‘மதுரை ஒரிஜினல் கூட்டாஞ்சோறு!’

Sunday, July 5, 2009‘கால்மணி நேரம் சந்திச்சா போதும்..எந்த துறையிலும் கால் பதிச்சு ஜெயிச்சுரலாம்‘ங்கற நம்பிக்கையை கையில் தந்து, கைகொடுத்து அனுப்பறவர்
மதிப்பிற்குரிய மாலன் சார்!

‘சிறந்த எழுத்தாளர்..புகழ்பெற்ற பத்திரிகையாளர்..ஆழமான அரசியல் விமர்சகர்..அபாரமான ரசனையாளர்‘னு மீடியாவின் அத்தனை ‘திசைகளிலும்‘ வெளிச்சம் பாய்ச்சியவர்!

சமீபத்தில் மாலன் சாரை சந்தித்தேன். முகத்தில் அதே இளமை..பேச்சில் அதே இனிமை. மதுரை மருத்துவக் கல்லூரியில் படித்த மாலன் சார் அவர்களுக்கு ‘மண்ணின் மைந்தனான‘ எனது இந்த ‘கூட்டாஞ்சோறு‘ சமர்ப்பணம்!

'படைத்தல்..காத்தல்..அழித்தல்‘னு ஏதாவதொரு வகையில் பணி செய்து ராப்பகலாக உறங்காமல் உலாவும் ‘கடவுள்களின் ஜெராக்ஸர்களான‘ மனிதர்கள். ‘வையை எனும் பொய்யாக் குலக்கொடி‘ என மெச்சிய ‘சிலப்பதிகாரத்தை‘
பொய்யாக்கிவிட்டு.. வெள்ளம் வந்தால் மட்டுமே கங்கு கரை வரை ‘நுங்கும் நுரையுமாகப் பொங்கியோடும் ‘வைகை‘ (நதி?) கம்மாய்.

வெள்ளையன் தூக்கிலிட்ட பின்னும் அந்த கம்பீரம் குறையாமல் இன்னும் சிலையாய் வாளேந்தி நிற்கும் ‘கட்டபொம்மன்‘. நகரத்தின் இண்டு இடுக்கு சந்து பொந்தெல்லாம் ‘வ்ர்ர்ரூம்ம்‘ என வந்துபோகும் ‘அரசுப் பேருந்துகள்‘. ‘அங்கிட்டும் இங்கிட்டுமாக‘ ஜனங்கள் பரபரக்கும் ‘பெரியார் பஸ் ஸ்டாண்ட்‘. தள்ளி நின்று ஒல்லியான குரலில் ‘‘ரூம் வேணுமாணே? பார்ட்டி ரெடி‘‘னு அடித்தொண்டையில் அழைப்பு விடும் ‘அவனா நீ‘க்கள். கூட்டமாக முண்டியடிக்கும் ‘பலரக‘ யூனிஃபார்ம் ‘துணி(மாணவ) மணிகள்.‘

அள்ளிச்செருகிய கூந்தல் கலையாமல்..வாயில் வெத்தலையையும்,கையில் கூடையையும் இடுக்கியபடி மிடுக்காக நடக்கும் ‘காதுவளத்த‘ பாட்டிகள். கிட்டத்திலேயே ‘சதக் சதக்‘ கொலையை ரத்தமும் மையும் உலர்வதற்கு முன்னரே முந்தித்தரும் ‘தினத்தந்தி‘ ஆபீஸ். அன்று பூத்து இன்று குலுங்கி என்றுமே வாசம் ‘கும்ம்‘மிடும் அதே வெள்ளைவெளேர் ‘மதுரை மல்லி’.

பேச்சுக்குப் பேச்சு ராகம் கலந்த ‘அண்ணே‘ போடும் ‘ஆறிலிருந்து அறுபது வயதான‘ தம்பிகள். நண்டு சிண்டுகள் முதல் பெண்டுலம் கழண்ட தொண்டு கிழம் வரை சகலருக்கும் ஒரு காலத்தில் ‘முண்டு அணிந்த குண்டு பெண்டுகளால்‘ வெள்ளித்திரையில் ‘கிளுகிளு‘ விருந்தளித்த ‘தங்க ரீகல்‘.

