காபி வித் நாகேஷ்!

Monday, June 1, 2009





ரசிக்கும் சீமானே! இது கொஞ்சம் விசித்திரமான பதிவு. ஏழாவது
பாராவுல நீங்க படிக்கப்போற மேட்டரை மட்டும் ‘நகைச்சுவை மேதை’ நாகேஷ் படிச்சாரு! அதோட தொடர்ச்சியை அவர் அச்சுல படிக்க சிச்சுவேஷன் அமையலை. அதனால அந்த மிச்சத்தை அவரை ‘குருவா மெச்சற சிஷ்யர்‘ சென்ஷி இப்போ படிக்கறாரு. இந்த ‘நாகேஷ் பதிவு’ நண்பர் சென்ஷிக்கு சமர்ப்பணம்!

வறுத்த கடலை மெல்ற இந்த வாயால..நம்ம வருத்தத்தையெல்லாம் தீத்த அந்த ‘சிரிப்புக் கடலை’ பத்தி சொல்றதுக்கு வார்த்தைகள் இல்லை! எம்.ஜி.ஆர்.,சிவாஜிங்கற இருபெரும் உலகப்புகழ் திலகங்களோட ‘சினிமா சிரிப்புக்கு’ நாகேஷ்தான் உத்தரவாதம்! தகரத்தைக்கூட தங்கமாக்கற இயக்குனர் சிகரம்
கே.பாலசந்தரோட குணச்சித்திர கேரக்டர்களுக்கு இவர் பேருதான் வேதம்!

காமெடிக்காக கிச்சுகிச்சு மூட்ட வேணாம்..கிம்மிக்ஸ் காட்ட
வேணாம்..ரூம் போட்டு டீம் பூட்டி ஓட்ட வேணாம்..நாகேஷ்னு சொன்னாலே சிரிப்பு
வரும் தன்னாலே! ஒரு பத்திரிகையாளரா..கவுண்டமணியிலேர்ந்து கருணாஸ் வரைக்கும்
பாத்துட்டேன். ஆனா..நாகேஷை மட்டும் சந்திக்க சான்ஸே அமையலை.

நான் ‘கடகட‘ன்னு சிரிக்கறப்போல்லாம் ‘கடைவாய்ப்பல்லுல
மாட்டுன கடுகு மாதிரி’ இது உறுத்திகிட்டே இருந்துச்சு. பத்திரிகை சார்பா நாகேஷ்கிட்ட பேசுறப்போலாம் ‘‘தம்பி..நான் ஹார்ட் பேஷன்ட். என்னை சிரமப்படுத்தாதீங்க’’ன்னே
நாசூக்கா எஸ்கேப் ஆனாரு.

மீனை வலை வீசிப் புடிச்சுரலாம். இவர்..யானை! எப்புடி புடிக்கரதுன்னு புடிபடாம யோசிச்சுகிட்டிருந்தேன். ‘கையில காசில்லாதவனுக்கு ‘மோதிர’ விரல் கைகுடுத்தது மாதிரி’ வசமா சிக்கிச்சு எசமான் ஒரு நியூஸ்! படிச்சேன்..புடிச்சேன்!

டைரக்டர் கே.பாலசந்தரும், நாகேஷும் கலந்துகிட்ட ஒரு விழா நியூஸ் அது. நாகேஷ் பேசறப்போ, பாலசந்தரை நெகிழ்ந்து புகழ்ந்து ‘‘உங்களோட பெரிய பலமே பேனாதான். உங்க எழுத்துக்கு நான் அடிமை. எழுதறதை மட்டும் விட்றாதீங்க. எழுதிகிட்டே இருங்க’’னு உருக்கமா சொல்ல.. அதையே இறுக்கமா புடிச்சுகிட்டேன்.

