ஒரே ஒரு ஊர்ல ரெண்டே ரெண்டு பேரு!

Monday, August 9, 2010

எம்.பி. உதயசூரியன்

அக்கம்பக்கம் யாருமில்லை. பேச்சுத்துணைக்கு ஆளுமில்லை. சுத்துப்பட்டு 3 கி.மீ. தூரத்திற்கு
மனித நடமாட்டமே இல்லை. அப்படிப்பட்ட ஒரு அத்துவான ஊரில் ஒத்தை வீட்டில்
இருந்தபடி வாழ்க்கையின் கடைசிநாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார்கள் ஒரு வயோதிகத் தம்பதி.வழியும் கண்ணீரும் வறண்டு போகுமளவிற்கு, ஆறாத காயமும் தீராத வலியும் கொண்ட அந்தப் பெருசுகளின் கதையை கமுக்கமாக வைத்திருக்கிறது கரிசல்குளம் கிராமம்.திருநெல்வேலி டூ மதுரை நெடுஞ்சாலையில் அரைமணிநேரம் பயணித்தால் எதிர்ப்படும் பஸ் ஸ்டாப் கங்கைகொண்டான். இங்கிருந்து ’பொசுக்’கெனக் கோபித்துக்கொண்டு இடதுபுறமாகப் பிரிகிறது ஒரு தார்ச்சாலை. போக வர யாருமில்லாமல், போக்குவரத்து ஏதுமில்லாமல் இருக்கும் சோகப்பாதை இது என்பதற்கு நடுரோட்டில் முளைத்துப் படர்ந்திருக்கும் முள்செடிகளே சாட்சி. ஓங்கி வளர்ந்த பனைமரங்களின் ஓலமும், தாங்கிவந்த சோகத்தைச் சொல்ல வார்த்தையின்றி காதோரம் விசும்புகிற காற்றுமாக கனமான துக்கத்தை வழிநெடுக அனுஷ்டிப்பது போலிருக்கும் அந்த கறுப்புச்சாலையில் சில கி.மீ. தூரம் சென்றால்...
‘கரிசல்குளம் சாலை’ என்று ஒரு போர்டு வலதுபுறம் நம்மை வழியனுப்புகிறது.

இன்னமும் புத்தம்புதுசாகவே இருக்கும் அந்த ரோடு ‘திடுக்’கென ஓரிடத்தில் முடிந்து விடுகிறது. சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து நிற்க, அதனுள்ளே... சிதைந்த வீடுகள் புதைந்து கிடக்க, இடிந்து சரிந்த பீடமும், எரிந்து கருகிய உத்திரங்களும் ‘அன்று நடந்த பெருங்கலவரத்தின் மிச்சம் மீதி இதுதான்’ என்ற பீதியைத் தந்தன. ஒருகாலத்தில் நாள்முச்சூடும் தண்ணீர் சேந்திய ஊர் முச்சந்தியில் இருக்கும் கிணறு இன்று சீந்துவாரின்றி பாசிபடிந்து கிடந்தது. தெருவுக்குள் போகும் பாதையை மறித்துக் கிடந்தது முள்வேலி. அதைக் கடந்து உள்ளே நடந்து போனால்...நடுவே தெரு, இருபுறமும் காரைவீடுகள் என பாழடைந்து காணப்பட்டன. ஓரிடத்தில் சின்ன சின்ன பொம்மைகள், தட்டுகள் சிதறிப் போய் கிடந்தன. அல்லு சில்லுகள் ஓடி விளையாடிய அந்த இடமெல்லாம் இப்போது முள்ளு முளைத்து
விட்டது. மர்மமாக நின்றிருந்தன நாலைந்து மின்கம்பங்கள்.
காதுகளைக் கிழிக்கிற காற்றும்,பனையோலைகளின் சலசலப்பும், பலவித பூச்சிகளின் சப்தமும் அமானுஷ்ய உணர்வை ஏற்படுத்த...உடன்வந்த புகைப்படக்காரர் கலீல் ஒருகட்டத்தில் ‘இங்க மனுஷங்க இருக்குறதுக்கான அறிகுறியே இல்லையே’ என்றார் லேசான பயத்துடன். நமக்கும் அதே சந்தேகம் வர ’’அய்யா...அய்யா’ என்று குரல் கொடுத்தோம். ம்ஹும். நிசப்தம். தெருவின் கடைசிமுனையில் ஒரு மெச்சுவீடு மட்டும் சமீபத்திய வெள்ளையடிப்பால் ‘பளிச்’சென்று தெரிந்தது. அங்கு சென்று மீண்டும் குரல் கொடுக்க...பதிலுக்கு ’’ஆருய்யா?’’என்று மெல்லிசான குரல் கேட்டது. ‘சட்’டென அந்த நொடியில் நமக்குள் ஒரு
சிலிர்ப்பு. உடனே வீட்டின் முன்புறம் போனோம். அங்கே...இற்றுப்போன கயிற்றுக் கட்டில் மீது வெற்றுடம்போடு ஒரு வயசாளி மனுஷன் உட்கார்ந்திருந்தார். ’’வாங்கய்யா, ஆளரவமில்லாத ஊர்ல இருக்கற இந்த அனாதைகளைப் பாக்க வந்துருக்கீகளே’’என்று வாயார வரவேற்றார். நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு, கையோடு கொண்டுபோயிருந்த பழங்களைத் தந்தோம். சந்தோஷமாக வாங்கியவர்,‘’எம்பேரு ராமசுப்பு. வயசு 90 ஆச்சு. என் வீட்டாளு பேரு கருப்பாயி. அதுக்கு வயசு 70. காலம் போன கடைசியில ‘ஒனக்கு நான் எனக்கு நீ’னு ரெட்டை உசுரா வாழ்ந்துகிட்டிருக்கோம். என்ன...இந்த இளைப்புதான் தீரலை’’- சொல்லிவிட்டு ‘ம்க்ர்ம்’ என்று இருமிச் செருமியபடி ‘’அதாச்சு பதினாலு வருஷம்’’ என ஆரம்பித்தார்...

