Tuesday, April 7, 2009
நறுக்குனுசொன்னா.. நானும், அந்தணனும் 'ஒருதாய் மக்கள்'. நக்கல்.. நையாண்டி.. சிக்கல்.. சிரமம்.. அவசிய நட்பு.. ரகசிய தப்பு.. இப்படி அத்தனையையும் பரஸ்பரம் கிழிச்சுத் துவைக்கிற 'இளிச்சவாயர்கள்'.
'அந்தணன் வந்துட்டாரா? அப்போ உதயசூரியன் எங்கே'னு கேக்கற அளவுக்கு பத்திரிகை வட்டாரத்தில் நெருக்கமான நண்பர்கள் நாங்க. கிட்டத்தட்ட 'ரெட்டைக்குழல் டுப்பாக்கி!' அவர் என்னை 'அண்ணா'னு அழைப்பதும், பதிலுக்கு நான் அவரை 'அண்ணா'னு விளிப்பதும் இருவருக்குமான 'முதல் மரியாதை!' சமயங்களில் எங்க நண்பர்களே 'டேய்.. இதுல யார்ரா உண்மையான அண்ணா?''னு ஏகத்துக்கு கிண்டலடிப்பது எங்களுக்கான 'அவமரியாதை'.
நானும் அந்தணனும் உலகமகா ரசிகர்கள். அதிலும் அடிக்கடி அவர் 'அண்ணா.. நீங்க பெரிய அறிவாளி'னு என்னையும், பதிலுக்கு 'அண்ணா.. நீங்க மகா புத்திசாலி'னு அவரையும் 'அபூர்வசகோதர்கள்' பட 'தெய்வமே.. எங்கியோ போயிட்டீங்க' காமெடி போல அடிக்கடி உச்சிமோந்து மெச்சிக்கறது வழக்கம். அடப்பாவிகளா... இதுக்கே சிரிக்கிறீங்களா? இன்னும் இருக்கு கூத்து.
சிவசங்கர் பாபாங்கிற சாமியாரை நாங்க சந்திச்சதும், அவரோட செல்ல(£)ப்பிள்ளைகளானதும் அந்தணனோட 'அடிக்கடி' பிளாக்குல முந்தி வந்து உலகமே சந்தி சிரிச்சிடுச்சு. ஆனா அதுல சொல்லப்படாத இன்னொரு காமெடி இது.
சிவசங்கர் பாபாவோட மகிமைகள் பத்தி அவரோட வி.ஐ.பி. பக்தர்கள் நெக்குருகி சொல்ற அனுபவங்களை தொகுத்து 'அண்டங்களை தாண்டிய அன்பு'ங்கிற பேர்ல நாங்க ஒரு புத்தகம் போட்டோம். அதுக்காக நூத்துக்கும் மேற்பட்ட பலதுறை வி.ஐ.பிகளோட ஃபோன் நம்பரை பாபாகிட்டேருந்து கலெக்ட் பண்ணிகிட்டோம்.
தினமும் காலையில பத்து டு ஆறு மணி வரை அத்தனை வி.ஐ.பி.க்களுக்கும் ஃபோன் பண்ணி அப்பாயின்ட்மென்ட் வாங்கறது என்னோட வேலை. 'அண்ணா நீங்கதான் அழகா பொறுப்பா(!) பேசுவீங்களே!'னு அந்தணன் தந்திரமா என்னை மந்திரிச்சு விட்டுட்டாரு. நானும் லேசா கிறங்கி வேலையில இறங்கிட்டேன்.
அப்போல்லாம் செல்லுல பேசினா அம்பானியே, 'அம்போ நீ!'னு ஆயிடற காலம். அதனால சுமாரான ஒரு பொண்ணு வேலை பார்க்கற லோக்கல் டெலிபோன் பூத்துக்கு போயிருவோம். லிஸ்ட்ல இருக்குற வி.ஐ.பி.க்களுக்கு போன் பண்ணி 'வணக்கம் சார்.. என் பேரு எம்.பி.உதயசூரியன். 'அண்டங்களை தாண்டிய அன்பு'ங்கிற டைட்டில்ல சிவசங்கர் பாபாவை பத்தி ஒரு புக்கு போடறோம். உங்களோட கருத்தை, அனுபவத்தை பதிவு செய்யனும். அப்பாயின்ட்மென்ட் வேணும் சார்..'னு பள்ளிக்கூட பிள்ளைகளோட 'பாபா பிளாக்ஷீப்' மாதிரி ஒரு மாசமா இதான் என்னோட வாய்ப்பாடு.
சமயங்கள்ல எதிர்முனையில ரிசீவரை வெச்சதுகூட தெரியாம இதே பல்லவியை பாடிட்டிருப்பேன். பக்கத்துல அந்தணன் பல்லை கடிச்சிகிட்டு பவ்யமா நின்னுட்டிருப்பாரு.. கால் கட்டானது தெரிஞ்சு சைலண்டா பூத் பொண்ணு சிரிக்கறதை பார்த்தபடி!
