மலைச்சரிவில் நிமிரும் நம்பிக்கை

Saturday, May 29, 2010

எம்.பி. உதயசூரியன்


அந்த குக்கிராமத்தில் அவசியத்தேவையான மின்சாரம் இல்லை. அத்தியாவசியத் தேவையான
குடிநீர் இல்லை. அவசர உதவிக்கு போக்குவரத்து வசதி இல்லை. ஆபத்தில் உயிர் காக்க
ஆஸ்பத்திரி இல்லை. பொழுதுபோக்க கேபிள் டி.வி. இல்லை. தகவல் தொடர்புக்கு தொலைபேசி
இல்லை. இப்படி அடிப்படை வசதிகள் எதுவுமே 'இல்ல்ல்ல்ல்லை'. ஆனாலும் அந்த
குக்கிராமத்தில் விசுவரூபம் எடுத்து நம்மை விசும்ப வைக்கிற விஷயம் ஒன்று உண்டு...
அதன் பெயர் நம்பிக்கை! அந்தக் கிராமத்தின் பெயர் 'அமைதிச்சோலை'.

திண்டுக்கல் அருகிலுள்ள மலைப்பகுதி ஆடலூர் பன்றிமலை. காபி எஸ்டேட், எலுமிச்சை
தோட்டங்கள் என செழிப்பான பிஸினஸ் ஏரியா. இதன் அடிவாரமான கோம்பை
செக்போஸ்ட்டிலிருந்து 'மல்லாந்து கிடக்கிற கருநாகப்பாம்பு போல' வளைந்து நெளிகிற
பாதைகளில் 7 கி.மீ.தூரம் மலையேறிப் போனால்...மலைச்சரிவில் பொதிந்திருக்கிறது
‘அமைதிச்சோலை'.

'ஏதோ சினிமா ஷூட்டிங்கிற்காக் போடப்பட்ட மினி கிராமத்து செட் போல' நேர்த்தியாக
இருக்கிறது இந்த குக்கிராமம். குடிசை, ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேய்ந்த 64 சிறுவீடுகள்.
நடுநாயகமாக காளியம்மன் கோயில். அதன் முன்பு நண்டுசிண்டுகள் குஷாலாக விளையாட
விசாலமான திடல். மக்கள் தொகை ஐநூறுக்கும் குறைவு. ஆனால் இந்த மக்களின்
ஸ்டேட்டஸ் சுவாரஸ்யமானது... ‘வருஷத்துல ஆறுமாசம் நாங்க மொதலாளிக, அடுத்த
ஆறுமாசம் நாங்க தொழிலாளிக' என்று சிரிக்கிறார்கள். காரணம்-மலைச்சரிவுகளில் இந்த மக்கள்
அவரவர்களுக்கென துண்டு துண்டாக நிலம் வைத்திருக்கிறார்கள். சீஸன் காலங்களில் மட்டும்
எலுமிச்சை, மாதுளை, கொய்யா என அமோக விளைச்சல். அப்போது கையில் தாராளமாக
பணம் புழங்கும். மற்ற சமயங்களில் மலை உச்சியிலுள்ள எஸ்டேட்டுகளில் வேலைக்குப்
போய்விடுகிறார்கள்.

‘அட...இந்த லைஃப் ஸ்டைல் நல்லாருக்கே' என்று கூலாகச் சொல்பவர்கள் இம்மக்களில்
ஒரு ஆளாக வாழ்ந்து பார்த்தால்தான், மலை இடுக்கில் கசியும் நீர் போல அவர்களது
மன இடுக்கில் கசியும் கண்ணீரை உணரமுடியும்.