”1995ம் வருஷம் வரை சண்டை சச்சரவு இல்லாம ஒத்துமையா இருந்த ஊருய்யா இது. கீழத்தெருவுல நாங்களும், மேலத்தெருவுல அவங்களும் இருந்தோம். மொத்தம் நூத்தம்பது குடும்பம். எல்லாருக்கும் வெவசாயம்தான் பொழப்பு. காடுகரையில பொழுதுக்கும் பாடுபட்டாதான் சோறு. நிலைமை இப்படியிருக்க எங்க சாதிப் பொண்ணை, மேலத்தெருவுக்கார வேற சாதிப் பையன் காதல்கல்யாணம் பண்ணிகிட்டான்.
இனம் இனத்தோட, ஜனம் ஜனத்தோட இருந்தாத்தான மரியாதை. அதை இந்த ஜோடி கெடுத்துருச்சு.இதனால ரெண்டு சைடுக்கும் உள்மனசுல புகைச்சல். 96ல் அசலூர்ல இருந்து வந்த ஒரு வெட்டிப்பய ஊதிவிட, வந்தது வெனை. மூணு தலக்கட்டா தாயிபுள்ளைகளா வாழ்ந்தவங்களுக்குள்ள சாதிச்சண்டை உண்டாகி வெட்டிகிட்டாங்க. எங்க பய ஒருத்தனோட தலையை துண்டாக்கிட்டாங்க அவங்க ஆளுங்க. பழிக்குப் பழியா எங்க பசங்களும் வெறி கொண்டு கெளம்ப...வெட்டு, குத்து, வீடுகளுக்கு தீவைப்புனு ரெண்டு தரப்புலயும் பயங்கர கலவரம், ஏகப்பட்ட சேதாரம். ஒண்ணுமண்ணா இருந்தவங்க ஒருத்தரை ஒருத்தர் கொன்னாதான் ஆச்சுன்னு நின்னாங்க. பத்து வெரலுக்குள்ள சண்டை வந்து ரெண்டு
கையும் நாசமா போனமாதிரி போச்சுய்யா இந்த ஊரு...’’- மனசில் மறைந்து கிடக்கும்
துயரம் பெரியவரின் பேச்சில் உறைந்து நிற்கிறது.


