கலைஞரின் ‘சின்னப்பையன்’!

Wednesday, June 3, 2009


பத்திரிகையாளர் என்ற அனுபவத்தில் நான்பத்திரம் எழுதி பத்திரப்படுத்த வேண்டியபொக்கிஷ அனுபவங்கள் பல உண்டு. அதில் முக்கியமானது கலைஞர் சந்திப்பு!

இதில் சுவாரஸ்யமானது..கலைஞரை நான் சந்தித்த முதல்

சந்திப்புக்கு காரணம்..எம்.நடராஜன் (சசிகலாவின் கணவர்!). அப்போது நான்ஜூனியர் விகடனின் மதுரை நிருபர். 1993&94ல் மதுரை தி.மு..வில் பெரிய கோஷ்டி பூசல்! ‘ஆள் இல்லாத ஈசல் கட்சியிலேயே பூசல் வெடித்து வேஷ்டி உருவும்போது..ஆல்போல்

விழுதுவிட்ட கட்சிகளில் சில பழுதுகள் இருக்கத்தானே செய்யும்!

இந்த பூசல்களை நான் தொடர்ச்சியாக எழுத..அவை ஜூ.வி.யில் கவர்ஸ்டோரியாக..கட்டுரையாக தொடர்ந்து வெளியாகிக்கொண்டிருந்தது. பிறகு தலைநகர் நிருபராக சென்னை வந்தேன். நியூஸ் கவரேஜ் செய்ய ஏரியா பிரித்ததில்..‘சூரியா.. உங்களுக்கு அறிவாலயம்...தி.மு..அலுவலகம்’’ என்று அனுப்பிவைத்தது விகடன் அலுவலகம்.

நல்ல காலம்..இருபெரும் கழகங்களிலும் எனக்குதோதுகள் இருந்ததால்..செய்திகள் மூலம்நாரதர் கலகம் செய்ய ஏதுவாகப் போனது! கலைஞர் ப்ரஸ்மீட்,செயற்குழு கூட்டங்கள், அறிவாலய முணுமுணுப்புகள் என என் பெயரில் தி.மு.. தொடர் செய்திகள்திமுதிமுவென தொடர்ந்தது.

இதற்கிடையே அன்றையஅம்மா ஆட்சியில் சும்மா இருக்காமல் எம்.நடராஜன் ஒரு போலீஸ்காரரை தாக்கிய வழக்கில் கைதாகி சிறையில் இருந்தார். இதை வைத்து நான் சும்மா இருக்காமல் சசிகலா பாடுவதுபோல்நான் பாடும் பாட்டு என்று ஒரு கிண்டல் பாடல் எழுதினேன். இதுஆனந்த விகடன் முதல்பக்கத்தில் அரஸ் கார்ட்டூனோடு கலர்ஃபுல் கலகலப்பாக வெளியானது.

மறுநாள்..இதே பாட்டுமுரசொலியில் மறுபிரசுரம் ஆனது.

அன்று..‘விகடன் அலுவலகம் வந்த சீனியர் பத்திரிகையாளர் சின்னக்குத்தூசி, துணை ஆசிரியர் ராவ் சார் முன்பு என்னை அழைத்து ‘‘உங்க பாடலை கலைஞர் ரொம்ப ரசிச்சு

பாராட்டினார். அதைமுரசொலியிலும் மறுபிரசுரம் பண்ணச்சொன்னார்’’ என்று

சொல்ல..சிலிர்த்துப்போனேன்.

அடுத்த சில நாட்களில் அறிவாலயத்தில் ஒரு ப்ரஸ்மீட். முடிந்து வெளியே வந்தால் (மறைந்த) முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா என்னை அழைத்தார். என்மீது பேரன்பு கொண்டவர். நல்ல வாசகர். ‘‘விகடன்ல வந்த அந்த பாட்டை தலைவர் ரொம்ப ரசிச்சாரு’’என்றார். ‘‘ரொம்ப சந்தோஷம் சார். சின்னக்குத்தூசி சாரும் சொன்னாரு’’ என்றேன். ‘‘தலைவர் ஃப்ரீயா இருந்தா பாத்துரலாம் வாங்க!’’ என்று ப்ரியத்தோடு அழைத்துப்போனார்.