எடுத்தேன் பேனாவை.(பாலசந்தரோடது இல்ல..என்னோடது!)
எழுதினேன் பேப்பர்ல. ‘‘நடிப்பு பிணமாகிப்போன இந்தக் காலத்தில்..பிணமாக நடித்து, கலைக்கு உயிர் கொடுத்த ‘சர்வர் சுந்தரமே‘! உங்களோடு ஒரே ஒரு காபி சாப்பிட
‘எதிர் நீச்சல்’ போடுகிறேன். எட்டவில்லை இந்த ‘மாடிவீட்டு மாது‘! ஆனாலும் எனக்கு தெரியும்..உங்கள் மறுப்பு ‘நீர்க்குமிழி’. என் கையில் ‘தேன்கிண்ணம்’ தந்து ‘அனுபவி ராஜா அனுபவி’ என்று எப்போது அனுப்புவீர்கள்? நம்பி காத்திருக்கும் எம்.பி.உதயசூரியன்!’’னு என்னோட அலைபேசி எண்ணோட..லெட்டர் எழுதி வலைவீசி வெச்சேன்!

ரெண்டாவது நாள்..‘காமெடி யானை வருகுது ரெமோ’’னு பாடாத
குறை! ஆமாங்க. என் செல்ஃபோன் ‘ரிங்‘கிச்சா? எடுத்துப் பேசினா..‘‘நான் நாகேஷ் பேசறேன்‘‘னு வாய்ஸ் கேட்டதுமே என் மனசு ‘சிங்கிச்சா‘! ‘‘வணக்கம் சார்..சந்தோஷம்
சார்’’னேன். ‘‘உங்க லெட்டர் பாத்தேன். என்னை பாக்க ஏன் இவ்வளவு அடம் புடிக்கறீங்க?’’ன்னார். ‘‘ப்ளீஸ் சார்’’ன்னு மறுபடியும் அதே அடம். ‘‘நாளைக்கு என்
தியேட்டருக்கு வாங்க’’ன்னாரு.

கல்யாண மண்டபத்துக்கான ‘அலங்காரங்கள்‘ நடந்துகிட்டிருந்தது
தியேட்டர்ல. உள்ளே போய்..நாகேஷ்ங்கற ‘நகைச்சுவை மன்னனை’ பாத்ததுமே திகைச்சுப்போய் ‘ஷோ கேஸ்‘ பொம்மையா நின்னுட்டேன்! சாதா பிளாஸ்டிக் சேர்ல சோகையா கண்மூடி உக்காந்திருந்தாரு! கிட்டத்துல போய் அவர் முழங்காலை தொட்டுக் கும்பிட்டேன். ‘சட்’டுன்னு பதறினவரு..என் உச்சந்தலைல கைவெச்சு ‘உக்காருங்க’’ன்னாரு. அறிமுகப்‘படுத்தி‘கிட்டேன்.

‘‘ஹீரோயின்களை பாத்து ஜாலி ஸ்டோரி பண்றத விட்டுட்டு பழைய காலி பெருங்காய டப்பாவ பாக்க வர்றீங்களே?’’ன்னாரு சிரிக்காம.‘‘உங்க பேட்டியே
வேணாம் சார். ஒருவாட்டி உங்களை பாத்துட்டா போதும்!’’னேன். அர்த்தபுஷ்டியா சிரிச்சவர்..தன்னோட பாக்கெட்லேர்ந்து என்னோட லெட்டரை எடுத்தார். ‘‘இப்படி எழுதி என்னை கவுக்கணும்னு யார் சொல்லிக்குடுத்தா?’’ன்னு கேட்டாரு. ‘‘நீங்கதான் சார்’’னேன்.

‘அடேய் பாமரா..எங்கிட்டயே பூமராங் விடறியா‘‘ங்கற மாதிரி
பாத்தவர்கிட்ட..அவர் பேசின நியூஸை பேப்பர்ல படிச்சு லெட்டர் போட்டதா சொன்னேன்.
‘‘புத்திசாலி’’ன்னு என்னை(!?) பாராட்டிட்டு அப்படியே பணியாளர் பக்கம் திரும்பி
‘‘தம்பிக்கு ஒரே ஒரு காபி குடுப்பா. அவர் என்கூட காபி மட்டுமே சாப்பிட
வந்திருக்கார்!’’னு சொல்லி..அடுத்த நொடியே தன்னை ‘அதிபுத்திசாலி’ன்னு நிரூபிச்சார்
பாருங்க..மிரண்டுபோனேன்.