அப்புறம்? “இனி இந்த ஊருல காலந்தள்ள முடியாதுன்னு ரெண்டு தெருவுக்காரங்களும் ஊரைவிட்டே காலி பண்ணிப் போயிட்டாங்க. உசுருக்குப் பயந்து எம் பசங்க என்னையும், என் வீட்டாளையும் (மனைவி) பக்கத்து ஊருக்கு இழுத்துட்டுப் போனாங்க. போன மறுநாளே என் வீட்டாளை அந்த ஊரானுங்க ‘வந்தேறிக’ன்னு ஏசிப்புட்டானுக. வந்ததே கோவம். “சொந்த ஊரைவிட்டுப் போனதுக்கு இந்த அவமானம் தேவைதான்’னு நாங்க ரெண்டு பேரும் ஆனது ஆகட்டும்னு இங்கியே வந்துட்டோம். ரெண்டு தரப்புலயும் ரத்தவெறி அடங்காத நேரம் அப்போ.
யார் உசுருக்கும் உத்தரவாதம் கெடயாது. எம் மகனும், மகளும் வந்து எம்புட்டோ கெஞ்சி கூப்புட்டுப் பாத்தாங்க. நகரமாட்டேன்னுட்டோம். இன்ஸ்பெக்டர், பிரசிடெண்ட்லாம் வந்து ‘’உனக்கு ஏதாச்சும் ஒண்ணுன்னா நாங்கதான பதில் சொல்லணும், கெளம்புங்க’ன்னாங்க. “பொறந்து வளர்ந்த ஊரை விட்டுப் போறதுன்னா செத்த பெறகுதான் போவோம். உசுரோட இருக்கறப்போ எப்படிப் போகமுடியும் எசமான்?’னு கிடுக்கிப்பிடி போட்டேன். ’பொல்லாத
கெழவருப்பா’னு என் வைராக்கியத்தை பாராட்டிட்டுப் போயிட்டாங்க” - தனது நரைத்த
முறுக்கு மீசையை திருகிவிட்டு இருமியபடி சிரித்தவர், ‘’ஆனா எனக்கு சரிசமானமான தெகிரியசாலி என் வீட்டாளு. ‘உன் உசுருக்கு நான் ஜவாப்தாரி’ன்னு சொன்னதுக்கு, ‘எமனே வந்தாலும் என்னைத் தாண்டிதான் உன்னைத் தொடமுடியும்யா’னு நின்னவ அவ!” என்று பெருமிதப்பட்டார். தற்காப்புக்காக அப்போது வைத்துப் பழகிய அருவாள், இப்போதும் பழக்கதோஷத்தில் பெரியவரின் கட்டிலின் கீழேயே கிடக்கிறது.

”ஆமா, அம்மா எங்கேய்யா?” என்றோம். உடனே கட்டிலிலிருந்து இறங்கி, வீட்டு வாசலைத் தாண்டி நின்று, எதிரே கூப்பிடு தூரத்திலிருக்கும் தோட்டத்தை நோக்கி “எலே கருப்பி’என்று குரல் கொடுத்தார். “தோ வாரேன் மாமோய்’’ என்று பதில் குரல் கேட்டதுமே, பெரியவர் “எங்கன இருந்தாலும் என் சத்தம் கேக்கற தூரத்திலேயேதான் இருப்பா. இந்த இளைப்பு வந்து நாந்தான் தளர்ந்துட்டேன். அவ இன்னும் சுறுசுறுப்புல கொமரிகணக்கா இருப்பா” என்று பூரித்துச் சிரித்தார். அடுத்த சிலநிமிடங்களில் ஓட்டமும் நடையுமாக வந்து சேர்ந்தார் கருப்பாயி. வறுமைக்கோலத்திலும் உழைப்பின் சின்னமாகத் தெரிந்தார். “கண்டுக்க ஆளில்லாத
எங்களை கண்காணா தூரத்திலிருந்து பாக்க வந்துருக்கீகளே ராசா” என்று வாஞ்சையாகப் பேசினார்.

பையிலிருந்த ரேசன் அரிசியைக் காட்டி “இன்னிக்கு கஞ்சிக்கு இதுதான் ராசா. ஒரு டம்ளர் அரிசி, கொஞ்சம் பருப்பு போட்டா சோறு, கொளம்பு ரெடி. ஆனா இவருக்கு மட்டும் டெய்லி ஒரு பீடிக்கட்டு வேணும். அதான் இவருக்கு பிரியமானது” என்று அக்கறையாகக் கணவரைப் பார்க்கிறார். “சரி, நீங்களாவது சொல்லுங்க, இப்படி தன்னந்தனியா வாழறதுக்கு பயம் வரலையா, வருத்தமா இல்லையா?” என்றோம். கூர்மையாக நம்மைப் பார்த்தபடி கருப்பாயி சொன்னார்...”சத்தியமா சொல்றேன் ராசா, சுத்தமா பயங் கெடையாது. கொஞ்சங்கூட
வருத்தமும் இல்ல. மனுஷங்களோட இருந்தாத்தான இந்த ரெண்டு இம்சைகளுக்கும் ஆளாகித் தொலையணும். இப்ப அது இல்ல. எங்களுக்கு ராவு, பகல் கெடையாது.மழை, வெயில் கெடையாது. ஒனக்கு நான், எனக்கு நீன்னு காலத்தைக் கழிக்கிறோம். ஒரு பால்மாடு இருக்கு. அதோட பாலை வித்து எங்க ஜீவனம் நடக்குது. பாழடைஞ்ச கெணத்துல இருக்கற பாசித்தண்ணியத்தான் காச்சி குடிக்கறோம். மகராசன் புண்ணியத்துல கரண்ட்டு இருக்கு.
சொந்த பந்தம், மனுஷ மக்க, ஆடு மாடுகன்னு நெறஞ்ச வாழ்வு வாழ்ந்தோம். ஆரு கண்ணு பட்டுச்சோ ஊரு செதறிப்போச்சு. நாங்களும் இப்பிடி அனாதியாகிப் போனோம். ஆனாலும் அதோ எங்க கொலசாமி முருகன் அருளால ஒரு கொறையும் இல்லை. கரிசல்குளத்து ராசா ராணி மாதிரி வாழறோம் சாமி” - ’பாமர ஞானி’ போலப் பேசுகிறார் கருப்பாயி அம்மாள்.
இவர்களது வீட்டுக்குப் பக்கத்திலேயே சின்னதாக ஒரு முருகன் கோயில். இதைமுன்னின்று கட்டியவர் பெரியவர் ராமசுப்புதான். ஒவ்வொரு வைகாசி மாதமும் இங்கு சாமி கும்பிடு நடக்கும்.