ஒரு ஞாயிற்றுக்கிழமை.. அடுத்தடுத்து அந்தணன் நம்பர் போட்டுத்தர.. காலையிலிருந்தே இதே பாபா 'பஞ்சப்பாட்டை' பாட ஆரம்பிச்சிட்டேன். இந்த வரிசையில ஒரு பிரபல 'நல்லி'தயம் கொண்ட அதிபருக்கு போன் போட்டோம். லைன் சரியா கிடைக்காததுனால, வழக்கம் போல கால் கட்டாயிடுச்சுன்னு நெனச்ச நான் எக்கச்சக்க கடுப்பாகி ''வணக்கம் சார்! 'அண்டங்களை தாண்டிய பிண்டம்'னு ஒரு புக்கு போடறோம்'னு பேசி தொலைச்சிட்டேன். திடீர்னு பார்த்தா.. எதிர்முனையில அந்த வி.ஐ.பி. ''என்னது.. அண்டம்.. பிண்டம்னு? யார் நீ?''னு பதறிப்போய் கேட்க.. சிதறி ஓடிகிட்டே சிரிச்சோம் பாருங்க சிரிப்பு.. பூத் பொண்ணு எங்கள மிரண்டு பார்த்து அரண்டுது கண்ணுலே நிக்குது.
அதுக்கு பிறகு ரெண்டு நாளா எந்த நம்பருக்கு டயல் பண்ணாலும் 'அண்டங்களை தாண்டிய பிண்டம்'னே என் வாயில வந்து தொலைய.. ''அண்ணா.. ஒழப்பாதீங்கன்னா.. இது நம்ம பொழப்புணா''னு கையெடுத்து கும்பிட்டுகிட்டே கதறி(!) சிரிச்சாரு அந்தணன்.
'சரி.. நட்பை காப்பத்தணுமேனு வாய்க்கு ஜிப்பை போட்டுகிட்டு மறுபடியும் குப்பை கொட்ட ஆரம்பிச்சோம்! தொடர்ந்து 'கால்' போட்டதுல ஒரு பிரபல ஜோசியர் 'கைக்கு' எட்டினாரு. 'சிக்கிச்சுரா பட்சி'னு அவரைப் பார்க்க பிச்சிக்கிட்டு ஓடினோம். தி.நகர்ல ஒரு அப்பார்ட்மெண்ட்ல செகண்ட் ஃப்ளோர்ல அவர் வீடு.
நானும் அந்தணனும் நல்லாத்தான் உள்ள போனோம். பதவிசா உக்கார்ந்தோம். ஓமக்குச்சி நரசிம்மன் மாதிரி ஒடிசலா இருந்தாரு ஜோசியரு. எங்களயே ஒரு மாதிரியா உன்னிப்பா பார்த்தாரு. குறிப்பா 'தகாத இடங்கள பார்க்கற பலான ஆசாமி' மாதிரி இருந்தது அவர் பார்வை' உடனே நான் அந்தணன் காதுல கிசிகிசுப்பா.. 'அண்ணே.. இந்த ஆளு 'உஷ்ஷ¨' மாதிரி பாக்கறார்ணே! எந்திரிங்க.. எஸ்கேப் ஆயிரலாம்'னேன். உடனே அந்தணன் வெடிச்ச சிரிப்பை உதட்டிலேயே மென்னு கொன்னுட்டு என் பக்கமே திரும்பாம ஜோசியரையே பார்த்துக்கிட்டிருந்தாரு!
விட்டதா விதி? அடுத்த நிமிஷமே சும்மா சுடிதார் போட்டு வெளையாடிச்சு பாருங்க! அந்த ஜோசியர் எங்கள பாத்து பிஞ்சு குரலில் ''வந்த விஷயத்தை சொல்லுங்க!''னாரு. உடனே அந்தணன் ''சிவசங்கர் பாபா பத்தி உங்க கருத்து'' என்றதுமே கைகளை தலைக்குமேல் தூக்கி கும்பிட்ட ஜோசியர் ''ஓ.. அது ஒரு பரப்பிரம்மம்.. பரம்பொருள்.. மனுஷரூபத்தில் வாழற தெய்வம்!'' என்று புல்லரித்தார். 'இதான் சாக்கு!'னு நானும் ''அதான் சாமி.. பாபா பத்தி 'அண்டங்களை தாண்டிய''னு ஆரம்பிக்க.. எங்கே நான் வழக்கம்போல பிண்டம்னு உளறிடுவேனோன்னு அரண்டு போன அந்தணன் என்னை திகிலா பார்த்தபடி ஏதோ சொல்ல வாய் எடுத்தாரு.
