கவுண்டமணியும்... டெலஸ்கோப்பும்!

Sunday, April 5, 2009

கவுண்டமணியோட மொத்த வெய்ட் குத்துமதிப்பா 60 கிலோன்னு வெச்சுக்கங்க. அதுல நக்கல் 20 கிலோ.. நையாண்டி 20 கிலோ.. லொள்ளு 10 கிலோ.. எகத்தாளம் 10 கிலோன்னு கலந்துகட்டி இருக்கறதாலதான்.. காமெடியில அவர் பொளந்து கட்டிகிட்டிருக்காரு!

பொதுவா.. மத்த நடிகர்களைப் போல கவுண்டமணியை ‘திடுதிப்பு’ன்னு நிருபர்கள் சந்திச்சுர முடியாது. ‘அதுக்கு ஏதுரா வழி’ன்னா.. அவரோட நண்பர்கள் யாரையாச்சும் ‘தூதரா’ வெச்சுகிட்டா.. ஈஸியா கவுண்டரை சந்திச்சுரலாம்.

அப்படித்தான் நான் ஒருமுறை சந்திச்சேன். அந்த ‘மீட்டிங்கி’ இப்போ நெனச்சாலும் ‘குபீர்னு’ சிரிப்பு பொத்துக்கும்.

2005&ல் ‘குங்குமம்’ பொறுப்பாசிரியராக நானிருந்த காலம். சத்யராஜின் ரவுசு அனுபவங்களை வெச்சு ‘துள்ளுவதோ லொள்ளு’னு ஒரு தொடர் எழுதினேன்.

ஒரு கட்டத்துல ‘இது சத்யராஜ் தொடரா.. இல்ல.. கவுண்டமணி தொடரா’ங்கிற அளவுக்கு ரெண்டுபேரும் ‘குண்டக்க மண்டக்க’னு அடிச்ச லூட்டியில அந்த தொடர் முழுசும் ‘ரண்டக்க ரண்டக்க’னு செம ரவுசு.

வாரந்தவறாம கவுண்டரும் தொடரை ரசிச்சு படிச்சிருக்காரு. எதேச்சையா நம்ம ஃப்ரெண்ட் ‘சினிமா நிருபர்’ ஆர்.எஸ். கார்த்திக்கிடம் தொடர் பத்தி பாராட்டின கவுண்டர், ‘‘எங்க கூடவே இருந்து பாத்தமாதிரி எழுதியிருக்காரே. யாருப்பா இவரு’னு விசாரிச்சிருக்காரு. உடனே கார்த்திக் என்கிட்டே சொன்னார்.

தடாலடியா ஒருநாள் சாயந்திரம்.. டிரைவ்&இன்&உட்லண்ட்ஸ்ல (இப்போ இந்த ஸ்பாட் இல்ல!) கவுண்டமணியை சந்திச்சேன். வெள்ளை வேட்டி&சட்டையில உள்ளூர் அரசியல்வாதி மாதிரி இருந்தார்.

காருக்குள்ள உக்காந்துகிட்டோம். கொங்கு தமிழில் வெங்கலக்குரலில் கவுண்டரின் கச்சேரி ஆரம்பிச்சது. ‘‘வணக்கம் சார்! நாங்கள்லாம் உங்களோட தீவிர ரசிகர்கள்’’ என்றேன்

உடனே கவுண்டர் தனது முகத்தை ஒரு மாதிரி கோணிக்கிட்டே.. ‘‘ஆமாமா.. இதே பொய்யைத்தான் எல்லாரும் சொல்றாங்க!’’னு சொல்ல.. குபீர்னு சிரிச்சுட்டேன்.
‘‘இவ்வளவு பிஸியிலயும் நீங்க..!’’னு நான் முடிக்கறதுக்குள்ளயே.. குறுக்கிட்ட கவுண்டர் ‘‘ம்க்கும்! பயங்ங்கர பிஸி!’’னு நக்கலடிச்சுட்டு ஒரு ஃப்ளாஷ்பேக்கை சொல்ல ஆரம்பிச்சார்.

