்பு...பக்கத்துல மாடு
இருக்கறப்போ அந்த பொம்பளய ஏதோ ஒரு கோவத்துல புருஷங்காரனே கைநீட்டிப்
பேசிட்டான்னு வெய்யி, தொலஞ்சான். அப்புடியே அவம்மேல சீறிப் பாஞ்சு குத்தித்
தூக்கிரும். இதுக்குப் பயந்தே நெறயப் பய பொஞ்சாதிகிட்ட பஞ்சாயத்து வெச்சுக்க
மாட்டாம்ப்பு.


எடுத்த எடுப்புலயே சல்லிக்கட்டுல பூந்து மாட்டை அணைஞ்சற(பிடிப்பது) முடியாதப்பு.
அதுக்குன்னே செல அடிப்படை விஷயங்களை அடிபட்டுக் கத்துக்கணும். மொதல்ல
ஒரு புழுதிக்காட்டுல குட்டி ஆட்டோட முட்டி மோதி மல்லுக்கட்டணும். அதுலயே
உருண்டு பொரண்டு ரத்தக்காயம் ஆயிரும். கொஞ்சம் தேறிட்டோம்னா அடுத்து
கன்னுக்குட்டிகிட்ட கைவரிசை காட்டணும். பேச்சுக்கு இது சுளுவா இருக்கும். ஆனா
களத்துல இறங்குனாத்தாண்டி தெரியும், கன்னுக்குட்டியோட வீரியம். கொஞ்சம்
பிசகிச்சுன்னா, அது முட்டற முட்டுல டங்குவாரு அந்துபோகுமப்போய். ஆனா
அதையும் அடக்கி, நாய்க்குட்டி மாதிரி மடக்கிப் போடறதுக்கும் செல நேக்குபோக்கு
இருக்குதுல்ல.

இதுல தேறினதுக்கு அப்புறமாத்தான் மொரட்டு மாட்டுகிட்ட கொஞ்சம் கொஞ்சமா
நம்ம சேட்டையைக் காட்டணும். எமன் மாதிரி பாஞ்சு வர்ற மாட்டை எப்புடி புடிக்கணும்,
குத்திக் கொடலை உருவற மாட்டை என்ன மாதிரி மடக்கணும்ங்கற சூச்சுமத்தையெல்லாம்
மாடு புடிக்கறதுல சூரப்புலிகளா இருக்கறவய்ங்க கத்துத் தந்துருவாய்ங்கப்பு.

அதேமாதிரி இன்னொரு கூத்தும் இருக்கு. சல்லிக்கட்டு நடக்கறப்போ ‘இந்த மாட்ட
எவன் அடக்கறானோ, அவனுக்கு எம்பொண்ண கட்டித்தர்றேன்னு' இந்த சினிமாப்
படங்கள்ல சவடால் விடுவானுங்க. ஆனா நெசத்துல அப்படியெல்லாம் கெடயாதப்பு.
மாட்டை அடக்கிப்புட்டா அது கழுத்துல கட்டி விட்டிருக்கற தங்கச்சங்கிலி, பரிசுப் பணத்தை
அள்ளிக்கலாம். சமயங்கள்ல நமக்கு வேண்டப்பட்ட ஒறவு மொறையில, கல்யாணமாகாத
மாமங்காரன், மச்சாங்காரன் யாராச்சும் இருப்பாய்ங்கள்ல...அவிய்ங்களப் பாத்து ‘'இந்தக்
காளய நீ அடக்குனா, உனக்கு எம்பொண்ணை கட்டித்தர்றேன்னு' சீண்டிவிட்டு வேடிக்கை
பாப்பாய்ங்க.

சல்லிக்கட்டு வீரதீர வெளையாட்டுதான். அதேமாதிரி சுத்திமுத்தி நிக்கற கொமரிப்புள்ளைகளை
பாக்கறப்போ எக்கச்சக்க தெகிரியம் எக்குத்தப்பா எகிறும்ல. பெறகென்ன? உசுர பணயம்
வெச்சு களத்துல எறங்குவாய்ங்க. தோத்துப்புட்டா மாட்டோட கொம்புல அவனோட கொடலு.
ஜெயிக்கற வீரனுக்கு அந்த கொமரிக சிரிப்புதான் மெடலு''.