அம்புட்டுதான்.. விதி இப்ப ஜோசியர் வாய்ல 'விக்கெட்டை' போட்டுச்சு.. ''என்ன? அண்டங்களை தாண்டியவா? என்னாது தாண்டுது''னு பீதியோட ஜோசியர் ஏதோ பில்லி சூனிய ரேஞ்சுக்கு கண்ணை விரிச்சு கேக்க.. அதுவரை 'செத்துப் போன எங்க பாட்டிய நெனச்சு வருத்தப்பட்டுக்கிட்டே' நான் அடக்கி வெச்சிருந்த ஆர்,டி,எக்ஸ், சிரிப்பு அதிரடியா வெடிச்சிச்சு பாருங்க! அடுத்த செகண்ட் எடுத்தேன் ஓட்டம். செகண்ட் ப்ளோர்லேர்ந்து வாசல் வரைக்கும் சிரிச்சுக்கிட்டே ஓடிவந்து அந்தணன் பைக்ல குப்புறப்படுத்து குலுங்கி குலுங்கி சிரிச்சு தீர்த்தேன்.
அரை மணி நேரம் கழிஞ்சது. ஆளை இன்னும் காணலை. ஐயையோ.. அந்தணன் கதி? லேசா நோட்டம் விட்டேன். தூரத்துல ரொம்ப டயர்டா கண்ணெல்லாம் கலங்கி முழிபிதுங்கி பரிதாபமா நடந்துவந்தார் அந்தணன். ''அண்ணே.. என்னாச்சு''னு நான் கேட்ட அடுத்த நொடி ''அடிக்கடி என்னை மட்டும் இப்படி மாட்டிவிட்டுட்டு நீங்க ஓடி போயிடறீங்களே'னு பெருங்குரலெடுத்து 'கெக்கெகே'னு சிரிச்ச அந்தணன் அப்பறமா சொன்ன 'பின்குறிப்பை' கேட்டு நான் சிரிக்க.. தெருவே குலுங்கிச்சு.
பின்குறிப்பு:
''எதுக்கு அந்த பையன் அப்பிடி சிரிச்சுகிட்டு ஓடறாரு''னு ஜோசியர் கேட்க.. அந்தணன் பதில் சொல்ல முடியாமல் 'குபுக்கென சிரிக்க..' ''பாபா.. உங்கள மாதிரி உருப்படாததுகளை ஏன் வேலைக்கு வெச்சிருக்காரு''னு கோபப்பட்ட ஜோசியர்.. பாபாவின் ஆசிரமத்துக்கே போன் பண்ணி எங்கள டிஸ்மிஸ் பண்ண சொல்ல 'அடக்கொடுமையே'னு அந்தணனும் அலறியடிச்சு சிரிச்சபடி ஓடிவந்திருக்கிறார்.
ஆக.. ஒருவழியாக இவ்வளவு சிரமத்தில், பாபாவின் ஆசிரமத்தில் 'அண்டங்களை தாண்டிய அன்பு' நூல் வெற்றிகரமாக வெளியானது. அன்றைக்கு நடந்ததும் ஒரு தனிக்காமெடி. அது அப்புறம்.
10 comments:
கலக்கறீங்க சார். தொடரட்டும் உங்கள் சிரிப்பு பணி.
நிஜம்மா நகைச்சுவை பதிவு படிச்சு ரொம்ப நாளாச்சு. மிக்க நன்றி சார்.
என்ன Sense of humuor.. Wow.. கலக்கல்.
மொக்கைகள் நிறைந்த பதிவுலகில் உதயமான எங்கள் உதய சூரியரே.. வாழ்க.
பதிவிடுவதால் பத்து பைசாக்கு பிரயோஜினமில்லைன்னு தயவு செய்து நிறுத்திடாதிங்க..
உங்களை சந்திக்கணும் இயலுமா..??
கலக்கலான நகைச்சுவை.
தொடர்ந்து எழுதுங்கள்.
தமாசு
Nalla irukku sir....nalla comedy..
வண்ணத்துபூச்சியார் said...
நிஜம்மா நகைச்சுவை பதிவு படிச்சு ரொம்ப நாளாச்சு. மிக்க நன்றி சார்.
என்ன Sense of humuor.. Wow.. கலக்கல்.
மொக்கைகள் நிறைந்த பதிவுலகில் உதயமான எங்கள் உதய சூரியரே.. வாழ்க.
பதிவிடுவதால் பத்து பைசாக்கு பிரயோஜினமில்லைன்னு தயவு செய்து நிறுத்திடாதிங்க..
உங்களை சந்திக்கணும் இயலுமா..??
// vannathupoochiyare..natbukku naan adimai. viraivil sandhippom- udayasooriyan.
//உச்சிமோந்து மெச்சிக்கறது //
சூப்பர் தமிழ் விளையாட்டு
அத்தனை பதிவையும் ரசித்துப் படித்தேன்.சிரித்தேன்.
நன்றி சார்.
மிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
johan sir..ungalai vaai viitu sirikka vaikka enakkoru vaaippu idhu.
Post a Comment