மன்சூரலிகான் தந்த குவளை கவலை

Wednesday, April 8, 2009

அரைகிலோ அக்மார்க் புளியை அடிவயித்துல கரைச்சா எப்படியிருக்கும்? மன்சூரலிகானை சந்திச்சா அது புரியும்.

மன்சூர் 'வில்லனா.. கோமாளியா.. வில்லங்கமானவரா'னு பட்டிமன்றமே நடத்தலாம். நெஞ்சுக்கு நேரா சட்டை பட்டனை போடததால மனசுல பட்டதை 'பகீர்' எஃபக்ட்ல பகிரங்கமா பேசிடுவாரு! அதேமாதிரி இங்கிலீஷ் கலக்காம, இவர் பேசற தனித்தமிழ் கேக்கவே செம ஜாலியா இருக்கும்.

படங்களுக்கான பூஜை நடக்கறப்போ பூனைக்குரல்ல பேசினாகூட 'ஏதோ பூனையே கிராஸ் பண்ணிடமாதிரி.. பயங்கர சென்டிமென்ட் பாக்கறது கோலிவுட் வழக்கம். ஆனா, இந்த சென்டிமென்ட்ஸோட செவுள்ல 'பொளேர் பொளேர்'னு அறைஞ்சவரு மன்சூரலிகான். தன்னோட படப்பூஜையையே ராகு காலத்தில் நடத்தி.. குறுக்கும் நெடுக்குமா நூறு பூனைகளை ஓடவிட்டு (இத்தனை 'மியாவ்களை எப்பிடி புடிச்சாரோ?) பூஜைக்கு வந்தவங்களை 'லேபரட்டரி எலி' ரேஞ்சுக்கு மாத்தி கிலி கிளப்பிடுவாரு நம்ம 'புலிகேசி'.

''இந்த சேட்டையெல்லாம் எதுக்கு சார்? படத்துக்கு மலிவான விளம்பரம் தேடவா?''னு ஒரு கொக்கி போட்டா போதும்.. தத்துவமா கக்கி குமிச்சுடுவாரு இந்த 'எதிர்நாயகன்'. (வில்லனுக்கு தமிழ்ல இப்படித்தான் பேருனு சொல்றாரு!)

''ஐயா.. கதையும், நடிப்பும் நல்லாருந்தா எந்தப் படமும் வெற்றிப்படம்தான். அதுல கோட்டை விட்டுட்டு.. இந்த மாதிரி மூடநம்பிக்கைகளுக்கு முக்கியத்துவம் குடுத்தே.. பல தமிழ்ப்ப்படங்கள் முக்கிகிட்டு சாகுது! அந்த மூடப்பழக்கங்களை மூட்டை கட்டறதுக்கான முயற்சிதான் இது!'' கழுத்தை லெப்ட், ரைட், டாப்பு, டௌனு அத்தனை கோணங்களிலும் சாய்ச்சு சாய்ச்சு அவர் பேச.. நம்ம கழுத்துக்கே சுளுக்கு புடிச்சுரும்.

'ஈபிள் டவர்' ரேஞ்சுக்கு பேசிகிட்டே 'இடிஞ்ச சுவர்' மாதிரி இவர் படம் பண்றதுதான் யாருக்குமே புரியாத புதிர்! ''ராஜாதிராஜ.. ராஜகுமார.. ராஜ கம்பீர..''னு கேபிள் வயர் நீளத்துக்கு டைட்டில் வெச்சு இவர் எடுத்த படத்தை கேபிள் டிவியிலகூட பாக்கமுடியலை.

சினிமாவில் வில்லனாக ஒரு ரவுண்டு வந்தது போலவே.. தமிழக அரசியல் கட்சிகளிலும் ஒரு ரவுண்டு சுத்தி வந்து கிறுகிறுத்துப் போனார். பாட்டாளி மக்கள் கட்சியில் மன்சூர் சேர்ந்த புதுசு.. நிறுவனர் டாக்டர் ராமதாஸை சந்திச்சார். ''நேர்ல பாக்கறதவிட படத்துல 'உயரமா தெரியறீங்களே! எப்படி'னு கேட்டாரு டாக்டர்.

உடனே மன்சூர், ''என்னங்கய்யா பண்றது? தமிழ்ப்பட கதாநாயகிகள் எல்லாரும் மும்பையிலேர்ந்து செம கட்டைகளா இறக்குமதி ஆகறார்க. இவங்களை அடிக்கடி துரத்தி கெடுக்க வேண்டியிருக்கு. அதனால அந்த கட்டைங்க உயரத்துக்கு தோதா.. என் காலணில கட்டைய வெச்சு தெச்சுப் போடறதால நானும் உயரமா தெரியறேன்''னு வெகுளியா சொல்ல.. வாய்விட்டுச் சிரிச்சுட்டாரு டாக்டர்.

மன்சூரலிகானோட இன்னொரு கலவர நிலவரம் & கோபம் கீபம் வந்ததுன்னா.. அம்புட்டுதான். இடம், பொருள், ஏவல், சூனியம் எதுவுமே பாக்க மாட்டாரு!

இப்படித்தான் ஒருமுறை& பிரபல தனியார் டிவியில நேயர்கள் இவரோட உரையாடற நிகழ்ச்சி நேரடியா ஒளிபரப்பானது. அஸ்திரம் மாதிரி பாஞ்சு வந்த கேள்விகளுக்கெல்லாம் அசால்ட்டா பதில் சொல்லிகிட்டிருந்தாரு மன்சூர்.

