பொழுதுகளைக் களவாடிய டூரிங் டாக்கீஸ்

Thursday, January 19, 2012எம்.பி.உதயசூரியன்

ஊருக்குக் கொஞ்சம் தள்ளி ஒரு வெட்டவெளியில்தான் டூரிங் டாக்கீஸ் இருக்கும். ‘டெண்டு கொட்டாய், கீத்துக்கொட்டகை’ என்ற செல்லப்பெயர்களும் உண்டு. கூப்பிடுதூரத்திலுள்ள அக்கம்பக்கத்து மக்களின் போக்கிடமும், பொழுதுபோக்கிடமும் இது ஒன்றுதான். ஒவ்வொரு சாயங்காலமும் கூரைக்கு மேல் கட்டியிருக்கும் டபுள் குழாய் ஸ்பீக்கரில் ‘விநாயகனே வினை தீர்ப்பவனே’ என்று சீர்காழியின் பாட்டு போட்டதுமே ‘ஆஹா...கொட்டாயில படம் போடப்போறாங்கப்பா’ என்று ஊர் மக்களுக்குள் ஓர் உற்சாகப் பரபரப்பு பற்றிக்கொள்ளும். அடுத்து ரெண்டு, மூணு பாடல்கள் ஓடி ‘கோடிமலைதனிலே கொடுக்கும் மலை எந்த மலை’ பாட்டு கேட்டதுமே ‘விறுவிறுவென ஜனம் டூரிங் தியேட்டருக்கு ஓட்டமும் நடையுமாக படையெடுக்கும். பாடலின் முடிவில் படுவேகமாக ஒலிக்கும் ‘பனியது மழையது நதியது கடலது’ வரிகள் வந்தால் போதும்... டிக்கெட்டை வாங்கிக்கொண்டு பாந்து செல்வார்கள். காரணம்- இந்தப் பாட்டு முடிந்ததுமே படம் ஓடத்தொடங்கும்.

அந்த நாட்களை இப்போது நினைத்தாலும் சிலிர்ப்பாகவும் இருக்கிறது...கொஞ்சம் சிரிப்பாகவும் இருக்கிறது. எங்கள் ஊரிலிருந்து 1 கி.மீ. தூரத்திலிருந்தது ‘பாண்டியன்’ டூரிங் டாக்கீஸ். லீவுக்கு மதுரையிலிருந்து அத்தை மகன்களும், பெரியம்மா பசங்களும் வந்துவிடுவதால் எங்களுக்கான ஒட்டுமொத்த ஜாலியும் ‘பாண்டியன்’தான். மதுரையில் பெரிய தியேட்டர்களில் 2 ரூபா 90 காசுக்கு படம் பார்த்த அவர்களுக்கு, வெறும் 25 காசில் டூரிங் டாக்கீஸில் படம் பார்த்தபோது ஏற்பட்ட பிரமிப்பை வார்த்தையில் சொல்ல வராது. அதோடு ஏகப்பட்ட பிரமிப்பும் உண்டு. அரை டிக்கெட்டுகளும், தரை டிக்கெட்டுகளுமாக சகலரும் சமத்துவமாக உட்கார்ந்து ரசிக்கும் மணல் தரை டிக்கெட் 25 காசுதான். ஃபர்ஸ்ட் கிளாஸ் டிக்கெட்டின் விலை 50 பைசா. சோல்வதற்கு மட்டுமே இது சோகுசாக இருக்கும். மற்றபடி ஒரு நீளமான மர பெஞ்ச்தான் ஃபர்ஸ்ட் க்ளாஸ். ஒரு ரூபாக்கு வி.ஐ.பி.டிக்கெட்டும் உண்டு. அதில் ஒரே ஒரு சேர் மட்டுமே இருக்கும். ஊர்ப்பெருசுகளுக்கு மட்டுமே இது ரிசர்வ் செயப்பட்டது. ஒரு படத்திற்கு நாலு இடைவேளை விடுவார்கள். ‘ஏன் இந்த ஊர்ல மட்டும் நாலு இடைவேளை விடறாங்க?’ என்றெல்லாம் ‘மதுரைப் பசங்க’ நிறைய கேள்விகள் கேட்பார்கள். அப்போதெல்லாம் ‘ரீல் மாத்தறாங்கப்பா’ என்று எங்கள் ஊர் சிறிசு, பெரிசுகள் சகஜமாகச் சொல்வார்கள்.

இரவு 7 மணிக்கு, பிறகு 10 மணிக்கு என ரெண்டு காட்சிகள் ஓடும். அதை ‘முதலாவது ஆட்டம், ரெண்டாவது ஆட்டம்’ என்று சொல்வார்கள். பிள்ளை குட்டிகள், பெண்கள் பெரும்பாலும் முதலாவது ஆட்டத்திற்கு வருவார்கள். வேலை வெட்டிக்குப் போவரும் ஆண்கள்தான் ரெண்டாவது ஆட்டம் போவார்கள். எம்.ஜி.ஆர்., சிவாஜி நடித்த பழைய படங்களை ‘மெருகு குலையாத புத்தம்புது காப்பி’ என்ற கவர்ச்சியான விளம்பரத்துடன் கலர்ஃபுல் போஸ்டர்கள் ஒட்டி ரசிகர்களை வலைவீசி இழுப்பது டூரிங் டாக்கீஸ்களுக்கே உரிய தனி சாமர்த்தியம். அதிலும் அந்த போஸ்டர் ஒட்டப்படும் வீட்டுச்சுவற்றின் சொந்தக்காரர்களுக்கு மட்டும் ஓசி பாஸ் கொடுக்கப்படும். அந்த பாஸுடன் சம்பந்தப்பட்ட வீட்டுக்காரர்கள் பகுமானமாக வருவதைப் பார்த்து... சுவரில்லாத சாமான்யர்கள் தங்களுக்குள் ‘கயா முயா’ என்று முனகிக்கொள்வதைக் கேட்க சுவாரஸ்யமாக இருக்கும்.