அணில் மரமேறுன மாதிரி பேச ஆரம்பிச்சேன். ‘‘கமல் உங்களைப்பத்தி பேசும்போதெல்லாம் ‘நாகேஷ் சாருக்கு உரிய மரியாதையை தரத் தவறிட்டோம்‘னு உருகிப்போய் சொல்றாரே’’ன்னேன். ‘‘ஆங்‘‘னவரு ‘‘என்னை விடுங்க. உண்மையாவே அவருக்கான கௌரவத்தையே நாம இன்னும் தரலையே. என்ன பண்ண? தமிழ்நாட்டுல
பொறந்துட்டாரே!‘‘ன்னவர் ‘கமலோட கெட்ட பழக்கம் என்னன்னா..’‘னு இழுக்க..
‘‘ஆஹா..சிக்கிச்சுடா கவர்ஸ்டோரி!’’ன்னு நான் நிமிர்ந்து உக்காந்தேன்.

‘கீழ்க்கண்ணால’ என்னை பாத்துகிட்டே ‘‘அவர் என்ன படம் பண்ணாலும் அதுல எனக்குன்னு ஒரு கேரக்டரை ரெடியா வெச்சிருக்கறதுதான்!’’னு சொல்லி என் ஆசை பலூன்ல ஊசியை குத்திட்டாரு. காபி வந்துச்சு. ‘‘சார்..நீங்க’’ன்னேன். உடனே ‘‘இப்பல்லாம் நான் காபியையும்(!?) குடிக்கறதில்ல!’’ன்னாரு.

ரெண்டு நிமிஷம் கழிச்சு காபியை எடுத்தேன். ‘‘காபி கூச்சப்படுதா
பாருங்க!’’ன்னாரு சஸ்பென்ஸா. ‘‘சார்..காபிக்கு கூச்சமா?’’ன்னேன் புரியாம. பக்கத்துல
இருந்த மினரல் வாட்டரை எடுத்து ‘ஒரு வாய்‘ குடிச்சுகிட்டே ‘திரு வாய்’ மலர்ந்து..
அடிச்சார் பாருங்க டபுள் ஸ்ட்ராங்கா..‘‘மேல ஆடை கட்டியிருந்தா கூச்சப்படுதுன்னு
அர்த்தம். இல்லேன்னா அது இல்லன்னு அர்த்தம்!’’னு பிரிச்சு மேய..சிரிச்சு ஓஞ்சேன்.

அப்புறம் எம்.ஜி.ஆர்..சிவாஜி,கமல்.ரஜினின்னு பல சம்பவங்களை ‘அவியலா‘ நாகேஷ் பேசப்பேச..‘உணர்ச்சிக் குவியலா‘ கேட்டுகிட்டிருந்தேன். அதெல்லாம் ஸ்பெஷல் பதிவா வெச்சுக்கலாம். ‘சண்டைல முடிஞ்சாலும் பரவால்ல’னு தொண்டைல முள்ளா குத்திகிட்டிருந்த அந்த கேள்வியை கடைசில கேட்டேன்..‘‘உண்மையா சொல்லுங்க சார். இந்த ‘தருமி’யோட அருமையான நடிப்புச்சேவைக்கு அரசு விருதுங்கற ‘ஆயிரம்
பொன்’ கிடைக்கலையேன்னு எங்களுக்கு வருத்தமா இருக்கு!’’ன்னேன்.

எரிச்சலோ வருத்தமோ எதுவுமே இல்லாம..சிரிச்சபடி நாகேஷ் சொன்னாரு..‘‘எந்த கேள்விக்கும் ஒரு பதில் இருக்கணும்ல? சொல்றேன். கசாப்புக்கடைக்காரனை காய்கறிக்கடைல உக்காரச்சொல்லக் கூடாது. காயலான் கடைக்காரனை நகைக்கடைல சேர்த்துரக் கூடாது!’’.

‘‘எனக்கு புரிஞ்சுருச்சு சார்!’’னு அந்த ‘நகைச்சுவை ஞானி‘‘யின் கைகளைப்பற்றி என் கண்களில் ஒற்றிக்கொண்டேன்.