ஐந்து வருஷங்களுக்கு முன்புவரை ‘அமைதிச்சோலை'யில் பகலில் மட்டுமே சூரிய
வெளிச்சம் அடிக்கும். இரவானால் முரட்டு இருட்டு அப்பிக்கிடக்கும். சிம்னி. அரிக்கேன்
விளக்குகளின் தயவால்தான் இரவுகளைக் கழித்திருக்கிறார்கள். ''என்ன செய்றதுங்க?
42 வருஷங்களுக்கு முன்னால பஞ்சம் பொழைக்கிறதுக்காக செங்குறிச்சி, மலைக்கேணின்னு
தூரத்து கிராமங்கள்லேர்ந்து போன தலைமுறை இங்க வந்து குடியேறினாங்க. எங்களுக்கும்
பொழப்பு தளப்பு இங்கியேதான்னு ஆகிப்போச்சு'' என்று சின்ன சிரிப்புடன் ஆரம்பித்தார்
பால் கண்ணன். ‘அமைதிச்சோலை'யின் மூத்த குடிமகன்களில் இவரும் ஒருவர்.
''ராத்திரியானா புள்ளகுட்டிகளை வெச்சுகிட்டு நாங்க பட்ட கஷ்டம் கொஞ்சநஞ்சம்
இல்லீங்க. எப்ப சிறுத்தை வரும், காட்டெருமை வரும்னு கொலநடுக்கத்தோடவே
அரைமுழிப்பாவே இருப்போம். அஞ்சு வருஷத்துக்கு முன்னாலதான் குஜராத்துலேர்ந்து
பன்றிமலைக்கு டூரிஸ்ட் வந்தாங்க சிலபேரு. பாக்கறதுக்கு சிங்கு மாதிரி இருந்தாங்க.
கரண்ட் வெளிச்சம் இல்லாம நாங்க படற அவதியை பாத்து மனசு சங்கடப்பட்டு;
‘ஏதாவது ஏற்பாடு பண்றோம்'னு சொல்லிட்டு போனாங்க. சொன்ன வாக்கு தப்பாம
ஒரே மாசத்துல தெருவிளக்குகளோட சேர்த்து, வீட்டுக்கொரு சோலார் சிஸ்டம்னு
மொத்தம் 70 சோலார் சிஸ்டங்களை அனுப்பி வெச்சாங்க. அந்த ஊர் பேர் தெரியாத
மகராசங்களாலதான் இருண்டு கிடந்த எங்க வாழ்க்கையில வெளிச்சமே வந்தது.
அஞ்சு வருஷமாகியும் இன்னமும் இந்த சோலார் சிஸ்டம் நல்ல முறையில
உழைச்சுகிட்டிருக்கு'' என்று நெகிழ்ச்சியாகக் கூறுகிறார் பால் கண்ணன்.

அருகில்...பேரனுக்கு சோறூட்டிக் கொண்டிருந்த மூதாட்டி மரியபுஷ்பம் ‘'வெளிச்சம்
வந்த அன்னிக்கு ராத்திரி எனக்கென்னவோ மறுபடியும் சுதந்திரம் வாங்குன மாதிரி
இருந்துச்சு ராசா! விடிய விடிய ஊர்க்கதைகளைப் பேசிகிட்டு, சந்தோஷமா முழிச்சிக்
கிடந்தோம். பள்ளிக்கூடம் போற புள்ளைகள்லாம் கொண்டாட்டமா வீட்டுப்பாடங்கள
எழுதிச்சு. முன்ன இருந்த பூச்சி பொட்டு, சிறுத்தை பயமெல்லாம் இந்த வெளிச்சம்
வந்ததும் வெலகிப்போயிருச்சு'' என்று அந்த ‘வெளிச்ச இரவை' உணர்ச்சிகரமாக
விவரித்தார்.


குடிசை, ஆஸ்பெஸ்டாஸ் வீடுகள் அத்தனைக்கும் தலா ஒரு சோலார் சிஸ்டம்
பன்றிமலை ஊராட்சி மன்றம் மூலமாக பொருத்தப்பட்டுள்ளது. மாலை மயங்கி இருள்
பரவத்துவங்கியதும் சோலார் இயங்கி வெளிச்சம் பரவி, மலைச்சரிவிலுள்ள வீடுகளும்
தெருவும் 'ஒரு கிரீட்டிங் கார்டு போல' காட்சியளிப்பது அத்தனை அழகு.
இதில் ‘ஆ'ச்சரியம்...கரண்ட்டே இல்லாத வீடுகளுக்கு அரசின் இலவச கலர் டி.வி.யும்,
கேஸ் அடுப்பும் வழங்கப்பட்டுள்ளன. வாங்கிய டி.வி.கள் பெரும்பாலும் பல வீடுகளில்
தூங்கியபடியே உள்ளன. ஒரே ஒரு வீட்டில் மட்டுமே டி.டி.எச்.வசதி.