எதிரே..‘இதைத்தான் அமிர்தம்னாய்ங்களோ‘னு வியக்கவைத்து.. சுடச்சுட கமகமக்க தேக்கிலையில் வாங்கி ‘க்ளுக் க்ளுக்‘னு விழுங்க..தொண்டையிலேயே கரைந்து உயிர்வரை இனிக்கும் ‘திருநெல்வேலி அல்வா‘. மதுரையை பத்திரமாய் ஆண்ட ராணி மங்கம்மாவின் ‘மிச்ச நினைவுத்துணுக்காய்‘ மங்கம்மா சத்திரம்.

‘க்ளிப், கர்ச்சீப், ஜீன்ஸ், சட்டை, பேனா, டி.வி, கேசட், ஸ்டிக்கர், கடுக்காய், டி.வி.டி, பெல்ட், கத்தி, காபித்தூள்..என்ன வேணும்ணே‘னு சுத்தி நின்னு கத்திக்கூப்பிடும் டவுன்ஹால் ரோட்டில்..உதிரியாகச் சிதறி நிற்கும் ‘மினி மனித
டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள்‘. ‘சொக்க‘ வைக்கும் ‘மீனாட்சி‘ கோபுரங்கள். அதன்
மாடங்களில் வாடகையின்றி குடியிருக்கும் ஜாலியில் சடசடக்கும் புறாக்கள். சரிசனமாக தரிசனம் செய்து திரும்பும் பக்தர்கள். எப்போதுமே நெரிசலான நாலுமாசி வீதிகள்.

‘பசும்பொன்‘ நிறத்தில் பிரகாசிக்கும் கோரிப்பாளையம் ‘தேவர்‘ சிலை. நாற்புறமும் ‘டூ..த்ரீ..ஃபோர்..சிக்ஸ் வீலர்களில்‘ காதலி, மனைவி, அம்மா, பிள்ளை, பங்காளிகளுடன் சிக்னலில் சிக்கி நிக்க..நடுவே சுகமாக ‘கம்புக்கூடு‘ சொறியும் தொத்தலான போலீஸ்காரர். ‘வைகையில்‘ குளித்து வந்த ஒட்டுமொத்த மதுரைக்கே கட்டிமுடிக்கற அளவுக்கு ‘அஞ்சாநெஞ்சனின்‘ விசுவாசிகள் கட்டிவைத்திருக்கிற ‘விசுவரூப‘ விளம்பர
போர்டுகள்.

அசிட்டிக் வாசம்‘ கமழும் அரசு ராசாசி மருத்துவமனை. அழுக்காக
நோயாளிகள்..விசனத்தோடு ‘உறமுறைகள்‘..சிரிப்போடு கடக்கும் டாக்டர்கள். அந்த ‘முண்டாசு கட்டிய முறுக்கு மீசைக்காரன்‘ ஒரு காலத்தில் தன் ‘குஞ்சுகளுக்கு‘ ‘அக்னி‘ ஊட்டிய அதிசயம் நிகழ்ந்த ‘சேதுபதி மேல்நிலைப்பள்ளி‘.

பிரிட்டிஷ் காலத்துக் கம்பீரத்துடன் கலெக்டர் ஆபீஸ். சராசரி
வாழ்நாளான ஐம்பதாண்டுகளில்&முப்பது வருஷமாக வீட்டுப்பட்டா கோரி அலையும் சுத்துப்பட்டு 18 பட்டி ஆம்பளை பொம்பளைகள். ‘முதியோர் பென்ஷனுக்காக‘ பியூனையே ‘கலைக்டராக‘ நினைத்து கெஞ்சும் ரவிக்கை போடாத மூதாட்டிகள். கலெக்டர் தவிர..மற்ற மாந்தர்களையெல்லாம் ‘அற்ப புழுவே‘ன்னு பார்த்துச் செல்லும் கிளார்க்குகள்.