40 comments:

வா(வ)ரம் said...

யாருடைய ஓட்டும் தங்களுக்குத் தேவையில்லை.

யாருடைய பின்னூட்டமும் தேவையில்லை.

படைப்பின் வலிமையை மட்டும் நம்பும்

“வாரம்” இணைய இதழ் (லிங்க் க்ளிக்கி இதழைப் படிக்கவும்)

வெளிவந்துவிட்டது. தங்கள் ஆதரவைத் தாரீர்!!!

biskothupayal said...

நாகேஷ் நாகேஷ்தான் வேற ஒன்னும் சொல்லறதுக்கு எனக்கு தகுதிஇள்ள

சென்ஷி said...

ரொம்ப நன்றி தலைவா.. நான் குருவைப்பத்தி ஏதாவது எழுதுவீங்களான்னு கேக்கலாமுன்னு தயங்கிட்டு இருந்ததை புரிஞ்சுக்கிட்டு கிடைச்ச மருந்து மாதிரி இருக்குது..

என்னால இந்த பதிவை படிக்குறப்ப ரொம்ப நெகிழ்ச்சியா உணர முடியுது.

//‘‘நடிப்பு பிணமாகிப்போன இந்தக் காலத்தில்..பிணமாக நடித்து, கலைக்கு உயிர் கொடுத்த ‘சர்வர் சுந்தரமே‘! உங்களோடு ஒரே ஒரு காபி சாப்பிட ‘எதிர் நீச்சல்’ போடுகிறேன். எட்டவில்லை இந்த ‘மாடிவீட்டு மாது‘! ஆனாலும் எனக்கு தெரியும்..உங்கள் மறுப்பு ‘நீர்க்குமிழி’. என் கையில் ‘தேன்கிண்ணம்’ தந்து ‘அனுபவி ராஜா அனுபவி’ என்று எப்போது அனுப்புவீர்கள்? நம்பி காத்திருக்கும் எம்.பி.உதயசூரியன்!’’//

கடிதத்தில் உதயசூரியனின் தனி முத்திரை... தமிழ்ல சிலேடையில எல்லாத்துலயுமே அசத்துறீங்க. சென்னை வந்தா கண்டிப்பா உங்களை மீட் பண்ணியே ஆகணும்னு முடிவு செஞ்சுட்டேன் :))

உண்மைத்தமிழன் said...

[[[எரிச்சலோ வருத்தமோ எதுவுமே இல்லாம..சிரிச்சபடி நாகேஷ் சொன்னாரு..‘‘எந்த கேள்விக்கும் ஒரு பதில் இருக்கணும்ல? சொல்றேன். கசாப்புக்கடைக்காரனை காய்கறிக்கடைல உக்காரச்சொல்லக் கூடாது. காயலான் கடைக்காரனை நகைக்கடைல சேர்த்துரக் கூடாது!’’.]]]

நூத்துக்கு நூறு உண்மை..

சம்பாதிக்க மட்டுமே நினைத்தவர்கள் அரசியலில் ஜெயித்து ஆட்சிக் கட்டிலில் அமர்ந்ததுதான் பிரச்சினை..!

butterfly Surya said...

நகைச்சுவை இமயம் அவர். வேறு வார்த்தைகளில்லை.

நாகேஷின் கடைசி படம் கலைஞானி கமலின் படமே.

வழக்கம் போல் கலக்கல்.

கேட்காமல் கிடைத்த சென்ஷிக்கு வாழ்த்துகள்..

நம்மளுக்கு எப்போ அடிக்கும் அதிர்ஷம்..??

வினோத் கெளதம் said...

//‘கமலோட கெட்ட பழக்கம் என்னன்னா..’‘னு இழுக்க..
‘‘ஆஹா..சிக்கிச்சுடா கவர்ஸ்டோரி!’’ன்னு நான் நிமிர்ந்து உக்காந்தேன்.