இங்கு வசிக்கிற அனைத்துக் குடும்பங்களுக்கும் ரேஷன் கார்டு உள்ளது.
340 வாக்காளர்கள் உள்ளனர். தேர்தல் தோறும் மலையேறி இங்கு வந்து ஓட்டு
கேட்பவர்கள், இவர்களது குறைகளை காதோடு கேட்டுப் போவதோடு சரி.
‘'ஒவ்வொரு முறையும் செஞ்சு தர்றோம்னு சொல்லி ஓட்டு வாங்கிட்டுப்
போயிருவாங்க. அப்புறம் அடுத்த வாட்டி வருவாங்க. ஆனாலும் என்னிக்காவது
ஒருநாள் எங்களுக்கான அடிப்படை வசதிகளை செஞ்சு தந்துருவாங்கன்னு
இன்னும் நம்பறோம்'' என்கிறார்கள் இந்த வெள்ளந்தி ஜனங்கள்.

ஓரளவு வெளிச்சம் வந்ததால் இருட்டு தொலைந்தது. அதேசமயம் குடிநீர்
பிரச்னை இம்மக்களை வாட்டி எடுக்கிறது. ஆனால் அதையும் இவர்கள் சமாளிக்கும்
விதம் அபாரம். குடிதண்ணீருக்கென ஒரே ஒரு வாட்டர் டேங்க் அமைத்துத் தந்துள்ளது
ஊராட்சி. வாரம் ஒருமுறை 500 அடிக்குக் கீழேயுள்ள போர் மூலம் இதில் குடிநீர்
நிரப்பப்படுகிறது. ‘'ரெண்டு நாளைக்குக்கூட இந்தத் தண்ணி பத்தாதுங்க. அதனால
நாங்க ஆம்பளைங்களா சேந்து 1 கி.மீ. தூரத்திலிருக்கிற மலை ஓடைக்குப் போயி
தண்ணி எடுத்துட்டு வர்றோம். கையோட குளிச்சு முடிச்சு, துணிகளையும் துவைச்சுட்டு
வந்துர்றோம். தண்ணி இல்லேன்னு கத்திக் கத்தி தொண்டை காஞ்சு போறதவிட,
எட்டத்துல இருக்கற தண்ணியை சிரமம் பாக்காம ஒருநடை போயி நம்ம கிட்டக்க
கொண்டு வந்துட்டா பிரச்னை தீந்துபோகுமில்ல'' என்று பிராக்டிக்கலாகப் பேசுகிறார்
செல்வம் என்ற இலங்கி.

ஓடை நீரால் தாகம் தீர்ந்தது. ஆனால் பஸ் வசதி இல்லாமல் 'ஓடும் பிள்ளைகளாக'
இந்த மக்கள், குறிப்பாக பள்ளி மாணவர்கள் படும் துயரம் இருக்கிறதே...சொல்லித்
தீராத சோகம் அது. முதல் வகுப்பு முதல் ப்ளஸ் டூ வரை படிக்கிற சுமார் 30 மாணவர்கள்
இங்கே உள்ளனர். ஒன்றிலிருந்து பத்தாம் வகுப்பு வரையுள்ள அரசினர் உயர்நிலைப்பள்ளி
மலைக்குக் கீழே 11 கி.மீ. தூரத்தில் தர்மத்துப்பட்டியில் உள்ளது. 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான
அரசு மேல்நிலைப்பள்ளி இருப்பதோ 17 கி.மீ. தூரத்திலுள்ள கன்னிவாடியில். மலைக்கு
மேலுள்ள ஆடலூரிலிருந்து காலையில் கிளம்புகிற மினி பஸ் 9.30 மணிக்குத்தான்
அமைதிச்சோலைக்கு வரும். அதில் ஏறிவரும் மாணவ்ர்கள் தர்மத்துப்பட்டியில் இறங்கி,
ஓட்டமும் நடையுமாக வந்து 10.30 மணியளவில்தான் பள்ளிக்குள் நுழையமுடிகிறது.
‘'நாங்க கிளாஸுக்குள்ள போறதுக்குள்ள முதல் பீரியட் முடிஞ்சுருதுண்ணே. ஆனாலும்
‘லேட் ஆனாலும் பரவால்ல...பாவம் மலையிலேர்ந்து வர்ற பசங்க''ன்னு எங்க ஸ்கூல்ல
பெர்மிஷன் தந்துருக்காங்க'' என்றான் 'அஞ்சாப்பு' படிக்கிற ராசா.