‘‘இப்பிடித்தான்.. ‘அடிதடி’ படத்துக்கு முன்னால மூணுமாசம், நானும், சத்யராஜூம் பயங்ங்கர பிஸ்ஸி. ரெண்டு பேருக்கும் ஒரு படம்கூட இல்ல. வீட்டுக்குள்ள உக்காந்து மோட்டுவளய பாத்துக்கிட்டிருந்தோம்.

திடீர்னு ஒரு நாள் சத்யராஜ் ஃபோன் பண்ணி ‘அண்ணே.. என்ன பண்ணிகிட்டிருக்கீங்க’னு கேட்டாரு. ‘மொட்ட மாடியில இருக்கேன்’னேன். ‘ஐயையோ.. பட்டப்பகல்ல மொட்ட வெயில்ல மொட்ட மாடியில என்ன பண்றீங்க’னு பதறுனாரு. ‘ஒரு டெலஸ்கோப்ப வெச்சுக்கிட்டு கண்ணுக்கெட்டின தூரம் வரைக்கும் தேடிப்பாக்கறேன். ஒரு புரொட்யூசர்கூட தெரிய மாட்டேங்கறாரே.. தப்பித்தவறி தெருமுக்குல நுழைஞ்ச ஒருத்தரும் எஸ்கேப் ஆயிட்டாரே’ன்னேன். ரெண்டுபேரும் பேய்த்தனமா வாய்விட்டு சிரிச்சோம்!’’

கவுண்டர் சொல்லி முடிக்க.. சிரிச்சு புரையேறிடுச்சு எனக்கு.

‘‘இல்ல.. வாரந்தவறாம நம்ம தொடரை படிச்சிருக்கீங்களே.. பெரிய விஷயம் சார்!’’னு நைசா ஐஸ் வெச்சேன்.

‘‘அட நீங்க வேற! வாராவாரம் எதுக்குப் படிச்சேன்னா.. நம்ம சத்யராஜ் லொள்ளு புடிச்ச ஆளு! ஏதாச்சும் எசகுபிசகா நம்மளப் பத்தி சொல்லியிருப்பாரோனு ஒரு பயம்தான்!’’ என்றார் பட்டென.

‘‘அப்பிடி என்ன சார் எசகுபிசகான மேட்டரு!’’ என்றேன் அப்பாவியாக. பல்லை கடிச்சபடி ‘‘ஹை! இந்த ஜாலக்கு வேல நம்மகிட்ட வேண்டாம் தம்பி! சத்யராஜ்தான் எல்லாத்தயும் சொல்லியிருப்பார்ல!’’ என்றார் கிசுகிசுப்பாக.

பேரர் காபி தர ‘‘சக்கரை இல்லாத காபிய இங்க கொண்டாப்பா! தம்பிக்கு சக்கரை போட்டத குடு!’’ என்றார் அக்கறையாக. அதே ஜோரில்., ‘‘ஆமா.. என் உடம்புல சுகர் இருக்குங்கறானுக. அப்போ சக்கரை இல்லாம இந்த கருமாந்தரத்தை (காபியை) குடிக்கறவங்களுக்கு கொஞ்சமாச்சும் இனிக்கணும்ல! என்ன நான் சொல்றது?’’னு கவுண்டர் சீரியஸா கேக்க.. குடிச்ச காபியை முழுங்க முடியாம தொண்டையிலயே சிரிச்சேன்.

இப்படியே தினுசுதினுசா சில ரவுசுகளை அள்ளிவிட்டு சிரிப்பாலேயே அலற வெச்ச கவுண்டரின் செல் சிணுங்கவும்.. ‘‘பெறகு பாக்கலாம் தம்பி! வரட்டா’’னு ‘விருட்’டுனு கௌம்பிட்டாரு!

‘நான்&ஸ்டாப்’பாக சிரிக்கவெச்ச ‘துள்ளுவதோ லொள்ளு’ தொடருக்கு 20 வாரத்தோடு ஃபுல்ஸ்டாப் வெச்சேன். அடுத்த நாள்.. என் செல்லுக்கு ஏதோ ஒரு புது நம்பரிலிருந்து கால். எடுத்துப் பேசினால்.. எதிர்முனையில் கவுண்டமணி!