‘கீழ்க்கண்ணால’ என்னை பாத்துகிட்டே ‘‘அவர் என்ன படம் பண்ணாலும் அதுல எனக்குன்னு ஒரு கேரக்டரை ரெடியா வெச்சிருக்கறதுதான்!’’னு சொல்லி என் ஆசை பலூன்ல ஊசியை குத்திட்டாரு.//

என்ன டைமிங்கா அடிச்சு இருக்காரு பாருங்க..சான்சே இல்லை..
நாகேஷ் ஒரு சகாப்தம்..

sowri said...

சுடச்சுட காபி வித் நாகேஷ்!. ரொம்ப Strong சார். கும்பகோணம் டிகிரி காபி சாப்ட திருப்தி. His answer to your questions are very honest. Remarkable man.

Raj said...

அவருடைய பதில்களிலேயே தெரிகிறது....அவர் ஒரு நல்ல மனிதர் என்பது

தினேஷ் said...

அசத்துறீங்க .. போங்க ...

Anonymous said...

kalakuringa udaya sooriyan. nama dmk mathiriye.......... unkal vote epadium dmk kunu nalave terium. namma kudumba talivar (ipadi podal avatu namaku etavatu patavi kidaikum enru oru nappasai)kalainger pathi pathivu onru podungo.
m k stalin

Nags said...

//‘அடேய் பாமரா..எங்கிட்டயே பூமராங் விடறியா‘‘ங்கற மாதிரி
பாத்தவர்கிட்ட..//

அஞ்சு வருசத்துக்கு முன்னால ஒரு சந்திப்பின் போது நாகேஷ் ஒரு லுக் விட்டத்தின் அர்த்தம்... அன்னிக்கு எனக்கு புரியல......இன்னைக்கு புரிய வச்சிடீங்கன்னா

உங்கள் எழுத்தில் அவரின் முகத்தை நினைவுகூர்ந்தேன்!!!

விக்னேஷ்வரி said...

மனசைத் தொட்ட பதிவு.

Sridhar said...

// எம்.ஜி.ஆர்..சிவாஜி,கமல்.ரஜினின்னு பல சம்பவங்களை ‘அவியலா‘ நாகேஷ் பேசப்பேச..‘உணர்ச்சிக் குவியலா‘ கேட்டுகிட்டிருந்தேன். அதெல்லாம் ஸ்பெஷல் பதிவா வெச்சுக்கலாம். //

நிச்சயமா வேணும் எல்லா விவரங்கள் உட்பட.

வழக்கம் போல் அருமை

எம்.பி.உதயசூரியன் said...

//வா(வ)ரம் said..படைப்பின் வலிமையை மட்டும் நம்பும் ''வாரம்” இணைய இதழ்//

படைப்புக்கு மரியாதை தரும் படையப்பா..வாழ்த்துக்கள்!

எம்.பி.உதயசூரியன் said...

//சென்ஷி said.. என்னால இந்த பதிவை படிக்குறப்ப ரொம்ப நெகிழ்ச்சியா உணர முடியுது.//

உங்க குருவால் உருவான நெகிழ்ச்சி இது. மகிழ்ச்சி சென்ஷி!

எம்.பி.உதயசூரியன் said...

//biskothupayal said.. நாகேஷ் நாகேஷ்தான் வேற ஒன்னும் சொல்லறதுக்கு எனக்கு தகுதிஇல்ல//

பிஸ்கோத்துபயல்..உங்களுக்கு ரொம்ப தன்னடக்கம்!

எம்.பி.உதயசூரியன் said...

//உண்மைத் தமிழன் said..சம்பாதிக்க மட்டுமே நினைத்தவர்கள் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்ததுதான் பிரச்சினை//

தமிழா..ஆட்சிக்கட்டில்ங்கிறதால தூங்கிடறாங்களோ?

அமர பாரதி said...

அருமையான கட்டுரை. அசட்டுத்தனங்கள் இல்லாமல் ஒரு நல்ல காமெடி செய்வதில் நாகேஷுக்கு இணை யாருமில்லை. இருந்தாலும் அவர் பிணமாக நடித்ததின் ஒரிஜினல் படமான "Weenend with Berney" பாருங்கள். வித்தியாசம் தெரியும்.

எம்.பி.உதயசூரியன் said...