கலைஞர் அறை. ஆலடி அருணா உதவியால் உள்ளே காலடி எடுத்துவைத்தேன்.நேரெதிரே சோபாவில்..தொண்டர்கள் போற்றித்துதிக்கும் கலைஞர் வீற்றிருந்தார். அருகில் கூரான நாசியை தடவி யோசித்தபடி பேராசிரியர் அன்பழகன்! இருகரம் கூப்பி இருவரையும் வணங்கினேன்.

‘‘யாரிது?’’ என்று ஏறிட்டுப்பார்த்த கலைஞரிடம் ‘‘தலைவரே!

தம்பிதான் எம்.பி.உதயசூரியன். விகடன் நிருபர்!’’ என்று ஆலடி அருணா அறிமுகப்படுத்த..‘தேனாக மொழிபேசும் தமிழன்னை ஆணாகப் பிறந்ததுபோல் அமர்ந்திருந்த கலைஞர்..

புருவம் தூக்கி புன்னகைத்தபடி ‘‘வாப்பா! நீதான் உதயசூரியனா?’’ என்றார்.

‘‘ஆமாங்க ஐயா!’’ என்றேன் பவ்யமாக. ‘‘எந்த ஊருப்பா?’’ என்றார் தன் உதடு வருடியபடி. ‘‘மதுரைங்க ஐயா’’ என்றேன். ‘‘உதயசூரியன்னு யாரோ புனைபெயர்ல எழுதறாங்கன்னு நெனைச்சேன். சின்னக்குத்தூசிதான் உன்னைப்பத்தி சொன்னாரு. நம்ம பேரை வெச்சுகிட்டு நம்மையே திட்டி எழுதறியேப்பா!’’ என்று சிரித்தார்.

அப்படியே பேராசிரியரிடம் டேபிள் மேலிருந்த ஆனந்த விகடனை எடுத்து அந்த முதல் பக்கத்தை காட்டியபடி..என்னைப் பார்த்து ‘‘அந்தசின்னம்மா பாடற பாட்டை நையாண்டியா நல்லா எழுதியிருந்தேப்பா!’’ என்று பாராட்ட..‘‘உங்கள் வாழ்த்து எனக்கான பாக்கியம் ஐயா!’’ என்று நெகிழ்ந்து சொன்னேன். புன்னகையோடு கலைஞர் தலையசைக்க..பூரிப்போடு விடைபெற்றேன்.

இதுபோல கலைஞருடன் பல சந்திப்புகள், பேட்டிகள் என நிகழ்ந்ததும்..நான் மகிழ்ந்ததும் எனக்கானகையடக்க வரலாற்றுப் பதிப்பின் கைதட்டல் பெறும் மதிப்பான பக்கங்கள்! இந்த வரிசையில் 2005ல் நிகழ்ந்த இன்னொரு அனுபவம்..

அப்போது நான்குங்குமம் பொறுப்பாசிரியர். பிரபல யோகா

மாஸ்டரான டி.கே.வி.தேசிகாச்சார்..கலைஞரின் யோகா குரு! இவரது அமைப்பு நடத்திய விழாவில் ‘‘என்னை 82 வயது இளைஞன் என்றுதான் இன்றைக்கும் சொல்கிறார்கள். அதை நான் கிண்டலாக எடுத்துக்கொள்வதில்லை. உண்மையிலேயே இந்த யோகா

பயிற்சியால்தான் நான் இன்றளவும் இளைஞனாக இருக்கிறேன்!’’ என்று கலைஞர் பேசியதுதான் ஹைலைட்!