‘‘சொல்லுங்க சார்!’’னேன் குஷியாக. எடுத்த எடுப்பிலேயே டாப்&கியர் லொள்ளுல எகிறினாரு பாருங்க கவுண்டர்.. ‘‘என்னமோ சத்யராஜ் பெருமையா சொன்னாரு.. ‘நம்ம லொள்ளு தொடர் நுறு வாரம் வரும்’னு. ஆனா.. போதும்டா சாமினு பொசுக்குனு முடிச்சுட்டீங்களாக்கும்!’’

‘கெக்கெக்கே’னு நான் சிரிக்க.. ‘போச்சுரா’னு ஃபோனை வெச்சாரு கவுண்டர்.

11 comments:

M.P.UDAYASOORIYAN said...

anna. varuga. nalla sirippom....

-anthanan

MAHESHWAR said...

Varuga Varuga Blog ulagathukku Varuga. Chuda Chuda neraya mattera alli vidunga. Ungal Pani sirakkattum.

R. said...

வருக வருக உங்களை போலவே உங்கள் எழுத்தும் இனிமை.

கிரி said...

//ரெண்டு பேருக்கும் ஒரு படம்கூட இல்ல. வீட்டுக்குள்ள உக்காந்து மோட்டுவளய பாத்துக்கிட்டிருந்தோம்.//

ஹா ஹா ஹா

கவுண்டர் கவுண்டர் தான்..நான் கவுண்டரின் தீவிர ரசிகன் ..:-)))

இந்த வோர்ட் வேர்பிகேசனை எடுத்துட்டீங்கன்னா நல்லா இருக்கும்

வண்ணத்துபூச்சியார் said...

கலக்கல். கவுண்டர் எவ்வளவு நகைச்சுவையானவர் என்பதை அழகா சொல்லியிருகிங்க.. ஆனா கோபமும் பயங்கரமா வரும்னு திரைப்பட நண்பர் கூறினார். அப்படியா..??

நிறைய எழுதுங்கள்.

காத்திருக்கிறோம்..

வண்ணத்துபூச்சியார் said...

Sir, இந்த கலக்கல் பதிவுகளை தமிலிஷல் போட்டிருக்கேன்.

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்....

நன்றி. வாழ்த்துகள்

Joe said...

கவுண்டமணியின் தீவிர ரசிகன் நான்.

அவருக்கு பின் நகைச்சுவை நடிகர்கள் எத்தனை பேர் வந்தாலும் அவருக்கு இணையாக யாரும் தமிழ் திரையுலகில் இன்னும் வரவில்லை.

M.P.UDAYASOORIYAN said...

வண்ணத்துபூச்சியார் said...
super.. super.. super...

பங்காரு அடிகள பற்றி ஏதாவது சிறப்பு செய்தி இருக்கா சார்.

ஆவலாய் இருக்கேன்.
//vaazhthukku mahizhchi vannathupoochiyar! adigalar anubavam viraivil varudhu sir!-udayasooriyan1=.

பட்டாம்பூச்சி said...

//கவுண்டமணியின் தீவிர ரசிகன் நான்.

அவருக்கு பின் நகைச்சுவை நடிகர்கள் எத்தனை பேர் வந்தாலும் அவருக்கு இணையாக யாரும் தமிழ் திரையுலகில் இன்னும் வரவில்லை.//

Repeateeeeyyy :)!!!
I am also a big fan of him.

Anonymous said...

வெறும் நாலு பதிவுதானா? எனக்கு பத்தலே.நாள் பூரா படிக்கிற அளவுக்கு நிறைய சிரிக்க வைங்க!

வெங்கிராஜா said...

புதிய பதிவரா? நம்ப முடியலையே! அருமை அருமை! கவுண்டமணி அண்ணன் இப்போது களத்தில் இல்லாத போதும் அவரது ரசிகர்கள் திரள் குறயவே இல்லை, சிறுவர்கள் கூட அவரது நகைச்சுவையை ரசிக்கிறார்கள். அவரது நேர்காணல் கூட குபீர் சிரிப்பை வரவழைக்கிறது. காலத்தை வெல்லும் கலைஞர் அவர்.

 
சுடச்சுட - by Templates para novo blogger