அப்பாவின் சட்டை

Friday, August 28, 2009


ஏழாப்பு படிக்கையில்
என் முட்டிக்காலுக்கும்
கீழே தொங்கும்
அப்பாவின் சட்டை


போட்டுப் பார்த்து
பொய்மீசை முறுக்க
அப்பாவின் ஜாடையென்பர்
அம்மாவும் பாட்டியும்


தங்கச்சி பாவம்
தரையில் பாவும்
அப்பா சட்டையை
வேட்டியாக மடித்துக்கட்டி
தப்படி வைப்பதற்குள்
தடுக்கி விழுவாள்
கெக்கலிக்கும் வீடு


முனியாண்டி விலாஸ் பார்சல்
ரோஸ்ட் தோசை மாதிரி
ரெண்டு கையையும்
சுருட்டியிருப்பார் அப்பா


கசங்கிய ரூவாய் சில்லறையென
சமயங்களில் அதனுள்
புதையல் சிக்கும்


சில பொழுதுகளில்
நைந்து போன
சிகரெட் மட்டும்


எம்.ஜி.ஆர். உடுத்தின
சந்தன நிறத்தில்தான்
அப்பாவின் சட்டைகளும்


ஆறேழு வைத்திருப்பார்
அத்தனையும் அவர் வாசம்
காலரிலும் கம்முக்கட்டிலும்
பாண்ட்ஸ் பவுடர் ஜாஸ்தி


அடித்துத் துவைத்தால்
அம்மாவையே அடிப்பார்
குழந்தையை கொஞ்சுவதாக
கும்ம வேணும் நுரையால்


இஸ்திரி போட்டெடுத்தால்
அலுமினியத் தகடாக
மினுக்கணும் அவர் சட்டை


இப்போதெல்லாம்
அப்பா அணிபவை
வெள்ளை வெளிர்நீலமென
விலையதிக ரகங்களில்
நான் தந்த சட்டைகளே


ஜோப்பு நிறைய பணமிருந்தும்
விருப்ப நிற சட்டைகளை
எடுப்பதில்லையே ஏன் அப்பா?


பதில் கிடைத்தது
அப்பா சட்டைகளை
பால்யத்தில் போல
அணிந்து பார்த்ததில்...


ஒவ்வொரு சட்டையிலும்
மூச்சை நிறைக்குது
அப்பாவின் வாசத்தைவிட
புத்திரபாசத்தின் மணம்

21 comments:

Sampath said...

நல்லாத்தான் இருக்கு .. :-) .. அப்படியே இதையும் படித்து பாருங்கள் ..

http://ilavanji.blogspot.com/2005/03/blog-post_15.html

முரளிகண்ணன் said...

நல்லாயிருக்குங்க

Vijayashankar said...

நல்லாயிருக்கு!

வினோத்கெளதம் said...

தல

கலக்கிட்டிங்க.
என்ன திடிர்னு கவிதை..?

sreeja said...

அருமை.

Sridhar said...

50வது பதிவுக்கு வாழ்துகள். நல்லா இருக்கு

எம்.பி.உதயசூரியன் said...

//Sampath said... நல்லாத்தான் இருக்கு .. :-) //

சட்டை பண்ணதுக்கு சந்தோஷம் தலைவா!

எம்.பி.உதயசூரியன் said...

//முரளிகண்ணன் said...
நல்லாயிருக்குங்க//

மகிழ்ச்சி நண்பரே!

எம்.பி.உதயசூரியன் said...

//Vijayashankar said...
நல்லாயிருக்கு!//

நீங்க போட்டிருக்கிற சட்டை மாதிரியே!

எம்.பி.உதயசூரியன் said...

//வினோத்கெளதம் said... தல
கலக்கிட்டிங்க.என்ன திடிர்னு கவிதை..?//

எழுத்துல பட்டையக் கிளப்பறதுக்கு காரணமான அப்பாவுக்காக...இந்த
50வது பதிவுல கவிதை சட்டையை போட்டுட்டேன் வினோத்!

எம்.பி.உதயசூரியன் said...

//sreeja said... அருமை.//

பட்டன் சைஸ் பாராட்டுக்கு மகிழ்ச்சி ஸ்ரீ!

எம்.பி.உதயசூரியன் said...

//Sridhar said... 50வது பதிவுக்கு வாழ்த்துகள். நல்லா இருக்கு//

ரொம்ப சந்தோஷம் சார். நீங்க இங்க இருந்திருந்தா ‘பொன்விழா பதிவு’ன்னு
ஒரு ட்ரீட் தந்திருப்பீங்க! ஹ்ஹ்ம்ம்!

ஈ ரா said...

கவிதை பிரமாதம்..

பானு said...

Nice one Sir!

பானு said...

New Template,New 'பஞ்ச்'சர் பாண்டி,கவிதை,.... கலக்குறீங்க......Sir!

Joe said...

நல்ல கவிதை.

50-ஆவது இடுகைக்கு வாழ்த்துக்கள்!

butterfly Surya said...

கவிஞர் உதய சூரியனுக்கு ஜே...

தேவன் மாயம் said...

ஒவ்வொரு சட்டையிலும்
மூச்சை நிறைக்குது
அப்பாவின் வாசத்தைவிட
புத்திரபாசத்தின் மணம்
///

உணர்வுகள் அருமை!!!

கவிதை காதலன் said...

இப்பொழுதுதான் முதல் முறையாக உங்கள் பக்கத்திற்கு வந்திருக்கிறேன். நிறைய சுவாரஸ்யமான விஷயங்களை கொடுத்திருக்கிறீர்கள். மிகவும் அருமையாக இருக்கிறது. இனி தொடர்ந்து படிக்கிறேன்.
இனி நானும் உங்கள் விசிறியே.

கவிதை காதலன் said...

பொதுவாக பசங்களுக்கு அப்பா மீது இருக்கும் பாசத்தைவிட அம்மாமீது தான் அதிக பாசமிருக்கும்.
என்னதான் பிள்ளைகளுக்காகவே உழைத்தாலும் அப்பா மீது ஏனோ பிள்ளைகள் அதிக ஆர்வம் காட்டுவதில்லை.
ஆனால் உங்களின் இந்தக்கவிதை என் அப்பாவை சற்றே கண் முன் கொண்டுவந்து நிறுத்தியது.
அதிலும் அப்பாவின் சட்டை மிகவும் பாதித்தது.

Rajmohan said...

naan mudhal muRaiyaaga ungaL pakkaththaip paarthane. sujathavin santhippilirunthu appaa sattai varai anaiththum arumai

 
சுடச்சுட - by Templates para novo blogger