நன்றி: புதிய தலைமுறை

ஆளில்லா தீவில் தனியே ஒரு நம்பிக்கை

Thursday, April 8, 2010எம்.பி. உதயசூரியன்

வெகுநாளாகவே ஆழ்மனதில் மூழ்கிக் கிடந்த ஆர்வம் அது... கடல் தின்று தீர்த்த
தனுஷ்கோடிக்கு அருகிலுள்ள அரிச்சல்முனைக்குப் போகவேண்டும் என்று.
ராமேஸ்வரத்திலிருந்து தனி ஜீப்பில் நண்பர்களுடன் கிளம்பினோம்.
செக்போஸ்ட்டிலிருந்து நாலு ‘வீல்' பாய்ச்சலில் புழுதி கிளம்ப சீறிச் சென்றது
ஜீப்.

கண்ணுக்கெட்டிய தூரம்வரை அலைகடலும், அனல் மனலும் கொட்டிக்கிடக்க...
முன்னோடி வண்டிகள் ஓடிய சக்கரப்பாதையிலேயே நமது ஜீப்பும் வளைந்து,
நெளிந்து, வழியில் குழியில் துள்ளி எழும்பி சென்றபோது, கரையெங்கும்
ததும்பிய நரை நுரையை விட...மனதில் பொங்கியது பய நுரை.

கரையோர நீரில்- உறுமீனோடு, சமாதான உலகு வேண்டி ‘வெள்ளை' அலகு
நீட்டி தவமிருக்கும் கொக்குகள்...வேற்று நாடான ஆஸ்திரேலியாவிலிருந்து
தனுஷ்கோடிக்கு காற்று வாங்க வந்திருக்கும் ஃப்ளெமிங்கோ பறவைகள்...
அமானுஷ்ய மணற்பரப்பில் மௌனம் அனுஷ்டிக்கும் சர்ச்...விசுவிசுவென
வீசுகிற காற்றுடன் கிசுகிசுக்கிற கீற்றுக் குடிசைகள்...மனித சஞ்சாரமற்ற
மணற்பாலையில் நத்தை போல ஒத்தை ஆளாக கடந்து போகிற ஒல்லி
மனிதர்...தண்ணீரால் அழிந்து போனதை நினைவுபடுத்தும் விதமாக தண்ணீர்
கொடுத்து உபசரிக்கிற தனுஷ்கோடி என வழிநெடுக வினோதமான அனுபவங்கள்.

ஒருவழியாக (இருப்பதும் ஒரேவழிதான்) அரிச்சல்முனைக்குள் நுழைந்தோம்.
இடது கையால் இந்தியப் பெருங்கடலையும், வலது கையால் வங்காள
விரிகுடாவையும் தொட்டு விளையாடும் 'கிட்டத்தில்' அலையாடி சங்கமிக்கின்றன
இரு கடல்கள். அவை விட்டு வைத்திருக்கும் மிச்சமுள்ள மணற்திட்டில்தான்
சுற்றுலாப் பயணிகள் அச்சமின்றி நின்று ரசிக்கிறார்கள்.

அந்த அரிச்சல்முனையில்தான் பாக்யராஜை சந்தித்தோம். இவர் அவர் அல்ல.
தன்னம்பிக்கை நட்சத்திரம். ஆளரவமற்ற அனாதித் தீவில்...நான்கு சவுக்குக்
கம்புகளை நட்டு, மேலே ஒரு கூரையைப் போட்டு குளிர்பானங்கள், முத்து,
பவளம், பாசிமணிகள், சங்குகள், ஜிமிக்கி கம்மல், கலர் கயிறுகள் என
சின்னதாக ஒரு கடை பரப்பியிருக்கிறார் பாக்யராஜ்.


+2 முடித்த இந்த இளைஞர் பெற்றோருடன் தனுஷ்கோடியில் வசிக்கிறார்.
இவரது அண்ணன் ராமேஸ்வரத்தில் கடை நடத்தி வருகிறார். ‘'மேல
படிக்கலையா பாக்யராஜ்?'' என்று கேட்டோம். ‘'+2 முடிச்சிட்டு காலேஜ்
போலாம்னு ஆசைப்பட்டேன். ஆனா வசதி இல்லண்ணே. வர்ற வருமானம்
வயித்துச் சாப்பாட்டுக்கும், மாத்துத் துணிக்குமே சரியா இருக்கு. இதுல
எங்கிட்டு நான் மேல படிக்கிறது? அதான் ஏதாச்சும் ஒரு தொழில் செய்யலாம்னு
இங்க கடை போட்டேன்'' என்றார்.