‘கமுக்கமாக‘ பல சம்பவங்களை புதைத்து வைத்திருக்கும் ‘தமுக்கம் மைதானம்‘. புத்தக மூட்டை சுமக்கும் வயசுல சாக்கு மூட்டை சுமந்து பேப்பர்
பொறுக்கும் ‘போஷாக்கு போதாத‘ ‘இந்தியாவின் எதிர்காலம்‘. அசையாத சைவர்களையும் அசைத்துவிடும் ‘அசைவ முனியாண்டி, தலப்பாகட்டி நாயுடு‘கள்.

ஒவ்வொரு கார்த்திகைத் திருநாளன்றும் ‘இந்து..முஸ்லிம்‘ ஒற்றுமைக்கு ஏதாவது ஊறு நேருமோ என ‘மலை உச்சியில் தீபத்தை‘ கட்டிக்கொண்டு பதற்றத்தோடு காத்திருக்கும் ‘திருப்பரங்குன்றம்‘. ஹாலிவுட் நடிகன்லேர்ந்து இன்னிக்கு காலையில் அறிமுகமான ‘புதுமுக ஜுஜுபி‘வரை அகில உலகத்துக்கே ரசிகர் மன்றம் வைத்து ‘கலை‘ வளர்க்கும் ‘ஜிகர்தண்டா‘ ரசிகர்கள். எக்கச்சக்க மேதைகளை ‘உருவாக்கி..உள்ளடக்கி’ வைத்துள்ள ‘காமராசர் பல்கலைக்கழகம்‘.

‘ஐயோ பசி‘ன்னு வந்தோர்க்கு எந்த நேரமும் ‘ஐயா..ருசியா புசி‘ன்னு படையல் போடுற ‘டண்டக்கு டண்டக்கு‘ கொத்துபரோட்டாக்கள். ‘அலாவுதீன்‘ பறக்கும் இட்லிகள். மணிரத்னம் பட ஷூட்டிங்கிற்கு தன் புராதன ‘மகாலை‘ வாடகைக்கு விடும் ‘நாயக்கர்‘. ‘கஞ்சா புகையோடு‘ சந்துகளில் அஞ்சாமல் நெளிந்து ஓடும் சைக்கிள் ரிக்ஷாக்கள். ‘பாட்ஷா‘ ஸ்பீடில் பாய்கிற ஆட்டோக்கள். ஊருக்குப் போகிற ‘அவசரத்தில்‘ ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்டு ‘கட்டணக் கழிப்பறை‘ முன்னே நிற்கிற ‘அவஸ்தை பயணிகள்‘.

‘தல‘யை வம்புக்கிழுத்த ‘தளபதி‘ ரசிகருக்கு கத்திக்குத்து‘னு
அசால்ட்டா அடுத்தநாள் காலைப் பேப்பருக்கு செய்தி கொடுத்துவிட்டு..மத்திய சிறையில் ‘கைதியாகவும்‘, ஆஸ்பத்திரியில் ‘அவசர வார்டிலும்‘ தூங்கும் ‘அவசர ஆவேச வாலிபர்கள்‘. ‘உலக நாயகனையே‘ ‘புன்னகை மன்னனாக்கிய‘ பேராசிரியர் கு. ஞானசம்பந்தன். ‘‘ம்..கொல்றாய்ங்கய்யா‘‘னு குலுங்கக் குலுங்கச் சிரிக்கவைத்து அலுங்காமல் ‘தமிழ்‘ போதித்து.. நிறத்திலும், பேச்சிலும் ‘கருப்பட்டியாக‘ இனிக்கும் ‘சாலமன் பாப்பையா‘. வர்றேண்ணே!

40 comments:

வண்ணத்துபூச்சியார் said...

வாவ்..

உங்க கிட்ட தமிழ் எழுத கற்றுக்கொள்ளணும் தலைவா...

Sridhar சார்.. கொஞ்சம் சிபாரிசு பண்ணுங்க...

சென்ஷி said...

கூட்டாஞ்சோறு செம்ம டேஸ்ட்டு :)

UNGALODU NAAN said...

padikkum bodhe muchu vangudu anne ennaa vegam

Veera said...

கலக்கல்.

டவுன் பஸ்ல மூனு ரூவா டிக்கெட் எடுத்து, மதுரய சுத்தி வந்தாப்ல இருக்கு!