// வண்ணத்துபூச்சியார் said...
நம்மளுக்கு எப்போ அடிக்கும் அதிர்ஷம்..??//

ஜாக்பாட் காத்திருக்கு நண்பா! அது சஸ்பென்ஸ். கவுன்ட் டவுன் ஸ்டார்ட்!

எம்.பி.உதயசூரியன் said...

//vinoth gowtham said.. என்ன டைமிங்கா அடிச்சு இருக்காரு பாருங்க..சான்சே இல்லை.. நாகேஷ் ஒரு சகாப்தம்..//

ஆஹா..செம ரசிகர்யா நம்ம சகா!

எம்.பி.உதயசூரியன் said...

//sowri said.. சுடச்சுட காபி வித் நாகேஷ்!. கும்பகோணம் டிகிரி காபி சாப்ட திருப்தி.//

ரொம்ப ஹேப்பி வாத்யாரே! இந்த டிப்ஸ் போதும்.

எம்.பி.உதயசூரியன் said...

//raj said.. அவருடைய பதில்களிலேயே தெரிகிறது....அவர் ஒரு நல்ல மனிதர் என்பது//

அவரை கொண்டாடாம விட்டுட்டாங்களே..ராஜ் சார்!

எம்.பி.உதயசூரியன் said...

//சூரியன் said அசத்துறீங்க.. போங்க!// .

அன்புத்தம்பி..அசராம வாங்க!

எம்.பி.உதயசூரியன் said...

//Anonymous said..kalakkareenga udhayasooriyan namma d.m.k.maadhiriye. namma kudumba talivar kalainger pathi padhivu onru podungo ...//


தலைவா..உங்களுக்கு என்மேல ஓவர் அன்பு! ஆனாலும் இது செம வம்பு!(நாளை இரவு சுடச்சுட வாங்க!)

எம்.பி.உதயசூரியன் said...

//Nags said.. அஞ்சு வருசத்துக்கு முன்னால ஒரு சந்திப்பின் போது நாகேஷ் ஒரு லுக் விட்டதின்
அர்த்தம்.. அன்னிக்கு எனக்கு புரியல..இன்னைக்கு புரிய வச்சிடீங்கன்னா//

நாகேஷ்..நாக்ஸ் சந்திப்பு தித்திப்பா இருந்திருக்குமே!

எம்.பி.உதயசூரியன் said...

// விக்னேஷ்வரி said..
மனசைத் தொட்ட பதிவு.//

நன்றி மேடம். ரெகுலரா வாசிக்கறீங்கதானே!

எம்.பி.உதயசூரியன் said...

//எம்.ஜி.ஆர்..சிவாஜி,கமல்.ரஜினின்னு பல சம்பவங்களை ‘அவியலா‘ நாகேஷ் பேசப்பேச..‘உணர்ச்சிக் குவியலா‘ கேட்டுகிட்டிருந்தேன்.// // நிச்சயமா வேணும் எல்லா விவரங்கள் உட்பட.//

நாம ‘குவியலா‘ இருக்கறப்போ ‘அவியளப்பத்தி‘ பேசித்தீத்துருவமா சார்?

எம்.பி.உதயசூரியன் said...

//அமர பாரதி said.. அசட்டுத்தனங்கள் இல்லாமல் நல்ல காமெடி செய்வதில் நாகேஷுக்கு இணை யாருமில்லை.//

அமரர் நாகேஷ் பத்தின அமரபாரதி கருத்தை வெச்சு..பிஎச்.டி பண்ணலாம்!

அமர பாரதி said...

//அமரர் நாகேஷ் பத்தின அமரபாரதி கருத்தை வெச்சு// பின்றீங்களே.

butterfly Surya said...

கவுன்ட் டவுன் ஸ்டார்ட்... wow..

10 9 8 7 6 5 4 ...???

ரவிஷா said...

என் மாமனார் 20-30 ஆண்டுகளுக்கு முன் டிராமாக்களிலும் சினிமாக்களிலும் நடித்திருக்கிறார் (சப்போர்ட்டிங் ரோல்)! அவரிடம் பேசிக்கொண்டிருந்தால் சிவாஜி, எம்.ஜி.ஆர்., நாகேஷ், கமல், ரஜினி, கே. பாலசந்தர் போன்றவர்களைப் பற்றி சுவாரஸ்யமான விஷயங்களை சொல்லுவார்! ஏனோ அதில் ஒன்றைப் படித்தமாதிரி இருந்தது உங்கள் பதிவு! வேண்டுமென்றால் அவர் ஃபோன் நம்பர் தருகிறேன், பேசுங்களேன்! நன்றி!