நேரம் செல்லச்செல்ல அந்த வெறுமையான சூழல் நம் மனதை என்னவோ செய்கிறது. ‘இந்தச் சூழலில் இவர்களுக்கு எப்படித்தான் கழிகிறது பொழுது?’. தம்பதியிடம் கேட்டோம். ”அதை ஏன் ராசா கேக்கறீங்க?” என்று கருப்பாயி அம்மாள் வெட்கப்பட, “அப்பிடிக் கேளுய்யா என் சிங்கக்குட்டி. இப்ப நாங்க வாழறது மறுவாழ்க்கை. வயசுப்புள்ளைக மாதிரி சந்தோஷமா வாழறோம். எங்க எளவயசுக் கதைகளை பேசிப்பேசி தீர்க்கறோம். இந்த பதினாலு வருஷமா ஒருத்தர் பேச்சை ஒருத்தர் மீறினதில்ல. அப்பிடின்னா பாத்துக்கங்களேன்” - ராமசுப்பு கண்சிமிட்டி சொல்ல, குறுக்கிட்ட கருப்பாயி “ஆமா, இவுகளுக்கு இப்பதான்
பதினாறு வயசுன்னு நெனப்பு” என்று கேலி செய்ய...நம்மோடு சேர்ந்து இருவருக்கும் வெடித்த பெருஞ்சிரிப்பை ரசித்து விசிலடித்தது, நெடுங்காலமாக விசும்பிக் கொண்டிருந்த கரிசல்குளத்துக் காற்று!

படங்கள்: எம். கலீல் ரஹ்மான்
நன்றி: புதிய தலைமுறை

19 comments:

அகல்விளக்கு said...

:)

Guru said...

ஒரே ஒரு ஊர்ல ரெண்டு பேர் - நல்ல பதிவு சார். ஒரு சிறிய பிரச்னை எவ்ளோ விளைவுகளை உண்டாக்குது பாருங்க.
அதெல்லாம் சரி, நீங்க ஏன் சார் ஒரே ஒரு மாசத்துல ஒரு பதிவு மட்டும் போடறீங்க? உங்க கிட்ட நெறைய பதிவுகள் எதிர்பார்க்கிறோம். சூரியன்னா தினம் உதிக்கனும். உங்க வேலைகளுக்கு நடுவுல அட்லீஸ்ட் வாரம் ஒரு முறையாவது பதிவு போடுங்க சார்.

Mohamed Faaique said...

இதை படித்தவுடன் ஒரு நல்ல படைப்பை படித்த திருப்தி அடைந்தேன்

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

என்னவொரு தம்பதிகள்..?

என்னவொரு மனம்..?

ச்சே.. இதுதான்யா வாழ்க்கை..!

அண்ணே.. அற்புதமான விஷயத்தை எடுத்துப் போட்டிருக்கீங்க.. நல்லது.. நன்றி..!

எம்.பி.உதயசூரியன் said...

//அகல்விளக்கு said...:)//

திரி நுனி அளவுக்கு சிரிச்சிருக்கீங்க அகல்விளக்கு! தேங்க்ஸ்!

எம்.பி.உதயசூரியன் said...