Anonymous said...

// டவுன் பஸ்ல மூனு ரூவா டிக்கெட் எடுத்து, மதுரய சுத்தி வந்தாப்ல இருக்கு!

- free-a suthi vantha pola irukku...


Srini

R.Gopi said...

Thala

Kalakkal.........

Madurai Town Bus sema speeduuuuuuu.

Vaazhththukkal........

Sridhar said...

ஒரு ஊரே இந்த உரைக்குள் அடக்கம். கலக்கல் சார்.

Vijay said...

ஏண்ணே... நம்ம ”தெக்கு வாசல்,சிம்மக்கல், கீப்பாலம்,செல்லூர் பிரிட்ஜ், பாண்டி கோவிலு” இதையெல்லாம் வுட்டுப்புட்ட?
மத்ததெல்லாஞ்சரி... சினிப்ரியா தியேட்டர ”தரிசு”ல வுட்டுப்பிட்டீங்களே?
மதுரை சினிமா தியேட்டர்களிலே ”மொத மொதலா” கோன் ஜஸ்” கெடச்ச இடம்ணே.

ஆனாலும் ஊரப் பத்தி எளுதி ஊருக்குப் போவற ஏக்கத்த ஏத்திவுட்டுப்புட்டீங்க.
அருமை :)

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///நண்டு சிண்டுகள் முதல் பெண்டுலம் கழண்ட தொண்டு கிழம் வரை சகலருக்கும் ஒரு காலத்தில் ‘முண்டு அணிந்த குண்டு பெண்டுகளால்‘ வெள்ளித்திரையில் ‘கிளுகிளு‘ விருந்தளித்த ‘தங்க ரீகல்‘.///

ஐய்.. ஐய்.. பொய்யி..!

எந்தக் காலத்துல முண்டு அணிந்த குண்டு பெண்கள் படம் தங்கரீகல்ல ஓட்டினாங்க..?

அங்க ஓடினதெல்லாம் சிராக்கோ, அலெக்ஸாண்டாரா, நோபில் லேடி வகையாற படங்கள்தான்..

முண்டு படத்துக்குத்தான் மது, அமிர்தம், தீபா, ரூபா, சிடிசினிமா, அலங்கார், மதி, - இப்படி வருஷத்துக்கு ஒண்ணுன்னு களை கட்டுச்சேண்ணே..!

நாமளும் ஒரு பத்து வருஷம் மதுரைல ஆட்டைய போட்டோம்ல..!???

பனங்காட்டான் said...

நம்ம மதுர மண்ணு வாசம் அப்பிடியே ஏறுதுண்ணே!

எம்.பி.உதயசூரியன் said...

//வண்ணத்துபூச்சியார் said... உங்க கிட்ட தமிழ் எழுத கற்றுக்கொள்ளணும் தலைவா...//

‘தமிழ்’னு எழுதவே இப்பத்தான கத்துகிட்டிருக்கோம் நண்பா!

எம்.பி.உதயசூரியன் said...

//சென்ஷி said... கூட்டாஞ்சோறு செம்ம டேஸ்ட்டு :)//

அப்பாடா..வயிறு நிறைஞ்சுருச்சு சென்ஷி!

எம்.பி.உதயசூரியன் said...

//UNGALODU NAAN said... padikkum bodhe muchu vangudu anne ennaa vegam//

‘வைகை எக்ஸ்பிரஸ்’ ஸ்பீடுல எழுதணும்னு ஆசைப்பட்டேன். வாய்ச்சிருச்சாண்ணே?

எம்.பி.உதயசூரியன் said...

//Veera said... டவுன் பஸ்ல மூனு ரூவா டிக்கெட் எடுத்து, மதுரய சுத்தி வந்தாப்ல இருக்கு!//

வீராண்ணே..இந்தாங்க ஜில்லுன்னு ஒரு ஜிகர்தண்டா!

எம்.பி.உதயசூரியன் said...

//Srini said..free-a suthi vantha pola irukku...//

வேலையை விட்டுட்டு ஊரைச் சுத்திகிட்டு திரியறாய்ங்கன்னு சொல்லிரப்போறாங்கண்ணே!