எம்.பி.உதயசூரியன் said...

// ரவிஷா said... என் மாமனார் சிவாஜி, எம்.ஜி.ஆர்., நாகேஷ், போன்றவர்களைப் பற்றி சுவாரஸ்யமான விஷயங்களை சொல்லுவார்! ஏனோ அதில் ஒன்றைப் படித்தமாதிரி இருந்தது உங்கள் பதிவு! வேண்டுமென்றால் அவர் ஃபோன் நம்பர் தருகிறேன், பேசுங்களேன்!//

அவசியம் பேசுகிறேன் ரவிஷா சார். என் மெயிலுக்கு மாமனாரின் நம்பரை அனுப்புங்கள். அந்த ‘பொக்கிஷத்தை’ புரட்டிப் பார்ப்போம்!

nagoreismail said...

”பாலே கொட்டிட்டாலும் சரி போகட்டும் அதுல பாதி தண்ணி தானேன்னு நெனைச்சு தேத்திக்குவேன்”
- எதிர் நீச்சல் படத்தில் சிரிக்க மட்டுமே வைத்தவர் (நன்றி: சென்ஷி) பேசியது தான்.

மரியாதை கிடைத்தவர்களில் பாதி பேர் தண்ணி தானே என்று நாமும் மனதை தேத்திக்க வேண்டியது தான்.

செந்தில்குமார் said...

உதய் அண்ணே,

நாகேஷ் ஒரு சகாப்தம்.. நீங்க சொன்ன மாதிரி அவரோட பேர சொன்னாலே சிரிப்பு தன்னாலே வந்துடும்.. ரொம்ப நெகிழ்ச்சியான பதிவு இது... அருமை...

சிரிச்சிக்கிட்டே படிச்சேன்...

சின்ன விண்ணப்பம்... எங்க குருசாமி நம்பியார் பத்தியும் சுவையான விஷயம் எதாவது இருந்தா எழுந்துங்களேன்..

Anonymous said...

nice one...Nagesh - comedy legend..

எம்.பி.உதயசூரியன் said...

//nagoreismail said... மரியாதை கிடைத்தவர்களில் பாதி பேர் தண்ணி தானே என்று நாமும் மனதை தேத்திக்க வேண்டியது தான்.//

ஆஹா..நெஞ்சைத் தொட்ட வார்த்தை நாகூர் இஸ்மாயில்!

எம்.பி.உதயசூரியன் said...

// செந்தில்குமார் said..... எங்க குருசாமி நம்பியார் பத்தியும் சுவையான விஷயம் எழுதுங்களேன்//

அட..நம்ம செந்தில்குமார் கேட்டுட்டாரே! சரி சாமி!

Venkatesh Kumaravel said...

அடுக்குமொழியில அசத்துறீங்களே சார்... பதிவுக்கு பதிவு பரபரப்பா
பின்றீங்க! செம! :D

நாகேஷ் சார்... R.I.P :(

எம்.பி.உதயசூரியன் said...

//வெங்கிராஜா said.. பதிவுக்கு பதிவு பரபரப்பா பின்றீங்க! //

நம்ம பள்ளிக்கூட போர்டுல இருக்கற மாதிரி‘பதிவு’ பரபரப்பா இருந்தாதானே ‘வருகை’விறுவிறுப்பா இருக்கும்!
(உங்க புது ஸ்டில் அசத்துது வெங்கி!)

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் said...

நகைச்சுவை மேதை நகேஷைப்பற்றி அருமையான பதிவு, திரு உதயசூரியன் அவர்களே.
அப்படியே இங்கேயும் ஒரு முறை வலம் வாருங்களேன்.
http://kadirveechu.blogspot.com/2009/05/blog-post_14.html

நன்றி.

 
சுடச்சுட - by Templates para novo blogger