// Guru said...அதெல்லாம் சரி, நீங்க ஏன் சார் ஒரே ஒரு மாசத்துல ஒரு பதிவு மட்டும் போடறீங்க? //

இதுக்குப் பேருதான் ‘குரு’ம்புங்கிறதோ?
இனிமேல் ரெகுலரா பதிவு போடறேன் குருஜி.

எம்.பி.உதயசூரியன் said...

//Mohamed Faaique said...ஒரு நல்ல படைப்பை படித்த திருப்தி அடைந்தேன்//

மகிழ்ச்சி நண்பரே.

எம்.பி.உதயசூரியன் said...

// உண்மைத் தமிழன்...அண்ணே.. அற்புதமான விஷயத்தை எடுத்துப் போட்டிருக்கீங்க//

அனுபவித்துப் படித்ததற்கு மகிழ்ச்சி சகோதரா!

ஜோ/Joe said...

மேன்மக்கள்

அது ஒரு கனாக் காலம் said...

ஆஹா ... என்ன மாதிரியான ஒரு ஜோடி ... அருமை .. எப்போதும் நல்லது நினை , நல்லது செய் ..ஆனால் இந்த மாதிரியான சூழ்நிலையில் , பயமில்லாமல் சுவாசிப்பதே கஷ்டம் , ஆனால் அவர்கள் , ...அருமை , அருமை இங்கிருந்தே அவர்களை மானசீகமாக வணங்குகிறேன்

Anonymous said...

read this on talaimurai book.and now in blog.u have great skills in narrating an incident.i expect u to blog often.thanx for ur tamil

காவேரி கணேஷ் said...

சகா,

ஆதர்ச தம்பதிகள்னு ஒரு வார்த்தை மேல்தட்டு மக்கள் உபயோகிக்கும்.
அந்த ஆதர்ச தம்பதிகள் பட்டத்த இவங்களுக்கு கொடுங்க அண்ணே.

எம்.பி.உதயசூரியன் said...

//ஜோ/Joe said...மேன்மக்கள்//

’ஜோ’ர்!

எம்.பி.உதயசூரியன் said...

//அது ஒரு கனாக் காலம் said...
ஆஹா ... என்ன மாதிரியான ஒரு ஜோடி ... அருமை.. இங்கிருந்தே அவர்களை மானசீகமாக வணங்குகிறேன்//

தலைவணங்குகிறேன் நண்பரே!

எம்.பி.உதயசூரியன் said...

// காவேரி கணேஷ் said...சகா,
அந்த ஆதர்ச தம்பதிகள் பட்டத்த இவங்களுக்கு கொடுங்க//

’தாமிரபரணி’ தம்பதியை ‘காவேரி’ வாழ்த்துகிறது!

எம்.பி.உதயசூரியன் said...

//Anonymous said...read this on talaimurai book.and now in blog.u have great skills in narrating an incident.//

முகமும், பெயரும் சொல்லாத நண்பரே, உங்களின் மனமார்ந்த பாராட்டுக்கு அன்பும், நன்றியும். ‘புதிய தலைமுறை’ வாசிப்பதற்கும் மகிழ்ச்சி.

கவிதை காதலன் said...

*யாருமே இல்லாவிடினும்
அவர்களுக்கிடையில்
வாழ்ந்து கொண்டிருந்தது
காதல்*


எத்தனை சுவாரஸ்யமான மனிதர்களை சந்திக்கிறீர்கள். அவர்களைச்சுற்றி எத்தனைவிதமான கதைகள். வாழ்க்கை ரொம்பவும் சுவாரஸ்யமானது அப்படிங்கிறது உங்களைப்போன்றவர்கள் வாழ்ந்து காட்டும் போதுதான் உணர்ந்து கொள்ள முடிகிறது.. அருமையான பதிவு சார். ஒரு சின்ன வேண்டுகோள். அடிக்கடி எழுதுங்கள் சார்

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

நம் கூட ஒரு துணை இருந்தால் போதும்!
வாழ்க்கை ஒரு அற்புத கவிதையாய் ஓடி விடும். நடுவில் மக்கள் எதற்கு?

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

மனுஷப் பசங்களே இல்லாத ஊரில்...
அவரகளிருவரும் வாழ்வது இலக்கியம்!
அந்த தம்பதிகள் நூறாண்டுகாலம் வாழ்க!
நோய் நொடியில்லாமல் வாழ்க என
ஜனத்திரள் மிகுந்த, பக்கத்து வீட்டில் யார் இருக்கிரார்கள் என்கிற ஸ்மரணை கூட இல்லாத ஒரு அடுக்கு மாடி குடி இருப்பிலிருந்து வாழ்த்துகிறேன்!

 
சுடச்சுட - by Templates para novo blogger