‘'என்ன நம்பிக்கையில தனித்தீவுக்குள்ள தன்னந்தனியா கடை வெச்சீங்க?''-
கேட்டதுமே வெள்ளையாகச் சிரித்தபடி பேசினார் பாக்யராஜ்...''டவுன்ல
(ராமேஸ்வரத்தில்) கடை வைக்கணும்னா அட்வான்ஸ் தரணும், நெறைய
சரக்கு வாங்கணும். இதுக்கு ரெண்டு மூணு லட்சம் தேவைப்படும். அதான்
ஆற அமர யோசிச்சுப் பாத்தேன். ‘சரி, அரிச்சமுனையிலயே ஒரு கடையைப்
போட்ரலாம்னு முடிவு பண்ணேன். கையில இருந்த காசோட, கடன உடன
வாங்கி ஐயாயிரம் ரூவா முதலீட்டில கடைய ஆரம்பிச்சேன். இப்போ
யாவாரம் ஜோரா நடக்குதுண்ணே'' என்றார் உற்சாகமாக.

அப்போது கடைக்கு வந்த ஒரு சுற்றுலாப் பயணி குடிக்க தண்ணீர் கேட்க,
அவரிடமிருந்த காலி பாட்டிலை வாங்கி தண்ணீர் நிரப்பித் தந்தார். ‘'எவ்ளோ
தம்பி'' என்று கேட்க...''ஃப்ரீ சார். குடிச்சுப் பாருங்க. தேனா இனிக்கும்.
ரெண்டு பக்கமும் கடலு. உப்புத்தண்ணி. ஆனா நடுவால இருக்கற மண் திட்டுல
வர்ற ஊத்துத்தண்ணி இனிப்பா இருக்கு. மனுஷ பொழப்பும் அப்படித்தாங்க
இருக்கு'' என்று ஏதோ ‘பாமர ஞானி' போல பேசுகிறார் பாக்யராஜ்.

அப்படியே நம்மைப் பார்த்து ‘'கோச்சுக்காதீங்கண்ணே. பேச்சைப் பாதியில
விட்டுட்டேன். தெனமும் நெறைய டூரிஸ்ட்டுக வர்றாங்க.
ஒத்தையா நிக்கற என்னைப் பாத்து ஆச்சரியப்பட்டு, அன்பா பேசறாங்க. இங்க
இருக்கற அத்தனை பொருள்களையும் பேரம் பேசாம வாங்கிட்டுப் போறாங்க.
கொண்டு வர்ற சரக்கை பெரும்பாலும்
வித்துர்றேன். தெனமும் இருநூறு ரூவாய்க்குக் கொறையாம லாபம் கெடைக்குது.
எப்பவாச்சும் வந்து போற டூரிஸ்ட்டுகலை நம்பி கடை வெக்கிறியேனு கிண்டலா
சிரிச்சாங்க.ஆனா போதுமான லாபத்தோட நான் சம்பாதிக்கறேன். என் நம்பிக்கை
ஜெயிச்சிருச்சு அண்ணே'' என்கிற பாக்யராஜ் முகத்தில் வெற்றிப் பூரிப்பு.


தீவிலிருந்து கடைசி டூரிஸ்ட்டும் கிளம்பியதை உறுதி செய்து கொண்ட பிறகே
தனது கடையை மூடுகிறார் பாக்யராஜ். கீற்றுக் கூரையை கீழே கிடத்தி.
கொண்டுவந்த அட்டைப்பெட்டிகளுக்குள் சரக்குகளை அடுக்கி எடுத்துக் கொண்டு
கடைசி ஜீப்பில் வீடு திரும்புவது இவரது வழக்கம். மழை சீஸனில் மட்டும்
இந்தக் கடை இருக்குமிடத்தில் கடல் பரவிக் கிடக்கும். ஆகவே அன்று கடை
லீவு.

‘'சரி, டூரிஸ்ட் யாருமே வராதபோது தனியாக இருக்க பயமாக இல்லையா?''-
உடன் வந்த நண்பர் கேட்டார். வாய்விட்டுச் சிரித்தபடி பாக்யராஜ் சொன்னார்...
‘'அண்ணே, நான் பொறந்து வளர்ந்ததெல்லாம் கடல் மென்னு துப்பின இதே
தனுஷ்கோடிதான். எஙளுக்கெல்லாம் புயல்தான் தாலாட்டு...வெள்ளம்தான்
தாய்ப்பாலு''.

நன்றி: புதிய தலைமுறை

 
சுடச்சுட - by Templates para novo blogger