எம்.பி.உதயசூரியன் said...

// R.Gopi said... Madurai Town Bus sema speeduuuuuuu.//

போலாம் ரைய்ய்ய்ய்ட்!

எம்.பி.உதயசூரியன் said...

//Sridhar said... ஒரு ஊரே இந்த உரைக்குள் அடக்கம் //

ஆஹா..’மதுரை’ன்னதுமே தமிழ் விளையாடுதே சார்!

எம்.பி.உதயசூரியன் said...

//Vijay said... மத்ததெல்லாஞ்சரி... சினிப்ரியா தியேட்டர ”தரிசு”ல விட்டுப்பிட்டீங்களே? மதுரை சினிமா தியேட்டர்களிலே ”மொத மொதலா” கோன் ஜஸ்” கெடச்ச இடம்ணே.//

ஆமா விஜய் ஆமா! ‘கோன் ஐஸையும் மறந்துட்டேன்..கோனார் நோட்ஸையும் மறந்துட்டேன்’!

எம்.பி.உதயசூரியன் said...

// உண்மைத்தமிழன் said... நாமளும் ஒரு பத்து வருஷம் மதுரைல ஆட்டைய போட்டோம்ல..!??? //

வெள்ளாட்டயா..
செம்மறியாட்டயாண்ணே?

எம்.பி.உதயசூரியன் said...

//பனங்காட்டான் said... நம்ம மதுர மண்ணு வாசம் அப்பிடியே ஏறுதுண்ணே!//

பங்காளிக்கு ஒரு பருத்திப்பால் குடுண்ணே!

பானு said...

ஆஹா,எங்க "மதுர" இந்த பதிவுல.Believe it or not Sir,feeling Nostalgic .எத்தன ஊரு
பாத்தாலும்,நம்ம மதுர மாதிரி எந்த ஊரும் இல்லை சார்.ஆத்தா மீனாட்சி, நடுநிசியிலும் உதவிக்கு ஓடி வரும் பாசக்கார சனம்,பருத்தி பால்,பக்கோடா,நம்ம அழகரு,சித்ரை
பொருட்காட்சி,சுங்கடி சேலை....... ம்ம்ம்.......எதை சொல்ல,எதை விட?
‘பசும்பொன்‘ நிறத்தில் பிரகாசிக்கும் கோரிப்பாளையம்,‘கமுக்கமாக‘ பல சம்பவங்களை புதைத்து வைத்திருக்கும் ‘தமுக்கம் மைதானம்....எங்க ஏரியா சார் இது,அதுக்காக ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ்.......
திரு.மாலன் அவர்களும் மதுரை காரரா?

முரளிகண்ணன் said...

அசத்தீட்டங்கண்னே.

திரும்ப திரும்ப படிக்கிறேண்ணேன்

Anonymous said...

Dear Mr. Suriyan,

I am also from Madurai.you made our mind to travel to madurai quickly. also yoy forgot jill jill jigarthanda ( madurai special ..next time try it)

Pandian . thailand

Nags said...

மதுரை உருண்டையா பிடிச்சு வாய்குள்ள போட்ட மாதிரி இருக்கு ..சகிக்கலை........மன்னிக்கணும் ருசி ....சலிக்கலை

ரெட்மகி said...

அஞ்சாநெஞ்சன் ஆ ஆ ஆ ஹ்ம்ம்

என்ன தலைவா இப்படி எழுதறிங்க ,அருமை ,

இப்பதான் தெரியுது நான் Blogger படிக்காம
ரெண்டு வருடம் வேஸ்ட் பண்ணிட்டேன் ....

எம்.பி.உதயசூரியன் said...

//பானு said...ஆத்தா மீனாட்சி, நடுநிசியிலும் உதவிக்கு ஓடி வரும் பாசக்கார சனம்,பருத்தி பால்,பக்கோடா,நம்ம அழகரு,சித்ரை
பொருட்காட்சி,சுங்கடி சேலை..//

‘மதுரை கூட்டாஞ்சோறு ரெண்டாம் பாகம்’ எழுதிட்டீங்களே மேடம்!