இதுபோதாதா? கலைஞர் ஒரு எவர்க்ரீன் இளைஞர் அல்லவா? இந்த வயதிலும்செயல் புயல் போல இவ்வளவு சுறுசுறுப்பாக விறுவிறுப்பாக கலைஞர் செயல்படுவதைப்பற்றிகலைஞரின் ஒருநாள்!’’ என்ற தலைப்பில் அவரது தினப்படி நிகழ்ச்சி நிரலை வசீகர நடையில் நான் எழுதியிருந்தேன்.

அன்றுமுரசொலி அலுவலகம் வந்திருந்தார் கலைஞர். இந்த கட்டுரையை எடுத்துக்கொண்டு அவரை சந்திக்கச்சென்றேன். அன்று பார்த்துகலைஞரின் நிழல் சண்முகநாதன் வரவில்லை. கலைஞரின் கூடுதல் செயலாளர் ராஜமாணிக்கம் ..எஸ். இருந்தார். அவரிடம் தகவலை சொன்னேன். சுடச்சுட கட்டுரையைப் படித்தவர் ‘‘உள்ளே வாங்க’’ என்று அழைத்துச்சென்றார்.

உள்ளே..கலைஞர் அமர்ந்திருக்க, எதிரே சின்னக்குத்தூசியார். வழக்கம்போல வணக்கம் வைத்தேன். சிரிப்போடு வரவேற்ற சின்னக்குத்தூசியார் ‘‘தம்பி

நம்ம உதயசூரியன்’’ என்று சொல்லி முடித்ததுமே..வெடித்தது கலைஞரின் சிலேடை விளையாட்டு! ‘‘நம்மசின்னப்பையனை (சின்னத்தை சொல்கிறார்!) தெரியாதா?’’ என்று அவர் சொல்ல..அறையெங்கும் தெறித்தது சிரிப்பு நுரை!

அடுத்து என் முகக்குறிப்பை உணர்ந்து கலைஞர் சொன்னது..வெடிச்சிரிப்பை கிளப்பியது! அடுத்த பதிவில் அது...!

27 comments:

ஜோ/Joe said...

அடுத்த பதிவை சீக்கிரமா போடுங்க.

ரொம்ப நல்லவன் said...

கடலை காண்பதே
பலருக்கு கனவாகயிருக்க
கண்டு பேசியது உங்களது
பாக்கியம்.

சென்ஷி said...

//.‘தேனாக மொழிபேசும் தமிழன்னை ஆணாகப் பிறந்ததுபோல் அமர்ந்திருந்த‘ கலைஞர்..//

கலக்குறீங்க சார்! :-))))))

அன்புச்செல்வன் said...

தமிழக முதல்வரின் 86வது பிறந்தநாளையொட்டி முத்தாய்ப்பாய் ஒரு பதிவு. வாழ்த்துக்கள்!

Thamizhan said...

உழைப்பால் உயர்ந்தார் என்பதிலே யாரும் பாராட்டித்தான் ஆக வேண்டும்.
எவ்வளவோ சிறப்பாக பிறந்த நாள் கொண்டாடவேண்டியவரைக் காலம் காயப் படுத்தி விட்டது.
தமிழரின் வாழ்வில் இவருக்கு அக்கறையில்லை யென்று ஈழத்தமிழர்கள் குறை சொல்ல வைத்து விட்டது.
காங்கிரசும்,இத்தாலி அம்மையாரும் ஏமாற்றி இதோ செய்கிறோம்,அதோ செய்கிறோம் என்று துரோகம் செய்து விட்டார்கள் என்பது தான் உண்மையாக் இருக்க முடியும் என்று நம்புகின்றோம்.
அவராக முடிவெடுத்த உண்ணா போராட்டம் இந்தியாவையும் உலகையும் கொஞ்சம் ஆட்டிய போது
ராஜபக்சேவும்,சிதம்பரமும் சதி செய்து விட்டார்கள் என்றே நம்பவேண்டும்.

saravanaperumal said...

‘தேனாக மொழிபேசும் தமிழன்னை ஆணாகப் பிறந்ததுபோல் அமர்ந்திருந்த‘ கலைஞர்' அருமையான சொல் விளையாட்டு...