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும்தான் இந்த ‘கருணை அனுமதி'.
ஆனால் 6வது முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த அனுமதி இல்லை. ஆகவே
சரியான நேரத்திற்குள் பள்ளிக்குப் போயாக வேண்டும் என்பதால் அதிகாலையிலேயே
எழுந்து, அரக்கப் பரக்கக் கிளம்புகிறார்கள் பிள்ளைகள். விஷ ஜந்துக்கள் ஊடாடும்
மலைப்பாதையில் 6 கி.மீ. தூரம் உயிரைப் பணயம் வைத்து நடந்து அடிவாரத்திலுள்ள
கோம்பைக்கு வருகிறார்கள். அங்கிருந்து பஸ் பிடித்து கரெக்ட்டான நேரத்திற்கு ‘உள்ளேன்
ஐயா' சொல்கிறார்கள். 'அமைதிச்சோலை'யில் நாம் இருந்தபோது பள்ளி முடிந்து பஸ்ஸில்
வந்து இறங்கியது மாணவப்பட்டாளம். விசாரித்தால் ‘'ரொம்ப கஷ்டமாத்தாண்ணே இருக்கு.
ஆனா படிக்கலேன்னா பெரியாளானதும் இதவிட கஷ்டப்பட வேண்டியிருக்குமே. அதான்
ஓட்டமா ஓடிப் படிக்கறோம். நீங்க மெட்ராஸ்ல இருக்கீங்களே...அங்க கவர்மெண்ட்ல சொல்லி
ஸ்கூல் டயத்துக்குப் போற மாதிரி ஒரு பஸ் விடச்சொல்லுங்கண்ணே'' என்று கோரஸாகச்
சொன்னார்கள். படிப்பதற்காக தடைகளைக் கடந்து நடைபோடும் செருப்பில்லாத அந்த
பிஞ்சுக்கால்களின் உறுதி கண்டு சிலிர்த்தது நமக்கு.

கடைசி பஸ் அது என்பதால், உள்ளே நிற்கக்கூட இடமில்லாதபடி பெருங்கூட்டம்.
விளைவு...மக்கள் பஸ்ஸின் கூரைமீது அமர்ந்து அபாயப் பயணம் செய்வதைப் பார்க்க ‘பகீர்' என்றது
நமக்கு. கேட்டால்.... ''இதான் கடைசி பஸ். இதைவிட்டா அப்புறம் கால்கடுக்க நடந்தே போகணும்.
கரணம் தப்பினா மரணம்னு ஆகிப்போச்சு பொழப்பு'' என்று அதே விரக்தியான பதில்தான் தெறிக்கிறது.
இப்படி ஏற்ற இறக்கங்களுடன் வாழ்க்கை இருந்தாலும் ‘சலிக்காம உழைச்சு நாலுகாசு பாக்கணும்' என்கிற
துடிப்பு இங்குள்ள பெண்களிடம் அதிகம். ''இப்ப இலவம்பஞ்சு சீஸனுங்க. பஞ்சை பிரிச்சுக் குடுத்தம்னா
கிலோவுக்கு நாப்பது ரூவா கிடைக்கும். இதுல வர்ற சம்பாத்தியத்த வெச்சுதான் அடுத்த சீஸன்
வரைக்கும் வாழ்க்கையை ஓட்டணும்ங்க. அதேசமயம் புள்ளகுட்டிகளுக்குன்னு ஏதாச்சும் சேத்து
வெக்கணுமில்ல? அதான் சுய உதவிக்குழு அமைச்சோம். பயிர் பச்சைனு செழிப்பா இருக்கு மலை. ஆடு
மாடுகளை வாங்கிவிட்டா அதுபாட்டுக்கு மேயும், நமக்கும் லாபம்'' என்று சொல்கிற மகாலட்சுமி,
‘விசாலாட்சி களஞ்சியம்' என்ற மகளிர் சுய உதவிக்குழு நடத்துகிறார். குழுவின் மூலம் 2 லட்ச ரூபாய்
லோன் வாங்கி கறவை மாடு, ஆடு வளர்ப்பு என தனது குழுப் பெண்களை லாபத்தோடு கூடிய சுயதொழில்களில்
ஈடுபடுத்தியிருக்கிறார்.

வாழ்வின் ஒவ்வொரு நாளும் தடுக்கி விடுகிற தடைகள் பலப்பல இருந்தும், அதற்காக சோர்ந்து சுருண்டு போகாமல்
நிமிர்ந்து நின்று, பிரச்னைகளை எதிர்கொண்டு வாழ்வை நம்பிக்கையோடு நடத்தி அசரவைக்கிறார்கள் 'அமைதிச்சோலை'
மக்கள்.