// திரு.மாலன் அவர்களும் மதுரைக்காரரா?//

மதிப்பிற்குரிய மாலன் சார் நெல்லைக்காரர். மதுரையில் படித்தவர்.

எம்.பி.உதயசூரியன் said...

//முரளிகண்ணன் said... திரும்ப திரும்ப படிக்கிறேண்ணேன்/

’நன்றி! மீண்டும் வருக! மதுரை தங்களை அன்புடன் வரவேற்கிறது’ண்ணே!

எம்.பி.உதயசூரியன் said...

//Pandian . thailand said...also yoy forgot jill jill jigarthanda //

அதனாலதான் சார் அதை ‘பதில் கமெண்ட்’ல வீராண்ணனுக்கு குடுத்துட்டேன்!

எம்.பி.உதயசூரியன் said...

//Nags said... மதுரை உருண்டையா பிடிச்சு வாய்குள்ள போட்ட மாதிரி இருக்கு//

அப்டியே பதநிய குடிச்சு முழுங்கிருங்கண்ணே!

எம்.பி.உதயசூரியன் said...

//ரெட்மகி said... இப்பதான் தெரியுது நான் Blogger படிக்காம ரெண்டு வருடம் வேஸ்ட் பண்ணிட்டேன்//

விடுங்க மகி..அதான் இப்ப டேஸ்ட் பண்ணிட்டீங்கள்ல!

srini the emperor said...

super thalaiva !!!!

சூரியன் said...

அண்ணே மதுரைய ஒரு ரவுண்ட் அடிச்சாச்சுனே உங்க புண்ணியத்துல ..

எம்.பி.உதயசூரியன் said...

// srini the emperor said...
super thalaiva !!!!//

’ஸ்ரீனி பேரரசின்’ பாராட்டை தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறான் இந்த ‘பாண்டிய நாட்டு சிப்பாய்’!

Shri said...

அண்ணே ! என்னத்த சொல்ல ! இது மாதிரி நிறைய எழுதிகிட்டே இருக்கணும்... சொல்லிபுட்டேன்...ஆமா

Rajan said...

டிக்கெட் எடுக்காமயே ஊருக்கு வந்து,
அதிசய ராட்டினத்தில ஏறி
மதுரையை மின்னல் வேகத்தில சுத்தினமாதி தல கிறுகிறுன்னு இருக்கு.

பல சரித்திர விசயங்கள உள்ளடக்கின மாநகரம்.

உண்மைத்தமிழன் அலெக்சாண்டராவை இன்னும் மறக்கலபோல...

எம்.பி.உதயசூரியன் said...

//சூரியன் said... அண்ணே மதுரைய ஒரு ரவுண்ட் அடிச்சாச்சுனே உங்க புண்ணியத்துல ..//

சூரியன்னாலே ரவுண்ட் அடிச்சுதானே ஆகணும்!

எம்.பி.உதயசூரியன் said...

//Shri said... அண்ணே ! என்னத்த சொல்ல ! இது மாதிரி நிறைய எழுதிகிட்டே இருக்கணும்... சொல்லிபுட்டேன்...ஆமா//

மண்ணு மணக்க படிச்சுட்டு மனசு இனிக்க அன்புக்கட்டளை போடறீங்க!
சரி Shri!

எம்.பி.உதயசூரியன் said...

//Rajan said... அதிசய ராட்டினத்தில ஏறி மதுரையை மின்னல் வேகத்தில சுத்தினமாதி தல கிறுகிறுன்னு இருக்கு.//

ராஜன் சார்.நீங்க உணர்ந்ததை அழகா எழுதி நம்மளையும் உணரவெச்சிட்டீங்களே!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///Rajan said...
உண்மைத்தமிழன் அலெக்சாண்டராவை இன்னும் மறக்கலபோல...///

மறக்கக் கூடிய படமா அது..?

சூரியன் ஸார்.. இந்தப் படத்தைப் பத்தி விமர்சனம் எழுதுங்களேன்.

தமிழ்நாட்டுத்தமிழன். said...

'கலாய்த்தமிழ்க் கவிஞர்' என்று உங்களை நான் அழைப்பது சும்மாவா? வழக்கம்போல...

 
சுடச்சுட - by Templates para novo blogger