現在建築式™ said...

My Blog
http://www.wretch.cc/blog/markacey
Nice to meet you
Hsinchu, Taiwan

உடன்பிறப்பு said...

கலைஞர் பிறந்தநாள் சிறப்பாக வெளியிட்டத்துக்கு நன்றி தோழர்

Sridhar said...

// ‘‘யாரிது?’’ என்று ஏறிட்டுப்பார்த்த கலைஞரிடம் ‘‘தலைவரே! தம்பிதான் எம்.பி.உதயசூரியன் //

கலைஞரிடம் அறிமுகம் ஆகும்போதே
எம்.பி. என்று அறிவிப்பு. நிதர்சனமாக வாழ்த்துக்கள்

சூரியன் said...

//நம்ம உதயசூரியன்’’ என்று சொல்லி முடித்ததுமே..வெடித்தது கலைஞரின் சிலேடை விளையாட்டு! ‘‘நம்ம ‘சின்ன’ப்பையனை (சின்னத்தை சொல்கிறார்!) தெரியாதா?’’ என்று அவர் சொல்ல..அறையெங்கும் தெறித்தது சிரிப்பு நுரை!//

எப்பவும் நீங்க திமுகவுக்கு மட்டும்தான் பிரச்சாரம் பண்ண முடியும்..

எப்போ அடுத்து ?..

எம்.பி.உதயசூரியன் said...

ஜோ/Joe said... அடுத்த பதிவை சீக்கிரமா போடுங்க.

ஜோரா போட்டுரலாம் ஜோ!

எம்.பி.உதயசூரியன் said...

// ரொம்ப நல்லவன் said...

கடலை காண்பதே
பலருக்கு கனவாகயிருக்க
கண்டு பேசியது உங்களது
பாக்கியம்.//

இதைவிட விமர்சிக்க வேறில்லை வாக்கியம்!

எம்.பி.உதயசூரியன் said...

சென்ஷி said... //.‘தேனாக மொழிபேசும் தமிழன்னை ஆணாகப் பிறந்ததுபோல் அமர்ந்திருந்த‘ கலைஞர்..// கலக்குறீங்க சார்! :-))))))

ஜென்ஸியின் குரலாக தித்திக்கிறது சென்ஷியின் வாழ்த்து!

எம்.பி.உதயசூரியன் said...

//அன்புச்செல்வன் said... முதல்வரின் 86வது பிறந்தநாளையொட்டி முத்தாய்ப்பாய் ஒரு பதிவு.//

முத்தாய்ப்புக்கு ‘அன்பு‘தானே முத்திரை!

எம்.பி.உதயசூரியன் said...

// tamizhan said... உழைப்பால் உயர்ந்தார் என்பதிலே யாரும் பாராட்டித்தான் ஆக வேண்டும்.//

தமிழன் பேச்சுக்கு மறுபேச்சு ஏது?

எம்.பி.உதயசூரியன் said...

//saravanaperumal said... ‘தேனாக மொழிபேசும் தமிழன்னை ஆணாகப் பிறந்ததுபோல் அமர்ந்திருந்த‘ கலைஞர்'.. அருமையான சொல் விளையாட்டு..//

விருது வழங்குவீர்கள் என்ற உற்சாகத்தில் தானாக வருது!

எம்.பி.உதயசூரியன் said...

現在建築式™ said...

My Blog
http://www.wretch.cc/blog/markacey
Nice to meet you
Hsinchu, Taiwa

வாழ்த்துக்கு மொழி இல்லை..இதை வாசிக்க வழி இல்லை!

எம்.பி.உதயசூரியன் said...

// உடன்பிறப்பு said... கலைஞர் பிறந்தநாள் சிறப்பாக வெளியிட்டதுக்கு நன்றி தோழர்//

உடன்பிறப்பே..உடனுக்குடன் பதில் தருவதுதான் உன் சிறப்பே!