இப்படிப்பட்ட கலகலப்பான சூழலில் படம் பார்க்கும் அனுபவம் பரவசமானது. திரையில் படம் ஓட ஓட... தரையில் ஆங்காங்கே மணல் சீட்டுகள் உருவாகும். முன்னால் உட்கார்ந்திருப்பவரின் தலை மறைத்தால், அதை அட்ஜஸ்ட் செய்வதற்கேற்ற உயரத்தில் மணலைக் குவித்து மேடாக்கி உட்கார்வார்கள். இதனால், பின்னாலிருக்கும் இன்னொரு ரசிகர் அதைவிட உசரத்தில் மணல் சீட் போட்டு அசர வைப்பார். சமயங்களில் இந்த ‘மண்ணாசை’ ‘அந்நாட்டு மன்னர்களுக்குள்ளே’ சண்டை சச்சரவுகளில் முடிவதும் உண்டு. இதற்கிடையே சாப்பாட்டு தட்டு சைஸுக்கு ஒரு முறுக்கு விற்பார்கள். இந்த ‘மெகா முறுக்கு’ டூரிங் டாக்கீஸில் மட்டுமே மெல்லக்கிடைத்ததே தவிர, இன்றுவரை வேறெங்குமே கிடைத்ததாக யாருமே சொல்லக் கேட்டதில்லை.

‘வெள்ளிக்கிழமை விரதம்’, ‘ஆதிபராசக்தி’ ‘தெவம்’ போன்ற பக்திப் படங்கள் ஓடும்போது செம அமர்க்களமே நடக்கும். பக்திப் பரவசமான காட்சிகள் வரும்போது... பார்த்துக்கொண்டிருக்கிற பல பெண்களுக்கு திடீரென அருள் வந்துவிடும். அதுவரை அப்பிராணியாக பக்கத்தில் உட்கார்ந்திருந்த பெண்கள்...தடாலடியாக ‘டேஏஏஏஏஎ’ என்று பெருங்குரலெடுத்து சத்தமிட்டு, வெறித்த முழிகளோடு, நாக்கைத் துருத்திக்கொண்டு சாமியாடுவார்கள். அவ்வளவுதான்...அருள் குரல் கேட்ட அடுத்த நொடியே படம் நிறுத்தப்பட்டு லைட் போடப்படும். சுற்றியுள்ளவர்கள் சாமியை சாந்தப்படுத்த முயற்சி செய்வார்கள். அப்படியும் சாந்தமாகவில்லை என்றால், உள்ளூர் பூசாரி வந்துதான் வேப்பிலை அடித்து சாமியை மலையேறச் செய்வார். இதுபோல அடிக்கடி ‘சாமியாடல்கள்’ நடப்பதைப் பார்த்து உஷாராகி விட்டார் டாக்கீஸ் ஓனர். ஒருகட்டத்தில் பக்திப்படங்கள் போடும்போதெல்லாம் உள்ளூர் பூசாரிக்கு ‘ஸ்பெஷல் பாஸ்’ கொடுத்து வரச்சொல்லிவிட்டார். வழக்கம்போல பெண்களுக்கு சாமி வந்ததும், விபூதியும் பையுமாக ரெடியாக இருக்கிற பூசாரி, ‘சாமியை’ மந்திரித்து மலையேறச் செய்துவிடுவார்.

இந்த இடைவேளையில் சுடச்சுட முட்டை போண்டா, முறுக்கு, டீ, காபி யாவாரமும் சூடு பிடித்து, கேண்டீன்(?)காரர் செம லாபம் அள்ளுவார். படம் விட்டு பொடிநடையாக வீடு திரும்பும் மக்கள், மனசு விட்டுப் பேசி அரட்டை அடித்துச் சிரித்தபடி நடக்கும் காட்சி இன்னும் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது. எத்தனையோ டூரிங் டாக்கீஸ்கள் இன்றைக்கு கல்யாண மண்டபம், காம்ப்ளக்ஸ், ஃப்ளாட்டுகள் என்று அடையாளம் மாறிப் போனது போல, ‘பாண்டியன்’ டூரிங் டாக்கீஸ் இருந்த இடத்தில் இப்போது மர அறுவை மில் ஓடுகிறது.
.
இன்று சாதி, மத, அரசியல் என பல விஷயங்கள் மக்களை கூறு போடத் துடித்தாலும், அவர்களை ‘ஒரு தாய் மக்களாக’ அன்று ஒரே கூரையின்கீழ் ஒன்று சேர்த்து வைத்த பெருமை டூரிங் டாக்கீஸுக்கு உண்டு. அப்போதெல்லாம் டூரிங் டாக்கீஸுக்குள் முட்டை போண்டா விற்பவர் இப்படிக் கூவியழைப்பார்: ‘போனா வராது...பொழுதுபோனா கிடைக்காது’ என்று. என் பால்ய வயதில் டூரிங் டாக்கீஸ் தந்த சுகானுபவம் கூட அப்படித்தான். அன்றைக்குப் போன அந்தப் பொற்காலம் இனி வராது; விதவிதமாகப் பொழுது போனாலும் அந்த இனிமைகள் இப்போது கிடைக்காது.

நன்றி: ‘புதிய தலைமுறை’

 
சுடச்சுட - by Templates para novo blogger