திடீர்னு ஒரு நேயர்.. நேரடியில பேரிடியா ஒரு கேள்வி கேட்டார்.. ''உங்களுக்கெல்லாம் நிஜமாவே ஒரு நடிகருக்கான முகவெட்டு இருக்கா?''னு.

தலையை இடமும், வலமுமா மடக்கி ஆட்டிகிட்டே மன்சூர், ''ஐயா.. நல்ல கேள்வி கேட்டீங்க! இதோ கொஞ்சம் உன்னிப்பா பாருங்க. என் முகத்துல ஒரு வெட்டுக்காயத்தோட தழும்பு தெரியுதா? எனக்கான முகவெட்டு இதுதான்! அதே சமயம் இந்த கேள்வியை கேட்ட உங்க முகரைக்கட்டை எப்பிடி இருக்குனு பாக்க எனக்கும் ஆசை!''னு நேயரோட மூஞ்சியிலேயே அடிக்க.. அரண்டுபோய் 'ஆஃப்' ஆனது நேயரின் அசரீரி.

அடுத்துவந்த ஒரு நேயர் அழகான தமிழில் ''தூங்கும்போதெல்லாம் என் நினைவில் நமீதா வருகிறாரே.. என்னய்யா செய்வது?''னு எகத்தாளமாக கேள்விகேட்க.. மன்சூருக்கு வந்துச்சு பாருங்க கொலைவெறி கோபம்! அது நேரடி ஒளிபரப்பு என்பதையும் மறந்து ஆவேசமான குரலில் ''நமீதா வர்றது நீ தூங்கும்போதா.. உனக்கு தூக்கும்போதா? ஏய்யா.. எவனாவது சொப்பன ஸ்கலித வைத்தியன்கிட்ட கேக்கவேண்டிய கேள்விய என்கிட்ட கேக்கறியே! உனக்கு சொரணை இருக்கா? நீயெல்லாம் தமிழனா?'' என்று சாமியாடியபடியே சைடில் இருக்கும் கேமரா யூனிட் பக்கம் திரும்ப.. உஷாரான டிவி உடனே 'விளம்பர இடைவேளை'க்கு தாவி தப்பியது தனி காமெடி.

அடிக்கடி சர்ச்சைகள்.. சங்கடங்களில் சிக்கிக் கொள்கிற மன்சூரலிகானுக்குள் மகத்தான மனிதநேயம் இருப்பதை மதிச்சே ஆகணும். ஒரு முறை நானும், அந்தணனும் பேட்டிக்காக மன்சூரை அவரோட ஆபீஸில் சந்திச்சோம். பல பதில்களை அச்சுல ஏத்த முடியாதுன்னதும் பிச்சு உதறினாரு.

கொஞ்சநேரத்துல.. திடீர்னு எந்திரிச்சு உள்ளே போன மன்சூர்.. சில நிமிஷம் கழிச்சு எங்களுக்கு டீ கொண்டு வந்து தந்தாரு. தொண்டை காஞ்சு போயிருந்த நானும், அந்தணனும் சூடா ஒரு 'சிப்' அடிச்ச அடுத்த நொடியே.. 'இதென்ன வித்தியாசமான விபரீதமான டேஸ்ட்டா இருக்கே'னு முழிச்சோம்.

பீதி நிலவர எங்க முகத்தை பாத்த மன்சூர் 'ஹேஹே'னு சிரிச்சுகிட்டே.. ''ஐயாக்கள் மன்னிக்கணும்! தேனீர்ல போடறதுக்கு சக்கரை இல்ல.. அதனால ரெண்டு குவளையிலும் ரெண்டு சாக்லெட்டை போட்டு கரைச்சேன். புது சுவையா இருக்கா?'னு கேட்க.. அடுத்த நொடியே.. ப்ளீஸ்.. கட்டுரையின் முதல் பாராவை மறுபடியும் படிங்களேன்!


11 comments:

கிரி said...

ஹா ஹா ஹா செம காமடி .. நல்ல இருக்குங்க உங்க பதிவு

தொடர்ந்து எழுதுங்க

அன்புச்செல்வன் said...

செம காமெடி, சும்மா பிச்சு உதருரீங்க, நகைச்சுவைக் கலந்த எழுத்து நடை ரொம்ப அருமைங்க.கலக்குங்க பாஸ், வாழ்த்துக்கள்!

-அன்புச்செல்வன்(U.S.A)

Jayakumar Vellaiyan said...

Very interesting to read.. ;-)

Sridhar said...

உங்க எழுத்து எஙகள் சுவாசம். இனி இதில்தான் எங்கள் வாசம்

வண்ணத்துபூச்சியார் said...

super.. super.. super...

பங்காரு அடிகள பற்றி ஏதாவது சிறப்பு செய்தி இருக்கா சார்.

ஆவலாய் இருக்கேன்.

M.P.UDAYASOORIYAN said...

anbu sir,unga peyarukku pinnaale irukkara U.S.A.ku artham- Udaya Sooriyanin Anbu.

M.P.UDAYASOORIYAN said...

jayakumar vellayan..thalaiva! unga photo utthi asathudhu. vaanga asathuvom!-udayasooriyan.

Anonymous said...

//ப்ளீஸ்.. கட்டுரையின் முதல் பாராவை மறுபடியும் படிங்களேன்!//

இந்த டெக்னிக்கை நானும் use செய்து இருக்கேன்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அருமை,அருமை
நன்கு சிரித்தேன்.

sowri said...

:) could not control by laughter

M.P.UDAYASOORIYAN said...

sowri sir..'sow'riyama?

 
சுடச்சுட - by Templates para novo blogger