24 comments:

butterfly Surya said...

அமைதிச்சோலை அறிமுகத்துக்கு நன்றியண்ணே..

King Viswa said...

சமீப நாட்களில் இந்த திண்டுக்கல் பகுதிகளுக்கு இரண்டு முறை வந்துள்ளேன் (மூன்று மாதங்களில்).

அடுத்த முறை செல்லும்போது கண்டிப்பாக பார்க்கதூண்டிவிட்டது உங்கள் பதிவு.

Thanks.

எம்.பி.உதயசூரியன் said...

//butterfly Surya said...
அமைதிச்சோலை அறிமுகத்துக்கு நன்றியண்ணே..//

சந்தோஷம் பாஸ். உங்கள் வருகை எனக்குப் பெருமை!

எம்.பி.உதயசூரியன் said...

//King Viswa said...அடுத்த முறை செல்லும்போது கண்டிப்பாக பார்க்கதூண்டிவிட்டது உங்கள் பதிவு.//

கிங்கு..கட்டாயம் போய் வாருங்கள் அங்கு! மலையின் மடியில்... அமைதியின் பிடியில்...மனசுக்குக் கிடைக்கும் இனிய விடியல்!

King Viswa said...

கண்டிப்பாக சார்.

சில வேளைகளில் இந்த அவசரகதியுடன் கூடிய உலகில் இருந்து தப்பிக்க இது போன்ற இடங்கள் தான் தேவை.

இரண்டு வருடங்களுக்கு முன்பு செல்போன் டவரோ, இன்டர்நெட் கனேக்ஷனோ இல்லாத ஓரிடத்தில் நெருங்கிய நண்பர்களுடன் கழித்த அந்த மூன்று நாட்கள் இன்னமும் மனதை ரெப்ரெஷ் செய்கின்றன.

அகல்விளக்கு said...

நான் பிறந்து போது எனது ஊரும் இது போலத்தான் இருந்ததாம்...

மேற்குத்தொடர்ச்சி மலையில் இன்னும் இதுபோல நிறைய கிராமங்கள் இருக்கின்றன...

அதில் ஒன்று கடம்பூர் வனப்பகுதியைச் சேர்ந்த 'குன்றி'...

ஆர்வமிருப்பின் அதைப்பற்றியும் எழுதுங்கள்...

:-)

அகல்விளக்கு said...

//‘'வெளிச்சம்
வந்த அன்னிக்கு ராத்திரி எனக்கென்னவோ மறுபடியும் சுதந்திரம் வாங்குன மாதிரி
இருந்துச்சு ராசா! விடிய விடிய ஊர்க்கதைகளைப் பேசிகிட்டு, சந்தோஷமா முழிச்சிக்
கிடந்தோம். பள்ளிக்கூடம் போற புள்ளைகள்லாம் கொண்டாட்டமா வீட்டுப்பாடங்கள
எழுதிச்சு. முன்ன இருந்த பூச்சி பொட்டு, சிறுத்தை பயமெல்லாம் இந்த வெளிச்சம்
வந்ததும் வெலகிப்போயிருச்சு'' என்று அந்த ‘வெளிச்ச இரவை' உணர்ச்சிகரமாக
விவரித்தார். //

கேட்கும் போது இன்புறுகிறது மனது...

:-)

நியோ said...

அமைதிச் சோலை ...
ஒரு தன்னம்பிக்கை சோலை ...
நன்றிகள் உதயா ..
வார்த்தைகளுக்கும் புகைப்படங்களுக்கும் ...

காவேரி கணேஷ் said...

நெஞ்சை தொடும் நம்பிக்கை கட்டுரை.

அண்ணே, தொடர்ந்து எழுதுங்க...

பனங்காட்டான் said...

சுற்றுலாப் பயணிகளூக்கு வேண்டுமென்றால் அது அமைதிச்சோலையாகத் தெரியாலாம், ஆனால் அங்கே மக்கள் படும் அவதிகள் உடனடியாகத் தீர்க்கப்படவேண்டியவை. அங்கு மருத்துவ வசதிகள் எவ்வாறு உள்ளன?
இதைப் படிக்கும் யாரவது அவர்களூக்கு குறைந்தபட்சம் மின்சாரம், பஸ்வசதி கிடைக்க உதவி செய்தார்களானால், நன்றாக இருக்கும்!

manjoorraja said...