எம்.பி.உதயசூரியன் said...

//sridhar said ‘‘யாரிது?’’ என்று ஏறிட்டுப்பார்த்த கலைஞரிடம் ‘‘தலைவரே! தம்பிதான் எம்.பி.உதயசூரியன் // கலைஞரிடம் அறிமுகம் ஆகும்போதே
எம்.பி. என்று அறிவிப்பு. நிதர்சனமாக வாழ்த்துக்கள்//

வழிகாட்ட நீங்கள் இருக்கையிலே..யாரும் எளிதாக அமரலாம் மேற்படி ‘இருக்கையிலே‘!‘

எம்.பி.உதயசூரியன் said...

// சூரியன் said... எப்பவும் நீங்க திமுகவுக்கு மட்டும்தான் பிரச்சாரம் பண்ண முடியும்..//

தம்பி சூரியன்..நீங்ககூட தேர்தல்ல போட்டியிடணும்னா தி.மு.க.வுல மட்டும்தான் போட்டியிட முடியும்!

பானு said...

As usual அசத்துரிங்க Sir.அப்போ 2016ல்,நீங்க தான் CM என்பது உறுதி.நான்,துளசி கோபால் மேடம் போன்றவர்கள் வெளியிலிருந்து ஆதரவு தருகிறோம்,Sir.

வெங்கிராஜா said...

//ஜென்ஸியின் குரலாக தித்திக்கிறது சென்ஷியின் வாழ்த்து!//

ஆஹா.. ஆஹா! வாங்க வாங்க... தொடர்பதிவுக்கும் கூப்பிட்டிருக்குறேன்... பதில்களை உங்க சிலேடை சித்து விளையாட்டை எதிர்பார்க்குறோம்!

எம்.பி.உதயசூரியன் said...

// பானு said.அப்போ 2016ல்,நீங்க தான் CM என்பது உறுதி.நான்,துளசி கோபால் மேடம் போன்றவர்கள் வெளியிலிருந்து ஆதரவு தருகிறோம்//

ஐயையோ பானு மேடம்..நான் ‘‘வெளியில’’ இருக்கணும்னா நீங்க வெளியிலிருந்துதான் ஆதரவு தரணும்!

எம்.பி.உதயசூரியன் said...

// வெங்கிராஜா said... பதில்களில் உங்க சிலேடை சித்து விளையாட்டை எதிர்பார்க்குறோம்!//

சித்து சித்திக்கணும்னா சித்தநேரம் பொறுங்க வெங்கி!

ஈ ரா said...

உதய் சார்,

பதிவைக்காட்டிலும், பதில் பின்னூட்டங்களில் உங்கள் பதிவைக் காண்பிப்பதை பதிவாகக் கொண்டு இருக்கிறீர்கள்....

வாழ்த்துக்கள்...

அன்புடன்

ஈ ரா

செந்தில்குமார் said...

தாமதமாக வந்து படித்தமைக்கு மன்னிக்கவும்...

வழக்கம்போல வார்த்தை விளையாட்டுக்கள் அருமை..

//வெடித்தது கலைஞரின் சிலேடை விளையாட்டு! ‘‘நம்ம ‘சின்ன’ப்பையனை (சின்னத்தை சொல்கிறார்!) தெரியாதா?’’ என்று அவர் சொல்ல..//

பெரியவரோட (கலைஞர்) சிலேடை விளையாட்டுக்கு உங்களோட வார்த்தை ஜாலத்த ஒப்பிட்டால் அது மிகையாகாது ...

அருமை.. அடுத்த பதிவுக்கு காத்திருக்கோம் !

TKG said...

தேனாக மொழிபேசும் தமிழன்னை ஆணாகப் பிறந்ததுபோல் அமர்ந்திருந்த‘ கலைஞர்..

aaha enna arumaiyana vaarthaigal!

innum niraiy edhirparkirom,thangalidamirundhu.

Er.GANESAN/COIMBATORE

 
சுடச்சுட - by Templates para novo blogger