நல்லதொரு பதிவு.

ஒருமுறை அமைதிச்சோலையை பார்க்க ஆவல் எழுகிறது.

எம்.பி.உதயசூரியன் said...

//அகல்விளக்கு said...அதில் ஒன்று கடம்பூர் வனப்பகுதியைச் சேர்ந்த 'குன்றி'...ஆர்வமிருப்பின் அதைப்பற்றியும் எழுதுங்கள்..//

’குன்றி’ன் மீது ஆர்வம் ‘ஏற்றி’வைத்துவிட்டீர்கள்
‘அகல்விளக்கு’! கட்டாயம் செல்கிறேன். (அங்கே நண்பர்கள் இருப்பின் சொல்லுங்கள். தகவல்களுக்காக) அனுபவத்தை எழுதுகிறேன்.

எம்.பி.உதயசூரியன் said...

//நியோ said...அமைதிச் சோலை ...
ஒரு தன்னம்பிக்கை சோலை ...
நன்றிகள் உதயா ..
வார்த்தைகளுக்கும் புகைப்படங்களுக்கும்//

அடர்த்தியான பாராட்டுக்கு நன்றி நியோ!

எம்.பி.உதயசூரியன் said...

//காவேரி கணேஷ் said...நெஞ்சை தொடும் நம்பிக்கை கட்டுரை.
அண்ணே, தொடர்ந்து எழுதுங்க...//

மனசைத் தொட்ட வாழ்த்துக்கு மகிழ்ச்சி சகோதரா! அவசியம் தொடர்கிறேன். நீங்களும் தொடருங்கள்.

எம்.பி.உதயசூரியன் said...

//பனங்காட்டான் said...இதைப் படிக்கும் யாரவது அவர்களூக்கு குறைந்தபட்சம் மின்சாரம், பஸ்வசதி கிடைக்க உதவி செய்தார்களானால், நன்றாக இருக்கும்!//

இந்த நல்ல எண்ணமே மனசை நெகிழவைக்கிறது நண்பா! அமைதிச்சோலை மக்களுக்கு விரைவில் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை நம்பிக்கை பிறக்கிறது.

எம்.பி.உதயசூரியன் said...

// manjoorraja said...ஒருமுறை அமைதிச்சோலையை பார்க்க ஆவல் எழுகிறது//

எப்போது என்று சொல்லுங்கள் நண்பா!
அங்கே நமது நண்பர்கள் உங்களுக்கு உதவக் காத்திருப்பார்கள்!

பனங்காட்டான் said...

நன்றி நண்பரே, உங்கள் பதிவு இதற்கு ஒரு வழியாக அமையட்டும்! இது போன்ற இடங்களை ஒருமுறையாவது போய் பார்க்கவேண்டும் அப்போதுதான் நாம் இயற்கையுடன் வாழக் கற்றுக்கொள்வோம்.

venkat said...

nanbarey nalla pathivu
vathukal
aarveeyem.blogspot.com

எம்.பி.உதயசூரியன் said...

//venkat said...nanbarey nalla pathivu vazhthukal//

வாசித்து முடித்ததும் ஒரு வாழ்த்தை அனுப்பி வைத்த அன்புக்கு நன்றி நண்பரே.

வால்பையன் said...

மக்கள் வசிக்கும் இடம்!

tamil blog said...

சார். உங்களின் நடையில் ஒரு அருமையான அறிவான கட்டுரையை படித்தமாதிரி இருந்தது

எம்.பி.உதயசூரியன் said...

//tamil blog said...
சார். உங்களின் நடையில் ஒரு அருமையான அறிவான கட்டுரை//

நன்றி சகோதரா!

ஆர்.கே.சதீஷ்குமார் said...

ரொம்ப நல்ல பதிவு

கவிதை காதலன் said...

அமைதிச்சோலை... எவ்வளவு விஷயங்களை இந்த சின்ன கிராமம் தனக்குள்ள ஒளிச்சிவெச்சிகிட்டு இருக்கு.. உங்களைப்போன்றவர்களின் எழுத்துக்களால் மேலும் இந்த கிராமத்திற்கு ஒளி பரவட்டும்..

 
சுடச்சுட - by Templates para novo blogger